ஏற்கனவே கூறப்பட்ட கதைகளைப் பின்காலனித்துவ சூழலில் மறுவாசிப்பு செய்வது, அல்லது, மறு கட்டமைப்பு செய்வது எல்லா மொழிகளிலும் நடைபெற்று வருகிறது. அத்தகைய பழங்கதையாடல்களில் வருகிற மாந்தர்கள், பேசாமல் விட்டவற்றை மையமாகக் கொண்ட வேறு ஒரு கதையை எழுதுவதைத் தமிழிலும் முயன்றிருக்கிறார்கள்.
புதுமைப்பித்தனின் சாபவிமோசனம், எம்.வி. வெங்கட்ராமின் அகலிகை முதலிய அழகிகள் மற்றும் நித்தியகன்னி, இந்திரா பார்த்தசாரதியின் கிருஷ்ணா, எஸ்.ரா. வின் உபபாண்டவம் போன்றவை இத்தகைய முயற்சிகளில் முக்கியமானவை. இவை பெரும்பாலும் இந்திய ஏகாதிபத்திய மரபில் தோன்றிய கதையாடல்கள்.
நம்முடைய தமிழக் காப்பிய மரபில் முக்கியமான இரண்டு படைப்புகள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும். பின் காலனித்துவக் கோட்பாடு, ‘யார் பேசுகிறார்கள்?’ எனக் கேட்கிறது. மன்னர்களையோ, பேரரசுகளையோ கொண்டாடும் படைப்புகளாகவே இதிகாச மரபுகள் இருந்திருக்கின்றன. ஆனால் சாதாரண மக்களை (சிலப்பதிகாரம்) , நாடோடிகளாகத் திரியும் துறவிகளைப் (மணிமேகலை) பேசியவை இவ்விரு பெருங்காப்பியங்களும்.
மன்னராட்சியை மையத்திலிருந்து அகற்றுதல் எனும் அடிப்படையில் இயங்கும் இத்தகைய காப்பியங்கள் தமிழ் இலக்கியவாதிகளின் நவீன மனத்தை வெளிப்படுத்துபவை.
மத ஒழுங்கிற்கு மத்தியில் நிலவிய இறுக்கமான சாதிப் படிநிலையை விமர்சித்தது மணிமேகலை. மணிமேகலையில் வருகிற ஆப்புத்திரனை புலையன் மகன் என அந்தணர்கள் இகழ்கிறார்கள். இத்தகு கதாபாத்திரங்கள் , மேலாதிக்கப் பேச்சுகளுக்கு எதிராக, ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவான ஆழமான மாற்றுப் பார்வையை வழங்குகின்றன.
போலவே, பெண்ணியக் கண்ணோட்டத்துக்கான முகமையை வழங்குவதிலும் எதிர்ப்பின் வடிவமாகத் திகழ்வதிலும் கண்ணகி பாத்திரம் தமிழர் நினைவுகளில் பதிந்திருக்கிறது. இந்தப் பாத்திரத்தை யாராவது மறுவாசிப்பு செய்தால் எப்படியிருக்கும்?
அடிக்கடி நினைப்பதுண்டு.
அவ்வகையில், கண்ணகியை வெறும் கற்பின் சின்னமாகக் கருதாமல், ஓர் கிளர்ச்சி சக்தியாகப் பகுப்பாய்வு செய்திருக்கும் ஒரு நாவலை சமீபத்தில் படித்தேன். அந்நாவல் பஃறுளி. நர்சிம் எழுதியிருக்கிறார். இந்நாவலைப் படித்தபிறகு அவரை ‘ நர்சிம் அடிகள்’ எனக் கிண்டலாக அழைத்தேன்.
இந்நாவலின் மையப் பாத்திரங்களான கோமதி, மாயக்கண்ணன் இருவரும் கோவலன், கண்ணகி போல வணிக குலப் பின்னணி கோண்டவர்கள். (இளங்கோ என்பதே வணிகர்களுக்கான பெயர், என தொமுசி ரகுநாதன் போன்றோர் சொல்கிறார்கள்.) செல்வந்தர்கள். பிரம்மாண்ட திருமணம்.
‘மாலை தாழ் சென்னி
வயிர மணித் தூண் அகத்து நீல விதானத்து
நித்திலம் பூம் பந்தர் கீழ்வான் ஊர்
மதியம் சகடு அணைய
வானத்துச் சாலி ஒரு மீன்
தகையாளைக் கோவலன்
மா முது பார்ப்பான்
மறை வழி காட்டிடத்
தீ வலம் செய்வது காண்பார்’
என மங்கல வாழ்த்துப் பாடலில் இளங்கோ பாடுவது போன்றே சமகாலத்துக்கு உகந்த வகையில் இந்தக் கல்யாணக் காட்சிகளை விவரிக்கிறார் நர்சிம்.
கண்ணகி தன் மார்பைப் பிய்த்து மதுரையை எரிப்பது, ஆணாதிக்க, அரசின் நீதிக்கு எதிரான ஓர் உச்சகட்ட சீர்குலைவு.நர்சிம் காட்டும் கோமதி வேறுவிதமான மதிப்பீட்டுக் குலைவை உருவாக்குகிறார். சிலப்பதிகாரத்தில் கோவலன், மாதவியை நோக்கு நகரும் நிலை உருவாகிறது. இங்கு கோமதியை அந்த இடத்துங்கு நகர்த்தும் சூழலை, அவள் கணவன் மாயக்கண்ணனே உருவாக்குகிறான்.
குடும்ப அமைப்பில் புலன்களால் அறியமுடியாதபடி இயங்கும் நுணுக்கமான தளைகளை நர்சிம் சுட்டிக் காட்டுகிறார். கோவலன் கொலைப் பழியை அறிய வரும்போது, பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர் துறக்கிறான். பஃறுளி நாவலில் மாயக்கண்ணனின் அகத்தெளிவுக்கு காரணமாக இருக்கும் சம்பவம், தோழர் லீலாவதியின் அரசியல் படுகொலை.
கோமதியின் உடல் மற்றும் விதியின் மீதான கட்டுப்பாட்டைஒரு பின்-காலனித்துவப் பார்வையோடு எடுத்துரைக்கிறது பஃறுளி.
பெண்களுக்கு மையச்சமூகத்தின் நுண் அதிகாரத்தை எதிர்த்து இயங்கக் கூடிய செயல் திறன் இருப்பதாகக் காட்டுவதால் இது ஒரு பின் காலனியப் புதினமாக மேலெம்புழுகிறது.
இந்த நாவலை, ஒரு நள்ளிரவில் படித்து முடித்தேன். ஒரு நல்ல படைப்பு சமூகத்துடனான இணக்கமின்மையைப் பேண வேண்டும். அத்தகு இணக்கமின்மையால் அன்றிரவு தூக்கம் பிடிக்க வெகுநேரம் ஆனது.
இது எப்படி சிலப்பதிகாரத்தை interpret செய்கிறதோ, போலவே, இதை மனம் அன்னா கரெனினாவோடும் ஒப்பிட்டபடியும் இருந்தது. தனது மனைவியின் மரணப் படுக்கையில், அலெக்ஸி அலெக்ஸாண்ட்ரோவிச் ஓர் ஆழமான, ஆன்மீக விழிப்புணர்வை அனுபவிப்பான். இரக்கத்தால் உந்தப்பட்டு, அன்னாவையும் விரான்ஸ்கியையும் மன்னிப்பான். அதன் மூலம், தனது பழிவாங்கும் கர்வத்தையும் உணர்ச்சியற்ற அதிகாரத்துவப் பற்றின்மையையும் மாற்றி, ‘ஆன்மீக அமைதியை’ அனுபவிப்பதாக டால்ஸ்டாய் குறிப்பிடுவார்.
ஆனாலும் அந்த ஆனமீகப் பரவசம் அவனிடம் வெகு நேரம் நீடிப்பதில்லை. அவனது மனம் திரும்புதல் , அந்நாவலில் உணர்ச்சியற்ற, பாசாங்குத்தனமான மதக் கடமையாக இருக்கிறது. பஃறுளியில் மாயக்கண்ணனின் மனம் திரும்புதலுக்கு எழுச்சியூட்டுவதாக லீலாவதியின் ஈகை அமைகிறது.
மாயக்கண்ணனின் மாற்றம் இதயத்திலும் ஏற்படும் ஆழமானதொரு மாற்றம். இது தெய்வீக மன்னிப்பைக் கண்டடைதல் என்கிற நிலை. கோமதி வாழ்நாள் முழுவதற்குமான அருளை கண்ணனுக்கு வழங்கி மறைந்திருக்கிறாள்.
கோவலன் மரணச் செய்தியைக் கேட்டு ‘போற்றா ஒழுக்கம் புரிந்தீர் யாவதும் / மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின் / ஏற்று எழுந்தனன் யான்’ எனக் கூறுவாள் கண்ணகி.
/மாற்றா உள்ள வாழ்க்கையேன்/
வாழ்க்கையை, அது தரும் இன்ப துன்பங்களுடன், எவ்வித மாற்றமும் கோராமல் அப்படியே ஏற்றுக்கொள்கிற நிலை. கிட்டத்தட்ட கண்ணகியின் ஞானத்தை (life as it is) இங்கு கண்ணனும் அடைகிறான் . இது ஒரு வகை அகவிழிப்பு நிலை. இதை ஒரு பெண்ணிய நாவல் என்பதைவிடவும் மானுடப் பொதுமைக்கான அற இலக்கியம் என்றுதான் கூறவேண்டும்.
தமிழின் சிறந்த புதினங்களுள் முக்கியமானது பஃறுளி.
~கவிஞர் கரிகாலன்

