“இங்க தமிழ் ஆளுங்க இருக்குற ஏரியா எதுங்க?”
வேண்டாம் வேண்டாம் என்று எவ்வளவோ தடுத்தும், ரகு கேட்டுவிட்டான்.
எங்களை ஏற இறங்கப்பார்த்தவர்,
“இங்க அல்லா ஏரியாலயும் நம்மெ தமிள் ஆளுங்க இருக்காங்க”
ரகுவிற்கு சப்பென்று ஆனது. ஒரு அடி தள்ளி வந்து நான் நின்ற இடத்தில் நின்றுகொண்டான்.
ஊருக்கு வந்த இந்த ஒரு வாரத்தில் ஈரானியத்தேநீரைப் பழகி இருந்தோம்.
கடைசி மிடிறில் தட்டுப்படும் தேயிலைத்துகளின் கசடுகளில்தான் சுவையை ஒளித்து வைத்திருக்கிறார்கள்
என்பது வரை தெரிந்து வைத்திருந்தோம்.
எனக்கு ஹைதராபாத் நகரில் வேலை. முதன்முதலாக மதுரையை விட்டு
வெளியே வருகிறேன் என்றதும் எனக்கு வழித்துணையாக ரகுவும் உடன் வந்திருந்தான். இரண்டு
நாட்களில் கிளம்பிவிடுவதாகத்தான் வந்தான். ஆனால், ஊர் நாங்கள் நினைத்ததைவிட கொஞ்சம்
அதிகமாகவே குளிரும் அழகுமாக இருக்க, நல்ல இடமாகப் பார்த்து என்னை அமர்த்திவிட்டுப்
போவதாக சொல்லிக்கொண்டு இன்னமும் இங்கேயே இருக்கிறான்.
நாங்கள் தேநீரின் கடைசிச்சொட்டு கசட்டைப் பருகும்பொழுது அவர்
எங்கள் அருகில் வந்தார்.
“இப்ப எங்க இருக்கீங்க?”
ரகு என்னைப் பார்க்க நான் என் புதிய பர்சில் இருந்த ரெட்டியின்
விசிட்டிங் கார்டைக் காட்ட,
தன் கண்ணாடியை சட்டெனெ மூக்கின் நுனிக்கு இறக்கி அதைப் பார்த்தார்.
“இந்த கம்பெனி, இந்த ஏரியாலயே ஒரு ரூம் எடுத்துருக்கோம் ஆனா
நாளைக்கோட முடியுது, அதான் வீடா பாத்துரலாம்னு” என ரகு விளக்கினான்.
“இதி பாரடைஸ் கார்னர், மல்காஜ்ஜிகிரி, ஆனந்தபாக் பக்கெமெல்லாம்
நம்ம ஆளுங்க தான். அங்க போங்க”
நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே ரகு சட்டென பேனாவை எடுத்துக்கொண்டு
அவர்பின்னால் ஓடினான்.
“சார், நீங்க சொன்ன அந்த மல்ஜ்பாக், ஆன..அத எழுதிக்கிறேன்..”
என தெளிவாக எழுதிக்கொண்டான்.
அப்படி இப்படி என ஆனந்தபாக் பக்கம் கரை ஒதுங்கி அறையும் கிடைத்துவிட்டது.
சும்மா சொல்லக்கூடாது, எத்தனை வருடங்களாக அந்தப் பெரியவர்
அங்கு இருக்கிறாரோ, அனுபவம் பேசி இருந்தது. ஹோட்டல், டீக்கடை, பத்து வீடுகளுக்கு இரண்டு
வீடுகள் என எங்கு திரும்பினாலும் தமிழ்தான். என்னைவிட ரகுவிற்கு ஏக மகிழ்ச்சி.
“எப்ட்ரா என்னோட மகிம, ஒன்னயமாதிரி உம்ம்முனு இருந்தா அம்புட்டுதான்,
பாத்தியா இப்ப, நம்மூர் மானிக்கவே இருக்கா எல்லாமே”
ஆமாம் தான். குறிப்பாக மக்களின் முகம்.
ரகுவின் வாய் லொடலொடப்பில் சிலபல நண்பர்களையும் பிடித்தாகிவிட்டது.
நான்கு பேர், அதில் இருவர் தமிழகத்தில் இருந்து முப்பது நாப்பது வருடங்களுக்கு முன்பே
இங்கு வந்த மூத்த தமிழ்குடிகள். அவர்கள் மூலம் ஒரு நல்ல மெஸ் அந்த ஏரியாவில் அறிமுகம்.
நான் வேலையை விட்டு வரும்வரை ரகு, அவர்களோடு அறையில் அரட்டை
சீட்டு எனக் கழித்து மதியம் அருகில் இருக்கும் மெஸ் போன்ற அமைப்பில் இருக்கும் வீட்டில்
மதிய உணவு பிறகு கொஞ்சம் தூக்கம், மாலை நான் திரும்பிய பிறகு, நாள் முழுக்க அவன் சுற்றிப்பார்த்து
அறிந்து வைத்திருக்கும் இடங்கள் கடைகள் என அழைத்துப் போவான். அப்படியே அந்த மெஸ்.
மெஸ் என்று பெயருக்குக்கூட அதைச் சொல்வதற்கில்லை. பெயர்ப்பலகை
எல்லாம் இல்லை. ஒரு வீடு. அதன் முகப்பில் இரண்டே இரண்டு பெஞ்சுகள் நான்கு மடக்கு சேர்கள்.
வீட்டிற்குள்ளேயே சமைத்து, அப்படியே சுடச்சுட எடுத்துவந்து பரிமாறி முடித்துவிடுகிறார்கள்.
பரிமாறுவது ஒரு பேரிளம்பெண். அவர்மட்டும் தான் வெளியே வந்து உள்ளே போவது என இருந்தார்.
உள்ளே சமைக்கும் சத்தம், மிக்ஸியை ஓடவிடும் சத்தம் என பரபரப்பாக இருக்கும். மிக்ஸி
சத்தம் கேட்கும்போதெல்லாம் அந்த பேரிளம்பெண் தலையில் அடித்துக்கொண்டு முணுமுணுப்பார். . பத்து பேர் சாப்பிட்டாலே பெரிய
விசயம். அதில் நாங்கள் இருவரும்தான் இரண்டு நாட்களாக தொடர்ந்து வரும் ரெகுலர் கஸ்டமர்கள்..
ஆனால் ருசி என்றால் அப்படி ஒரு ருசி. நம்மூரில் சட்னிதானே வகை வகையாக வைப்பார்கள்.
அங்கே தோசையிலேயே ஏகப்பட்ட வகைகள். பொடி,பெசரட்டு, ஊத்தாப்பம் என இரண்டு நாட்களில்
நாலைந்து ரகம்.
“சமைக்கிற ஆளப் பாக்கணும் மாப்ள, கெழவி விடமாட்றாளே”
ரகு ஆரம்பித்தான். ஸ்வீட் பீடாவை அதக்கிக்கொண்டு அவன் அமர்ந்திருந்த
விதமும், அந்த புதிய அறையில் மிதக்கும் பழைய நெடி வாசமும், கதவைத் திறந்து வைத்திருந்ததால்
மெலிதாக வந்துகொண்டிருந்த காற்றின் ஈரப்பதமும் என சொர்க்கத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது
போல் இருந்தது.
“சும்மா சொல்லக்கூடாது,
எங்கம்மால்லாம் என்னைய தோசைன்னு சொல்லி இத்தன வருசமா ஏமாத்திருக்கு பாத்தியா. இந்தா
இம்புட்டுக்காண்டி மாவ எடுத்து ரெண்டு இழுப்பு இழுத்து ஓட்டையும் ஒடசலுமா ஊத்தி, இப்பிடி
வந்து பாத்தாத்தானடா தெரியுது, ஒலகம்னா என்னா, தோசைன்னா என்னான்னு”
“டேய், எப்படா நீ பெரியாளா ஆவ? சும்மா நொய்ய நொய்யான்னு”
“ஓஹோ சார் வேலைக்கு சேர்ந்துட்டீங்க, அப்பிடியே பெரிய்ய வெண்னை
ஆகிட்டீங்க, நான் மட்டும் கூட வரலேண்டா அவ்ளோதாண்டி மகனே, அந்த ரூம்லயே, இருந்துருப்ப,
வாங்குற சம்பளத்தப் பூராம் அங்கனயே குடுத்துட்டு, வாய்க்கு வெளங்காத அந்த உப்புமாவ
உப்புவாமத் தின்னுட்டு நாக்கு செத்து நாளே மாசத்துல ஊரப்பக்கம் வந்துருப்ப”
”அது கிச்சடி டா”
“ஆமா கிச்சடி ..” என கெட்டவார்த்தையால் ரைமிங்காகத் திட்டினான்.
ரகு சொல்வதும் உண்மைதான். அவன் வந்ததால்தான் இந்த இடம், இந்த
மெஸ், என எல்லாம் அமைந்திருக்கிறது. எனவே அமைதியானேன்.
“சர்றா ஒம்பேச்சாவே பேசு கேப்பம்”
“அப்பிடி வா வழிக்கு. நல்லாப் பாத்தியா அந்த மெஸ்ல காலெண்டரு,
போட்டால்லாம். தமிழ்தாண்டா அவங்க”
“பாக்கலயே”
“நீ எங்கடா பாப்ப, தோசைய போட, எடுத்து சட்னில முக்கி அடிக்கனு
தான இருந்த, சாப்புடும்போது நிமிந்தெல்லாம் பாக்கலாம்டா, தப்பில்ல”
சிரித்தேன்.
“உள்ள சமையல் வேல யாரே ஜாரியாத்தான் மாப்ள இருக்கணும், என்னா
கைமணம், நாளைக்கு என்னத்தயாச்சும் சொல்லி உள்ள எட்டிப்பாத்துரணும்டா”
அனேகமாக இவன் ஊருக்குப்போகும்பொழுது அந்தப் பெண்ணை திருமணம்
செய்துகொண்டுதான் போவான் என்று நினைத்து சிரித்தேன்.
“என்னடா மாடு ஒண்ணுக்குப் போற மாதிரி பல்லக்காட்டுற”
மீண்டும் சிரித்தேன்.
மறுநாள் இரவு.
ரகு மிகத்தீவிரமாக இருந்தான்.
“இன்னைக்கும் தோசையாப் பாட்டி”
டொங்கென தட்டை வைத்தார். ஏழெட்டு பெசரெட்டுகள். நெய் மணம்
கமழ்ந்து மிதந்தது, நான் நடுவில் இருந்து ஒன்றை உருவினேன். மேலே இருக்கும் தோசை எனில் தூசு துப்பு பட்டிருக்கும். அடிதோசை எனில் தட்டில் இருக்கும் தூசி ஒட்டி இருக்கும் அதனால் நடுதோசை. உள்ளே சட்னிக்கு மிக்ஸி
ஓடத் துவங்கி இருந்தது.
ரகு விடவில்லை.
“செம்மையா இருக்கு சமைக்கிற ஆள் கைக்கு வளையலே போடலாம்னு
எங்கப்பு அடிக்கடி சொல்வாரு இந்த மாதிரி சாப்பாடு நல்லா இருந்தா”
உள்ளே ஓடிக்கொண்டிருந்த மிக்ஸி சட்டென நிற்க, உள்ளே இருந்து
அவசர அவசரமாக நடந்துவரும் காலடி சத்தம் கேட்டது
ரகு என்னைப் பார்த்துக் கண் அடித்தான்.
கையெல்லாம் பொசுபொசுவென
முடியோடு, நல்ல திடகாத்திரமான ஆண்.
“நெல்லாருக்கா தம்பி” என ரகுவின் தலையைத் தடவினார். ரகு நெளிந்தான்.
அவர் நடை பாவனை எல்லாம் அச்சு அசல் பெண் போல இருந்தது. ஆனால்
மிக லேசான தாடி, அடர்ந்த மீசை, சமைத்துக் காய்த்துப்போன கைகள். கெரண்டை கெரெண்டையாக
திரண்ட கை கால்கள்.
நான் நான்கு பெசரட்டுகள் சாப்பிட்டு முடித்திருந்தேன்.
ரகு ஒன்றோடு எழுந்திருந்தான்.
நான் மட்டும்தான் ஸ்வீட் பீடா போட்டிருதேன்.
“இது ஒண்ணுதான் இப்ப கொறச்சல்”என்ற அவன் பீடாவையும் நானே அதக்கிக்கொண்டேன்.
“ரெண்டாவது நாளே நாம சாப்புட்டு வரும்போது அந்த வினோத்து
சிரிச்சாண்டா ஒரு மாதிரி”
நான் சொல்லிக்கொண்டே, மறுநாள் போட்டுப்போகவேண்டிய உடுப்பை எடுத்துவைத்துக்கொண்டிருந்தேன்.
“இந்த வாரம் ஊரப்பக்கம் ஜெண்டாகலாம்னு பாக்குறேண்டா மாப்ள,
இனிமே நீ அப்பிடியே ஒப்பேத்தி கரை ஏறிருவல்ல என்னா”
அவனாகவே ஏதோ பேசிக்கொண்டே பால்கனியில் நின்று காற்றை வாங்கிக்கொண்டிருந்தான்,
கண்களை மூடி. பாவம், அழகான பெண் காதலிக்கலாம் என்று நினைத்திருந்திருப்பான் போல.
சனிக்கிழமை என்பதால் மதியமே அறைக்கு வந்துவிட்டேன். படி ஏறும்போது, ஒரே
சிரிப்பும் பேச்சுச்சத்தமுமாக இருந்தது. ரகு இயல்பிற்குத் திரும்பிவிட்டான் என நினைத்துக்கொண்டே
உள்ளே நுழைந்தவன் திடுக்கிட்டேன்.
ரகுவிற்கு நேர் எதிராக அமர்ந்திருந்தார் முந்தைய இரவில் மெஸ்ஸில்
பார்த்த அந்த ஆள்.
என்னைப்பார்த்த ரகு, மீண்டும் அவரிடம்,
“நெசமாவா சொல்றீங்க” என சிரிக்க, அவரும் சிரித்துக்கொண்டே
“ஒங்ககிட்ட பொய்யா சொல்வாங்க” என கொனட்டலாக சொல்லி என்னைப்பார்த்து
கண்களைத் தாழ்த்தி மீண்டும் பார்த்தார். சிரித்தார்.
ரகு “டேய் இவருகூட கூத்தா இருக்குடா, செம்ம மனுஷன் ஆளு, பாவம்
அந்தம்மா இவர அடிமை மானிக்க வச்சுருக்கு”
மீண்டும் இருவரும் சம்பந்தம் இல்லாமல் சிரிக்கத் துவங்கினார்கள்.
நான் குழப்பமாக பார்த்துக்கொண்டே போய் உடைய மாற்றிக்கொண்டு
வர,
“டீ “ என்றார்,
ரகு உடனே “போடு தலைவா, சும்மா நச்சக்குனு மூணு டீ”
என சொன்னதுதான் தாமதம் சட்டெனெ துள்ளிக்குதித்து எழுந்தவர்
அடுப்படிக்குப்போன வேகத்தில் திரும்ப வந்து
“அச்சச்சோ, இப்பிடியா வைப்பீங்க தொடச்ச்ச்ச்சு வச்சுருக்கீங்க”
என முகவாய்க்கட்டையில் கையைக் கொண்டுபோய் ஆச்சர்ய விளிப்புக்காட்ட
ரகு வெகுநேரமாக பேசிக்கொண்டிருக்கிறான் என்பது அவருடைய அந்த
அசைவை அவன் வெகு இயல்பாக எடுத்துக்கொண்டதில் புரிந்தது. நான் தடுமாறினேன்.
“என்னல்லாம் வேணும்னு சொல்லுங்க, வாங்கிட்டு வர்றேன், அப்பிடியே
இங்கனயே சமைச்சும் குடுத்துருங்க என்னா நான் சொல்றது”
சரி என்பதை ஒருமுறை கண்களைத்தாழ்த்தி உயர்த்தியதில் சொன்னார்.,
“அது”
என ரகு செல்லமாக அவர் தலையில் தட்டிவிட்டு காசை எடுத்துக்கொண்டு
போனான்.
அவன் வரும்வரை அறையில் நிசப்தம். என்ன பேசுவதென்று எனக்குத்
தெரியவில்லை. அதனால் துணிகளை எடுக்கப்போனேன்.
“அதெல்லாம் எடுத்து தோ, அதானே ஒங்க பெட்டி, அதுக்கு மேல மடிச்சு
வச்சுருக்கேன் பாருங்க”
அட என்பதுபோல் பார்த்தேன். கண்களால் தாழ்த்தி சிரித்தார். பெருமிதமாக.
ரகு மூட்டை முடிச்சோடு வந்தான். பின்னர் அவர்கள் இருவருமாக
சமையற்கட்டில் பொருட்களை எடுத்து அடுக்கத் துவங்க அவர் ரகுவை போகச்சொல்லிவிட்டார்,
சட்டென எல்லாமுமே மிகச்சரியாக ஆனதுபோல் ஆக்கிவிட்டார், அந்த அறையை..
நான் ரகுவிடம் என்னடா இதெல்லாம் எனப்துபோல் பார்க்க ரகு அவரைப்போலவே
கண்களை ஒருமுறை தாழ்த்தி நிமிர்ந்து சிரித்தான்.
“ஏரியால ஏதாச்சும் நெனெக்கப்போறாய்ங்கடா, அன்னைக்கே அந்த
வினோத் சிரிச்சான்”
ரகு பதில் ஏதும் சொல்லவில்லை.
மூன்றே நாட்களில், அவர் கைப்பக்கும் சமையல், அறையை சுத்தம்
செய்தல் என ஒருமாதிரி பழகிவிட்டது.
காலையில் ஒருமணி நேரம் மாலையில் ஒருமணிநேரம் அந்த மெஸ்ஸிற்குப்
போய் சமைத்துவருவது போக மிச்ச நேரமெல்லாம் எங்கள் அறையில் தான் அவர் இருப்பதெல்லாம்
என்றானது. வினோத் அண்ட் கோ வருவதை நிறுத்திவிட்டார்கள்.
மாலையில் நான் வரும் காலடியோசை கேட்கும்பொழுதே
“அடுப்புல பால் வச்சுட்டேன்” என சிரிப்பார்,
பால்கனியில் நாங்கள் மூவரும் நின்று பேசுவதை முதலில் கீழே
இருப்பவர்,பிறகு தெருவைக்கடப்பவர்கள் எல்லாம் ஒருமாதிரி பார்த்தார்கள். நான் தலையை உள்
இழுத்துக்கொண்டு அவர்கள் கடந்ததும் மீண்டும் நிற்பேன். ஆனால் ரகு விடாப்பிடியாக அவரிடம்
சிரித்துப்பேசுவான்.
இரவில் டீ குடிக்கவேண்டும் போல் இருக்க ரகுவிடம் அவருக்குக்
கேட்காதவாறு சொன்னேன் “டேய் வா போய் ஒரு டீயப்போட்டு வருவோம்”
“பாவம்டா அந்தாளையும் கூட்டிப்போவம்”
“அப்ப டீ வேணாம்டா”
ரகு என்னை முறைத்துக்கொண்டே எழுந்து வந்தான். இப்படியே நான்கைந்து வாரங்கள் ஓடிவிட்டன.
ஞாயிறு. ஒன்பது மணி வரை தூங்கிவிட்டேன். எழுந்துபார்த்தால்
ரகுவும் தூங்கிக்கொண்டு இருந்தான். பால்கனியில் நின்று சோம்பல் முறிக்கும்பொழுது கீழேயிருந்து
கைதட்டல் சத்தம், குனிந்து பார்த்தேன்,
வரவா என்பதுபோல் சைகையால் கேட்டார். ஏனோ எரிச்சலாக இருந்தது.
அனிச்சையாக சுற்றும் முற்றும் பார்த்தேன். எதிரிவிட்டில் இருந்த பெண் நமுட்டுச் சிரிப்பு
சிரித்துக்கொண்டே காய் வண்டியில் இருக்கும் வெண்டைக்காய் காம்பை ஒடித்தாள். சட்டென
பால்கனியில் இருந்து பின்வாங்கிக்கொண்டு, கதவைத் திறந்து படியைப் பார்க்க, கைலியை லேசாகத்
தூக்கிப்பிடித்து மிக நளினமாக படி ஏறி வந்துகொண்டிருந்தார். கையில் பால் கவர்
“காஃபியா டீயா”
“காஃபிதான்”
”தெரியுமே” என சிரித்துக்கொண்டே போனவர், “ஆனா ரகுசார்க்கு
டீதான் தெரியுமோ?”
என்றார்,
நான் ரகுவைப்பார்த்தேன். தூங்கிக்கொண்டிருந்தான். அந்தத்
தூங்கும் முகம் அவ்வளவு பிடித்தது. எதைப்பற்றியும் கவலை கொள்ளாத முகம் அது,
“தூங்குறாரா இன்னும்” என ஹஸ்கி வாய்ஸில் சொல்லிக்கொண்டே என்னிடம்
காஃபியைக் கொடுத்துவிட்டு, தனக்கும் ஒரு டம்ளர் வைத்துக்கொண்டார். ஹாலில் போய் அமர்ந்தார்.
டம்ளர் சூட்டை உருட்டி கன்னத்தில் வைத்துக்கொண்டார். பின்னர் நெற்றியில்.
நான் பார்ப்பதைப்பார்த்து
“தல வலி வின்னுவின்னுன்னு தெறிக்குது..”
என ஏதோ ஒரு முகபாவம் செய்து கண்களை அகலத் திறந்தார். முகத்தை
உதறினார்.
சட்டென அவர் கண்களில் இருந்து நீர் தாரைதாரையாக உகுக்கக்
துவங்கியது.
எனக்குப்பதற்றம் தொற்றிக்கொண்டது,
ரகுவைப்பார்த்தேன். புரண்டு படுத்து தூங்கிகொண்டிருந்தான்.
“என்னாச்சு சார்”
“சாரா, நான் சாரா, நல்லா இருக்கு போங்க”
அழுகையின் ஊடே சொல்லிக்கொண்டே புறங்கையால் கண்களை அழுந்தத்
துடைத்தார்.
“அந்த மெஸ்ல எங்கூடவே இருந்தான். தெலுங்குக்காரன். சரக்கு
மாஸ்டர். சரக்குன்னு இந்த சரக்கும் அந்த சரக்கும்”
என குடிப்பதுபோல் சைகை செய்து சிரித்தும் அழுதும் தொடர்ந்தார்,.
“பத்து வருசமா எங்கூடத்தான் இருந்தான். அந்தம்மாவோட பொண்ணக்கட்டினவகைல
சொந்தம். அந்தம்மா தமிழ்தான். பொண்ணு தெலுங்குக்காரன கட்டிக்கிட்டா, யாரு யார கட்டிக்கிட்டாத்தான்
இப்ப என்னங்குறேன்”
மீண்டும் கண்ணீர், கைலியின் ஓரத்தை எடுத்து கண்களைத் துடைத்துக்கொண்டார்,
“இவன் எங்கூடவே இருந்தான். அந்த மெஸ்ல இருக்க எல்லா மூட்டைக்கும்
தெரியும். மூட்டைதான் அவனுக்கு, எடுப்பட்ட நாயி, ம்ம்.. இப்ப, இன்னிக்கு அவனுக்கு கல்யாணம்னு
இந்த கெழவி போய்ட்டா, ஏன் ஒரு வார்த்த சொல்லக்கூடாதா எங்கிட்ட? இல்ல கேட்குறேன்..ஒரு வார்த்த,, ம்ம், இத்தன வருசம் கூடவே வச்சுக்கிட்டயே,,
என்னய என்ன பாடு படுத்தின,. சொல்லு.. நான் என்ன தாலியா கட்டச் சொல்லிரப்போறேன்.. ஒரு
வார்த்த, கல்யாணம்னு சொல்லிருக்கக் கூடாதா, நானும் மனுஷப் பிறப்பு தான எனக்கும் மனசு
இருக்கும்ல”
சுத்தமாக எதுவுமே எனக்குப் புரியவில்லை. ஆனால் அவர் அழுகையும்
அந்த சூழலும் எனக்கு என்னவோ போல் ஆனது. அவரை எபப்டித் தேற்றுவது எனத் தெரியவில்லை,
ரகுவை காலால் தட்டினேன். போர்வையை விலக்கினான். விளக்கினேன்.
எழுந்துவந்தவன் விறுவிறுவெனப் போய் அவரைக் கட்டிக்கொண்டான்.
அதுவரை மெலிதாக கண்ணீர் உகுத்தவர் ரகுவின் அணைப்பில் வெடித்து அழத்துவங்கினார்,
“அட விடுய்யா, போறான். அதான் நாங்க இருக்கம்ல்ல, ஊர்ல எங்க
அக்கா ஒண்ணு இப்பிடித்தான் புருஷன் செத்து ஒச்சமாகி வந்துச்சு, தம்பிங்க நாங்க பாத்துக்கலயா, விடுய்யா”
கண்களைத் துடைத்துக்கொண்டு மூக்கைச் சிந்தியவர், முகம் கழுவிக்கொண்டு
வந்தார். முகத்தில் அப்படி ஓர் அமைதி தவழ்ந்தது.
“டீ தானே”
எனப் போய் டீயைப்போட்டு எடுத்து வந்தார்.
ரகு வாங்கிக்கொண்டு மீண்டும் ஒரு கையால் அவரை அணைக்க,
“போறான் போகட்டும், தமிழ்னா அவனுக்கு எளக்காரம்தான்” என மிகக்கோவமாக
சொல்வதாக நினைத்து அவ்வளவு நளினமாகச் சொன்னார்,
“சண்டே என்ன ஸ்பெஷல் பண்ணட்டும்” எனக்கேட்டவரைப் பார்த்த
ரகு அப்படியே என்னைப்பார்த்தான்.
“என்னடா வேணும்”
“இல்ல. இன்னைக்கு வெளில போய் சாப்புடுவோம்டா”
ரகுவிற்கு அதில் விருப்பம் இல்லை என்பதுபோல் அவரைப்பார்க்க,
அவர், “போய்ட்டு வாங்க, மெஸ்சு இன்னைக்கு லீவு நான் கடை வாசல்ல பாத்துக்குறேன்”
ரகு தேநீரின் கடைசிச்சொட்டு கசட்டை ருசித்துக்கொண்டிருந்தான்.
நான் பதறி, “இல்ல ல்ல, நாம மூணு பேரும் போவோம்னு சொன்னேன்”
அவர் வியப்பாக என்னைப்பார்க்க
ரகு அருகில் வந்து கட்டிக்கொண்டான் என்னை.
எனக்கு ஏனோ அழவேண்டும் போல் இருந்தது.
*
நல்ல கதை நல்ல உணர்வுகள் நர்சிம், வாழ்த்துக்கள்