Homeகட்டுரைகள்’நம்மை பிரகாசிக்கச் செய்யும் புனைவுகள்’-கவிஞர் கரிகாலன்

’நம்மை பிரகாசிக்கச் செய்யும் புனைவுகள்’-கவிஞர் கரிகாலன்

மீப நாட்களாக அரசியல் விவாதங்களால் சோர்வு ஏற்பட்டிருந்தது. ஒரே மாதிரியான, யூகிக்கக்கூடிய வாதங்கள். கலைச்சொற்கள். சொல்லாட்சிகள். மீண்டும் மீண்டும் விழுந்து கொண்டிருந்தன.

அரசியல் நம் தனிப்பட்ட வாழ்வின் அனுபவங்களுக்கு நெருக்கமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது இங்கு விலகியதாகத் தோன்றுகிறது.

படைப்பு மனதை இது சலிப்பூட்டுகிறது. செயற்கையான ஆத்திரமூட்டும் உரையாடல்களில் இருந்தும் இதன்  நாடகத்தன்மயிலிருந்து விலகியிருக்க விரும்பினேன். 

இத்தகைய மனநிலைநில் நேற்று எனக்கு வாசிக்கக் கிடைத்த நூல் 

சொம்புநீர்ப்பூ. நர்சிம் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. இரண்டு மாதங்களுக்கு முன்வரை நர்சிம்மை எனக்குத் தெரியாது. ஒருநாள் அலைபேசியில் அழைத்து, ‘ நான் நர்சிம், ‘கவிஞர் அய்யப்ப மாதவனுக்கு உதவ விரும்புகிறேன் அண்ணா’ என்றார். 

பிறகு, நர்சிம் குறித்து சகோதரக் கவி கதிர்பாரதி கூறியவை அனைத்தும் மிக நேர்மறையான விசயங்கள். 

நேற்று (ஏப்ரல் 23)  தேர்தல் நாள். தனிமை, ஓய்வு நிறைய இருந்தது.  சொம்புநீர்ப்பூவைப் படிக்கத் தொடங்கினேன். ‘இந்த மனிதரை எப்படி இவ்வளவு நாட்கள் மிஸ் செய்தோம்?’ தோன்றியது. Breaking the ice!  ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற idiom ஒன்றிருக்கிறது. தேர்தல் சூழல் உருவாக்கியிருந்த பதட்டங்களில் இருந்து என்னை லாவகமாக விலக்கி, வேறு ஒரு வசதியான இடத்துக்கு அழைத்துச் சென்றார் நர்சிம். 

நேற்று ஷேக்ஸ்பியரின் நினைவு தினம். உலகப் புத்தக தினமாக இந்நாளை நினைவுகூர்கிறது யுனெஸ்கோ. மனசளவில் உடலளவில் நான் கொஞ்சம் வித்தியாசமான சைஸ். எனக்குப் பொருத்தமான ரெடிமேட் சட்டை, பொருத்தமான காஃபி கோப்பை, பொருத்தமான கதைப் புத்தகங்கள் கிடைத்ததில்லை. எனது இரைப்பையின் அளவைத் தெரிந்து தட்டில் உணவை நிரப்பும் அம்மாவின் கரம்போல இருக்கிறது நர்சிம் கை. என்னுடைய அளவு M. ஆனால் எனக்கு கிடைத்த கதைகள் பெரும்பாலும் XXL சைஸ் உடையவை. கடைசியாக எனக்குப் பொருத்தமான கதைகளை எழுத நர்சிம்மை அனுப்பி வைத்திருக்கிறார் என் கடவுள்.

 வள்ளுவர் கதை எழுதினால் எப்படி இருக்கும்? சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஆற்றல் நர்சிம்முக்கு இருக்கிறது. அவர் என்னுடைய  சொந்த அறிவின் வழி , மனசாட்சியின் மூலம், அவரது கதைகளைப் புரிந்துகொள்ள அனுமதிக்கிறார். கூற வந்ததை மிகையாக விளக்க, வலியுறுத்த பிரயத்தனம் காட்டுவதில்லை அவர்.

 தன்னைவிடவும் தன் வார்த்தைகள் மீது அவருக்கு நம்பிக்கை இருக்கிறது.

அந்த நம்பிக்கையால் கதைகளின் குறுக்கேத் தோன்றி அவர் பயமுறுத்தவில்லை. தி.ஜா விடம், ஆதவனிடம் கண்ட புனைவு அறத்தை மீண்டும் அனுபவித்தேன். 

நர்சிம் தன் கதைகளில் நான் எனது  சொந்தப் பொருளைக் கண்டறிய அனுமதிக்கிறார். எழுத்தாளர்களுக்கான ஒரு நல்ல விதியைச் சொன்னவர் டபிள்யூ. சோமர்செட் மாம். 

‘ அளவுக்கு அதிகமாக விளக்காதீர்கள்’ என்பதுதான் அந்த விதி. 

எழுத்தாளர்கள் பலர் தாங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காக Star Destroyer ஐ பயன்படுத்துகிறார்கள். ஆனால் நர்சிம்மின் சிறப்பு அவரது கதைகளில் தென்படும் நுட்பம்தான் (subtle ). இவை உருவ அளவில்தான் சிறியவை. இந்தச் சிறிய கதைகள்  டக் வாக்கர் கூறியதுபோல ,

‘ஒரு படகில் நடக்கும் படுமோசமான ரயில் விபத்தைப் போல அப்பட்டமானவை.’

நாம் கடந்து வந்த வாழ்வில் கண்டடைந்த தெய்வீக பிரசன்னங்களை ( Divine Presence) நமக்கு மீண்டும் ஒருமுறை ஞாபகம் கொள்ள வைக்கின்றன இக்கதைகள். தெய்வீக பிரசன்னமெனில் நமக்குக் கிடைத்த அவமானங்களையும் உள்ளடக்கயதுதான். 

இதில் உள்ள 9 கதைகளும் இப்படிப்பட்டவைதான். இங்கு, எல்லாம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகும்கூட, வாழ்வது எப்படி? என்பது விடைகாண முடியாத புதிராக இருக்கிறது. இந்தப் புதிரை அவிழ்க்கத்தான் திஜா  உதவினார். மார்க்வெஸ் உதவினார். காஃப்கா உதவினார். தஸ்தாயேவ்ஸ்கி உதவினார். நர்சிம்மும் உதவுகிறார். 

ஒரு இருளை அவிழ்க்கும் கணநேர மின்னல் போல,  நம் காலத்தின் விடைதெரியா ரகசியங்களை, சுழி, சொம்புநீர்ப்பூ, புன்கணீர், பாரப், ஓவியம்,  நுரை போன்ற கதைகள் அவிழ்க்கின்றன.மனிதர்களின் 

தடயங்களைக் காணக்கூடிய   நிலப்பரப்பாக கதைகள் அமைய வேட்டும். ஆனால், நடமாடும் உருளைக்கிழங்கைப்போல் கதைகளை  இழுத்து வருகிறார்கள்.  

நமது சொந்த இனிப்பை, கசப்பை, 

இக் கதைகள் கலையாகப் புனைந்திருக்கின்றன. 

துன்பங்களிலிருந்து வெறுமனே தப்பிப் பிழைப்பதைத் தாண்டி, நீடித்த பொருத்தமான நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையை உருவாக்க நர்சிம் தன் கதைகளின் வழியாகச் சிந்தித்திருக்கிறார். 

இக்கோடையில் எலுமிச்சைச் சாற்றைப் பருகுவதுபோன்ற குளிர்ச்சியை இக்கதைகள் தருகின்றன.

வலியைத் தாங்கிக்கொள்ளும் நமது திறன் மட்டுமே நம் வாழ்வின்  அளவுகோலாகாது.  மாறாக வலியைத் தாண்டி நாம் நகர்வதற்கான உத்வேகத்தை இக்கதைகள் நமக்குத் தருகின்றன. பிரபஞ்சத்தின் ஓர் அங்கம்தான்  ஒரு தாவரமும், மனிதரும். வாழை என்கிற ஒரு தாவரம் அதன் இறுதி நாட்களை, மற்றவர்கட்கு  எவ்வளவு பயனுடையதாக மாற்றுகிறது. அதேவேளை ஒரு மனிதரின் மரணத்தை, அதன் இறுதிச் சடங்குகளை உறவுகள் எப்படி செலவோடு இணைத்துச் சிந்திக்கிறார்கள்?  

‘பாரம்’ கதை சிந்திக்கிறது. 

ஆணும் பெண்ணும் இணைந்து காதலோடு வாழ இங்கே தடையாக இருப்பது பொருளா? மதிப்பீடா? 

நம்மிடம் உறைந்துபோன ஓர் அன்பின் கதையை  ‘புன்கணீர் ‘ வெட்டிப் பிளக்கிறது. எது கனா? எது நிசம்? 

எனப் புரிந்து கொள்ள முடியாத ஓர் இளம் பெண்ணின் மன அவசம் , சொம்புநீர்ப்பூ கதைமூலம்  நம்மை தர்க்கதத்தின் விளிம்பில் நிறுத்துகிறது. கிரிக்கெட்டில் நண்பர்களிடையே காணப்படும் அபத்தங்களை நகைச்சுவையாக கடக்கிறது ‘ஓவியம்’ சிறுகதை. கோவிட் உருவாக்கிய நெருக்கடிகளை, தனியார்மயம் மனித இதயத்தில் ஏற்படுத்துகிற வெற்றிடங்களை, 

கார்ப்ரேட்மயம் சக மனிதர்களிடம் உருவாக்கிற நம்பிக்கையின்மையை துல்லியமாக சித்தரிக்கிறது ‘குழி’. 

நாம் சோம்பலாகக்  காணும் கனவுகள்

இனிமையானவை எனில்,  நர்சிம் கதைகளின் Subtlety  நாம் நிஜ வாழ்வின்  சுவையை அளிப்பவை. இக்கதைகள் மானுடத்தின் நூற்றாண்டு காயங்களையும் சுரண்டல்களையும் ஊடுருவி எழுபவை.  நல்லது, கெட்டது, இன்பம், துன்பம் ஆகியவற்றில் இவை தம் கால்களை ஊன்றியிருக்கின்றன. நமது குறைபாடுள்ள வாழ்வின் அடிப்பரப்பில் இக்கதைகள் ஸ்படிகமாகி, நம்மைப் பிரகாசிக்கச் செய்கின்றன.

~கரிகாலன்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை