பொட்டி வந்தாச்சு!
பசையைக் காய்ச்சி போஸ்ட்டர் ஒட்டும் வேலை தெரிந்தால் போதும், மதுரையில் ‘ராஜ்ஜ்ஜாவாக’ வாழ்ந்துவிடலாம் எனும் காலம் ஒன்று இருந்தது என்றால் நம்பமுடிகிறதா? 770 நாட்கள் ஓடிய ஹரிதாஸ் படத்தின் நாயகன் தியாகராஜபாகவதரில் தொடங்கி, தவக்களை, பிரதாப் போத்தன், ராஜீவ் என எல்லாத் தரப்பு நடிகர்களுக்கும் ரசிகர் மன்றங்களைக் கொண்ட நகரம், மதுரை. சில்க் ஸ்மிதா இறந்த அன்று மதுரை நகரம் முழுக்க கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டு மற்ற மாவட்டக்காரர்களைப் பொறாமை கொள்ளச்செய்தது மதுரை.
ஆசியாவின் பெரிய அரங்கம் மதுரை தங்கம் தியேட்டர் என்பார்கள். தியேட்டர்களால் ஆனது மதுரை. இவ்வளவு அருகருகில் இத்தனை அரங்குகள் வேறு எந்த நகரத்திலேனும் இருந்தால் தெரிந்து கொள்ள ஆசை.
வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர்த் தொலைவில் வெங்கடேஸ்வரா தியேட்டர், அதற்கு சற்று எதிர்ப்புறத்தில் ராஜா டூரிங்டாக்கீஸ், அங்கிருந்து இரண்டு கிலோமீட்டரில் ரத்னவேல், அதிலிருந்து கொஞ்ச தூரத்தில் பத்மா, அதற்கு சற்று எதிர்ப்புறம் மது, அங்கிருந்து நூறு அடிகளில் கதிர்வேல் தியேட்டர். அப்படியே இரண்டு கிலோமீட்டரில் மீனாட்சி பாரடைஸ், எதிரே அமிர்தம், சரியாக இரண்டு கிலோமீட்டரில் தங்க ரீகல், அருகே காக்காத்தோப்புத் தெருவில் ஆசியாவின் பெரிய தங்கம் தியேட்டர், கூப்பிடு தூரத்தில் செண்ட்ரல், நடக்கும் தூரத்தில் நியூ சினிமா, சக்தி,சிவம், அலங்கார், சிட்டி சினிமா என இவை அனைத்தும் இரண்டு மூன்று கிலோமீட்டர்களுக்குள். சற்று தொலைவாக, அதாவது நான்கு கிலோமீட்டர்கள் தெற்கில் சிந்தாமணி, அதன் பின்பக்கம் அபிராமி,அம்பிகை பக்கத்திலேயே நடனா நாட்டியா இரண்டு கி.மீயில் அம்பிகை, மூன்று கி.மீல் சினி,மினி,சுகப்ப்ரியாக்கள். தெற்கில் கலைவாணி மணி இம்ப்பால எனில் வடக்கில் குமரேசன் எனும் இளைஞன் டிக்கெட் கிழித்துக் கொண்டிருந்த மேலூர் தியேட்டரில் அதே குமரேசனை ராமராஜனாக பட்டி தொட்டி எங்கும் ஹீரோவாக்கியது போதது என, இராமராஜனுக்கு ‘டூப்’ போட்டு கரகம் ஆடியவரையும் புகழுக்குச் சொந்தக்காரராக வலம் வர வைத்த நகரம்.
இப்படி மூச்சு முட்ட முட்ட அருகருகில் இத்தனை அரங்குகள். இன்னும் இதேபோல மதுரையின் வெளிச்சுற்றில் மதி, சோலைமலை, விக்டோரியா என பத்தடித் தொலைவில் அமைந்தவை, குரு, வெள்ளைக்கண்ணு என பட்டியல் வெகு நீண்டது.
திருவிழா, விசேச நாட்களில் எங்கு திரும்பினாலும் திரையரங்குகள் என்பதால் எப்போதும் எல்லாத் திரையரங்குகளிலும் கூட்டம் இருக்கும். மதுரை மக்களின் முதல் அல்லது ஒரே பொழுதுபோக்கு சினிமாதான்.
அதனால்தான் ஒரு படத்தின் வணிக வெற்றியும் மக்கள் விருப்பம் எப்படி இருக்கிறது என அறிந்துகொள்ளவும் சினிமா உலகினர் முதலில் பார்ப்பது மதுரையின் ரிசல்ட்டைத்தான் என்பார்கள். வடிவேலு ஒரு படத்தில் ‘பேனர்ஜி’யாக வருவாரே, அதைப்போல மதுரை வீதிகளில் ஏராளமான போஸ்டர்ஜிகள் தென்படுவார்கள். ஒரு சைக்கிள், ஒரு பசை வாளி, ஒரு ஏணி இது மூன்றும் இருந்தால் மூன்று வேளைகள் திருப்தியாகச் சாப்பிட்டு, இலவசமாகப் படம் பார்த்துக் கொண்டு வாழ்ந்திடலாம் என்பதால் போஸ்டர் ஒட்டும் வேலைக்கு ஏக கிராக்கியாக இருக்கும். ஏரியா பிரித்துக்கொண்டு ஒட்ட வேண்டும். தப்பித்தவறி எல்லையைத் தாண்டினால் அவ்வளவுதான் கொலை வரை போய்விடும். ஆம். ஒரு சிறிய போஸ்டர் பிரச்சனையால் 20 கொலைகளுக்கும் மேல் கண்ட அபூர்வ நகரம் மதுரை. அரசியலோ சினிமாவோ, சுவரொட்டிகளால் நிறைத்து விடுவார்கள். 90 களின் மத்தியில் ஒரு பெரும் அரசியல் புள்ளிக்கு போஸ்டர் வாசகங்கள் எழுதிக் கொடுத்தால் பணம் கொடுக்கிறார் எனும் செய்தி உலவியதும் உண்டு.
பெரியார் பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்புறம் வரிசையாக கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொன்றும் முப்பது அடிகள். நாகார்ஜூனா தன் கைகளில் இறந்த பெண்ணின் உடலைத் தாங்கி, சைக்கிள் செயினைச் சுற்றிக்கொண்டு நிற்கும் ‘உதயம்’ படக் கட்-அவுட் அப்போது மிகப்பிரசித்தம்.
பொதுமக்கள் அன்றாடம் கடந்து போய்விடுகிற கட்-அவுட்கள், சுவரொட்டிகளுக்குப் பின்னால் பெரும் உழைப்பும் கூட்டமும் வியாபாரமும் தொழிலும் இருந்தது. சுவரில் ஓவியங்களாக, எழுத்துகளாக எதையேனும் வரைந்து கொண்டே இருப்பார்கள் மதுரையின் முக்கிய வீதிச் சுவர்களில். பெரியார் பேருந்து நிலைத்தில் இருந்து இரயில் நிலையம் கடந்து பஜார், சிம்மக்கல் வரை சுவர் ஓவியங்கள் எழுத்துகள் கண்களைப் பறிக்கும் வண்ணம் தீட்டப்பட்டிருக்கும். ஒரு சிறிய கூட்டம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும்.
செந்தில்ராஜன் எனும் நண்பர் பசை காய்ச்சுவதில் வாழ்க்கையைத் தொடங்கி ஏணி வாங்கியதில் முன்னேறி அவருக்குக் கீழ் பல்வேறு இளைஞர்கள் இத்தொழிலில் ஈடுபட வைத்து பணம் சம்பாதிக்க வைத்தவர். பசை இல்லையெனில் கனிந்த வாழைப்பழத்தை சட்டென பசையாக்கி ஒட்டுவதன் சூட்சம், ‘நான்கு பிட். ஆறு பிட்’ போன்ற அளவில் பெரிய சுவரொட்டிகளை லாகவமாக எப்படி ஒட்டவேண்டும் என ஒரு தொழிற்சாலை பயிற்றுவிப்பு போல் நடத்தியவர். சரசரவென சுவரில் பசையை இழுத்து இங்கொன்றும் அங்கொன்றுமாக ஒட்டுவதைப் பார்த்தால் சம்பந்தம் இல்லாமல் இருக்கும் ஆனால் சிலநொடிகளில் அவற்றை இணைத்து முழங்கையால் அழுத்தி இழுத்துவிடும் கலையை கண்குளிரக் காணலாம்.
“இப்பல்லாம் அப்பிடி எதுவுமே இல்ல நண்பா, எல்லாம் ஃப்ளெக்ஸ் தான். பேனர்தான்” என சிரித்துக்கொண்டே கணினியில் போஸ்டர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் இப்போது.
“அம்புட்டு ஏன், ‘இன்று இப்படம் கடைசி’ அப்டீனு ஒட்டுற பிட்நோட்டீஸ அடிச்சே வீடு கட்டுனான் எங்க பங்காளி ஒருத்தன், அப்பறம் கூண்டு மாதிரி குகை மாதிரி இருக்குற டிக்கெட் கவுண்ட்டர்ல முண்டியச்சு நின்னு, கலர் கலரா நீளமா அச்சடிச்ச டிக்கெட்டுகள வாங்குறதெல்லாம் இப்ப இல்லாமப் போச்சப்பா, வரிசை எல்லாம் இப்ப ‘ஆன்லைன்’லயே ஓடுதே” என சிரித்துக்கொண்டே சொன்ன சொற்களில் ஏதோ ஒரு வலிதான் எஞ்சி இருந்தது.
மேலே குறிப்பிட்ட அரங்குகளில் பாதிக்கும் மேல் இப்போது வணிக வளாகங்கள், நகைக்கடைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என மாறிவிட்டன. ஒவ்வொன்றாக இடிக்கப்பட்டபொழுது மக்கள் நின்று பார்த்து கண் கலங்கி நகர்ந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் ஒரு நாவலோ திரைப்படமோ எடுக்கும் அளவிற்கான வலிகளைச் சுமந்தவை. ‘மெல்லத் திறந்தது கதவு’ படத்தின் முதல் ஆட்டக்காட்சியில் ஏதோ தவறாகப் பட எங்கள் ஊர் ஆப்பரேட்டர் முதல் பாதியை இரண்டாம் பாதியாக மாற்றி ஓட்டி, படத்தை ஓடச்செய்த திறமை எல்லாம் ஆஸ்கார் எடிட்டிங் லெவல் எனப் பேசப்பட்டவை.
ஐம்பது பைசாவிற்கு சோளக்கதிரும் ஒரு ரூபாய்க்கு பாப்கார்ன் பாக்கெட்டும் அரங்குகளுக்கு வெளியே வைத்து விற்கப்படும். இடைவேளையின் பொழுது கதிர்வேல் தியேட்டரில் விற்கப்படும் முட்டைபோண்டாவிற்காகவே ஓடிய படங்கள் பலவுண்டு 90 களின் மதுரையில்.
இப்படி கண்ணுக்குத் தெரியாமல் ஓர் அரங்கும் அதன் நிமித்தமும் இருந்த தொழில்களின் கன்னிகள் மொத்தமாக அறுபட்டு வேறு ஒன்றாக ஒரே குடையின் கீழ் ‘காண்ட்ராக்ட்டாக’ மாறிப் போயின.
வீட்டை செப்பனிடும்பொருட்டு பரணிலிருந்த பழைய பொருட்களை அப்புறப்படுத்தும்பொழுது ‘சொத்தென’ கத்தையாக வந்து விழுந்தன, பாட்டுப் புத்தகங்கள். பர்மா தாத்தா எனும் முதியவர், பர்மாவில் இருந்து நடந்தே வந்தவர், இராணுவத்தில் இருந்தவர் என பல்வேறு அடையாளங்களைக் கொண்டிருந்தாலும் ’பாட்டுப்புஸ்தகத் தாத்தா’ என்றுதான் ஊராரின் நினைவில் நிற்பவர். அவரும் அவருடைய மனைவியும் சாலையில் ஒரு சிறிய தார்ப்பாயை விரித்து வரிசையாக பாட்டுப்புத்தகங்களை பரப்பி வைத்திருப்பார்கள். அப்போது ஓடிக்கொண்டிருக்கும் படத்தின் பாட்டுப்புத்தகத்தை முதல் வரிசையில் பரப்பி வைத்து, இரண்டாம் ஆட்டம் முடிந்து மக்கள் வீடு திரும்பிய பிறகுதான் கடையை எடுத்து அடுக்குவார்கள். பாட்டு வரிகள், பாடியவர் பெயர், இசை என அனைத்து விபரங்களும் அடங்கிய சில தாள்களைக் கொண்ட ஒவ்வொரு புத்தகமும் பொக்கிஷம் போல் தென்பட்டது. இறுதிப்பக்கத்தில் கதைச்சுருக்கம் அச்சடிக்கப்பட்டு, திரைப்படத்தின் முக்கியத் திருப்பத்தைக் கூறாமல் ‘மற்றதை வெள்ளித் திரையில் காண்க’ எனத் தொழில் தர்மத்தோடு முடித்திருப்பார்கள்.
இவை யாவற்றையும் இனி எந்த மாலில் போய்க் காண்பது!
*
நன்றி குங்குமம் இதழ்

