சமீபத்தில் பார்த்த வாழ 2 , Bildungsroman அல்லது Coming-of-age stories படம். யூத் படமும்கூட இதே டைப்தான். ஹார்பர் லீ எழுதிய To Kill a Mockingbird இந்த வகைப் படைப்புதான். இன அநீதியை ஒரு இளம் அமெரிக்கப் பெண்ணின் பார்வையில் சித்தரித்திருப்பார்
எஸ். இ. ஹின்டனின் The Outsiders பதின்ம வயதுடையோர் குழு ஒன்று சமூகத்தின் ஏழ்மையான பாதையில் வளர்வதன் போராட்டங்களை விவரிக்கும் புனைவு.
இப்படி தமிழில் Coming-of-age கதைகள் இருக்கின்றனவா? தெரியவில்லை.
நர்சிம் படைப்புலக நிகழ்வுக்காக இன்று அவரது கற்குளம் சிறுகதைத் தொகுப்பை வாசித்தேன். இந்தக் கதைகளில் வருபவர்கள் சிறுவர்களுமில்லை. இளைஞர்களுமில்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட பருவத்தில் இருப்பவர்கள். கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் களங்கமின்மையை இழக்கும் Coming-of-age கதைகளிவை.
‘நாம் பிறந்த அந்த மாபெரும் மர்மத்தின் முன், ஆர்வமுள்ள குழந்தைகளைப் போல நிற்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள்!’ என்பார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
நம்மை அப்படி நிறுத்திப் பார்க்கிறார் நர்சிம். இந்தக் கதைகளைப் படித்து முடித்தபோது, முதிர்ச்சி அடைவதன் சாபத்தைக் காலமேன் நமக்கு வழங்குகிறது ? கவலையாக இருந்தது.
சிறுவர்கள் பெரியவர்களை ரோல் மாடல்களாக எடுத்துக் கொள்கிறார்கள். முதன்முதலாக பெரியவர்களின் தவறை அறிய நேரும்போது,
பெரியவர்களுக்கென தெய்வீக அறிவு இருப்பதில்லை! எனும் உண்மை அவர்களைத் தாக்குகிறது. பெரியவர்களின் பிழை இத்தகு பிள்ளைகளின் குட்டி மூளைக்குள் நுழையும்போது, அவர்கள் உலகம்
பீதியால் பாழடைகிறது. இப்போது
தெய்வங்கள் வீழ்ச்சியடைந்து விட்டன. எல்லாப் பாதுகாப்பும் போய்விடுகிறது.
தவிர்க்க முடியாமல் இவர்களும் ஒரு நாள்
பெரியவர்களாகி விடுகிறார்கள்.
வளரும் தங்கள் பிள்ளைகள் என்னென்ன வம்புகளையெல்லாம் கொண்டு வருவார்களோ? தங்கள் பதின்ம வயதை மறந்து அப்பா, அம்மாவாக அச்சத்தோடு அவர்களைப் பார்க்கிறார்கள்.
தமிழின் அபூர்வமான மலர்ச்சியான கதைகளாக இருக்கிறது கற்குளம்.
~கவிஞர்.கரிகாலன்

