Homeசிறுகதைகள்சொம்புநீர்ப்பூ

சொம்புநீர்ப்பூ

மூன்றாவது முறையாக அப்படிச் செய்தாள் சுசி. இம்முறை இன்னும் கொஞ்சம் அருகில் குனிந்து ஆட்காட்டி விரலின் பின்பக்கத்தைக் குழந்தையின் மூக்கு நுனிக்கு அருகில் வைத்துப்பார்த்தாள். மிக மெலிதாக மூச்சுக் காற்று வந்தது. ஆனாலும் சற்று நேரம் வைத்திருந்து உறுதி செய்துகொண்டாள். அவ்வளவு அருகில் பார்க்கும்போதுதான் குழந்தையின் மார்பு மிக மெலிதாக விம்முவது தெரிந்தது. நல்ல உறக்கத்தில் இருக்கிறது குழந்தை. அவளுக்கு இப்போதெல்லாம் இப்படி அடிக்கடித் தோன்றுகிறது. உறங்கும் குழந்தை ஒருவேளை இறந்துவிட்டதோ என சோதித்துப் பார்ப்பதை ஏதோ அடுப்பில் காயும் வெந்நீர் பதத்தை விரல்விட்டுப் பார்ப்பதுபோல் செய்கிறாள். காரணமேயில்லாமல் அமர்ந்த இடத்தில் இருந்து எழுந்து ஓர் எட்டு சமையற்கட்டிற்குப் போய்விட்டு வருவது. வந்தவுடன் இப்படித் தொட்டுப் பார்ப்பது, சலனமே இல்லாமல் குழந்தை உறங்குவதையே வைத்தகண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருப்பது என அவளுடைய செயல்பாடுகள் இயல்பிலிருந்து சற்று விலகத் துவங்கி இருப்பதை அவளால் உணரமுடிந்தது. இன்றைக்குக் கொஞ்சம் கூடுதலாகவே ஒருவித பதற்றத்தை உணர்ந்து கொண்டு இருந்தாள். இந்தப் படபடப்பிற்குக் காரணம், இன்றைக்கு அவளைப் பார்க்க வரப்போகும் செந்தில்குமாரி. அடுத்தடுத்தத் தெரு, பால்வாடியில் இருந்து பத்தாம் வகுப்பு வரை அடுத்தடுத்து ஒட்டிக்கொண்டு அமர்ந்தே காலத்தை ஓட்டியவர்கள்.  மின்கம்பங்களில் இருந்து நீண்டு பாயும் மின்கம்பிகளில் அமர்ந்திருக்கும் இரண்டு பறவைகளைப் போல்தான் இருவரும். சதாசர்வ காலமும் இணைந்தே சுற்றுவார்கள். நீண்ட மைதானத்தின் ஒருமூலையில் இருந்து மறுமூலைக்கு நடந்து சென்றுவருவார்கள். மதியவுணவு முடித்த கையோடு, தோளால் இடித்து விலகி பின்னர் தோள்களை ஒட்டிக்கொண்டு சிரித்துப் பேசிக் கடக்கும் அந்த மைதான நடையை ஒருபோதும் நடக்காமல் இருந்ததில்லை. சுசியின் வாயிலிருந்து ‘ப்ச்’ எனும் சத்தம் அனிச்சையாக எழுந்தது. சட்டென குழந்தையைப் பார்த்தாள். நல்லவேளை அவளுடைய ப்ச் சத்தம் குழந்தையின் உறக்கத்தைக் கெடுக்கவில்லை. ஆனால், அவளிடம் இருந்து பெருமூச்சு லேசாகச் சலனம் ஏற்படுத்தியது. குழந்தையின் முகம் கொஞ்சமாய் சுருங்கி இயல்பிற்குப் போனது. சுசிக்கு சிரிப்பு வந்தது. அள்ளி எடுத்து மூக்கைக் கடிக்க வேண்டும் போல் இருந்தது. கன்னத்தைக் கடிக்க வேண்டும் போல் இருந்தது. இப்படி நேரங்கெட்ட நேரத்தில் உறங்குமா இந்தக்குழந்தை என்று தோன்றியது. ஒருவேளை அம்மாவோ அத்தையோ உடனிருந்தால் இதையெல்லாம் சொல்லியிருப்பார்கள். இப்படி யாருமே இல்லாமல் குழந்தையின் முன்னர் அமர்ந்திருப்பதை சற்று முன்னர் போல் அப்போதும் உணர்ந்தாள். அடிக்கடி இந்தத் தனிமையை அவள் உணர்கிறாள். வீட்டில் அத்தனைக் கூட்டத்திற்கு நடுவே இருந்தவள். வளர்ந்தவள். அப்போது கூட்டம் எனில் இப்போது தனிமை எனும் கணக்கை காலம் அவளிடம் நேர் செய்துகொண்டிருந்தது போலிருந்தது. காய்ய்ய்ய் எனும் சத்தம் மிக மெலிதாகக் கேட்டது. நான்கைந்து தெருக்கள் தள்ளி வந்து கொண்டிருக்கிறார் எனும் அறிவிப்பு. மணி மதியம் ஒன்று ஆகிவிட்டதா எனப் பார்த்தாள். நேரம் போகவே இல்லை என்று அதுவரை நினைத்தவளுக்கு சட்டென மதியம் ஆகிவிட்டது திகைப்பைத் தந்தது. மதியத்தின் அமைதியின் மீது கொஞ்சமாக காய்க்காரரின் விற்பனைச் சத்தம் படரத் துவங்கியது. குழந்தை தூங்கட்டும். வாசலில் போய் வாங்கிவந்துவிடலாம் என பக்கவாட்டில் திரும்பி கூடை இருக்கிறதா எனப் பார்த்தாள். கூடையில் முந்தைய நாள் வாங்கியவை கொஞ்சமாய்க் கிடப்பதைப் பார்த்தாள். சுவரில் சாய்ந்துகொண்டாள். செந்தில்குமாரி வரும் நேரத்தைச் சொல்லவில்லை என்றாலும் எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும். அவளை நினைத்த மாத்திரத்தில் சுசிக்கு சிரிப்பு வந்தது. ‘பறவை போல்’ எனும் சொல் அவள் தலைக்குள் சுழன்றது. அவளுக்குள் நிறைய கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தன. மகிழ்ச்சிக்கும் திளைப்பிற்கும் ஏன் பறவையையே சொல்கிறார்கள் என்ற கேள்வி அவளை துரத்தியது. இவர்களிடம் எந்தப் பறவை வந்து சொன்னது?, பறவைகளுக்கு துக்கம் இருக்காதா? அது பறப்பது எல்லாம் மகிழ்ச்சியின் பாடலைப் பாடத்தானா? யார் உங்களிடம் அப்படிச் சொன்னது? கேள்விகள் கேள்விகள் என சுசியின் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தன. எப்போதும் பறவைகள் அழுவதில்லை என்ற வரி எவ்வளவு அபத்தமானது என்ற சினம் ஏற்பட்டது. ஏனோ ஒரு துக்கித்தப் பறவையைக் கண்டறிந்து இந்த உலகிற்கு அதன் துக்கத்தைச் சொல்ல வேண்டும் என்ற வைராக்யம் பூத்தது அவளுக்குள். அப்போதேனும் இந்த உலகம் ’ஒரு பறவையைப் போல வாழ வேண்டும் என்ற  வாக்கியத்தை விட்டொழிப்பார்களா’ எனும் ஆத்திரம் மூண்டது. குனிந்து பார்த்தவள், ஆட்காட்டி விரலை குழந்தையின் மூக்கில் வைத்துப் பார்த்தாள். குழந்தை லேசாக அசைந்துகொடுக்க சட்டெனக் கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டாள். செந்தில்குமாரி வருவதற்குள் இந்த அறையையாவது சுத்தம் செய்துவைக்கலாம் என்று நினைத்தாள். ஒருமுறை சுற்றிலும் பார்த்தாள். பெரிதாக ஒன்றும் குப்பை இல்லை. குழந்தைத் துணிகள். இரவிலும் காலையிலும் மலங்கழித்தத் துணிகள்தான். இவளுடையை நேற்றைய உடுப்புகள். அவற்றைத் துவைக்கப் போடவேண்டும் என்று நினைத்தாள். காலையில் சாப்பிட்டத்தட்டில் கைகழுவிவிட்டு சற்று நகர்ந்து அழும் குழந்தையை எடுத்துப் பால் கொடுத்திருந்தாள். அதனால் அந்தத் தட்டு அப்படியே இருந்தது. இவ்வளவுதான். எழவேண்டும் என்று நினைத்தவள் அப்படியே குழந்தைக்கு அருகில் படுத்தாள். குழந்தையிடம் இருந்து வந்த வாசனை அவளுக்கு ஒரு புன்முறுவலை ஏற்படுத்தியது. குழந்தையைத் தாண்டி தெரிந்த சந்திரனின் புகைப்படம் அந்தப் புன்முறுவலை இன்னும் அதிகமாக்கியது. திருமணம் எல்லாம் மிகக்கேவலமான ஒன்று, அசிங்கம். ஆண் பெண் இருவரும் ஒன்றாக ஒட்டுத்துணியில்லாமல் படுக்கக் குடும்பமே ஏற்பாடு செய்யும் வினோதம் என்றெல்லாம் செந்தில்குமாரியிடம் கோபமும் கிண்டலுமாகப் பேசிக்கொண்டிருந்த சுசி அதைத் தன் தந்தையிடமே சொல்வாள் என்று அவளே நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. எங்கே ஓங்கி அறைந்துவிடப்போகிறார் என வீட்டினர் நினைக்க, அறைந்தாலும் பரவாயில்லை என அவர் முன் நின்றதை நினைக்கும்போதெல்லாம் சிரித்துக் கொள்வாள் சுசி. ஒரு அறைவிட்டிருந்தார் எனில் இப்போதுவரை தன் அத்தையைப் போல் தனக்கும் காது கேட்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கும் எனத் தோன்றியது. ஆனால் அன்று அவளுடைய அப்பா தலையை ஆட்டிக்கொண்டே உள்ளே நின்ற அம்மாவைப் பார்த்துவிட்டு ஒன்றுமே சொல்லாமல் போய்விட்டது இன்று வரை அவளுக்கு வியப்புதான். செந்தில்குமாரி நம்பாமல் சுசியின் கன்னம் முதுகு என தேடிப்பார்த்தாள் அப்பாவின் கைத்தடத்தை. நம் கருத்தை நேரடியாகத் தெளிவாகச் சொன்னால் போதும் என்றெல்லாம் செந்தில்குமாரியிடம் அன்றைய நாளின் வாக்குவாதத்தைப் பற்றிச் சொன்ன அதே சுசிதான், சந்திரனின் புகைப்படம் என தன் தந்தைக் காட்டிய நொடியில் சரி என்று சொல்லிவிட்டிருந்தாள். ஏதோ ஒரு காரணத்திற்காக எங்கோ எத்திசையோ நோக்கிப் பறந்து கொண்டிருக்கும் ஒரு பறவை சட்டெனெ கீழ்நோக்கித் தாழ்ந்து இறங்கி நீர்நிலையில் நங்கூரமிட்டு பருகிவிட்டு மேலேறித் தன் திசை நோக்கி போவதுபோல் இருந்தது அவளின் அந்தச்செயல். புகைப்படம் பார்த்த நொடியில் அவளுக்குள் திருமணம் நடந்தேறி இருந்தது என்று செந்தில்குமாரியிடம் சொல்லும்பொழுது அதிகாலை மரத்திலிருந்து அத்தனைப் பறவைகளும் ஒருசேர எழுந்து கிளர்ந்து பறந்து போவதுபோல் தென்பட்டது இருவருக்கும். செந்தில்குமாரியின் மேடிட்ட வயிறைத் தொட்டுத் தடவிக்கொண்டே தனக்கும் அதுபோல் இப்படி ஆகும் என்றதும் செந்தில்குமாரி அவளைக் கட்டிக்கொண்டாள். அதன்பிறகு இன்றுவரை  தனக்குக் கீழே செந்தில்குமாரியை சந்திக்கும் வாய்ப்பை அந்த வானம் வழங்கவேயில்லை. இவளுடைய திருமணத்தின் போது அவள் பிரசவம் கண்டிருந்தாள். தீட்டு என்றார்கள். சுசி முதல்முறை அழுதாள். பின்னர் சுசி இரண்டாம் முறை பெருங்குரலெடுத்து  அழுது அரற்றிய வைபவத்திற்கு செந்தில்குமாரி வரக்கூடாது என சடங்கும் சம்பிரதாயமும் சொல்லிவிட்டது. அவள் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த காரணத்தினால் சாவு வீட்டிற்குப் போகக்கூடாது என்றார்கள். சுசியின் அழுகையை, சந்திரனை இழந்த நாளில் சுசியின் கோலத்தைப் பார்க்க முடியாமல் போனது செந்தில்குமாரிக்கு. ஒரு காட்சியில் இருந்து இன்னொரு காட்சிக்குத் தாவும்பொழுது இடைவெளி விடும் பெருமூச்சிற்கான கணங்கள் கூட சுசிக்கு வாய்க்கவில்லை. எல்லாமே ஒன்றோடு ஒன்று பிணைந்துகொண்டது போல் தோன்றியது. ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்குத் தாவிப் போய் அமரும் பறவையை நிறுத்தி, மரம் மாறியதற்கான காரணத்தைக் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். அதே கிளை, அதே பசுமை. அதே கனி. கொஞ்ச நேரத்திற்குள் ஏன் வட்டமடித்துக்கொண்டு போய் எதிர்மரத்தில் அமர்கிறது? றெக்கை இருக்கும் ஒரே காரணத்தினால்தானா?.  குழந்தை சிணுங்கியது. தட்டிக்கொடுத்தாள். தன்னால் இப்படி இவ்வளவு மென்மையாக குழந்தைக்குத் தட்டிக்கொடுத்து தூங்க வைக்கவும் இயலும் என்று ஒருநாளும் அவள் நினைத்துப் பார்த்ததில்லை. குழந்தையைத் தடவிக்கொண்டு படுத்திருந்தாள். தம்பி எடுத்துக்கொண்டு வந்து தூக்கிப்பார்க்கச் சொன்ன பறவையின் உடல்தான் நினைவிற்கு வந்தது. பஞ்சுப்பொதிபோல் இருந்தது. உள்ளங்கையை விரித்து பறவையை அதில் இருத்திக் கையை மடிக்கையில் ’பொசுக்’  எனும் உணர்வு எழுந்தது. இறந்து போன பறவை என்பதால் அப்படி இருக்கிறது என்றும் உயிருள்ள பறவையை இப்படி கையில் வைத்துப்பார்ப்பது கடினம் என்றும் சொல்லிக்கொண்டே ஓடினான்.  உயிருள்ள பறவையை உள்ளங்கையில் தொட்டுத்தடவும் உணர்வை தன்னுள் வரவழைத்துக்கொண்டாள் சுசி. உள்ளங்கையை விரித்துப் பார்த்து முகர்ந்தாள். பாலுடன் அழுக்குக் கலந்த கலவையான வாடை கைகளில் அப்பிக்கொண்டிருந்தது. தூங்கியது போதும் என்பதுபோல் குழந்தையின் கன்னத்தை லேசாக வருடினாள். குழந்தை அசைவற்று உறங்கிக்கொண்டிருந்தது. காய்விற்பவரின் குரல் இப்போது சத்தமாகக் கேட்டது. அந்த சத்தம் அவளுக்காகத்தான். அவள் வீட்டின் முன் நின்றுதான். இன்னும் நான்கு முறை கத்தி உறுதி செய்துகொண்டு போய்விடுவார். கத்தட்டும். அப்படியேனும் குழந்தை எழுந்துகொள்கிறதா எனப் பார்த்தாள். எழுந்தவுடன் பால் கொடுத்துவிட்டு கொஞ்சம் விளையாடிவிட்டு, குளிக்க வேண்டும். குளிப்பாட்ட வேண்டும். செந்தில்குமாரி வந்துவிடுவாள். காய்கறிக்காரரின் சத்தம் வெகுக் குறைவாகக் கேட்டுத் தோய்ந்து கொண்டிருந்தது. அதுவும் நல்லதுதான். இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும் என அப்படியே அருகில் படுத்திருந்தாள். காலை சற்று மாற்றி மடக்கி நீட்ட வேண்டும் போல் இருந்தது. செய்தாள். அவள் காலடியில் இருந்த சொம்பு அரைவட்டமடித்து உருளத்துவங்க பட்டென எழுந்து சத்தம் எழாதவாறு அந்த சொம்பைப் பிடித்து நிறுத்தி எடுத்தவள் அதைத் தலைமாட்டிற்கு வைத்துக்கொண்டாள். கழுத்திற்கு சுகமாக இருந்தது. வெள்ளையம்மாக் கிழவியின் முகம் வழக்கம்போல அந்த சொம்பிலிருந்து எழுந்து வந்தது. அந்த சொம்புதான் அவள் மானங்காத்த சொம்பு என கிழவி இவளிடம் சொல்லுவாள். கிழவியின் கணவர், தன் தாத்தன் விபத்தில் இறந்துபோய்விட, சின்னஞ்சிறுவயது வெள்ளையம்மாள் அழக்கூடத் தெரியாமல் பிரமை பிடித்ததுபோல் அமர்ந்திருந்தாளாம். அவளுடைய பாட்டி ஏதேதோ சோதித்துப்பார்த்து அந்த சொம்பில் நீரை நிறைத்து அதை பிணம் கிடக்கும் வீட்டின் வெளியே வந்து நின்று கூட்டத்தின் முன் வைத்து ஒன்று இரண்டு மூன்று என பூக்களை அந்த சொம்புநீரில் மிதக்க விட்டாளாம். கூட்டம் ஓவென அரற்றி தங்கள் பரிதாபத்தைத் தெரிவித்ததாம். அதாவது அவன் இறக்கும் போது இவள் மூன்றுமாதம் கர்ப்பம் அதனால் அவள் குழந்தை பெறும்பொழுது எவன் அப்பன் எனும் கேள்வியைக் கேட்டுவிடாதீர்கள் என்ற அறிவிப்பாம். சொம்பு கழுத்தை அழுத்தியது சுசிக்கு. எடுத்து குழந்தைக்கும் அவளுக்கும் இடையில் வைத்துக்கொண்டாள். அந்த சொம்பை மெதுவாக நகர்த்தி குழந்தையை இடித்தாள். குழந்தை சுணங்கி நேரானது. சிரித்தாள். மீண்டும் அந்த விளையாட்டைத் தொடர்ந்தாள். குழந்தை கைகால்களை அசைத்து முறுக்கியது. கொஞ்சமாய் எழுந்து நன்றாக முகத்தைப் பார்த்தாள். பின்னர் கொஞ்சமாக விலகி நிமிர்ந்து நன்றாகக் கால்களை அகட்டி நீட்டிப் படுத்துக்கொண்டாள். சுகமாக இருந்தது. மின் விசிறி சன்னமாக சுழன்று கொண்டிருந்தது. ஒரு வெய்யில்பொழுதில் மின்விசிறியின் றெக்கையில் குருவி ஒன்று அமர்ந்து இருக்க, பாவம் அது தூங்குகிறது என மின்விசிறியின் ஸ்விட்ச் அருகில் நின்றிருந்தாள். யாரையும் மின்விசிறியைப் போடவிடவில்லை அன்று மதியம். ஏன் இப்படி வியர்க்கிறது என அப்பா சத்தமாகக் கேட்டுக்கொண்டே வந்த நொடியில் குருவி விருட்டென்று பறந்துபோனது. அப்பாவின் மீது அன்று முழுதும் கோபத்தைக் காட்டினாள். மின்விசிறியின் சுழற்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் உறக்கம் தழுவத் துவங்கியது.  செந்தில்குமாரி இன்று வராமல் நாளை வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. கண்களை மூடியபிறகும் மின்விசிறியின் சுழற்சி சன்னமாகத் தெரிந்தது. தூங்கலாம் என்று இரண்டு கைகளையும் வயிற்றின் மீது வைத்து இதமாக அழுத்திக் கொண்ட நொடியில் குழந்தை அழத் தொடங்கியது.

*

Previous article
RELATED ARTICLES

2 COMMENTS

  1. காலத்தின் ஓட்டத்தால் வாழ்க்கை வெறுமையானாலும், ஒரு பிஞ்சு குழந்தையின் இருப்பே ஓர் இளம் விதவையை சராசரியாக இயக்கவும், அவளின் நாட்களை நிரப்பவும் முடியும் என்பதை
    அவளின் மன ஓட்டங்களாலும்-நுட்பமான உணர்வுகளாலும் கடத்தியிருப்பது அருமை.

    //றெக்கை இருக்கும் ஒரே காரணத்தினால்தானா?. //👌🏽
    விடை யார் அறிவாரோ ?!

    சொம்புநீர் சடங்கு பற்றி கேள்விப்படுவது இதான் முதன் முறை.

  2. சொம்பு நீர் சடங்கு பற்றி தெரிந்து கொண்டேன் அண்ணா…

    எப்போதும் போல உங்க கதை அருமை…

    என் சிறுவயது நினைவுகளும் வந்தது சிட்டுக்குருவி மின்விசிறி அனுபவம் 🤩💖💖💖🎊🎊🎊👌👌👌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை

ஓவியம்

சிற்பம்

குழி

நுரை