Homeசங்க இலக்கியம்உன் சும்மா அழகையே கண்ணால் தாண்டுதல் அரிய காரியம்

உன் சும்மா அழகையே கண்ணால் தாண்டுதல் அரிய காரியம்


நெருங்கிப் பழகியவர்கள் பிரிந்துபோகும் சூழலில், வெகுசிலர் மட்டும், அதுவரையிலான அத்தனை நெருக்கத்தையும் முற்றாக மறந்து, மொத்தமாக ஒதுங்கிவிடுவார்கள். உடன் இருந்தபொழுது ஏற்பட்ட மகிழ்வான அனுபவங்களை மட்டும் மனதில் நிறுத்தி, பின்னர் எங்காவது சந்தித்துக்கொண்டால் ஒரு சிறிய புன்னகை, புருவ உயர்த்தல், நலம் விசாரித்தல் எனும் அளவிற்கு பக்குவமான பிரிவாக இருக்கும்.

இதற்கு நேர் எதிராய், பெரும்பாலானவர்கள், பிரிவைத் தாங்கமாட்டாமல், தான் ஏமாற்றப்பட்டதாக நினைக்கும் பெண்கள் அதுவரையிலான அத்தனை காதலையும் ப்ரியத்தையும் நொறுக்கி உடைப்பது போல், தங்களுக்குள் நிகழ்ந்த மிகத் தனிப்பட்ட அந்தரங்கங்க உரையாடல்களில் ஆரம்பித்து அத்தனையையும் பொதுவெளியில் பரப்பி, நியாயம் கேட்பது, துணையைத் திட்டி அவப்பெயர் ஏற்படுத்துவது எனும் அளவிற்குப் போவதையும் பார்க்கிறோம்.

நண்பனின் தோழி ஒருவருக்கு காவல்துறையில் ஏதேனும் உதவி செய்பவர்கள் இருக்கிறார்களா எனக் கேட்டு, காரணமாக அவன் சொன்னது மிகுந்த மன வருத்தத்தைத் தந்தது.

மிக நெருக்கமான பல வருடங்களாக காதலித்து வந்தனராம் அவனுடைய தோழியும் காதலரும். என்ன காரணத்தினாலோ அவன் இவளை விட்டுப் பிரிய முடிவெடுத்து தொடர்பை துண்டித்துக் கொள்ளத் துவங்க, இவளால் அந்த தவிர்ப்பைத் தாங்க முடியாமல் எவ்வளவோ போராடிப்பார்த்து இறுதியில், காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும், என முடிவெடுத்துவிட்டாள் என்றார்.

நோக்கம் என்ன? காவலர்களின் அடிக்குப் பயந்து மீண்டும் இவளோடு சேர்ந்து இருந்தாலும் அவன் இந்த அவமானத்தையும் வெறுப்பையும் வைத்துக்கொண்டு எப்படி சேர்ந்து வாழ்வான்? எனக் கேட்டிருக்கிறான் நண்பன். அதற்கு தீர்க்கமான குரலில் “அவனுக்கு இந்த அடி வேண்டும். அது போதும், அவன் சரி என்று சொன்னதும் நான் மாட்டேன் என்று சொல்லிவிட்டுப் போய்விடுவேன், அவனால் இந்தக் காதல் மீதே வெறுப்பு ஏற்பட்டதுதான் மிச்சம்” என்றாளாம்.

அவனே மறந்துவிட்டிருப்பான், ஆனால் இன்று வரை எனக்கு அந்தப் பெண்ணின் கோவம், அந்த வெறுப்பு, விரக்தி இம்சித்துக்கொண்டே இருக்கிறது.

எந்த அளவு அன்பையும் காதலையும் வெளிப்படுத்துகிறார்களோ அதே அளவிற்கு வெறுப்பையும் விரக்தியையும் சொல்லப்போனால் வன்மத்தையும் வெளிப்படுத்த வைத்துவிடும் இந்த அன்பு எனும் சொல் ஆகப்பெரிய விநோதம்தான்.

சேர்ந்து இருந்த பொழுதுகளின் களிப்பும் கனிவும் அலாதியானவையாக இருந்தால், அவர்களைப் பிரிய நேரும் பொழுது மனம் அவ்வளவு எளிதில் ஏற்பதில்லை என்பதன் வெளிப்பாடுதான் இந்த செயல்பாடுகள். எவ்வளவு இறுக்கமான விரக்தியான மனநிலைக்குத் தள்ளப்பட்டால் இப்படி அந்தரங்க உரையாடல்கள், தங்களுக்குள் நிகழ்ந்த அன்பைப் பொதுவெளியில் வைத்தல், காவல் நிலையத்தில் புகார் அளித்தல் என எல்லாவிதமான எல்லைக்கும் போவார்கள்.

யோசித்துப்பார்த்தால், ஏதோ காரணத்திற்காகப் பிடித்த ஒருவர் பிடிக்காமல் போகிறார், எனும்போது விலகி வழிவிடுதல் தானே சரியான ஒன்று எனத் தோன்றும்.

ஆனால் இது அவ்வளவு எளிதானதல்ல என்பதும் இதன் பின்னால் இருக்கும் உளச் சிக்கலின் உளவியலும் புரிந்துகொள்ள முடியாத வண்ணம் கடினமான ஒன்றாக இருக்கிறது.

தனக்கு மட்டுமே என்று இருந்த ஒருவர் இல்லாமலே போவது ஒரு விதம். அது யாருக்கும் இல்லாமல் போவது. அதைக் கூட காலத்தின் துணையோடு மெதுவாக ஏற்கும் மனம், தனக்கேயான ஒருவர், தன்னை விடுத்து பிறரோடு அதே நெருக்கமாக இருப்பதை நினைக்கவோ, பார்க்கவோ ஏற்பதில்லை மனம். அப்படி நிகழும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக குரூரமாக மாறத் துவங்குகிறது.

உன் சும்மா அழகையே
கண்ணால் தாண்டுதல்
அரிய காரியம்
மணக்கோலத்தில் நீ என்றானால்
வெயிலும் காய்கிறேன் பேர்வழி என்று அன்று
எதிர் மிளிர்ந்து கொண்டிருந்தது
உன் பொலிவைத்தான் போலும்.
என் உள்வெடிச் சிதறல், அச் சூழலில்
ஒவ்வாத காட்சி என்றாகி
விழிச்சுவை அவரோகணிக்கவும் கூடும்
இன்னொரு ஆள் கையில் உன் கை
என்பதற்காக அல்ல
உன் மணவிழாக் காண
நான் வராமல் தவிர்ந்தது.

என்ற ராஜ சுந்தர்ராஜனின் கவிதை ஒன்று (முகவீதி தொகுப்பு; தமிழினி) .

அதாவது காதலிக்குத் திருமணம். இன்னொருவனின் கரம் பிடிப்பதைத் தாங்க முடியாமல் எல்லாம் இல்லை, ஆனால் திருமணக்கோலத்தில் அவள் இருக்கும் அழகைப் பார்ப்பது கடினம் அதனால்தான் வரவில்லை எனும் பொருளில், ஒரு காதலனின் வலியைப் பதியும் அற்புதமான கவிதை அது.

இப்படி மிகுந்த பக்குவத்தோடு அணுகிவிட்டால் எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால், பெரும்பான்மை, தன் ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ,ரயிலில் தள்ளுவதும், திராவகம் ஊற்றுவதும், பொதுவெளியில் அம்பலப்படுத்திப் பெயரைக்கெடுப்பதும் என எந்த எல்லைக்கும் போகிறார்கள்.

இதோ, இந்த சங்ககாலத் தலைவி ஒருத்தி, தன் பிரிவின் வேதனையை, ஏமாற்றிவிட்டான் எனும் சினத்தை எவ்வளவு விரக்தியோடும் வலியோடும் சொல்கிறாள் பாருங்கள்.

காட்டினிடையே போகும் யானை, பாறையைக் குத்தித் தன் தந்தத்தை உடைத்துக்கொண்டதுபோல், உன்னோடு மகிழ்ந்து சிரித்த என் பற்கள் உடைந்து சிதையட்டும்.

பாணர்கள்,பச்சை மீன்களை பிடித்து வைக்கும் பாத்திரம் எப்படி நாட்பட்ட அந்த மீன்களின் வாசத்தோடு ஒருவித வெறுப்பைத் தருமோ, அப்படித்தான் உன்னோடான என் காதல், மிகுந்த வெறுப்பைத் தந்துவிட்டது. உன்னைப் பெறமுடியாமல் போனதால் என் உயிர் இருந்து என்ன பயன், அழிந்து போகட்டும்.

என விரக்தியும், சாபமுமாக மிகுந்த கோபத்தோடு சொல்கிறாள் பாருங்கள்.

பாடல் :

சுரம்செல் யானைக் கல் உறு கோட்டின்
தெற்றென இறீ இயரோ ஐய! மற்றுயாம்
நும்மொடு நக்க வால்வெள் எயிறே
பாணர்
பசுமீன் சொரிந்த மண்டை போல
எமக்கும் பெரும்புலவு ஆகி
நும்மும் பெறேஎம் இறீஇயர் எம் உயிரே
.

-வெள்ளி வீதியார்
குறுந்தொகை பாடல் : 169.

*கல் உறு – பாறையில் உடைந்த தந்தம் ; தெற்றென – விரைவாக ; இறீ இயர்- முறிந்து/சிதைந்து போவதாக; மண்டை – பாத்திரம் ;

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை

ஓவியம்

சிற்பம்

குழி