“இப்பிடியாடா வாரித்தட்டும் ஒனக்கு… யம்மா, மாரியம்மா… இந்த மட்டுக்கும் பிள்ளைய நல்லபடியா விட்டுட்டு எறங்குனியே, தணிஞ்சு போ” பார்வையை மேலில் இருந்து என்னை நோக்கித் திருப்பியவள், “உள்ள போய் ஒக்காருடா. இன்னும் மூணாந்தண்ணி ஊத்தலல்ல…” மீண்டும் கைகளைக் காற்றில் பாவி, ஏதோ முணுமுணுத்துக்கொண்டு போனாள் எதிர் வீட்டு ஆவுடையம்மாள்.
அம்மை கண்ட உடம்பு என்பதால் திண்ணை வரைக்கும்தான் அனுமதி. எனக்கானால் அப்படியே தெரு முழுக்க அம்மணமாக ஓட வேண்டும்போல் தோன்றியது. பத்து நாள்களாக உடம்பை அடுப்பில் வைத்ததுபோல் இருக்கிறது. பிறந்ததிலிருந்து இந்தப் பதினைந்துஆண்டுகளாக சதா சர்வகாலமும் வெக்கையிலேயே வாழ்ந்து கொண்டிருந்தாலும் இந்த ‘அம்மை போடுதல்’ என்பது இதுவரை கண்டிருந்த வெக்கையைவிட வேறு ஒன்றாக தகித்தது.
கடந்து மூன்று மாதங்களாக, அதிகாலையில் மொட்டை மாடிக்குச் சென்று சுற்றுச்சுவரைச் சுற்றிச் சுற்றி நடந்துகொண்டே படிப்பதுதான் என் அன்றாடம். இதுவரையிலான என் வாழ்வில் நிகழ்ந்த அனைத்துமே வீண் எனவும், இந்தப் பத்தாம் வகுப்பு ‘பப்ளிக் எக்ஸாம்’தான் வாழ்வைத் தீர்மானிக்கப்போகும் அதிமுக்கிய ஒன்று எனவும் காண்போரெல்லாம் சொல்லிச் சொல்லி கிலியேற்படுத்தியிருந்தார்கள். ஓரளவு நன்றாகப் படிப்பேன் என்றாலும், இவர்களின் அச்சுறுத்தல் கொஞ்சம் நடுங்கச் செய்தது. ‘அவசரத்துக்கு அண்டாவுக்குள் கை போகாது’ என்று அப்பா அடிக்கடி சொல்வதுபோல, தலைகீழாகத் தெரிந்த `லவ் கேம் டு ஃப்ளோரா ஆஸ்கிங் ஃபார் ஃப்ளவர்’ பாடல்கூட முற்றாக மறந்துபோனதுபோல் பிரமை உருவாகும் அளவுக்கு பயத்தை ஏற்படுத்தியிருந்தார்கள்.
மிகச்சரியாகத் தேர்வு ஆரம்பிப்பதற்கு முந்தைய நாள் மாடியிலிருந்து இறங்கி, கடைசிப் படிக்கு முந்தைய படியில் நின்று, கசகசவென வியர்த்து வடிந்த முகத்தைத் துடைத்துக்கொண்டு இருந்தவனை அப்படியே கீழிருந்து பார்த்த ஆவுடையம்மாள், தன் பேச்சை நிறுத்திவிட்டு என்னைப் படிகளிலிருந்து இறங்கி அருகில் வருமாறு அழைத்தார். ஆவுடையம்மாளிடம் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்த அத்தை இதைப் பார்த்து, தானும் என்னை நோக்கிப் பார்த்தாள்.

நான் இறங்கி நிற்க, நன்றாகக் குனியச் சொன்னவள், கன்னத்தில் இருந்த சிறிய பருவைக் கையால் தொட்டும் தொடாமல் நீவிவிட்டு அத்தையை நோக்கி “அம்ம” என்றாள். நான் சிரித்தேன். “ஏறுவெயில்ல மொட்டமாடில படிச்சுட்டு வர்றான், அம்ம கிம்மனு… வயசுல வர்ற பருதான் ஆவுட” என்ற அத்தையைத் திரும்பிப் பார்த்த ஆவுடையம்மாள், “வர்ற பெளர்ணமிக்கு நான் இருந்தா எனக்கு எழுவத்தி ஏழுடி. எங்கிட்டயே வந்து பரு குருன்னு…” என்றவர், என் பக்கம் திரும்பி “டேய் வெளியில நிக்காத. இன்னும் செத்தவடத்துல திமிதிமினு அப்பிரும். பெரியம்ம மாதிரி பளபளக்குது. உள்ள போ. ஒங்கம்மாட்ட சொல்லி நல்லா கொழுமோரக் குடி.” என்றார்.
உடனே அத்தை, “ஆமா நல்லாக் குடுப்பா அவங்க லொம்மா, அப்பிடி என்னத்தத்தான் பொழுதன்னைக்கும் சமைச்சுக்கிட்டே இருப்பாளோ… எதையும் பாக்காம” என்று புலம்பிக்கொண்டே என் நெற்றியைத் தொட்டுப் பார்த்தவள் பதறி, “அட ஆமாடா” என்று, கையைப் பிடித்து தரதரவென உள்ளே இழுத்துப் போனாள், அம்மாவைக் கத்திக்கொண்டே… “ஏ வெஜயா, வெஜ்ஜ்ஜயா…”
சொன்னதுபோலவே சற்றைக்கெல்லாம் திமுதிமுவென உடலில் ஏதேதோ எரிச்சல், குமைச்சல்… கால் கட்டைவிரலை நான் பார்க்கப் பார்க்க, கொஞ்சம் கொஞ்சமாகச் சிறு சிறு கட்டிகள் தென்படத் தொடங்கின. பரீட்சைக்கு அனுப்புவதா வேண்டாமா எனும் விவாதம் தொடங்கி, அது ஒரு போர்போல் ஆனது. “சரி, போய் ஹெட் மாஸ்ட்டர்ட்ட கேட்டுட்டு வாங்க, தனியா ஒக்கார வெச்சு வேணா எழுதச் சொல்லலாம், என்னடா எழுதிருவியா?”அப்பா எப்போதும், எதையும் கேள்வியாகக் கேட்க மாட்டார். அந்தத் தொனியில், `செய்துவிடு’ என நாம் புரிந்துகொள்ளும் வண்ணம் முடிப்பார்.
பள்ளியில் நான் அம்மையோடு அமர்ந்து பரீட்சை எழுதியது பேசுபொருளானது. வேறு பள்ளிகளிலிருந்து தேர்வைப் பார்வையிட வந்தவர்களிடம் அனுமதி வாங்கிக்கொண்டு என்னை வந்து பார்த்துவிட்டுப் போனார்கள் பரிமளா டீச்சரும் சீத்தாராமன் அய்யாவும். “முடிஞ்ச வரை எழுதுடா. கை எல்லாம் கட்டி ஒடைஞ்சு ரத்தம் வருது பாரு, அடுத்த வருஷம் எழுதிக்கலாமேடா…” என்று பரிமளா டீச்சர் மிகுந்த வாஞ்சையோடு பேச, “அதெல்லாம் ஒரு வருஷம் தப்புனா என்ன வேணா ஆகிப்போகும், பரவால்ல நீ எழுதுடா” என சீத்தாராமன்அய்யா சொல்லிவிட்டுப் போனார். ஒருவழியாக ஒவ்வொரு தேர்வாக முடிய முடிய அம்மை தணிந்துகொண்டே வந்தது. இதோ விடுமுறை. ஓரளவு எல்லாம் வடிந்து, கட்டிகள் இல்லாமல், ஆனால் தோல் முழுக்க ஏதோ ஒன்று படர்ந்ததுபோல் இருக்க, வீட்டிற்குள் இருக்கப் பிடிக்காமல் திண்ணையில் அமர்ந்திருக்கிறேன்.
ஏறுவெயிலின் இளஞ்சூடு கொஞ்சம் இதமாக இருந்தது. என்மீது படர்ந்து நிழல் ஆடியது. இரண்டு உருவ நிழல்கள் ஆடின. நிமிர்ந்தேன்.ஒரு பெண், அருகே ஒரு சிறுவன். மேல் படியில் அமர்ந்திருந்தவன் சட்டென எழுந்து அவர்கள் உள்ளே செல்லும் வண்ணம் வழியைவிட்டு நின்றேன். அப்படியும் அவர்கள் அங்கேயே நின்றிருந்தார்கள்.
பொதுவாக இப்படி எவரேனும் வீட்டிற்கு வந்துகொண்டே இருப்பார்கள். மிக நெருக்கம் எனில் அமர்ந்திருப்பவர்களைக் கடந்து, தலையில் கைவைத்து அழுத்திவிட்டு உள்ளே போய்விடுவார்கள். தெரிந்தவர்கள் எனில் ஒருபக்கமாக நான் உடலை ஒதுக்கிக்கொண்டு அமர்ந்தால் கடந்துபோய்விடுவார்கள்.
“அப்பா ஊருக்குப் போயிருக்காரு…”
“வி… விஜயாக்கா…”
நான் அனிச்சையாக உள்ளே திரும்பிப் பார்த்துக்கொண்டே, “அம்மாவா… உள்ள இருக்காங்க, நீங்க?” நான் உள்ளே என்று எளிதாகச் சொல்லிவிட்டாலும், மிக நீண்டு நெளிந்துபோகும் வீடு என்பதால் அவரால் திண்ணை, நடையைத் தாண்டி கூடம் வரைதான் பார்க்க முடிந்திருக்கும்போல. உன்னிப்பாகப் பார்த்தார். “உள்ள வாங்க” என்று சொல்லிவிட்டு நான் முன்னே போக, அவர் தயங்கி நின்றார். நான் உள்ளே ஓடி அம்மாவிடம் சொல்ல, அம்மா, “யாரு என்னான்னு கேக்காம வருவியா, சலவைக்குத் துணியெல்லாம் நேத்தே போட்டாச்சே” எனத் தனக்குத் தானே பேசிக் கொண்டு நடை வரை குழப்பமாகப் பார்த்துக் கொண்டே நடந்தவள், அங்கிருந்து பார்க்கும் போதே கண்டுபிடித்துவிட்டாள்போல, சட்டெனத் தரை அதிரும் வேகத்தோடு நடக்கத் தொடங்கினாள். பின்னாலேயே ஓடினேன்.
“எச்சுமி, ஏ யப்பா… எவ்ளோ வருஷம் ஆச்சு, எச்சுமிதான…” அம்மாவின் இந்த வரவேற்புக்குப் பின்னர்தான் அந்தப் பெண்ணின் முகத்திலிருந்த அச்சம் விலகியது. கொஞ்சமாகச் சிரித்துக்கொண்டு உள்ளே வந்தார். அம்மா அவள் கையைப் பிடித்துக்கொண்டு உள்ளே அழைத்துச் செல்ல, நான் மறுபடியும் படியில் அமர்ந்துகொண்டேன்.
“பையனா, டேய் நான் ஒங்கம்மாவத் தூக்கி வளர்த்தவடா” என அந்தச் சிறுவனிடம் ஏதோ சொல்வது மெலிதாகக் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். `ச்சே, அம்மை போடாமல் இருந்திருந்தால் என் முகம் கொஞ்சம் நன்றாக இருக்கும். இப்போது அந்தப் பெண் என் முகமே இப்படித்தான் என்று நினைத்திருப்பாளே… ச்சே, அந்தச் சிறுவன் வேறு என் முகத்தை, என் உடலில் இருக்கும் அம்மைக் கொப்புளங்களை பயத்தோடு பார்த்து விலகினான். ச்சே’. திரும்பிப் பார்த்தேன். யாரும் தென்படவில்லை. கொல்லைப்புறத் தெருவில் ‘க்ரஷ்ஷிங் மெஷின்’ நிற்பது மங்கலாகத் தெரிந்தது. மெதுவாக எழுந்து உள்ளே போனேன்.
உள்ளே சமையற்கட்டுக்கு அந்தப் பக்கமாக இறங்கி முற்றத்தின் பக்கவாட்டில் அந்தப் பெண், அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஏதோ பேசிக்கொண்டிருந்தார். சிறுவனைக் காணவில்லை. அம்மாவுக்கு அருகில் சென்றேன். அந்தப் பெண்ணின் கண்களிலிருந்து நீர் கன்னத்தில் வடிந்து கொண்டிருந்தது. அம்மாவின் கையை இறுகப் பற்றியிருந்தார். “எங்க ஊர் எச்சுமிடா, சொல்வேனே… எப்பிடி ஆகிட்டா பாரு… மூக்கும் முழியுமா இருப்பியே எச்சுமி.’’ என்னைப் பார்த்ததும் கண்களைத் துடைத்துக் கொண்டு என் தலையைக் கோத கை எடுத்தாள் எச்சுமி. நான் சட்டென்று விலகிக்கொள்ள, “அம்ம போட்ருக்கு எச்சுமி, ரெண்டு தண்ணிதான் ஊத்தியிருக்கு.”
`முகம் இப்படி இவ்வளவு கொப்புளங்களோடு இருக்காது நன்றாக இருப்பான் என்று சொன்னால் என்னவாம். மொட்டையாக அம்மை என்று முடித்துவிட்டாள். ச்சே.’
என்னைப் பார்த்துச் சிரித்து, “பரவால்ல, அம்மைன்னா அம்மாதான” என என் தலையை வருடிக்கொண்டே, “தாத்தா மாதிரியோக்கா இவென்?” என்றாள். அம்மா கண்களால், `இல்லை’ என்றாள். ‘அப்பாடா…’ என்றானது எனக்கு. நான் அப்பாவைப்போல் என்றுதான் எல்லோருமே சொல்வார்கள். “அட அப்பிடியே…” என்று பேச வந்தவளை அம்மா மீண்டும் கண்களால் கட்டுப்படுத்தினாள்.
எனக்கு அவள்மீது சினம் ஏற்பட்டாலும் அந்தத் தலை வருடல் இன்னும் கொஞ்சம் தேவைப்பட்டது. கொஞ்சம் அருகில் நின்றேன். “மொகத்துல எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா பட்டுப்போய்க்கிட்டு இருக்கு. கை கால்லதான் இன்னும் மட்டுப்படணும்” என்று சொல்லிக்கொண்டே என் கன்னத்தில் இருந்த சிறு கொப்பளத்தைத் தன் விரல் நுனியால் தடவிக்கொண்டே மறு கையால் நாடியைப் பிடித்து லேசாகத் திருப்பிப் பார்த்து “பின்னங்கழுத்துல காய்ஞ்சுருச்சுன்னா அவ்ளோதான், மூணாந்தண்ணி எப்பக்கா?” என்றாள். இவையெல்லாம் அவள் செய்து கொண்டிருக்கும்போது நான் கண்களை மூடி நின்றிருந்தேன்.
“இன்னும் ரெண்டு மூணு நாள் போகட்டும் பாப்பம். கால் எல்லாம் சதை சதையா இருக்கு. ஐயோ எச்சுமி, போன வாரம் நீ பாக்கணுமே, பிள்ளை ஒடம்பெல்லாம் மணல் மணலா அப்பிருச்சு. கண்முழியைத் தவுர ஒடம்புல ஒரு எடம் பாக்கி இல்லை. பாவம், வேகுதுன்றான், எரியுதுன்றான், வீட்டைவிட்டு ஓடுறேன்னு நிக்கிறான்… இந்தா பின்னாடி இருக்கு பாரு அத்தாம் பெரிய வேப்ப மரம், அதுக்குக்கூட குளுமை இல்லாமப்போச்சு.”
“ஆமாக்கா, இந்த ஊர்ல இப்பிடி வெயில் வேகுதே, எப்பிடித்தான் தாங்குதோ ஒங்க ஒடம்பு… புழுங்கித் திங்குது’’ என மாராப்பை எடுத்து கழுத்தில் துடைத்துக்கொண்டாள். “பாபு, பாபு” என்று அந்தச் சிறுவனைத் தேடிக் கொண்டு கொல்லைப் பக்கமாகப் போனதும் நான் அம்மாவிடம், “யாரும்மா… என்னவாம்?” என்றேன். அந்தப் பெண் அழுந்தப் பிடித்ததில் அம்மாவின் வளையல்கள் அழுத்தி அச்சு ஏற்படுத்தியதை மறுகையால் தடவி, சரிசெய்து கொண்டாள். “இந்த வளையலைக் கழட்டும்மா, குளிப்பாட்டும்போது இழுத்துவிடுதுன்னு சொன்னேன்ல” எனக் கழுத்தைக் காட்டினேன். கொப்புளத்தைக் கீறிய கோட்டைக் காட்டினேன்.
“கண்ணாடி பாக்கக் கூடாதுன்னு சொன்னாக் கேளுடா” வளையல் அழுத்தத்தைக் கைகளால் திருகிச் சரிசெய்துகொண்டே, “வலிக்கிற மாதிரி இப்பிடிப் பிடிச்சுட்டு அழுதா பாருடா, மனசே கேட்கலை. புருஷனுக்கு ஒடம்பு முடியலையாம். கொஞ்சம் காசு வேணுமாம், எங்க எங்கயோ கேட்டுப் பாத்து கடைசியா இங்க வந்துருக்கா பாவம்… ரொம்ப கஷ்ட ஜீவனம்போல… எப்பிடி இருப்பா தெரியுமா… மூக்கும் முழியும் சோழி சோழியா உன்னைப் பாரு என்னைப் பாருன்னு இருக்கும், ப்ச், இந்தப் பொம்பளைப் பொழப்பு இருக்கே…”
“அப்பா வேற ஊர்ல இல்லை, அத்தைகிட்ட சொல்லும்மா” என்றவனின் வாயைத் தன் விரல்களால் பதறி அடைத்தாள்.
எட்டிப் பார்த்தவள், “அத்தை எங்கடா?” என்று சன்னமாகக் கேட்டுவிட்டு, சைகையால் `அமைதியாக இரு’ என்பதுபோல் ஏதோ சொல்லிவிட்டுப் போனாள்.
இந்த மூன்று நாள்களில் பாபு என்னைப் பாடாய்ப்படுத்தி எடுத்துவிட்டான். கூடத்தில் இருக்கும் கம்பத்தில் சரசரவென ஏறிக் காட்டினேன் எச்சுமியிடம். சிரித்தாள். ஓரத்தில் அடுக்கப்பட்டிருக்கும் பஞ்சுப்பொதி தலையணைகளின் மேல் பல்டி அடித்துக் காட்டினேன். “பாத்துப்பா” என்று பதறினாள். என்னைப் பார்த்து அவள் மகனும் கம்பத்தில் ஏற முயன்றான், பல்டி அடிக்க முயன்றான். `வேண்டாம்’ என்பதுபோல் அவனைத் தூக்கிக் கொண்டாள். பாபு கையில் இருந்த வேப்பிலைகளை அத்தை வெடுக்கெனப் பிடுங்கினாள். “வெளில சொருக வெச்சுருந்தா இவென் வேற.’’
நான் திண்ணைக்கு வந்தால் அங்கும் வந்து விடுவான். இந்த மூன்று நாள்களிலுமே அவனிடமிருந்து வந்த ஒரே வாக்கியம் “இது என்னாது…” அவன் வீட்டில் எதுவுமே இருக்காது போல. கிட்டத்தட்ட எல்லாப் பொருள்களையுமே ”இது என்னாது, இது என்னாது…” எனக் கேட்டுக்கொண்டே இருந்தான். உள்ளே அறையில் இருந்த இரும்புப்பெட்டி அவன் கண்ணில்பட “இது என்னாது…” எனக் கேட்டான். நானும் ஆர்வமிகுதியிலும், எச்சுமிக்கும் கேட்க வேண்டும் எனும் ஆசையிலும் விளக்கினேன். உண்மையில் விளக்கும்போதுதான் அந்த இரும்புப்பெட்டியின் கைப்பிடிகள் உட்பட பல அற்புதங்கள், விநோதங்கள் எனக்குத் தெரிந்தன. அத்தையிடம் சில சந்தேகங்கள் கேட்டு (‘அதை எதுக்குடா எல்லார்கிட்டயும் காட்ற, மட சாம்பிராணி!’), அதை விளக்கி என பாபுவின் கண்களை விரிய வைத்திருந்தேன். மாட்டுக்கொட்டகை, மாடுகள், மாடி, ஊஞ்சல் என அனைத்தும் “இது என்னாது…”தான். அவன் மலைத்து நின்றது நெல்வைக்கும் மரப்பெட்டிக்குத்தான்.
அவ்வளவு பெரிய மர பீரோ போன்ற அமைப்பில் இருக்கும். பத்தடிக்கும் அதிகமான உயரம், ஐந்தடி அகலம் என பிரமாண்ட உருவம் போல் நிற்கும். அதன் மேற்புறத்தில் இருக்கும் மூடியை அகற்றுவதே பெரும் வேலை. அதை அகற்றி, மொட்டைமாடியில் காயும் நெல்லை ஓட்டைகள் வழியாகத் தள்ளுவோம். அது இந்தக் குன்றில் வந்து விழுந்துகொள்ளும். பின்னர் பெட்டியின் முகப்பில் கீழே இருக்கும் சிறிய கதவைத் திறந்தால் நெல் கொட்டும். அதை சாக்கில் பிடித்துக்கொண்டு ரைஸ் மில்லுக்குப் போவார்கள்.
பாபுவை விடுங்கள். எச்சுமி அக்காவே வாயைப் பிளந்து நிமிர்ந்து பார்த்தாள். “இவ்வளவு பெரிய நெல்லு பீரோவாடா… எங்க வீடே இதைவிடச் சிறுசா இருக்கும்போலயேடா!”
புருவத்தை உயர்த்தி, கண்களை அகல விரித்து “எப்பிடி” என்பதுபோல் கேட்டேன். கதவை லேசாகத் திறந்து கொஞ்சமாய் நெல்லைக் கொட்டிக் காட்டினேன். பாபு உற்சாகமாகக் கத்த, கீழேயிருந்து அத்தையின் குரல் அதட்டலாக வந்தது. சட்டென மூட எத்தனித்தேன். முடியவில்லை. பயம் தொற்ற, எச்சுமி உடனே குனிந்து என்னோடு சேர்ந்து அந்தச் சிறிய கதவை இழுத்து மூடினாள். நெல் கொட்டுவது நின்றது. என் மண்டையில் லேசாகத் தட்டி “சொன்னாப் போதாதா அதை ஏன் தொறந்த…” என்று சொல்லிவிட்டு இறங்கிப் போனாள். ‘ச்ச, அசத்திவிட்டோம்’ என்று நினைத்திருந்த வேளையில் இந்த அத்தை இப்படிக் கத்தி, காரியத்தைக் கெடுத்துவிட்டாள்.
கீழே இறங்க முதல் படியில் கால் வைக்கும்போதே, அத்தையின் குரல் சத்தமாகக் கேட்டது. “இப்பிடி கழுத்தைக் கழுத்தை தொடச்சுக்குறியே எச்சுமி… அப்பிடி எதுக்கு இந்த வெக்க பிடிச்ச ஊர்ல இப்பிடி டேரா போட்டுக்கிட்டு இருக்கியாம்…” பாபு நடையில் இருந்த கட்டைக் குதிரையில் அமர்ந்து மெதுவாக ஆடிக்கொண்டிருந்தான். அம்மா உள்ளிருந்து வேக வேகமாக வந்தவள், “இந்த நார்த்தங்காயில உப்பே பிடிக்கலையே, கொஞ்சம் என்னான்னு பாருங்க” என அத்தையை உள்ளே அழைக்க, “அதெல்லாம் பிடிக்கும், பிடிக்காம எங்க போகும்… நாம எப்பிடி ஒதறுனாலும் தானா வந்து ஒட்டுறதுதான ஒறவுக்கும் உப்புக்கும் கொணம்…”அத்தை இப்படித்தான் சம்பந்தம் இல்லாமல் எதையாவது, எதனோடாவது பேசுவாள். புரியவே புரியாது.
`இந்த அம்மா ஏன் அத்தையிடம் சொல்லி வேண்டிய பணத்தை எடுத்துக்கொடுத்து அவளை ஊருக்கு அனுப்பிவைக்கக் கூடாது…பாவம் இப்படி அல்லாடவிடுகிறாளே, அத்தை சொல்வதுபோல் இந்த அம்மாவுக்கு அறிவே கிடையாதுதான்.’
“எச்சுமி போய் சாப்புடும்மா. சும்மா சொல்லக் கூடாது நல்லா சாப்புடுறீங்க அம்மாவும் பையனும். இந்தக் காலத்துல யாரு இப்பிடி ரசிச்சு ருசிச்சு சாப்புடுறா… வெந்ததைத் தின்னமா, விதி வந்தா சாவமான்னு ஓடுறாங்க, நீ போய் சாப்புடும்மா. விஜயா, இவங்களுக்கு மொதல்ல அளந்துரு, நான் அப்புறம் சாப்புடுறேன்” கடக்கும்போது யதேச்சையாக அம்மாவைப் பார்த்தவன், சட்டென நின்றுவிட்டேன். அம்மாவின் கண்கள் கலங்கி ஒரு மாதிரி வித்தியாசமாக இருந்தது. சிரித்துக்கொண்டே, “வா எச்சுமி, சாப்பிடலாம்” என்று உள்ளே அழைத்துப் போனாள்.
“டேய் இங்க வா” என அதட்டிய அத்தை நான் அருகில் சென்றதும் குனியச் சொல்லி, “ம்ம், சர்த்தான், நாளைக்குத் தண்ணி ஊத்திரலாம்” என சொல்லி, மீண்டும் சத்தமாக உள் நோக்கி, “வெஜயா, நாளைக்குத் தண்ணி ஊத்திரலாம் எந்தங்கத்துக்கு” என்று கன்னத்தில் தட்டினாள். எடுத்து வந்த துணிப்பையோடு வெளியே வந்தாள் எச்சுமி. கூடவே பாபு அவள் கையைப் பிடித்துக்கொண்டு வந்தான்.
“அதுக்குள்ளயுமா சாப்ட்டே, வந்ததெல்லாம் கொள்ளும் மகாராஜன் கப்பல் மாதிரி அம்புட்டு பசிபோல” என்ற அத்தையின் குரல் எனக்கு ஒரு மாதிரி ஆனது.
“சாப்பிடலையா?” என்றேன்.
`இல்லை’ என்பதுபோல் தலையாட்டிய எச்சுமி, மிக லேசாகச் சிரித்து, என் அருகில் வந்து தலைமுடியை வருடி, “நல்லாப் படிப்பா” என்றாள். அவள் கண்களின் இருந்த நீரில் என் முகம் அசங்கலாகத் தெரிந்தது. பாபுவை ஒரு முறை தூக்கி, பின் இறக்கிவிட்டேன்.
“வத்தலகுண்டுக்கா, அங்கதான் இப்ப வெஜயாவோட மொத்தக் கூட்டமுமா?”
`ஆம்’ என்பதுபோல் தலையாட்டினாள்.
“அடேங்கப்பா… அந்தக்காலத்துல ஒங்கம்மா இந்த வீட்டுக்கு வந்தப்ப, `பூம்பாறைல இருந்துட்டு இங்க எப்பிடி இருக்குறது, வெக்கைன்னா வெக்கை இப்பிடி வேகுது’னு வர்ற விருந்தாளிக ஒண்ணு சொன்னாப்புல நம்ம ஊரைப் பழிப்பாங்க, இந்தா இந்த லெச்சுமியோ, எச்சுமியோ… சின்னப்புள்ள அப்ப. வந்தவ, `இந்த வெக்கைல நான் எப்பிடி இருக்குறது…’ன்னு அன்னைக்கே ஊருக்கு ஓடினவ. கேட்டா, `கொடைக்கானல் குளுருல இருந்துட்டு இங்க எப்பிடி?’ன்னு என்னா கூத்து அடிப்பாங்கன்ற…”
அத்தை நக்கலாகச் சொல்லச் சொல்ல அம்மா சிரித்தாள். “இப்பல்லாம் குளுருதான் தாங்க மாட்டேங்குது, மருத வெக்கதான் ஒடம்புக்கு எதம்” சொல்லிக்கொண்டே எச்சுமியைப் பார்த்து “கிளம்பு” என்றாள்.
“அம்ம போடாட்டி நான் பஸ்ஸ்டாண்ட் வரைக்கும் வந்துடுவேன். எல்லாரையும் நான்தான் பஸ் ஏத்திவிடுவேன்”
கைப்பையை மறுகை மாற்றிக்கொண்டே அருகில் வந்தவள், “அதெல்லாம் ஒண்ணும் வேணாம்டா. நீ தலை குளிச்சதும் வெயில்ல சுத்தாத. சரியா…” என்றவள், விடுவிடுவென வெளியேறினாள், அத்தைப் பக்கம் திரும்பாமல்.விசிறியின் கைப்பிடியால் முதுகை எட்டிச் சொறிந்துகொண்ட அத்தை, விசிறியைத் திருப்பி நேராகப் பிடித்து மெதுவாக விசிறிக்கொண்டே, “இப்பிடி ஆடி அசைஞ்சு போனா எந்நேரத்துக்குப் போய் பஸ்ஸைப் பிடிப்பா…” சொன்ன அத்தையை எரிப்பதுபோல் பார்த்தேன்.
“என்னடா எரியுதா… போய் ரூம்புக்குள்ள இருடா. நாளைக்குத் தண்ணி ஊத்தினதுக்கு அப்புறம் ஒரு ரெண்டு நாள்ல முச்சூடும் முறிஞ்சிரும்.” எனக்கு எப்படியாவது கொல்லைப் பக்கம் வழியாக, சுற்றிக்கொண்டு போய் எச்சுமியை பஸ் ஏற்றிவிட்டு வந்துவிட மாட்டோமா என்று ஏக்கமாக இருந்தது. கிளம்பும்போது எச்சுமியின் முகமே ஒரு மாதிரி இருந்தது. ‘ச்சே, இந்த அம்மா ஏன் இப்படி சாப்பாடுகூடப் போடாமல் திடுதிப்பென்று அனுப்பிவிட்டாள்…’ பாபு கீழே இருந்தால் மீண்டும் மெதுவாகப் படியேறி மாடியிலேயே இருந்துவிடுவேன்… அவன் மாடிக்குப் போனால் நான் பின்பக்கமாக வேப்ப மரம் பக்கமாக… என்று அவன் அனத்தல்களிடமிருந்து தப்பி ஓடிக்கொண்டிருந்தேன் இன்று மதியம் வரை. இப்போது சட்டென்று அவனைக் காணாதது ஒரு மாதிரி இருந்தது.
எச்சுமி தன் கணவனின் உடல்நிலை சரியில்லாததன் வருத்தம் காரணமாக வாடிப் போயிருந்தாலும் அவளைப் பார்க்கப் பார்க்கப் பிடித்திருந்தது. ஊருக்குப் போயிருக்கும் அப்பா நாளைதான் வருகிறார். அவர் வந்து பணம் கொடுத்த பிறகுதான் போவாள் என்று நினைத் திருந்தேன். இப்படி, சட்டென்று கிளம்புவாள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை நான்.
“இப்ப ஏண்டா எம்மேல எரிஞ்சு விழற… அதான் ஒங்க அத்தை வாசல்ல ஒக்காந்து இருக்காளே, காவல் தெய்வம் மாதிரி இந்த வீட்டைக் காத்துக்கிட்டு… அங்க போயி வம்பிழு…”அம்மா கடுகடுவென ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். “ஆனா ஒண்ணுடா… எதுவுமே இல்லாம இந்த எச்சுமி மாதிரிகூட இருந்துரலாம். எல்லாம் இருந்தும், ஒண்ணும் இல்லாம இருக்குற என்னை மாதிரி மட்டும் இருந்துடவே கூடாது. கருமம், வயித்தைக் கிழிச்சுப்போட்டா நாய்கூட மோந்து பாக்காது இந்தப் பொறப்ப.”
“யம்மா… நீ அத்தைகிட்ட சொல்லி இரும்புப் பெட்டில இருந்து எடுத்துக் குடுத்துருக்க வேண்டியதுதானம்மா. அப்பா வர்றதுக்குள்ள இப்பிடி அனுப்பிட்ட… பாவம்மா எச்சுமி.”
இரண்டு கைகளையும் கும்பிடுவதுபோல் சேர்த்தாள். அந்தச் சத்தம் `பளார்’ என்று அறைவதுபோல் எழுந்தது. “யப்பா சாமி, போதும்டா போதும். இன்னும் நூறு வருஷம் சொல்லிக் காட்டும் ஒங்க அத்தை… ஐயய்யோ, போதுமப்பா.”
அம்மாவின் மீது தீராக் கோபம் வந்தது. ப்ச். எனக்கு எப்படி அந்த இரும்புப்பெட்டியைத் திறக்க வேண்டும் என்பது தெரியும். ஆனால் இறுதியாக ஒரு சிறிய கம்பியைச் சொருகித் திருக வேண்டும். அதை அப்பாவோ, சித்தப்பாவோ, அத்தையோதான் செய்தாக வேண்டும். அவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டும். அம்மாவை அருகிலேயே விட மாட்டார்கள் என்பதால் அம்மாவுக்குத் தெரியாது. ப்ச்… பாவம் எச்சுமி. பாபுவின் பாவமான கண்களும், அவன் சாப்பிடும்போது கைவிரல் இடுக்குகளில் அவன் வழியவிட்டுப் பிசுக்குவதும், எச்சுமி என் தலையை வருடி விடுவதுமாகக் கனவுகள் மாறி மாறி வந்தன.
தலையை வருடும் கையைப் பிடித்தேன். அத்தைதான். “எந்திரிடா தங்கம், இன்னைக்குத் தலைக்குத் தண்ணி ஊத்தணும். வெள்ளன எந்திரிடான்னு சொன்னேன்ல்ல…”
“அஞ்சு நிமிசம்” எனப் புரண்டு படுத்தேன். மூன்று நாள்களாக அதிகாலையில் எழுந்து, பின்பக்கமாகப் போய் எச்சுமியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பேன். இன்று எழுந்து என்ன செய்யப்போகிறோம்?!
அம்மா ஸ்டூலைப் போட்டுவிட்டு வெந்நீரில் தண்ணீர் கலந்துகொண்டிருந்தாள். விரல்களை விட்டு நீவிக்கொண்டிருந்தேன். வெந்நீர் பதமாக இருந்தது. சட்டென்று சிலிர்க்க, “யம்மா… சொல்லிட்டு ஊத்தும்மா…” கண்களை மூடிக் கொண்டேன். அம்மா ஏதேதோ தலையில் வைத்து ஒரு கையால் உச்சந்தலையை மூடி, மறுகையால் மெதுவாக நீரை ஊற்றினாள். மெதுவாகத் தேய்த்துவிட்டாள். நெற்றியில் இருந்த பொக்குகள் உதிர்ந்தன. கழுத்தில் தேய்த்தாள்.
“யம்மா கீறிடாதம்மா அங்க…”
“இனிமே கீறாதுடா.”
கண்களை, பட்டெனத் திறந்து பார்த்தேன். `படீரெ’ன்று சொம்பு நீரை முகத்தில் அறைந்து ஊற்றினாள். இரு கைகளால் அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டேன். அப்படியும் சொம்பில் இருந்த மிச்ச நீரை ஊற்றிச் சிரித்தாள்.
எனக்கு அழ வேண்டும்போல் இருந்தது.
*
ஆனந்த விகடன்
ஓவியங்கள் : பிரேம் டாவின்ஸி

