“ஒன்னயப் போலிஸ் தேடுச்சே ! என்னா விவரம்?”
சக்கரத்தை ’சல்ல்’ என சுழற்றிவிட்டு கோட்டம் பார்த்துக்கொண்டே அய்யப்பனிடம் கேட்டார் ஃப்ராங்க்ளின் அண்ணன்.
சைக்கிள் கடையின் இடது ஓரத்தில் போடப்பட்டிருந்த அல்லது நானே எனக்குத் தோதாக போட்டுக்கொண்ட டயர்களால் ஆனா நாற்காலியில் அமர்ந்து மும்முரமாய் பார்த்துக்கொண்டிருந்தேன்.
கேட்ட மாத்திரத்தில் அய்யப்பனுக்கு முகம் மாறிவிட்டது.
“எப்..ப? என்னாவாம்?”
ஒரு கண்ணை மூடி, சக்கரத்தின் சுழற்சியில் எங்கேனும் தடுமாற்றம் இருக்கிறதா, விளிம்பின் வட்டப்பாதையில் விலகல் ஏற்படுகிறதா என்பதைப் பார்த்துக்கொண்டே,
“என்னாவாம்னு இங்க வந்து கேட்டா ?, தேடுனாக, சொன்னேன்.”
சொல்லிக்கொண்டே எழுந்தார் . இரண்டு மூன்று தப்படிகள் லேசாக குனிந்தவாறே நடந்து பின் நிமிர்ந்தார்.
“வீல் பெண்ட எடுக்குறதுக்குள்ள நம்ம பெண்டு நிமிர்ந்து போகுது கருமம்”
நான் அய்யப்பனையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் கழுத்துப்பகுதில் படர்ந்த வியர்வையைத் துடைத்துவிட்டு என்னைப் பார்த்தான்.
நான் நிலமையை உணர்ந்து, “ என்னா அய்யப்பா, நைட்டு என்னமும் சம்பவம் கிம்பவமா?”
உடனே பதறியவன், “அட ஏண்டா நீ வேற, நானே ஆத்தக் கண்டனா அழகரக் கண்டனான்னு கெடக்குறேன். சம்பவமாம்..”
ஃப்ராங்க்ளின் அண்ணன் எங்களைக் கண்டுகொள்ளாமல் அடுத்த சைக்கிளை எடுத்து கவிழ்த்துப் போட்டார்.
அப்போது புல்லட் சத்தம் டுபுடுபுடுபுவென காதை அடைத்துக்கொண்டு எங்களைச் சமீபித்தது. அய்யப்பன் கிட்டத்தட்ட அழும் நிலையில் இருந்தான். எனக்குள் கலவரம் குடிகொள்ளத் துவங்கியது. ஏனெனில் ஊருக்குள் வந்திருக்கும் இந்த புதிய இன்ஸ்பெக்ட்டரின் அதிரடிகள் அப்படி.. ‘காட்டடி கர்ணன்’ என்று பட்டப் பெயரை வழங்கி கெளரவித்ததும் இதே அய்யப்பன் தான்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏதோ ஒரு பிரச்சனையில் பஸ் ஸ்டாண்டில் இருந்த மலைச்சாமி கடையை நொறுக்கி தன் பராக்கிரமத்தை நிலைநாட்டியவன் அய்யப்பன். ஆனால் இந்த புதிய இன்ஸ்பெக்ட்டர் வந்ததில் இருந்து ஊருக்குள் அதுபோன்ற சம்பவங்கள் ஏதும் நடப்பதில்லை என்பதில் என்னைப் போன்ற வேடிக்கை மனிதர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். வேலையை விட்டு வரும்போதும் சரி, வேலைக்குப் போகும்போதும் சரி, ஒரு எட்டு ’ஓம் முருகா’ சைக்கிள் கடையில் அமர்வது என் அன்றாடம். சுந்தரா மெடிக்கல்ஸில் இருந்து எங்கள் ’டாப்’ என சொல்லப்படும் ஜாகையை மாற்றியது ரகு தான்.
“போய் ஒக்காந்ததும், டீ சொல்லு, டிபன் வாங்கிட்டு வான்னு வேல வாங்குறாய்ங்கடா அங்கன.. நம்ம என்ன இன்னும் சின்னப்பயலுகளா?” என்பது எனக்கும் ஏற்புடைய காரணமாய் இருந்தது ஒரு காரணம் எனில், ஃப்ராங்க்ளின் அண்ணனின் பேச்சு முழுமுதற் காரணம். மெடிக்கல்ஸில் ’மூத்த செட்’ அமர்ந்து கொண்டு எங்களை ’இடக்கை டீலிங்’ செய்வார்கள். ஆனால் ஃப்ராங்க்ளின் அண்ணன் வயது வித்தியாசம் ஏதுமின்றி ஒருபோலப் பேசுவார் என்றெல்லாம் பூசி மொழுகுகிறேன், ஆம்., உண்மையான ஒரே காரணம், கெளரி. சைக்கிள் கடை அமைந்த இடம், பஸ் ஸ்டாண்ட்.. பேருந்தில் இருந்து இறங்கிப் போகும் எவரும் கடையைக் கடந்தே ஆகவேண்டும். கெளரியும் என்னைத் தாண்டித்தான் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.
ஃப்ராங்க்ளின் அண்ணன் எப்பேர்ப்பட்ட திறமையானவர் என்பதை மூன்றாம் நாளே உணரச் செய்துவிட்டார். நான் கெளரிக்காகத்தான் அங்கு டாப் அடிக்கிறேன் என்பதை ரகுவே கண்டுபிடித்திருக்கவில்லை. ஆனால் அண்ணன், “இன்னிக்கு சீக்கிரமே 6674 வந்துருச்சுயா, சும்மா ஓக்காந்து கெடக்குறதுன்னா ஒக்காரு, உன் ஆளு போயிருச்சு”
அந்த ’ஓக்காந்து கிடப்பது’ என்பதில் அவர் கொடுத்த ஓங்காரம்தான் அவரின் லந்துப் பேச்சு. பேருந்து வழித்தட எண்களைச் சொல்லமாட்டார். 6674, 8047 என பதிவெண்களை வைத்தே சொல்வார். பைக், கார் என எல்லாவற்றையும் பதிவெண்கள்தான் அவரின் அடையாளம்.
“ஒம் பேரு ஃப்ராங்க்ளின், கட பேரு ஓம் முருகாவா?” என எவரேனும் ஒரு புதிய ஆள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கேட்டுவிடுவார். அவரும் சளைக்காமல் சொல்வார்.
“பிரசவத்துல நானோ எங்க ஆத்தாளோ போய்ச் சேர்ந்துருவம்னு இருந்துச்சாம். ஆனா தெற்குவாசல் டாக்டர், ஃப்ராங்க்ளின் தான், தாய் வேற பிள்ள வேறயா பிரிச்சு ரெண்டு உசுரையும் காப்பாத்துனாராம். அதுனால எங்கப்பாரு, மதம் என்னத்த மதம்னு அவரு பேரையே வச்சுப்புட்டாராம்”
“இந்தாளு பொய் சொல்றாண்டா அப்து” என்று என் காதில் கிசுகிசுப்பான் ரகு.
புல்லட் எங்களுக்கு அருகில் வந்து, எங்களைக் கடந்து போனதும்தான் அய்யப்பன் மூக்கில் இருந்து மூச்சு வந்தது. ஆனால், முகத்தில் நிம்மதி வந்தது என்று எழுத முடியாதவண்ணம் முகத்தை வைத்திருந்தான்.
நான் அவனைப் பார்த்த விதம் அவனை ஏதாவது செய்திருக்க வேண்டும். சட்டென குரல் உயர்த்தி,
“மாப்ள, வண்டியக் குடு, டக்குபுக்குனு டேசனுக்கேப் போயி என்னா எவ்வடம்னு கேட்டு வந்துர்றேன்”
என்றான். நான் வண்டியைக் கொடுத்தாலும் போகமாட்டான் என்பதை அவன் உடல்மொழி உணர்த்தியது.
கினிங்கினிங்கினிங் என வெறுப்பேற்றுவது போல் சைக்கிள் பெல்லை அடித்துக் கொண்டே அருகில் வந்து நின்ற போஸ்ட் மேன், “ஏ, அய்யப்பா, ஒன்னய காலைல இருந்து ராவிக்கிட்டு இருக்கேன். மணியார்டர் வந்துருக்கு”
ஸ்பேனரை எடுத்து சைக்கிள் பார் கம்பியில் தட்டிய ஃப்ராங்க்ளின் அண்ணன், “அட, போஸ்ட்மேன்னு சொல்றதுக்குத்தான் போலிஸ்னு சொல்லிட்டேன் அய்யப்பா, ரெண்டும் ஒரே காக்கி ட்ரஸ்ஸா, லைட்டா கன்பிஸ் ஆகிட்டேன்”
அய்யப்பனுக்கு எப்படித் தன் உணர்வை வெளிப்படுத்துவது எனத் தெரியவில்லை. தன்னைக் கேலிப்பொருளாக்கிய ஃப்ராங்க்ளின் அண்ணன் மீது வந்த கோபத்தை விட, நல்ல வேளை போலிஸ் தேடவில்லை என்ற நிம்மதியே அவன் முகத்தில் தெரிந்தது. போஸ்ட்மேனோடு எதையோ பேசிக்கொண்டே போனவனைக் காட்டி, கண் அடித்துச் சிரித்தார். எனக்கும் சிரிப்பு வந்தது.
“இவென்லாம் ரெவுடின்னுக்கிட்டுத் திரியுறான், பகுமானமா” அண்ணன் மீண்டும் சொல்லிச் சிரித்தார்.
“பாவத்த, ஏன்ணே அவனப் போட்டு சத்தாய்க்குற, ஆனா போலிஸ்னதும் அரண்டு போய்ட்டான்”
ஃப்ராங்க்ளின் என்னை ஏற இறங்கப் பார்த்து, “ஒரு அடி, ஒரே ஒரு போலிஸ் அடிய வாங்குனா அப்புறம் ஆயுசுக்கும் மறக்க முடியாது” சொல்லிவிட்டு மல்லாந்து கிடந்த சைக்கிளை திருப்பி, நிறுத்தினார்.
கீழவாசல் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். அங்கிருந்து பஸ் ஏறிய அரை மணி நேரத்தில் மதுரையைச் சுற்றி இருக்கும் சப்-அர்பன் களில் ஒன்றான எங்கள் ஊருக்குள் சென்றுவிடும். இன்று எப்படியும் கேட்டுவிடுவது என முடிவெடித்து என் வண்டியை ஓம் முருகாவிலேயே போட்டுவிட்டு, பஸ்ஸில் வந்துவிட்டேன். அவள் வரும் நேரம் நெருங்கியதும் சற்று பதற்றம் கூடியது. ஆனால் இன்று எப்படியும் கேட்டுவிட வேண்டியதுதான்.
தோழியோடு பேசிக்கொண்டே வந்தவள், என்னைப் பார்த்ததும் ஆச்சர்யமாய்ப் புருவம் உயர்த்தினாள். அங்கு ஊரில் சைக்கிள் கடையில் நான் அமர்ந்திருப்பேன் என்று நினைத்திருந்திருப்பாள். ஒரு நொடிதான். பின், தோழியோடு பேசிக்கொண்டே என்னைக் கடந்து, சற்றுத் தள்ளி நின்று, பஸ் வருகிறதா என்று எட்டிப்பார்த்தாள்.
நான், சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, அருகில் சென்று, ‘எக்ஸ்கியூஸ்மீ’ என்று சொல்ல எத்தனித்து, முடியாமல் மீண்டும் பழைய இடத்திற்கே வந்துவிட்டேன். நான் அருகில் சென்று திரும்பியதை அவள் சாதாரணமாகத்தான் பார்த்தாள், ஆனால் எனக்கு அது அசட்டையாகப் பார்த்தது போல் பட்டது. அந்தப் பார்வை என்னைச் சீண்டியது போலும் இருந்ததால் நேராகப் போய் கேட்டேன்.
“கெளரி, நல்லா இருக்கியா?”
“என்னாது?”
“நான் பேசுறது கேட்கலயா?”
“நான் என்னாதுன்னு கேட்டது எதுக்குன்னு புரியலயா?”
கெளரியிடம் எனக்குப் பிடித்தது அவளுடைய கண்கள்தான். அவள் கண்கள், பார்ப்பதைத் தவிர எல்லாமும் செய்யும்.
“புரியல”
“ப்ச், எங்கிட்ட எதுக்குப் பேசுறீங்கன்னு கேட்குறேன், பஸ்சு வர்ற நேரம், ஊர்க்காரங்க நிப்பாங்க, ப்ளிஸ், கெளம்புங்க”
“அப்ப, நீயே ஒரு நாளும் எடமும் சொல்லு, உங்கிட்ட பேசணும். வெறும் பேச்சு இல்ல, முக்கியமான விசயம்”
அவள் பதிலுக்குக் காத்திராமல் நான் நகர்ந்தேன். முன்பே என் மனதிற்குள் திட்டமிட்டபடி, வந்த ஏதோ ஒரு பஸ்ஸில் ஏறி பெரியார் பஸ் ஸ்டாண்ட் போய்விட்டேன். வீட்டிற்குப் போகும் வரை, கெளரி நல்லா இருக்கியாவில் ஆரம்பித்து கெளம்புங்க வரையிலான வார்த்தைகளை மீண்டும் மீண்டும் யோசித்துக் கொண்டிருந்தேன். அவள் சொன்ன பதில்களில் இருந்து எனக்கான வார்த்தையை எப்படித் தேடியும் அடையமுடியவில்லை. ஆனால் அவள் பேசிய வார்த்தைகள் அனைத்தும் மொத்தமாகக் கலந்து ஒரு வீழ்படிவு போல என் மனதில் படிந்தது.
“ஒன்னய போலிஸ் தேடுச்சே ! என்னா விவரம்?”
ஃப்ராங்க்ளின் அண்ணன் கேட்டதும், சிரித்துக்கொண்டே அங்கு கிடந்த நாளிதழைக் கையில் எடுத்தேன்.
“ஏன்ணே காலங்காத்தால கட்டயக் குடுக்குற?, நான் என்ன அய்யப்பனா பம்முறதுக்கு”
“டேய், நெசமாடா, ஏண்டா யார் கிட்ட என்ன லந்து பண்றதுன்னு வரமொற இல்லாமலா இருக்கேன். ரெண்டு நாளுக்கு முன்னாடி கீழ வாசல்ல எதுவும் கிருத்துமம் பண்ணியா?”
புராணப் படங்களின் இடி இடித்த மாத்திரத்தில் காலுக்கடியில் பூமி பிளக்கும் நிகழ்வு, நிகழ்ந்தது எனக்கு.
“எதுவும் பண்..ணலயேண்ணே” நான் தட்டுத் தடுமாறிச் சொல்வதைப் பார்த்தவர், ஸ்டூலை எடுத்துப் போட்டு அமரச் சொன்னார். அந்தக் காலை வேளையில் தாகம் எடுத்தது. நாக்கு உலர்ந்து வார்த்தைகள் கடினப்பட்டு வெளிவந்தன.
“இப்ப என்ன பண்றதுண்ணே” தயங்கித் தயங்கி, அன்று கெளரியிடம் பேசியதைச் சொன்னேன்.
என் நிலையை உணர்ந்த ஃப்ராங்க்ளின் அண்ணன்,
“அட, என்னாடா, கொலையா பண்ணிப்புட்ட, செத்த பொறு, நம்மளே போய் கேட்ருவோம்”
அவர் சைக்கிள் கடையின் மேலே இருந்த பலகையில் முருகன் சிரித்துக்கொண்டிருந்தார்.
பைக்கை ஸ்டார்ட் செய்யும் போது உதறியதை கவனித்த ஃப்ராங்க்ளின் அண்ணன், என்னை லேசாக நெட்டி நகர்த்தி, தான் ஓட்டுவதாக உணர்த்தினார்.
எந்தவித பரபரப்புமின்றி அமைதியாக இருந்தது காவல் நிலையம். அதுவரையில்,எனக்கு அதுவும் ஒரு கட்டிடம் என்பதாக இருந்த ஒன்று. முகப்பில் சிறிய கோவில். பக்கவாட்டில் காவலர் குடியிருப்பு. பள்ளியில் படிக்கும்போது அங்கு கிரிக்கெட் விளையாடுவோம். பாபு, அருள்தாஸ் என போலிஸ் குவார்ட்டர்ஸ் நண்பர்கள். எங்கு எந்தப் புள்ளியில் இந்தப் பக்கம் வருவதை நிறுத்தினேன் என்பதையும், எப்போது அவர்களின் நட்பு தொலைந்தது என்பதையும் சரியாக நினைவில் கொண்டுவர இயலவில்லை. ஆனால் பாபுவோ அருள்தாஸோ தென்படுகின்றானா என்ற நப்பாசையில் என் கண்கள் அலைந்தன.
ஃப்ராங்க்ளின் அண்ணன் அமைதியாக மரப்பெஞ்சில் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் நான் இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தேன்.
“அட பதறாதடா, நான் பேசுறேன். நீ அமைதியா இரு.” அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, புல்லட் சத்தம் தடதடவென அதிர்ந்து, அணைந்தது. எனக்குள் எல்லாமும் அடங்கி இருந்தது.
“எதுவும் பதில் சொல்லிறாத, ஒரு அடி வாங்கினா கூட, காலம் முழுக்க அந்த நெனப்பு ஒன்னய எதுவுமே பண்ணவிடாம அழிச்சுரும்”
போலிஸ் பூட்ஸ் கால் சத்தம் என திரைப்படங்களில் கண்டதை நேரில் செவிப்பறை கிழித்து உணர்த்தியது. அதுவும் மொசைக் தரையில் கிறீச் என ஆணியின் சத்தம் தேய்பட பற்கள் கூசின.
தன் அறைக்குள் போய் அமர்ந்தார். பத்து நிமிடங்கள் கான்ஸ்டபிள்கள் உள்ளே போவதும், வெளியில் போய் எதையோ பார்த்துவிட்டு வருவதுமாய், ஒருவித கலக்கம் ஏற்பட்டது. அதுதான் அவர்கள் அன்றாடம் என ஃப்ராங்க்ளின் அண்ணன் கிசுகிசுத்தார். அமைதியாக இருக்கச் சொன்னார்.
ஒரு மணி நேரம் கழித்து, கிட்டத்தட்ட நான் பயத்தில் மூர்ச்சையாகி இருந்த நேரம், முகமெல்லாம் திருநீற்றுப் பட்டைப் போட்ட பாபுவின் அப்பா, எங்களை உள்ளே அழைத்துப் போனார்.
நாங்கள் உள்ளே நுழைந்ததும் , “நீதானாடா அது, ஆமா, இவென் யாரு, ஒனக்கு பாடிகார்டா?, ஏட்டு, மொதோ அந்தாள வெளில தள்ளு”
என் மனதிற்குள் முழுமையாக தோன்றிவிட்டது. இன்றோடு முடிந்தோம். அன்னிச்சையாக ஃப்ராங்க்ளின் அண்ணனின் கையைப் பற்றினேன்.
“சார், சின்னப் பையன் சார், இப்பத்தான் வேலைக்கு சேர்ந்துருக்கான், என்ன விசயம்னு சொல்லுங்க, இனிமே நடக்காம பார்த்துக்குறேன்”
ஃப்ராங்க்ளின் அண்ணன் பேசப் பேச, இன்ஸ்பெக்ட்டர் எழுந்து, ஜன்னல் வழியாக வெளியே பார்த்துவிட்டு, அருகில் வந்தார்.
“இவென் பெரிய மன்மதன், இவனுக்கு வக்காலத்து வாங்க வந்துட்ட, ஒன்னயப் பார்த்தாலே அக்யுஸ்ட் மாதிரி இருக்கே, ஏட்டு, இந்தாளு என்ன பண்றான்”
எனக்குள் ஏதோ ஓர் உணர்வு. ஒரு வேதிமாற்றம். ஃப்ராங்க்ளின் அண்ணனை இவ்வளவு கேவலமாகப் பேசியதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. போகவும், நான் போலிஸ் விசாரிக்கும் அளவிற்கு கெளரியிடம் எதுவும் பேசவில்லையே என்ற எண்ணம் எல்லாம் சேர்த்து, சற்று சத்தமாக வெளிப்பட்டது.
“சார், அப்பிடி என்னா சார் பண்ணிட்டேன்? ஜஸ்ட், பேசணும்னு”
நான் எதிர்த்துப்பேசிக் கொண்டிருக்கும் போதே, விரல்களை மடக்கி, என் முகத்திற்கு நேராய் ஒரே குத்..து.. விட வந்தவரை ஃப்ராங்க்ளின் அண்ணன் தன் இரண்டு கைகளாலும் பிடித்து நிறுத்தி இருந்தார். என் மூக்கிற்கு அருகே, இன்ஸ்ட்பெக்ட்டரின் கையை ஃப்ராங்க்ளின் அண்ணன் பிடித்திருந்த காட்சியை மூளையும் மனமும் ஏற்கமுடியாமல் குழம்பித் தவித்தன. ஆனால், இதயம், எவ்வித குழப்பமும் இல்லாத தொழில்சுத்தமாக, தன் துடிப்பை ஒரு நொடி நிறுத்தியது.
அப்படியே ஃப்ராங்க்ளின் அண்ணனை இழுத்துக்கொண்டு உள்ளே இருக்கும் அறைக்குள் போனார் இன்ஸ்பெக்ட்டர். கூடவே ஏட்டும் ஓடினார். நான் நிலைகொள்ளாமல் அமர்ந்துவிட்டேன்.
கெளரி, இன்ஸ்பெக்ட்டர் கர்ணனின் சொந்தக்காரப் பெண் என்பதும், ஃப்ராங்க்ளின் அண்ணனின் வலது கை முறிவும் இடுப்பு எலும்பு முறிவும் அவள் எவ்வளவு நெருங்கிய சொந்தம் என்பதையும் உணர்த்தியது. ஸ்டேசனில் கிடத்தி வைக்கப்பட்ட திருட்டு சைக்கிள் ஸ்பேர்பாட்ஸ் சம்பந்தமான விசாரணையில் வார்த்தை முற்றி அடிவாங்கிவிட்டதாக எல்லோரிடம் சொன்ன ஃப்ராங்க்ளின் அண்ணன்,வேலைக்கு ஒரு ஆளைப் போட்டு, கடைக்கு வருவதை நிறுத்திக் கொண்டார். பின் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருவதையே நிறுத்திக் கொண்டுவிட்டார். நான்கைந்து ஆண்டுகளாக வெளியே வருவதில்லை.எவ்வளவோ வற்புறுத்தி அழைத்தும் என் திருமணத்திற்குக் கூட வரவில்லை.
நான் அவர் வீட்டிற்குள் நுழைவதைப் பார்த்தவர், மலர்ந்து, “வாடா பாய், வா”
நுழைந்தேன்.
“நல்ல வேள, பொண்ணு பொறந்துருமோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன்ணே”
“அட முட்டாப் பயலே, ஏதோ ஒரு பொண்ணு ஒன்னய திரும்பிப் பார்கலேண்டு பொண்ணுங்கள தப்பா பேசுறதா? போற காலத்துல ஆணு பொண்ணுலாம் ஒன்னுதாண்டா, என்னா நிய்யி இப்பிடி பேசுற, உன்னய நல்ல பைய்யன்னு நெனச்சேன், இப்பிடி முட்டாப்பய மாதிரி பேசுறயே பாய்”
கோவமாய்க் கத்திக்கொண்டே நான் கொடுத்த இனிப்பை வாங்க மறுத்தவரை இடை நிறுத்தி சொன்னேன்.
“அட, அது இல்லண்ணே, பொண்ணு பெறந்தா எப்பிடி ஃப்ராங்க்ளின்னு பேரு வப்ப?”
நிமிர்ந்தார்.
ஆம் என்பது போல் தலை ஆட்டினேன்.
*
காமதேனு –
2018.