பதுமை

’நீர்வார் கண்ணை எம் முன் வந்தோய் யாரையோய் நீ மடக்கொடி’ என்று

கண்ணகியைப் பார்த்துக் கேட்ட பாண்டிய மன்னரைப் போல் நான்

அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டு முறை கேட்டும்

அவளிடம் இருந்து பதில் இல்லை அவள் தன் நிலைக்கு வரட்டும் என

சற்று அமைதி காத்தேன்.

ஆம், கண்கள் சற்றுக் கலங்கி இருந்தன. அவள் எனக்கு எதிரே

அமர்ந்திருந்ததால், முட்டியில் கிழிந்திருந்த ஜீன்ஸ் பிளவின் நூற்

பிசிறுகள் வெகு நேர்த்தியாக வெட்டப்பட்டிருந்தன.

நேர்த்தியற்றதைத்தானே பிசிறு என்போம். பிசிறில் அவ்வளவு நேர்த்தி.

சேலையோ தாவணியோ உடுத்தி இருந்தால், ஜெ அல்லது மாருதியின்

ஓவியம் போல் இருந்தது அவள் அமர்ந்திருந்த விதம் என்று

சொல்லலாம்தான். கச்சிதமான டீ ஷர்ட். முட்டியில் பிரதானமாகவும்

ஆங்காங்கே சிறிதும் பெரிதுமாக ஓட்டைக்கிழிசலுமான ஜீன்ஸ் என

நவயுக மங்கை என்பதால் ஷ்யாமின் ஓவியம் போல் அமர்ந்திருந்தாள்

என்று வைத்துக்கொள்வோம். ஓவியர்களின் பெயர்களை பார்த்ததும்

புரிந்திருக்கும், ஆம், நான் ஓர் எழுத்தாளன். 

எத்தனையோ அனுபவங்களை எதிர்கொண்டிருக்கிறேன், ஆனால் இந்த அனுபவம் சற்று 

வினோதமாக இருக்கிறது. அதைவிடக் கொடுமை, இத்தனை நாட்கள்

எங்கோ வீட்டில் அமர்ந்து எழுதிக்கொண்டிருந்தவன் இப்போதுதான்

இரண்டு மூன்று மாதங்களாக இந்தப் பத்திரிகை அலுவலகத்தில்

வேலைக்கு சேர்ந்து, நேரம் கிடைக்கும்போது கதைகள்

எழுதிக்கொண்டிருக்கிறேன். இத்தனை நாட்கள் வராமல் இப்படி,

அலுவலகம் என்று ஒன்று ஆன பின் தேடி வந்திருக்கிறாள். குனிந்து தன்

அலைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். நான் அதே கேள்வியை

இன்னொருமுறைக் கேட்டால் கண்களில் திரைகட்டி உகுக்கத் தயாராக

இருக்கும் நீர் உருண்டுவிடக்கூடும். கண்ணீர் மொபைலில் விழாமல்

நடுவிலேயே தடுத்தாட்கொள்ளப்படும் என்றாலும், ஒரு பெண் அழுவதை

எப்படி எதிர்கொள்வது,எழுத்தாளனாகவே இருந்தாலும் அது கடினம்

என்பதை எல்லாம் விட, வேண்டுமென்றே இரண்டு முறை டீயை

எடுத்துவந்து, வந்து வந்து போகும் சுருள்சுப்புவின் பார்வையும் நான்

எதேச்சையாகப் பார்க்க, ம்ம் ம்ம் நடத்துங்கள் என்பதுபோல் புருவம்

உயர்த்தி ஜமாய் என்பதுபோல் பாவனை செய்துவிட்டுப் போவது என,

மொத்த பத்திரிகை அலுவலகமும் என் நாற்காலியை நோக்கி திரும்பி

இருப்பது போல் இருந்தது. மிக முக்கியமாக அந்தப் பெண்ணிலிருந்து

சுழன்று மேல் எழுந்து காற்றில் விரவிக்கொண்டிருக்கும் வாசனை சுகந்தம்.

விளம்பரங்களில் காட்டுவார்களே, அப்படி கண்கூடாக அந்த சுகந்தம்

காற்றில் மிதப்பது போல் இருந்தது.

சட்டென நிமிர்ந்தாள். கண்களை விட மூக்கின் கூர் என் கண்களைத்

தாக்கியது. தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டுவிட்ட

தீர்க்கத்தோடு தன் தலைமுடியை ஒருமுறை இருகைகளாலும்

பின்னோக்கித் தள்ளிப் பிடித்துப்பின் விட்டாள். அது பிடிபட்டு மீண்டும்

முன்வந்து முன்போலவே விழுந்துகொண்டது. இவை எதையும்

கவனிக்காமல் அவள் முகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

“சார், நீங்க பொய் சொல்றீங்க, எனக்கு அவனோட அட்ரஸ் வேணும்”

மிகச் சரியாக கையில் ஒரு காகித்தையும் பேனாவைத் திறந்து மூடியைப்

பின்னால் சொருகி, ஏதோ மும்முரமான, அவசரமான வேலையில்

இருப்பதுபோன்ற தோற்றத்தோடு வந்தார், சப் எடிட்டர்.

“சென்றான்னு இருக்கு, போனான்னு மாத்திரவா” என்றார். அவர்

கண்கள்,மனம் ஒட்டுமொத்த மூளை எல்லாம் அவள்மீது குவித்து, ஒப்புக்கு

என்னிடம் இதைக் கேட்டுக்கொண்டிருந்தார். நான் பதில் ஏதும்

சொல்லவில்லை, அது அவருக்குத் தேவை இல்லை என்பது இருவருக்கும்

தெரியும் என்று நினைத்தேன். மூவருக்குமே தெரிந்திருந்தது என அவள்

மிக சன்னமாக சிரிக்க முற்பட்டபோது புரிந்தது.

எப்படியும் இன்னும் இரண்டு முறை வருவார் இதுபோன்ற தொல்காப்பிய

இலக்கணத்தோடு ஒப்பிட்டு மாற்றும் பிழைகளுக்காக. இருக்கட்டும்.

“மேடம்”

“சார் அப்பிடிக் கூப்புடாதீங்கன்னு சொன்னேன்ல்ல லாஸ்ட் டைமே”

“சரிம்மா,மேடம்னு சொல்லல.. அதவிடு,நானும் போன தடவயே

சொன்னேன்ல்ல, ரொம்ப ரொம்பத் தெளிவா”

நான் முடிக்கும் முன்னரே மறுத்துத் தலையாட்டினாள்.

“இல்ல சார். எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும். உங்களுக்கு நான்

சொல்றது புரியாது.”

என் உதாசீனச் சிரிப்பைப் பார்த்துப் புரிந்து பதறியவள்,

“சார், அப்பிடி இல்ல. உங்களுக்குப் புரியாதது எதுவும் இல்ல, ஆனா இந்த

விசயம்.. ரொம்ப ரொம்ப பெர்சனலான ஒண்ணு. அத எப்பிடி நீங்க

கற்பனைன்னு சொல்லிற முடியும். எனக்கு அவனோட அட்ரஸ் குடுங்க

சார் ப்ளீஸ்”

இது மூன்றாவது முறை என்பதால் தான் சற்றுக் கடுமை காட்டி

இருந்தேன். அதன் பொருட்டே அவளுக்கு சட்டென கண்ணீர்

சூல்கொண்டுவிட்டிட்ருந்தது.

அலுவலகத்தில் எல்லோரும் பார்க்கிறார்களே என்ற பதைபதைப்பு

ஒருபக்கம். ஒரு பதுமை, மஞ்சள் வெய்யில் பூத்த மாலை நேரத்தின்

புல்வெளியில் நடக்கும்போது ஏற்படும் பாதசுகத்திற்கு ஈடாக கண்களுக்கு

ஏற்படும் அலாதியான உணர்வைத் தரும் பதுமை. எவ்வளவோ பேசலாம்

என்றாலும் எதுவும் பேச முடியாத ஒரு சூழல். எல்லாம் கலந்து என்னை

சற்று வெறுப்பான பதிலைத் தரச் செய்துவிட்டது. ஏனெனில் கேள்வி

அப்படி. அதாவது என் கதைகளில் தொடர்ந்து வரும் ஒரு கதாப்பத்திரம்

செழி. அவனுடைய முகவரி வேண்டும் என்றும், அது கற்பனையாக

இருக்க முடியாது என்றும் மிக மிக நெருக்கமான உணர்வுகளை

உள்ளடக்கிய சில நிகழ்வுகள், அவன் கதையில் பேசும் சொற்கள் எல்லாம்

அவளுக்கேயான ஒன்று எனவும் சொல்லி, இப்போது அவனைப் பார்த்தே

ஆகவேண்டும் என மூன்று முறை வந்துவிட்டாள்.

முதல்முறை அட என்று என் எழுத்தின் மீதான மிதப்பு ஏற்பட்டது.

ஏனெனில் அது முழுக்க முழுக்க கற்பனைப்பாத்திரம் என்பது எனக்குத்

தெரியுமல்லவா. இரண்டாம் முறை இன்னும் சற்று உரிமை எடுத்து

கேட்டபோதும் என் கற்பனைக்கான பாராட்டாகவே கையாண்டு,

அடுத்தமுறை தேநீர் அருந்தலாம் என்றெல்லாம் அனுப்பி வைத்தேன்.

போனவாரம் நான் எழுதிய கதையைப் படித்து இம்முறை சற்றுத்

தீவிரமாக கேட்டதும் கடிந்துகொண்டேன். அவ்வளவுதான். நாந்தான்

செழி என்று சொல்லலாமா என்றும் சபலம் தட்டியது. அதை ஒரேடியாகத்

தட்டிவிட்டார் சுருள்சுப்பு. வேண்டுமென்றே கீழே போட்டாரா இல்லை

எனக்கு வேண்டாம் என்று போட்டாரா தெரியவில்லை. டீ சகிதம் அந்த

ட்ரேயைப் போட்டார். பதுமையை விடுத்து மற்ற இடமெல்லாம் சிதறியது.

அதுவரை இங்கேயே பார்த்துக்கொண்டிருந்த அலுவலம், இந்த பெரும்

சத்தம் கேட்டதும் நான் நிமிர அவர்கள் குனிந்து வேலையப் பார்ப்பது

அப்பட்டமாகத் தெரிந்தது.

“பரவால்ல சார், ஆனா நீங்க திட்டி இருக்கக் கூடாது, இனிமே நான்

தொந்தரவு பண்ணமாட்டேன், இருந்தாத்தான தொந்தரவு பண்ண”

என எழுந்து நடந்து போனாள். பதுமைதான் இப்போதும்.

“என்ன சார் சொல்றீங்க, அனேகமா கேஸ் உங்க மேலதான் வரும், இந்த

2K கிட்ஸ்லாம் வேற ரகம் சார், இதுல அந்தப் பொண்ணு புக்ஸ் வேற

வாசிக்கும்னு சொல்றீங்க, இதுவும் இல்லாம அதுவும் இல்லாம

ரெண்டுங்கெட்டான். ஒரே பொண்ணான்னு கேட்டீங்களா?”

சுதாரித்துக் கொண்டு சப் எடிட்டரைப் பார்த்தேன். அவர் மலையாளப்

படங்களில் வரும் டிடெக்ட்டிவ் போல் தன்னை முழுதாக

பாவித்துக்கொண்டு,

“இருந்தாத்தான, ஒரே பசங்க இப்பல்லாம் எந்த தோல்வியையும்

அவமானத்தையும் தாங்கிக்கிறதே இல்ல, ப்ச்” என தலையை ஆட்டி

என்னைப் பார்த்து பட்டெனக் கேட்டார்.

“கடைசியா ஒங்களுக்கு எத்தனதடவ போன் பண்ணிருக்கா

அந்தப்பொண்ணு.. அழகான பொண்ணு சார் ச்ச பாவம்”

“யோவ், கடைசிங்குற, பாவம்ங்குற, அதெல்லாம் ஒண்ணும் ஆகாது,

கற்பனைப் பாத்திரம் அது”

அந்த யோவ் சொற்பிரயோகம் முதல்முறை என்பது இருவருக்கும் புரிந்து

சட்டென மெளனம் கவ்வியது. அதைவிட அதிகமாக பயம் கவ்வியது.

கடைசியாக வந்து அழைப்புகளை மொத்தமாக அழித்துவிட்டு,

விட்டுவிட்டேன்.

மூன்று நான்கு மாதங்கள் சத்தமே இல்லை. நிம்மதியை விட, ஒருவித

குற்றவுணர்வும், இதுபோன்ற மனச்சமநிலை இல்லாதவர்களை

கையாளாத் தெரியாமல் என்ன எழுத்தாளர் என்றெல்லாம்

யோசிக்கும்போது, சப் எடிட்டர் ஒரு ஐடியா கொடுத்தார்.

“நல்லா ஜிலுஜிலுனு செழிய வச்சு ஒரு கத எழுதுங்க சார், உடனே ஓடி

வரப்போகுது, நான் பாக்குறதுக்காக சொல்லல, ஒங்களுக்கு கொஞ்சம்

பயம் போகும்ல்ல”

கதை வந்த மாலை செக்யூரிட்டி வந்து “சார் உங்களப் பார்க்க”

எனும்போதே, ஒரு ஆசுவாசம், அதைவிட முக்கியமாக, நான் வெளியே

போய் சந்திப்பது, இங்கு வேண்டாம் என சொக்யூரிட்டின் பின்னால்

தொடர்ந்தேன்.

செக்யூரிட்டி “கற்பனைபாத்திரமே இல்லனு ஏதோ போன்ல சத்தமா”

என்று ஆரம்பிக்க, அவர்தோளைத் தொட்டு நான் பார்த்துக்கொள்கிறேன்

என்பதுபோல் சைகை செய்து நடந்தேன்.

‘எப்பிடி நம்ம ஐடியா’ என்பது போல் கட்டை விரலை உயர்த்திச் சிரித்தார்

சப்-எடிட்டர்.

அவரைக் கடந்து வெளியே வந்ததும்

வரவேற்பறையில் ஓர் இளைஞன் நின்றிருந்தான்.

*

குமுதம் இதழ்

ஓவியம் : ஷ்யாம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை

ஓவியம்

சிற்பம்

குழி