Homeகட்டுரைகள்பவா பாயவைத்த பஃறுளி ஆறு

பவா பாயவைத்த பஃறுளி ஆறு

எந்தப்புள்ளியில் துவங்கியது இந்த ‘பஃறுளி’ என யோசித்துப் பார்க்கையில், ஒருமுறை ஹைதராபாத் பயணநிமித்தம் வானேகும் முன் நாவலின் தலைப்பு ‘ பஃறுளி’ என எக்ஸ் தளத்தில் (அப்போது ட்விட்டர், இப்போதும் எங்களுக்கு அது டிவிட்டர் தான்) அறிவித்துவிட்டு அணைத்தாயிற்று. ஆயிற்றா, இறங்கியவுடன் வாழ்த்துகளுடன் கேட்கப்பட்ட கேள்வி, பஃறுளி என்றால் என்ன? இந்தக் கேள்விக்கு சமீபத்தில் கிடைத்த விடை, ‘பஃறுளி என்பது குமரிக்கண்டத்தில் இருந்து மதுரையை நோக்கிப் பாய்ந்த, சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்ட, மண்ணோடு புதையுண்டு போன ஆறானது, பவா செல்லத்துரை எனும் கதைசொல்லியால் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு பிரவாகமெடுத்து நில்லாது ஓடும் ஆறு’. ஐந்தே நாட்களில் ஐம்பாதியிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு கேட்டுக் களித்த பவாவின் பெருங்கதையாடல், நான் தான் கோமதி எனும் குறுஞ்செய்திகள், மடல்கள், அழைப்புகள், அப்படி எப்படி செய்வாள் எனக் கோவித்துக்கொண்டு அழைக்கும் பதற்றமான ஆட்கள், அழைத்து ஒன்றும்பேசாமல் அழும் வாசகர்கள் என இப்பெருங்கதையாடல் மிகப்பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.

எந்தப்புள்ளியில் இந்தப் பெருங்கதையாடல் நிகழ்விற்கான யோசனை துவங்கியது என யோசித்துப் பார்க்காமலே சொல்லலாம். திருவண்ணாமலையில் நிகழ்ந்த இலக்கியப் பயிற்சி நிகழ்விற்கு சென்றபொழுது, பவாவின் தளபதி, தென்பெண்ணை இலக்கியச் சமவெளி, தோழர் வெற்றிமுரசு அவர்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கையில் பஃறுளி குறித்தப் பேச்சும், தோழர் அர்சா அவர்கள் பஃறுளி நாவல் குறித்து படைப்புல விழாவில் பேசியவையும் இணைந்து, அடுத்து பெருங்கதையாடலில் பஃறுளியை நிகழ்த்தலாம் என நான் இப்போது இவ்வளவுத் தெளிவாக எழுதும் அளவில் கூட அல்லாமல் லேசுபாசாகப் பேசிய நினைவு. அதன்பிறகு தோழர்கள் இருவரும் இதை சாத்தியமாக்கிவிட்டார்கள். தென்பெண்ணை முன்னெடுத்து நடத்திய இந்த நிகழ்வு மிக நேர்த்தியாக இருந்தது.

ஓசூரில் நிகழ்வு என்றதும் சரி ஸ்ருதி டிவியில் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் கவிஞர் கதிர்பாரதி கவிஞர் கரிகாலன் அண்ணன் ஆகியோரோடு பேசியதில், செய்தியைச் சொன்னதும் உடனே சம்மதம் சொன்னார்கள், சரி ஒரு பயணம் மேற்கொள்ளலாம் என முடிவானது. அக்டோபர் 2 காலையில் கிளம்பி ஓசூர் அடைந்து மாலை ஐந்து மணிக்கு அந்த விழாக்கூடத்திற்குள் நுழையும் வரை எனக்கு நம்பிக்கை இல்லை, இவ்வளவு கூட்டம் வரும் என்று. வந்து கொண்டே இருந்தார்கள். நாற்காலில ஒக்காந்துருங்க, கொஞ்ச நேரம் போனா சீட் கிடைக்காது என்று அதிர வைத்தார்கள். அப்படித்தான் ஆனது.

மூத்த எழுத்தாளர் கமலாலயன் அய்யா, பெரிதும் மதிக்கும் எழுத்தாளர் பா.வெங்கடேசன், கவிஞர் ரத்னா, கவிஞர் கரிகாலன் ஆகியோர் தோழர் அர்ஷாவின் ‘இன்னும் ஆறு நாட்கள்’ சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுப் பேச, பவாவின் பார்வையோடு அந்நிகழ்வு முடிய இரவு எட்டு மணி ஆனது. சரி இதற்கு மேல் கூட்டம் கலைந்துவிடுவார்கள் என நினைத்து இடம் மாறி அமர எத்தனித்தால், இல்லை, பெருங்கதையாடலுக்காகத்தான் கூட்டம் எனும் விதமாக அத்துணைப்பேரும் அப்படி அப்படியே அமர்ந்திருந்தார்கள். பவாவின் பெருங்கதையாடல் தொடங்கியது.

குற்றாலத்தில் தேனருவிக்கு ஏறிப்போகும் மனமும் வீம்பும் இருந்த காலத்தில் அங்குவரை மேலேற அனுமதியும் இருந்தது. நண்பர்களோடு போயிருந்தபொழுது, அந்த அருவிக்கு அருகில் கூட போக முடியாதவாறு அடித்து நுரைத்து வீழ்ந்து கொண்டிருக்க, சற்றுத்தள்ளி தெளிந்த ஓடைபோல் அமைதியாகக் கண்ணாடிபோல் காட்சியளித்த நீர்சுனையில் அமர்ந்து அருவியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அவ்வளவு தூரத்தில் வீழ்ந்தாலும் அதன் சாரல் தெறித்து ஓதம் படர்ந்தது உடம்பில். எங்கள் காலடியில் அவ்வளவு அமைதியாக நிதானமாக நகர்ந்து கொண்டிருந்த பளிங்கு நீர் சற்று நகர்ந்து அமைதியாக முகட்டிற்கு சென்றது. அங்கிருந்து வீழும்போது பெரும் சத்தத்தில் ஆர்பரித்து இன்னொரு அருவியாக உருவெடுத்தது. இரண்டு ஆர்பரித்தலுக்கு இடையே இருந்த நிதானத்தில் நாங்கள் வாழ்வின் ஒவ்வொரு துளியையும் உற்சாகமாக பருகிக்கொண்டிருந்தோம். இந்த நிகழ்வு அப்படியே மீண்டும் நிகழ்ந்தது பவாவின் பெருங்கதையாடலில். மிக நிதானமாகவும் ஆர்பரித்தும் என பவாவின் கதை சொல்லல், நாவலின் பாத்திரங்களை தன் மீது ஏற்றிக்கொண்டு அதை வெளிப்படுத்தும் பாங்கு என ஒற்றை மனிதன் பெரும் நாடகத்தை நிகழ்த்திக்காட்டும் கலை. கோமதி வீட்டில் இருந்தாள் என்றதும் கூட்டத்தில் இருந்த பதற்றம் நீங்கி, ஒரு வாசகி நல்ல வேளை எனக் கும்பிட்டார். பவாவின் குரல் கம்மியபொழுதெல்லாம் அரங்கம் அமைதியில் உறைந்தது. பவா சொல்லி முடிக்கும்பொழுது ஒருவர் ஒப்பனை அறைக்கு ஓடி, அழுத முகத்தைக் கழுவிக்கொண்டிருப்பதை கவிஞர் அய்யப்பமாதன் வந்து சொன்னபோதும் சரி, பவா சொல்லி முடித்து நின்றபோதும் சரி என்னுள் எழுந்த நெகிழ்வு நீண்ட நேரம் அப்படியே இருந்தது. என் கைகள் தானாகக் குவிந்து பவாவை நோக்கிக் கும்பிட்டன. நிகழ்விற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் புத்தகத்தை வாங்கிக்கொண்டு என்னிடம் கையெழுத்திடச் சொல்லி பேசியது என் வாழ்வின் மிக மிக அற்புதமான நொடிகள்.

தோழர் வெற்றிமுரசு மேடையில் ஏறி பஃறுளி புத்தகத்தை எனக்கு அளிக்கப்போவதாகச் சொல்லி இதுவரை இலக்கிய மேடைகளில் நான் கண்டிராத ஓர் அற்புதமானச் செயலாக, அரங்கில் இருந்த அனைவரையும் அந்தப் புத்தகத்தில் கையெழுத்திட்டுக் கொடுக்கச் சொன்னார். இதை அனைத்து இலக்கியக் கூட்டத்திலும் பின்பற்றலாம். வந்திருந்தவர்கள் வாழ்த்தி கையெழுத்திட்ட அந்தப் புத்தகம் அந்நாளின் பொக்கிஷம்.

என் எழுத்து இன்னும் அதிக இடத்தை அடையவேண்டும் என பேசும்பொழுதெல்லாம் அக்கரையோடு சொல்லும் அண்ணன் கரிகாலனுக்கும் நண்பர், கவிஞர் கதிர்பாரதிக்கும் இந்நிகழ்வை உரித்தாக்குகிறேன்.

‘மெடிக்கில் மிராக்கிள்’ என நான்குநாட்களில் ஐம்பதாயிரம் கடந்ததைக் கொண்டாடி செய்தி அனுப்பிக் கொண்டிருக்கும் அன்பின் நண்பர், இலக்கியத்தின் ஒளியும் ஒலியும், ஸ்ருதிடிவி கபிலனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். எங்களோடு பயணித்து நிகழ்வைப் படம்பிடித்த ஸ்ருதிடிவியின் ராஜசேகருக்கு அன்புகள்.

பஃறுளியை இப்படிப் பாயவைத்த பவாவிற்கு வாழ்நாளிற்கான அன்புகள். சாத்தியப்படுத்திய தென்பெண்ணை இலக்கியச் சமவெளி அமைப்பினருக்கும், தோழர் வெற்றிமுரசுவிற்கும் மனமார்ந்த நன்றியும் அன்பும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை