“ஏண்டா, அங்க என்ன
நடந்துகிட்டு இருக்கு, இங்க ஒக்காந்து சீட்டு
ஆடிக்கிட்டு இருக்க”
நல்லமுத்து, நாங்கள்
அமர்திருந்த திண்ணையைக் கடக்கும் பொழுது, எங்களை நோக்கி
பொத்தாம் பொதுவாகக் கத்திவிட்டு ஓட்டமும் நடையுமாய் கடந்தார்.
“என்னடா சந்திரா, ஒங்கப்பு ஜெட்டாப்
பறக்குறாறே?”
சந்திரன்
மும்முரமாய் சீட்டுக் கட்டைக் கலக்கிக் கொண்டே “அவருக்கு வேற வேல இல்ல”.
அவன் கட்டைப்
பிரித்துக் கலக்குவதைப் பார்க்கவே ஆசையாக இருக்கும். மூன்று கட்டுகளை
சேர்த்து, பாதியாகப் பிரித்து
ஒன்றுக்கொன்று நடுவில் விழுமாறு சல்லென நெளித்து விசிறி விடுவதாகட்டும், உள்ளங்கைகளுக்கு
இடையில் வைத்து அப்படியே ஒன்றுக்குள் ஒன்று விழச்செய்வதாகட்டும் என பார்ப்போரை , பார்த்துக்கொண்டே
இருக்கச் செய்யும். மனம் திருப்தி கொள்ளும் வரை
கத்தை கத்தையாக உருவி உருவி கட்டின் மேல் அடித்துக்கொண்டே இருப்பான். சீட்டின் நடுவில்
ஆட்காட்டி விரலால் தட்டினான் எனில் கலக்குவதை நிறுத்திவிட்டு,பிரித்துப் போடப்
போகிறான் என அர்த்தம். எத்தனை கை என எண்ணிக்கொண்டு, அவனுக்கு
ஏற்றார்போல் வரிசையாக முதல் சீட்டைப் போட்டு இடக்கையால் சற்று அகட்டி
நேராக்கிவிட்டு மீதம் இருக்கும் பண்ணிரெண்ட்டு சீட்டுகளையும்
வண்ணத்துப்பூச்சிகளைப் போல் பறக்கவிடுவான். அவ்வளவு
வேகத்திலும் ஒரு சீட்டுகூட தவறியும் அடுத்த இடத்தில் விழாது. முடித்து தன்
சீட்டை எடுத்து நிமிர்த்தாமல் எண்ணிப்பார்த்துவிட்டு சொடுக்குவான். மற்றவர்கள்
எடுத்துக்கொள்ளலாம் எனும் சமிக்ஞை.
க்ளோஸ்டு ஜோக்கரை
துண்டின் மடிப்பை நீவிவிட்டு வைப்பான். லேசாக மேடேறினால்
கூட பார்த்துவிடுவார்கள்.
பார்த்துக்கொண்டிருந்த
என்னைப் பார்த்தவன்,
“ எத்தன நாள்
பார்த்துக்கிட்டே இருப்ப? கைய்யில ஏத்த வேண்டியது தான? ரம்மியும்
ஜோக்கரும் ஏறலைன்னா ஸ்கூட்டு கவுத்து யாரு கேட்கப் போறா?”
எனக்கானால்
வேடிக்கை பார்ப்பதில்தான் பிடித்தம். அதுவும் இரண்டு
பேர் ஆடும் போது இருவரின் சீட்டையும் பார்த்துக்கொண்டு அமைதியாக அவர்கள் செய்யும்
தவறுகள், வரும் என்று வாயைப் பிளந்து
எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சீட்டை எதிராளி ஜப்பான் ரம்மியாக சேர்த்து பிடித்துவைத்துக்கொண்டிருக்கும்
வினோதம் என, வேடிக்கைப் பார்ப்பதில் ஒரு
சுகம்.அதிலும் குறிப்பாக க்ளோஸ்டு ஜோக்கரில், ஒருவன் ஜோக்கரை
பார்த்துவிட்டு ஆடும்பொழுது, எதிராளி ஜோக்கர் என்று
தெரியாமல் இறக்குவதும், அதை எந்த பரபரப்பும் இன்றி
எடுப்பது போல் நடிப்பதும் என சுவாரஸ்யம் தான்.அதிலும், இன்னதுதான்
ஜோக்கர் என தெரியவரும்பொழுது வரும் மூர்க்கம் இருக்கிறதே, ஜோக்கருக்கு
அவ்வளவு மதிப்பு.
நான்
சுவாரஸ்யமாய்ப் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த ரகுதான் ஆரம்பித்தான். “ஏண்டா விளையாடினா
கூட இண்ட்ரஸ்ட்டா இருக்கும். நீ எப்பவும் சும்மா
பார்த்துட்டு இருக்க? வா ஒரு டீ சாப்ட்டு வரலாம்”
திண்ணையைப் பிரிய
மனமில்லாமல் அவனோடு நடந்தேன். ரகுவும் நானும் பேச
ஆரம்பித்தால் பேச்சின் திசை இன்னதென்று
இல்லாமல் போய்க்கொண்டே இருக்கும். பெரும்பாலும் நான் தான்
பேசுவேன். பேச்சில் தொய்வு ஏற்படும்
போதெல்லாம் அவன் திசையை முடுக்கி விடுவான்.
”வேடிக்க
பார்க்குறதுல அப்பிடி என்ன இருக்குன்னு கேட்டியே.. அதுல ஒரு விசயம்
இருக்கு ரகு. எல்லாத்தையும் வேடிக்க
பார்த்துற முடியாது, பார்த்தாலும் நல்லா இருக்காது. அதுவே, நீ பார்க்குற
எடத்துல அடுத்து நடக்கப் போறது ஒனக்குத் தெரிஞ்சு, ஆனா அங்க
இருக்குறவங்களுக்குத் தெரியாம இருந்தா, அதுல ஒரு
சுவாரஸ்யம் ஒட்டிக்கும்.”
என நான் சொன்னது
அவனுக்குப் புரிந்தும் புரியாமலும் இருப்பது போல் பார்த்தான்.
“இந்தா, இந்த எடத்துல
நிக்கிறோம், இப்ப இந்த சந்தும் நம்ம பார்வைல
இருக்கு, நேரா இருக்குற ரோடும் நாம
பார்க்குற மாதிரி இருக்கு. இப்ப இந்த ரோட்ல இருந்து
ஒருத்தன் வேகமாக சைக்கிள்ள வர்றான்னு வச்சுக்குவோம். அதே நேரத்துல
இந்தப் பக்கம் சந்துல இருந்து ஒருத்தன் ஓடி வர்றான். இப்ப நாம இவங்க
ரெண்டு பேரையும் பார்க்க முடியும், ஆனா ஓடி
வர்றவனுக்கு சைக்கிள் காரனத் தெரியாது. சைக்கிள் காரனுக்கு ஓடிவர்றவன் மேல மோதப்
போறோம்னு தெரியாது, கரெக்ட்டா?”
ரகு சந்தையும்
சாலையையும் பார்த்துக்கொண்டே ஆமோதித்தான்.
”இப்ப, சைக்கிள் காரன்
மேல சந்துல இருந்து ஓடி வர்றவன் மோதிரப் போறானேன்னு பார்க்கும் போதே பரபரப்பா
இருக்கும்ல, அதுதான் மேட்டரே. யோசிச்சு பாரு. நல்லா ஓடுன
சினிமால இதான் நடக்கும். உள்ள இருக்குற கதாப்பாதிரங்களுக்கு
என்ன நடக்கப் போகுதுன்னு தெரியாது. ஆனா நமக்கு
தெரியும், அத எதிர்பார்த்து பார்த்துட்டு
இருப்போம்.”
ரகு முற்றாக
ஆமோதிக்கும் விதமாய் தலையாட்டினான்.
பஸ் ஸ்டாண்ட்
பரபரப்பாக இருந்தது. டீக்கடைகளில் எப்போதையும் விட
அதிகக் கூட்டம்.
“இந்த வெக்கங்கெட்ட பொழப்ப பொழச்சுத்தான் ஆகனும்னு
ஆகிப்போச்சு. எவனுக்கும் எதுக்கும் ரோசம்
இல்ல மானம் இல்ல, எச்சியத் துப்பிக் குடுத்தாக்
கூட குடிச்சிட்டு போய்ட்டே இருக்கான்”
அந்த டீயைக்
குடிப்பதா வேண்டாமா என்பது போல் தயங்கித்தயங்கி வாங்கினேன்.
“என்னா கோவலண்ணே
டீய விட ஒன்னோட வாயி இம்புட்டு சூடா இருக்கு, என்ன சங்கதி?”
“ஒங்களுக்குலாம் நல்ல வேல கெடச்சு
வெளியூர்க்கு போய்ட்டா சொந்த ஊரு கண்ணுக்குத் தெரியமாட்டேங்குது. எப்பவாச்சும்
வர்றீங்க, வெளையாடுறீங்க. சீட்டு ஜோக்கர்
ஜோக்கர்னு ஒரு நாள் உண்மைலயே ஜோக்கர் வேலையக் காட்டும் பாரு..அன்னிக்கு இருக்கு
ஒங்களுக்கு எல்லாம்”
இது அவரின்
அன்றாடப் புலம்பல் போல் அல்லாமல் மிகுந்த கொதிநிலையில் இருந்தது. பிறகு அவராகவே
தணிந்தார்.
“ஏண்டா நாலு வழி
எட்டு வழினு பைபாஸ்ல ரோட்ட போடுறாய்ங்களாம். அத நேரா
நட்டக்குத்தலாத்தான் போடுவாய்ங்களாம். அப்பத்தான் வெரசா
போக முடியுமாம். வெரசாப் போயி என்னடா பண்ணப்
போறீங்க? எப்பிடியும்
ரெண்டு மூனு பேத்தோட வயக்காட்ட காவு வாங்கிரும் பாரு”
சந்திரனின் அப்பா ஓடியது இதற்குத்தான் எனப் புரிந்தது.
சைக்கிளை பைபாஸ் நோக்கி அழுத்தினோம்.
சந்திரனின் வயலில் சர்வேயர் ஒரு குச்சியை நட்டு
கண்களை இடுக்கிப் பார்த்துக்கொண்டிருந்தார்.
அவருக்கு அருகில்
நல்லமுத்து நின்றிருந்தார். வரப்பில் இருந்த மருதமரத்தின்
நிழலில் இருவர் நின்று எதையோ குறித்துக்கொண்டிருந்தார்கள்.
யாரும் யாருடனும்
பேசிக்கொள்ளவில்லை.
வண்டியில்
கிளம்பும் முன் நல்லமுத்துவை அருகில் அழைத்த சர்வேயர், “அதெல்லாம்
நாளாகும்ங்க, நீங்க இப்பவே போட்டு மனச
ஒளப்பாம இருங்க.”
நல்ல முத்து
மெதுவாக மருதமரத்தை நெருங்கி, வரப்பில் அமர்ந்தார். நானும் ரகுவும்
அருகில் சென்று நின்றோம். எங்கள் நிழல் மரத்தின்
நிழலுக்குள் புகுந்து கலந்த நிகழ்வில் நிமிர்ந்தார்.
“அவென் எங்கப்பா?”
சந்திரன் விளையாடிக்கொண்டிருப்பதை
அவரால் இந்நொடியில் தாளமுடியாது. அமைதியாக இருந்தோம்.
எதிர்காற்றில் பச்சைக் கதிர்கள் அலையலையாய் மடிந்து
நிமிர்ந்தன. அருகில் இருந்த பம்ப்
செட்டிலிருந்து ஈரப்பதம் காற்றில் கலந்து வாசத்தைக் கிளப்பியது.
”அது யார்றா? நல்ல முத்தா?” கிழவியின் குரல்
கேட்டு நிமிர்ந்தவன்
“என்னா
வச்சுருக்கியாம் நல்லமுத்துக்கு?”
“வச்சுருக்காக, வா.. ஒம் முத்து
நல்லதா கெட்டதாண்டு ஒரு நாள் நொங்கு எடுத்துப் பார்க்குறனா இல்லயான்னு பாரு, நல்ல முத்து
கெட்ட முத்துன்னு பேரப்பாரு”
குனிந்து
களைபறித்துக்கொண்டிருந்த நல்லமுத்து நிமிர்ந்தான். அசந்து போனான். நல்லக்காளுக்கு
அருகில் ஆம்பிளை சட்டை போட்டுக்கொண்டு நின்றிருந்தாள் மங்கையர்க்கரசி.
“என்னா கெழவி, யாராம்? ஆம்பளப்பய
சட்டயைப் போட்டு வயக்காட்டப் பக்கம் வந்து நிக்கிறது?”
“மேலூர்ல கட்டிக்
கொடுத்தேன்ல, அது போட்ட குட்டி., போன வருசம்
வந்துச்சே பார்க்கலயா, ”
நல்லமுத்து எனும்
சாமானியன் சட்டென அங்கு காதல் மன்னன் போல் நின்றிருந்தான். உருண்டு திரண்டு
உரமேறியிருந்த அவன் உடல் அப்படியே கனிந்து உருகிவிடுவது போல் உணர்ந்தான்.
“ஒங்கூர்ல
பொம்பளப் பிள்ளகளே இல்லியா, இல்ல முன்னப் பின்ன பார்த்தது
இல்லயா?”
இல்லை என்பது
போல் தலையாட்டினான் அனிச்சையாக.
அதன் பிறகு வந்த
நாட்களில் நல்லமுத்துவும் மங்கையர்க்கரசியும் அவன் வயலில் களையெடுத்தார்கள், உரம்
போட்டார்கள். நெல்லும் பயிரும் காதலும் ஒருசீராய் வளர்ந்தது.
“நல்லக்கா, எனக்குத்தான்
இந்த வயல விட்டா எதுவும் இல்லண்டு ஒனக்குத் தெரியும், இந்த வயல
மங்கையர்கரசி பேர்ல எழுதி வச்சுர்றேன்.”
“எதுக்கு?”
“அட
கட்டிக்குடுத்தா ஒம் பேத்திய”
“அப்பிடி நேராக்
கேளுடா, ஏதோ ஏரோப்பேலுனு விடுறது கணக்கா
சுத்தி வளைக்கிற”
திருப்பறங்குன்றம்
முருகன் கோயிலில் கல்யாணம் முடித்த கையோடு மேலூர் அழகர்கோயில் பழனி என ஊர்
சுற்றுவதாகத் திட்டம். ஆனால் கல்யாணம் முடிந்த கையோடு வயலை நோக்கி ஓடினான்
நல்லமுத்து. பக்கத்து வயலில் நெருப்பு பிடித்துவிட, ஊரே திமிலோகப்
பட்டது. நல்லவேளையாக மருதமரத்திற்கு இந்தப் பக்கம் ஒன்றும் இல்லை.
இருள் மசிந்து
கவிழத் துவங்கியது. கையில் தூக்குச்சட்டியோடு மங்கையர்க்கரசி வந்துவிட்டாள்.
“அட, புதுப் பொண்ணு
இப்பிடி வயலுக்கு வந்துக்கிட்டு, வீட்ல கெடக்காம”
“தாலியக்கட்டின
கையோட இங்க ஓடியாந்துட்ட, எனக்கு இருப்பே கொள்ளல அதான்.”
பகலில்
எரிந்துபோன பக்கத்து வயலில் இருந்து வந்த நெருப்பின் மிச்ச வாசமும் அவள் தலையில்
இருந்து வந்த மல்லி வாசமும் அவனை உலுக்கியது. அந்த இரவின் நிசப்த்தத்தில் கட்டிலின் அசைவோ அசையும் சத்தமோ காற்றில்
கலந்துவிடாதவாறு மருதமரம் காவல் காத்தது
சந்திரன் பிறந்து
இரண்டாவது வருடம். ஊருக்குள் புதிதாய் மிஷின் வந்திருக்கிறது என வயலுக்குள்
இறக்கியாகிவிட்டது. இளவெள்ளை நிறமும் அடிப்பாகம் ஊதாவும் என மிஷின் தடதடவென
அறுத்துத் தள்ளியது. தள்ளிய மிஷின் அழகேசனின் கட்டுப்பாட்டை இழந்து ஒரே தாவாகத்
தாவி, மருத மரத்தில் முட்டி நின்றது. நல்லவேளையப்பா, மரம் இல்லேண்டா
இந்நேரம் பிள்ளையும் தாயையும் கூழ் ஆக்கி இருக்குமப்பா”
பழைய நினைவுகளில் இருந்து நல்லமுத்து
எழுந்தார். மருதமரத்தின் நடுப்பகுதியில் அந்த வெட்டு ஆழமாய் இருந்தது. அதன்மீது
அழுக்கும் காலமும் ஏறியேறி அந்தத் தழும்பைப் பளபளவென ஆக்கி இருந்தது.
நான் “அப்பா, நான் போயி
சந்திரன வரச் சொல்லுறேன். இங்கயே இருங்க.”
“அட அவனே
எப்பவாச்சும்தான் ஊருக்குள்ள வர்றான். வந்தா ரெண்டு நாள் ஒங்களோட இருந்துட்டு
போறான். அவென் வேல அப்பிடி.”
“ இந்த மேட்டர
விடுங்கப்பா.. எப்பிடியும் அமெளண்ட்டு நல்லா வரும்”
“காசு என்னடா காசு, இந்த வயல்
இருக்கே.. இது வரைக்கும் எங்க அப்பா நெனப்பயே எனக்கு கொடுத்தது இல்ல தெரியுமா..
இந்த வயலே எங்க அப்பாதான். அப்பிடியே காலையும் கையையும் நீட்டி படுத்துக் கெடக்குற
மாதிரி. இந்த மருத மரம் இருக்கே.. என்னய மொதமொதோ அம்மணமா பார்த்துச்சு. எங்க அம்மா கணக்காடா இந்த மரம். காசு எவனுக்குடா வேணும் காசு? காசாம்ல காசு..”
சந்திரனிடம்
விசயத்தைச் சொல்வதற்குப் போனால், ஆட்டம் மும்முரமாய் போய்க்கொண்டிருந்தது.
வழக்கம் போல்
வேடிக்கை துவங்கியது
திடீரெனெ
பிரகாசமானது சந்திரனின் முகம். ரம்மி சேர்ந்துவிட்ட
மகிழ்ச்சியில் மெலிதாய் விசில் அடித்தான்.
அந்த விசில்
சத்தம் காற்றில் கலந்து, மேவி ஊரெல்லாம் சுற்றி, ஊருணி நீரில்
தவழ்ந்து, பின் மருத மரத்தில்
தொங்கிக்கொண்டிருக்கும் நல்லமுத்துவின் காதிற்குள் எப்படியும்
நுழையும்.
*
குமுதம்
ஏப்ரல்-2023