HomeUncategorizedமதுர காதை - 2

மதுர காதை – 2

மொட்டையரசுத் திருவிழா.

தம்பியைத் தேடி சைக்கிளில் திருப்பரங்குன்றம், சரவணப்பொய்கை வழியாகச் சென்றது நினைவிருக்கலாம். அதே சாலையில் பொய்கையை அடைவதற்குச் சற்று முன்னர் ஓரிரு கிலோமீட்டர் தொலைவில் வலதுபக்கமாக ஒரு திடல் இருக்கும். இடதுபக்கம் கூட்டுப்பனைமரங்கள் லேசாக வளைந்து நிமிர்ந்து, யானைக்கூட்டம் நிற்பது போல் தென்படும். கூட்டுப்பனைமரத்தின் எதிரே இருக்கும் அந்தத் திடலைக் கடந்து சென்றால், புகழ்பெற்ற தியாகராசர் பொறியியல் கல்லூரின் பின்வாசல் வந்துவிடும். அந்தத் திடலின் பெயர், மொட்டையரசுத்திடல். செம்மண் சாலைக்கு இருபக்கங்களிலும் சிறிய கல் மண்டபங்கள். ஒரு சிறிய குளம். சுற்றிலும் கற்பாறைகள் என அந்த இடம் சற்று வித்தியாசமான அமைப்பில் இருக்கும். அங்குதான் மொட்டையரசுத் திருவிழா நிகழும்.

மதுரைக்கு நான்கு பக்கங்களிலும் சுமார் நூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஊர்க்காரர்கள் வெளியாட்களிடம் தங்கள் ஊர் மதுரை என்றே சொல்வார்கள். அதனால் அந்தப் பரப்பளவுகளில் வருடம் முழுக்க நிகழும் திருவிழாக்களை மதுரையில் திருவிழா என்று ஆகிவிடும். ஆனால் மதுரையம்பதிகளைப் பொறுத்தவரை ‘சித்திரைத் திருவிழா” தான் ஒரே திருவிழா. அழகர் ஆற்றில் இறங்கும் விழாதான் ’அலப்பறையான’ நாள்.

இப்படி மதுரையின் சித்திரைத் திருவிழா பேசப்படும் அளவிற்கு ’மெட்டையரசுத் திருவிழா’ பேசப்படுவிதில்லை என்ற விவாதத்தைத் தொடங்கி இருந்தார் கணேசன் அண்ணன். வைகாசி மாச, விசாகத்தில் திருப்பரங்குன்றக் கோயிலில் இருந்து முருகனும் தெய்வானையும் தங்கக்குதிரையில் பவனி வருவார்கள். கோயிலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் திடலுக்கு ஊர்வலமாய் தங்கக் குதிரையில் வந்தடைவார்.  இப்போது அந்தத் திடலைச் சுற்றி பிரம்மாண்டமான தியாராசர் பொறியில் கல்லூரி வளாகம் பச்சைப்பசேல் மரங்கள், பெரிய ஆலமரம், விழுதுகளில் சிறுவர்கள் ஊஞ்சல் ஆடுவது என மாறிவிட்டது. நூறு இருநூறு வருடங்களுக்கு முன்னர் இந்த இடம் வெறும் பொட்டலாக ஒரே ஒரு மரம் கூட இல்லாத பாறைத் திடலாக இருந்ததாகவும், அந்த மொட்டைத் திடலில் முருகன் வந்து மக்களிடம் குறைகள் கேட்டு அருள்பாலித்ததால் அந்தத் திருவிழாவிற்கு மொட்டையரசுத் திருவிழா என்ற பெயர் பெற்றதாகவும் கோபாலகிருட்டிணன் நீட்டி முழக்கிக் கொண்டிருந்தார். ”அங்கன இருக்குற மண்டகாப்படில கணக்கு கேப்பாரும்ல்ல முருகென்” என கணேசன் தன்பங்குக்குத் தகவலைச் சொன்னார்.

சுற்றிலும் ஆட்கள் நின்று, திருப்பரங்குன்றம் நோக்கிப் போகும் பால்குட ஊர்வலத்தை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அங்கிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவுதான். முழுக்க வயல்வெளி . ஐந்தாறு மைல் தொலைவில் இருக்கும் விமான நிலையத்தில் விமானம் ஏறி இறங்குவதைப் பார்க்க இந்தத் திருப்பரங்குன்ற -அவனியாபுரம் சாலையில் நின்று கொண்டால் போதும். போலவே, விமானத்தில் இருந்து பார்த்தால் மதுரை வந்துவிட்டது என முதலில் அறிவித்துத் தென்படுவது இந்த திருப்பரங்குன்ற மலைதான். அதன்பிறகு  யானை மலை. பெரும் யானை ஒன்று  துதிக்கையை நீட்டி அமர்ந்திருப்பது போல் அமைந்த மலை.

“என்னா மாடசாமி, இன்னும் நாலு நாளைக்கி ஒரே மொட்டேர்ஸ் திர்ழாதானா, துணி சலவைக்கு கெடக்கப்பா”

“ஆமா, மண்டாகப்படி வேல கெடக்குல்ல, அடுத்த வாரந்தான் துணி மணி எல்லாம்”.

வருடம் முழுக்க ஊரார் துணிகளை வெளுப்பவர்கள் அன்று மட்டும் தங்களுக்கான நாள் என்பதுபோல வெளுத்து தேய்க்கப்பட்ட வேட்டியும் வெள்ளைச் சட்டையிலும் கலர் புடவைகளிலும் கஞ்சியின் மொடமொடப்போடு தம் மண்டகாப்படியில் இருப்பார்கள். திருப்பரங்குன்றம் நோக்கி போகும் பால்குட ஊர்லவத்தில் புகுந்த பின்னரும் கூட்டத்தில் பளிச்சென்று தெரிந்தார் மாடசாமி.

“வேற எதுக்காக இல்லாட்டியும் இந்தா இந்த மண்டகப்படி வெசயத்துக்காச்சும் சித்திரத் திர்ழாவ விட ரொம்பபெருசா நம்ம மொட்டேர்சு திருழா பேசப்பட்ருக்கனுமா இல்லையா, என்ன கோவாலு”

கணேசன் குரலில் ஆதங்கம் தெரிந்தது. கண்களை மூடி திருப்பரங்குன்றம் நோக்கி ஒரு கும்பிடைப் போட்ட கோவாலக் கிருட்டிணன் மொட்டையரசுத் திருவிழாவின் முக்கிய அம்சமான மண்டாகப்படிகளின் அமைப்பை விவரித்தார்.

உடைகளை துவைத்துத் தூய்மையாக்கும் சலவைத் தொழிலாளிகளின் மண்டாகப்படியில் துவங்கும் திடல், அடுத்து சிகை திருத்தம் செய்யும் மருத்துவர்களின் மண்டகப்படி, பின்னர் கோனார்களுக்கான(யாதவர்) மண்டாகப்படி, செட்டியார்களுக்கு, பிள்ளை மற்றும் அய்யர்களுக்கான மண்டாகப்படி என வரிசையாக திடலைச் சுற்றி கல்மண்டபங்கள் போல் அமைந்திருக்கும். அவ்வந்த சாதியினரின் குடும்பங்கள் வழிவழியாக பங்காளிகள் சகிதம் வைகாசி விசாக விழா அன்று முருகனை ஊர்வலமாக அழைத்து தங்கள் மண்டாகப்படி திடலில் வைத்து வணங்கி, மக்களுக்கு தடபுடலான உணவளித்து, பூப்பல்லக்கில் ஏற்றி அனுப்பி வைக்கப்படும் வைபவம் தான் மொட்டையரசுத் திருவிழா. அந்த நாள் முழுதும் அங்கு அத்தனைவித ஐஸ் வண்டிகள், பஞ்சுமிட்டாய்கள் சிறிய அளவிலான ராட்டினம், ஜவ்வுமிட்டாய்த் தாத்தாவின் வாட்சுகளைக் கையில் கட்டிக்கொண்டு ஆடித்திரியும் சிறுவர்கள், முண்டாசு போல் துண்டைத் தலையில் சுற்றிக்க் கொண்டு வயல் வெளியில் நடுவே நிற்கும் ஒற்றைப்பனைமரத்து அடியில் கிடைக்கும் கள் என மதியத்தில் துவங்கி மறுநாள் அதிகாலை வரை மண்டகாப்படிகள் இருக்கும் திடல் ஜன மகிழ்வில் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.

இந்த மொட்டையரசுத் திருவிழாற்கு முந்தைய மாதத்தில் நிகழும் சித்திரைத் திருவிழா என்பது ஊரின் மைய்யத்தில் இருக்கும் மீனாட்சியம்மன் கோயிலில் சொக்கநாதர் திருக்கல்யாணத்திற்காக சுமார் இருபது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அழகர்மலையிலிருந்து கள்ளழகர் இறங்கி ஒவ்வொரு மண்டாகப்படியாக நின்று நிதானமாக திருமண நிகழ்வை அடைவதற்குள் தாமதம் ஆகிவிடும். அவருக்காகக் காத்திராமல் திருமாங்கல்யம் கட்டி முடிந்துவிடுவதால் கோவித்துக் கொண்டு வைகை ஆற்றில் இறங்கிவிடுவார். இதை மாபெரும் விழாவாக, சித்திரைத் திருவிழா என ஆண்டாண்டுகளாகக் கொண்டாடி வருகிறது மதுரை. அழகர் தன் மலையில் இருந்து இறங்கும்பொழுதே மதுரையின் சுற்றுபத்தில் இருக்கும் அனைத்து கிராமங்களும் மாட்டு வண்டிகளில் மதுரை நோக்கி பயணப்பட தொடங்கிவிடும். அழகர் போகும் இடமெல்லாம் பின்னாலேயே கூட்டம் தொடரும். ஆங்காங்கே மாட்டு வண்டிகள் ஓரம்கட்டப்பட, மாடுகளுக்கு வைக்கோல் கொடுத்து ஓய்வெடுக்க வைப்பார்கள். மதுரையின் நவீன நாகரீக ஹோட்டல்களின் முகப்பில் எல்லாம் இப்படி மாட்டு வண்டிகள் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் காட்சி மதுரைக்கே உரிய அரிய வகை. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நேரத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் பாலத்தைச் சுற்றி நின்று துருத்தியில் தண்ணீர்பீய்ச்சி பரவசமாக வழிபடுவார்கள். தீர்த்தவாரித் திருநாள் அது.

ஆனால் மொட்டயரசுத் திருவிழாவில் இப்படியான எந்தவிதப் பரபரப்போ ஆர்ப்பாட்டமோ இல்லாமல், திருப்பரங்குன்றதில் இருக்கும் தியாகராஜர் பொறியியல் கல்லூரிக்குப் பின்புறம் இருக்கும் திடலில் அமைதியாக நடந்தேறும். மதியம், பின்மாலை, நள்ளிரவு என இரம்மியமாகத் திகழும் திருவிழா. அனைத்து சாதியினரும் மண்டகாப்படி வைத்து இருக்கும் சமத்துவம் பல ஆண்டுகளாக்கு முன்பே கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாகக் கோனார்களின் (யாதவர்) பங்காளி மண்டபவங்கள் பெண் வீடு, மாப்பிள்ளை வீடு எனப் பிரித்துக்கொண்டு மாப்பிள்ளை முருகனை பல்லக்கில் அழைப்பார்கள். மொட்டையரசுத் திருவிழாவில் முக்கிய அம்மசமே உணவுதான். வருகின்ற அத்தனை பக்தர்களுக்கும் மண்டகாப்படிகளில் விருந்து அளிக்கப்படும். வகைவகையான சைவ உணவைப் பரிமாறிக்கொண்டே இருப்பார்கள் ஒவ்வொரு மண்டாகப்படியிலும்.

கோயிலில் இருந்து முருகனும் தெய்வானை அம்மனும் தங்கத்தேரில் கிளம்புவதில் தொடங்கி, தெய்வானை அம்மை பெண்வீட்டு மண்டாகப்படியில் இருக்க, நாள்  முழுக்க திடலின் மண்டகாப்படி எழுந்தருளி, நள்ளிரவில் பூப்பல்லக்கில் முருகனும் தெய்வானையும் தம் கோயிலுக்குத் திரும்புவதோடு முடிகிறது, வைகாசி விசாகத்தின் மொட்டையரசுத் திருவிழா.

அங்கு மண்டகாப்படி வைத்திருப்பவர்கள் எங்கெங்கோ சிதறி வெளியூர்களில் இருந்தாலும் வைகாசி விசாகத்திற்கு வந்து தம்முடைய அல்லது தம் பங்காளிகளுடைய மண்டகாப்படியில் நின்று உணவு பரிமாறி இந்தத் திருவிழாவின் கலாச்சாரத்தை, பண்பாட்டின் சுடரை அணையவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.

-குங்குமம் இதழ்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை