ஓவியம்

குவைப் பாக்கப் பார்க்கக் கோபம் வந்தது. கோபத்தை விட அதிகமாக சிரிப்புதான் வந்தது என்பதே சரி. அவன் கை மணிக்கட்டு அளவைவிடப் பெரியதாக இருந்தது அவன் கட்டி இருக்கும் கடிகாரம். கால்க்குலேட்டர் கடிகாரம் என்றான். சின்னச் சின்ன பட்டன்களாக அதிகம் இருந்தன. மிகச் சிறிய அளவில்தான் எண்கள் தெரிந்தன. 12345679 X 8 என்று அழுத்திவிட்டு வந்த விடையைக் காட்டினான். முதல் தடவை ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ஆனால் இதோடு ஏழெட்டு தடவை காட்டிவிட்டான். அவனுடைய மாமா கொடுத்தக் கடிகாரம் என்றான். பிஞ்சுக் கைக்கு சற்றும் பொருத்தம் இல்லாமல் சுவர்கடிகாரம் போல் இருந்தது. இப்பொழுது பிரச்சனை என்னவெனில், இந்தத் திடீர் கால்க்குலேட்டர் வாட்ச்சின் மீது ஏற்பட்ட அதீத ப்ரேமையால், விளையாட வரவில்லை என்றும் ஸ்கோர் எழுதுவதாகவும்(கழித்தல் கூட்டல் எல்லாம் வாட்ச்சில் செய்வாராம் துரை) போய் அமர்ந்திருக்கிறான். கீப்பிங் க்ளவுஸை வாட்ச்சின் மீது படர விட்டிருக்கிறான். ஒருவேளை பந்து விழுந்துவிட்டால் உடைந்துவிடாமல் இருக்க இந்த முன் ஏற்பாடாம்.

ஒவ்வொரு வாரமும் ஆட்டத்திற்குப் பதினோரு நபர்களைத் தயார் செய்வதற்குள் எனக்கும் ரகுவிற்கும் தாவு தீர்ந்துவிடும். வேண்டுமென்றே வெளியூர் போய்விடுவான் சுந்தரமூர்த்தி. கருணாகரன் படிக்க வேண்டும் என்பான். இவர்கள் எல்லாம் ஓரளவு பேட்டிங் பவுலிங் என இரண்டையும் சிறப்பாகச் செய்பவர்கள் என்பதால் இவ்வளவு இழுத்தடிப்பார்கள்.  ‘இவனுக பெகுமானம் இருக்கே’ என வாராவாரம் திட்டிய அதே ரகுதான் இன்று எல்லோரையும்விட பகுமானமாக இப்படி மைதானம் வரை வந்தும் ஆட வர மறுக்கிறான். பத்துப் பேரை வைத்துக்கொண்டு ஆடுவது என்பது அவமானங்களில் ஒரு வகை. ஆம். பலவகை அவமானங்கள் இருக்கின்றன. ஒரே ஒரு மட்டையை வைத்துக்கொண்டு ஆடுவது. அதாவது ரன்னர் எண்ட் ஆளுக்கு கையில் வைத்துக்கொள்ள ஒரு மட்டை இல்லாமல் ஒவ்வொரு ரன் ஓடிய பிறகும் மட்டையை மாற்றிக்கொள்வது. இதில் “பேட் சேஞ்ச்” என்று சொல்லாமல் போய்விட்டால் அவ்வளவுதான். உடனே ரன் அவுட் செய்து திமிராகக் கொக்கலிப்பார்கள். சமயத்தில் டம்மி பேட் கூட இல்லாமல் எதிரணியிடம் கேட்டால், “அய்யோ சீசன் பண்ண பேட் ஜி” என்பார்கள். சும்மா கையில் வைத்திருக்கத்தான் என்று கெஞ்சிக் கூத்தாடியபிறகு பெரிய மனது பண்ணி,”சரி, ஆனா யூஸ் பண்ணிரக்கூடாது, அப்பறம் ரன் ஓடும்போது கீழ ஒரசக்கூடாது பாத்துக்கோங்க” என மிகுந்த நிபந்தனைகளோடு கொடுப்பார்கள். ஆனால் சும்மாச் சொல்லக் கூடாது. அந்த மட்டையின் எண்ணெய் வாசமும் (ஆயில்பேட்) லேசாக வளைந்து சற்று நீண்டு இருக்கும் அமைப்பும் ஒன்றிற்கு இரண்டு க்ரிப்கள் போட்டதால் கிடைக்கும் ஒருவிதப் “பிடிப்பும்”அடேயப்பா, அலாதியான ஓர் உணர்வைத் தரும். எப்படியேனும் எல்லோரும் பணம் போட்டு இதுபோன்றத் தரமான பேட் ஒன்றை வாங்க வேண்டும் ஒவ்வொரு முறையும் நினைப்போம். ஆனால், இருபத்தி நான்கு ரூபாய் தான் கிரிக்கெட் பந்து. ஆளுக்கு இரண்டு ரூபாய். அதைத் தருவதற்கே இல்லாத பொல்லாத காரணங்கள். ஆட்டம் முடிந்ததும் தருவதாகச் சொல்பவர்கள், ஆட்டத்தில் கொஞ்சம் நன்றாக ஆடி ஜெயிக்கக் காரணமாக இருந்துவிட்டால் அவ்வளவுதான் அந்த இரண்டு ரூபாயை ஜெயித்த கணக்கில் சேர்த்துவிடுவார்கள். காந்திக்கணக்குகளும் உண்டு.

எதிரணி கொடுக்கும் ”லேட் ஆகுது ஜி, ஒவ்வொரு ரன்னுக்குமா பேட் மாத்துவீங்க” எனும் அழுத்தத்தால் கடைசிப் பந்துதானே டம்மி மட்டையை வைத்து ஆடிவிடுவோம் என நினைத்து நின்றால், ஃபுல் டாஸாக வந்து அதைச் சுழற்ற, அது தலைக்கு மேலேயே ஏறி “ஈஸி கேட்ச்” ஆகிவிடும்.

“ஏண்டா அது வெறும் கட்ட, அத வச்சா ஆடுவ” எனத் திட்டுவார்கள். அது அவமானம் எனில் பக்கத்தில் இருக்கும் எவரேனும், “ஆமா இல்லாட்டி அப்பிடியே சிக்ஸ் போயிருக்கும் பாரு” என்று சொல்வது பெரும் அவமானம்.

இன்னும் நிறைய இருக்கிறது. பேட்டிங் கிளவுஸில் வெறும் துணி மட்டும் இருக்கும், உள்ளே நகத்தைக் காக்க வேண்டியவை எல்லாம் உடைந்து உதிர்ந்து போய் இருக்கும். பஞ்சுகள் பிளந்து வெளியே தெரியும். கீப்பிங் கிளவுஸ் கிழிந்து தொங்கும். பந்து கையில் நிற்காது. அப்படியே நின்றாலும் “சொத் சொத்” என்று என்று எறிபந்து ஆடுவது போல் வலிக்கும். ஒரு காலில் மட்டும் ’பேடு’ கட்டிக்கொள்வது, 11 பேரில் ஒருவரோ இருவரோ பேண்ட் போடாமல் கைலியில் வந்து நிற்பது, லெக் அம்பயரிங்க்கு போக மறுப்பது என அவமானங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். குறிப்பாக ‘ரன் ஏத்திப்போடுவது’ அதில் மாட்டுவது என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

நேற்று வரை ஓரளவு எல்லாமே சரியாக இருந்தது போல் இருந்தது. நானும் ரகுவும் தான் பாப்ளி பிரதர்சில் போய் பந்து வாங்கினோம். டூ பீஸா ஃபோர் பீஸா என கடைக்காரர் கேட்க, நான்கு துண்டுப் பந்தை ஒரு முறை வாங்கி ஆசைதீரக் கையில் வைத்துப் பார்த்துவிட்டு டூ பீஸையே வாங்கிக்கொண்டு வந்தோம்.

“ஃபோர் பீஸ்ல பந்து செம்மயா திரும்பும்டா. அடுத்து அதுலயே பால் மேட்ச் போட்ருவம்டா” என்றெல்லாம் ஆசையாகச் சொன்னவன் தான் ரகு. இன்று கால்க்குலேட்டர் வாட்ச்சைக் காரணம் காட்டி மூலையில் போய் எதிரணியோடு அமர்ந்து கொண்டு, ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை வாட்சைப் பார்க்கிறான், என்னைப் பார்க்கிறான். கையைக் குலுக்கிக் குலுக்கிக் இறக்குகிறான். வாட்சில் இருக்கும் நம்பர்களை அழுத்துகிறான். அது எழுப்பும் பலகீனமான சத்தம் பிறருக்குக் கேட்கும் விதம் அழுத்துவதும் ஒரு கையை வைத்து இருட்டாக்கி மறைத்து விளக்கு வெளிச்சம் ஏற்படுத்திப் பெருமையாகப் பார்க்கிறான். அடேய் ரகு, சின்னப்பயலே என இரண்டு மூன்று முறை சொல்லிவிட்டேன். ஆனால் அவன் மிதந்து கொண்டிருந்தான்.

நல்லவேளையாக வெளியூரில் வேலைக்குச் சேர்ந்துவிட்ட ஆறுமுகம் அண்ணன் இந்த வாரம் ஊருக்கு வந்திருக்கிறார் என்று தெரிந்ததும் தான் கொஞ்சம் ஆசுவாசம் ஆனது. மோகனை சைக்கிளில் அனுப்பி இருக்கிறேன். அவர் வந்துவிட்டால் ரகுவின் தேவை இருக்காது என்பதை விட, அவர் அந்தகாலப் ப்ளேயர் என்பது கூடுதல் பலம். நாங்கள் பந்து பொறுக்கிப் போட்டுக் கொண்டிருந்த காலத்தில் ஆறுமுகம் அண்ணன் ஒயிட் அண்ட் ஒயிட், வட்டத்தொப்பி என இருந்தது கூட சாதாரணம் தான். காலில் போட்டிருப்பார் பாருங்கள், ஆணி அடித்த பூட்ஸ். கரக் கிரக் எனத் தரையில் சத்தம் எழுப்பும். அனேகமாக மதுரை வட்டாரத்திலேயே அந்த ஆணி வைத்த ஷூ அணிந்து பவுலிங் போட்ட ஒரே ஆள் அவராகத்தான் இருந்திருக்கும். விருதுநகர் டோர்னமட்டில் அந்தக் காலணியை அணிந்து கொண்டுப் போடுவதாக இருந்தால் ஆட்டம் வேண்டாம் என அவர்கள் பயந்து போய் சொன்னதும், ஸ்போர்ட்ஸ்னா என்னான்னு தெரியுமாடா என இவர் கத்திவிட்டு வந்ததும் எங்கள் ஊர் மந்தையில் ஒரு மாதத்திற்குப் பேசுபொருள் ஆன கதைகள்.

காலையில் வீட்டில் இருந்து எண்ணெய் வாங்கக் கையில் பாட்டிலோடு வந்தவர், மேட்சிற்கு பஸ்ஸில் ஏறிய அணியினரைப் பார்த்து அப்படியே எண்ணெய் பாட்டிலோடு ஏறிப்போய் ஆடிக் கொண்டிருக்க, ஊரெல்லாம் தேடிய அவருடைய தம்பி மைதானத்திற்கு வந்து எண்ணெய் பாட்டிலை எடுத்துக் கொண்டு போன கதைகள் எல்லாம் வரலாறு.

கினிகினியென மணி அடிக்க, நிமிர்ந்து பார்த்தால் மோகன் தனியாக வந்து கொண்டிருந்தான்.

“அந்தாளுக்குப் பொண்ணு பாக்கப் போறாய்ங்களாம்டா, அவங்க அப்பென் ஓவரா பேசுறாண்டா இவனே, ஏண்டா ஒவ்வொருத்தனும் கல்யாணம் பண்ணா ஏழு பிள்ள பெக்குற வயசுல இன்னும் என்னடா ஆட்டம்ங்குறான்”

“ஆமா பிள்ள பெக்குறோம், இந்தா கால்குலேட்டர் வாச்ச வச்சு அமிக்கிட்டு ஒக்காந்துகெடக்கான், இவென் பிள்ளையபெப்பானாமா, அவரு கெடக்காரு விட்றா, நம்ம சோமு எங்குட்டும் கண்ல சிக்குனானா?”

“ஏண்டா அவென வச்சு என்ன பண்ணுவ?”

“அட ஆள் கணக்குக்குத்தானடா, அவென் பாட்ல லெக் அம்ப்பயரா நிப்பான்ல்ல”

இன்னும் அரைமணி நேரம் தான். மேட்ச் ஆரம்பிக்க வேண்டும். ஆனால் எதிரணியில் பாதிப்பேர்தான் வந்திருந்தார்கள். எனவே கொஞ்சம் தேடினால் எவனாவது கிடைத்துவிடுவான் என்று நானும் மோகனும் தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்க, எங்களை நோக்கி ரகு வந்தான்.

“என்னாடா ஆறுமுகமண்ணே வர்றாப்ளயா, மணி வேற,” என சொல்லிக்கொண்டே கையக் குலுக்கி வாட்ச்சைப் பார்த்தான்.

மோகன் சிரித்துக்கொண்டே, “இப்ப இந்த வாட்ச்ச ஒடச்சுத் தூக்கி எறியப்போறேன் பாரு, அப்ப வந்துருவல்ல”

சட்டென கையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டவன், “டேய் வாட்ச்சினால இல்லடா, வகுத்த வலிடா, கடமுடகடமுடனு என்னண்டோ இருக்குடா”

”வாட்சினால இல்லேல்ல, அப்ப சும்மா வா, கீப்பருக்குப் பின்னாடி நின்னுக்க, என்னடா” தலையாட்டினான்.

“இல்லடா, வரல, இந்த ஒரு மேட்ச் விட்ருங்கடா” என்று என்னைப் பார்த்தான் ரகு. நான் அவனைப் பார்க்காமல் கையில் இருந்த பந்தை முகர்ந்து பார்த்தேன். அந்தச் சிகப்பு வண்ணமும் தோல் வாசமும் ஜிவ்வென்று ஆக்கியது.

“பாஸ், பால் வாங்கிட்டீங்கல்ல” என எதிரணியை நோக்கிக் கத்தினேன். அமைதியாக இருந்தார்கள். நான் மீண்டும் கத்த, ஒருவர்

“எடுத்துட்டு வந்துட்டு இருக்காங்க பாஸ்” என்றார்.

ரகு மீண்டும் மணியைப் பார்த்தவன் நாங்கள் பார்த்துவிடாதவாறு கையைக் கீழே தொங்கப்போட்டான்.

ரகுவின் மீது கோபத்தைக் காட்டும்பொருட்டு, அவனைக் கண்டு கொள்ளாமல் நடந்து போய் ஆடுகளத்தைப் பார்த்தோம் நானும் மோகனும். பந்தை கீழே போட்டுப் பார்க்கப் போன என்னைப் பதறிப்போய்த் தடுத்த மோகன், “டேய், சைன் போய்ரும்டா, அடிச்ச்சாப் போகாதுல்ல”

பிட்ச் ஓரளவு இறுகித்தான் இருந்தது. “பேட்டிங் எடுத்துருவம்டா மொதல்ல” என்றான். அவனுக்கு எப்படியும் இன்று ஒரு காட்டுக் காட்ட வேண்டும் எனும் எண்ணம் இருந்தது. எனக்கு ரகுவின் மீதான கோபம், வாழ்நாளெல்லாம் கிரிக்கெட் என வாழ்ந்த ஆறுமுகம் அண்ணன் வேலை கிடைத்தவுடன் இப்படிக் கிரிக்கெட்டை நிர்கதியாக்கிவிட்டாரே என்ற ஆதங்கம் எல்லாம் சேர்ந்துகொண்டதால் ஆட்டத்தின் மீது ஈடுபாடே ஏற்படவில்லை. மோகன் பேசுவது ‘தொனதொனவென’ இருப்பது போல் இருந்தது. இதுவே மற்றொரு நாளாக இருந்தால் மோகனுக்கு ஈடுகொடுத்து, பேட் வாங்குவது, எந்தப் பக்கம் அடிப்பது, மதுரையில் இருந்து சற்று மேலேறிப் பல்கலைக்கழக அணிக்குத் தேர்வாவது எனப் பேசுவேன். இன்று வெறுமாக ம்ம் கொட்டிக்கொண்டிருந்தேன். எனக்குள் எழுந்த தேவையற்ற விரக்தியைக் காட்டும் விதமாக எதிரணியை நோக்கி

“பாஸ், ஆடுறதுக்கு இஷ்டம் இல்லாட்டி பேசாம வரலனு சொல்ல வேண்டியதுதான, ஒவ்வொரு வாரமும் ஒங்களப்பிடிச்சு உருவிக்கிட்டேவா இருக்க முடியும், நல்லா ஆடுறதெல்லாம் அப்பறம் பாசு, மொதல்ல மரியாதயப் பழகிக்கோங்க”

நான் பேசப் பேச மோகன் தடுத்தான். ஏனெனில் அந்த அணிதான் சற்று நன்கு ஆடக்கூடியப் பெரிய அணி. அந்த அணியில் இருக்கும் அனைவரும் வேலைக்குப் போகும் ஆட்கள் என்பதால், பணத்திற்குப் பிர்ச்சனை இல்லை, நல்ல பேட், பேடுகள்,க்ளவுசுகள் என வைத்திருப்பவர்கள். எல்லாவற்றிக்கும் மேலாக, சி’ டிவிஷன் ஆட்டத்திற்குப் பணம் கட்டிவிட்டிருக்கிறார்கள் என்ற தகவலும் இருக்கிறது. இதுபோன்ற அணியுடன் மோதினால்தான் ஓரளவு நன்றாக ஆடிப்பழக முடியும் என்று மோகன் நினைத்தான்.

நான் திடீரென அப்படிப் பேசியதும் ஓரிரு நிமிடங்கள் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் இருந்த ஆட்கள், என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, சட்டென வண்டியைக் கிளப்பிக் கொண்டு போய்விட்டார்கள். எனக்கு ஒருவித குற்றவுணர்ச்சியும் பயமும் வந்தது. இப்போது எல்லோரும் என்னைத் திட்டுவார்கள். குறிப்பாக மோகன் பெண்டு நிமித்திவிடுவான். அவனுக்கு இன்று பேட்டிங்கில் அடி வெளுக்க வேண்டும் என்ற குறுகுறுப்பு வேறு.

மைதானத்தில் நாங்கள் பத்துப் பேர் மட்டும்தான் இருந்தோம். இல்லை, ஒன்பது பேர்தான். ரகுவைக் காணவில்லை. யாரை என்ன செய்கிறோமோ இல்லையோ இன்று ஏரியாவிற்குள் போனதும் ரகுவிற்கு மண்டகாப்படி இருக்கிறது என நினைத்துக் கொண்டேன்.

கொஞ்ச நேரம் மைதானத்தின் வழியையேப் பார்த்துக் கொண்டிருந்தோம். போனவர்கள் மற்ற அணியினரை அழைத்துக் கொண்டு வருவார்கள் என்று நினைத்தோம். வெய்யில்தான் ஏறத் தொடங்கி இருந்தது. ஆள் நடமாட்டமே இல்லை.

“செமிநியூ பால் இல்லையாடா” என்றான் மோகன். உதட்டைப் பிதுக்கினேன்.

அதாவது பழைய பந்து இருந்தால், இரண்டு ஓவர்கள் போடச்சொல்லி ஆடிவிட்டுப் போகலாம் என்பது அவன் எண்ணம். அவன் பார்வை புதிய பந்தை நோக்கிப் போக நான் வேண்டாம் எனத் தலையாட்டினேன்.

“ஏண்டா மாப்ள ரகு மேல இருந்தக் கடுப்ப அவெங்க மேல ஏண்டா காட்டுன, அப்பிடி என்ன ரகு ஒனக்குப் பெரிய ஓவியமா, அவனத் திட்ட வேண்டியதுதான. ஆட வந்தவனுங்க போய் நிப்பாட்டி இருப்பாய்ங்க மொத்த டீமையும், இனி நம்ம கூட மேட்சுக்கு வரமாட்டாய்ங்க” என்று கத்தினான் மோகன்.

தூரத்தில் சைக்கிளை ஏறி ஏறி மிதித்துக் கொண்டு வேகமாக வந்தான் ரகு.

“என்னடா மேட்ச் ஆரம்பிக்கலயா”

அவன் கையில் வாட்ச் இல்லை. போய் பத்திரமாக வீட்டில் வைத்துவிட்டு ஆடுவதற்கு வந்துவிட்டான், பாவம்.

விட்றா நாம ஆடுவோம் என உற்சாகமாகப் புதுப் பந்தை எடுத்துக்கொண்டு நான் நடக்க மோகன் லேசான சிரிப்போடு மட்டையை எடுத்துக்கொண்டு போய் நின்றான்.

“யய்யா ராசா ஓவியமே வா வந்து புது பால்ல போடு” என மோகன் ரகுவைப் பார்த்துச் சொல்ல ரகு ஒன்றும் புரியாமல் பந்தை வாங்கிக்கொண்டு, ஒன்று இரண்டு என ஸ்டெப்ஸ் வைத்து பந்து போடத் தயாரானான்.

நானும் மோகனும் சிரித்துக் கொள்வதைப்பார்த்தவன் “டேய் நெசமாவே வகுத்த வலிடா” என்றான்.

சிரித்தோம்.

*

‘துடுப்பாட்டம்’ மாத இதழில் வெளிவந்த சிறுகதை.

துடுப்பாட்டம்- கிரிக்கெட் சார்ந்த தமிழ் மாத இதழ்.

இதழை வாசிக்க..

https://drive.google.com/file/d/1X9UIdIP1F1QuCmUuZu0A5faEtU1zT1Zu/view?usp=sharing

.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை

சிற்பம்

குழி

நுரை