சொம்புநீர்ப்பூ புத்தக விழாவில் நண்பர்,கவிஞர் கதிர்பாரதி பேசுவதாக இருந்தது. ஆனால் அவர் ஊருக்குப் போகவேண்டிய சூழல். அப்போதிருந்தே அடுத்தக் கூட்டம் நிகழ்த்த வேண்டும் உங்கள் கதைகள் குறித்துப் பேசவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். கதிர்பாரதியும் நானும் சிறுகதைகள் குறித்துப் பேசியவை, அவர் என்னை பிரபஞ்சனிடம் அழைத்துச் சென்றது.. என ஏதேதோ மலரும் நினைவுகளில் நாட்கள் கடந்து கொண்டிருந்தன.
அதே கதிர்பாரதிதான் இப்போது, “கவிஞர் கரிகாலனிடம் உங்கள் புத்தகம் கொடுத்திருக்கிறேன், படித்துவிட்டு பேசுவார்” என்றார். அதுதான் இந்நிகழ்வின் துவக்கப்புள்ளி. ஒன்று இரண்டு மூன்று என வரிசையாக என் தொகுப்புகளை வாங்கிப்படித்து சிலாகித்து முகநூலில் எழுதிக்கொண்டே இருந்தார் கவிஞர் கரிகாலன். ஒவ்வொரு முறையும் அலைபேசியில் சிறுகதைகள் குறித்த லயிப்பும் உலக சிறுகதைகள் திரைப்படங்கள் குறித்த பார்வையும் என பேச்சுகள் தொடர்ந்தன.
ஓர் இரவு, ஒருமணிக்கு பஃறுளி குறித்த அவருடைய பார்வையை அனுப்பி இருந்தார். உடனே நன்றி தெரிவித்து ஆர்ட்டின் விட்டேன் அழைத்தார். அந்த இரவில் அவ்வளவு நேரம் பஃறுளி குறித்தும் அந்த இரவின் தனிமை குறித்தும் நட்பு உளவியல் என பேசி நாவல் முடித்த விதம் குறித்தும் என என்ன என்னவோ பேசினோம். பேசி முடித்த பிறகும் அந்த இரவு முழுக்க அப்பேச்சு மீண்டும் மீண்டும் என் மனதில் சுழன்று கொண்டே இருந்தது. களம் புதிது அமைப்பு உங்கள் படைப்புலகம் குறித்த நிகழ்வை முன்னெடுக்கும் விரைவில் என்ற வாக்கியம் தான் அந்த சுழற்சிக்குக் காரணம்.
இப்படி ஒரு நிகழ்வு ஜூன் 20 மாலை நடக்கப்போகிறது என அறிவிப்பு வந்ததும் இராம், நளி இருவரும் என்னைவிட அதிகப் பரபரப்பு ஆகிவிட்டார்கள் என்பதே உண்மை. ஆனால் மிக நிதானமாகவும் நேர்த்தியாகவும் செயல்படத் துவங்கினார்கள். நான் ஏதேதோ ஊர்களில் சுற்றிக்கொண்டிருக்க, பேனர் வடிவவைப்பு, அரங்கத்தில் எங்கே என்ன வைக்கவேண்டும் என களம் புதிது அமைப்பினரோடு பேசி நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள்.


அப்போது லைட்டாக ஜெர்க் ஆன கதிர், யாரோ இவங்க யாரோ அவங்க என செயல்பாடுகளை வியக்கத்துவங்கினார். மிக்க அன்பும் நன்றியும் ராம்,நளி மற்றும் உங்கள் உடன் இருந்த அனைவருக்கும்.
ஒருபுறம் மகிழ்ச்சியும் கூடவேப் பிறந்த பதற்றமும் தொற்ற ஆரம்பித்தது. விழாவில் உங்கள் படைப்புகள் குறித்து ஏதேனும் கட்டுரைகள் முன்னுரைகள் இருந்தால் அதை ஒரு சிறிய ‘புக்லெட்டாக’ அச்சிட்டுக் கொடுப்போம் என்றார் கரிகாலன் அண்ணன். அள்ள அள்ளக் குறையாத ஒன்றாக ஒவ்வொரு முன்னுரை, பார்வைகள் என கோர்த்தால் அது ஒரு பெரிய, 100 பக்கங்களுக்கும் மேல் அமைந்த புத்தகமாக உருபெறத் துவங்கியது. களம் புதிது அமைப்பின் தோழர் பாரதியும் பழனிவேலும் மிக நேர்த்தியாகவும் பொறுமையாகவும் இந்தப் புத்தகைத்தை வடிவைத்தார்கள். நண்பர் ஓவியர் அமுதன் பச்சைமுத்துவின் கோட்டோவியங்கள் மிகப்பிடித்தமாக வந்து சேர்ந்தன. இப்படி ஒரு பக்கம் எல்லாமும் அதன் இடத்தை அடைந்து கொண்டிருந்தது என்றால் நம் ட்விட்டர் தளத்தில் என் படைப்புகளில் இடம்பெற்ற சொற்கள், வாக்கியங்கள் என ஆரம்பித்து தொடர்ந்து எங்கு திரும்பினாலும் நர்சிம் படைப்புலகம் என தென்படத்துவங்ன. மகிழ்வச்சத்தின் உச்சமான ‘சர்த்தான் அமைதியா இருந்துருவோம்’க்குள் புகத் துவங்கினேன்.
அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கம் என நண்பர் வெங்கட் மூலம் உறுதி ஆன நொடியில் இந்த விழா அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்தது எனில் நண்பர் கவிஞர் கதிர்பாரதியின் ஒருங்கிணைப்பும், அனைவரையும் அழைத்துப் பேசி விழாவின் இறுதி நொடிவரை மிக மிக கவனமாக கையாண்ட விதமும் மிக முக்கியமான உதவி. இப்படி ஒன்று நிகழவேண்டும் எனும் திரியைக் கிள்ளி சுடராக மாற்றியவர், கவிஞர் கதிர்பாரதி. பேரன்பும் பெருநன்றியும் கதிர்.
விழா நாள் நெருங்க நெருங்க என்னைவிடவும் அதிகப் பதற்றமாக இருந்தார் அண்ணன் கரிகாலன். கூட்டம் வந்துரனும் நர்சிம் உங்க நண்பர்கள் தெரிந்தவர்கள்ட்ட சொல்லிருங்க என்று அவருடைய பதற்றத்தை என்பக்கம் திருப்பிவிட்டுவிட்டார். ஒரு ஞானத்தெளிவு பிறந்தது.. ஒருவேளை கூட்டம் இல்லையெனில் ஸ்ருதி டிவியிடம் ’டைட்டா கட்டிருங்க கேமிரா ஆங்கிள’ என சொல்லிவிடலாம் எனும் ஞானம் தான் அது. எவ்வளவு தெளிவு.
விழா நாளின் மாலை 4:45க்கு இரண்டாம் தளம் அடைந்தால், ஏகமாக ஜனம். வேறு ஏதோ விழா போல (கரு.பழனியப்பனின் குக்கர் படம் எழுத்தாளர் காமுத்துரையின் நாவல் என ஏக களேபரமாக இருந்தது) அதுவும் இந்தத் தளம்தான் போல என நினைத்தேன். இல்லை, இது நம் விழாவிற்கு வந்தவர்கள் என கிருஷ்ணா ஒரு பெரும் பூங்கொத்து கொடுத்தவுடன் தான் புரிந்தது. தொடர்ந்து அனைவரையும் வரவேற்று ஒருவித நெகிழ்வில் இருக்க, “என்னய்யா இவ்வளவு கூட்டம்” என கதிர்பாரதி கேட்டார். பதில் எதுவும் சொல்லாமல் ‘கம்னு’ இருப்போம் எனும் முகபாவனைக்குள் தயாராக அங்கே நின்றிருந்த ஒரு பெரியவர் “ 5 மணினு சொன்னீங்க, மணி ஆறாகப்போகுது” என கடிந்துகொள்ள விழாவை ஆரம்பித்துவிட்டார்கள். நெய்தல் கவிஞர் தீபிகா நடராஜன் நேர்த்தியான தமிழில் தொகுத்து வழங்கத் துவங்கினார்.

5:30 க்கு திணைவாசிகளின் திருத்தேர் நாடகத்தை அரங்கேற்றி இருந்திருக்கலாம் என்பது பின்னர் தான் புரிந்தது. ஆம் ஒவ்வொருவராக பேசப்பேச, நாடகம் முடிந்து நன்றி சொல்லும்பொழுது இரவு மிகச்சரியாக 9 மணி. செக்யூரிட்டி 8:45ல் இருந்தே கிளம்புங்க என்று அன்பும் அதட்டலுமாக கேட்டுக்கொண்டார். அத்துணைக் கூட்டமும் அப்படியே இருந்தது. எனக்காக விருதுநகரில் இருந்து வந்த அண்ணன், தோழர் மணிமாறன் நெகிழச்செய்தார்.

தலைமை உரை நிகழ்த்திய கரிகாலன் அண்ணனின் பேச்சில் அன்பும் என் படைப்புகள் மீதான மதிப்பும் அக்கறையும் தெள்ளத் தெளிவாகப் புலப்பட்டது. நமக்கானவர்களை நம்மிடம் சேர்ப்பித்துவிடுகிறது காலம், சற்று தாமதமானாலும் எனும் வரிகள் மனதில் நிழலாடிக்கொண்டே இருந்தன. அவர் சொன்னதுபோல ‘குகனோடு ஐவரானோம்’ என்பதே உண்மை. காலத்திற்குமான என் அன்பு.

அடுத்து வந்து பட்டையைக் கிளப்பினார், குருநாதா என நான் எப்போதும் அழைக்கும் கவிஞர் நாவலாசிரியர் அமிர்தம் சூர்யா. எழுத ஆரம்பித்த நாட்களிலேயே என் கதைகளைப் படித்து மிக நுட்பமான பார்வைகளும் பாராட்டுகளும் அதைவிட முக்கியமாய் அடர்த்தியைக் கூட்டவேண்டிய இடங்கள் எனும் அறிவுரைகளும் வழங்கியவர். அவருடைய பேச்சால் அரங்கம் களைகட்டியது, கட்டுண்டது. சொம்புநீர்ப்பூ தொகுப்பில் இருக்கும் குறியீடுகள் தொன்மங்கள் குறித்து சிலாகித்துப் பேசினார். என் எழுத்துகள் குறித்த மிக முக்கியமானதோர் உரை இது.

பஃறுளி நாவல் குறித்து எழுத்தாளர் அர்ஷா அவர்களின் கணீர் குரலில் மிக தீர்க்கமான பார்வைகள் தெறித்து விழுந்த வண்ணம் இருந்தன. 25 நிமிடங்கள் படபடவென பட்டாசாகப் பொறிந்தார். கோமதி எனும் பாத்திரத்தின் வாயிலாக நாவலை அணுகினார். நாவலில் வரும் ஆண் பாத்திரங்களை அடித்து நிமிர்த்திவிட்டு அமர்ந்தார். விழா முடிந்தபிறகு நிறைய பெண்கள் அவரிடம் நாவல் குறித்த அவருடையை பேச்சை சிலாகித்து, புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். பஃறுளி நாவல் குறித்த ஒரு பெண்ணின் பார்வை எனும் விதத்தில் மிக ஆழமான பதிவாக அமைந்தது.

கவிஞர் கதிர்பாரதியின் பேச்சில் அவ்வளவு ஆழம். போர் குறித்த விலாவரியான விளக்கத்தோடு பேச, நான் உட்பட அரங்கும் எங்கு வந்து கனெக்ட் செய்வார் என பார்த்துக்கொண்டிருக்க, கச்சிதமாக அந்த இடத்திற்கு வந்தார்.
விழா ஆரம்பித்து ஒருமணி நேரம் ஆகியும் பவா வரவில்லை. ‘சர்த்தான் இன்னைக்கி வர முடியாத சூழல் போல’ என நினைத்துக்கொண்டிருக்கும்பொழுது எண்ட்ர்ரி கொடுத்தார். அதன்பிறகான அரங்கம் அவருடையது என்றானது.

பிரிதொரு நாளில் நன்றாகப் படித்துவிட்டு பெருங்கதையாடல் நிகழ்த்துகிறேன் என அவர்ப் பேசப்பேச ‘சர்த்தான், படிக்கல போல’ என நினைத்தவர்கள் மீது, ‘இதச்சொல்லவாடா வந்தனு நினைக்கிறீங்க.. இல்ல ஒரு கதையைப் பத்தி என ஆரம்பித்து, பிடி கயிறு கதையின் சாரத்தையும் பிரபஞ்சன், சு.வேணுகோபால் கதைகளோடு ஒப்பிட்டு, என் வாழ்நாளில் நான் மறக்கவே முடியாத ஒரு மாலையாக ஆக்கித்தந்தார். ‘பிரபஞ்சனின் நீட்சி’ என அவர்சொல்லும்பொழுது பயம் கவ்வியது. இனி எழுதும் ஒவ்வொரு சொல்லிலும் அந்த பயம் அதன் வேலையைச் செய்யக்கூடும் அளவிற்குப் பொறுப்பு அழுத்தியது.
அண்ணன், எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, படைப்புலம் குறித்தப் புத்தகத்தை வெளியிட, நம் மக்கள் பெற்றுக்கொண்டனர்.

மனித உறவுவுகளின் கலைஞன் எனும் விருதை களம் புதிது அமைப்பின் சார்பாக எழுத்தாளர் தமிழ்ச்செல்வி அளித்தார். வியப்பும் நெகிழ்வுமாகப் பெற்றுக்கொண்டேன். ஏனெனில் இதை சொல்லவே இல்லை கரிகாலன் அண்ணன். அந்த விழா மேடையில்தான் அறிவித்தார். என் பேறு, இவ் விருது.

திணைநிலவாசிகள் நாடகமாக நிகழ்த்தியது என்னுடைய சிறுகதை, திருத்தேர். மூன்றே இளைஞர்கள், சற்றே பெரிய சிறுகதையின் ஒரு வரியைக் கூட விடாமல் நிகழ்த்துக்கலையாக ஒவ்வொரு வசனத்தையும் அவ்வளவு தெளிவான உச்சரிப்பில் கண் முன் கொண்டுவந்திருந்தார்கள். மூன்று நபர்கள்தான் ஆனால் கதையின் அத்தனை மாந்தர்களாகவும் சட்சட்டென மாறி காட்சிகளை சொற்களால் கட்டமைத்த விதம் மிகப்புதுமையாக இருந்தது. அரங்கில் அனைவரும் மிகவும் இரசித்துப் பார்த்தனர். மணி ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்ததே தெரியாமல் நாடகத்தில் லியித்திருந்தார்கள்.
இரவு 9 மணி, ஆனாலும் அரங்கம் அப்படியே நிறைந்து இருந்தது. அனைவரும் வீட்டிற்கு செல்ல நேரம் ஆகிவிடுமே எனும் பதற்றம் சூழ்ந்தது.

ஓரிரு நிமிடங்களில் நினைத்ததை பேசி நன்றி சொன்னேன். ஆனாலும் எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாது என்பதுபோல் இருக்கிறது. அவ்வளவு நிறைவான விழாவாக நிறைந்து தழும்பியது மனம்.
அத்தனை நிகழ்வுகளையும், உரைகளையும் காலத்திற்கும் நிலைத்திருக்கும் வண்ணம் ஸ்ருதி டிவி தனது தளத்தில் பதிவேற்றி இருக்கிறது. இலக்கிய உலகிற்கு கபிலன் ஆற்றும் மகத்தான பணி இது. பேரன்புகள், ஸ்ருதி டிவி.

இராம், நளினா,கிருஷ்ணா,ஜெகதா, சேதுபாலா,மயில்ரவி,சாந்தி,ரோஸ், பூவேந்தன், டாக்டர் பூங்குழலி, வனயட்சி, தட்டான் ராட்சக்ஷி,ஜிரா, செந்தில், மனோ, பாலாஜி (இளையராஜா பாலாஜி) புத்தக தினா, சொக்ஸ்,இராகவ்.. இன்னும் விடுபட்ட அனைவருக்கும் என் அன்பும் மரியாதைகளும் பெருநன்றியும்.

களம் புதிது அமைப்பிற்கு என் காலத்திற்குமான அன்பும் நன்றியும்.


