Homeகட்டுரைகள்மெய்யறிதலை நோக்கி நகர்த்தும் ‘மதுரைக்கதைகள்’

மெய்யறிதலை நோக்கி நகர்த்தும் ‘மதுரைக்கதைகள்’

ருவகை timeloop இல் இன்று சிக்கிக் கொண்டேன். இந்த டைம் லூப் ஒரு நிலையான பௌதீக இருப்பிடத்தில் மீண்டும் மீண்டும் நிகழ்ந்தது. சில நாட்களாக என்னிடம் நர்சிம் limerence இருக்கிறது. அவரது கதைகள் மீது தீவிரமான ஈர்ப்பு. அவரது கதைகள் உரிய இடத்தை அடைய வேண்டும்! என்கிற தவிப்பும் ஏனோ அவரைப் படிக்கப் படிக்க கூடுகிறது. 

இன்று முழுவதும் அவரது மதுரைக் கதைகள் சிறுகதைத் தொகுப்பைப் படித்தேன். ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில்,  மதுரைப் புறநகர்ப் பகுதியில் சிக்கிக்கொண்ட மனிதர்களின்  வாழ்க்கைச் சுழற்சியோடு, நானும் சிக்கியிருந்தேன். குறிப்பிட்ட இடங்களுக்கு இடையேயான தொடர்புகளை அனுமதிக்கும் ஒரு உள்ளூர் இடச்சுழலை மதுரைக் கதைகள் உருவாக்குகின்றன. 

நாம் சினிமாவில் பார்க்கிற மதுரை, மதுரைக்கு வடக்கே 300 கி .மீ இல் இருக்கிறது. ஆனால் இலக்கியவாதிகள் காட்டுகிற மதுரை வேறு மாதிரியாக இருக்கிறது. நல்லந்துவனார், இளம்பெருவழுதியார், கடுவன் இளவெயினனார், இளங்கோ அடிகள், மாங்குடி மருதன் காட்டிய மதுரை நகரை தரிசித்த என்னால் சமகால திரைப்படங்கள் காட்டுகிற மதுரையை ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை. 

மதுரை குறித்து மாங்குடி மருதன் கூறுகிறார்.

‘’நாளங்காடியில் பூ விற்பாரும், மாலைகள் விற்பாரும், நறுமணச் சுண்ணம் விற்பாரும், வெற்றிலை பாக்கு விற்பாரும் இருப்பர். அல்லங்காடியில் சிலர் சங்கினை அறுத்து வளையல்களாகக் கடைந்து விற்பர். சிலர் அழகிய மணிகளுக்குத் துளையிடுவர். சிலர் பொன்னை உரைத்து மாற்றுக் காண்பர். சிலர் பொன்வேலை செய்வர். சிலர் ஆடைகள் விற்பர். சிலர் அழகிய ஓவியங்களை வரைந்து விற்பர். பலாப்பழம், மாம்பழம், வாழைப்பழம் ஆகிய கனிவகைகளைச் சிலர் விற்பர். வாழைக்காய், வழுதுணங்காய், பாகற்காய், கீரை, கிழங்கு முதலியவற்றைச் சிலர் விற்பர். இவர்கள் பேசும் ஓசையெல்லாம் கூடிப் பேரொலியாக இருக்கும்.

கடையாமத்தில் அந்தணர் மறையினை ஒதுவர். பாணர் மருதப் பண்ணை வாசிப்பர். பாகர்கள் யானைகளுக்குக் கவளம் தந்துகொண்டிருப்பர். குதிரைகள் புல்லைத் தின்றுகொண்டிருக்கும். கடைக்காரர்கள் கடைகளின் முற்றங்களைச் சாணத்தால் மெழுகித் தூய்மை செய்வர். கள் விற்போர் கள்ளின் விலைகூறிக் கொடுத்துக்கொண்டிருப்பர். மகளிர் தத்தம் மனைக் கதவங்களைத் திறக்கும் ஒலி கேட்கும். பள்ளியெழுச்சி முரசம் முழங்கும். காளை மாடுகள் ஆரவாரம் செய்யும். சேவல்கள் கூவும். மயில்கள் அகவும். களிறுகள் பிளிறும். மகளிர் மனைமுற்றங்களைப் பெருக்குவர்.’

வெகுகாலத்துக்குப் பிறகு மாங்குடி மருதன்போல அதன் அத்துணை இயல்புகளையும் படம் பிடிக்கிறது நர்சிம்மின் மதுரைக் கதைகள். 

மாட்டுக்கு லாடம் அடிப்பவர்கள், சதா கிரிக்கெட் பேட்டும் கையுமாகத் திரிகிற இளந்தாரிகள், ஏதோ ஒரு கணத்தில் அவர்களுக்குள் சடாரென முகிழ்க்கிற காதல், அந்தக் காதலை கல்யாணமாக்க  செயல்படுத்தும்  சாகசங்கள், ஆணவக் கொலைகள், வைகை ஆறும் மீனாட்சியும் அருள்செய்கிற நகரில் பெரிய மனிதர்களின் அற்பத்தனங்கள், பைத்தியமாக கருதப்படுகிற ஒருவனுக்குள் எழும்புகிற இறைமை, என மதுரையை 180° கோணத்திலும் காட்ட முடிகிறது நர்சிம்மால்.

நர்சிம் கதைகளின் நோக்கம்  ‘எல்லாவற்றையும் சொல்லிவிடுவது’ அல்ல. மாறாக அது மனித அனுபவம், உணர்ச்சி மற்றும் இருப்பு ஆகியவற்றின் முழுமையைக் கண்டடைய முனைகிறது. புனைவை விடவும் இக்கதைகள்  அன்பு, நம்பிக்கை, மனவேதனை, இழப்பு மற்றும் துயரம் போன்ற உணர்ச்சிகளுக்கு முன்னுரிமையைத் தருகிறது. 

நர்சிம்மின் கதைகள் முடிகின்றனவா? தெரியவில்லை. அவை வாசிப்பவரிடம்

அனைத்தையும் உணர்த்தும் ஒரு பிரியாவிடையைக் கோருகின்றன. இக்கதைகள் மனித மனதின் ரகசியங்களை, விசித்திரங்களை கண்டுபிடிக்கும் ஒரு மெய்யறிதலாக திகழக்கூடியவை . 

வாழ்க்கை அரிதாகவே தெளிவான முடிவுகளைத் தருகின்றன . சில கேள்விகளுக்கு விடையளிக்காமல் விடுவதன் மூலம், நர்சிம் தன் கதைகளை மேலும் யதார்த்தமானதாக, உண்மையானதாக, மாற்றுகிறார். 

இக்கதைகள் பெரும்பாலும் தெளிவற்ற, இருபொருட்தன்மை  கொண்ட, அல்லது திடீர் முடிவுகளைக் கொண்டிருக்கின்றன. நர்சிம் தன் கதைகளில்  ஒரு நேர்த்தியான தீர்வை வழங்க முயல்வதில்லை. கதையைட்டத்தின் நம்பகத் தன்மையைக் குறைக்கக்கூடிய அதிகப்படியான விவரங்களைத் தவிர்த்து,  இறுதியான, நீடித்த உணர்வில், அல்லது கருப்பொருளில்  அவர் கவனம் செலுத்துகிறார்.  

நர்சிம் எல்லா பதில்களையும் அவரே வழங்குவதை விட, கதை முடிந்த பிறகு, வாசகர் அதைப் பற்றி நீண்ட நேரம் சிந்திக்க வேண்டுமென விரும்புகிறார். 

அவரது படைப்பாற்றல் முழுமையான அர்த்தங்களுக்கு இடையிலான இடைவெளியில் செழித்து வளர்கிறது.

அடக் கடவுளே, இந்தக் கதை இவ்வளவு சீக்கிரத்தில் முடிவடைந்துவிட்டதே! எனப்பல கதைகளில் உணர்ந்தேன். 

அடுத்து என்ன நடந்திருக்கும்? இந்த எதிர்வினை, நாம் கதையை நினைவில் வைத்துக் கொள்ள அதிக வாய்ப்பை உருவாக்குகிறது.  இந்தக் கதைகளை படித்து முடித்தபிறகும்  தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருப்போம். சிலவேளை இதில் நமக்கு விரக்தி ஏற்படலாம். இதை நண்பர்களிடம்  கொட்டித் தீர்ப்போம். அது அவர்களைத் தொடர்ந்து படிக்க ஊக்குவிக்கக்கூடும். அல்லது அங்கிருந்து  ஒரு வாசகரிடம் இன்னொரு புனைவாகவும் தொடரலாம்.

~கவிஞர் கரிகாலன்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை