சிற்பம்

மரேந்திரனுக்கு அந்த இடத்தைப் பார்த்தவுடனே பிடித்துவிட்டது. அவர் எழுதிக் கொண்டிருக்கும் புதிய நாவலுக்கானக் களப்பணியாக இதுவரை தேடி அலைந்த இடங்களோடு ஒப்பிடுகையில், இந்த இடம் அவருடைய மனதின் அடியாழத்தில் ஏற்கனவே வரைந்து வைத்திருக்கும் சித்திரம் போல் இருந்தது. முடியப்போகும் இந்த வருடத்தையும் கணக்கில் எடுத்துகொண்டால் எழுத்தாளர் சமரேந்திரன் எழுத வந்து 49 ஆண்டுகள் ஆகின்றன. எழுபது வயதை நெருங்கிக்கொண்டிருக்கிறார். மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட  வெண் தாடி, கோவா,மலேசியா போன்ற இடங்களில் தென்படும் அச்சிடப்பட்ட சட்டைகள், டெனிம் ஜீன்ஸ் என நவநாகரீகமான புறத்தோற்றம் கொண்டவர். ஆனால் ஏறக்குறைய நானூறு ஆண்டுகளின் பழங்கதைகளை அகத்தில் வைத்திருக்கும் எழுத்தாளர் என்று அவரை சொல்வதே சரி. சரவணப்பெருமாள் என்ற இயற்பெயரில்தான் முதல் கதையை அவருடைய இருபத்தி ஒன்றாம் வயதில் எழுதினார்.  அந்தக் கதையைப் பெரிதாக யாரும் அங்கீகரக்கவில்லை அல்லது பேசவில்லை. அதன்பிறகு அவ்வப்பொழுது எழுதியவர் தன்னுடைய முப்பாதவது வயதில் இருந்து தீவிரமாக எழுதத் துவங்கி, ஓரளவு புகழும் மனநிறைவும் அடைந்துவிட்டார் எனலாம்.

அவர் எழுத்தைக் குறித்து எவ்வளவோ புகழ்ச்சிகள், கட்டுரைகள்,விமர்சனங்கள் என ஏராளமாகப் பார்த்துவிட்டார்தான் என்றாலும், அந்த முதல் கதை, அந்தக் கதை அடைந்திருக்க வேண்டிய இடத்தை அடையவில்லை என்று முன்பு வருந்தியவர், இப்போது அந்தக் கதையின் கருவை மீண்டும் எழுதுவது என முடிவெடுத்து ஆரம்பித்தப் பிறகுதான் அவருக்கு ஒரு விசயம் புரிந்தது. ஆம், எழுத ஆரம்பிக்கும் போது இருந்த மொழிக்குறைபாடும், இப்போது அந்தக் கரு வேறு ஒரு தளத்தில் நாவலாகப் பயணப்பட்டுக் கொண்டிருப்பதையும் உள்ளூர உணரத் துவங்கிவிட்டார். மேலும் வலு சேர்க்கும் பொருட்டு, களப்பணிகளில் இறங்கி இருக்கிறார்.

எழுத்தாளர் சமரேந்திரனுக்கும், அவரைப்பற்றியும் இந்தக் கதையையும் சொல்லிக்கொண்டிருக்கும் எனக்கும் இடையே நேற்று மிகப்பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. அதாவது இந்தக் கதையை, அதாவது அவரின் நாவல் பொருட்டு அவர் செய்த களப்பணியைக் குறித்து அவரே கதையாக எழுதிவிடுவதாகவும் அதன் நேர்த்தி இன்னொருவர், அதாவது நான் எழுதினால் அந்த அளவிற்கு செய்நேர்த்தியில் இருக்காது என்பது அவரது வாதம். எத்தனை ’அதாவது’ வருகிறது பாருங்கள். எனில் எந்த அளவிற்கு வாக்குவாதம் ஆனது எனப் புரிந்திருக்கும்.

போகட்டும் விடுங்கள். வாக்குவாதத்தின் முடிவில் சரசரவென ஒரு காகிதத்தை எடுத்துக் குறிப்புகள் எழுதிக்கொண்டவர், (எழுதும்போது அந்த சரசரப்பு வரவேண்டும் என்பதற்காகவே சரசரப்பை ஏற்படுத்தினார். நானும் ஆத்மாநாமைப் படிப்பேன் என்பது அவருக்கும் தெரியும்) சற்றைக்கெல்லாம் பின் வரும் வரிகளை அனுப்பி இருந்தார். அதாவது, அவரின் பார்வையில் இந்தக் கதையை எழுதி அனுப்பி இருந்தார். நான்கைந்து வரிகளைப் படித்துவிட்டு நீங்களே சொல்லுங்கள்.

நான் இங்கு வந்திருக்கக் கூடாது என்று தோன்றியது எனக்கு. எங்கு திரும்பினாலும் சிலைகள். பல சிதிலமான சிலைகள். பாதியில் நிற்கும் சிலைகள். வேலைப்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டக் கற்களின் அடிப்பகுதியைப் பக்கவாட்டில் பார்க்கும்பொழுது ஏற்பட்ட ஒருவித உணர்வு என எனக்குள் ஏதோ ஒன்று உடனே இந்த இடத்தை விட்டு அகலச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக இந்த சிவன் சிலையின் மீது படர்ந்துகொண்டிருக்கும் பாம்பின் கண்களும் அந்த பிளவுபட்ட நாக்கும், பாம்பின் வளவளப்பான தேகம் கொடுத்த அசூயையும் இங்கு நிற்க விடாமல் செய்துகொண்டிருக்கிறது.

நான் எழுதப்போகும் நாவல், இதுவரையிலான என் ஐம்பது வருட எழுத்துலக வாழ்வின் மிக முக்கியமானப் படைப்பாக இருக்கப் போகும் ஒன்று என்பதால் மட்டுமே அல்ல, இதுவரையிலான என் படைப்புகள் அனைத்தும் இப்படியானக் களப்பணியில் உறுதிப்படுத்திக் கொள்ளும் அடிப்படை வழக்கம் என்பதாலும்தான் இங்கு வந்தேன்.

நான்கைந்து நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவரிடம், நண்பர் என்றாலே வாசகர், வாசக நண்பர் என்றாகி விட்ட வாழ்வெனது. ஆம். எழுத்தும் படைப்பும் சம்பந்தப்படாத எவரும் இப்போதெல்லாம் நண்பர்களாக இல்லை.  வாசக நண்பரிடம் இந்த ‘சப்ஜெக்ட்’ குறித்து உரையாடிக் கொண்டிருக்கும் போது, விசாரித்துச் சொல்வதாகச் சொன்னவர், விசாரித்துச் சொல்லிவிட்டார். அவர் கொடுத்த அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால், மிக நேர்த்தியான ஆங்கிலத்தில் செய்தியோடு முகவரியை இணைத்து என்னைப் பார்க்க வரச்சொல்லி தேதியும் நேரமும் குறிப்பிடப்பட்டு இருந்ததால் இங்கு அந்த செய்தியில் குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு மிகச்சரியாக வந்துவிட்டேன். ஆனால் நான் சந்திக்க வேண்டிய நபர் இங்கு இல்லை. வாசக நண்பரிடம் அழைத்துக் கேட்டதும், அங்குதான் அவர் இருப்பதாகவும் கொஞ்சம் பொறுமையாக காத்திருக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

நான் வந்திருப்பது சிற்பங்கள் உருவாக்கும் கூடம். நான் இப்போது சந்திக்கப்போவது, என் வாசக நண்பரின் கூற்றுப்படி, உலகின் தலைசிறந்த சிற்பியை. நான் எழுதிக்கொண்டே இருப்பதால் வெளி உலக நிகழ்வுகளில் அதிகம் கவனம் கொள்வதில்லை என்று தோன்றியது. சிற்பி வரும்வரை அந்தக் கூடத்தை சுற்றிவரலாம் என நினைத்தது என் தவறு என்றுபட்டது.  ஏனெனில் பாதியில் நிற்கும் சிலைகளும் பின்னமான சிலைகளும் கற்களும் பிசைந்து வைத்திருக்கும் களிமண்ணும் என்னை ஒருவித படபடபிற்கு ஆட்படுத்திக்கொண்டே இருக்கிறது. இது என்னவிதமான தொந்தரவு என்று புரியவில்லை. நல்லவேளயாக சற்று உட்புறம் இருந்த சிலையைப் பார்த்தேன். என் மனம் ஆனந்தக் கூத்தாடுவதை நான் உங்களுக்குச் சொல்லிப் புரியவைக்க வேண்டும். நாவலில் புரியவைத்துவிடுவேன். இப்போதைக்கு என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன். ஆம். இவ்வளவு அழகான சிலையை நான் என் வாழ்நாளில் பார்த்தது இல்லை. அடேயப்பா ! என்னவோர் எழில். என்னவோர் அற்புதமான பெண் சிலை இது. பார்க்கப் பார்க்க வியப்பும் கண்களில் நீரும் கோர்த்து காட்சிகள் எல்லாம் மங்களாகத் தெரிகின்றன. ஆனந்தக் கண்ணீர் என்பது உகுக்கும் முன்னர் திரைகட்டி நிற்கும் நொடிதானே.

நல்லவேளையாக பின்புறம் இருந்து வந்த குரல் என்னை இந்த உலகத்திற்குள் கூட்டி வந்துவிட்டது. என்னுடைய முகத்தைப் பார்த்தவுடன் அங்கு வந்த பெண், “எல்லாம் சரியாக இருக்கிறதா?” என நேர்த்தியான ஆங்கிலத்தில் கேட்டுக்கொண்டே குளிர்ந்த நீரை நீட்டினாள்.

ஒருவேளை சிற்பியின் மகளாக இருக்கக்கூடும் என்று நினைத்தேன். நீரைப் பருகிகொண்டே என்னை அறிமுகம் செய்துகொண்டுவிட்டு, ’அப்பா வரத் தாமதம் ஆகுமா’ என்று நான் கேட்ட நொடியில் சிரிக்கத் துவங்கினாள்.

“அப்பாவா? நான் தான் அந்த சிற்பி”

ஒரு நொடி, ஒரே நொடியில் நான் வீழ்ந்ததை மறைத்துக்கொண்டு சிரித்தேன். ஆனால் என் தடுமாற்றம் கண்டு மீண்டும் சிரித்தாள், இம்முறை சற்று மென்மையாக இருந்தது அவள் சிரிப்பு.

“பரவாயில்லை இது வாடிக்கை தான். ஏனோ சிற்பி என்றாலே எல்லோருக்கும் ஓர் ஆணின் பிம்பம் மட்டும்தான் கற்பனைக்குள் வருகிறது”

மிக நேர்த்தியான ஆங்கிலத்தில் மேற்சொன்ன வாக்கியத்தை சொல்லிமுடித்தவள், பின்னர், தமிழில்,

“உங்க நண்பர் இந்த மீட்டிங் பத்தி சொன்னதும் நான் உங்களோட ஒர்க் எல்லாம் பாத்தேன். உங்களோட ரெண்டு மூனு கதைகள் படிச்சேன். பரவால்ல, நல்லா இருக்கு”

எனக்கு இது புதிது. ’பெண்ணே என்னைப்பற்றி என் உலகில் வந்து கேள், இப்படி பரவாயில்லை என்கிறாயே’ எனத் தோன்றியது. ஆனால் இங்கு நான் ஒரு மாணவன் போல் அமர்ந்திருக்கிறேன். எனக்கேப் புதிராக இருந்தது என் மனநிலையும் உடல்மொழியும் எப்படி இப்படிக் கட்டுண்டு இவள் முன் எதையோ கற்க காத்திருப்பவன் போல் அமர்ந்திருக்கேன் என்று குழப்பமாக இருந்தது.

“சிற்பங்களப் பத்தி எழுதப்போறீங்க, ரைட். சிலைகள் பத்தின கதையா? வாட்டெவர், கேளுங்க சார் என்ன கேட்கணுமோ கேளுங்க, தெரிஞ்சதச் சொல்றேன்”

“முதல்ல என்னோட இந்த சின்ன அதிர்ச்சியைப் போக்கிக்கிறேன் டியர். விக்கிப்பீடியால கூட இந்த சிற்பிகள் பத்தி “ஆண்பால் தொழில்” அப்டீனுதான் இருக்கு. கற்பனைல சிற்பின்னதும் வேட்டி, துண்டு, வெத்தலை எல்லாம் போட்டுக் கொதப்பிக்கிட்டு உளி சுத்தியல் வச்சுட்டு இருக்குற ஆளாத்தான் நினைச்சேன். இப்பிடி ஒரு பொண்ணு இவ்ளோ பெயர்பெற்ற சிற்பி அப்டீங்குறது ரொம்ப மகிழ்ச்சி”

“அதிர்ச்சினு சொல்லுங்க..” சிரித்தாள்.

உண்மைதான். அதிர்ச்சிதான். வியப்புதான்.

“நேர்த்தியான சிலைங்குறது, எல்லாமே சரிவிகிதத்துல கச்சிதமா அமைஞ்சிருக்கும். கால் விரல்கள்ல இருக்குற நரம்புகளோடத் துல்லியமும் மூக்கோட அமைப்பும் தான் ஒரு சிலையோட நேர்த்திக்கான ஆசிட் டெஸ்ட்”

“ஓஹ்”

“ஆமா. அதத்தாண்டி நிறைய இருக்கு. சிம்ப்பிளா சொல்லனும்னா, ஒரு பெண் சிலையோட இடுப்பு உடுக்கை மாதிரியும் மார்புகள் விம்மியும் எடுப்பான பிருஷ்டங்களும் அமைஞ்ச சிலை கவர்ச்சியாத் தெரியாம கலை நயத்தோட மட்டும் தான் தெரியும். ஏன்னா அந்த சிலையோட முகத்துல தவழும் அமைதி. அழகும் அமைதியும் அப்படியே அந்த சிலையைக் கவர்ச்சியா பார்க்காம வேற ஒரு பார்வையில் பார்க்க வைக்கும் சிற்பியோட உளிதான் ஆகச் சிறந்தது. சிலையோட கண்கள் பேசணும். சிலையே நம்மகிட்ட பேசணும் சார், கலை நேர்த்தினு சொல்வோம் இத”

“ஓஹ்”

“ஆமா, இதோ இப்பிடி எந்தப்பக்கம் இருந்துப் பாத்தாலும் முழுமையா பின்னாடி முன்னாடினு எல்லா பாகமும் இருக்குறதுக்குப் பேரு தனிச்சிற்பம். அதோ, முன்பாதி மட்டும் செஞ்சு பின்னாடி இல்லாம இருக்குறது புடைப்புச்சிற்பம்” பேசிக்கொண்டே போனாள். குறிப்புகள் எடுத்துக்கொண்டே தொடர்ந்தேன்.

எவ்வளவு அழகான பெண், எவ்வளவு அற்புதமான கருத்துகளையும் விவரணைகளையும் நுட்பங்களையும் சொல்லிக்கொண்டிருக்கிறாள். என் நாவல் எங்கோ போகப்போகிறது எனத் தோன்றியது. நாவலை இவளுக்குத்தான் சமர்ப்பிக்க வேண்டும். நாவலுக்குத் தேவையான நிறைய நுட்பங்களைப் பேசித் தெளிவு பெற்றுவிட்டுக் கிளம்பும் பொழுது ஆழ்மனதில் இருந்து நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டு சிரித்தேன். கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. முகத்தைப் பார்த்தேன். கைகூப்பி வணக்கம் வைத்துவிட்டு கிளம்பினேன்.

இந்த நாளின் எனது அடுத்த சந்திப்பு, சினிமாக்களில் கலை இயக்குநராகப் புகழ் பெற்று இருக்கும் நபர். நேராகப் படப்பிடிப்பு நிகழும் தளத்திற்கே வரச் சொல்லி இருந்தார்.  இன்றைக்கு இரவு வெளிநாடு செல்கிறாராம். அதனால் இன்றே பார்த்தாக வேண்டும் என்பதால் செல்கிறேன். இல்லையெனில் சிற்பி கொடுத்தத் தகவல்களும் அந்த சந்திப்பும் இன்னும் கொஞ்சம் மனதில் இருத்திக் கொண்டு இருக்கலாம் எனத் தோன்றியது. நல்லதொரு உணவை உண்டு முடித்த பின் எந்தவொரு வேலையும் செய்யாமல் சற்று அமர்ந்து உணவின் நினைவை அசைபோட்டு அமர்வது சொர்கத்தின் நுழைவாயில் கதவை மிடுக்காகத் தட்டி சற்றே எட்டிப்பார்ப்பது போல்தானே. ஏனோ கலை இயக்குநரைப் பார்க்கப் போகும் ஆர்வம் இல்லை. ஏதேனும் காரணம் சொல்லி தவிர்த்துவிடலாம் எனும் அளவிற்கு அந்தப் பெண் என்னை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டாள் எனப் புரிந்தது.  எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் என்பதை சம்பிரதாயமாகச் சொல்லவில்லை அவள். அதனால் நாளையோ அல்லது இந்த வாரத்தில் ஒரு நாளோ மீண்டும் போக வேண்டும். அவளை மீண்டும் சந்திப்பதற்கும் ஓரிரு அத்தியாங்கள் எழுதிக் கொண்டு போய் வாசித்துக் காட்ட வேண்டும். நினைக்கும்போதே ஒருவித மகிழ்ச்சி என்னுள் ஊடாடியது.’

ப்படி அனுப்பி இருந்தார் சரவணப்பெருமாள் என்ற சமரேந்திரன். நான்கைந்து வரிகளைப் படிக்கச் சொன்னால் உட்கார்ந்து முழுமையாகப் படித்துவிட்டு வந்திருக்கிறீர்கள். சரி, நீங்களே சொல்லுங்கள். நான் எப்படி ஆரம்பித்து இருந்தேன். அவர் அனுப்பி இருந்த நிகழ்வை நான் வேறு கோணாத்தில் இன்னும் நிறைய தகவல்களோடு எழுத நினைத்திருந்தேன். அதைப்பற்றிச் சொல்லும்பொழுதுதான் எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் முற்றியது. அவரின் வாதம் என்னவெனில் அவர் எதைச் சொல்லவேண்டும் எதை சொல்ல வேண்டாம் என்பதை அறிந்து எழுதுவார் என்றும் நான் அவருடைய நிகழ்வை எழுதினால் தேவையற்றத் தகவல்கள் எல்லாம் சேர்த்து சொல்லிவிடுவேன் என்றும் சத்தமாகச் சொன்னார். பேசப்பேச சத்தம் கூடியது என்பதே உண்மை.  என்னுடைய வாதத்தில் இருந்து நான் பின்வாங்கவில்லை. ஏனெனில் நான் சொல்லும் தகவல்களில் எது தேவை எது தேவை இல்லை என்பதை நானோ சமரேந்திரனோ முடிவெடுக்க முடியாது அல்லவா. அது படிக்கப்போகும் வாசகரின் முடிவு. ஏனெனில் ஒரு கதையின் கனம் என்பது இரண்டு பாத்திரங்களின் முரண்களும் எதிர் வாதங்களும் அந்தப் பாத்திரங்களுக்குள் நிகழும் ஏற்ற இறக்கங்களும் உரசல்களும் தானே. எவ்வளவுக்கு எவ்வளவு இரு பாத்திரங்களின் நேரெதிர்த் தன்மை வெளிப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது நல்ல கதையாக நின்று கொள்ளும் அல்லவா. இதை எப்படி எப்படியோ சொல்லிப் பார்த்தேன். சமரேந்திரன் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

”போஸ்ட் மாடர்னிசம் பத்திலாம் உங்கிட்ட பேசுனது என்னோடத் தப்புதான்” என்பதே அவர் இறுதியாக என்னிடம் சொன்னவை. அது இறுதி என்று ஏன் சொல்கிறேன் எனில், அவர் அப்படிச் சொன்னதும் எங்கிருந்தோ வந்த அந்தக் கிண்டல் தொனியில் நான் சொன்ன “அடேங்கப்பா பொல்லாத போஸ்ட்மார்டனிசம், அதெல்லாம் போஸ்ட்மார்ட்டம் மாதிரிதான்” என்ற என் சொற்களைக் கேட்டமாத்திரத்தில் விருட்டென்று எழுந்து போனவர்தான். இரண்டு மடல்களை அனுப்பி இருந்தார். ஒன்றை மேலே நீங்கள் படித்துவிட்டீர்கள். அதாவது, அவர் பார்வையில் (இந்தக் கதையைப் பற்றி உங்களிடம் விளக்கும்போதெல்லாம் இந்த ‘அதாவது’வந்து கொண்டே இருக்கிறது, ஏனென்று தெரியவில்லை, சற்று பின்னால் போய் வேறு சொல் கிடைக்கிறதா என்று பார்த்தால் வாக்கியத்தையே மாற்ற வேண்டியாகிறது  என்பதால் அதாவதே இருக்கட்டும்)

இரண்டாவது மடலில் அவர் கலை இயக்குநரைப் பார்த்தது குறித்து, தன் பார்வையில் எழுதிய கதையின் தொடர்ச்சி. அதைப் படிக்கிறீர்களா அல்லது இதோ நான் சொல்லிக்கொண்டிருக்கிறேனே, இதே பாணியில் சட்டென்று படித்துக் கொள்கிறீர்களா என உங்களிடம் கேட்கலாம் என்று நினைத்தேன். ஆனால் சமரேந்திரனுடனான விவாதத்தின்போது அவருடைய சொற்களில் இருந்த கடுமை என்னை அசைத்துப் பார்த்துவிட்டது என்றே சொல்லலாம். அவர் சொன்னதுபோல் அந்த நடையில் அவருடைய பார்வையில் இருக்கும்பொழுது கொஞ்சம் வசீகரம் கூடுகிறது என்பது உண்மைதான். அதற்காகவெல்லாம் விவாதத்தில் இருந்து விலகிவிடுவதா எனத் தோன்றியது. அந்தக் குழப்பமான மனநிலைதான் சட்டென்ற கிண்டல் மனோபாவத்தைக் கொடுத்து, போஸ்ட்மார்ட்டம் என்ற சொற்பிரயோகத்தை வீசி அவரைக் காயப்படுத்த வைத்துவிட்டது என்று பிற்பாடு தோன்றியது. மடலைத் திறந்து விட்டேன்.

டப்பிடிப்புத் தளம் ஏக சத்தத்தோடு இருந்தது. நான் பொதுவாக சினிமாக்காரர்களிடம் இருந்து விலகி இருப்பேன். குறிப்பாகப் படப்பிடிப்புத் தளம் எல்லாம் அலர்ஜி. ஒன்றை ஆக்கும் இடத்தில் அதைத் துய்ப்பவர்கள் இருக்கக்கூடாது என்று நம்புகிறவன் நான். நட்சத்திர உணவங்களில் கூட நாம் அமரும் மேஜைதான் நமக்கான இடம். அங்குதான் ஆகச்சிறந்த கவனிப்பும் அதியதிக சுகாதாரத் தூய்மையும் மேன்மையும் காணக்கிடைக்கும், உணரமுடியும். அதுவே விடுவிடுவென அவர்களுடைய சமையற்கூடத்திற்குள் அத்துமீறி நுழைந்துவிட்டால் அவ்வளவுதான். கதவைத் திறந்த நொடியில் நாசியில் ஏறும் அந்த வாசம் ஒருவித உமட்டலைத் தரவல்லது. மேலும் அங்கு கிடக்கும் பொருட்கள், ஆட்கள் வேலை செய்யும் பாங்கு எல்லாம் உணவக மேசையில் கிடைத்த துல்லியமான சுகாதார, சுத்தத்தின் அளவில் நேரெதிராகக் கூட இருக்க வாய்ப்பிருக்கும் இடமாகலாம். அதுபோலத்தான் படப்பிடிப்புத் தளத்தில் காண நேர்வதெல்லாம் கலைக்கு அப்பாற்பட்டவை. கலைக்கு நேரெதிரான ஒன்று என்று கூட சொல்லலாம்.

கலை இயக்குநரும் ஒப்பனையாளரும் பேசிக்கொண்டிருக்க, என்னைப்பார்த்த கலை, கையைக் காட்டி எழுந்து நின்றார். முகம் மலர அங்கிருந்தே அழைத்தார். “வாங்க ரைட்டர் சார்” என அவர் விளித்தவுடன் சிலர் திரும்பிப் பார்த்தார்கள். தேடினார்கள். ஏனெனில் அங்கு ரைட்டர் என்பது எழுத்தாளர் அல்ல. அதாவது என் போன்ற கதை, இலக்கியம் இத்தியாதிகள் அல்ல. வசனகர்த்தாக்கள் தான் ரைட்டர் அந்த உலகில். நான் போய் அங்கு இருந்த நாற்காலியில் அமர்ந்தவுடன் ஒப்பனையாளர் ஸ்னேகமாய்ச் சிரித்தார்.

கலை இயக்குநர் என்னை அறிமுகப்படுத்திவிட்டு, “சார் இப்பதான் ஒரு செம்ம மேட்டர் சொன்னாரு, அட ஆமானு தோணுச்சு, நீங்களே இன்னொரு தடவ உங்க வாயால சொல்லுங்க”

என கலை, ஒப்பனையைப் பார்த்துச் சொல்லிச் சிரித்தார்.

ஒப்பனையாளர் சங்கோஜமாகச் சிரித்து, “அட அதெல்லாம் ஒண்ணும் இல்ல சார், தமிழ்ல ரெண்டு பெரிய ஆட்களோட ஆள்மாறாட்டப் படம், தில்லு முல்லு, அவ்வை சண்முகி,  கரெக்ட்டா”

நான் ஆம் என்பதாக தலையசைக்கும்போதே கலை இயக்குநர் “அடுத்து கேளுங்க “ என வியப்பின் அளவை ஏற்றினார்.

“தில்லு முல்லுல ரஜினிக்கு மீசை எடுக்கச் சொல்லி ஐடியா குடுக்குறது யாரு?”

அவர் கேட்கும்போதே அடுத்து அவர் எங்கு வருகிறார் என்ன சொல்லப்போகிறார் என்று புரிந்துபோனது எனக்கு.

“அட ஆமா, அவ்வை சண்முகிலயும் கமலுக்கு ஐடியா குடுக்குறது அதே நாகேஷ் தான்”

கலை இயக்குநர், இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய்விட்டதே என்பதுபோல் மீண்டும் மீண்டும் அதைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

பிறகு என் நாவலுக்குத் தேவையான சில அடிப்படையான விசயங்களைக் கேட்கத் துவங்க, உரையாடல் சுவாரசியமாகப் போனது. அதை நீங்கள் நாவலில் உணர நேரிடலாம். சிலையை சிற்பிகளைக் கொண்டு உருவாக்குகிறார்களா அல்லது சினிமாக்களில் வேறு வகையில் அலங்காரமாக மேம்போக்காகச் செய்கிறார்களா என எனக்குள் இருந்த அனைத்து ஐயங்களையும் கேட்டுக் கொண்டு கிளம்பினேன்.

கிளம்பும் போதும், காலையில் அங்கே சிற்பக்கூடத்தில் பேசியவை, அந்தப் பெண்ணின் சிரித்த முகமும் நினைவிற்குள் வந்தது. கிளம்பும் போது என்று கூறாமல் போதும் என்ற இம் விகுதி ஏனெனில், கலை இயக்குநரோடு பேசிக்கொண்டிருக்கும் போது அவ்வப்பொழுது அழகான பெண் சிலை,மார்பு, நாசி என உரையாடல்கள் சென்றபோதெல்லாம் அவள் நினைப்புதான். கூடவே. ஒரே அமைப்புள்ள இரண்டு படங்களிலும் மையச்சரடாக நாகேஷ் இருந்தது தற்செயலா என்றும் தோன்றியது.

நான் வெளியேறி வாகனத்திற்காக நின்ற நொடியில், கலை இயக்குநரின் கட்டளைக்கு ஏற்ப, நாங்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அந்தக் கூடம் சடசடவென சரிந்து கொண்டிருந்தது. நான் சுவர் என்று நினைத்தவை எல்லாம் மடங்கி மடங்கி விழ, அடுக்கிக் கொண்டிருந்தார்கள். அதுவரை அரங்கின் உள்ளே இருந்த கலை இயக்குநர் இப்போது திடீரென வெட்டவெளியில் தென்பட, நான் கை அசைத்தேன். சிரித்து ஆகாயத்தைக் காட்டினார். ஆகாயம் நீலத்தை இழந்து கொண்டிருந்தது.

நீண்ட கால நண்பர் என்பதால் என்னுடைய ஈகோவை விடுத்து, இரண்டு மடல்களையும் ஒரே மடலாக மாற்றி சமரேந்திரனுக்கு அனுப்பினேன். அந்த இறுதி வரிகள், கலை இயக்குநர் சட்டென வெட்ட வெளியில் நிற்கும் கோலம். அவர் ஆகாயத்தைக் காட்டியதையும், ஆகாயத்தின் வண்ணம் பற்றிய சொற்களும் அற்புதமாக இருக்கிறதல்லவா. நான் எழுதி இருந்தால் அந்த வரிகளை எழுதி இருக்க மாட்டேன் என்று நினைத்துக் கொண்டேன். என் மடலைப் பார்த்து விட்டார் போல. அவரிடம் இருந்து அழைப்பு வந்தது. எனக்கு என்னவோ போல் இருந்தது. எப்படி எடுத்துப்பேசுவது எனத் தோன்றியது. கடுமையான விவாதம். ஓரிரு நாட்கள் போகட்டும், பேசிக்கொள்ளலாம் என நினைத்தேன்.

நான் அழைப்பை எடுக்கவில்லை என்றதும் அவரிடம் இருந்து வாட்சப் வந்திருந்தது. யாரோ அவருக்கு அனுப்பிய செய்தியை எனக்கு அனுப்பி இருக்கிறார் என்பது செய்தியின் முகப்பில் சற்று சாய்ந்திருந்த forwarded சொல் சொல்லியது. தேர்ந்த ஆங்கிலத்தில் இப்படி இருந்தது அந்தச் செய்தி.

“தவிர்க்க முடியாத காரணத்தால் நான் உங்களை சந்திக்க இயலவில்லை. நீங்கள் வெகு நேரம் என் சிற்பக்கூடத்தில் காத்திருந்துவிட்டு போயிருக்கிறீர்கள், மன்னிக்க வேண்டுகிறேன். நாளையோ அடுத்தவாரமோ சந்திக்கலாம். “

குழப்பமாக நான் திரையைப்பார்த்துக் கொண்டிருக்க , சரவணப்பெருமாள் காலிங்’ என வந்துகொண்டே இருந்தது.

*

Previous article
Next article
RELATED ARTICLES

1 COMMENT

  1. Postmodernism clue பார்த்து, அத பத்தி தெரிஞ்சு , சில தடவ படிச்சு .. புரிஞ்ச் , enjoyed it !😊😊
    Brilliantly applied that in a short story ♥️🔥
    அந்த சிற்பிய நமக்கே பாக்கணும் போல இருக்கே..😍

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை

ஓவியம்

குழி

நுரை