மதுர காதை – 5
’சங்கர் குரு’-அர்ஜூன் படம் செம்மை ஓட்டம். அதைப் பார்க்க நான் ரகு மற்றும் பழனி மூவரும் முதன்முதலில் தனியாகப் படத்திற்கு வந்திருக்கிறோம் என்பதுதான் அதில் குறிப்பிட வேண்டிய செய்தி. மூன்று பேர் எப்படி ’தனியாக’ என யோசிக்கிறீர்களா? அரை டவுசரில் இருந்து நாங்கள் கைலிக்கு மாறிவிட்டதை உலகிற்கு உணர்த்தும்பொருட்டு கைலியோடு எங்காவது வெளியில் போகலாம் எனும் ஆலோசனையில் அழகர்கோயில்தான் முதலில் வந்த இடம். எங்கள் ஏரியாவில் இருந்து எப்படியும் 30 கிலோ மீட்டர் தூரம் என்பதால் கிட்டத்தட்ட வெளியூர் செல்வது போல் ஆகும். முதலில் பெரியார் பேருந்து நிலையம் பிறகு அங்கிருந்து 44ம் நம்பர் பஸ்ஸில் ஏறினால் அழகர்கோயில். ஆனால் கைலி கட்டிக்கொண்டு கோயில்களுக்கு எல்லாம் செல்வதற்குத் தடை என்றான் பழனி. திருப்பறங்குன்ற மலை, புதுமண்டபம், தெப்பக்குளம் என ஒவ்வொரு இடங்களாகப் பேசி அலசி முடியாது என ஒருவழியாக உள்ளூரில் இருக்கும் ரத்னவேல் தியேட்டருக்குப் போவது என முடிவானது. வீட்டில் முதலில் கேலியும் கிண்டலும் செய்திருந்தாலும் இந்தப் புதுக்கைலியை வாங்கிக் கொடுத்துவிட்டார்கள். அளவில் சற்று சிறியது என்றாலும் மொடமொடவென இருந்தது. மடித்துக் கட்ட வரவில்லை. லேசாகக் கனுக்காலால் தூக்கிவிட்டு மடக்கிக் கட்டுவார்களே அதுபோல எல்லாம் செய்யவே முடியவில்லை. அதைவிட முக்கியமாய் முழுதாய் மடித்துக்கட்டாமல் கொஞ்சமாய் மடித்து அப்படியே சொருகிக் கொள்ளும் வித்தையும் வரவில்லை. பழனியும் ரகுவும் வீட்டில் இருந்த பழைய கைலியைக் கட்டிக்கொண்டதால் வித்தியாசமாக ஒன்றும் தெரியவில்லை.
ஆண்கள் டிக்கெட் ஒரு ரூபாய் என்பதால் எப்படியோ மூன்று ரூபாய் தேற்றி விட்டோம். ஆனால் ஆண் பெண் இருவருமே அமரும் சிகப்புச் சேர் ஒரு ரூபாய் ஐம்பது பைசா டிக்கெட்டுகள் தான் இருக்கின்றன என்றான் பழனி. கூட்டம் மெதுவாக உள்ளேப் போகப்போக தியேட்டர் பெல் அடிக்கப்பட எங்களுக்குள் படபடப்பு கூடியது. ரகு சொன்ன யோசனை சரியெனப் பட, கைலியைக் கழற்றி மடித்து வைத்துக்கொண்டு ‘பெண்கள்’ கவுண்ட்டர் பக்கம் போய் நின்றோம். 70 பைசா பெஞ்ச் டிக்கெட்டுகள் அவை. வாங்கிக்கொண்டு கூண்டில் இருந்து வெளியே வருகையில் நிறுத்தியவர் பீடியை இழுத்துக்கொண்டே என்னைப் பார்த்ததும் போகச் சொல்லிவிட்டு ரகுவையும் பழனியையும் நிறுத்திவிட்டார். “ஏண்டா அவென் பிஞ்சுப்பய, நீங்க மொரட்டு ஆளுகளா இருக்கீங்க பொடப்பா டவுசரப் போட்டுக்கிட்டு லேடிஸ் பக்கம் எதுக்குடா வர்றீங்க” என விரட்டினார். நான் உள்ளே செல்லலாம் எனும் வெற்றி எனக்கு மிகப்பெரிய தோல்வியாகத் தெரிந்தது. நான் இன்னும் சிறுபிள்ளைதானா எனும் கேள்வி என்னைக் குடைந்தது. ரகு என்னைப் பார்த்துப் பார்த்து சிரித்துக்கொண்டே கைலியை உதறிக் கட்டினான். பழனி உள்ளே போய் டிக்கெட்டைக் கொடுத்து காசை வாங்கினான். நான் உள்ளே சென்று படம் பார்ப்பதா இல்லை அவர்களோடு வெளியே போவதா எனும் குழப்பத்தில் நிற்க, பீடி அண்ணன் “டேய் ஓராமா நில்றா” என்றதும் ரகுவிற்கு அருகில் சென்றுவிட்டேன். அந்த நாள் முழுதும் கேலி செய்தார்கள். “ஒனக்கென்னப்பா கைலியக் கட்டுனா ஆம்பள கழட்டுனா சின்னப்பய” என இன்னும் ஏதேதோ சொன்னான் பழனி. ஆனாலும் கைலி கட்டிக்கொண்டு பொது இடத்திற்கு சென்றாக வேண்டும் எனும் திட்டத்தை செயல்படுத்தியாக வேண்டுமே. சட்டென நான் ஒரு யோசனை சொன்னேன் என்று எழுதலாம்தான். ஆனால் யோசித்துப்பார்த்தால் நான் மற்றவர்களின் யோசனையின் பின் தான் சென்றிருந்திருக்கிறேன். அப்படி பழனி சொன்ன யோசனை, ‘கள்ளந்திரி’. அந்தப் பெயரைச் சொன்னதும் மனம் துள்ளியது. ரகு என் இடுப்பில் தட்டி ‘செம்ம எடம்டா” என்றதும் அனிச்சையாக வயிற்றில் முடிந்து வைத்திருந்த கைலிக்கட்டை இறுகப் பிடித்தேன். உடனே கிளம்பிவிட்டோம்.
கள்ளந்திரி, அழகர்கோயில் மலையடிவாரத்தில் இருந்து இறங்கி மதுரைக்குள் வரும் வழியில் முதலில் கள்ளந்திரி. பிறகு அப்பன் திருப்பதி. சிறு கிராமம். கள்ளந்திரி வாய்க்காலில் வைகை நீர் பாயும் பொழுது அங்கு இருக்கும் மக்கள், சுற்றுலா என்ற சொல்லே தெரியாமல் அங்கு குழுமிவிடுவார்கள். பெரும்பாலும் சிறுவர்கள் இளைஞர்கள் வாய்க்கால் பாலத்தில் இருந்து குதித்து நீந்துவது நீராடுவது என அமர்க்களமான வாய்க்கால். நிமிர்ந்து பார்த்தால் பச்சைப்பசேல் என அழகர்மலை அதுபோக தோப்பும் துரவுமாக இருக்கும் ரம்மியமான இடம். நாங்கள் அருகில் செல்லும்பொழுதே சிறுவர்கள் அம்மணமாக நீரில் குதித்துக் கொண்டிருந்தார்கள். பழனிக்கு ஏகப் பெருமை. ‘எப்படி’ என்பதுபோல் பார்த்தான். ரகு சட்டெனக் கைலியை கழற்றி பாலத்தில் வைத்துவிட்டு குதித்து விட்டான். பழனி இறங்கும் முயற்சியில் இருந்தான். நான் இதுபோன்ற இடங்களில் முதலில் ரசிப்பேன் என்பதாக பாவ்லாக் காட்டிக்கொண்டு நிற்பேன். பயம் தான் காரணம். நீர் வெய்யில் வாங்கி மினுமினுத்தது. பாளம் பாளமாக வெடித்த தரைபோல் நீர்க்கட்டிகள் சிற்றலையாக நகர்ந்து கொண்டிருந்தன. இருவரின் கைலியையும் காவல் காத்து நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் ஏகக் கூட்டம் நீச்சலடித்துக் கொண்டிருந்தது. நீரில் இறங்கியதும் எங்கிருந்துதான் சத்தம் வருமோ, உற்சாகக் கூக்குரல் இட்டுக் கொண்டிருந்தார்கள்.
அருகில் வந்த ஒரு பெரியவர் “குதிக்கலயாடா” என்றவர், “தீப்பெட்டி இருக்கா” என்றதும் பதறினேன். என்னைப் பார்த்தால் அப்படித் தெரிகிறதா எனும் சுயபரிசோதனை ஓடியது.
“மீன் பிடித்திருவிழா வருது இவெங்க தண்ணியப்போட்டு ஒலப்பி ஒத்த மீன் கூட இல்லாமப் பண்ணிருவாய்ங்க போல” என்று சிரித்தார்.
சுற்றி இருக்கும் கிராமங்களில் இருந்தெல்லாம் மீன்பிடித் திருவிழாவிற்கு வந்துவிடுவார்கள். இன்னார் என்றில்லாமல் அனைத்து மக்களும் மீன் பிடியில் இறங்கி அதை ஒரு கொண்டாட்டமாகச் செய்வார்கள் என்றார்.
“நீங்க மீன் வியாபாரமா பெருசு” என்றதும் என்னைப் பார்த்துச் சிரித்தார். தன் இடுப்பில் இருந்து சதங்கையை எடுத்தார்.
“கள்ளந்திரி அப்டிண்டாலே கரகாட்டம்தான்டா தம்பி, நாங்க இதத் தொழிலா பண்ணமாட்டோம், எங்களுக்கு இது அந்த அழகர் கொடுத்தக் கலை.. கால்ல கட்டிட்டு கரகாட்டம் ஆடாத குடும்பமே இல்ல.. அப்பிடி ஒரு காலம் இருந்துச்சு. பொண்டு பிள்ளைங்க எல்லாம் அப்பிடியே ரெங்கிக்கிட்டு ஆடுனா ஒருத்தன் கண்ணும் விலகாது பாத்துக்க”
எனக்குள் ஆர்வம் எழுந்தது. நீர் வரத்து கம்மாயில் அதிகரித்துக் கொண்டே இருந்தது. பழனியும் ரகுவும் சற்றுத்தள்ளி உள்ளே நீந்திப் போய்க்கொண்டிருந்தார்கள்.
“அந்தா அந்த மரத்துக்கடில வாளி வாளியா கள்ளு கெடைக்கும். குளிக்கிற கப்பு இருக்கு பாரு, நல்லா இத்தாத்தண்டி கப்பு, அதுல ஒரு கப்பு வாங்கிக் கள்ளக் குடிச்சிட்டு இந்தக்கம்மாய்ல குளிச்சா அப்பிடிப் பசிக்கும், ஏப்பம் ஏப்பமா வரும். அழகர் திர்ழா ஆரம்பிக்கும்போதே எங்க கால்களுக்கு திர்ழா ஆரம்பிச்சுரும். ரங்கு ரக்கன ரங்கு ரக்கனனு” சொல்லிக்கொண்டே அந்த சதங்கையால் சத்தம் எழுப்பினார். இடுப்பில் முடிந்திருந்ததில் இருந்து ஒன்றை எடுத்து என் முகத்தருகே நீட்டினார். ’திருவிழா’ அல்ல அவருக்கு, ’திர்ழா’ என்றுதான் முகம்மலர சொன்னார்.
ஊசி. சிறிய ஊசி.
“இது என்னாது, ஊசி, இத மண்ணுல நிக்க வச்சு, தலைல கரகம் வச்சு ஆடிக்கிட்டே கண்ணால இந்த ஊசிய எடுப்பேன் நானு” என்றார். எனக்கு வியப்பாக இருந்தது. விரல்கள் நடுங்காமல் கையில் ஊசியை வாங்குவதே பெரிதாக இருக்க இவர் அதைக் கண்ணில் எப்படி எடுப்பார் எனத் தோன்றியது. “இதெ எப்பிடி?”.
“அதெல்லாம் அப்பிடித்தான், இந்தா இம்புட்டூண்டு, ஒன்னய விட சின்னப்பையலா இருக்கும்போதே எங்கப்பன் சொல்லிக்கொடுத்தது, இமைய வச்சு ஊசிய எடுக்குறது, கரகம் தப்பாம சுத்திக்கிட்டே ஆடுறது, மடக்குச் சேருல இங்குட்டு ஏறி அங்குட்டு மடக்கி எறங்குறதுனு ஏகமா இருக்கும் அதப் பாக்கவே கூட்டம். எங்கவீட்டம்மா ஆடும் பாரு ஒரு ஆட்டம், எட்டு ஜில்லாவுலயும் ஆள் இல்ல அவ கண்ல ஊசிய எடுத்து ஏரோப்ப்ளேன் மானிக்க கைய ரெண்டு பக்கமும் வச்சுக்கிட்டு காத்துல நிப்பா பாரு, இந்தக் கள்ளந்திரில ஆடுற ஒவ்வொருத்தருமே அந்த அழகருதாண்டா ” அதற்கு மேல் பேச்சு வரமால் மெளனமானார்.
அமைதியாக இருவரும் நீரைப் பார்த்துக்கொண்டிருந்தோம். கம்மாயின் இரண்டு பக்கத்திலும் சிறுவர்கள் கரையேறி மீண்டும் குதித்துக் கொண்டிருந்தார்கள். ரகு கை அசைத்து அழைத்தான்.
“அழகர் திருவிழான்னு இல்ல, மாசம் முழுக்க, வருசம் முழுக்க கோயிலுக்கு கூல் ஊத்துறோம் கொடமுழக்குப் பண்றோம் பொம்பளப்பிள்ள சடங்காகிருச்சு, ஊர்ப்பெருசு செத்துட்டான்னு வந்து வந்து நிப்பாய்ங்க, ஒரே நாள்ல இப்பிடி வந்து குமிஞ்சா எந்த ஊருக்குனு வந்து கரகம் ஆடுறது போங்கய்யானு பத்திவிடுவோம்.. அதெல்லாம் ஒரு காலம், இப்ப எங்கள எவென் சீந்துறான். மூணு வேள திங்கிறதுக்கு சித்தாள் வேலைக்கும் சீமக்கருவேலத்த வெட்டிக்கிட்டும் திரியுறோம்” சொல்லிவிட்டு போனவரைப் பார்க்க என்னவோ போல் இருந்தது.
பழனி கத்தியதும் ஒருவழியாக நீருக்குள் இறங்கலாம் என கைலியை அவிழ்த்தேன். அவ்வளவு அரும்பாடுப் பட்டுக் கட்டிய கைலி தொட்டதும் தொளதொளவென அவிழ்ந்தது. மூன்று கைலிகளையும் ஓர் இடத்தில் குவித்து வைத்து அதன் மேல் ஒரு கல்லை வைத்தேன். எல்லோரையும் போல் அப்படியே நான்கு ஐந்து அடிகள் ஓடிப்போய் கம்மாய்க்குள் தாவலாம் என நினைக்கத்தான் முடிந்தது, மெதுவாக கரைப்பக்கம் அமர்ந்து அப்படியே பதவிசாக நகர்ந்து நகர்ந்து உள்ளே இறங்கினேன். ரகுவும் பழனியும் கால் கை எல்லாம் வெளுத்து கண்கள் சிவக்க கரை ஏறி கைலியைக் கட்டிக்கொண்டு நான் இருக்கும் இடத்திற்கு அருகில் வந்து நின்று கேலி செய்தார்கள். “உள்ள முங்குடா முட்டாப்பயலே” என பழனி கத்த நான் போதும் என்பது போல் எழுந்தேன். என் கைலியை எவனோ ஒரு சிறுவன் எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். “புதுக் கைலிடா” என்று சொல்லும்போதே அழுகை வந்தது. ஆனால் டவுசரோடு இருப்பது வித்தியாசமாகத் தெரியவில்லை என்று சமாதானப்படுத்தி ஈரம் காயும் வரை நடக்கவைத்து அழைத்துவந்தார்கள். அதன்பிறகு வீட்டில் திட்டு வாங்கி பண்ணிரண்டாம் வகுப்பு கால்ப்பரிட்சையின்போதுதான் கைலி வாங்கிக்கொடுத்தார்கள் என்பது தனிக்கதை.
*
குங்குமம் இதழ்

