Homeசங்க இலக்கியம்பூவிடைப்படினும் யாண்டு கழிந்தன்ன

பூவிடைப்படினும் யாண்டு கழிந்தன்ன


சில ஞாயிறுகளில் அதிகாலையிலேயே முழிப்புத்தட்டிவிடும். என்ன செய்வதென்று தெரியாமல் புத்தக அலமாரியை சுத்தம் செய்வோம் என ஆரம்பித்து, மாலை வரை அதிலேயே பொழுதும் போய்விடும். எவ்வளவு புத்தகங்கள், ஒவ்வொரு புத்தகத்திற்குப் பின்னும் சில நினைவுகள் என அடுக்கடுக்காக நிகழ்வுகளோடுதான் நாள் நிறையும்.

வியப்பாகவும் சிரிப்பாகவும் இருந்தது, இவ்வளவு புத்தகங்கள், எவ்வளவு அமைதியாக இப்படி கிடக்கின்றன இப்போது, இத்தனை ஆண்டுகளில் எங்கு நேர்ந்தது அந்த மாற்றம் எனும் வியப்பு. சிரிப்பு எதற்காக எனில், அப்போது, அப்போது என்றால் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த நிகழ்வுகள்.

ஹைதாராபாத் நகரம். இவள் என் இளம் காதல் மனைவி அப்போது. அழகான சிறிய வீடு நாங்கள் இருவர் மட்டும்தான். புதிய ஊர், புதிய உலகம். நினைத்த மாத்திரத்தில் நேராக நெக்லஸ் ரோடு, டேங்க் பண்ட் புத்தர் சிலை. அந்த ஹூசேன் சாகர் நீர்ப்பரப்பு, நிச்சலனமற்ற நிலா பிம்பம், அதன் மீது படியும் புத்தர் சிலையின் தலைகீழ் சிலை என வாழ்வைக் கொண்டாட நிறைய இருந்தன. குறிப்பாக புதிய உணவு வகைகள். மதுரையில் பானி பூரி மசாலா பூரி என்று ஏமாந்தவைகளின் அசல் சுவை என நாளும் கிழமைகளும் நாவிற்கினிமைகள், குளிர் புகும் உடல்.

பகலில் ஊரில் இருந்து உடன் வந்திருந்த நண்பர்கள் சாப்பிட வருவார்கள். அவர்களோடு அரட்டை என எதற்குமே சடைவோ முகச்சுழிப்போ இல்லாமல் நகரும் நாட்கள், வியாழன் வெள்ளிகள் வந்தால் மட்டும் இன்ன காரணம் என்று தெரியாமல் மிகச் சிறிய அளவில் ஆரம்பிக்கும் சண்டை, அப்படியே கிளர்ந்து வெடித்து, சனிக்கிழமை மதியம் வரை நீண்டு, மீண்டும் டேங்க் பண்ட் புத்தர் சிலையின் காலடியில் சரணடையும் வரை சண்டை தான்.

கிட்டத்தட்ட எல்லா வாரங்களிலும் இது இப்படியாகவே நிகழ்ந்து கழிந்தன. மற்ற நாட்களில் இல்லாத ஒன்று ஏன் இந்த வியாழனில் மட்டும் இப்படி என்றெல்லாம் யோசிக்கும் பக்குவமோ அறிவோ அப்போது இல்லை. இப்போதும் இல்லை என்பது இன்னும் பத்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகுதான் தெளிவாகும். அதை விடுங்கள். பின்னோக்கியே போவோம்.

அப்படித்தான் ஒரு வெள்ளி அதிகாலையிலேயே இரவின் சண்டை மூர்க்கமாகிவிட, இருவருமே உர்ரென்று ஒற்றை வார்த்தைக்கூட பேசாமல் இருந்தோம். மிக நெருங்கிய நண்பர் குடும்பத்தோடு வந்தார். அதுவரையிலான வாரங்களில், மாதங்களில் எங்களுக்குள் ஏதேனும் பிணக்கு என்றாலும் விருந்தோம்பலில் குறைவைக்காத ஆள் அன்று சரியாகப் பேசவில்லை அல்லது தன் சினம் அவர்களும் அறியட்டும் எனும் பொருட்டு ‘தலைவலி’ என கோப்பெருந்தேவியின் உத்தியைக் கையில் எடுத்திருந்தாள்.

பேசி சமாளித்து அனுப்பியபிறகு என் ஈகோவை கட்டுப்படுத்தமுடியாமல் மீண்டும் சண்டையிட்டு வெளியே கிளம்பி விட்டேன்.

இயற்கை மிக மிக சுயநலமானது அல்லவா, நாம் கோவித்துக்கொண்டு எங்கேனும் போகலாம் என்று நினைக்கும் நாளில் ஒரு போக்கிடம் கூட அமையவிடாது. அன்றும் அப்படித்தான் நண்பர்கள் எவரும் எங்கும் இல்லை, அவரவர் பாட்டை நோக்கிப் போயிருந்தனர். தோல்வியை ஒப்புக்கொண்டுவிடாமல் சற்று காலம் தாழ்த்தி மாலையில் வீட்டிற்குள் போனால் முருங்கை மரத்தின் உச்சியில் அமர்ந்திருந்தது அவளுடையை கோவம்.

சரி நாம் அமைதியாக இருப்போம் என முதல் நாள் நான் வைத்த இடத்தில் சென்று பார்த்தால் காணவில்லை,, எங்கு தேடியும் கிடைக்கவில்லை. நான் தேடுவதை ஒரு வித குரூர புன்னகையுடன் கவனித்துக்கொண்டிருந்தார் சகம்.

தேடித்தேடி, கிடைக்கவில்லை என்ற இயலாமை, நண்பர்கள் கைவிட்ட நாள், பசி என அனைத்தும் சேர்ந்து மீண்டும் சண்டையை இழுக்கும் பொருட்டு நான் ஆரம்பிக்கும் முன்னரே, தூக்கி எறிந்தாள்.

“இதான, கட்டிக்கிட்டு அழு”

அந்த வாரத்தின் விகடன் குமுதம் இன்னபிற இதழ்கள்.

ஆம். ஹைதராபாத்தில் வியாழக்கிழமையோ வெள்ளியோதான் கிடைக்கும். அதுவும் பாரடைஸில் ஒரு கடைதான் தமிழ்ப்புத்தகங்கள் அப்போது, எனக்குத் தெரிந்து. சிலவாரங்கள் கிடைக்காது என்றதும் கடையிலேயே சிறிது நேரம் நின்று ஏமாற்றம் தாங்கி திரும்பியிருக்கிறேன். அப்படி ஒரு பித்து, வாரா வாரம் அவற்றை வாசித்துவிடுதல் என்பது என்னமோ ஆகப்பெரிய செயல் என்பதுபோல் இருக்கும்.

“என் மேல இருக்குற கோவத்த ஏன் புக் மேல காட்டுற”

“கோவமே புக்கு மேல தாண்டா”

சற்றும் எதிர்பார்க்காத பதிலாக அது இருந்தது. இதோ இப்போது எழுதும்பொழுது கூட சிரிப்பு வருகிறது. ஆனால் அப்போது அவ்வளவு மூர்க்கமான சண்டையாகத்தான் கழிந்தது. புத்தகம் படிப்பது அப்படி என்ன தவறு என்ற என் வாதத்தை ஏற்கத் தயாராக இல்லை இவள்.

“படி, ஒரு பத்து நிமிசம் படி, அப்பறம் நான் இல்லாதப்ப படியேன் யார் வேணாம்னாங்க, எவ்வளவோ பேசணும்னு நினைச்சுட்டு இருக்கும்போது, இவரு அப்பிடியே புக்குக்குள்ள இருந்துட்டே ம்ம் ம்ம்னுவாராம் நான் பேசிட்டு போகணுமாம். என்ன பேசினோம்னு கூட கவனிக்கிறது இல்ல”

“அட ஒரு மணிநேரம் படிக்கிறதுல்ல அப்பிடி என்ன?”

“ஒனக்குத்தான் ஒருமணி நேரம், எனக்கு ரொம்ப நேரம் மாதிரி.. கடுப்பா இருக்குன்றேன்”

உண்மைதான். புத்தக வாசனை, முனை மடங்கல் எல்லாம் ஏற்படும் முன்னர் அட்டை டூ அட்டை படித்து முடிக்கும் வரை வேறு எதிலும் கவனம் கொள்ளாமல் போவதும், குறிப்பாக இரவு படுக்கையில் படுத்துக்கொண்டு புத்தகத்தை பரிட்சைக்குப் படிப்பதுபோல் படித்துகொண்டும் என இருந்தது மிகக்கடுமையான உளவியலை ஏற்படுத்துமா என்ன? ஆனால் ஏற்படுத்தி இருக்கிறது என தெளிவாக விளக்கிச் சொன்னாள். சமாதானம் செய்யும் பொருட்டு இனி பேசும்பொழுது பேச்சுதான், புத்தகம் இடைவராது என அசத்தியம் செய்துகொடுத்து, வயிறு சரி இல்லை என உள்ளே போய் புத்தகத்தோடு அமரத் துவங்கி அதுவும் பிரச்சனையாகி..என வயது ஆக ஆக, இதோ இப்போது வீடு நிறைய புத்தகங்கள், எந்நேரமும் மொபைல் என தனித்தீவாக ஆகி ஆண்டுகள் ஓடிவிட்டன.

யோசித்துப்பார்த்தால், காதலோ நட்போ, எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதில் இல்லை அது Quality time என்பதாக, முழுதும் அவர்களுக்கானதாக, நமக்கானதாக இருக்கிறதா என்பதில் தான் இருக்கிறது. அந்த நேரத்தில் எந்த சிறிய சின்னஞ் சிறிய பொருள் இடையூராக வந்தாலும் அதை ஏற்பதில்லை மனம். சின்னஞ் சிறிய என்றால், அவ்வளவு சிறிய மென்மையான பூ இடைபட்டால் கூட தாங்க முடியாது என்கிறது ஒரு குறுந்தொகைப்பாடல் எனில் புத்தகமும் அது எடுத்துக்கொள்ளும் நேரமும் ஆகப்பெரிய குற்றமாகத்தான் காதலில் கருதப்படும்.

இந்த சொல்லைப் படிக்கும் எவர்க்கும் சட்டென தித்திக்கும் நீர் பருகிய உணர்வு வரக்கூடும். பூவிடைப்படினும். இந்தச் சொல்லே இப்படி எனில் எனக்கு அதனடுத்து வரும் ‘யாண்டு கழிந்தன்ன’ எனும் சொல்லாட்சி.

மகன்றில் பறவைகள் நீரில் எப்போதும் இணையோடுதான் சேர்ந்தே பயணிக்கும். அப்படி இணைபிரியாமல் இருக்கும்பொழுது நீர்ப்பரப்பில் ஏதே quality time னும் பூ அவைகளுக்கு இடையே வந்துவிட்டாலும், அந்த சில நொடிகள் விலகி மீண்டும் இணைந்துகொள்ளும். அப்படி பிரிந்த நொடிகள் ஒரு நீண்ட காலம்போல, எங்கே எங்கே என பரிதவிக்கச் செய்துவிடுமாம் நீருக்குள். அப்படி அந்த பிரிவுபோல தலைவனைப் பிரிந்த நான் இந்த சிறிது காலம்கூட இருக்க முடியாமல் வருந்துகிறேன். இப்படி பிரிந்து வாழ்வதை விட சேர்ந்து சாவதே மேல்” என தலைவி தன் தோழியிடம் கூறும் பாடல் தான் இந்த பூவிடைப்படினும் எனும் நெய்தல் நிலத்தின் தலைவி கூற்றாக அமைந்த பாடல்.

பூவிடைப்பட்டா ஒரு வருசமா? பூமர், க்ரிஞ் என இப்போது தோன்றலாம்தான். ஆனால் இப்பாடலின் ஆதார உணர்வு, இன்றுவரை இந்த 2K kids வரை அப்படியேதான் இருக்கிறது என்பதற்கு காதல் பொருட்டு வரும் செய்திகள் உறுதிபடுத்துகின்றன என்பது வருத்தமான செய்திதான்.

பாடல் :

பூஇடைப் படினும் யாண்டுகழிந் தன்ன
நீர் உறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவுஅரி தாகிய தண்டாக் காமமொடு
உடன்உயிர் போகுக தில்ல, கடன் அறிந்து
இருவேம் ஆகிய உலகத்து
ஒருவே மாகிய புன்மைநாம் உயற்கே

குறுந்தொகை : 57
சிறைக்குடி ஆந்தையார்

மூவாதஉயர்தமிழ்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை

ஓவியம்

சிற்பம்

குழி