Homeசிறுகதைகள்காட்சிப்பிழை

காட்சிப்பிழை

“அந்த மூத்த, முக்கியப் படைப்பாளி, உங்கள் பெயர் உட்பட இன்று இருக்கும் சிலரின் பெயர்களைத் தவிர்த்து, குறிப்பிட்ட சிலரை மட்டுமே சொல்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“அவர் எப்போதும் குனிந்தே பார்ப்பதால், தன் காலடியில் கிடப்பவர்களையே அவரால் பார்க்க முடிகிறதுபோல. கொஞ்சம் நிமிர்ந்தால் எதிரில் நிற்பவர்களும் தென்படுவார்கள். நிமிரக் காலதாமதமானால், நன்றாக நிமிர்ந்து வளைந்து வான் நோக்கிப் பார்க்கும்போது, நான் தெரிவேன்.”

“கட்… கட்…” என்ற சத்தம் கேட்டதும் அதுவரை இருந்த இறுக்கத்தைத் தளர்த்திக்கொண்ட அரங்கம், இயக்குநரின் கரவொலியைத் தொடர்ந்து கலகலவென ஆர்ப்பரித்தது.

இயக்குநர் “எங்கய்யா நம்ம டயலாக் ரைட்டர்” என முகமெல்லாம் சிரிப்பாகக் கேட்க, சற்றுத் தள்ளி, உதவி இயக்குநரோடு நின்றிருந்த முத்து அங்கிருந்தே கையைக் காட்டி நெஞ்சில் பதித்துச் சிரித்தான்.

இயக்குநர் அவனிடம் கட்டை விரலைக் காட்டி, “என்னய அவாய்டு பண்ணுன எல்லாருக்கும் இதான்ய்யா பதில்ன்ற மாதிரி இந்த சீன்ல வச்சுட்டேன், ரொம்ப நல்லா வந்துருக்கு தம்பி, திரைவீரன் சொன்னான் உங்களப்பத்தி, சூப்பர்” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தி விட்டு நகர்ந்தார்.

அடுத்த காட்சியை எடுக்க எப்படியும் மூன்று மணி நேரம் ஆகிவிடும் என்பதை இந்த இரண்டு மூன்று வருட அனுபவங்களில் அறிந்திருந்த முத்து, தன்னுடன் நெருக்கமாக இருக்கும் உதவி இயக்குநர் திரைவீரனுடன் தேநீர் அருந்த ஒதுங்கினான்.

‘‘சார்” என திரைவீரனை நோக்கி சற்று பயத்துடன் இழுத்தவருக்கு வயது எப்படியும் ஐம்பதுகளின் மத்தியில் இருக்கும். அவரைப் பார்த்ததும் ஒரு நொடி திகைத்து யோசிக்க, “பா…ஸ்கரன் சார், டாக்டர் சார் சொல்லிவிட்டாரே…” என்றார்.

“பாஸ்கரன். ஆமா… பாஸ்கரன்… இப்ப புரொடக்‌ஷன் சாப்பாடு வந்துருச்சு பாருங்க, போய் சாப்ட்டு வெய்ட் பண்ணுங்க, கூப்புடுறேன்.”

“காலைல இருந்து அஞ்சுதடவ சாப்ட்டேன் சார்” எனச் சிரிக்க, அதற்கு எவ்வித அதிர்ச்சியும் அடையாத திரைவீரன், “போய் டீ சாப்டுங்க” என்றான். அவர் பதிலுக்குக் காத்திராமல் முத்துவுடன் இணைந்து நடக்கத்தொடங்கினான். நான்கைந்து அடிகள் எடுத்து வைத்த முத்து, மெதுவாகத் திரும்பிப் பார்த்தான்.

“இன்னும் நம்மளையே பாத்துட்டு நிக்கிறானா அந்தாளு?”

திரைவீரன் தன் கையில் இருக்கும் பரீட்சை அட்டையில் சொருகப்பட்ட தாள்களைப் பார்த்து, கேட்டுக்கொண்டே நடந்தான்.

காட்சிப்பிழை..! - சிறுகதை
காட்சிப்பிழை..! – சிறுகதை

“ம்ம்.”

“அப்ப அந்தாளு சினிமாக்கு சரிப்பட மாட்டான்.”

தேநீரிலிருந்து எழுந்த மென் ஆவி மடங்கி மடங்கி மேல் எழுவது விளக்கிலிருந்து கிளம்பும் புகை போல் தெரிந்தது முத்துவிற்கு. கூடவே, திருக்கார்த்திகை அன்று வரிசையாக அகல் விளக்குகளை வைத்து ஒரு திரியின் நெருப்பிலிருந்து தொட்டுத் தொட்டு தீ வளர்த்த அருணாவின் முகம் நினைவில் சுடர்ந்தது.

“யோவ், குடிய்யா… அந்தாள யோசிச்சுக்கிட்டு இருக்கியா?”

“சேச்சே… என் ஆள” முத்துவிற்குச் சொல்லும்போதே சிரிப்பும் சிறு நாணமும் படர்ந்தது.

“லவ் மூட் ஸ்டார்ட் ஆகிருச்சா” எனச் சிரித்த திரைவீரன் அனிச்சையாகத் திரும்பிப் பார்க்க, அதே இடத்தில் நின்று இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார் பாஸ்கரன். அவர் பார்வையிலிருந்து சட்டெனத் திரும்பிக்கொண்டான்.

“நீ எழுதுனதுலயே இன்னைக்கு எடுத்த சீன் வசனம்தான் முத்து டாப்பு.”

ஆமோதிப்பது போல் தலையை ஆட்டிய முத்து, தேநீரை சுவைத்தான். வழக்கத்தைவிட கூடுதலாக ருசித்தது. மனம் நிறைவாக இருந்தது.

“ஆமா எழவு, பத்து இருவது பேரா சேர்ந்து தனக்கான ஆளுகள மட்டும் புரமோட் பண்ணிக்கிட்டே இருக்கானுக நம்ம பீல்டுல.”

முத்து ‘இல்லை’ என்பதுபோல் தலையாட்டி, தேநீரின் அடிக்கசடில் கொஞ்சமாய் ருசித்துவிட்டு மீதியை வைத்துக்கொண்டே சொன்னான்.

“சினிமால மட்டும் இல்ல தெர, உலகத்துல இருக்குற எல்லாத் துறையிலயும் இது இருக்கு. அந்தந்த துறைல யார் மூஞ்சில முழிக்கிறோம்றதப் பொறுத்து அவனவன் பேரு புகழ், நாசம், சர்வநாசம் எல்லாம் நடக்கும்.”

“மூஞ்சில முழிக்கிறதா?”

“ஆமா, அந்தா, அவரு… உம் மூஞ்சில முழிச்சிருக்காரு பாரு. யாரோ ஒனக்குத் தெரிஞ்சவரு சொல்லி, படத்துல எப்பிடியாவது ஒரு சீன்லயாச்சும் நடிச்சிரணும்னு காலைல இருந்து இங்கயே நிக்கிறாருல்ல.”

“ஓ… இப்ப புரியுது. இப்ப நான் பாத்து ஒரு சீன்ல உள்ள நொழச்சுவிட்டு, அதுல கொஞ்சம் பேரு வந்துச்சுன்னா நமக்குத் தெரிஞ்ச ஆட்கள் குரூப்புக்குள்ள புகுந்த பிஸி ஆகிருவாருன்ற, அதான, சரியாப் புடுச்சனா நீ சொல்றத.”

“பக்கா, நடுவுல `நமக்குத் தெரிஞ்ச ஆட்கள் குரூப்பு’ன்னு சொன்னியே, அதான் மூஞ்சில முழிச்சு, குரூப்புக்குள்ள சுத்துறது.”

“சர்த்தான்” என்றவன் சீன் பேப்பரைப் பார்த்து, ‘‘ஐயய்யோ, இதுவா அடுத்து எடுக்கப்போறோம்! இங்க பாரு, ஷாட் பிரிக்கிறதுக்குள்ள அந்துரும் போலயே, வா வா” என அட்டையைக் காட்ட, இருவரும் ஒரு திடீர் பரபரப்புக்குள் ஓடிப் புகுந்தார்கள். அந்த இடமும்தான்.

காலிசெய்யப்பட்ட திருமண மண்டபத்தின் மணமகள் அறையில் மறந்து விடப்பட்ட கண்ணாடி வளையல், கூட்டும்போது சுழன்று நிலைபெற்று உடைவது போல் நின்றிருந்தார், பாஸ்கரன்.

அவரைச் சுற்றிலும் இருந்த அனைத்துப் பொருள்களையும் சுருட்டி நிமித்தி எடுத்துப் போய்க்கொண்டிருந்தார்கள். அந்த இடம் மீண்டும் வெட்டவெளியானது. இருள் சூழ்ந்து இருந்த இடத்தின் ஓரத்தில் சிறிய மஞ்சள் விளக்கு ஒன்று பரிதாபமாக வெளிச்சத்தை உமிழ்ந்துகொண்டிருந்தது.

பாஸ்கரன் ஒவ்வொரு இடமாகப் பார்த்தார். ஒளிப்பதிவுக் குழு மட்டும் எஞ்சி இருந்தது. அவர்களும் எல்லாவிதமான உபகரணங்களையும் பெரிய பெரிய மூட்டைப்பைகளில் வைத்துக் கட்டிப் புறப்படத் தயாரானார்கள். அதில் ஒருவர் பாஸ்கரன் நிற்பதைப் பார்த்து, “என்னா, மீட்டர் போடலயா” எனக் கேட்டார்.

பாஸ்கரன் புரியாமல் குழப்பமாகப் பார்த்ததும், “காசு வாங்கலயா, புரொடக்‌ ஷன்ல எல்லாரும் போய்ட்டாங்களே” என்றார். அப்போதும் ஒன்றும் புரியவில்லை பாஸ்கரனுக்கு. எங்கிருந்தோ திரைவீரனின் சத்தம் கேட்டுக்கொண்டிருக்க, அதுவரை அடைபட்டிருந்த இனம்புரியாத ஒன்றிலிருந்து கொஞ்சம் விடுபட்டு, திரைவீரன் பேசிக்கொண்டிருக்கும் திசை நோக்கி ஓட்டமும் நடையுமாக ஓடினார்.

அங்கே திரைவீரன் தன் முன்னால் நின்று கொண்டிருந்த சிலரைத் திட்டி, மறுநாள் அப்படியான தவறுகள் ஏதும் நிகழக்கூடாது என விளக்கிக்கொண்டிருந்தான். சற்றுத் தள்ளி ஒரு நாற்காலியில் அமர்ந்து, அலைபேசியில் டார்ச் வெளிச்சம் ஏற்படுத்தி தன் கையில் இருந்த தாள்களைப் படித்துக்கொண்டிருந்தான் முத்து.

பாஸ்கரனுக்கு முத்துவிடம் போய்ப் பேசவேண்டும் போல் இருந்தது. இன்ன காரணம் என்று எதுவும் தெரியவில்லை அவர் மனதிற்கு. ஏனோ திரைவீரனைவிடவும் முத்துவைப் பிடித்துப்போனது. மெதுவாகச் சென்று அருகில் நின்றார். அவரைப் பார்த்ததும் முத்துவிற்கு ஒருமாதிரி ஆகியது. அருகில் கவிழ்த்துவைக்கப்பட்டிருந்த நாற்காலியை எடுத்துப்போட்டான். அவர் பதறிப் பின்வாங்க, “அட, ஒக்காருங்க சார்” என்றான்.

அவர் தயக்கமாக அமரப்போக, திரைவீரன் பேசி முடித்துத் திரும்பியவன் அவரைப் பார்க்க, அமரப் போனவர் அப்படியே அதே பாகையில் இடுப்பை அரை நொடி வைத்திருந்து சட்டென நகர்ந்து நின்றார்.

திரைவீரனுக்கு ஏற்பட்ட தர்மசங்கடத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சற்றுக் கடுகடுப்பாக முகத்தை வைத்துக்கொண்டே அருகில் வந்து அந்த நாற்காலியில் அமர்ந்தவன், “சார், நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணணும், சரியா!” என்றான்.

அவர் ‘சரி’ என்று சொல்லித் தலையாட்டினார். ஆனால் அந்த சரி என்ற சொல் அவரிலிருந்து வெளியேறி எவருக்கும் கேட்கவில்லை.

ஒருவித அமைதி சூழ்ந்தது. அவ்வளவு வெளிச்சமும் பரபரப்புமாக இருந்த இடம் இப்போது இருளும் அமைதியும் சூழ்ந்து சூன்யத்தன்மையைக் கொண்டுவந்திருந்தது, பாஸ்கரன் மனதிற்குள்.

தொண்டையைச் செருமிக்கொண்ட திரைவீரன், “நீங்க ஒரு ரெண்டு நாள் கழிச்சு வாங்க, எங்க வரணும்னு சொல்றேன்.”

பதில் வரவில்லை. ஏதேதோ திட்டங்கள் வகுத்துக்கொண்டிருந்த மனதிற்கு, அதற்கு நேரெதிராக ஒன்றைக் கேட்க நேரிட்டதும், தடுமாறியது.

முத்து அவரை ஏறிட்டான். தனக்கு இடப்பக்கமாக கவிழ்த்து வைக்கப்பட்ட ஸ்டூலை நிமிர்த்தி, அவர் பக்கமாகத் தள்ளினான்.

இம்முறை சட்டென சரிந்து அமர்ந்துகொண்டார்.

“சார், வண்டி வந்துருச்சு” என்ற குரல் கேட்க, திரைவீரன் அமர்ந்தவாறே சோம்பல் முறித்தான். அன்றைய நாளின் அவ்வளவு அலுப்பும் சடசடசென உடலில் இருந்து உடைந்துவிடுபட்டன.

“கிளம்பலாமா முத்து, இல்ல நீ உன் வண்டில வந்திட்டியா?”

“ஆமா வண்டில வந்துட்டேன், நாளைக்கு என்ன, நைட்ஷூட்தான?”

“ஆமாப்பா முத்து. நாளைக்குத்தான் நம்ம வாழ்க்கையே இருக்கு, கரெக்ட்டா வந்துரு.”

முத்து சிரித்தான். “அட கொஞ்சம் அமைதியா இருங்க இயக்குநர் சார். நாளைக்கு நீ எப்பிடியும் சொல்லி அசத்திருவ அவங்கள, நியூஸ்ல சூப்பர் ஹீரோயின் நடிக்கும் திரைவீரனின் புதிய படம்னு அப்பிடியே பத்திக்கும்ல ஊரு.”

நடிகையின் பெயரைக் கேட்டதும் பாஸ்கரன் சட்டென கண்கள் விரிய, மகிழ்ச்சியாக இருவரையும் பார்த்தார்.

“ஆமா முத்து, இதுக்காகத்தான இவ்வளவும். நாளைக்கு மட்டும் ஓகே ஆகிருச்சுன்னா, அந்தம்மாவோட புரொடியூசர் ரெடியா இருக்காரு” கையைச் சொடுக்கிக்கொண்டே, “அடிச்சு மேல வர்றோம், முதல் அடியே அப்பிடி வைக்கிறோம் முத்து.”

மிகுந்த நம்பிக்கையும் உற்சாகமுமாகச் சொன்னவன், பாஸ்கரனைப் பார்த்ததும் சற்றுக் குரலைத் தாழ்த்தி, இரண்டு விரல்களைக் காட்டி, “ரெண்டு நாள்ல சொல்றேன், வாங்க” என நினைவூட்டி விட்டுப் போனான்.

திரைவீரன் போவதை சற்று வெறுப்பாகப் பார்த்தார் பாஸ்கரன்.

“சார், என்ன ஆச்சு?”

பாஸ்கரன் முத்துவை நிமிர்ந்து பார்த்தார்.

“டாக்டர் சார்தான் ‘சும்மா ஒரு சீன் தானாம்… போய்ப்பாரு, ரொம்ப ஆசப்படுறயே’ன்னுதான் சிபாரிசு பண்ணுறேன்னாரு, இப்ப ரெண்டு நாள் எங்க போறதுன்னு தெரில, ஊருக்குப் போக இப்ப பஸ் இருக்குமா தம்பி?”

“நைட்டு என் ரூம்ல தங்கிக்கோங்க. காலைல பாக்கலாம் என்ன ஏதுன்னு.”

பெரிய கூடம் போன்ற நீளமான இடம். தனியாக அறை என்று ஏதுமில்லை. குளித்து முடித்து வந்த முத்து, கட்டிலில் சரிந்து, பக்கவாட்டில் திரும்பி கையைத் தலைக்கு வைத்து பாஸ்கரனைப் பார்த்தான். எதிரே சுவரில் சாய்ந்து, கால்களை நீட்டி அமர்ந்திருந்தார். அருகில் படுக்கை சுருண்டு இருந்தது. எந்நேரமும் தூங்கிவிடலாம்.

காட்சிப்பிழை..! - சிறுகதை
காட்சிப்பிழை..! – சிறுகதை

“ரொம்ப நன்றி தம்பி. ரெண்டு நாள்னு சொன்னதும் கொஞ்ச நேரத்துல தல சுத்திருச்சு எனக்கு.”

முத்து மெலிதாகச் சிரித்தான்.

“இப்பிடி ஒங்களமாதிரி இந்த சுவத்துல எத்தன பேர் சாய்ஞ்சு இதச் சொல்லிட்டுப் போயிருக்காங்க தெரியுமா? சினிமா மேல இருக்குற ஆசைல இதப்பத்தி பெருசா எதுவும் தெரியாம வந்துர்றது. அப்பறம் என்னன்னு தெரிஞ்சு, தாக்குப்பிடிக்க முடியாமப் போயி, ஏதாவது தப்பா சொல்றது.”

“ஆமா தம்பி, ஆசதான். ஒரே ஒரு சீன்லயாச்சும் தலையக்காட்டிட்டா நம்ம திறமையால அப்பிடியே மேல வந்துரமாட்டமான்னுதான். வந்துட்டா எங்க ஊருக்குல்ல கெத்தா சுத்தலாம் தம்பி.”

முத்து அமைதியாகப் பார்த்தான்.

“அப்பா எங்கூரு நாடகத்துல எல்லாம் நடிப்பாரு தம்பி. எப்பிடியாச்சும் சினிமால நடிச்சிரணும்னு வந்து நெனச்சத சாதிக்கவும் செஞ்சுட்டாரு.”

முத்துவிற்கு ‘அட’ என்ற வியப்புத் தட்டியது.

“என்ன படத்துல நடிச்சாரு, பேரு?”

“அங்கதான் விசயமே, ரெண்டு படம் நடிச்சாரு. ஒருபடத்துல இந்தா ரெண்டு பக்கமா தெறக்குற அறைக்கதவு இருக்கும்ல, போலீஸ் ஸ்டேஷன்ல அதிகாரி அறை வாசல்ல. அதுல நிப்பாரு. கால் மட்டும்தான் தெரியும். இன்னொரு படத்துல போர்ல செத்துக்கெடக்குற ஆள்ல ஒருத்தரா, முதுகுல அம்பு பாஞ்சு அப்பிடியே கெடப்பாரு.”

முத்து ஒன்றுமே சொல்லாமல் அவரைப் பார்த்தான்.

“இப்ப வர ஊர்ல எங்கப்பாக்கு சினிமாக்காரர்னுதான் பேரு தம்பி. நானும் ஊர்ல கோயில் திருவிழால எல்லாம் நடிச்சிருக்கேன். எனக்கும் சினிமாக்காரன்னு பேர் வாங்கணும் தம்பி, அவ்ளோதான்.”

முத்து சிரித்தான். ஆனால் அந்தச் சிரிப்பு அவரைக் காயப்படுத்திவிடக்கூடாது என மிகக்கவனமாகத் திரும்பிக்கொண்டான்.

“ஒண்ணு சொன்னா என்னய தப்பா எதுவும் எடுத்துக்க மாட்டீங்களே தம்பி?”

முத்துவின் பார்வையில் நம்பிக்கை வந்து தொடர்ந்தார்.

“டாக்டர் சார்தான் தம்பி இந்தத் திரைவீரன் குடும்பத்துக்கு அவ்ளோ உதவிங்க செஞ்சவரு. அவரு சொல்லிவிட்டா அப்பீலே இருக்காதுன்னுதான் வந்தேன். ஆனா சினிமா அந்தப் பையன மாத்திருச்சில்ல. பெரிய டைரக்டர்ட்ட இருக்கோம்ன்ற `இது’ தெரியுது. அந்த இது தெரிஞ்சது தம்பி. அடுத்து அவரே ஏதோ படம் பண்ணுறாரு… அதுவும் நாளைக்கு நம்ம ஹீரோயினிய வேற பாக்கப்போறீங்க, இன்னைக்கு சாப்பாடு போட்ட எடத்துல அதான் ஒரே பேச்சு. அப்ப சர்த்தான் இனிமேல்ட்டு தலகீழாத்தான் நடப்பாருன்னு தோணுச்சு, எல்லாம் சினிமா படுத்துற பாடு.”

முத்து சிரித்தான். அவர் கண்களை நோக்கிச் சிரித்தான். பாஸ்கரன் அமர்ந்திருக்கும் இதே இடத்தில் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு முத்துவும் திரைவீரனும் அமர்ந்திருந்த காட்சி அவன் கண்களில் தெரிந்தது.

“நீ எழுது, நான் எடுக்குறேன்” என்ற சொற்கள்தான் திரைவீரன் முத்துவிடம் அதிகம் சொன்னவை.

இருவரும் ஒருவருக்கொருவர் முழித்துக்கொள்ள உதவியது, தங்கவேலு அண்ணன்தான். மூத்த உதவி இயக்குநர், இணை இயக்குநர் என இயக்கத்தின் அத்தனையிலும் முக்கியமாகச் சுழன்றவர். முத்துவின் சிறுகதை ஒன்றைப் படித்துவிட்டு அவனைத் தேடிப்போய்ப் பார்த்துப் பேசி சினிமா எனும் உலகத்தை அவனுக்குத் திறந்து வைத்தவர். அந்த உலகில் ஓரிரு நாட்கள் முன்னர் புகுந்திருந்த திரைவீரனையும் தங்கவேலு அண்ணன்தான் முத்துவுக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்.

“நாம எழுதுறதப் படிக்கிற ஒரே ஒரு ஆளாவது ஒரே ஒரு சின்ன விசயத்த கத்துக்கிட்டா, தன்ன மாத்திக்கிட்டாப் போதும்” என்ற முத்துவின் சொற்கள்தான் திரைவீரனின் லட்சியமும் என்பதால் ஒன்றானார்கள். இன்று வரை ஒன்றாகவே பயணிக்கிறார்கள். வானத்தில் நிற்பார்கள். அடுத்த நொடி பள்ளத்தில் கிடப்பார்கள். எல்லாமே ஒன்றுதான் அவர்களுக்கு. எல்லாமே அந்த அரைநொடித் திரையில் தென்படும் பெயருக்காகத்தான்.

சொல்லப்போனால் முத்துவிற்கு சினிமா அவ்வளவு பிடித்தம் இல்லை. எழுதிக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பான். ஆனால் திரைவீரனுக்கு நினைப்பும் மூச்சும் சினிமாதான். வந்த புதிதில் ஆறு நாட்கள் தொடர்ந்து பட்டினி கிடக்க நேரிட்டதை அடிக்கடி சொல்லுவான். ஆனால் ஒருமுறைகூட சினிமாவைப் பழித்ததில்லை. அருண் என்ற பெயரை திரைவீரன் என்று மாற்றி வைத்துக்கொண்டதன் காரணம், ஏதே ஓர் இயக்குநர், “ஆமாடா ஊர்ல இருந்து பெரிய வீரனுக மாதிரி கிளம்பி வந்துருங்க, இங்க இருக்குற ஆளுங்களே சிங்கி அடிக்கிறோம்” எனத் திட்டி அனுப்ப, அந்த வீரன் எனும் சொல் சட்டெனப் புகுந்துகொண்டது என்று முத்துவிடம் சொல்லிச் சிரிப்பான்.

“ஏன் சினிமாக்கு வந்தன்னு கேட்டா, அதுக்கு எந்த பதிலும் இல்லைன்னு சொல்றான் பாரு, அதுதான் உண்மை. அவன்தான் உண்மையான சினிமாக்காரன். இதுக்காக, அதுக்காகன்னு காரணத்தோட எல்லாம் சினிமாவுக்கு எவனுமே வரமாட்டான். நாஞ்சொல்றது, உண்மையான கலைஞன் காரணத்தோட வரமாட்டான். அது ஒருமாதிரி நம்மள இருக்க விடாது, ‘போ, இங்க என்ன பண்ணுற, போடா, இது உன் இடம் இல்ல, சினிமாதான் உனக்கு’ அப்டீன்னு தொரத்தும். ஏன்னு கேட்டா பதில் இருக்காது… இருக்கக் கூடாது” என ஒவ்வொரு முறை திரைவீரன் சொல்லும்போதும் முத்துவிற்கு அவன் தோளைத் தொட்டு அணைத்துக்கொள்ளத் தோன்றும்.

“ஆக, சினிமாக்காரன்னு ஊர்ல உங்கள சொல்லணும், அதுக்காக ஒரு சீன்ல நடிக்கணும்” பாஸ்கரனைப் பார்த்து முத்து சிரித்தான்.

“நீங்க மனசு வச்சா நடந்துரும் தம்பி, அவரு மேல நம்பிக்க இல்ல, இன்னைக்கு நாள் முழுக்க, சாப்டுங்க, டிபன் தின்னுங்க, டீ குடிங்கன்னு ஓட்டிட்டாப்ளயே என்னய… சினிமாவுல இம்புட்டு திமிர் கூடாதில்ல தம்பி, அதுவும் பழச மறக்கக்கூடாதில்ல, அந்த டாக்டர் எம்புட்டு முக்கியம் தெரியுமா?”

முத்து பதில் சொல்லாமல் நிமிர்ந்து மேற்கூரையை நோக்கினான். தூங்கிப்போனான்.

மிகப்பெரிய வளாகத்தில் வெளிச்சம் அளவிற்கு அதிகமாக இருந்தது. முத்துவிற்காகக் காத்திருந்த திரைவீரன், முத்துவைப் பார்த்துக் கையைத் தூக்கினான். பதற்றமாக இருக்கிறான் என முத்துவிற்குத் தெரிந்தது.

முத்துவிற்கு அருகில் நடந்து வரும் பாஸ்கரனைப் பார்த்து லேசாகக் குழப்பம் அடைந்தான்.

“ரெண்டு நாள்தான, அதான் ரூம்ல இருக்கச் சொன்னேன். நேத்து நாம பேசிட்டு இருந்தத கேட்டுருப்பார் போல, அந்த நடிகைய தூரத்துல இருந்தாவது ஒரு தடவ பார்த்துக்குறேன்னாரு” முத்து சிரித்தான்.

திரைவீரன் பாஸ்கரனை ஏற இறங்கப் பார்த்தான். பாஸ்கரனின் உடல்மொழியில் முந்தைய நாள் இருந்த பதற்றம் சற்றுக் குறைந்து இருந்தது போல் பட்டது.

திரைவீரன் அப்படித் தன்னைப் பார்த்தது பாஸ்கரனுக்கு சற்று உள்ளூர சினத்தை ஏற்படுத்தியது.

ஊரிலிருந்து கிளம்பி வரும்பொழுது திரைவீரன் எனும் பெரும் பிம்பம் ஒரே நாளில் அவருக்கு வேறு விதமாக மாறியிருந்தது போல் நினைத்தார். திரைவீரனைத் தவிர்த்து முத்துவைப் பார்த்து, “தம்பி இந்தாங்க” எனத் தேநீரை நீட்டினார்.

‘‘உள்ள போய்ட்ருக்கு, ஏழாவது டேக்காம், ப்ச்”

திரைவீரன் பதற்றமாகச் சொல்ல, முத்து உள்ளே எட்டிப்பார்த்தான். தென்னிந்தியாவையே கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை, அங்கே அவ்வளவு அருகில் இருப்பதை, தான் அங்கு நிற்பதை பாஸ்கரனால் நம்பமுடியவில்லை. முகம் மலர எட்டிப்பார்த்தார்.

திரைவீரன் நடிகையின் மேலாளரைத் தேடினான். எங்கிருந்தாலும் தெரியும்படி வண்ணமயமான சட்டை அணிபவர் என்பதால் சட்டென கூட்டத்தில் தெரிந்தார். அருகில் போய்ச் சொல்லிவிட்டு முத்துவிடம் வந்தவன்,

“முத்து, நீயே சொல்லிரு, அந்தம்மா கேரக்டர மட்டும் சொல்லிரு, சீக்கிரம் சொல்லி முடிச்சிரு, சரியா. நான் இன்னைக்கு சொதப்பிருவேன்” என்றான்.

அவன் தோளைத் தொட்ட முத்து, “அட தெர என்னாச்சு, முதல் படம்னதும் ஒனக்கே இப்பிடி ஆகுது பாத்தியா, அதான் சினிமா” என்றான்.

கலர்சட்டை கைகாட்ட, முத்துவும் திரைவீரனும் கேரவன் நோக்கிப் போனார்கள்.

சரியாக இருபது நிமிடங்கள் நடிகையிடம் விளக்கினான் முத்து. அவர் சிரித்துக்கொண்டே, ‘‘நீங்க ரைட்டர்தான, டைரக்டர் மாதிரி சொல்றீங்க” எனச் சொல்லி, திரைவீரனைப் பார்த்துச் சிரித்தாள்.

“எனக்கு ஓக்கே, மேனேஜர்ட்ட பேசிருங்க” என்றதும் முத்துவிற்கு “ஆ…” எனக் கத்தவேண்டும் போல் இருந்தது. திரைவீரனைப் பார்த்தான். “தேங்க்ஸ் மேடம்” என்று சொன்ன திரைவீரன் கீழே இறங்கினான்.

முத்துவின் குதூகலம் வெளியில் காத்திருந்த பாஸ்கரனையும் தொற்றிக்கொண்டது.

“சூப்பர் தம்பி, ஆக வச்சுட்டீங்களா… நீங்க சூப்பர் தம்பி” சொன்ன பாஸ்கரனை சட்டை செய்யாமல்,

‘‘ஆமா தெர, இதுவே பாதி ஜெயிச்ச மாதிரி… இவங்க பேரப்போட்டாலே போதும்ல. வா, இன்னைக்கு நான் பார்ட்டி வைக்கிறேன்” என திரைவீரனின் கையைப் பற்றிக் குலுக்கினான்.

பாஸ்கரன் ஏதோ தானே வென்றுவிட்டதாக முத்துவின் கைகளைப் பற்ற எத்தனித்தார்.

“முத்து” என்றான் திரைவீரன்.

நிமிர்ந்து திரைவீரனின் முகத்தை உற்றுப்பார்த்த முத்து,

“சொல்லு தெர.”

“ஒண்ணும் இல்ல… காலைல கிளம்பி வரும்போது போன் வந்துச்சு, அப்பா எறந்துட்டாருன்னு. இவ்ளோ நாள் காத்திருந்தது இந்தம்மாட்ட சொல்றதுக்குத்தான். அதான்… உங்கிட்ட சொல்லிருந்தா, நீ இப்ப சொன்னமாதிரி கதைய சொல்லியிருக்க மாட்டன்னு தெரியும். என்னய ஒரே அழுத்துல ஊருக்குக் கூட்டிப்போய் விட்ர முடியுமா, அப்பாவப் பாக்கணும்” என்று சொல்லிக்கொண்டிருந்த திரைவீரனைத் தரதரவென இழுத்துக்கொண்டு போனான் முத்து.

திகைத்து, திரைவீரனின் முதுகையே பார்த்துக்கொண்டிருந்தார் பாஸ்கரன்.

**

நன்றி : ஆனந்த விகடன்

ஓவியங்கள் : எம்.ஜெயசூரியா.

Previous article
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை