‘யாயும் ஞாயும்’ என குறுந்தொகையில் ஆரம்பித்து, ‘நற்றாய் கூற்றுகள் வழி தாய்மையின் பதற்றங்கள், தவிப்புகள் கடந்து, அம்மா என்றழைக்காத பாடல் திரையிசை வரை ‘அம்மாக்களால்’ ஆனது இலக்கிய மற்றும் அன்றாடமும் ஆன உலகம். தீரத்தீர அம்மாவையும் தாய்மையையும் தொடர்ந்து புனிதப்படுத்தி,வியந்தோதியபிறகும், அவளின் அன்பைப்போலவே அவ்வுணர்வு உலகம் உயிர்த்திருக்கும்வரை உயிர்ப்புடன் தான் இருக்கும். அப்படியான ஓர் உயிர்ப்பு, இத்தொகுப்பு, ‘அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக் கொண்டிருந்தது’.
இதுவரையிலான நாம் பார்த்த அம்மா, மென்மையன்புக்கவிதைகளை, அல்ல இப்படியும் என்று தலைகீழாக்கிக் கொடுத்திருக்கிறார் கவிஞர் கதிர்பாரதி. அதனால்தான் முதலில் 60 என இறுதிக் கவிதையில் இருந்து நகர்கின்றன, பக்கங்களும் படிமங்களும் நம் எண்ணங்களும். சர்ப்பத் தீண்டலில் சரசரவென கீழிறங்குவது போல் அறுபதிலிருந்து ஒன்றுக்கும் பின்னர் ஏணி ஏற்றம் போல் ஒன்றிலிருந்து அறுபதுக்குமாக இத்தொகுப்பு ஓரு பரமபத ஆட்டம்.
சமீபத்திய நிகழ்வொன்றில் எழுத்தாளார் பா.வெ சொன்னது “கவிதைகள் நிகழ்வுகளில் அல்லாமல் நிச்சலனத்தில் இருந்து எழுந்தவையாக இருந்தன”. மிகப்பிரமாதமான அவதானிப்பு. கதிர்பாரதியின் கவிதைகளில் நிச்சலனம் என்பது படித்து முடித்த பிறகு ஏற்படும் ஒன்றாக, மனம் கனக்கச் செய்யும் ஒன்றாக நிகழ்ந்திருக்கிறது. சொற்களால் ஆனது கவிதை என்றிருந்த பொழுதில், அப்படி அல்ல, கருவில், பாடுபொருளில், நிலத்தில், நிஜத்தில் பட்டுத் தெறித்து எதிர்வெயில் மினுங்க பொலியும் கடல்போல் ஆனது என கவிதைகளோடு வந்தவர்தான் கதிர்பாரதி. ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தொகுப்பில் இப்பொலிவை நீங்கள் கண்டுகொள்ளலாம் எனில் இத்தொகுப்பில் அதை துய்த்துணரலாம்.
‘/அம்மாவை நிரம்பப் பிடித்த
அப்பத்தா சொன்ன சித்திரம் இது’/
மொத்தத் தொகுப்பின் அச்சு இந்தச் சித்திரத்தில் செழுமைகொண்டு சுழல்கிறது, எனக்கு. இன்னதுதான் தாய்மைக்கான கவிதை பாடுபொருள் என்பதையெல்லாம் உதறிவிட்டு, நினைவில் இருக்கும் யாவையும் கச்சிதமான மொழியில் கவிதைகளாக்கிய விதம், மிகப்பிடித்தது. கச்சாப்பொருட்களை எந்த அலங்கரா ஆபரணங்களும் அல்லாமல் குவித்து வைத்தது போல் இருந்தது என்றும் சொல்லலாம்.
தொகுப்பு முழுக்கச் சொற்களின் லாகவம் அறுபதிலிருந்து ஒன்று, மீண்டும் ஒன்றிலிருந்து அறுபது எனப் பயணப்பட வைக்கிறது.
அந்தி வேறு /அவளைப்போல் பற்றி எரிகிறது/
இப்படிப் பதறிப்பதறி பக்கங்களைத் திருப்பினால், இவ்வரிகள் பதற்றம் போக்கி மனதைத் தண் என்றாக்கியது
/அப்போது
அவள் பொன்மூக்குத்தி
வேப்பம் பூவாக மினுக்கம் காட்டியது/
மிகச்சிறிய தொகுப்பு, வெகுநாட்களுக்குத் தன்னுள் வைத்துக்கொள்ளும், காலம்.
நீங்கள் அம்மாவோடு வசிப்பவர்கள் எனில் தொகுப்பைப் படித்து முடித்ததும் ஏதேனும் பேசவேண்டும் என்ற உந்துதலில் அவர் முன் போய் நிற்பீர்கள், சொற்கள் தொலைத்திருப்பீர்கள். அம்மா ஊரில் இருக்கிறார் எனில் பேருந்தேறி ஊருக்கு விரையலாம், நிற்க,
அம்மா நினைவுகளில் மட்டும் இருக்கிறார் எனில், இத்தொகுப்பு அவரை சற்று நேரம் ரத்தமும் சதையுமாய் உங்களருகில் வலம்வரச் செய்யக்கூடும்.
கவிஞர் ராஜசுந்தர்ராஜனின் ‘முகவீதி’ (தமிழினி) தொகுப்பு தான் இதுவரை நான் பெரும்பாலும் நண்பர்களுக்குப் பரிசாக கொடுத்தப் புத்தகம். இனி இந்த ‘ அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக் கொண்டிருந்தது’ புத்தகமும் அதில் சேர்ந்து கொள்ளும்.
இத்தொகுப்பும் கதிர்பாரதியின் முந்தைய தொகுப்புகளைப் போலவே, நிறைய விருதுகளைப் பெற்றுத்தரும். அதற்கான தகுதியோடு வந்திருக்கும் கச்சிதமான தொகுப்பு இது.
நண்ப,கதிர்பாரதி. பொலிந்து திகழ்ந்திருக்கிறது உங்கள் மொழி. வாழ்க.
நாதன் பதிப்பக வெளியீடு
விலை- ₹100