‘கிளப்பி விடும் குரூப்பின் கதைகள்
மதுரையில் பல்வேறு குழுக்கள் இயங்கும். அதில் ஒன்றுதான் ‘கிளப்பி விடும் குரூப்’. ‘என்னத்தயாவது கிளப்பி விட்டுக்கிட்டே இருப்பாய்ங்க’ என அந்தக் குரூப்பின் மூத்தகுடிகள் சொல்வார்கள். சொல்லும்போது அவர்களின் எகத்தாளச் சிரிப்பு காற்றில் மிதக்கும்.
ஞாயிற்றுக் கிழமைகளில் கொஞ்சம் மெதுவாகத்தான் விடியும். ஆனால் அந்த ஞாயிறு அதிகாலையில் எங்கள் மாட்டுக்கொட்டகையில் தகதகவென ஐந்து மணிக்கே ஊர் கூடி இருந்தது.
“பசுமாட்டு கண்ல ’எம்ஜிஆர்’ தெரியுறாராம்ப்பா” என்று எவரோ கிளப்பி விட்டது மதுரையின் ‘சுத்துப்பத்து’ முழுக்க சுழன்றடிக்கத் தொடங்கியது. இந்த வதந்தியின் ஆயுட்காலம் கொஞ்சம் குறைவுதான் என்றாலும் இந்தச் செய்தியை பகுத்தறிந்த மூத்தகுடிகள், ’மேலூருக்கு அருகில் இருக்கும் ஒரு சிற்றூரில் இருக்கும் சிறிய கொட்டகையில் நிற்கும் ஒரே ஒரு மாட்டுக்கண்ணில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் எம் ஜி ஆர் எழுந்தருளுகிறார் என முடித்து வைத்தார்கள்.
அந்த சொற்ப நாட்களில் ஊரில் ஒரு மாடுகூட சுதந்திரமாக நடமாட முடியவில்லை. மாடுகளுக்குப் பேசும் திறன் இருந்திருந்தால் “நீங்கள் எல்லாம் அக்கா தங்கச்சி கூட பிறக்கலயா, இப்பிடி பின்னாடியே வர்றீங்க” எனக் கூச்சல் போட்டிருக்கக் கூடும்.
ஒருவழியாக மாட்டுக் கண்களை விடுவித்த ’கிளப்பி விடும் குரூப்’ அடுத்துக் கையில் எடுத்தது ஒருவனின் தலையை. வியப்பாக இருக்கிறதா? மிகத் திட்டமிட்டு ஒரே நாளில் மதுரையின் அத்தனை இண்டு இடுக்கிலும் ‘தலையில்லா முண்டம் உலவுகிறது’ என்ற செய்தியை எவனோ கிளப்பிவிட,இரவு ஒன்பது மணிக்கே ஊர் பீதியில் அடங்கத் தொடங்கியது. அப்போது வில்லாபுரம் ’மது’ தியேட்டரை அதன் வாடிக்கையாளர்கள் மது கோயில் என்றே கும்பிட்டுக் குறிப்பிடுவார்கள். தரமான பலான படங்களை ஓட்டிக்கொண்டிருந்த தியேட்டர் என அதன் பார்வையாளர்கள் காலை பதினோரு மணிக் காட்சிக்கு பத்து மணியில் இருந்தே எதிரில், பக்கவாட்டில் இருக்கும் டீக்கடைகளில் மிக ‘டீக்காக’ உடையணிந்து பவுடர் போட்டு அலுவலகம் செல்வதற்கு முன்னர் சற்று செய்தித்தாளைப் பார்த்து ஒரு டீ குடித்துவிட்டுப் போகலாம் எனும் தொனியில் இருப்பது போலவே மிகு நாகரீகமாய் நிற்பார்கள். தியேட்டருக்குள் நுழையலாம் எனும் சமிக்ஞை கிடைத்த நொடியில் அத்தனி ‘டீக்’ ஆசாமிகளும் பல்வேறு திசைகளில் இருந்து உள்ளே படையெடுப்புப் போல் பாய்வார்கள். இரவு வரை காட்சிகள் ஓடும். இதில் பாதிக்கப்பட்ட எவரோ ஒருவர் கிளப்பி விட்டதுதான் ‘தலையில்லா முண்டம் மதுத் தியேட்டரில் படம் பார்க்கிறது”. ‘ஆஹ,அது ஆம்பள’ என்ற முடிவை அறிவித்தது அந்த குரூப். ”தலை இருக்குற எடத்துல மொட்டைமானிக்க மொழுமொழுனு இருக்காம்ய்யா” எனும் கூடுதல் கிளப்பல்கள் அச்சத்தை ஏற்படுத்தின. சில ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த சாதிய மோதலில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் பழி வாங்க இப்படித் தலையில்லா முண்டமாக அலைவதாகவும் நிச்சயம் பழி வாங்கிவிடும் என்றும் கிளப்பி விட, எந்த சாதியின் ஆள் இப்படி தலையில்லா முண்டமாக அலைகிறது, எந்த சாதி ஆட்கள் முண்டத்தைப் பார்த்து பயப்பட வேண்டும் எனும் அடுத்த ஆராய்ச்சித் தொடங்க, ஆளாளுக்குக் கிளப்பிவிட்ட செய்திகளில் மொத்தக் கூட்டமும் வெளியே வராமல் இருக்க, சிலநாட்கள் அமைதியாக இருந்தன மதுரை வீதிகள்.
அதெப்படி இப்படி அமைதியாக இருக்கலாம் என நம் கி.வி.கு அடுத்துக் கையில் எடுத்தது மீனாட்சியம்மன் கோயிலை. மீனாட்சியம்மன் கோயிலின் பொற்றாமரைக்குளத்தின் பக்கவாட்டில், அதாவது விபூதிப் பிள்ளையாருக்கு நேர் எதிர்ப் பிரகாரத்தில் (மீனாட்சியம்மன் கோயிலியின் உட்கட்டமைப்பு குறித்துத் தனியாக ஒரு கட்டுரையில் விளக்கவேண்டும்) ஒரு சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்பதே அந்தக் ’கிளப்பிவிடுதல்’ .கோயிலுக்கு உள்ளே சாமி சந்நிதியின் உள் பிரகாரத்தில் இருந்தக் கிணற்றைத் தூர் வாரியபோது உள்ளே சிறிது தூரம் படிகள் இறங்கி இடுபாடுகளால் மடிந்து இருந்ததாக வந்த ஒரு கீற்று உண்மைச் செய்தியை கையில் எடுத்தக் கிளப்பிவிடுதல் குரூப் அந்தச் சுரங்கப்பாதையை “நேரா ராணியம்மா கொளத்துல குளிச்சதும் சுத்திப் பாத்துட்டு டக்குனு சுரங்குத்துக்குள்ள போய் அப்பிடியே எந்திரிச்சா எங்க வரும்னு நெனக்கிற, இந்தா இப்பிடி சொடக்குப் போடுறதுக்குள்ள நாயக்கர் மகால் ராணி ரூம்புக்கு வந்துருமாம்”. இதில் உள்ள நுட்பங்கள்தான் மிக முக்கியம். குளித்தப் பிறகு ராணி அறைகுறை ஆடையுடன் இருப்பதால் யாரும் பார்ப்பதற்குள் சுரங்கித்தில் இறங்கிவிடுவார் என்பதை அந்த ‘டக்குனு’வுடன் இணைத்து அதைவிட முக்கியமாக அந்தப் பாதை நேராக அரண்மனையில் மஹாராணியின் அறைக்குத்தான் செல்கிறது ஏனெனில் குளத்தில் நீராடிய ராணியை அவ்வளவு பாதுகாப்பாக அழைத்துச்செல்லும் ஆர்வம். அப்படி அல்ல, திடீரென ஏதேனும் படையெடுப்பு எனில் இந்தப் பாதை வழியாக கோயிலுக்குள் புகுந்துவிடுவார் அரசர். அதன் பிறகு அம்மன் பார்த்துக் கொள்வார் எதிரிகளை என இன்னும் கொஞ்சம் பிசைந்து உருட்டப்பட்டு மக்களுக்குப் படைக்கப்பட்ட வதந்திதன் இந்தச் சுரங்கப்பாதை வதந்தி. இது வெகுநாட்களுக்கு உலவிய ஒன்று. குற்றாலம் வரையெல்லாம் இந்தச் சுரங்கப்பாதையை நீட்டிக்கொண்டு போனது ஒரு கிளப்பல் குரூப். அதில் ஒன்று, சிவகங்கை வரை சுரங்கம் நீண்டிருக்கிறது என கிளப்பிவிடப்பட்டவுடன், சின்ன மருது, பெரியமருது எல்லாம் சுரங்கம் வழியே போக்குவரத்து வைத்துக் கொண்டார்கள் என வரலாற்றின் காலத்தைப்பற்றியக் கவலையே இல்லாமல் கதைகிளப்பினார்கள். நாயக்கர் இறந்தது 1659 மருது சகோதரர்கள் இறந்தது 1801 என்றெல்லாம் சொல்வதற்கு ஆள் இருந்தாலும் கேட்பதற்குத் தயாராக இல்லாத குரூப்தான் நம் ‘கிளப்பிவிடுதல் குரூப்’. ‘சிவகங்கைல என்னமோ இருக்கு எனக் கிளப்பிவிட்டது மற்ற வதந்திகளோடு சேர்ந்துகொண்டதால் 90 களிலேயே கிடைத்திருக்க வேண்டிய கீழடி நமக்கு சற்று காலதாமதமாகக் கிடைத்தது போல.
இதையெல்லாம் முதலில் வியப்பாகவும் பிறகு சற்று திகிலாகவும் பேசிக்கொண்டிருந்த நாங்கள் பிறகு இந்தச் சுரங்கப்பாதையை வைத்து நகைச்சுவைகள் செய்து கொண்டிருந்தோம். அப்போது எங்கள் கோரிப்பாளையம் ‘டாப்பில்’ இருக்கும் காளிதாஸ் ஒருநாள் அவனோடு ஒருவரை அழைத்துவந்தான். தில்லியில் இருந்து வந்திருக்கும் தன்னுடைய சொந்தக்காரர் என அறிமுகப்படுத்த நாங்கள் அந்த தில்லிக்குக் கூடுதல் மதிப்பளித்துக் கைக்குலுக்கினோம். “தேசாப் படம் பாக்கணும்னாப்ள” என்றான் காளி. அமிர்தத்தில் தான் ஹிந்திப்படங்கள் பெரும்பாலும் ஓடும். அந்தத் தியேட்டரைச் சுற்றிலும் இராஜஸ்தான் சேட்டுகள் வசிப்பிடம். அவர்களின் எலக்ட்ரிகல் மொத்த, சில்லறை வியாபாரம் கொடிக்கட்டி பறந்து கொண்டிருந்தது மதுரையில். எதிரே, காஜிமார் தெருவினர் ஹிந்திப்பட விரும்பிகள் என்பதாலும் அமிர்தம் தியேட்டரில் தேசாப் என முடிவெடுத்துப் போனோம்.
“ஹிந்திப்படம்லாம் வேணாம்டா மாப்ள” என்ற சக நண்பர்களின் கூற்றை ஒதுக்கி, தில்லியின் புதிய நண்பரை மகிழ்விக்கும் பொருட்டு போனால், முதல் நொடியில் வந்த டிங்குடாங் டிங் ஏக் தோ தீன் பாடல் அவ்வளவுத் துள்ளலாக இருந்தது. அட இனி ஹிந்திப்படங்கள் மட்டும்தான் பார்க்க வேண்டும் என்றெல்லாம் முடிவெடித்தவுடன் பாடல் முடிந்தது. பிறகு பேசிக்கொண்டே இருந்தார்கள். பத்து நிமிடங்களுக்கு மேல் தாங்கவில்லை. நான் மெதுவாக வெளியேறி சப்பானிக்கோயில் தெருவழியாக நடந்து அப்படியே வீட்டிற்குப் போய்விடலாம் என காளியிடம் காதைக் கடித்துவிட்டுக் கிளம்பினேன்.
மறுநாள் காய்ச்சலில் அணத்திக் கொண்டிருந்த என்னை ‘ஒருரூபாய்’ டாக்டரிடம் அழைத்துச் சென்றார்கள். ஒரு ரூபாய்தான் வாங்குவாராம் டாக்டரின் தந்தை. இவர் பத்து ரூபாய் ஆனாலும் ஒரு ரூபாய்தான் பெயர். எது நிலைக்குமோ அதுவே நிலைக்கும் என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்த என்னை உலுக்கி “நேத்து நைட் லேட்டா வந்தியாமே என்ன ஆச்சு” என்றார்.
“தலை இல்லாத முண்டத்தப் பாத்தேன் டாக்டர்” என்று எப்படிச் சொல்வது அவரிடம். அதுபோலத்தான் இருந்தது. சப்பாணிக்கோயில் சந்தில் வண்டி மீது அமர்ந்திருந்தது. தூரத்தில் இருந்து பார்த்த நொடியில் சடாரெனத் திரும்பி தியேட்டருக்குள் மறுபடியும் புகுந்திருந்தேன். காளியின் கண்களில் தென்பட்டால் கேலிசெய்வான் என்பதால் படம் முடிந்து முதலில் கிளம்பிய கூட்டத்தினரோடு நுழைந்து அந்தச் சந்தைக் கடந்து எப்படியே திரும்பியே பார்க்காமல் ஓடியிருந்தேன்.
மதுரையில் சேட்டுகள் ஹெல்மெட் போட்டுதான் வண்டி ஓட்டுவார்கள் என்பது சிலநாட்களுக்குப் பிறகுதான் தெரிந்தது. *
*டாப் = இளைஞர்கள் தினமும் ஒரே இடத்தில் கூடி அமர்ந்து பேசும் இடம் மதுரையில் ‘டாப்’. அட்டி என பிற ஊர்களில் சொல்லப்படும் இடம்.
~குங்குமம் இதழ்

