எழுத்தாளர் நர்சிம் அவர்களின் பஃறுளி நாவல் வாசிக்கக் கிடைத்தது. ஒரு நகரத்தின் வரலாறு பல்வேறு வடிவங்களில் எழுதி வைக்கப்படுகிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் விட்டுச்சென்ற அத்தனையிலும் அதன் மிச்சங்கள் யாரோ ஒருவரின் புறங்கையில் ஒட்டிக் கொண்டு அடுத்தடுத்த காலங்களுக்குள் நகர்ந்து தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. மிச்சங்கள் என்பது துயரங்களின், போராட்டங்களின், உறவுகளின், உரிமைகளின், காதலின் மிச்சங்கள் என யார் வழியாகவோ நம் மீது ஒரு கல்லை எறிந்து பார்க்கிறது. இங்கு நர்சிம் பஃறுளி வழியாக மதுரையின் மிக முக்கியமான இடங்களையும், மனிதர்களையும் வாழ்வியலையும் நமக்கு அறிமுகம் செய்கிறார்.
இரண்டு பால்ய நண்பர்கள் தாங்கள் சிறுவயதில் சுற்றிதிரிந்த இடங்களுக்குச் செல்லும்போது அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள் நாவலாக விரிகிறது. இது நண்பர்களைப் பற்றிய நாவலா, அரசியல் நாவலா, காதல் கதையா, நவீன நாவலா, சங்க இலக்கியத்தின் தொடர்ச்சியா, உலகமயமாக்கலால் விளைந்த நன்மை தீமைகளைப் பற்றிப் பேசுவதா, மதுரையின் நிலங்கள் குறித்ததா, மனிதாபிமானத்தின் உச்சமா, என வியக்கும் அளவிற்கு எல்லாவற்றிற்கும் பொருந்திப் போகும் ஒன்றாக பஃறுளி இருக்கிறது.
மதுரை அவனியாண்டவூர் என்ற ஊரில் வாழும் மாயக்கண்ணனும், தேவராஜனும் பள்ளியில் படிக்கும்போதிருந்தே நண்பர்கள். இருவரின் குடும்பமும் பொருளாதாரத்தில் சிறந்தவை. அதனால் இவர்களுக்கு தொழில் நிமித்தமோ, அடிப்படை வாழ்வியல் தேவைகள் குறித்தோ எந்தவொரு சஞ்சலமும் இல்லை. இதில் மாயக்கண்ணன் அரசுப்பள்ளி ஆசிரியர். தேவராஜ் தன் அப்பா உருவாக்கி வைத்த பர்னிச்சர் கடையை விரிவு படுத்தி அதன் உரிமையாளராகிவிட்டான். இந்த இருவரின் நட்பைப் பற்றி ஆசிரியர் விவரிக்கும் இடங்களில் நமக்கு தேவாவைப் போல ஒரு நண்பன் இருந்திருக்கலாம் என்ற ஏக்கம் வருகிறது. மாயக்கண்ணனின் புல்லட்டில் பின்னால் அமர்ந்து வரும் தேவா அவனின் முதுகு அசைவை வைத்தே அவனது கோவத்தை உணர்வது, மிகவும் வேதனையான சூழலில் மாயக்கண்ணன் இருட்டில் தனியாக அமர்ந்திருக்கும் போது தேவா அவனைத் தேடி வந்திருப்பதைத் திரும்பாமலேயே உணர்ந்து கொள்வது என இருவரின் நட்பின் ஆழமும் நேர்த்தியாக விவரிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்ததாக இந்நாவலில் வரும் கம்யூனிஸ்ட் அலுவலகமும், செல்வமும் அவனியாண்டவூரில் செல்வம் தான் மன்றத்தின் பொறுப்பாளர். எல்லா போராட்டங்களையும் முன்னெடுக்கும் செல்வத்திற்கு இரண்டு கைகளில் ஒன்றின் செயல்திறன் குறைவு. இருந்த போதும் கம்யூனிச சித்தாந்தத்தின் அடையாளமாக அந்த ஊரில் இளைஞர்களை மன்றத்தின்பால் ஈர்ப்பவராக செல்வத்தின் கதாப்பாத்திரம் அச்சுப் பிசகாத தோழராக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஊரின் வழித்தடத்தில் இயங்கும் ஒரு பேருந்தில் ஆட்கள் குறைவாகச் செல்வதால் போக்குவரத்துத் துறைக்கு நஷ்டம் என்று கூறி அப்பேருந்தின் வழித்தடத்தை மாற்றிவிடத் திட்டமிட்ட அரசின் சூழ்ச்சியை அறிந்து கொண்டு, மக்கள் ஒவ்வொருவரிடமும் அந்தப் பேருந்தில் பயணிக்கும்படி வேண்டுகோள் வைக்கும் செல்வம் தோழர் அற்புதமானவர். அப்படித்தான் ஒருமுறை மாயக்கண்ணன் செல்வத்திடம் உணவு வாங்கித் தரவா என்று கேட்கும்போது நேரடியாகத் தன் விருப்பத்தைச் சொல்லாமல் வீட்டில் இருப்பவர்களுக்கு வாங்கிக் கொண்டு போனால் சந்தோசப்படுவாங்கன்னு செல்வம் சொல்ல மாயக் கண்ணனும் மூன்று உணவுப் பொட்டலங்களை வாங்கி வருவார். உடனே செல்வம் கொஞ்சம் முன்கூட்டியே உணவு வாங்கிக் கொடுத்திருந்தால் வெளியூரில் இருந்து வந்து போன தோழர்கள் பசியாறிவிட்டுப் போயிருப்பார்கள் என்று அங்கலாய்ப்பார். எல்லோருக்கும் எல்லாமும் என்ற சித்தாந்தம் அரசியலாகவோ, அடிப்படையிலோ நர்சிம் உணர்வில் கலந்திருப்பதை இந்த அத்யாயத்தில் செல்வத்தால் வந்த கண்ணீர்த்துளி உணர்த்தியது. மதுரையின் அடையாளமான தோழர் லீலாவதி, நகரில் செயற்கையான குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தண்ணீரை காசுக்கு விற்ற கும்பலைத் தொடர்ந்து எதிர்த்து வந்தார். அதைப் பொறுக்காத பாவிகள் அவரை வெ*ட்டி*க் கொ*ன்*ற*னர். அந்தக் கொடுஞ் சம்பவத்தில் ஈடுபட்ட குற்*ற*வாளிகளைக் கைது செய்யக்கோரி தோழர்கள் முன்னெடுத்த போராட்டங்களையும், அதன் விளைவாக குற்*றவா*ளிகள் தண்டிக்கப்பட்டதையும் படிக்கும்போது செல்வம் போன்ற தோழர்களுக்கு ஒரு முறை வணக்கம் செலுத்திக் கொள்கிறேன். ஆசிரியர் இந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த துயரத்தையும் தோழர்களின் போராட்ட வரலாற்றையும் பஃறுளி நாவலில் பதிவு செய்திருப்பது பாராட்டிற்குரியது. மேலும் மதுரையில் அதிகமாக வாழும் சௌராஷ்ட்டிர மக்கள் குறித்தும் அவர்களின் கம்யூனிச செயல்பாடுகள் குறித்தும் நாவல் பதிவு செய்கிறது.
கூடவே உலக புகழ் பெற்ற மதுரை ஜல்லிக்கட்டில் தாழ்த்தப்பட்ட கலந்துக்கொள்ளமுடியாத சூழல் இருந்ததையும் அதையொட்டிய போரட்டங்களையும் பற்றி பேசுகிறார்.
ஒரு நகரத்தின் பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சியை விவரிக்கும் விதமாக தேவராஜின் தந்தை பயன்படுத்திய வியாபார உத்தியைச் சொல்லியே ஆக வேண்டும். தேவாவின் அப்பா சேட்டு ஒருவரிடம் வேலைக்கு இருந்தவர். திடீரென ஒருநாள் தாமும் முதலாளி ஆகும் எண்ணத்துடன் அவ்வூரின் பெரிய மனிதர் ஒருவரிடம் ஆலோசனை செய்கிறார். அதன்படி புது பிளாஸ்டிக்சேர் ஒன்றை பெரிய மனிதரின் வீட்டில் கொண்டு வந்து வைத்து விடுவதாகவும் அதன் விலையிலிருந்து தினமும் ஒரு ரூபாய் கொடுத்தால் போதும் என்று சொல்லி தன் வியாபாரத்தைத் தொடங்குவார். அப்படியே படிப்படியாக உயர்ந்து அந்த ஊர் முழுவதிற்கும் பிளாஸ்டிக் சேர் அறிமுகப்படுத்தி பிறகு ஒரு பர்னிச்சர் கடையையே வைத்துவிடுவார். இப்படி இந்த நாவலில் ரசிக்கும்படியான மனிதர்கள் நிறைய.
இது இந்த நாவலின் உயிர்ப் பகுதி :
மாயக்கண்ணன் பெரும் பணக்காரரின் மகன் என்றும் அரசுப் பள்ளி ஆசிரியர் என்றும் சொன்னேன் அல்லவா இப்போது கோமதியைப் பற்றி சொல்கிறேன். மாயக்கண்ணனின் தந்தையைப் போன்றே கோமதியின் தந்தையும் மிகப்பெரும் செல்வந்தர். கிட்டத்தட்ட சிலப்பதிகாரத்தின் கோவலன், கண்ணகியின் பெற்றோரைப் போலவே இவர்களும் வியாபாரத்திலும், புகழிலும் கொடுகொட்டிப் பறப்பவர்கள். கோமதியும் அரசுப்பள்ளி ஆசிரியர் என்பதால் இருவீட்டாரும் பேசி மாயக்கண்ணன் கோமதியின் திருமணத்தை அந்த ஊரே வியக்கும்படி செய்து முடிக்கிறார்கள். பிறகு இரு வீட்டாரும் பேசி மணமக்களின் மகிழ்ச்சிக்காக தனிக்குடித்தனமும் வைக்கிறார்கள். மாயக்கண்ணனும் கோமதியும் மனமொத்த தம்பதிகளாக வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள். இருவருக்கும் இடையேயான காதலையும், காமத்தையும் நர்சிம் விவரிப்பது பச்சை மாங்காயில் காரமும் உப்பும் தடவி கையில் வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டு மட்டும் இருக்க வேண்டும் என்று கட்டளையிடுவதைப் போல இருக்கிறது. மாயக்கண்ணன் சாய்ந்து கொள்ளும் கோமதியின் வயிறு ஓர் அழகிய காதல் ராஜ்யம். சின்ன சின்ன விசயங்களுக்குக் கூட உணர்ச்சிவசப்படும் கண்ணன். எதற்குமே அதிராத கோமதி. இருவரின் உறவின் தொடக்கமும் முடிவும்தான் இந்நாவலின் அச்சாணி.
கண்ணனும் கோமதியும் ஆசிரியர்கள் என்பதால் இருவருக்கும் ஒரே பள்ளியில் வேலை அமைகிறது. மாயக்கண்ணனைக் கண்டால் பயந்து நடுங்கும் குழந்தைகள் கோமதியைக் கண்டால் தமிழம்மா தமிழம்மா என்று சுற்றிச் சுற்றி வருகின்றனர் என்ற வேறுபாடுதான் ஆசிரியர் இவர்களின் இயல்புகளை விவரிக்கும் இடமாகப் பார்க்கிறேன். இதற்கிடையில் தலைமையாசிரியரும், தெய்வநாயகி டீச்சரும் நம்மை சிரிக்க வைக்கிறார்கள். இந்நாவலில் அநேக இடங்களில் நர்சிம்மின் நகைச்சுவை உணர்வை உணர முடியும். அப்படிப்பட்ட இடங்களில் சில தான் தலைமையாசிரியரும், தெய்வநாயகி டீச்சரும் வரும் இடங்கள். இப்படி ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் சொல்லிக் கொண்டே போகலாம், ஏன் பள்ளியின் அட்டெண்டர் மைதீன் பாயின் கதாப்பாத்திரத்தைப் படித்துப் பாருங்கள். மாணவர்கள் ரகு, கே. ஜி மணிகண்டன் இப்படி கதாப்பாத்திரங்களை கதையின் தொடக்கம் முதல் இறுதி வரை அவர்களின் குணாதிசயங்கள் குறையாமல் தொடர்வது ஒரு கலை அதை ஆசிரியர் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
இந்தப் பள்ளியில் தான் மாயக்கண்ணன் சிறுவயது முதல் படித்து வளர்ந்து அதே பள்ளிக்கு ஆசிரியராகவும் வந்து, அங்கு தேவையான நலத்திட்டங்களையும் செய்து வந்திருக்கிறான். தலைமையாசிரியருக்கு அடுத்தபடியாக ஏஎச்எம் பதவிக்கு வரும் வாய்ப்பு கண்ணனுக்குத்தான் இருந்தது. கண்ணன் தன் திருமணத்தின் போது விடுப்பு எடுத்துக்கொண்டு போயிருந்தபோது தலைமையாசிரியர் தன் உறவினரான மாதவனை ஏஎச்எம்மாக அமரவைத்து விட்டார். அதிலிருந்து மாயக்கண்ணன் கடுமையான தாழ்வுமனப்பான்மைக்கு ஆட்பட்டு தன் இயல்பிலிருந்து விலகி நண்பர்களிடமும், பள்ளியிலும், கோமதியிடமும் வேறொரு மனிதனாக நடந்து கொள்ள ஆரம்பித்தான். அவனது மூர்க்கம் நண்பனான தேவாவைத்தான் அதிகம் நிலைகுலையச் செய்தது.
கோமதி, மாயக்கண்ணன், மாதவன் மூவரும் ஒரே பள்ளியில் வேலை பார்க்க வேண்டிய காலத்தின் நிர்பந்தம் கண்ணனையும் மாதவனையும் எதிரிகளாக்கி கோமதியின் முன்னால் நிறுத்தியிருந்தது. மாதவன் ஏஎச்எம் என்பதால், கோமதி தன் விருப்பமான தமிழ்மன்றம் அமைப்பது குறித்து மாதவனிடம் பேச வேண்டிய சூழல் உருவாக, அதைப் பார்த்த கண்ணன் தன் மனைவி தன்னைவிட்டு மாதவனோடு போய்விடுவாளோ என்று ஆண்மனநிலையில் அவளிடம் சண்டையிடுவது என இந்த நாவல் ஆண், பெண் உறவுச் சிக்கலையும், அன்பின் பொருட்டு நிகழ்த்தப்படும் வன்முறைகளையும் பற்றி அலசுகிறது.
கோமதி போன்ற பெண்கள் பொறுமையிழந்தால் பூகம்பம் போல மாறிவிடுவதற்கு என்ன காரணம். நன்றாகப் படித்து கைநிறையச் சம்பளம் வாங்கியும் ஏடிஎம் கார்டை கணவரிடம் கொடுத்துவிட்டு தன் அன்றாடச் செலவுகளுக்கு கணவனை எதிர்பார்க்கும் பெண்கள் இன்னும் இருக்கிறார்கள். பொதுவாக தொடர்ந்து மறுக்கப்படும் விருப்பங்கள் ஒரு நாள் அனைத்தையும் எதிர்த்து விட்டு தன்னைத் தானே நிறைவேற்றிக் கொள்ளும். கோமதியின் மனநிலையும் அதுதான் செய்யாதே, போகாதே என்று அடக்கி வைத்தவற்றை செய்து பார்க்க நினைக்கிறாள். ஒரு பெண் நினைத்தால் எந்த எல்லைக்கும் போவாள் ஆனால் கோமதியின் இந்த மெல்லிய மீறலை மிக முக்கியமான ஆரம்பமாகப் பார்க்கிறேன். கோமதியை மட்டுமல்ல அவளது அம்மாவையும், மாமியாரையும் கூட முற்போக்கான கதாப்பாத்திரங்களாக வடிவமைத்திருப்பது ஆசிரியரின் பலத்தைக் கூட்டுகிறது.
ஒரு ஆண் பெண்ணை வர்ணிப்பதற்கும் ஒரு ஆண் இன்னொரு ஆணை வர்ணிப்பதற்கும் வேறுபாடு இருக்குமல்லவா. நர்சிம் மாதவனைப் பற்றி வர்ணிக்கும் போது மாதவனின் மேல் எந்தப் பெண்ணுக்கும் காதல் வரலாம். கோமதியின் கவனம் மாதவனிடம் திரும்பியதில் வியப்பில்லை என்னும் அளவிற்கான வர்ணனை அது. மாதவன் எதார்த்தவாதி. ஆசிரியருக்கான அனைத்து குணநலன்களும் உடையவன். ஆண் பெண் நட்பில், உறவில் மாதவனின் புரிதல் எல்லா ஆண்களுக்கும் இருந்துவிட்டால் எத்தனை அழகாக இருக்கும். இந்த மூவருக்கும் இடையிலான உறவுச் சிக்கல் எப்படி முடிந்திருக்கும் என்பதையெல்லாம் விரிவாகப் படிக்க நாவலை நீங்கள் வாசிக்க வேண்டும்.
இப்போது நாவலாசிரியரின் சில முக்கியமான வரிகளை மட்டும் சொல்லி முடிக்கிறேன்.
“தேர் அவ்வளவு பிரம்மாண்டம் என்றால், கடந்தபின்னும் அதன் நிழல் நெடுநேரமாய் கடக்கும் அல்லவா.”
“அவரவருக்கான முக்கியத்துவங்கள், அன்றாடங்கள் பிறருக்கு அதே அளவு முக்கியமாக இருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை, எவ்வளவு நெருக்கமாக உடனிருப்பவாரக இருந்தாலும் என்பதை உணர்ந்ததாக இருந்தது அந்தப்பார்வை”.
“ரொம்ப பிடிச்ச பொருள கைல வைச்சுருக்கும்போது அத சரியா வச்சுக்கணும்னு ஒரு பதட்டம் வரும்ல.. அதுமட்டும்தான்.. அந்தப் பதட்டம் மட்டும்தான் எனக்கு உம்பக்கத்துல வரும்போதெல்லாம் படபடன்னு அடிச்சுக்க வைக்குது”
“அதாவது அந்த நிகழ்வின் முதல் ரசிப்பை அவன் முழுமையாக ரசித்து சிரித்துவிட்டுத்தான் அடுத்தவரிடம் பகிர்வான். அவன் சிரித்துக்கொண்டே சொல்லும்போது, அந்த நிகழ்வை முழுதாகக் கேட்டுவிட்டு நாமும் சேர்ந்து சிரிக்கலாம் என்றால் விடமாட்டான்”
“நாகராஜூவின் குரலில் இப்போது தீவிரம் தெரிந்தது.
“ஒத்தக்கைய வச்சுக்கிட்டு செல்வம்லாம் தன் மொத்த வாழ்க்கையையும் மன்றத்துக்கே அர்ப்பணிக்கலயா. அந்தாள்ட்ட பத்து நிமிசம் பேசினா நமக்கும் செவப்பு பத்திக்கும். செல்வம் மாதிரி உண்மையான ஆளுகதான்பலம். இந்தா லீலாவதி மேட்டரயே எடுத்துக்க.. இப்பவர விடாம கூட்டத்தக் கூட்டிக் கூட்டி, ஊருக்குள்ள தாட்டியமா சுத்துன அத்தாமொக்க ஆளுகளயே உள்ள வைக்க வச்சுட்டாங்கல்ல”
“நாம் கற்றுக்கொள்பவை ஏராளம். ஆனால் அதை தகுந்த இடத்தில் பிரயோகிக்கிறோமா என்பதே வெற்றியும் தோல்வியும்”
“மறந்தவை என்று நினைக்கும் அனைத்தும் மனக்குளத்தின் அடியாழத்தில் மிதந்து கொண்டேதான் இருக்கும் போல, ஒரு சொடுக்கலுக்குக் காத்திருக்கும் சிப்பாயைப் போல எனத்தோன்றியது அவளுக்கு”
“இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக இந்த உலகம் எப்படி நிலைகொண்டிருக்கிறது, வறண்டு வெடித்து மடியப்போரும் பருவங்களில் எப்படி மிகச் சரியாக ஒரு பெருமழை பொழிந்து உலகம் உய்கிறது என்ற அந்த தேவ ரகசியத்தை கோமதியின் அந்த நொடித் தொடுகையில் உணர்ந்தான். அவன் தலையில் கைவைத்த நொடியில் அவள் மார்பில் சரிந்தான்”
“யாரும் யாரிடமும் தன்னைக் குற்றவாளியாக. காட்டிக்கொள்ளத் தயாராக இல்லை, எல்லாருக்கும் ஒரு நியாயம். எல்லாரிடமும் குறைபட்டுக்கொள்ள காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன”
“எது எவருக்குமே தெரியக்கூடாது என்று நினைக்கிறோமோ அது குறித்த பேச்சு வரும்போது கண்களை தடிமனான துணியைக் கொண்டு இறுக்கிக் கட்டியதுபோல் ஓர் இருள் சூழும். கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டுமொத்த வெளியும் ஆண்டாண்டு காலமாய் ஏற்பட்ட கல் தீபத்தின் அடர் கறுப்பு வண்ணம் போலத் தோற்றமளிக்கும்”
“இப்பிடி தெக்குத்தெரு மாட்ட அம்பேத்கார் நகர் பயலுக பிடிக்கக்கூடாதுங்குறது, அவுங்க அவங்க மாட்ட அவுக்கவே கூடாதுன்றதுலாம் ரொம்ப தப்பான பேச்சு ஆமா. ஊர்ல நாங்க சொல்றதக் கேட்டு நடத்துறதா இருந்தா நடத்துங்க. இல்ல இப்பிடித்தான் அந்த சாதி வரக்கூடாது இந்த ஊர் வரக்கூடான்னா, ஒக்காலி ஒட்டுமொத்தமா ஜல்லிக்கட்டும் வேணாம் ஒரு மசுரும் வேணாம்ண்ட்டு மொத்தமா முடிச்சு விட்ருவோம், என்ன கிட்டுணா நாஞ்சொல்றது”
“ஊரில் ஏறக்குறைய அனைத்து மாணவர்களின் வீடுகளும் தறியும் அது சார்ந்த தொழிலும் செய்து அன்றாடத்தை சமாளிக்க வேண்டி இருப்பதால், பள்ளிக்கூடத்தில்ருந்து போன உடனேயே அந்த வேலைகளில் ஈடுபடுத்தி விடுகிறார்கள். இதனால் வீட்டுப்பாடமோ, தனிமையில் அமர்ந்து படிப்பது முடியாமல் போகிறது என்பதை மாயக்கண்ணனிடம் ஒருமுறை மன்றத்தில் வைத்து செல்வம் சொன்னதன் எதிரொலியாக இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தான்”
மேற்குறிப்பிட்ட வாக்கியங்கள் இந்த நாவலில் ஆசிரியரின் தனித்துவத்தைச் சொல்லும் நான் ரசித்து வாசித்த வரிகள். இன்னும் அப்பாவிற்கும் மகளிற்குமான அன்பை ஓரிரு வரிகளில் அவர்களோடு வாழ்ந்த அனுபவத்தோடு நமக்குள் கடத்துவதும் சிறப்பு.
மதுரையில் புழங்கும் பழமொழிகளும் தொய்வில்லாத வட்டார வழக்கும் வாசிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்துகின்றன.
அனைவரும் வாசிக்க வேண்டிய நாவல்.
மனமார்ந்த வாழ்த்துகள் நர்சிம் “தோழர்”.
(வாய்ப்பிருந்தால் இந்த நாவலை வேரலில் இரண்டாம் பதிப்பாக வெளியிடலாமா. தங்கள் பதிலுக்குக் காத்திருக்கிறேன்)
அன்புடன்
~கவிஞர் அம்பிகா குமரன்.

