ரகுவிற்கு அந்த விபரீத எண்ணம் எப்படித் தோன்றியது எனத் தெரியவில்லை.
சொல்லிவிட்டு அப்பாவி போல முகத்தை வைத்துக்கொண்டு என்னைப் பார்த்தான். இப்போதெல்லாம்
ரகு இப்படி விபரீதமாக யோசிக்கத் துவங்கி இருக்கிறான். எல்லாம் பதினொன்றாம் வகுப்பு
கோடை விடுமுறையில் வேலைக்குப் போய் வந்த பிறகுதானோ என்று தோன்றியது. இப்போதெல்லாம்
எதற்குமே பயப்படுவதில்லை அவன்.
“என்னடா”
இந்த என்னடாவில் அவன் குரலில் கிஞ்சித்தும் விபரீதம் கிபரீதம்
எல்லாம் தெரியவில்லை. நான் சரி என்று சம்மதம் தெரிவித்துவிட வேண்டும் என்ற உந்துதல்
மட்டும்தான் இருந்தது.
“டேய் ரகு, லூசு மாதிரி பேசாதடா”
நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே பைக்கட்டை எடுத்து பின்னால்
மாட்டியவன்,
“போடா பயாந்தாங்கொள்ளி”
சீண்டுகிறான். நான் அவனைப் பார்க்காமல் என் நோட்டுகளை எடுத்து
பையில் அடைத்துக்கொண்டிருந்தேன்.
ஏதோ சொல்லவந்தவன், எங்களுக்கு அருகில் சோனைமுத்து வந்தவுடன்
சட்டென அமைதியானான்.
சோனைமுத்து சிரித்துக்கொண்டே “நாளைக்காச்சும் அடிவாங்காம
இருக்க, நல்லா படிச்சுட்டு வாடா ரகு, எங்க காட்டு”
என ரகுவின் அனுமதிக்குக் காத்திராமல் சட்டையை தூக்கி ரகுவின்
முதுகைப் பார்த்தான்.
‘ஒண்ணுமில்லையேடா,
அப்ப பேண்ட்டக் கழட்டிப்பார்த்தா பழுத்துருக்கும் போலயே”
சொல்லிக்கொண்டே வெளியேறினான்.
வராண்டாவிற்கு நேரான வகுப்பறை என்பதால், அவன் வராண்டாவில்
நடந்து போய் படி இறங்கும் வரை நானும் ரகுவும் பார்த்துக்கொண்டே வகுப்பின் வாசலில் நின்றிருந்தோம்.
அவன் தலை மறந்ததும்,
“இந்த அடியெல்லாம் ஒனக்கு விழுந்துருக்கனும்டா அப்பத் தெரியும்டீ
ஒனக்கு”
அனிச்சையாக புட்டத்தைத் தடவின அவன் கைகள். பாவமாகத்தான் இருந்தது.
அதற்காக?
எல்லாம் டி கே எஸ் சாரால் வந்த வினை. நாங்கள் ஆ பிரிவு அதான்
+2விலும் ஆ தான் எங்கள் குரூப்பிற்கு அ மற்றும் ஆ பிரிவுகள் தான்.’ அ’ பிரிவிற்கு மாசிலாமணி
சார் தான் வகுப்பாசிரியர். அப்புத்திருவிழா வாத்தியார் எனப் புகழப்படுபவர். விதவிதமான
அடிகள்,தண்டனைகள் என பக்கத்து பள்ளிகள் வரை அவர் புகழ் பரவி இருந்தது. ஆ பிரிவிற்கு
டி கே எஸ். அப்பாவி வாத்தியார். சத்தமாகக் கூடப் பேசமாட்டார். “தம்பி, பண் புள்ள பைய்ய்யன்
நீ இப்படி செய்யலாமா” என்பார். அவர் போனதும் “பண்புள்ள பைய்ய்யன்” என பைக்கும் ய்க்கும்
இடையில் அழுத்தம் கொடுத்து ரகு அவரைப்போலவே பேசி கக்கக்கென சிரிப்பான்.
அதேவளையில், பக்கத்து வகுப்பில் இருந்து அடி ஒவ்வொன்றும்
இடியாக சத்தம் வரும். உச்சபட்ச தண்டையாக, டெஸ்க்கிற்கு அடியில் குனிந்து நிறுத்திவிட்டு,
பிட்டத்தில் ஸ்கேலால் அடிப்பார். வலி தாளாமல் நிமிர்ந்தால் பொடனியில் டெஸ்க் தட்டி
இரட்டிப்பு அடிகள் வலிகள் என அவர் வகுப்பு முடியும் வரை கர்ணகொடூரமாய் கழியும் என்று
அந்த வகுப்பு மாணவர்கள் புலம்புவார்கள். நாங்கள், “எங்க டிகேஸ் சார்லாம் செம்ம தெர்மா,
திட்டவே மாட்டாருடா” என இன்னும் கொஞ்சம் வெந்த புண்ணில் ஸ்கேலைப் பாய்ச்சுவோம்.
எல்லாம் ஒரு மாதம் தான். டி கே எஸ் சார், அப்பாவி என்று தெரியும்
ஆனால் இவ்வளவு அப்பாவி என்று அன்றுதான் புரிந்தது. பள்ளி முடிந்து சைக்கிளைக் கிளப்பிக்கொண்டு
போனவர், ப்ரேக் பிடிக்காததால், பிறர் மீது மோதி அவர்களுக்கு காயம் ஏற்படுத்திவிடக்கூடாது
என தானாகவே ஒரு கல்லின் மீது முட்டி நிறுத்து எத்தனித்திருக்கிறார். முட்டியவேகத்தில்
பட்டென சரிய பின்னால் வந்து பைக் அவர் காலில் லேசாக ஏறிவிட்டது. ஏறியது லேசாகத்தான்
என்றாலும் கால் அதைவிட மெல்லிதான ஒன்று அவருக்கு என்பதால் அந்த மெல்லியதேகம் தாங்காமல்
எலும்பு முறிந்து, மாவுக்கட்டு போட்டு படுத்துவிட்டார்.
“ஒருதடவயாச்சும் இந்த மாவுக்கட்ட போட்டுப்பாக்கணும்டா” என்றான்
ரகு அப்போதும்..
ஒருவாரம் அப்படி இப்படி என ஜாலியாகப் போனதில் வந்து இறங்கியது
இடி. தலைமையாசிரியர் எங்கள் வகுப்பிற்கு வந்து நின்றார். வகுப்பு அமைதியாக சிலநொடிகள்
பிடித்தன. அதுவரை பொறுமையாக பற்களைக் கடித்துக்கொண்டு நின்றார். எல்லா சினிமாவிலும்
கமல் செய்வாரே, கோவமாக இருக்கும்போது காதுக்கு அருகே கடவாப் பல்லின் வெளிப்புறம் மட்டும்
அசையுமே, அப்படி அசைத்துக்கொண்டு நின்றார்.
“வாய்ல பிஸ்கெட்ட ஊறவச்சு அப்பிடியே கடிச்சுத் திம்பாராம்டா,
எங்கண்ணென் சொல்லுச்சு” என்றான் சோனைமுத்து கிசுகிசுப்பாக.
வகுப்பு கப் சிப் என ஆனதும், அந்த அறிவிப்பைச் செய்தார்.
அதாவது, டி கே எஸ் சார் மீண்டு வர சிலபல மாதங்கள் ஆகிவிடும் என்றும், அதுவரை எங்கள்
படிப்பில் எந்தத் தடங்கலும் இருக்கக் கூடாது என்பதால், எங்கள் வகுப்பை மாசிலாமணி சார்
வகுப்போடு இணைப்பதாகவும் சொல்லிவிட்டு, இரண்டு வகுப்பிற்கும் இடையில் இருந்த பலகைத்
தடுப்பை எங்களை விட்டே அகற்றச் சொன்னார்.
ரகுதான் முதலில் குதித்துக்கொண்டு ஓடினான். ஏனெனில் உயரமான
மாணவர்களை அழைத்ததும் அவன் உயரம் எனக் காட்ட. அந்தப் பலகைத்தடுப்பை அகற்றிய பிறகு எங்களுக்குச்
சூழலின் விபரீதம் கொஞ்சமாகப் புரிந்தது. அந்தப் பக்கமாக போடப்பட்டிருந்த டேபிள் சேரை
இழுத்து இரண்டு வகுப்பிற்கும் நடுவில் பொதுவாகப் போடச்சொன்னதும்தான் விபரீதம் மொத்தமாகப்
புரிந்தது.
நடுநாயகமாக மாசிலாமணி சார் அங்கே அமர்ந்து இருப்பார் என்ற
நினைப்பே புளியைக் கரைத்தது எனக்கு. ரகுவிற்கு கரைத்து முடிந்திருந்தது போல் அமர்ந்திருந்தான்.
தலைமையாசிரியர் சொல்லிவிட்டுப் போன பிறகும் வகுப்பு கப் சிப்
என்று இருந்தது. அந்த இடமே விநோதமாக இருந்தது. இரண்டு வகுப்புகள் ஒரே வகுப்பாக அகலப்படுத்தப்பட்டு
அந்நியமாக இருந்தது. இடையில் இருந்த அந்த தடுப்புப் பலகை இவ்வளவு பெரிய பாதுகாப்பு
உணர்வை அத்தனை நாட்கள் கொடுத்துக்கொண்டிருந்தது என்பது அதை அகற்றிய பிறகுதான் புரிந்தது.
ஆசிரியர் இல்லாதபோதும் நாங்களாகவே அப்படி பக்கத்து வகுப்பு
மாணவர்கள் போல் அமைதியாக அமர்ந்திருக்கிறோம் என்பது ஓர் அனிச்சைய செயலாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது
என்பது புரியாமலே அமர்ந்திருந்தோம்.
அன்று மிச்சம் இருந்த இரண்டு பீரியட்களும் எந்த ஆசிரியரும்
வரவில்லை. எதோ ஒன்றின் துவக்கத்திற்கு முன்பு கொஞ்சம் கிடைத்த ஆசுவாசம் அது என்பது
அன்றைகுத் தெரிந்திருக்கவில்லை.
சைக்கிளில் கிளம்பும்போது கூட ரகு வழக்கம்போல், முன் டயரில்
காற்று இருக்கிறதா எனத் தட்டிப்பார்ப்பான், சீட்டைத்தட்டி தூசுகளைத் துடைப்பான். அன்று
எதுவும் செய்யாமல் அப்படியே ஏறி அழுத்தினான். நானும் என் சைக்கிளை எடுத்துக்கொண்டு
கொஞ்சம் மேடான இடத்திற்கு உருட்டிப்போய் கல்லில் ஏறி அமர்து மிதித்தேன். ரகு வெகுதொலைவு
போயிருந்தான். ஏறி மிதித்து அவனை அடைந்து சேர்ந்து போனோம். பேசிக்கொள்ளவில்லை.
மறுநாளில் இருந்தே ஆரம்பமாகிவிட்டது. என்ன காரணத்தினாலோ ரகுவைப்
பார்த்தாலே கேள்விகளைக் கேட்பதும் முடியைப்பிடித்து ஆட்டுவதும், பெஞ்சில் ஏறி நிற்கச்
சொல்வதும் என முதல் வாரத்திலேயே ரகுவிற்கும் அவருக்கும் இடையே ஏழாம் பொருத்தமாகி இருந்தது. காரணம், இடையில் கட்டைத்திரை இருக்கும்போது ரகு பாடிய மாசிலா உண்மைக் காதலே பாடல்தான் என்பது பின்னர் புரிந்தது.
இன்று, “டேக் யுவர் இங்கிலீஷ் ரீடர்” என மாசிலாமணி சார் சொல்லிக்கொண்டே
என் அருகில் வர நான் முன்பே எடுத்து வைத்திருந்தேன். ரகு பைய்யை நோண்டிக்கொண்டிருந்தான்.
“என்ன மாப்ள தேடுறீங்க”
“சார்”
”டிகேஸ் சார் இருக்கப்ப அங்கதான ஒக்காந்துருந்த, இப்ப மட்டும்
மாப்ள பெஞ்சுக்கு வந்துட்டியே, என்ன சங்கதி”
அவர் கை, ரகுவின் காதை அடைந்திருந்தது.
காதின் மென்மையான அடிப்பகுதியை லேசாக வருடிக்கொண்டே கேட்டார்.
இன்னும் கொஞ்சநேரத்தில் அந்த வருடல் அழுத்தமாக மாறி காது சிவக்கத்துவங்கிவிடும்.
“பு..க் சார்”
”தேடுங்க மாப்ள தேடுங்க, பாடத் தெரிதுல்ல, தேடுங்க”
ரகு எப்படி எப்படியோ தேடினான். அகப்படவில்லை. எபப்டி அகப்படும்,
அவன் புத்தகத்தைத்தான் நான் வைத்திருக்கிறேனே..
“அப்ப, புக்க மறந்துட்ட”
“சார்”
“டிபன் பாக்ஸ் எங்க?”
இங்குதான் ரகுவின் நிலை பரிதாபமாக மாறியது. அன்று உண்மையிலேயே
மறந்து இருந்தான். இந்த வகுப்பு மாற்ற பயத்தில் காலையில் ஓடிவந்திருந்தான், மறந்துபோய்.
“டிபன் பாக்ஸ மறந்துட்டேன் சார்”
மாசிலாமணி சாருக்கு சுர்ரென்று கோபம் வந்துவிட்டது. ரகு வேண்டுமென்றே
கேலி செய்கிறான் எனத் தோன்றியது போல அவருக்கு.
“ஓஹோ, அதாவது நீ அப்ப கரெக்க்டான பைய்யன், எல்லாத்தையும்
மறந்துட்ட”
என ஸ்கேலை எடுத்தவர், டெஸ்கில் குனியவைத்து வெளுத்துவிட்டார்.
பாவம் ரகு.
எல்லாம் முடிந்து, மாலையில் நாங்கள் இருவரும் பேசியபொழுதுதான்
அந்த விபரீத திட்டத்தைச் சொன்னான்.
“பெட்ரோல் டேங்க்ல ஜீனியைப் போட்ருவம்டா, இஞ்ஜின் சீஸ் ஆகிரும்,
கதறட்டும் வெண்ண”
“வேணாம்டா ரெகு.
வாட்ச்மேன் போட்டுக்குடுத்துவாருடா”
“அதான ஒம்பிரச்சன, அதெல்லாம் நான் பாத்துக்குறேன் வா”
விடுமுறையில் மெக்கானிக் ஷாப்பில் தான் வேலைக்குப் போனான்.
போகும்போது “காலேஜ் போகும்போது பைக் வாங்குனம்ன வச்சுக்கவேன், எதுண்டாலும் நாமளே லிப்பேர்
பண்ணிரலாம்டா”
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்டியைப் பற்றியும் அதன் பெருமைகள்
பற்றியும் பேசிக்கொண்டிருப்பான்.
“நம்ம ஓட்டுற ஸ்பீடுனாலாம்
சவுண்டு வராதுடா இவனே, சைலன்ஸர்தான் மேட்டரே” என்பான் ஒருநாள்.
“நான்கூட ஜூஜுக்கி தான் செம வண்டின்னு நெனச்சேன், யமஹானு
ஒண்ணு இருக்கு இவனே, யப்பா, நீயெல்லாம் ஓட்டமுடியாதுடா, கியரப்போட்டு க்ளெட்ச்ச விட்டா
சர்ர்ர்னு பறந்துரும் பாத்துக்க” என்பான்.
அன்று வழக்கத்தை விட மெதுவாக படி இறங்கி, பெரிய வாளகம் கடந்து,
சைக்கிள் எடுக்கப் போய்க்கொண்டிருந்தோம்.
போகும் வழியில் ஆசிரியர்களின் வண்டிகள் வரிசையாக நின்று இருந்த
இடத்தில் சற்று தாமதித்து பையில் எதையோ தேடுவது போல் ஒரு வண்டியின் சீட்டில் வைத்துவிட்டு,
மாசிலாமணி சாரின் வண்டியைப் பார்த்தான்.
எருமை மாடுபோல் தோற்றம் இருந்த வண்டி அது. கவாசிகி பஜாஜ்
என்றான் முணுமுணுப்பாக.
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு பெட்ரோல் டேங்க் மூடியை
சுழற்றிப் பார்த்தான். கடினமாக இருந்தது.
நான் “டேய் வாடா” என அணத்த, கடுப்போடு வந்தான்.
“அட முக்காவாசி வண்டில அழுத்தித் திருப்பினாலே பொளந்துரும்டா
டேங்க் மூடி, சார் வண்டியும் அப்பிடித்தான் இருக்கு, விடு நாளைக்கி அடிச்சு விட்ருவோம்.”
பொறுமையாக சைக்கிள் முன் வீல் பின் வீல் காற்று, ஹேண்ட்பார்
நேராக இருக்கிறதா எனப் பார்த்து, சீட்டைத் துடைத்து டக்கடடித்து ஏறினான்.
“டேய் ரகு”
”சைக்கிள ஓவராயில்ங்க்கு விட்ருக்கல்ல, சரி வா” என நிறுத்த,
பின்னால் அமர்ந்தேன்.
“முன்னாடி வாடா” என வழிவிட்டான். பார் கம்பியில் அமர்ந்துகொண்டேன்.
“ஏண்டா எண்ணெச்சட்டி
மானிக்க இம்புட்டு எண்ணெய வைக்கிற மண்டைல கருமம்”
“எங்கத்த வச்சுவிட்ருச்சுடா”
“சரி, இப்ப நேராப் போயி, ஒங்க அத்தக்கிட்ட பத்து ரூவாய கரெக்ட்
பண்ணிரு, கேட்டா சைக்கிள் கடைக்குனு சொல்லு”
“எதுக்குடா” எனக்குத் தெரியும். அக்காகடையில் ஜீனி வாங்குவதற்கு
என.
“அதெல்லாம் ஒரு மேட்டருக்கு, சொன்னத மட்டும் செய்யிடா”
வீட்டிற்குள் நுழையும்போதே பைக்கட்டை சர்ரென ஸ்கேட்டிங் போல்
தரையில் செலுத்த அதன் இடத்தில் போய் முட்டி நின்றது.
“அத்த எங்கம்மா”
“வரும்போதோ நொத்தன்னு தான் வருவியோ, போய் கை காலக் கழுவிட்டு
வாடா, என்னத்தயாவது திம்ப, வா”
அம்மா ஏதோ சொல்லிக்கொண்டிருக்க, நான் அத்தையைத் தேடிப் போய்
பார்த்து பத்து ரூபாயை வாங்கி வைத்துக்கொண்டேன். இல்லாவிட்டால் ரகு திட்டுவான்.
அம்மா கொடுத்த எதையோ பாதி தின்று முடிக்கும்போதே போதும் என்பதுபோல்
இருந்தது. ஏதோ ஒரு எண்னம் மனமும் வயிறும் நிறைந்து அழுத்திக்கொண்டு இருந்தது போல் இருந்தது.
நான் நினைத்தது போலவே வாசலில் ரகுவின் குரல் கேட்டது.
“எங்கடா இன்னும் காணமேன்னு பாத்தேன்” அம்மா கத்த, அவன் காதில்
விழுந்துவிடப்போகிறது எனப்பதறி முறைத்தேன்.
பாதி வாயில் அடைத்துக்கொண்டே கையைக்கழுவிக்கொண்டு வெளியே
போக,
“முழுசாத்தின்னுட்டுத்தான் போயேன், அவென் எங்க போயிறப்போறான்”
ரகு உள்ளே எட்டிப்பார்த்துக்கொண்டே சைகையால் கேட்டான். தலையாட்டியதும்
மகிழ்ச்சியாக சைக்கிள் பெல்லை அடித்துக்கொண்டான்.
இருவரும் அக்கா கடைக்குப் போய் நின்றால், கூட்டம்.
“என்னடா இவ்ளோ பேர் இருக்காங்க, வாங்குனா தெரிஞ்சுரும் இல்ல
ரகு”
“டேய் லூசுப்பயலே, வீட்ல ஜீனி வாங்கமாடாய்ங்களா, நீ என்னடா
இப்பிடி இருக்க, சரி காச குடு, சைக்கிளப் பிடி”
வாங்கி வந்துவிட்டான். கூம்பு வடிவில் சிறியதாக பேப்பரில்
சன்னமான சணல் கயிறால் கட்டப்பட்டிருந்த ஜீனிப் பொட்டலம்.
“டேய் ரகு”
“நீ பொத்து. இத நேராப் போய் பைக்கட்டுல வச்சுரு”
உடனே பதறினேன். “நீயே வச்சுக்கடா, அதான் ரூவாயக் கரெக்ட்
பண்ணிக்குடுத்தேன்ல நானு,”
அன்று இரவு நான் சுத்தமாகத் தூங்கவில்லை. எப்படியும் ரகுவிடம்
பேசி நாளை இந்தத்திட்டத்தை மாற்றி விடவேண்டும் என இறுதியாக முடிவெடுத்ததும்தான் அப்பாட
எனத் தோன்றியது. அப்படியே தூங்கிப்போய்விட்டேன்.
“என்னடா சொல்ற ரகு?”
“ஆமடா, நீ வேலைக்கு ஆகமாட்டன்னு தெரியும். ஆதான் காலைல சீக்கரமே
வந்துட்டேன். ஸ்பேனர் எடுத்தாந்தேன். ஒரே தட்டுதான். வாயப்பொளந்துருச்சு. போட்டேன்”
அன்று எட்டு பீரியடும் எட்டு யுகம் போல் போனது எனக்கு. ரகுவைத்
திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அவன் மும்முரமாக கரும்பலகையைப்
பார்த்துக்கொண்டிருந்தான். அப்படியான பாவனையில் இருந்தான்.
மணி அடிக்கும்போது வழக்காம இருக்கும் உற்சாகம் இன்றி, ஏதோ
ஒரு பயம் பீடித்தது.
“ரகு, இஞ்சின் சீஸ் ஆனா என்னடா ஆகும்”
“வண்டி க்ரீச்ச்னு நிண்டு போகும்டா”
“அப்ப பின்னாடி பஸ்சு கிஸ்சு வந்து இடிச்சுட்டா, நம்ம டிகேஎஸ்
சார லேசா பைக்கு ஏத்துனதுக்கே”
ரகு என்னை நிமிர்ந்து பார்த்தான்.
“சொல்றா”
“டேய் அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுடா, வண்டி ஸ்டார்ட்டே ஆகாது,
செலவு இழுத்து விட்ருக்கேண்டா, அவ்வளவுதான். என்னா அடி அடிக்கிறான்”
“என்னடா அவன் இவன்லாம் சொல்ற”
ரகு என்னை முறைத்தான்.
இருவரும் கடக்கும்பொழுது ரகு நின்றான்.
“எங்கடா வண்டியக் காணம்”
ரகுவிற்கு மிக மெல்லிதாக ஒரு பரபரப்பு தொற்றியது.எனக்கு பயம்
கவ்வியது.
“வாட்ச்மேண்ட்ட கேப்பமாடா”
என்னை அடிக்க வந்தான். “நீ வாய வச்சுக்கிட்டு சும்மா இர்றா
மொதோ”
அவனாகவே “வண்டி ஸ்டார்ட் ஆகாதே, மெக்கானிக்கண்ணே சொல்லுவாப்ளயே”
“என்னடா ரகு”
ரகுவிற்கு அவன் மீது படர்ந்த கோபத்தை என்மீது திருப்பினான்,
“டேய் சும்மா இர்றா”
அப்போது பி.இ.டி சார் நடந்து வந்துகொண்டிருந்தார். ரகு சட்டென
சைக்கிளை எடுத்தான்.
“என்னடா ஸ்கூல் விட்டதும் கிளம்பத் தெரியாதா? ப்ள்ஸ் டு போனவுடனே
பெரிய இவனுக ஆயிட்டீங்களோ”
“சார்,”
“கெளம்புங்கடா”
ரகு சைக்கிளில் அமர நான் பின்னால் ஏறிக்கொண்டேன்.
“முன்னாடி வாடா”
“வேனாம்டா”
பள்ளிக்கு வெளியே வந்து சோனைமுத்துவைப் பார்த்ததும் நிறுத்தினான்.
“டேய் சோன, நீ சார்ட்ட டியூசன் போறில்ல, சார் வீடு எங்குட்டுடா
இருக்கு”
சோனைமுத்து சிரித்தான்
“அன்னிக்கே சொன்னேன்ல்ல, டியூசன் சேர்ந்தா அடிக்கமாட்டாருன்னு,
வா நான் அங்கதான் போறேன்”
அவன் பின்னால் போனோம்.
போகும் வழி எல்லாம் ரகு ஏதேனும் வண்டி நின்று இருக்கிறதா
எனப் பார்த்துக்கொண்டே போனான்.
நான் ஏதேனும் விபத்து ஏற்பட்டு கூட்டமாக நிற்கிறார்களா எனப்
பார்த்துக்கொண்டே போனேன்.
சிம்மக்கல் பக்கமாகப் போய் ஒரு சந்தில் நுழைந்து அந்தப்பக்கமாக
இருந்த சற்று பெரிய தெருவிற்குள் சோனைமுத்துவைத் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தோம்.
ரகுவிற்கு கழுகுக் கண்கள்.
தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டான்.
“அந்தா வண்டி நிக்கிது பாருடா, நல்ல வேள”
“சரி அப்பிடியே போய்ருவம்டா” என்றேன்.
“அவன் போய் போட்டுக்குடுத்துருவாண்டா”
வாசலில் நானும் ரகுவும் நின்றிருந்தோம். சோனைமுத்து நூறு
வருடம் அங்கு பழகியவன் போல் நேராக உள்ளே போனான். பின்னர் எட்டிப் பார்த்து நில்லுங்கள்
வருகிறார் என்பதுபோல் சைகை செய்துவிட்டு, படி ஏறி மாடிக்குப் போய்விட்டான். அங்குதான்
டியூசன் க்ளாஸ் போல.
மாசிலாமணி சார் வெளியே வந்தார். கை வைத்த பனியனும் லுங்கியும்
கட்டி இருந்தார்.
“இவரப் பாத்தாடா
இப்பிடி பயந்தோம்” ரகு கிசுகிசுப்பாக சொன்னான்.
“என்னடா, டியூசனா?”
“ஆமா சார்” என நான் சொல்லும்போதே ரகு இல்லை என்பதுபோல் தலையாட்டினான்.
எங்களைக் குழப்பமாகப் பார்த்தார்.
“நல்லாத்தானடா படிக்கிறீங்க, டியூசன்லாம் வேணாம்டா ஒங்களுக்கு,
போங்க, நாளைக்கு க்ளாஸ்ல பேசுவோம்”
என உள்ளே போய்விட்டார்.
ரகு அவர் வண்டியைப் பார்த்தான்.
அங்கு நிற்பது சரியாகப் படவில்லை எனக்கு என்பதால் சற்று தள்ளி
அழைத்துக்கொண்டு போனேன் ரகுவை.
“அதான் ஒண்ணும் ஆகலயேடா, போய்ருவம்டா”
“இல்லடா, பழைய வண்டி போலுக்கு, லேட்டாத்தான் எறங்கும் ஜீனி.
காலைல வண்டி ஸ்டார்ட் ஆகாது”
“நல்லவேளடா, வழில இஞ்சின் ஏதாச்சும் ஆகி இருந்தா ஆக்ஸிடெண்ட்
ஆகி இருக்கும்ல்ல, ஆமா என்னடா இப்பிடி கை வச்ச பனியனப் போட்டு ஆள் என்னமோ மாதிரி இருக்காரு,
ஸ்கூலுக்கு எப்பிடி வர்றாரு கிச்சுனு”
சிரித்தான். எனக்கும் பயம் நீங்கி சிரிப்பு வந்ததது.
மாலையில் சைக்கிள் கடை கணேசன் அண்ணன், சைக்கிளை பளபளவென ஆக்கி
வீட்டில் விட்டிட்ருந்தார்.
இரவு, வழக்கத்தை விட முன்பாகவே தூக்கம் வந்தது. ஏனெனில் வரும்பொழுது
ரகு அமர்ந்துகொண்டு என்னை அழுத்த விட்டிருந்தான் சைக்கிளை. எதிர்காற்று வேறு.
சரியாக இரண்டு மணிக்கு அத்தை எழுப்பினாள்.
“என்னடா ஆச்சு? “
“என்ன அத்த?”
“ஏண்டா என்ன என்னமோஒளர்ற? நான் இல்லசார், நான் கொல பண்ணல
சார்னு”
திக் என்று ஆனது எனக்கு. ஒருவேளை நாளைக் காலை சார் பள்ளிக்கு வரும்வழியில்
ஏதேனும் ஆகி விபத்து ஏற்பட்டால்? என்று நினைக்கும்போதே அழுகை வந்தது.
அத்தை “ஏதாச்சும் கவனா இருக்கும்டா” என நெற்றியில் திருநீரு
இட்டு, “தூங்குடா ரெண்டுங்கெட்டான் வயசாகுதுல்ல அதான்”
எனப் போய்விட்டாள்.
மறுநாள் காலை ஆறு மணிக்கு எல்லாம் யாரிடமும் எதுவும் சொல்லாமல்
சைக்கிளை எடுத்துக் கொண்டு ஒரே அழுத்தாக அழுத்தினேன். நேராக மாசிலாமணி சார் வீட்டிற்குப்
போய் அவர் காலில் விழுந்தாவது உண்மையைச் சொல்லவேண்டும். நான் தான் சார் செய்தேன் என்று
சொல்லிவிடலாம். ரகுவின் பெயரைச் சொன்னால்தானே அவனுக்குப் பிரச்சனை.
சர்வீஸ் பண்ணியதாலோ என்னவோ சைக்கிள் பறந்தது. மிதிக்க மிக
லேசாக இருந்தது.
சந்தில் நுழைந்து தெருவை அடைந்து சைக்கிளின் வேகம் குறைத்தேன்.
சார் வீட்டு வாசலில் வண்டிக்கு அருகில் ரகு நின்றிருந்தான்.
*