Homeசங்க இலக்கியம்அவர் வருவாரா!

அவர் வருவாரா!

“நீ வேணாப் பாரு, இந்த வாரம் மீட் பண்ணலாம்னு கண்டிப்பா தகவல் வரும்.”

“ப்ச்!”

“யேய், இந்த தடவ கண்டிப்பா நடக்கும். பட்சி சொல்லுது.”

மொட்டைமாடியின் கைப்பிடிச் சுவர் ஓரத்தில் இருந்த மண்குடுவையின் விளிம்பில் அமர்ந்திருந்த காகம் பேசிக்கொண்டிருந்த சுபாவை தலைசாய்த்துப் பார்த்தது. சிரித்தாள் திலகா.

“யாராவது வர்றாங்கன்னா காக்கா கத்தும். நீ பேசுற டாப்பிக்க தெரிஞ்சு காக்காவே கம்னு இருக்கு பாரு, அவனாவது வர்றதாவது, மீட் பண்றதாவது.”

திலகாவின் குரலில் விரக்தியும் சலிப்பையும் தாண்டி, வேதனை கூடியிருந்தது.

எதிரே கீழ் வானம் செக்கச் சிகப்பாக இருந்தது. செக்கர் வானத்தின் அழகும், கொஞ்சம் கொஞ்சமாய் அந்தி படர்ந்து கொண்டிருந்த பின்மாலையும் மொட்டைமாடியை வசீகரமாக்கி இருந்தது. சுற்றிலும் சிறிய, பெரிய வீடுகள் எதுவும் கவனம் பெறாதவாறு, தொலைவில் தெரிந்த ‘யானைமலை’ தான் பிரதானமாகத் தெரிந்தது.

மிகச் சரியான பெயர் என்று நினைத்தாள் சுபா. அவளுக்கு மிகப் பிடித்த மலை. எப்போது ஊருக்கு வந்தாலும் இப்படி மாடியில் நின்று மலையின் அழகை ரசிப்பாள். அவளைப் பொறுத்தவரை மதுரையை நோக்கி வரும் நீண்ட பயணத்தின் பக்கவாட்டில் அந்த யானைமலை தென்பட்ட நொடியிலேயே வீடு அடைந்துவிட்டதைப் போல் உணர்வாள்.

யானை தன் துதிக்கையை சற்று நீட்டிக்கொண்டு அமர்ந்து அல்லது நின்று கொண்டிருப்பது போன்ற மலை. உடற்பகுதி சற்று நீண்டு இருக்கும் யானை. ஆனால் மற்ற மலைகளைப்போல் மரங்கள் அடர்ந்து பச்சை நிறத்தில் அல்லாமல், கடும் பாறை பளபளத்து, ஒரு புலியை ஒத்த நிறத்தில் இருக்கும் அந்த மலை.

“ஒனக்கு ஒன்னு தெரியுமா? நான் அடுத்த மாசம் வர்றதுக்குத்தான் பிளான் பண்ணி இருந்தேன். என் ரூம் மேட் சும்மா இல்லாம ‘இதுக்கு ஏன் யானைமலைனு வச்சுருக்காங்க, அப்படியா இருக்கு?’ அப்டீனு கேட்டா. அவளோட ஆள் எடுத்த ஃபோட்டோவைக் காட்டினா. அவன் எடுக்கத் தெரியாம எடுத்த படம். சிரிச்சுட்டே நான் எடுத்ததெல்லாம் ஒவ்வொன்னாகக் காட்டினேன். அவளால நம்பவே முடியல. ‘எப்படி இயற்கையில இப்படி யானை மாதிரி அமைஞ்சிருக்குனு’ அவ்ளோ ஷாக்கிங்கா கேட்டா.”

அதுவரை அமைதியாக சூரியன் இறங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த திலகா லேசாகச் சிரித்து, “ஆனமலைன்னதும் அம்மா உடனே இந்த வாரமே ஊருக்கு ஓடிவந்துட்டீங்க. அதான?, நீ ஒரு லூசு.”

திலகாவின் முகத்தில் சிரிப்பைப் பார்த்ததும் சுபா கொஞ்சம் ஆசுவாசமடைந்தாள். ஏனெனில் கடந்த சில வாரங்களாக திலகாவிடம் பேசும்பொழுதெல்லாம் அவளுடைய குரலே சரியாக இல்லை. புலம்பலும் அழுகையும்தான்.

சுபாவும் திலகாவும் பிரபுவும் கடந்த சில வருடங்களாக சென்னையில் ஒன்றாக வேலை பார்த்தார்கள். பிரபுவிற்கென்று யாரும் இல்லை என ஆரம்பித்து, திலகா அறையில் அவனுக்காக தினமும் சமைத்து டிபன் பாக்ஸை சேர்த்து எடுத்துக் கொள்ளத் தொடங்கியதில் காதல் அதுவாகத் தன்னை நிகழ்த்திக் கொண்டது.

அதற்கு முன்னர் சுபா எத்தனையோ முறை அவளிடம் சமைக்கச் சொல்லியதற்கு

‘பெண்கள்தான் சமைக்க வேண்டுமா? சமையல விட்டா நமக்கு வேற எதுவும் இல்லையா” என ஆரம்பித்து சமூகத்தைக் கடுமையாகச் சாடி, “ஊர்லதான எப்பப்பாரு வேல, இங்க வந்துமா போடி போ’ என மறுத்து வெளியே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவள் திடீரென சமையலை ஆர்வமாய் செய்ய ஆரம்பித்ததும் வியப்பான சுபா உதவும்பொழுது ஏதேனும் சந்தேகம் கேட்டால் சொல்லியே தரமாட்டாள். “எல்லாம் அதே உப்புதான், எல்லாம் அதே காரம்தான்” என மழுப்பிவிடுவாள்.

திலகாவின் சமையல் பிரபுவை மட்டும் அல்ல, எவர் சாப்பிட்டாலும் அவள் மீது ஒரு ப்ரியத்தைக் கொண்டுவந்துவிடும். அப்படியான கைப்பக்குவம். “மோர்க்குழம்பில் லேசாகக் கருகவிட்ட வெண்டைக்காய் சுவைதான் மிக முக்கியக் காரணம்” என பிரபு தன் காதலுக்கான காரணம் சொன்னவன் எனில் பார்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்தக் கட்டம் நோக்கி நகர்வோம் என பிரபு முடிவெடுத்து சென்னையில் இருந்து மும்பை போனவன் அங்கிருந்து ’ஆன்சைட்’ என வெளிநாடு கிளம்பிவிட்டான். பிரபு இல்லாமல் அங்கு இருக்க முடியவில்லை; அவன் நினைப்பைத் தவிர்க்க முடியவில்லை என்பதால் தீபாவளிக்கு மதுரை வந்தவள், அதன்பிறகு வீட்டிலிருந்தே வேலை பார்க்கிறேன் எனக் கேட்டுப் பெற்றுக் கொண்டுவிட்டாள். பிரபுவும் புதிய இடம் சூழல் வேலை என காரணங்களை அடுக்கி, தகவல்தொழில்நுட்பத்தை விலக்கி வைத்திருந்தான் இவளிடம். கருவிகளை நம்பி இருக்கும் உறவுகளின் நிலை இதுதானோ என்று அவளுக்குத் தோன்றியது.

சுபாவிற்கு தீராத கோபம்தான் என்றாலும் தன் வீட்டிற்காக வருகிறாளோ இல்லையோ இவளைப் பார்ப்பதற்காக மாதம் ஒருமுறை ஊருக்கு வந்துவிடுகிறாள்.

“நானும் எவ்ளோ மெசேஜ் பண்ணிட்டேன், கால் பண்ணாலும் எடுக்க மாட்டேங்குறான். அப்பறம் பண்றேன்னு மெசேஜ் மட்டும் பண்றான். ஆமா, அவன் உன்னைய வாட்சப்பில் ப்ளாக்லாம் பண்ணிடலயே?”

“அவனுக்கு அவ்ளோ சீன்லாம் இல்ல. நாந்தான் அப்பப்ப ப்ளாக் பண்ணுவேன் அவன் நம்பர, கடுப்புல.”

 “ஒனக்காகத்தான போனான். செட்டில் ஆகணும்னுதான சொல்லிட்டே இருப்பான்.” “எவ கூட செட்டில் ஆனானோ?” “லூசு மாதிரி பேசாதே. எனக்கென்னமோ உன் பர்த்டேக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கான்னு தோணுது. இந்த வாரம் நியூஸ் வந்துரும் பாரு. அப்பறம் அம்மாக்கு எங்க பேர்லாம் என்னான்னு கூட தெரியாது.”

சுபா சிரித்தாள். திலகா “ஹூக்க்கும்” என்று சொல்லிவிட்டு, “சாப்பிட்டுட்டு போடீ. ஒங்கம்மாட்ட காலைலயே சொல்லிட்டேன் நீ டின்னர் இங்கதான்னு.”

இருள் கவியத் தொடங்க, படியில் இறங்கினார்கள்.

ட்டியில் கொதித்துக் கொண்டிருந்த மோர்க்குழம்பையும் அதில் மிதக்கும் வெண்டைக்காய்களையும் படம்பிடித்து வாட்சப்பில் பிரபுவிற்கு அனுப்பினாள் சுபா. அது சுற்றிச் சுழன்று சில நொடிகளில் ‘ப்ளூ டிக்’ அடிக்க, உடனே அழைப்பு வந்தது பிரபுவிடம் இருந்து.

பேசிவிட்டு திலகாவிடம் கொடுக்க, அவள் மொபைலை வாங்கிக்கொண்டு படியேறி மாடிக்குப் போய்விட்டாள்.

“நீ வந்தாதான் இவ மொகரைல சிரிப்பே வருது” என அம்மா சொல்ல, “ஆமா ஆமா, என்னயப்பாத்துதான் சிரிக்கிறா பாவம்” என நக்கலாகச் சொல்லிச் சிரித்துக் கொண்டாள் சுபா.

இந்த நிகழ்வைப் போல ஓர் அழகான சித்திரத்தை குறுந்தொகை பெரும் அழகியலோடு வரைந்து வைத்திருக்கிறது.

தலைவனைப் பிரிந்து, அவன் வரவை எதிர்நோக்கி வருந்தி இருக்கும் தலைவியைப் பார்த்து தோழி இப்படி ஆற்றுப்படுத்துகிறாள்:

தோழி! உன் துன்பம் மெதுவாக நீங்கும். சுடர்ந்து இருக்கும் சூரியன் மேற்கில் இருக்கும் மலையில் மறையும் அந்தி வேளையில், தன் துதிக்கையைக் கொண்டு வற்றிய குளத்தில் நீர் இருக்கிறதா எனத் துழாவும், தந்தங்கள் கொண்ட (ஆண்) யானை, தன் துணையான பெண்யானையை புலியிடம் இருந்து காக்கும் உயர்ந்த மலைப்பாதையில் உள்ள பாலையைக் கடந்துபோன தலைவர் இன்று திரும்பி வருவார் என்று தோன்றுகிறது.” என்கிறாளாம்.

அற்புதமான காட்சி அல்லவா !. இதில் சொல்லப்படும் அந்த யானைகள், எப்போதும் கூட்டமாய், குடும்பமாய் வாழும் யானைகளை ‘இறைச்சி’யாகப் பயன்படுத்தி இருக்கிறார், ‘மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் எனும் புலவர். யானை தன் துணையானையைக் காக்கும் பொருட்டு அல்லது அருகில் இருக்கும் காட்சியைப் பார்க்கும் தலைவனுக்கு தலைவியின் நினைவும் அன்பும் தூண்டப்படும் என்பதால் அந்த யானைகள் ‘இறைச்சிப் பொருள்’ எனப்படுகிறது சங்கச் செய்யுள்களில்.

பிரபுவிற்கு ‘மோர்க்குழம்பும், சுபாவிற்கு யானைமலையும் இறைச்சிப் பொருள்’ என்றாகலாம்.

அந்தப் பாடல்.

படரும் பைபயப் பெயரும்; சுடரும்

என்றூழ் மாமலை மறையும் ; இன்றுஅவர்

வருவர்கொல் வாழி தோழி! நீர்இல்

வறுங்கயம் துழைஇய இலங்குமருப்பு யானை

குறும்பொறை மருங்கின் அமர்துணை தழீஇக்

கொடுவரி இரும்புலி காக்கும்

நெடுவரை மருங்கின் சுரன் இறந் தோரே.

-‘மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

குறுந்தொகை : 215.

படர் = துன்பம் ; வறுங்கயம்=வற்றிய குளம்; அமர்துணை=விருப்பமான துணை.

இதில் தென்படும் ‘இறந்தோரே’ என்பது ‘கடந்து சென்றவர்’ எனும் பொருளில் வருகிறது. எனில் நாம் இன்று இந்தச் சொல்லை சரியாகப் பயன்படுத்துகிறோம்தானே.

RELATED ARTICLES

1 COMMENT

  1. 💛✍️💛

    தன்னை நிகழ்த்திக் கொண்ட காதல் 💛

    யாருமற்றவனாய்க் கண்டவனுக்கு, யாதுமாகி நின்றவள்.

    காதலனின் வரவு நோக்குபவள் தான் எத்துணை அழகான காதல் நிகழுரு !

    யானை மலையைப் பாத்துறணும்… (யார்)யாருக்கு நீ ‘இறைச்சிப் பொருள்’ ன்னு கேக்கணும்.

Leave a Reply to நளி Cancel reply

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை