புரை

வெள்ளம் வடிந்தது போல் இருந்தது  செகந்திராபாத் இரயில் நிலையம். ஏதோ ஓர் அமைதி அங்கு
நிலவி இருந்தது. அல்லது சென்னையின் அந்த பிரம்மாண்ட சென்ட்ரல் ரயில் நிலைய மேற்கூரை
கொடுத்த அதிர்வுடன் மனம் ஒப்பிட்டு கொண்டிருக்கலாம்.

எது எப்படியோ, ரகு ஊருக்குக் கிளம்புகிறான். வந்து இரண்டு
நாட்கள் தங்குவதாக வந்தவன் ஒரேடியாக இரண்டு மாதங்கள் தங்கிவிட்டான். எப்போது கிளம்புவான்
என்று நேற்றுவரை யோசித்தது என்னவோ உண்மைதான். ஆனால் இன்று காலை முதலே ஏதோ ஒரு இனம்புரியாத
உணர்வு அடிவயிற்றில் புரண்டு கொண்டிருந்தது. அதுவும் அவன் ஒவ்வொன்றாக எடுத்துத் தன்
பெட்டியில் வைத்துகொண்டு கிளம்புவதைப் பார்க்கப் பார்க்க என்னவோ போல் இருந்தது.

ஆனால் அவனுக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை. ஊருக்குப் போகும்
குஜாலுக்குள் புகுந்துவிட்டான் என்பது அவன் அடிக்கும் சீட்டியிலேயே தெரிந்தது. எல்லாம்
குத்துப்பாட்டுகள் விசில் வேறு. அடியே மனம் நில்லுனா நிக்காதடியை விசிலில் அடிப்பதாக
நினைத்துக்கொண்டு ஊ ஊ என ஊதிக்கொண்டிருக்கிறான் காலையில் இருந்து.

“என்னடா, நம்ம மாசிலாமணி வாத்தி சொல்வாரே அதுமானிக்க இருக்க”

ஏதோ ஒரு ரயில் நடைமேடையில் இருந்து மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது.

“ஜிஞ்சர் ஈட்டிங் மங்க்கி” என்றான் மாசிலாமணி சார் சொல்லும்
அதே ஏற்ற இறக்கத்தோடு.

“டக்குனு கிளம்பிட்டியேடா  ரெகு”

“ஏண்டா மாப்ள, ஒனக்கே நல்லா இருக்கா, வந்து ரெண்டு மாசம்
ஆச்சுடா, சரி விடு அடுத்த வாரம் வர்றேன்”

சொல்லிவிட்டு கலகலவென சிரித்தான். எனக்காகப் பொய் சொல்கிறான்.
ஆனாலும் நிம்மதி அடைந்தது மனம்.

கொஞ்சம் கொஞ்சமாக மனம் அவன் போவதை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தது.
கூட்டம். எங்கு பார்த்தாலும் கஜகஜவென ஜனத்திரள் தென்படத் துவங்கியது.

“டேய், இங்கயே இருக்கணும்னுலாம் அவசியமே இல்ல செரியா, பாரு,
முடியலன்னா கெளம்பி வந்துட்டே இரு, அங்க நம்ம ஊர் இருக்கு”

இதே ரகுதான் காலையில், என்ன ஆனாலும் இங்கிருந்து வந்துவிடாதே,
வாழ்க்கையை அனுபவி, இங்குதான் வாழ்வின் அடுத்த கட்டம் நோக்கிய நகர்வு இருக்கிறது, அங்கு
மண்ணைத்தவிர ஒரு மண்ணும் இல்லை என்றெல்லாம் சொன்னான். அது என்னை தயார்ப்படுத்த சொன்னது.
இதோ இப்போது சொல்கிறானே இதுதான் ரகுவின் அசல் சொற்கள்.

“ம்ம் செர்றா”

அப்போது, ஐம்பது, ஐம்பத்தைந்து வயது மதிக்கத்த ஒருவர், ஒரு
சிறிய கைப்பை, அதில் துணிகள் பிதுங்கி வெளியே தொங்கிக்கொண்டிருந்தன. இன்னொரு கையில்
கட்டப்பை. இந்தக் கட்டப்பையைப் பார்க்கும்போதெல்லாம் அதில் இருக்கும் ஊர்ப்பெயரைப்
பார்க்கும் வழக்கம் எனக்கு. ஆனால் தெலுங்கில் பொடி எழுத்தாக இருந்தன. சாயம் போன பழைய
பை வேறு.

முக்கியமான ஒன்று, அவருக்கு அருகில், அவர் மகளாக இருக்கக்
கூடும். தாவணியா சேலையா என்று சட்டெனப் புரிந்திடாதவாறு ஓர் உடை. லங்காவணியோ லாவணியோ
ஏதோ அதுபோன்று ஒன்றை  சொல்கிறார்கள் இங்கே.
அவருடைய ஏழ்மையான தோற்றத்திற்கு சற்றும் தொடர்பில்லாமல் பளிச்சென வசீகரமாக இருந்தாள்
அப்பெண்.  அந்த அரக்கு நிற உடை, அப்பெண்ணின் பளிச்சென்ற கண்கள் என நிறைய காரணங்கள்
இருந்தன. ஒரே வீட்டினர் எனும் ஜாடை தெரியவேண்டுமானால் அவர்களுடைய காதும்,தாடைப்பகுதியிம்
பார்த்தால் புரிபடும் என முன்பு எப்போதோ அப்பா யாரிடமோ சொன்னது நினைவிற்கு வந்தது.
ஆனால் அப்படி எல்லாம் ஒப்பிட்டுப்பார்க்கும் சூழல் அங்கில்லை.

“பாபு, தெலுகா”

என்ற அவருடைய சன்னமான குரல் எங்களுக்கு சரியாகக் கேட்கவில்லை.
ஆனால் அவரைப் பார்க்கும்போதே ஏதோ உதவி கேட்கிறார் எனப்புரிந்தது.

நான் ஏதாவது பேசிவிடப்போகிறேன் என என்னைத் தொட்டு அமர்த்திவிட்டு,
ரகு ஆரம்பித்தான்.

“பாபுவும் இல்ல, தெலுங்கும் இல்ல”

ரகுவின் குரலில் இருந்த குதர்க்கம் அவரை இன்னும் கொஞ்சம்
தயக்கம் கொள்ளச் செய்திருக்கக் கூடும். கொஞ்ச நேரம் அமைதியாக நின்றார்.

“சொல்லுங்க, சொப்புங்க”

என்றான்.

அவர், கட்டைப்பையில் இருந்து எதையோ எடுக்கும் முயற்சியில்
தன் காலை சட்டென உயர்த்தி மடக்கி, தன் தொடையை ஸ்டேண்ட் போல் ஆக்கி, அதில் வைத்து எடுத்தார்.

பயணச்சீட்டும் சில காகிதங்களும் இருந்தன.

 “சார் மாதி மிரியால்குடா”

என ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். ஏதோ பெரிய மந்திரி மனு வாங்கும்
வைபவம் போல் ரகு அவர் நீட்டிய காகிதங்களை வாங்கிப்பார்துக்கொண்டிருந்தான். வாங்கிக்கொண்டே
ஒரு “ம்ம்” வேறு.

 சார்மினார் எக்ஸ்பிரஸ்
நடைமேடைக்கு வந்துகொண்டிருக்கிறது என்ற அறிவிப்பு வெட்டி வெட்டி வந்துகொண்டிருக்க,
அந்த அறிவிப்பு முடியும் வரை காத்திருந்தார்.

“ஓ சார்மினாரா, அப்போ தமிழ் அதேகதா சார், நாங்க மிரியால்குடா
போகணும் சார், போனவாரம் இங்க வந்தோம்”

“பர்ஸ் தொலஞ்சுருச்சா” என்றான் அவரை இடைமறித்து. போனவாரம்
அவர் வந்ததற்கு சாட்சியாக கொடுத்த பயணச்சீட்டை அவரிடே நீட்டிக்கொண்டுதான் கேட்டான்.

“அய்யோ இல்ல சார்”

நான் ரகுவின் தோளைத் தொட்டேன்.

“பர்ஸ் எல்லாம் இல்ல சார் நம்மளுக்கு. பையன் வீட்ல பேச வந்தோம்
சார். ஆனா “

அவர் குரல் கம்மியது. ஆரம்பத்தில் இருந்து இந்த நொடிவரை அப்பெண்
எந்தச் சலனமும் இல்லாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். எனக்கு என்னவோ போல் இருந்தது.

“எங்க இண்ட்டி பேரு கேட்டாங்க சார், அவ்ளோதான். இவளுக்கு
அதெல்லாம் புரியாதுல்ல”

எங்களுக்கும் புரியவில்லை. ஆனால் ஏதோ காதல் விவகாரம் கைகூடவில்லை
என்பது போல் நானாக நினைத்துக்கொண்டேன்.

“சரி இப்ப என்ன வேணும்னு சொல்லுங்க” என்றான் ரகு தீர்க்கமாக.

அவர் ஏதோ சொல்ல வாய்த் திறக்கும்முன்னரே இன்னும் தீர்க்கமாகத்
தொடர்ந்தான்

“காசெல்லாம் கிடையாது, நோ டப்பு” என பணத்திற்கான தேசிய சைகையை
செய்துகாட்டி இல்லை என்றான்.

அவர் சட்டென நிறுத்தினார். அமைதியாக என்னைப் பார்த்தார்.
நான் அந்தப்பெண்ணின் மீது இருந்த என் பார்வையை விலக்கி ரயில் வருகிறதா என எட்டிப்பார்த்தேன்.

ரகு இல்லையென்றால் இந்நேரம் சுதந்திரமாக கையில் இருக்கும்
பணத்தை அவரிடம் கொடுத்து நாயகனாக பாவித்துக்கொண்டு வீட்டிற்குப்போயிருப்பேன். இவன்
விடமாட்டான். இன்னும் என்ன என்ன கூத்து அடிக்கப்போகிறானோ எனத் தோன்றிக்கொண்டே இருந்தது.
இந்த ரயில் வந்துதொலைத்தால் பரவாயில்லை என்பதுபோல் மீண்டும் எட்டிப்பார்த்தேன். நீண்டு
வளைந்து அந்தியின் மஞ்சளில் பளபளத்தன தண்டவாளங்கள்.

 “சொல்லுங்க”

அவர் அப்பெண்ணைப் பார்த்துக்கொண்டே “நைட் குள்ள மிரியால்குடா
போகணும்”

“சரி, வா நான் டிக்கெட் எடுத்துத்தரவா”

அவரை விட எனக்கு சட்டென நிம்மதியானது. பரவாயில்லை, இன்று
ஒரு நல்ல காரியம் என நினைக்கும்போது எனக்கு மட்டும் புரியும் விதத்தில் பள்ளிக்காலத்தில்
இருந்து நாங்கள் குழுவுக்குறீயாக பேசும் மொழியில் சொன்னான்.

 “இம்ட்டிப்ப டிம்டிக்கெட்
வெம்ட்டேனாம்னு சொம்ட்டொல்லுவான் பம்ட்டாரு”

 ‘இப்ப டிக்கெட் வேணாம்னு
சொல்லுவான் பாரு’.

அடேங்கப்பா. இந்த பாஷையை பழகுவதற்குள் அப்போது தாவு தீர்ந்தது
நினைவிற்கு வந்தது. பாலமுருகனோ டவுண்டனோதான் இதைத் தூக்கிகொண்டு வந்தார்கள். அவனுடைய
அண்ணன் காலத்தில் பேசுவார்கள் என்று. ஒவ்வொரு சொல்லிற்கும் முன்னால் அதே எழுத்தில்
துவங்கி இம்மும் இட்டும் போட்டுப் பேசவேண்டும். வேகமாகப் பேசும்போது எதிராளிக்குப்
புரியாது.

கிரிக்கெட் ஆடும்போதெல்லாம் ரகு இதை வைத்து உயிரை வாங்குவான்.
துரை கீப்பர் வேறு. இந்தப்பக்கமா போடு அந்தப் பக்கமாப் போடு என்பதை பேட்டிங் பிடிப்பவனுக்குப்
புரியாமல் சொல்வதாக நினைத்துக்கொண்டு “இம்ட்டிங்கிட்டு” அம்ட்டங்குட்டு” என கத்திக்கொண்டே
இருப்பான்.

ஒருமுறை தெற்குவாசல் டீமோடு அப்படி அவனுடைய நுட்பத்தைப் பயன்படுத்தினான்.
அந்த அணியின் கேப்டன், பந்து வரும்முன்னரே திரும்பி, ஏத்தினான் பாருங்கள் ஒரு ஏத்து,
பந்து பம்பாய்க்குப் போய்விட்டது.

அடித்து முடித்ததும் ரகுவை நோக்கி “எம்ப்டெப்ப்டி அம்ட்டடி”
என்றான். எங்களுக்கு சிரிப்பு. மேட்ச் முடிந்த பிறகும் அதைப்பற்றியே பேசி சிரித்தில்
ரகு கோவித்துக்கொண்டான். என்னிடம் இரண்டு நாட்கள் பேசவில்லை. அனேகமாய் அதுதான் முதலும்
கடைசியுமாய் ரகு என்னிடம் பேசாமல் இருந்தது.

சரி, விசயத்திற்கு வருவோம்.

ரகுவின் கேள்விக்கு நியாயப்படி சட்டென முகம் மலர்ந்து சரி
என்றுதானே சொல்லவேண்டும். அவர் தயங்கிதயங்கி நின்றார்.

அப்பெண்ணோ அங்கிருந்து நகர்வதற்கான உடல்மொழிக்குள் போனாள்.

“ம்ம், சொல்லுய்யா சீக்கிரம் எனக்கு ட்ரெயின் வரப்போகுது,
டிக்கெட் எடுத்துத்தரவா?”

“ஒங்களுக்கு எதுக்கு..” என இழுத்துக்கொண்டே பாதையை எட்டிப்பார்த்து,
“ட்ரெயின் வந்துரும்” என்றார்.

“அந்த வெங்காயமெல்லாம் நாங்க பாத்துக்குறோம், டிக்கெட் எடுத்துத்தரவா
சொல்லு, இல்ல கெளம்பு”

என்று பட்டென அவரிடம் இருந்து முறித்துக் கொண்டு என்னை நோக்கித்
திரும்பினான். சற்றுத் தள்ளி வந்து நின்றோம்.

“டேய் நான் கெளம்புனதும் நீ காசெல்லாம் குடுத்துட்டு இருக்காத,
சிட்டையப் போட்டு போய்ட்டே இருப்பாய்ங்க. டிக்கெட்டுக்கும் இல்ல ஒரு மயிருக்கும் இல்ல,
கட்டிங்கப் போட்டு அவளத் தடவிட்டு போய்ட்டே இருப்பான்”

அவரைப் பார்த்தேன். அதே இடத்தில் அப்படியே நின்று எங்களையேப்
பார்த்துக்கொண்டிருந்தார். அப்பெண் அருகில் இருந்த இடத்தில் போய் அமர்ந்துகொண்டாள்.
பக்கவாட்டில் பார்க்க இன்னும் பளிச்செனத் தெரிந்தாள்.

சரி, எவ்வளவோ செலவு செய்கிறோம். ஏமாற்றுவதாகவே இருக்கட்டுமே,
நூறு இருநூறு ரூபாயில் என்ன வந்துவிடப்போகிறது. கொடுத்துத் தொலைத்தால் நமக்காவது நிம்மதியாக
இருக்குமே என்றெல்லாம் தோன்றியது.

“என்னடா என்னைய கருவுறயா உள்ளுக்குள்ள”

“ச்ச, ஆனா நம்ம பெரிய புத்திசாலின்னு இவங்ககிட்டக் காட்டி
என்னடா ஆகப்போகுது ரெகு, நாம குடுக்குற காசுல என்ன கோட்டையா கட்டப்போறான், திம்பான்,
மிஞ்சி மிஞ்சிப்போனா குடிப்பான்”

ரகு என்னைப் பார்த்தான். திரும்பி அப்பெண்ணைப் பார்த்தான்.
மீண்டும் என்னைத் திரும்பிப் பார்த்தான்.

“ஓஹோ, ஜாரியப் பார்த்ததும் அய்யாவுக்கு அப்பிடியே பொங்குதோ”

இல்லை என்பதை உணர்த்த சட்டென எதிர்திசையில் திரும்பிக்கொண்டு
உணர்த்தினேன்.

இரயில் உள்ளே நுழையும் சத்தம் கேட்க, எல்லோரும் மொத்தமாக
அந்தப்பக்கம் திரும்பினார்கள்.

முகப்பை நுழைத்துக்கொண்டு மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது.

ரகு பரபரப்பாக தன் பெட்டியை நோக்கிப் போனான். நான் வேகமாகவும்
மெதுவாகவும் அவனுக்குப் பின்னர் போய்க்கொண்டிருந்தேன்.

ஊருக்குப்போகிறான் எனும் எண்ணம் ஒருபக்கம், அங்கே அந்த ஆள்
மகளோடு உதவிக்காக அமர்ந்திருக்கிறாரே போய்விடுவாரோ எனும் குழப்பம், எல்லாவற்றையும்
விட மக்கள் இங்கும் அங்கும் ஓடித் தாவி ஏறிக்கொண்டிருந்த விதம் என பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது
மனம்.

ஏறி தன் இடத்தில் போய் பைய்யை வைத்துவிட்டு இறங்கி வந்தான்.
உள்ளே ஹைதராபாத்திலேயே ஏறிய ஆட்கள், ஏன் இங்கு வேறு நிறுத்தி நேரத்தை வீணடிக்கிறார்கள்
என்பதுபோல் நடைமேடையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

ரகு நேராகப் போய் பெட்டியில் இருக்கும் ஆட்களின் பெயர்கள்
தாங்கிய பட்டியலைப் படித்தான்.

அவனுக்கு அருகில் இருக்கும் ஆட்களின் பாலினம் மற்றும் வயதைப்
பார்த்துவிட்டு “நல்ல வேளடா கெழட்டுப்பயலுக இல்ல, கொறட்ட விட்டே கொன்றுவானுக” என்றான்.

“சரி, ஏறுடா, கிளம்பிறப்போகுது”

“இர்றா, வெரட்டுற”

என நடைமேடையில் இருந்த கடையில் தண்ணீர்பாட்டில் வாங்கினான்.
வாழைப்பழங்களை எடுத்தேன்.

“இந்தாடா”

“அய்ய, இதெல்லாம் வேணாம்டா”

என்று ஏறியவன், மேலிருந்து எட்டிப்பார்த்தான்.

“போய்ட்டான் அந்தாளு, நீ தேடிப்போய் ஹீரோவாகுற வேலை எல்லாம்
வச்சுக்காத, சரியா இவனே, கெளம்பு”

ரயில் மெல்ல நகர்ந்தது. கொஞ்ச தூரம் நடந்து போகப்போக ரயில்
வேகமெடுத்தது.

ரகு குனிந்து பார்த்து கையைக்காட்டினான். சட்டென அய்யோ போகிறானே
இப்படி அனாதையாக விட்டு என்ற நினைப்பு வந்து கண்ணில் திரைகட்டியது. அவனோடு இருப்பது
என்பது எந்த ஊரில் இருந்தாலும் சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வைத்தரவல்லது என அந்த
நொடியில் புரிந்தது.

இரயில் போய்விட்டது. ரகு போய்விட்டான்.

திரும்பி நடக்கும்பொழுது குறுகுறுப்பாக இருந்தது மனம்.

அவரைத் தேடக்கூடாது என எவ்வளவு முயன்றும் முடியவில்லை. அந்த
முதல் நடைமேடையின் நடுவில் வெளியேறும் வழி வந்த பிறகும், வெளியேற மனமில்லாமல் நேராக
நடந்தேன்.

ஒரு ரயில் போனபிறகான நடைமேடை என்பது திடீர்த்தனிமைக்குத்
தள்ளப்படும் மனம் போல் காட்சியளித்தது. இரண்டு பக்கமும் வெறுமை.

எதிரே பார்த்தேன். மூன்று நான்காவது மேடைகளில் ஆட்கள் நிறையப்பேர்
இருந்தார்கள். அவர் தெரிவது ஐயம் என்றாலும் அப்பெண் நிச்சயம் எங்கு நின்றாலும் கண்ணில்
படக்கூடிய தன்மையோடு இருந்தாள் என்பதால், எங்கும் இல்லை என பத்து நிமிடங்கள் தேடிப்பார்த்துவிட்டு
வெளியேறினேன்.

உங்களைப்போலத்தான் நானும் நினைத்தேன். ஆம் வெளியே, எங்காவது
தட்டுப்படுவார்கள் என. அப்படி ஏதும் நிகழவில்லை.அவர்கள் நிற்கும் இடங்களின் சாத்தியங்களில்
எல்லாம் சற்று நின்று பார்த்துவிட்டு, இதோ வீட்டிற்கே வந்துவிட்டேன்.

ரகு கிளம்பிய வெறுமையை விட, அவர்களுக்கு உதவவில்லையே, ஒருவேளை
உண்மையிலேயே ஊருக்குப் போகத்தான் காசு தேவைப்பட்டிருக்குமோ, அப்படி ஒருசதம் இருந்திருந்தால்
கூட எவ்வளவு பாவம் அது என்று ஏதேதோ குழப்பமான யோசனைகள் மனம் முழுக்க விரவிக்கொண்டே
இருந்தன.

இந்த ரகு ஒரு லூசுப்பயல் எனும் எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக கோவமாக
உருவெடுத்தது.

நம்பமாட்டீர்கள், இதோ, இப்படி அடுத்த நாளும் அதே நேரத்திற்கு
வந்து நிற்கிறேன் பாருங்கள் செகந்தராபாத் நிலையத்தில். ஆம். நேற்றில் இருந்து ஏதோ ஒன்று.
எந்த வேலையும் ஓடவில்லை. ஒருவேளை ரகு சொன்னது சரியாக இருந்தால் இன்றும் அங்கே வந்து
யாரையாவது ஏமாற்றிக்கொண்டிருப்பார்கள் அல்லவா?. என் நோக்கம் அவர்கள் ஏமாற்றுகிறார்களா
என்று அறிவெதெல்லாம் இல்லை. நேரில் பார்த்து நூறோ இருநூறோ கொடுத்துவிட்டால் இந்த மன
உளைச்சல் சரியாகிவிடும். என் மனநிம்மதி இருநூறு ரூபாய்க்குப் பெறாதா என்ன?.

இல்லை. எங்குதேடியும் அவர்கள் இல்லை. முந்தைய நாளைவிட இன்று
அதிகமாக வெறிச்சோடிக்கிடந்தது அந்த நடைமேடை.

ஒரு சிறிய நிம்மதி படர்ந்தது. ஏமாற்றுபவர்கள் இல்லை. எப்படியோ
ஊருக்குப் போய்விட்டார்கள் பாவம்.

இந்த நான்கைந்து நாட்களில் சுத்தமாக மறந்துபோய்விட்டது. புத்தர்
சிலைக்கு அடியில் சிறிய பாய்மரக்கப்பலில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த ஆட்டம்பாட்டம்  ஒன்று மனதை நிறைத்து இருந்தது 

“ஏண்டா ஊருக்கு வந்தனா இல்லையான்னு கூட போன் பண்ணல, ஆபிசர் ஆகிட்டீங்களோ தொர”

“பிஸியா போச்சுடா”

“ஓஹோ, அப்ப நாங்கல்லாம் வெட்டியா சுத்துறம்ல, ரைட்டு மாப்புள,
போன் பண்ணேன் பாரு என்னயச் சொல்லணும்”

“அட ஏண்டா, ஆமா ரகு, அன்னிக்கு ஹெல்ப் கேட்டாங்கல்ல பாவம்டா,
அப்பறம் தேடிப்பார்த்தேன், நெஜமாவே ஊருக்குப்போகத்தான் கேட்ருப்பாங்க போலடா”

“டேய், நான் வந்த ட்ரெயின்ல்லயே வித்தவுட்ல ஏறிட்டாண்டா அந்தாளு.
அடுத்த பெட்டில. ஒரே சத்தம், நாந்தான் டி டி ஆர்ட்ட எவ்ளோ ஃபைன்னு கேட்டு கட்டினேன்.
அந்தப்புள்ள வீட்டு அட்ரஸ்லாம் குடுத்துச்சு, அதெல்லாம் வேணாமாத்துன்னு தூக்கிப்போட்டேன் மாப்ள. ஃபைனையும் கட்டி நூறு ஓவாயையும்
குடுத்துட்டு வந்தேன்”

சொல்லிவிட்டு கலகலவென சிரித்தான். .

நிம்மதியாக இருந்தது.

*

 

RELATED ARTICLES

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை

ஓவியம்

சிற்பம்

குழி