‘ப்ப்ப்ப்ரூரூம்ம்ம்ம்’.. ‘ப்ப்ப்ப்ரூரூம்ம்ம்ம்’.. என உதடுகளை வேகமாக ஆட்டி ஆட்டி சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தான் தம்பிப்பயல். அவன் அண்ணன்காரன் அங்கு அமர்ந்திருந்தவரிடம் ஏதோ பேசி எப்படியோ அவன் நினைத்தபடி ஓட்டுநர் இருக்கைக்குப் பக்கவாட்டில் அமர்ந்து கொள்ள இடம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி. பேருந்தின் இக்னீசியனை அழுத்தி வைத்துவிட்டு இறங்கிப் போய்விட்டார் ஓட்டுநர். வண்டியின் லேசான குலுங்கலும் வளைந்து முனையில் குமிழ்போல் இருக்கும் கியர் மாற்றும் கம்பியின் அதிர்வும் தம்பிப்பயலுக்கு இன்னும் உற்சாகம் அளித்தது. முதலில் ஜன்னல் பக்கம் வேண்டும் என அடம்பிடித்தவன் இப்போது கியர் கம்பியின் அதிர்வைத் தொடவேண்டும் எனும் உந்துதலில் அண்ணனிடம் கெஞ்சி இருக்கையின் இந்தப்பக்கமாக வந்துவிட்டான். இருக்கைக்குப் பின்னால், ஏறி இறங்கும் வழி என்பதால் தம்பியின் முதுகுப்பக்கமாகக் கையை நுழைத்து இடுப்பில் பிடித்துக் கொண்டான். இடுப்பில் இருந்த அண்ணனின் கையை எடுத்து எடுத்து விலக்கினான் தம்பி.
வண்டி கிளம்பும் முஸ்தீபுகள் தென்பட்டன. பின்னால் இருந்து நடத்துநர் “டிக்கெட்ஸ், டீக்கெட்ஸ்” என ஒரு ராகமாக இழுத்துக் கொண்டு வருவதை திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தான் அண்ணன்காரன். அமர்ந்ததில் இருந்தே இடது கையை அரை ட்ராயர் பைக்குள்விட்டு அம்மா குடுத்தப் பணத்தை இறுகப் பற்றி இருந்தான். எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தான். எப்படியாவது சரியாக ஊர் பெயரைச் சொல்லி, டிக்கெட்டை வாங்க வேண்டும். அம்மா சொல்லிவிட்டது போல தம்பிக்கு அரை டிக்கெட் என்று சொல்லி கெட்டிக்காரத்தனமாக இருக்க வேண்டும்.
டிக்கெட்ஸ்’ சத்தம் அருகில் வர வர அவனுக்குப் படபடப்பு கூடியது. அவ்வப்போது கியர் ராடைப் பிடிக்கப் போகும் தம்பிப்பயலின் கையைத் தட்டி தன்பக்கமாக இழுத்துக் கொண்டான். அப்போது கூட இடது கை ரூபாய் நோட்டைப் பற்றி இருந்தக் கையை வெளியே எடுக்கவில்லை.
“வேற பஸ்ல போவம்டா, இது நின்னுக்கிட்டே இருக்கு” வண்டியின் குலுங்கலில் தம்பியின் குரல் அலையலையாய் வந்தன. பக்கவாட்டில் இருந்த பேருந்து நகர “ஏய்ய் கிளம்பிருச்சு” என்று கைகளைத் தட்டினான். ஒரு நொடியில் அது பக்கத்து பேருந்தின் இயக்கத்தினால் ஏற்பட்டத் தோற்ற மயக்கம் என்பதை அவனால் விளங்கிக்கொள்ள முடியவில்லை
“ட்ரைவர் இதுல ஒக்காந்து அதத் திருப்புனாத்தாண்டா வண்டி போகும்”
“ஆமாம்ல, ட்ரைவர் எங்கடா” என துள்ளிக்கொண்டு எழ முயன்றவனை அழுத்தி அமரச் செய்தான். ”ஒக்கார்றா ஒரு எடத்துல படில உருண்டுருவ”
“டிக்கெட்ஸ்”
“ரெண்டு திரு..ச்..சி.. இல்ல ஒன்னு..அரடிக்கெட்டு”
சத்தமாகச் சொல்லியதாக நினைத்தான். ஆனால் நடத்துநர் இவன் பக்கம் திரும்பாமல் மற்றவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
“அண்ணே, சார் ரெண்டு..ஒன்னு”
“டேய் ஒக்கார்றா வர்றேன் விழுந்து கிழுந்து தொலைச்சுறாத”
பாதிவாக்கில் நின்றிருந்த அண்ணன்காரன் அப்படியே நிக்கர் பைக்குள் கைவிட்டபடி அமர அவன் முகத்தைத் தன்பக்கமாகப் திருப்பினான் தம்பி.
என்ன என தலைய ஆட்டிக் கேட்ட அண்ணன் முகம் என்னவோ போல் இருந்ததைப் பார்த்ததும் தம்பிக்கு அழுகை வந்தது. ஓட்டுநர் சட்டை பட்டன்களைத் திறந்துவிட்டபடியே அவர் இருக்கைக்குப் பக்கவாட்டில் இருக்கும் சிறிய கதவின் விளிம்பில் இருக்கும் குமிழை அழுத்தித் திறந்து தாவி ஏறி அமர்ந்து வயிற்றில் முட்டிய பெரிய கருப்பு நிற ஸ்டியரிங்கை இப்படியும் அப்படியுமாக வளைத்து பக்கத்தில் மிக சன்னமாக நீட்டிக்கொண்டிருந்த சிறிய கம்பியின் முனைய லேசாக தட்டித் தட்டி விட்டதும்
“பம்ப் பம்ப்ப்ப பம்ம்ம” என ஒரு தினுசான ரீங்காரமாய் ஒலிப்பான் ஒலித்தது. தம்பிப்பயலுக்கு குஷி தாளவில்லை தனக்குப் பக்கத்திலும் அப்படி ஒரு கம்பி இருப்பதாக பாவித்து அதைத் தட்டி “பம்ம்ப் பம்ம்ப்ப் பம்ம்ம்ப்ப்” என முணகிக்கொண்டே ஸ்டியரிங் இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு ஓட்டுநர் எப்படிச் செய்தாரோ அதேபோல செய்தான் தம்பிப்பயல்.
’ப்ப்ப்ரூஃப்’ ’ப்ரூஃப்ப்ப்’ என எச்சில் தெறிக்க ஓட்டுநருக்கு ஈடாக பேருந்தை இயக்கிக்கொண்டிருக்க மெதுவாக பேருந்து நிலையத்தில் இருந்து அசைந்து அசைந்து குலுங்கித் திரும்பி வெளியே கிளம்பியது, திருச்சி வண்டி. காலை பதினோரு மணிக்கே சுரீர் என்று வெய்யில் பெரிய கண்ணாடிகளின் வழியே பளீரெனத் தாக்கியது.
“டிக்கெட்ஸ்”
“டிக்கெட்ஸ்”
அண்ணன்காரனின் தலையில் தட்டி, “டேய் டிக்கெட்ஸ்” எனக் கேட்டு அவர்களுக்கு எதிராக, ஓட்டுநர் இருக்கைக்குப் பின்னால் இருக்கும் கம்பியில் சாய்ந்து கொண்டு எதையோ எழுதிக்கொண்டே கேட்டார்.
அவர் கையில் அலுமியனத் தகடு, சிறிய பரீட்ச்சை அட்டைபோல் இருக்க அதன் பக்கவாட்டில் வண்ண வண்ண நிறங்களில் பயணச்சீட்டுகளின் முனைகள் காற்றில் சன்னமாய் ஆடிக்கொண்டிருந்தன. பிங்க் நிறம்தான் பிரதானமாகத் தெரிந்தது. குனிந்து மும்முரமாய் எழுதிக்கொண்டிருந்தவர் காதுகளில்
“ஒரு அர டிக்கெட்” என விழுந்ததும் எழுதுவதை நிறுத்தி நிமிர்ந்தார்.
“ஒன்னா நீயும் அரடிக்கெட் தானடா” சிரித்துக்கொண்டே கையால் சற்று பொறு என அமர்த்தி மீண்டும் நுணுக்கமாக எழுதினார்.
அண்ணன்காரன் தம்பிப்பயலையும் ஓட்டுநரையும் எதிர்வரிசை ஆட்களையும் மாறி மாறிப்பார்த்தான். எல்லோரும் மும்முரமாய் நகர்ந்து போய்க்கொண்டிருக்கும் சாலையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
யாரும் கவனித்துவிடாதபடி தன் தம்பிக்கு மிக நெருக்கமாகப் போய் தன் உயரத்தை சோதனை செய்தான்.
நிமிர்ந்தவர்
“எத்தனாவதுடா படிக்கிற”
“எட்டாப்பு பி”
“அவென்”
“ஒன்னாப்பு.” என சொல்லும்ப்போது தம்பிப்பயல் “ஃபர்ஸ்ட் ஏ ஏ ஏ “ என இழுத்துச் சிரித்தான்.
“ஓஹோ ஒனக்கு நேர் எளயாலு யாரும் எடையில இருக்கோ”
“அப்டீன்னா”
”வேற தம்பி இருக்கானாடா?”
“தங்கச்சி”
“ம்ம் அப்பிடிச் சொல்லு, இங்குட்டு வா, விழுந்துறாத..”
என அவன் கையைக் கெட்டியாப் பற்றி ஓட்டுநர் இருக்கைக்குப் பின்னால் இருக்கும் தகர அடைப்பிற்கு அருகில் நிற்கச் செய்தார்.
அவன் அப்படி நிற்பதை மொத்தப் பேருந்தும் பார்த்தது. காலை உந்தி உயரத்தைக் கூட்ட நினைத்தவனின் தலையில் தட்டி அளந்து,
“ம்ம், கோட்டுக்கு மேலதான் இருக்க, ஒனக்கு ஃபுல்லுதான்”
மகிழ்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தம்பியை நோக்கிப் பாய்ந்தான்.
“அடேங்கப்பா ஃபுல்லுன்னதும் என்னா இளிப்பு தொரைக்கு”
பைக்குள்ளிருந்து கையை உருவியவன் கையில் இருந்த ரூபாய் நோட்டை வாங்கி நீவி இரண்டாக மடித்து விரல்களுக்குள் அதக்கிக்கொண்டார். ஏற்கனவே நிறைய நோட்டுகள் விரலிடுக்கில் விசிறி போல் இருந்தன.
இரண்டு டிக்கெட்டுகளை எடுத்து டொக் டொக் என பக்கவாட்டில் ஓட்டைகளைப் போட்டவர்
“இந்தாடா பத்தரமா பைக்குள்ள வச்சுக்க எறங்கும்போது காட்டணும்”
பயணச்சீட்டை வெற்றிகரமாக வாங்கிவிட்ட மகிழ்ச்சியில் தலையை ஆட்டியவன் பைக்குள் வைத்து கையால் பற்றிக்கொண்டு அமர எத்தனிக்க, “மீதிக்காசு வேணாமாடா?, இம்புட்டு விஷ்க்கானா இருந்துக்கிட்டு மருதையில இருந்து திருச்சி வரைக்கும் தனியாவாடாப் போறீங்க, அங்க எங்கடா போகணும்?”
மீதிப் பணத்தைக் கொடுக்க அதை வலதுகையால் வாங்கியவன் இடது கையை வெளியே எடுத்து பயணச்சீட்டையும் மீதிப் பணத்தையும் சேர்த்துப் பார்த்துவிட்டு பைக்குள் இறுக்கமாக பிடித்துக்கொண்டு அமர்ந்தவன்
“டேலேய், மருதைக்கு வர காசு பத்தும்ல்லடா”
என தம்பியிடம் சொல்லும்போதும் மனக்கணக்கு போட்டுக்கொண்டே இருந்தான்.
“மாமாட்ட கேப்பம்டா” சொல்லிவிட்டு “ப்ரூம்ம்ம்ம்ம்ம்ம்” என எச்சில் தெறித்தவாறு ஸ்டியரிங்கைத் திருப்பியன் ஓட்டுநரைப் பார்த்தான், சாலையைப் பார்த்தான்.
“டேய் இங்கபாருடா அதத் திருப்பாமலே வண்டி போகுது” என சொல்ல ஓட்டுநர் “என்னாது” என்றதும் வெட்கம் வந்து சிரித்துக்கொண்டே அண்ணனின் முதுகில் முகத்தைப் புதைத்தான்.
மீண்டும் எழுந்து ஓட்டுநரைப் பார்க்க அவர் பார்ப்பதைப் பார்த்து சட்டென நேராகப் பார்ப்பது போல ஓரக்கண்ணால் பார்த்தான். அவர் சிரித்துக்கொண்டே
“இங்க பாருடா, இத நான் மிதிக்க மிதிக்க வண்டி ஓடும்” எனத் தன் காலைக் காட்ட, வியப்பாக அங்கே பார்த்தான். ஓட்டுநருக்கும் இவனுக்கும் நடுவில் பெரிதாக ஒரு திண்டுபோல் இருக்க அதன் மேல் கியர் ராடு வளைந்து நிற்க, மெதுவாக அந்தத் திண்டில் அமர்ந்தான். அது ஆட்டமாய் ஆட அதன் சூடு பொறுக்காமல் எழுந்து டவுசரில் தேய்த்துக் கொண்டே இருக்கைக்குத் தாவினான்.
“குண்டி சுடுதாடா, ஒன்னும் ஆகாதுடா வா வந்து ஒக்காரு”
ஓட்டுநர் அவனை அழைத்துத் தான் வண்டி ஓட்டுவதை அருகில் இருந்து பார்க்க விட்டார், தம்பிப்பயலின் முகம் முழுக்கச் சிரிப்பு. மெது மெதுவாக கைய நீட்ட அவன் பிஞ்சுக்கையைப் பிடித்து ஸ்டியரிங்கில் ஒரு முறை வைத்தார். தொட்டுத் தொட்டு எடுத்தான்.
“போதுமா போய் ஒக்காரு தூங்கு வெட்கை ஓவரா இருக்கு, திருச்சி வந்ததும் எழுப்புறேன்”
தம்பிப்பயலுக்குப் போக மனமில்லை. கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து சாலையையும் ஓட்டுநரையும் பார்த்துக்கொண்டே வந்தான்.
“டேய், தூங்கி விழுகுறான் பாரு, சீட்ல ஒக்கார வைடா”
எதிர் இருக்கையில் இருந்த பெண்மணி சொல்ல, உடனே பதறிய அண்ணன்காரன் தம்பியை அழைத்து இழுத்து ஜன்னல் பக்கமாக அவனை அமரவைத்து தன் தோள் மீது சாய்த்துக் கொண்டான்.
“தம்பிய பத்தரமா கூட்டிப்போய்ட்டு கூட்டி வரணும்ய்யா தங்கம், எனக்கும் வேற வழி தெரியல இப்பிடி சின்னஞ்சிறுசுகளத் தனியா அனுப்புறேன். ப்ச், பொறுடீ அப்பாவுக்கு லீவு கீவு வரட்டும்னா இப்பவே வந்தாகனும்ங்குறாளே”
அம்மா பணத்தை எண்ணிக் கொடுத்து, என்னவெல்லாம் சொல்ல வேண்டும் எப்படி டிக்கெட் எடுக்க வேண்டும் என புரியும்படி சொல்லி, அங்கே மாமா வீட்டிற்குப் போனதும் எப்படி என்ன சொல்ல வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொடுத்ததை தம்பியின் தூங்கும் முகத்தைப் பார்த்துக் கொண்டே முணுமுணுப்பாக ஒத்திகைப் பார்த்தான். வெட்கை காற்று அனலாக அடித்து உதட்டை காயச் செய்திருந்ததால் உதடுகள் பிரியும்போது புண் பொக்கு பிரிபடுவதுபோல உதடு எரிந்தது.
“நீங்க வரும்போது திண்ணைல விளையாண்டுக்குட்டு இருந்தோம் மாமா, அதுவாசி கவனிக்கல, வாங்கனு சொல்லல, அம்மா மன்னிப்புக் கேட்டு வரச் சொல்லுச்சு”
இவ்வளவுதான் பேச வேண்டும். அத்தையிடம் எதுவும் பேசக்கூடாது. கேட்டுவிட்டு உடனே கிளம்பி வந்துவிட வேண்டும். காரணமாக எதையோ சொல்லச் சொன்னாளே.. என்னவோ சொன்னாளே.. என மண்டை குடைந்தது.
ஏதேதோ ஊர்கள், ஒன்று விடாமல் பட் பட்டென ஜன்னலுக்கு அருகில் போய் தென்படும் பெயர்ப்பலகையில் கடைசியாகப் பொடியாக எழுதப்பட்ட ஊர்ப் பெயர்களை வாசித்து பின்கோடுகளை தன்னுடைய ஊரின் கோட்டில் இருந்து எவ்வளவு ஈவு மீதி என என்னமோ செய்துக்கொண்டு தம்பியின் தூங்கும் முத்தைப் பார்த்துக்கொண்டே வந்தான். ஒரு முத்தம் வைக்க வேண்டும் போல் இருந்தது தம்பியின் கன்னத்தில். “எப்பப்பாரு இப்பிடி சண்ட போட்டுக்கிட்டே இருக்கீங்களேடா” அம்மா ஒரு நாளைக்கு நாற்பது முறை சொல்வது நினைவுக்கு வர சிரித்துக் கொண்டான். நன்றாகப் படித்து பெரியவனாகி தம்பியை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் அவனுக்கு ஒரு பஸ் வாங்கித்தர வேண்டும் என நினைக்குபோதே அம்மா சொன்னக் காரணம் நினைவிற்கு வந்துவிட்டது. ‘பெரிய பரிச்ச வருது, டியூசன் போகணும்,படிக்கணும், அதான் இன்னைக்கே அம்மா வரச்சொல்லிருச்சு” முணுமுணுக்க முடியாமல் உதடுகள் காய்ந்து ஒட்டிக்கொள்ள. அனல் காற்றின் சூட்டில் அண்ணனும் தூங்கிப்போனான்
‘பாம்ம்ம்ம்ம் பம்ப்ப்பம் பம்ம்ம்ம்ம்’ காதருகே தம்பிப்பயலின் சத்தம் குடைய எழுந்தவன் அக்கம் பக்கம் பார்த்து பரபரத்தான். பேருந்தில் இருந்தவர்களில் பாதிப்பேரைக் காணவில்லை. சாளரம் வழியாக எட்டி எட்டிப் பார்த்தான். எங்கு பார்த்தாலும் பேருந்துகள். ஓட்டுநரைப் பார்த்தான். அப்போது சிரித்துக்கொண்டே இருந்தவர் இப்போது கடுகடுவென வண்டியை எதற்குள்ளோ நுழைத்துக் கொண்டிருந்தார். தம்ப்பிப்பயல் அவர் திருப்பலுக்கு ஏற்ப தானும் உடலை வளைத்து கீழுதட்டைப் பிதுக்கு ஆட்காட்டி விரலால் மேலும்கீழுமாய் சன்னமாக ’ப்ர்ர்ர்ர்ர்’ என்று தட்டிக்கொண்டே இருந்தான்.
திரும்பித் திரும்பிப் பார்த்ததை ஒருவழியாகப் பார்த்த நடத்துநர்,
“இன்னும் அஞ்சு நிமிசத்துல எறங்கனும்டா ரெடியா இருங்க” என்றார்.
சாய்ந்து அமர்ந்தான். “அம்மா சொன்னமானிக்க ஒன்னய எப்பிடி பத்தரமா திருச்சிக்கு கூட்டி வந்துட்டேன் பாத்தியாடா”
“நீயாக் கூட்டி வந்த, பஸ்சுதான கூட்டியாந்துச்சு..ப்ப்ப்ரூரும்ம்”
ஓட்டுநர் சிரித்து, அவனுக்கு ஏற்றவாறு ஒலிப்பானை இசைக்க இவனும் தாளலயத்தோடு மண்டைய ஆட்டி ஒலிப்பான் போல் கத்தினான்.
“அண்ணே அந்த பாம்ப்பாம அமுக்கிக்கவா”
“எறங்கைல அமுக்கு”
“அய்ய்ய்ய்” என அண்ணனைப் பார்க்க அவன் ஜன்னல் வழியே தீபக்கைத் தேடினான்.
அம்மா அத்தனை முறை சொன்னாளே “அத்த வரமாட்டாடா தீபக் வருவான், அவன் வர முன்னபின்ன ஆனாலு எந்த பஸ்ல எறங்குகீற்ங்களே அதுபக்கத்துலயே நிக்கனும் சரியாம்மா”
அம்மாவின் குரல் மனதில் எழும்போது மிக மெலிதான அழுகை வருவது போல் இருந்தது அவனுக்கு. ஒருவேளை தீபக் வராவிட்டால் தம்பியை பத்திரமாகக் கூட்டிக்கொண்டு அத்தை வீட்டிற்குப் போக முடியுமா? இல்லை இதே பஸ்ஸில் மீண்டும் மதுரைக்கே போய்விடுவோமா?”
பேருந்து மெது மெதுவாக முன்னேறி அதற்கானத் தடத்தில் நிற்கவும் ஓட்டுநர் பட்டென அந்த சிறிய கதவைத் திறந்துகொண்டு தாவி இறங்கிப் போய்விட்டார். “டேய் பாம்ம்ம்ம அமுக்க சரின்னு சொன்னாருல்ல”
“டேய் வாடா நீ வேற” என தம்பியை இழுத்துக்கொண்டு இறங்க வெய்யில் சுரீர் என அடித்தது.
“டேய் ஓட்டவாயா” என தம்பியை நோக்கி கத்திக்கொண்டே வந்தான் தீபக்.
“என்னடா இவென் இத்துனூண்டா இருக்கான் இன்னமும்” என தம்பியின் தலையைக் கோதிவிட்டு தோளில் கையைப் போட்டுக்கொண்டான்.
“டேய் என்னடா மூஞ்ச இப்பிடி வச்சுருக்க, என்னா தீபக் மாமா நல்லா இருக்கீங்களானு கேட்கனும்டா பாத்ததும்”
’மாமானு நொட்டுவாங்க இவன’ என தம்பியிடம் முணுமுணுத்துவிட்டு
“வீடு தூரமா தீபக்கண்ணே”
கொஞ்சம் சிறிய வீடுதான் என்று நினைத்துக்கொண்டான். இதற்கு முன்னர் எப்போது வரும்பொழுது இது பெரிய வீடாக இருந்தது.
“வாடா சரவணா, அத்தையப் பாக்க பெரியமனுசனாட்டம் தம்பியக் கூட்டிட்டுத் தனியா வந்திருக்க பாத்தியா, அடேங்கப்பா ஒங்கம்மாளுக்கு என்னா அழுத்தம், தனியா புள்ளைகள விட்ருக்கு இப்பிடி.. டேய் பாலா வாண்டுப்பயலே” என தம்பியை கட்டிக்கொண்டாள்.
“ல்ல த்த..மாமாட்ட”
”ம்ம் ம்ம் அங்க உள்ள இருக்காரு பாரு போய் பேசிட்டு வாங்க”
தயக்கமாக இருவரும் அமர்ந்திருந்தார்கள்.
மாமா தொண்டையக் கணைத்துக்கொண்டு அறையிலிருந்து வந்தவர்
“ஏண்டா தனியாவாடா ஒங்கப்பா அனுப்பி வச்சாரு, என்னைக்கு இவள கட்டினேனோ அன்னைல இருந்து ஒங்கப்பாரு இப்பிடித்தாண்டா எகனைக்கு முகனையாவே செய்யுறது”
பாலாவைத் தூக்க முற்பட்டார் மாமா. “டேய் வாண்டு, வாடா வாடா மாமாவப் பாக்க வந்தியா”
சரவணனுக்கு குழப்பமாக இருந்தது.
“ஒங்க அத்தை ஒரு அரகொறடா, பாவம் ஒங்கள அங்க இருந்து வர வச்சுருக்கா பாரு”
”ஆமா நாந்தான் அரகொற, நாந்தான் எல்லாம்.. என்னய என்னப் பண்ணாத்தகும்” எனஅத்தை உள்ளே போய் சமையல்கட்டில் நின்று கொண்டாள்.
அம்மா சொல்லிக்கொடுத்ததை சரவணன் நூறு முறை ஒத்திகை பார்த்துக்கொண்டு வந்திருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சொற்கைளை சேர்த்து சொல்லி மன்னிப்புக் கேட்டான். அவன் பேசும் வரை உள்ளே இருந்த செண்பகம் வந்து அவனை இழுத்து அணைத்து கன்னத்தில் முத்தம் வைத்து, “பெரிய மனுசன் ஆகிட்டாரு எங்கண்ணன் மவென்” என இன்னொரு முத்தம் வைத்தாள். சரவணன் கன்னத்தைத் துடைத்துக் கொண்டே விலகி அம்மா உடனே கிளம்பி வரச்சொன்ன காரணத்தை சொல்ல, “ஒங்கொம்மா எல்லாத்தையும் போன்ல சொல்லிட்டாடா , ரெண்டு வாய் சாப்ட்டுப் போங்க, வித விதமா சமைச்சு வச்சுருப்பேன்ல அத்த எப்பவும்”
சாப்பிட்டு கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் தீபக்கோடு வெளியில் அமர்ந்து இருந்துவிட்டு கிளம்பினார்கள்.
“பாத்து பத்தரமா ஏத்திவிட்டு வாடா தீபக்கு, பஸ் நம்பர நோட் பண்ணிட்டு வந்துரு மாமாட்ட சொல்லணும், சொல்லிவிட்டு சரவணின் கையைப் பிடித்து இழுத்து முத்தம் வைத்து சட்டைப்பைக்குள் தன் கையைத் திணித்து ஒருமுறை அவன் சட்டைப்பாக்கெட்டை அழுத்தி மார்பை நீவி விட்டவள்,
“ஏங்க புள்ளைங்க கெளம்புறாங்க பாருங்க” பதில் ஏதும் வராததால் மீண்டும் அத்தை கத்த, ஓரிரு நிமிடங்கள் நின்றபின் தீபக் இருவரையும் அழைத்துக்கொண்டு நடந்தான்.
“பச்சப்புள்ளைங்கனு கூடா பாக்காம வந்து கேட்டே ஆகனும் அதென்ன இப்பவே அப்பன மாதிரி இவனுகளுக்கும் திமிருனு அம்புட்டு பேச்சுப்பேசி வரவச்சுப்புட்டு இப்பிடி ஒட்ட்டனே தூக்கம் வந்துருச்சோ”
அத்தை கத்தியது சரவணனுக்குக் கேட்டது. தீபக்கைப் பார்க்க தீபக் சிரித்தான். தம்பி முன்னால் தாவித் தாவி நடந்து கொண்டிருந்தான்.
மேலூரைப் பேருந்து கடக்கும்போதே நன்றாக இருட்டிவிட்டிருந்தது. பேருந்து நுழைவும் வாயிலிலேயே அப்பாவைப் பார்த்துவிட்டான் பாலா. “அப்பாடா” எனக் கத்தினான். அப்பா தன்னைப் பார்த்துவிட வேண்டும் என முண்டினான். அவனைப் பிடித்துக்கொண்டே சரவணனும் எட்டிப்பார்த்துக் கத்தினான்.
“யப்பா”
ஜன்னலுக்கு வெளியே தலை நீட்டாதீர்கள் என்பதுபோல் சைகையால் கையை ஆட்டிக்கொண்டே வேகவேகமாப் பேருந்தின் அருகில் வந்தார்.
சரவணனுக்கு ஆசுவாசமாய் இருந்தது.
“எப்ட்றா அண்ணென் கூட்டிட்டுப் போய் பத்தரமா கூட்டி வந்துட்டேன்ல்டா”
“ஆமாடா” என்று சரவணன் மீது சாய்ந்தான் பாலா.
“அதுக்குள்ளாட்டியுமா தூங்கிட்டான், சாப்ட்டானா” தம்பிப்பயல் தூங்குவதைப் பார்த்துக்கொண்டே சரவணன் அம்மாவிடம் கேட்க, “அடேங்கப்பா எங்கருந்து திடீர்னு பொங்குதாம் தம்பிமேல, பாவம் இப்பிடி ஒரேடியா பஸ்ல நாள் முழுக்கப் போய்ட்டு வந்தா அலுப்பு இருக்கும்ல, அந்தாளு ஒங்க மாமா லோமா ஒங்கப்பாவ ஜாட பேசுறது பொறுக்காம ஒங்கத்த பண்ண வேல இது. இந்த ஆட்டமா ஆடுவா ச்சை”
பாலாவின் கையில் இறுக்கமாகப் பிடித்திருந்த கார் பொம்மையைப் பிரித்து எடுத்து வைத்தான் சரவணன். தீபக்கிடம் ‘வாங்கிக்கொடு’ இதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தாள் போல. சட்டென நினைவிற்கு வந்தவனாய் தன் சட்டைப்பையில் இருந்து எடுத்து அம்மாவிடம் நீட்டினான். நிறைய நூறுரூபாய் நோட்டுகள்.
“ஏதுடா”
“அத்த குடுத்துச்சும்மா, அத்த பாவம்மா”
சரவணன் அம்மாவிற்கு சட்டென்று கண்களில் நீர் துளிர்த்தது.
“அவளும் என்னதான் பண்ணுவா பாவம்”
*

