Homeகட்டுரைகள்நினைவில் தொலையாத கதைகள்

நினைவில் தொலையாத கதைகள்

மதுர காதை – 6

’குணசீலனைக் காணவில்லை’ எனும் செய்தி எங்களை எட்டும்போது நானும் ரகுவும் வில்லாபுரம் கதிர்வேல் தியேட்டரில் ‘ஒரு கைதியின் டைரி’ படத்தை இரண்டாவது முறையாகப் பார்த்துவிட்டு வெளியே வந்தோம். படம் பார்க்க என்பதைவிட எதிரே இருக்கும் கடையில் ‘பட்டர் பன்’ சாப்பிடத்தான் என்பதை எங்கள் சைக்கிள் தானாகப் போய் நின்று உறுதி செய்தது.

பெரிய தோசைக்கல்லில் வெண்ணெய்க் கட்டியை சல்லென விட அது கணக்கச்சிதமாகப் போய் நடுவில் நிற்கும். ஓரிரு நொடியில் அதன் பக்கவாட்டில் இருந்து நீர்ப்பொறிகள் தென்பட்டதும் மிருதுவான ’பன்’னை இரண்டாக வெட்டிவிடாமல் லேசாகக் கீறி, வெண்ணெக்குச் சுற்றிலும் பரப்பி கரண்டியின் முனைகொண்டு வெண்ணெய்க்கட்டியை சீவி சீவி பன்னில் அப்பி அதன் மேல் சர்க்கரையைத் தூவி நெய்யால் மிதக்கவிட்டு சிறிதாக பன் அளவிற்கு வெட்டப்பட்ட வாழை இலையில் வழுக்குவதுபோல் நிரப்பிச் சுடச்சுட கையில் திணிப்பார், மாஸ்டர். பன் பட்டர் பற்றி அறிந்திராத வெளியூர்க்காரர்கள், பழக்கமில்லாதவர்கள் அல்லது பக்குவமில்லாதவர்கள் ஆர்வமிகுதியில் விரலைக் கொழகொழப்பான நடுப்பகுதியில் வைத்து சூடு பற்ற சட்டெனெ உதறி எடுத்து வாயில் வைத்துக்கொள்வார்கள். அதன்பிறகு சூடு ஆறும்வரைத் தொடாமல் நாக்கில் நீரொழுகப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இதற்காகவே பிறந்த மதுரைக்காரர்கள் எனில் ஓரத்தில் இருக்கும் நெய்யில் பொதிந்த சர்க்கரைத் துகள்களைத் தொட்டுத் தொட்டு ஒருபாட்டம் முடித்துவிட்டு ஓரங்களில் பிதுங்கும் வெண்ணெயைக் கொஞ்சமான பன்னோடு பிய்த்து (இது லேசுப்பட்ட காரியமல்ல, இலை வழுக்காமல் விரல் சுடாமல் பன் இரண்டாய்ப் பிய்ந்துவிடாமல் என அறிவியலுக்குச் சவால்விடும் சமாச்சாரம் என்றறிக) வாயில் போட்டதும் விழுங்கிவிடாமல் ஏற்கனவேத் தயாராக இருக்கும் உமிழ்நீர் கொண்டு ஆற்றுப்படுத்தி வாயில் ஒதுக்கிப் பின்னர் மெதுவாக உள்ளிறக்குவது என பட்டர் பன்னை உண்டு களிப்பது ஓர் ஆனந்தம். சூடு ஆற ‘கெழவன் கமல் கிளப்பிட்டாப்ள ல்ல”
எனப் பார்த்தப் படம் குறித்து நெய்விரல்கள் பளபளக்க அளவளாவுதல் பட்டர்பன்னுக்குச் செய்யும் மரியாதை.

அப்படி விண்டு விழுங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில்தான் ஊரிலிருந்து டவுன் நோக்கி அவசரமாகப் போய்க்கொண்டிருந்த மூர்த்தியண்ணன் எங்களைப் பார்த்து நிறுத்தி ‘குணசீலனைக் காணவில்லை’ என்றத் தகவலைச் சொல்லிவிட்டுச் சென்றார்.

குணசீலனைக் காணவில்லை எனும் சொல்லைக் கேட்டமாத்திரத்தில் “அவனுக்கு வேற வேல இல்ல” எனும் பதில் மனதில் எழத் தொடங்கி இருந்தது எங்கள் மத்தியில். எங்களை விட மூன்று நான்கு வயது மூத்தவன். ஆனாலும்  ‘அடா புடா’ விளிப்பாகத்தான் நாங்கள் பழகி இருந்தோம். இதே குணசீலன் முதன் முதலில் காணாமல் போனபோது நாங்கள் அடைந்தக் கலவரம் இருக்கிறதே அது சொல்லில் அடங்காது. அப்போது நாங்கள் பத்தாம் வகுப்பு. குணசீலன் தொடர்ந்து படித்திருந்தால் கல்லூரிக்குச் சென்றிருக்க வேண்டிய வயது அவனுக்கு. எங்களை வீட்டில் “எங்கே காணவில்லை” என யோசிக்கும் நேரம் என்பது தூர்தர்ஷன் செய்திகள் நேரத்தில்தான். அதுவரை தெருவிலோ மந்தையிலோ ‘டாப்’ அடித்துக் கொண்டிருப்போம் என விட்டுவிடுவார்கள். ஆனால் செய்திகள் முடியும் நேரம் சரியாக எவரேனும் வந்து ‘வீட்ல கூட்டியாரச் சொன்னாங்க’ என்றோ ‘ஒங்கம்மா சாப்டக் கூப்புட்டுச்சு’ என்றோ தாக்கல் சொல்வார்கள். வழி நெடுக எதிர்படுபவர்கள் ‘ஒங்கம்மா தேடுச்சு” என்று சொல்லச் சொல்ல ஆத்திரத்தோடு வீட்டிற்குள் நுழைந்து ‘வரமாட்டனா’ எனக் கத்த நினைத்து அப்பா அங்கு அமர்ந்திருப்பதைப் பார்த்து மெதுவாகத் தட்டை வைத்து டிவி முன் அமர்ந்தால் ‘உயரம் ஐந்து அடி, மாநிறம், காணாமல் போன அன்று ப்ரவுன் நிறத்தில் சட்டை அணிந்திருந்தார், தகவல் சொல்ல வேண்டிய முகவரி, விவேகானந்தா சாலை எழும்பூர் சென்னை ஆறு பூஜ்யம் பூஜ்யம் எட்டு’ என திரையில் ஓடும். காணாமல் போகப்போகிறோம் என்பதற்காகவே எடுக்கப்பட்டப் புகைப்படங்கள் போல் அவை தோன்றும். பெரும்பான்மையானவர்களுக்கு ‘லேசான மனநலம் பாதிக்கப்பட்டவர்’ எனும் பின்னொட்டு வரிகள் வரும்.

குணசீலன் மனநலம் பாதிக்கப்பட்டோ அல்லது வேறு எந்த விதமான அதிசய குணநலன்களோ அல்லாத மிகமிக சராசரியான ஒருவன். எங்கிருந்தோ இந்த ‘காணாமல் போகும் வித்தை’யைக் கற்றிருந்தான். முதன்முதலில் தம்பியோடு சண்டையிட்டதால் திட்டு அதிகமாக விழ, கோவித்துக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டான். கிளம்பும் முன் கோணல்மானலாகக் கடிதம் வேறு எழுதி வைத்திருந்தான். பீதியடைந்த அவன் வீட்டினர் அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, தெருமக்கள் தேடத் தொடங்கினோம். குணசீலன் தம்பி எங்களுடைய வகுப்புதான். நாங்கள் பெரியமனிதர்கள் போல் அவனைத் திட்டித் தீர்த்துக்கொண்டேத் தேடினோம். மந்தை, டி.ஆர் சைக்கிள் கடை, அய்யனார் கோயில், அரியநாச்சிப் பொட்டல் எனத் தேடாத இடமில்லை. அம்மட்டில் அவன் கடிதம் எழுதித் தொலைத்தது ஒரு ஞாயிறு என்பதால் தேடுவதற்கு நிறைய ஆட்களும் நேரமும் இருந்தது. இரவு ஒன்பது மணி சங்கு ‘ஊஊ’ என பஞ்சயாத்து போர்டு அலுவலகத்தில் அடிக்கும் சத்தம் கேட்டதும் ரகு, ’அவென் சங்குக்கு அடில ஒக்காந்துருப்பாண்டா’ என முணுமுணுக்க, சொன்னதுபோல் அந்த பெரிய இரும்புக் கூண்டிற்கு பக்கவாட்டில் அமர்ந்தவாக்கில் தூங்கிக் கொண்டிருந்தான். அடித்து எழுப்பி வீட்டில் கொண்டு போய் விட்டபொழுது அவனுடைய ‘நைனா’ எங்கள் கைகளைப் பிடித்துக்கொண்டு அழாத குறையாக நன்றி தெரிவித்தது என்னவோ போல் ஆனது எங்களுக்கு. ஆனால் அதன்பிறகு குணசீலன் தன் எல்லையைக் கொஞ்சம் கொஞ்சமாக விரித்துக் கொண்டு, ’ஏரோட்ரூம்’ என்று அழைக்கப்பட்ட விமானநிலையம், காரியாபட்டி, தங்கரீகல் தியேட்டருக்கு அருகில் இருக்கும் விக்டோரியா எட்வர்ட் மன்றத்தில் அமர்ந்து கொள்தல் என எங்களைப் படாதபாடு படுத்தத் தொடங்கிவிட்டான். நான்காவது முறை அவனைக் காணவில்லை என அவனுடைய அப்பா ‘ஒரு டீ சொல்லுங்க’ என்பதுபோல் தான் சொன்னார். ஏனெனில் நாங்கள் தேடிக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் அவனாகவே அதிகாலைக்குள் வந்துவிடுகிறான் என அறிந்தோம்.

கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பதுபோல் பட்டர்பன் உண்டு முடித்தபிறகு உள்ளுணர்வில் குணசீலனைக் காணவில்லை என்பது ஒருமாதிரி உறுத்த, ரகுவைப் பார்த்தேன். “என்னதாண்டா அவனுக்குப் பிரச்சன” என்றான் ரகு. அவனுக்கும் நான் உணர்ந்தது போல் ஏதோ உறுத்தி இருக்கிறது. “போய்ப் பாப்பமா” என்றதும் “இந்த இருட்டுல எங்கன்னுடாத்தேடுவ, நைட்டு வந்துருவான் விடு”.

ஆறு மணிக்கெல்லாம் விழிப்பு வந்து வெளியே வந்தால் ரகுவும் குணசீலன் தம்பியும் நின்றிருந்தார்கள். “இன்னும் வரலடா” என்ற குரலில் அச்சம் அப்பி இருந்தது. சமீபமாக நாயக்கர் மஹாலைப் பற்றி அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தான் என்பதால் மூவரும் அங்கு போனோம். அந்தக் காலை வேலையிலும் மஹாலைச் சுற்றிலும் இருந்த தேநீர்க்கடைகளில் கூட்டம். ஓவ்வொரு கடையாகப் பார்த்தோம். கீழவாசலில் இருந்து மஹாலுக்குப் போகும் ஒரு சிறிய இரண்டு ஆள்கள் மட்டும் போகும் அளவு இருந்த பட்டியக்கல் வேய்ந்த சந்தில் நுழைகையில் மிக நாகரிகமாய்உடையணிந்து ஆங்கிலத்தில் தான் இன்னார் என்றும் எப்போதோ வீட்டை விட்டு வந்துவிட்டதாகவும் ஐந்து ரூபாய் கொடுத்தால் தேநீர் அருந்துவிடுவேன் என்றும் சொன்னவரைப் பாவமாய்ப் பார்த்தேன். “டேய் இவென் நைட்டு வந்தா அம்பது ரூவாக் குடுத்தா ஒரு குவாட்டர் அடிப்பேன்னு இங்கிலீஷ்ல சொல்வாண்டா, பத்து வருசமா இங்கனதான் இருக்கான் இவென் பேரு  ‘இங்கீலீஷ் பிச்ச, EP’” என்று இழுத்துப் போனான். நான் சந்து முனைக்குச் சென்று திரும்பிப் பார்க்கும்பொழுது யாரிடமோ அதே உடல்மொழியில் பேசிக்கொண்டிருந்தார்.

நாயக்கர் மஹாலில் வெளியில் மிக அருகில் நின்று பார்த்தால் கூட அப்படி ஒரு பிரம்மாண்டக் கட்டிடம் அங்கு இருக்கிறது என்பது தெரியாத வண்ணம் இருந்தது அந்த முகப்பும் அதை அடைத்துக்கொண்டு தென்பட்ட ’ட்ரை சைக்கிள்களும்’. மூட்டை வண்டிகளும் பாதி இடத்தை அடைத்து நின்றன. ஏதோ ஒண்டுக்குடித்தன வீட்டிற்கு போகும் வழி போல் உடலை ஒடுக்கிக் கொண்டு போய், காவலாளியிடம் விவரம் சொல்லி உள்ளே சென்று பார்த்தோம். “அதெல்லாம் நைட் ஒருத்தரையும் உள்ள இருக்க விடமாட்டோம் தம்பி” என்று சொல்லிக்கொண்டே வழிநடத்தினார். ஒவ்வொரு தூணின் பிரம்மாண்டமும் கலக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக ‘சொர்க விலாசம்’ எனப்படும் உயர்ந்த உள்கூட்டின் வளைந்த பகுதிகள் அரசர் அமரும் இடதிற்கு மேலே குவிந்து உயர்ந்த மாடம் என அந்தக் காலை நேரத்தின் அமைதியையும்த் தாண்டி அச்சத்தை ஏற்படுத்தியது. தேவைக்கு அதிகமான எதுவும் அச்சத்தைத் தான் ஏற்படுத்தும் போல. மன்னர் உடையில் குணசீலன் நடந்து வருவது போல் இருந்தது.

 “இதெல்லாம் பாதிதான். இங்க இருந்து திருச்சிக்கு இந்தக் கட்டடத்தத் தூக்கிட்டு போறேன்னு நாயக்கர் பேரென் சொக்கநாத நாயக்கர் அரண்மனைல பாதியப் பேத்துட்டுப் போனது போக மிச்ச சொச்சம் தான் இந்தக் கட்டடம், இருக்குற எடத்த விட்டு என்னாத்துக்குப் போகனுமாம், கிறுக்குப் பிடிச்சு தலைநகரத்த திருச்சிக்கு மாத்தி ” எனக் காவலாளி ஏதோ தன் சொத்தையே சொக்கநாதன் எடுத்துக்கொண்டு போய்விட்டது போல் சோகமாகச் சொன்னார்.

எங்கு தேடியும் குணசீலனைக் காணவில்லை. அவனை இறுதியாகப் பார்த்தது சாப்பிடும் போது செய்திகளில் ‘ காணாமல் போனவர்கள்’ பற்றிய அறிவிப்பில் தான். நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் இருந்து கிழித்து அவனை மட்டும் காட்டினார்கள். ஓரத்தில் கொஞ்சமாக என் சட்டை நிறம் தெரிந்தது.  அவ்வளவு அற்புதமான நாயக்கர் மஹாலின் பெருபகுதியைக் காணாமல் போகச்செய்த, அதை உடைத்து அழித்துப் பெயர்த்து திருச்சிக்கு இடம்பெயர்ந்த சொக்கநாத நாயக்கரின் செய்கை போல் இருந்தது அந்தக் கிழிபட்டப் புகைப்படம்.

–

குங்குமம் இதழ்.

  •  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை