Homeகட்டுரைகள்'நதியின் பிழையன்று மீன்களின் துயரம்' - ம. மணிமாறன்.    

‘நதியின் பிழையன்று மீன்களின் துயரம்’ – ம. மணிமாறன்.    

கிழ்வென்றாலும்,துக்கமாயினும் யாவும் மனிதர்களின் பாற்பட்டதே. தன்னுடைய நித்தியத்தை எதிர்கொண்டு இந்தக்கூட்டம் கடத்திட எத்தனிக்கும் நிமிடங்கள் எத்தனை வசீகரமானவை. அத்தனையையும் எழுத்தாக்கிட முடியுமா என்ன?. வாழ்க்கை என்ன கதை எழுதுகிறவனின் கைகளில் சிக்கித் தடுமாறும் அளவிற்கு பலவீனமானதாகவா இருக்கிறது?. பித்தன் தொடங்கிவைத்த நவீனத்துவத்தின் கதைப்பாதையில் பயணித்தபடியே பலரும் இந்தக் கேள்விகளுக்கான விடை தேடுகிறார்கள். பாதரசக்குமிழென நழுவிச்செல்லும் வாழ்வின் பக்கங்களை மொழியெனும் விசித்திரனின் துணைகொண்டு அடுக்கடுக்காக அடுக்கிச் சேர்த்தவையே நர்சிம்மின் கதைத்தொகுப்பாக கைவந்திருக்கிறது.  மனதின் சொற்களை கண்டடையும் வித்தை கைவரப்பெற்ற எழுத்துக்காரன் எழுதித் தொகுத்திருக்கும் சொம்புநீர்ப்பூவிற்குள் மிதந்து கொண்டிருக்கும் பறவையின் இறகு சொல்லிச் சென்ற கதைகளே இனியானவை யாவும்.

எல்லோருக்குள்ளும் உருவாகி நிறைந்திருக்கும் என்னங்களின் தொகுப்பே ‘மித்’தாக நிலைத்துவிடுகிறது. இவையாவற்றையும் இயற்கையின் வழிநின்றே மனிதர்கள் உருவாக்குகிறார்கள். அதிலும் பறவைகள் காலாதிகாலமாக மனத்தொகுதிக்குள் நிறைந்திருக்கும் விசித்திரங்கள். காக்கையும் பறவைதான். ஆனாலும் பறவையெனும் சொல் சுமந்து கொண்டு வருவது வெண்மையைத்தானே. ஏன்?. வெண்மை நிறத்தின் மீது தீட்டப்படும் சித்திரங்கள் துலக்கமாகிடும் என்பதாலா?. அதிலும் துக்கமற்று பறந்தலையும் பறவைகள் என்பது வாழ்வதற்கான நம்பிக்கையின் பக்கங்களைத் திறக்கிறது என்பதும்கூட ‘மித்’துதான். ஒரு பறவையின் உதிர்ந்த  இறகாகி அதுவரையிலுமான துக்க எடைகளைத் தொலைத்துவிட்டு காற்றில் மிதந்தலையவே எல்லோரும்  விரும்புகிறோம். சுசியும்கூட தன்கூடுநோக்கி பறந்துவரும் செந்தில்குமாரியை எதிர் நோக்கியிருக்கிறாள். வெயில் முற்றாக விழுந்துவிட்ட மாலை வேளையில் அவள் வருவாள். இது இவர்களுக்குள் நிகழும் வழமைதான். எப்போதும் இல்லாமல் போனது அந்த மகிழ்வின் நிமிடங்கள். ஒரு திருமணத்திற்கு அத்தனை வலுவிருக்கும் என நினைத்திருக்கவில்லை சுசி. ஒரு வாழ்வொப்பந்தமாக விரியும் திருமணத்தால் அதுவரையிலுமான எல்லாவற்றையும் எப்படிக் கலைத்துப்போட முடிகிறது என சுசியோடு சேர்ந்து கதை வாசிக்கிற எல்லோரும்தான் யோசிக்கிறோம். திருமண பந்தத்தில் கரைந்து போன தந்தை மகள் உறவினை, அக்கா தம்பி நேசத்தை பக்கம் பக்கமாக எழுதித்தீர்த்திருக்கிறார்கள் கதைக்காரர்கள். ஆனால் நேசக்காரிகளின் துக்கத்தை, கொண்டாட்டத்தை எழுதிட முடியுமா? அவர்களின் எழுத்து மேசையின் பக்கம் வராமல் சுற்றிக்கொண்டிருந்த சொற்களை சுருட்டியெடுத்து சொம்புநீர்க்குள் நிறைத்து தந்திருக்கிறார் நர்சிம். தலைக்கணைவாக உறைந்திருக்கும் சொம்பு நீருக்குள் மிதந்தலைந்த பூக்கள் குழந்தையாக கிடக்கிறது அருகில். நம் பார்வை எல்லைக்குள் எட்டாத வண்ணப்பூக்களால் நிறைந்திருக்கும் அறையின் குளிர்ச்சியில் அவர்கள் சந்திக்கட்டும், பேசட்டும், மகிழட்டும். எதற்கு நீங்கள் அதனை வெறித்துப் பார்த்தபடி நிற்கிறீர்கள். விலகிச்செல்லுங்கள் ..

மரணமும், பிறப்பும் வாழ்வின் கடைகோடி இரட்டைப்புள்ளிகள். கடல் அலையைப்போல இவ்விரண்டு புள்ளிகளின்  இடையில்தான் வாழ்வெனும் நூதனம் நகர்கிறது, விரைகிறது,அல்லாடுகிறது. ஒருவிதத்தில் எல்லோரும் மரணத்தை நோக்கித்தான்  பயணிக்கிறோம். ஆனாலும் வாழ்வின் பெரும் விருப்பம் நம்மைவிட்டு அகல்வதேயில்லை. கதைகளை வாசிக்கிற போது அதன் சொற்கள்  வாசகனின் மனதின் பக்கங்களைத் திறக்கவேண்டும். மனதின்  கதவுகளை லகுவாகத் திறக்கும் சாவிகளை தன்கதைச் சொற்களுக்குள் பொதிந்து தந்திருக்கிறார் நர்சிம்.

‘பாரம்’ கதைக்குள் ஒற்றை வரியில் வருகிற அந்தப் பெரியவர்  ராமர் எல்லோருக்கும் வாழ்க்கையை கற்றுத் தந்தபடி நகர்கிறார். “ மரணமோ அவமானமோ நேரடியாக நிகழ்ந்துவிடும்போது அதன் போக்கில் கடந்தும் விடுகிறது.. ஆனால் இப்படி எதிர்பார்க்கப்படும் மரணம், ஒரு அவமானம் எந்த நொடியில் ஏற்படப்போகிறது என எதிர்பார்த்து இருக்கும் நாட்கள்?”. பாரம் கதைக்குள் வருகிற மருமகள் தன்னுடைய மாமனாரின் இறுதிச் சடங்குக்கான செலவுகள் எவ்வளவாகும் என்பதை விசாரிக்கத் துவங்குகிறாள். அது வயது முதிர்ந்த மாமிக்கோ அல்லது அதைக்கேட்டிட சந்தர்ப்பம் கிடைத்திட்ட அண்டை வீட்டாருக்கோ என்ன மன நிலையை ஏற்படுத்தும் என்கிற எந்தக் கவனமோ, அல்லது கவலையோ இல்லை. இதுதான் யதார்த்தம் எனபுரிந்து கொள்ளப்படுகிற எமோஷன் எதுவும் அற்ற வாழ்க்கையை வாழ்ந்திட பழகுகிறார்கள். எல்லா உறவுகளும்  பணத்தின் மீதுதான் கட்டி  எழுப்பப்படுகிறது. நம்பிக்கையின்மையின் துக்கம் நம்மைச்சூழ்கிறபோது மூடப்பட்ட வாழைக் குழிக்குள் இருந்து கசிந்து இறங்கும் சாரெடுத்து நாவினில் சுவையூட்டுகிறார் நர்சிம். வாழ்வொன்றும் அத்தனை வெறுமையானதில்லை..மரணம்  மறுபடி ஜனனம் இது ஒரு வாழ்கை சுழற்சி அவ்வளவே என்கிறார்  எழுத்தாளர். 

சிப்பாய்களுக்குள் ராணியாவதற்கான வேட்கை நிறைந்திருப்பதை சதுரங் ஆட்டத்தாலும், சதுரங்க ஆட்டக்காரர்களாலும் ஒருபோதும் கண்டுணர முடியாது. சூதுகள் விரவிக்கிடக்கும் சதுரங்கப்பலகைக்கு வாழ்வின் நூதனப்பக்கங்களை அறியவே இயலாது. மரணத்தின் நொடியை மாமியார் தொட்டுக் கொண்டிருப்பதை அறியாதவளா மருமகள்.அவளுக்குள் குடும்ப அமைப்பின் ராணியாக வேண்டும் என்கிற ஆசை துளிர்விட்டதால்  அவள் அந்த மரணத்தை எதிர்பார்க்கிறாள். மரணத்தை எதிர்பார்த்துக் கிடப்பது எவ்வளவு பெரிய அபத்தம். “ இந்த ரிமோட்டக் கைல வாங்கி ஒரு சேனல் மாத்துறதுக்குள்ள அடேங்கப்பா என்னவெல்லாம் பேச்சு வாங்கனும் தெரியுமா”.இடது உள்ளங்கையால் ஒரு தட்டு தட்டிக்கொண்டு மீண்டும் சேனல் மாற்றினாள்.. அவ்வளவுதான் விழுங்கிய கவளம் கதை. வாழ்வதொன்றும்  ஒரு கவளம் சோற்றுக்காக மட்டுமலல்ல என்பதையும் சேர்த்துச் சொன்ன கதையது. அதிகாரம் என்பது கரும்புகையாக மனங்களில் ஊடுறுவிக்கடக்கிறது. குடும்பத்தில், அலுவலலகத்தில்,அரசியல் அதிகார போட்டியில் என கட்புலணாகாத வெளிகளில் பரவிக்கிடக்கிறது.

“இந்த மலையாளி, தமிழ், சாதி இவையெயெல்லாம் இல்லாமல் ஆக்க சயின்ஸோ,சம்பிரதாயமோ ஏதாவது வழிவைத்திருக்கிறதா. காதலைத்தவிர வேறு எந்த வழியும் இதுநாள்வரையிலும் கண்டுணரப்படவேயில்லை. இது ஒரு நடைமுறை யதார்த்தப்புரிதல். இந்தக்கேள்விக்கான பதிலை பலரும் கேட்டுக் கடந்திருக்கிறார்கள். அம்பேத்கர் அவருடைய புகழ்பெற்ற கட்டுரையான ’சாதியை ஒழிக்க வழி’ எனும் கட்டுரையில்  என்ன வழி எனக்  கேள்வி கேட்டு அகமணமுறை மறுப்பு ஒன்றே சாதியை ஒழிக்க இந்தியச்சமூகத்தில் இருக்கும் ஒற்றை வழி என்றார். காதல் கைகூடும் போது மட்டும்தான் அகமணமுறை மறுப்பு சாத்தியம் என்பதை விளக்க வேண்டியதில்லை.. காதல்  ஒரு பன்மைத்துவ உணர்வு. ஒருபோதும் எழுதித்தீர்கவே முடியாத நுண்  சொல் காதல். ’புன்கணீர்’ கதை காதலின் வசீகரத்தையும்,வலியையும் பிறிதொரு தொனியில் சொல்கிறது. காதலர்கள் நகரம்விட்டு நாடுவிட்டு எக்கண்டம் போனாலும் அவர்களுக்குள் ஊரும் உறவுகளும் அலை அலையாய் மேல் எழுந்தபடியேதான் இருக்கும்.எந்தக் ககதையை வாசித்து முடித்தபிறகும்  எனக்கு கதையின் கடைசி முற்றுப்புள்ளியில்  ஒரு சித்திரம் தோன்றும்..  அதனை எப்போதும் என் மன அரங்கினில் பத்திரப்படுத்திக் கொள்வேன். என் மன அடுக்கிற்குள் ’சேட்சியைப்’ பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்.புன்கணீரின் சேட்சி எவ்வளவு தேஜஸ் ஆனவாள் என்பதை நீங்களும் கதை வாசிக்கும்போது உணர முடியும்.

எழுத்தாளர்கள் எப்போதும் பால்யத்தின் துக்கத்தையோ கொண்டாட்டத்தையோ எழுதுவதில் ஒருபோதும் சலிப்படைவதில்லை. பால்யகால ஞாபகங்களை மீட்டெடுத்து கதையாக்குபவர்களை பாக்கியசாலிகள் என்று நான் நினைத்துக் கொள்வேன்.நர்சிம் பாக்கியம் மட்டுமல்ல,அதற்கான வரத்தையும் பெற்றிருக்கிறார். அதிலும் தொன்மம், ஒவியம், நுரை எனும் மூன்று கதைகளும் அதியற்புதமான வாசகப் பரவசத்தை ஏற்படுத்துகின்றன. தொன்மம் அதன் வசீகரத்தை ரகசியமாக பொத்தி வைத்திருக்கும் வரையிலும்தான் அது தன்மதிப்பைப் பெற்றிருக்கும். கருப்பணசாமிக் கோயிலின்  கதவு வழியாக எவரும் பார்ப்பதில்லை. பார்த்தால் கருப்பு அடித்துவிடும் என்பது  ஊரில் இருக்கும் நம்பிக்கை. தாங்கள் அடித்த கிரிக்கெட் பந்துகளே நூற்றுக்கணக்கில் கோயிலுக்குள் அதிலும் குறிப்பாக கருப்பு சிலைக்குப்பின் கிடக்கும். இருந்தாலும் பையன்கள் உள்ளே போவதில்லை. ஏன் போவதில்லை. தொன்மங்களால் கட்டப்பட்டதுதான் எளிய மனிதர்களின் வாழ்கை.  கடவுள்களின் மீதான நம்பிக்கைகளின் பிடிகயிறு தொன்மங்களுக்குள்தான் பதுங்கியிருக்கிறது. செந்தில் எனும் விளையாட்டுப்பிள்ளை உடைத்துத் திறக்கப்பட்ட கோயிலுக்குள்தான் நிற்கிறான். கருப்பண்ணசாமியின் கையில் பளபளக்கும் வாளின் மீது ஒரு கையையும், மற்றொரு கையில் இருளகற்றும் டார்ச்சையும் பிடித்திருக்கும் செந்திலின் காட்சி சித்திரம் எதன் குறியீடு. தொன்மம் கதையை  வாசித்தால் புரிதலுக்குள்ளாகும். தெருவோர கிரிக்கெட் ஆட்டங்கள் எவ்வளவு சுவாரஸ்யமானவை என்பதை எழுதிப்பார்த்த கதை ஓவியம். கதையின் தலைப்பு ஆச்சர்யமானது. ஒரு சொல்லுக்கு ஒற்றைப் பொருளில்லை. ஓவியம் என்ற சொல் தனித்து தரும் அர்த்தத்தை கதைக்குள் வருகிற போது தருவதில்லை. ஓவியம் என்பது பெயர்ச்சொல் அல்ல,எனக்கும் என்னுடைய கிரிக்கெட் சேக்காளிகளுக்கும் அது ஒரு பண்பினை குறிக்கும் சொல். ’ஆமா இவரு பெரிய ஓவியம்னு’ நீங்களும் சொல்லிப்பாருங்கள். அப்போது உங்களுக்குள் பால்ய சிநேகிதர்களின் முகம் வசீகரமாய் எழுந்து நிற்கும்.

இந்தத் தொகுப்பின் அதியற்புதமான கதை ‘நுரை’. பால்யத்தின் பருவநிலை மாற்றங்கள் பெண்களுக்கு சற்றே வெளிப்படையாகவும், ஆண்களுக்கு பதுங்கி சூசகமாகவும்  இருப்பதை நுரைக்குள் எழுதுகிறார் நர்சிம். பாலியல் பிறழ்வுகள்,அதற்குள் இருக்கும் நியாய தர்க்கங்களை நம்முடைய சிறுகதை முன்னோடிகளான ஜி.நாகராஜனும், தஞ்சை ப்ரகாஷும் அவர்களுடைய பலகதைகளில் எழுதுயிருக்கிறார்கள். தன்பால் விருப்பு, பிறன்மனை நோக்கலில் இருக்கும் திரிபுகள் என பல்வேறு  தளங்களில் உடல் நிகழ்த்திடும் விசித்திரங்களை கதைகளாக்கியிருக்கிறார்கள். நான் வாசித்த வரையிலும் ரகுவின் நண்பனாகிய அவனின் கதையைப் போலான கதையை நுரைக்கு முன்பாக நான் வாசித்திருக்கவில்லை. அவனையொத்த வயதுடையவர்களுக்கும் அவனுடைய உடலில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும்  மாற்றப் புள்ளிகளின் மீதான புரிதல் ஏற்படவேயில்லை. எல்லாவற்றையும் லகுவாக்கிட கற்பகம் அத்தைகள் வந்து கொண்டேதான்  இருக்கிறார்கள். கற்பகம் அத்தைகளின் நிலத்தில்தான் சர்ப்பங்கள் அலைகின்றன.ரகுவின் தோழனுக்கு இவையாவும் புரிதலுக்கு உள்ளாகிற போது குருசாமியண்ணன்கள் ஏன் கற்பகம் அத்தைகள் வீட்டிற்குள் புகுந்து பாம்பை அடிக்கிறார்கள் என்பதும் தெரியத்தானே செய்யும். அத்தனை அழுக்குககளையும் பொட்டலமாகக்கட்டி குழிக்குள் போட்டு மூடிவிட முடியுமானால் வாழ்க்கை  எவ்வளவு லகுவாக இருக்கும்..

ஏன் எழுதுகிறேன். எழுத்து என்ன செய்யும். எழுத்தின் திசைவழியாக நான் எதைத் தீர்மானிக்கிறேன் என்பதையெல்லாம் எல்லா எழுத்தாளர்களும் கட்டுரைகளாக எழுதியிருக்கிறார்கள். நர்சிம் இதற்காக ஒரு சிறுகதையே எழுதியிருக்கிறார். அதற்காக சிற்பம் கதைக்குள் ஒரு முதிர்ந்த எழுத்தாளரை அழைத்து வருகிறார். அவரை அவர் எழுதப் போகும் நாவலுக்கான கச்சாப் பொருளுக்காக சிற்பக்கூடத்திற்குள் உழல விடுகிறார். எழுபதுகளில் கதை எழுத வந்த பல எழுத்தாளர்களுக்கு மிகவும் குறிப்பாக சிறுகதை எழுத்தாளர்களுக்கு சில முன்முடிவுகள் உருவாகி நிலைபெற்று விட்டது. இப்போதெல்லாம் ’கிளாசிக் டச்’ உள்ள கதைகளை எழுதத் தடுமாறுகிறார்கள் எழுத்தாளர்கள். ஏன் என்றால் அவர்கள் சிறுகதைக்கென உலகம் கண்டடைந்திருந்த முடிவுகளைக் கைவிட்டு விட்டார்கள் அல்லது அது அவர்களுக்குத் தெரியாது என்றே நம்முடைய மூத்தோர்கள் நினைக்கிறார்கள். நர்சிம் இலக்கியம் எழுத்து,கலை குறித்த தர்க்கங்களை நாற்பது வருடங்களாக கதை எழுதிக் கொண்டிருக்கும் சமரேந்திரன் என்னும் எழுத்தாளருடன் நடத்துகிறார். சிற்பக்கூடத்தின் கலைஞரான  பெண்ணொருத்தியும், கதைக்குள் சமேரேந்திரனுடன் விவாதித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளரும் இந்தக் காலத்தின் கலைஞர்கள். கலைகள் குறித்து அவர்ளுக்கு இருக்கும் பார்வையும், கதைகளைக் குறித்த புரிதலுக்குள் இருக்கும் தெளிவும் சுமேந்திரனுக்குள் புரிதலுக்கு உள்ளாகவேயில்லை. இது ஒன்றும் தலைமுறை இடைவெளி இல்லை. அதையும் தாண்டிய நிலை ஒன்று இருப்பதைக் கதை நமக்குள் கடத்துகிறது. சிற்பம் கதைக்குள் இளம் எழுத்தாளன் சுமேரேந்திரனுடன் செய்த தர்க்கங்கள் எழுதத் துவங்கி இருப்பவர்களுக்கு மிகவும் முக்கியமானவை.

ஒரு கதையின் கனம் என்பது இரண்டு பாத்திரங்களின் முரண்களும் எதிர் வாதங்களும் அந்தப் பாத்திரங்களுக்குள் நிகழும் ஏற்ற இறக்கங்களும் உரசல்களும் தானே.

இதுதான் சிறுகதை அது எழுதத் துவக்கப்பட்ட நாளில் உருவான சிறுகதை குறித்த வரையறை  இதனைத்தான் தன்னுடைய சொம்புநீர் தொகுப்பின் கதைகள் யாவற்றின் வழியாகவும் சோதித்துப் பார்க்கிறார் எழுத்தாளர் நர்சிம்.

( நர்சிம் எழுதி எழுத்துப் பிரசுரம் வெளியிட்டிருக்கும் ’சொம்புநீர்ப்பூ’ எனும் சிறுகதைத் தொகுப்பிற்கு எழுதப்பட்ட வாச்சியம். )

                பிரியம் பொங்கிட

                ம. மணிமாறன்.    

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை