நுரை

நான்கைந்து நாட்களாகவே மார்புக் காம்புகளில் வலி. வலி என்றால் அதீத வலி. நாலணா நாணயம் அளவிற்கு உள்ளே சிறிய வட்டக் கட்டிகள் இரண்டு பக்க மார்பிலும் தட்டுப்பட்டன. அதை அழுத்தினால் வலியை ஏற்படுத்தி நகர்ந்தன, அல்லது அப்படியான உணர்வை ஏற்படுத்தின. அம்மாவிடம் சொல்லக் கூச்சமாக இருந்தது. அக்காவிடம் சொல்ல வாயெடுக்கும்போதே வள்ளென்று விழுந்தாள். ரகுவிடம் சொன்னதற்கு, ஓஹோ என்று நமுட்டுச்சிரிப்புச் சிரித்தான். நான் எதிர்பாராத நொடியில் சட்டென்று அழுத்தினான். வலியால் கத்துவதைப் பொருட்படுத்தாமல், கட்டி உள்ளே அசைவதை அதிசயம் போல் பார்த்தான். தன் மார்புக் காம்பை அழுத்திப் பார்த்து, உதட்டைப் பிதுக்கினான். அவனுக்கு அப்படி ஏதுமில்லை என்பதை முதலில் மகிழ்ச்சியாகச் சொன்னவன் சற்று நேரத்தில் ஏதோ சிந்தனையோடு முணுமுணுத்தான். எனக்கு மிக மெலிதாக அரும்பி இருந்த மீசையைத் தொட்டு தனக்கு அப்படி இல்லாமல்  ‘மொழுக்’ என்று இருப்பதைத் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.

இரண்டு மாத விடுமுறை முடியப்போகிறது. பத்தாம் வகுப்பு போகப்போகிறோம் என்பதால், அவனுடைய அண்ணனின் நண்பனிடம் புத்தகங்களை வாங்கி, பள்ளி திறப்பதற்கு முன்பே படிக்க ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் திட்டம்.

முத்துப்பட்டி வழியாக டி வி எஸ் நகர் அடைந்து, பழங்காநத்தம் முகப்பில் இருக்கும் நண்பனின் வீட்டிற்கு சைக்கிளில் வந்துவிட்டோம். ஆம். இந்த விடுமுறை முழுவதும் நாங்கள் செய்த காரியம் எனில் அது வாடகை சைக்கிளை எடுத்துக்கொண்டு சுற்றியது தான். திருப்பரங்குன்றம் பழங்காநத்தம், பைக்காரா, பெரியார் பஸ்ஸ்டாண்டிற்கு முன்னர் இருக்கும் பாலத்திற்கு அடியில் புகுந்து ஜெய்ஹிந்திபுரம் ஜெயவிலாஸ் வில்லாபுரம் என முழுமையான சுற்றுகள். சிம்மக்கல் வழியாக ஆற்றுப்பாலத்தை சுற்றிவரவேண்டும் என்பதை இறுதியாக வைத்திருந்தோம்.

எங்களை விட ஒரு வயதுதான் மூத்தவன் என்றாலும் ஆள் வேறுமாதிரி இருந்தான். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டால் நமக்கும் இப்படி மீசையும் கைலியை சரியான விகிதத்தில் கட்டும் திறமையும் வந்துவிடும் என்று ரகு என்னிடம் கிசுகிசுத்தான்.

சுகுமார் என்று எழுதி கீழே எக்ஸ் போட்டு ஆ என்று எழுதப்பட்ட புத்தக அட்டைகள். என்னுடைய புத்தகம் மொத்தமும் கிறுக்கி வைத்திருப்பேன். ஆனால் சுகுமாரின் புத்தகங்கள் புத்தம் புதிதாக இருந்தன. பெயரைத் தவிர எந்த எழுத்துகளும் இல்லை. ஆனால் புதிய புத்தகத்திற்கான வாசம் இல்லை.

ரகுவின் அண்ணனுடைய நண்பன் என்பதால் ரகுதான் அதிக உரிமையோடு அங்கே நின்று புத்தகங்களை வாங்கினான். நான் சைக்கிளை விட்டு இறங்கி ஹேண்டில்பாரை பிடித்துக்கொண்டே நின்றிருந்தேன்.

சுகுமாரை நாங்கள் ‘அண்ணன்’ என்று அழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். நன்றி சொல்லி கொஞ்சதூரம் வந்தபிறகு, சைக்கிளை நிறுத்தி, பொறுமையாகப் புத்தகங்களைப் பார்த்தோம். மனதிற்குள் ஒருவித படபடப்பு ஏறத் துவங்கியது எனக்கு. ஆனால் ரகு சிரித்துக்கொண்டே ‘எப்பிடி’ எப்பிடி’ என என்னைப் பெருமையாகப் பார்த்தான். நான் ஆங்கிலப் புத்தகத்தைப் புரட்டி ‘வல் கேம் டு ஃப்ளோரா’ என திக்கித் திக்கி வாசித்துக் கொண்டிருக்கும்பொழுது சட்டென என் மார்ப்பைக் கிள்ளினான். அதுவரை மறந்திருந்த வலி சுரீரென்று மூளை வரைப் பாய ரகுவைத் தள்ளிவிட்டேன். தடுமாறி சிரித்தவன், லவ்வு கேம்ட்டுவா என கிண்டலடித்தான்.

                                 சாந்தி சைக்கிள் கம்பெனி வாசலில் வண்டியை நிறுத்தினோம். ஒருமுறை சைக்கிளைச் சுற்றி வந்த கணேசன் அண்ணன், “பிரேக் கட்டய தேய்ச்சு எடுத்துருக்கீங்களேடா குடுக்குற ஒத்த ஓவாக்கு” என புலம்பி, நீளநோட்டில் நேரம் குறித்துவிட்டு கணக்கை முடித்தார்.  “என்னடா இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க” என்றவரிடம் புத்தங்களைக் காட்டிவிட்டு நடந்தோம். ரகு ஏதேதோ பேசிக்கொண்டே வந்தான். எனக்கு மார்புக் காம்புகளில் இருந்த வலிதான் சிந்தனை முழுக்க. யாரிடம் என்னவென்று கேட்பது எனப் புரியவில்லை. ஆங்கிலமும் கணக்கும் என்னிடம் கொடுத்துவிட்டு மற்ற புத்தகங்களை அவன் வைத்துக்கொண்டான். “சாப்ட்டு வர்றேண்டா” என்று அவன் வீட்டிற்குள் நுழைய முற்பட்டான். அவனை ஒருநிமிடம் நிறுத்தி அதிகமாக வலிக்கிறது எனச் சொல்ல வேண்டும் போல் இருந்தது. ஏனோ எதுவும் சொல்லாமல்  வீட்டை நோக்கி நடந்தேன்.

நடுவில் குழாயடி. நுரைத்து நிறைந்தது குடம். ஓடிப்போய் குழாயை நிறுத்திவிட்டு எவரேனும் பார்க்கிறார்களா எனப் பார்த்தேன். யாருமில்லை. மதியம் நேரம். ஆனால் அவ்வளவாக வெய்யில் தெரியவில்லை.  நுரை வழிந்து ஓடியதால் நிறைந்துவிட்டது என்று நினைத்த குடம் நிறையவில்லை. கழுத்துப்பகுதியில் இருந்து காலியாக இருந்தது. குழாயின் மூடியை கொஞ்சமாகத் திறந்து குடம் நிறையும் வரை நின்ற பொழுது குடத்தை எடுக்க வந்த கற்பூரம் “பார்றா எம் மருவனுக்கு தெருமேல இருக்குற அக்கறைய” என்று கத்திக்கொண்டே அருகில் வர. “அட இல்லத்த, தண்ணிலாம் வெட்டியா வழிஞ்சு ஓடுச்சு” என்றேன். அவள் கத்தியதும் தெருவில் யாரேனும் பார்க்கிறார்களா எனப் பார்த்தேன்.  “கொடத்த தூக்கிவிட்றா” என்று கையில் இருந்த காலிக்குடத்தை கீழே வைத்துவிட்டு நிறைந்த குடத்தை இடுப்பிற்கு ஏற்ற வசதியாக நின்றவளைப் பார்க்க, “ம்ம்” என்றாள். குனிந்து தூக்கும்போது மார்பில் சுரீர் என வலித்தது. என்னையறியாமல் அம்மா என்றதும், பதறிய கற்பூரம், “என்னாச்சுடா” என்று முகத்தை நிமிர்த்தினாள். “ஒன்னும்மில்லத்த” என விலகி நின்று மார்பை அனிச்சையாக அழுத்திக்கொண்டேன். ‘ஏண்டா இப்பிடி மொகம் கோணிக்கிட்டு போகுது ஒண்ணுமில்லன்ற” என குடத்தோடு அருகில் வந்து மீண்டும் தாடையை நிமிர்த்திக் கேட்டாள். “இல்லத்த இங்க வலிக்கிது, ரொம்ப வலிக்கிது” என மார்ப்புக் கட்டியைப் பிடித்துக் காட்டினேன். சட்டென சிரித்து குடத்தில் நிறைந்து இருந்த நீரை ஒருகை அள்ளி என்மேல் அடித்தவள், “டேய் இது ரெண்டு நாள் இருக்கும் அப்பறம் போய்ரும்டா. மூஞ்சில பரு வருது பாரு, அந்தமாதிரி. ரொம்ப வலிச்சா கொஞ்சமா சுண்ணாம்பத் தடவிக்க” என்று சொல்லி முன்னால் நடந்தாள். குடம் தூக்கிப்போகும் அவளின் நிழல் படர மதிய நேரத்தில் தெருவே அந்நியமாகத் தெரிந்தது.

                           வீட்டில் யாருமே இல்லாதது போல் அமைதியாக இருந்தது.  கூடத்தில் அம்மா படுத்திருந்தாள். பொதுவாக இந்த நேரத்தின் தெருவையோ வீட்டையோ நான் அவ்வளவாகப் பார்த்ததில்லை என்பதால் என்னவோ போல் இருந்தது. இவ்வளவு அமைதியாகவா வீடு இருக்கும். ஒருவேளை வேறு ஏதேனும் பிரச்சனையா என நினைத்தேன். சலனம் ஏதும் ஏற்படாதவாறுதான் கடந்தேன். ஆனாலும் பட்டென கண்களைத் திறந்தவள், “ஏண்டா ஊர்ல இருக்குற வெய்யில் எல்லாம் ஒந்தலைலதான் விழனுமா? சாயங்காலம் போகவேண்டியதுதான” என முணுமுணுத்தாள்.

அப்பா இல்லை என்பதை உறுதிசெய்துகொண்டு, ,மோட்டரைப் போட்டு கண்களை மூடிநின்றேன். வலிக்கு சுகமாக இருந்ததுபோல் இருந்தது. நீர் விழும் படி மார்பைக் காட்டி நின்றேன். உள்ளே அம்மாவிடம் கற்பூரம் அத்தை பேசும் சத்தம் கேட்டது. ஈரக்கையால் தொடாமல் துண்டை வைத்து மோட்டர் ஸ்விட்டை அணைத்துவிட்டு பக்கவாட்டில் நின்று துடைத்து உடை மாற்றிக் கொண்டிருக்கும்போதே கற்பூரம் அத்தை வந்துவிட்டாள்.

“எங்க காட்டு” என்றவள் கையை வைத்து அழுத்த வலியை விட கூச்சமும் வெட்கமும் அதிகமாக துண்டை வைத்து மறைத்துக்கொண்டே “வலிக்குதுத்த” என்றேன். “ஆமாடா வலிக்குமாம். இப்பத்தான் அம்மாட்ட சொல்லிட்டு இருந்தேன். கொஞ்சூண்டு சுண்ணாம்புல ஜீனியைக் கரைச்சு அப்பி விடனுமாம். அதுக்குத்தான் வந்தேன்” என்றாள். “அய்ய, நானே போட்டுக்குறேன்த்த” என்று அவசரமாக மறுத்தவுடன் சிரித்து, “பெரிய இவுரு” என தலையில் தட்டிவிட்டுப் போனாள்.

சாப்பாட்டுத் தட்டை வைத்த அம்மா தலையைத் தொட்டுப்பார்த்து ஈரம் காயமல் அமர்ந்ததற்கு வழக்கம் போல் திட்டிக்கொண்டே, “ஏண்டா எத யார்க்கிட்ட சொல்றதுனு இல்லியா, அவகிட்ட போய் ஒளரிவச்சுருக்க, ஊர்பூராம் தமுக்கு அடிச்சிருவா இன்னைக்கு” . தட்டில் கையைக்கழுவி கொஞ்சமாகத் தள்ளிவிட்டு எழுந்து நேராகப் பின்னால் போனேன். “அதான, திங்கும்போதே வந்துருது, ஒடம்புல என்னத்த ஒட்டும்”.

                                  ற்றைக்கு முன்பு இருந்த நிச்சலனத்தின் மீது தெருமொத்தமும் தொப்பென்று விழுந்தது போல் சத்தம் வந்தது. நிறைய குரல்கள் சத்தமாக சலசலப்பாகக் கேட்கத் துவங்கியது. கொள்ளைப்பக்கத்தில் இருந்து தடதடவென ஓடி வாசலுக்கு வருவதற்குள் பாதிக்கூட்டம் கற்பூரம் வீட்டின் முன் இருந்தது. உள்ளே இருந்து அவளது கணவனைத் தூக்கொண்டு ஓடிவந்தார்கள் நானகைந்து பேர். ரகு கூட்டத்தில் இருந்து தள்ளிக்கொண்டு வந்தவன் என்னருகே வந்து, “பாம்பு கடிச்சிருச்சாம்டா பாவம், மவுத்துதான் போல” என்றான். “பெரியாஸ்பத்திரிக்கே விடுங்கடா, ஊடால எங்கயும் நிக்காதீங்க” என மூர்த்தியின் குரல் ஓங்கி ஒலிக்க, ஆட்டோவில் திணித்து விரைந்தார்கள். வாயில் சேலையின் பகுதியை அடைத்ததுபோல் வைத்து அமர்ந்திருந்தாள் கற்பூரம். வீட்டிற்கு உள்ளே நான்கைந்து பேர் எதையோ உருட்டும் சத்தம் கேட்க நானும் ரகுவும் ஓடினோம். முருகேசன் அண்ணன் கையில் மெலிதான கடப்பாரையை வைத்துக்கொண்டு கதவிடுக்குகள், கட்டிலுக்கு அடி என தீவிரமாகத் தேடிக்கொண்டிருந்தார். எங்களைப் பார்த்ததும் வெளியே போகச்சொல்லி திட்டினார். இரண்டு அறைகள், பின்பக்கம் போகும் பாதையில் இருக்கும் பொந்துகள் எனத் தேடியவர் சட்டென நின்று உஷ் உஷ் எனக் கத்த சரவணனும் துரையும் அவருக்கு அருகில் போய் நின்று கொண்டார்கள். நான் பயந்துபோய் ரகுவைப் பார்க்க, அவன் இரும்புக்கட்டிலில் ஏறி நின்றிருந்தான்.  சரேலெனத் தலையைக் காட்டிய நொடியில் ஓங்கி அடித்து உரச்சாக்குப்பையில் நுழைத்துக்கொண்டே ஓடினார் முருகேசன். என்ன பாம்பு என்று தெரிந்தால் உடனடியாக மருந்து கொடுக்க ஏதுவாக இருக்கும் என்று அவர் சொன்னதாக சரவணன் எங்களிடம் சொல்லிக் கொண்டே வீட்டை ஒருமுறை நோட்டம் விட்டான்.  “சந்து பொந்தெல்லாம் அலசி எப்பிடியோ பிடிச்சுட்டாப்ள முருகேசென் முருகேசென் தான்” என்ற துரையைப் பார்த்த சரவணன் “போவமா பெரியாஸ்பத்திரிக்கி இல்ல அம்புட்டுதானா” எனப் பேசிக்கொண்டே வெளியேறினார்கள். திண்ணையில் இருந்த கற்பூரத்தை இன்னொரு ஆட்டோவில் ஏற்றிக் கூட்டிப்போய்க் கொண்டிருந்தார்கள்.

எனக்கும் ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டும் போல் இருந்தது. கற்பூரம் அத்தையை அப்படிப் பார்த்தது என்னவோ போல் மனதிற்குச் சங்கடமாக இருந்தது. கொஞ்ச நேரத்திற்கு முன்னர் தான் அவ்வளவு சிரிப்போடு பேசிவிட்டுப் போன முகம். இப்படி இருண்டு இருந்ததைப் பார்க்க என்னவோ போல் மனதைப் பிசைந்தது.

“வாடக சைக்கிள எடுத்துப் போவமாடா” எனக் கேட்ட என்னை ஒருமாதிரிப் பார்த்தான் ரகு. “ஒங்கப்பு டவுசரக் கழட்டிருவாருடா அங்க பாரு” என அவன் என் வீட்டை நோக்கிக் காட்டினான். நான் அந்தத் திசைப்பக்கம் திரும்பவில்லை. அப்பா நின்றிருக்கிறார் என்பதை உடனே உணரமுடிந்தது.

தெருவில் நான்கைந்து குழுக்களாகப் பிரிந்து பேசிக்கொண்டிருந்தார்கள். ரகு, தன் அண்ணன் நின்றிருந்த கூட்டத்திற்கு அருகேப் போனான். எனக்கு ஏனோ வீட்டிற்குள் போய்விட வேண்டும் போல் இருந்தது. நல்லவேளையாக என்னைக் கடந்து, சத்தம் போட்டுக்கொண்டே தெருவின் மறுமுனையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார் அப்பா. நான் வீட்டிற்குள் போய்விட்டேன். என்னை பார்த்ததும் பெரியம்மாவிடம் பேசிக்கொண்டிருந்த அம்மா பேசுவதை நிறுத்திவிட்டு, “நொற தள்ளிருந்தாச்சாடா” என்றாள். எவ்வளவு யோசித்தும் கற்பூரம் முகம் தான் நினைவிற்குள் வந்ததேயொழிய அவள் கணவனைத் தூக்கிக்கொண்டு போன பிம்பமோ அந்த முகமோ வரவில்லை.

   ரவில் தெரு வழக்கமான சத்தத்தோடு இருந்தது. மதியம் ஏன் அப்படி இருந்தது என்ற யோசனை வந்தது. ஒருவேளை இன்று மட்டும் அப்படி இருந்ததாகப் பட்டதா, ஒருவேளை பாம்புக்கடி சம்பவம் நடக்கப்போவதை முன்கூட்டியே அறிவிப்பதற்கான அறிகுறியாக இருந்ததோ அந்த நிச்சலனம் எனத் தோன்றியது. ஆனால் காலையில் சைக்கிளை எடுத்துக்கொண்டு புத்தங்கள் வாங்கப் போகும்பொழுதே மனம் ஒருநிலையில் இல்லை என்றும் தோன்றியது. ஒருவேளை மார்புக் காம்புகளில் ஏற்பட்டிருக்கும் வலியால் அப்படித் தோன்றியதோ என்று நானாகவே நினைத்துக் கொண்டேன். இப்போது வலி இல்லை. கடந்த தீபாவளிக்கு வந்த ராக்கம்மா கையத்தட்டுப் பாடலில் வரும் குனித்த புருவமும் பாடல் மனப்பாடச் செய்யுளில் இருப்பதாகவும் ஐந்து மதிப்பெண்களை டோக்காக வாங்கிவிடலாம் என்றும் ரகு உற்சாகமாகச் சொல்லிக்கொண்டிருந்தான். கற்பூரத்தின் வீடு பூட்டிக் கிடந்தது. உயிர் பிழைத்து விட்டாராம்.  நாளை வந்துவிடுவார்களாம்.

கொஞ்ச நேரம் சைக்கிள் கடையில் அமர்திருப்போம் என்று ரகு அழைத்தான். எப்போதாவது இப்படி அங்கு போய் அமர்வோம். மூர்த்தியண்ணனும் அவருடைய நண்பர்களும் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். சத்தமாகச் சிரிப்பார்கள். எங்களை முன்பெல்லாம் விரட்டிவிடுவார்கள். இப்போதெல்லாம் ஒன்றும் சொல்வதில்லை.

“முருகேசன் மட்டும் பாம்பத் தேடி அடிச்சு எடுத்துப்போகாட்டி பொழச்சுருக்க மாட்டாராம்யா, டாக்டரே சொன்னாரு, நல்ல வேள இன்ன பாம்புன்னு தெரிஞ்சதும் டக்குனு மருந்தக் குடுத்துட்டோம்னு” கோபால் சொல்லிவிட்டு பக்காவாட்டில் மறைத்துவைத்திருந்த எதையோ எடுத்துக் குடித்துவிட்டு மீண்டும் அங்கேயே மறைத்து வைத்தார்.

மூர்த்தியண்ணன் சிரித்துக்கொண்டே, “ ஆமா, காப்பாத்தனும்ல..முருகேசனுக்கு விழுந்துருக்க வேண்டிய கொத்து”. எல்லோரும் சிரித்தார்கள். ஏன் சிரிக்கிறார்கள் என்று ரகு என்னிடம் கிசுகிசுப்பாகக் கேட்டான். எனக்கு மீண்டும் மார்புக் காம்பில் வலி எடுத்தது. கிளம்பினேன். ரகு தான் பிறகு வருவதாகச் சொல்லி சாய்ந்து அமர்ந்துகொண்டான்.

தெரு இப்போது அமைதியாக இருந்தது. சோடியம் விளக்கின் மஞ்சள் தெருவெங்கும் அப்பிக்கொண்டிருந்தது.

குழாயடியில் ஒரு குடம் நுரைத்து நுரைத்து நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. குழாயை மூடலாமா வேண்டாமா எனும் யோசனையோடு நடந்து கொண்டிருக்கிறேன்.

*

RELATED ARTICLES

1 COMMENT

  1. கற்குளம் நிறைந்து நுரைத்து வெளிவந்திருக்கும் மற்றும் ஒரு பதின் பருவ கதை. ஆண்களின் அகஉலகம் பெரிதும் பேசப்படாத ஒன்று. அதிலும் பதின் பருவ சிக்கல்கள் பெண்கள் போல் வெளித்தன்மை இல்லாததாலோ என்னவோ பெரிதும் பேசப்படவில்லை. குரல் உடைதல், மீசை முளைத்தல் என்ற இரண்டும் இல்லாத பட்சத்தில் ஆண்கள் எல்லாம் குழந்தைகளே. அப்படியான ஒரு ஆணின் பருவ மாற்றம் குறித்த அழகான கதை நுரை. வழக்கம் போல ரகுவை கூட்டிக்கொண்டு சுத்தி சுத்தி மதுரையை சுத்தி நடக்கும் கதை. ஒரு நாளாவது உங்ககூட மதுரைல தங்கணும் எனும் ஆசையா உங்கள் கதைகள் விதைத்து கொண்டே செல்கிறது. கதையின் இறுதியில் இது முருகேசனுக்கு விழ வேண்டிய கொத்து என்று சொல்வது …அப்படித்தானா ??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை

ஓவியம்

சிற்பம்

குழி