அம்மாவை அப்படி அந்த உடையில், பேண்ட்-சட்டையில் பார்த்ததில் இருந்து முருகனுக்கு என்னவோ போல் இருந்தது.
இன்றோடு மூன்று நாட்கள் ஆகிவிட்டன. அப்படியும் ஒரு துளிகூட மனதின் கனம் குறையவில்லை. ஏன் என்றப் பிரதானக் கேள்வியோடு எப்படி என பல கிளைக்கேள்விகள் அவன் மனதில் சதா எழுந்த வண்ணம் இருந்தன. அதுவும்
அவ்வளவு இறுக்கமனா சட்டை, அதைவிட இறுக்கமாக, தொப்பையை,கால்களை இறுகக் கவ்விய கால்சட்டை
என அவனால் ஏற்கவே முடியவில்லை.
மதுரையில் இருந்து தெற்கு எல்லைக்குப் போகும் நெடுஞ்சாலையில்
முப்பது கிலோமீட்டரில் வலதுபக்கமாக கோடுகிழித்தது போல் பிரியும் சின்னஞ்சிறு களிமண்
காய்ந்து பாலம்பாலமாக பிளந்த நிலத்தின் பக்கமாக இருக்கும் ஊர் அது. அந்த ஊரில் பத்தாண்டுகளுக்கு
முன்னர் வந்த ரோடுபோடும் இயந்திரம்தான் ஆகப்பெரிய அறிவியல் நிகழ்வு. அந்த நாளில் யானையைப்
பார்க்க கூடும் கூட்டம் போல் சிறியவர்கள் பெரியவர்கள் ஆண்கள் பெண்கள் என அனைவரும் நேரம்
கிடைக்கும்போதெல்லாம் போய்ப் பார்த்தார்கள். சரளைக்கற்களை அரைத்துக் குழைத்துக் கொட்டும்
நிகழ்வே பெரும் அதிசயமாக பேசப்பட, தார் டின்கள், தாரை உருக்கும் நெருப்பு ஏற்படுத்தும்
சத்தம் என பத்து நாட்கள் திருவிழா போல் கழிந்தன. தாரை சிறிய பந்துபோல் உருட்டி ஆடும்
ஆட்டம் தான் முருகனின் பால்ய கால நினைவின் முதல் பசுமை.
வெட்கையும் புழுதியும் ஒன்றுக்கொன்று
போட்டிபோட்டுக்கொண்டு உடலில் படியும். இருசக்கர வாகனத்தில் பயணிப்போரின் பற்கள் நரநரவென
ஒரு சுவையை உணரும். ஊரின் ஒரே குறிப்பிட த் தகுந்த நல்ல இடம் எனில் அது ஊருணியும் அதனையொட்டி
இருக்கும் நான்கைந்து மரங்களும் தான். நூறு வயதைத் தாண்டிய மரங்கள் என்பதால் வேரின்
மேற்பாகங்கள் நிலத்திற்கு மேலெழுந்து மூதாதையின் கால் நரம்புகள் போல் காட்சியளிக்கும்.
இரண்டு வேர்கள் பிரியும் இடத்தில் ஒருவர் அமர்ந்து கொண்டு குளத்தைப் பார்க்கலாம். பாசிபடர்ந்து
பச்சைப்பசேல் என நீர்ப்பரப்பு ஒரு திடமான பொருளைப்போல் அசங்காமல் நிற்கும். அதன் பெரும்பான்மைப்
பயனே கழுவத்தான் என்பதால் அதை பிய்யூருணி என்றே அழைத்தார்கள். அந்த மரத்தின் வேர்கள் வயதான ஓணான் போல் இருப்பதால் கரட்டாவண்டிக்குளம் என்றும் அழைப்பார்கள்.
அதிகாலையில் தூக்குவாளியில் மதிய உணவை அடைத்துக்கொண்டு ஒற்றையடிப்பாதையில்
எவர் எந்த வண்டியில் எதிர்பட்டாலும் ஏறிக்கொண்டு அருகில் இருக்கும் சற்று பெரிய ஊரின்
பேருந்து நிறுத்தத்திற்குப் போய்விட்டால் போதும். அங்கிருந்து மதுரை டவுனுக்குள் வேலைக்குப்
போய்விட்டால் இருட்டிய பிறகுதான் ஊருக்குள் வருவார்கள். வர விரும்புவார்கள் என்பதே
சரி. காடாறு மாதங்கள் நாடாறு மாதங்கள் என்பதுபோல் வயல்வேலைகளும் கட்டிட வேலைகளும் மாறி
மாறிப் போவார்கள். ஆனால் ஆறு ஆறு என பண்ணிரெண்டு மாதங்களும் வேலை இருக்காது. வானம்
பொய்த்தால் வயல்வேலை இருக்காது. வானம் பொழிந்தால் கட்டிட வேலை இருக்காது..
முருகனின் அப்பா நகாசு ஆறுமுகம் இருக்கும்வரை அம்மாவிற்கு அந்த பத்துக்குப் பத்து குடிசை வீடும் அதற்கு
வெளியே வலதுபக்கம் நூறடிகளும் இடதுபக்கம் ஐம்பது அடிகளில் இருக்கும் கோமதியின் வீட்டு வாசலும் தான் உலகம். அதற்கு அப்பால்
என்ன இருக்கிறதென்று தெரிந்து கொள்ள ஒருநாளும் ஆர்வம் காட்டியதில்லை.
அதிகாலையில் எழுந்தாள் எனில் அரைமணி நேரமாவது குளிப்பாள்.
நீரில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு திளைப்பாள். மஞ்சளை உடலெங்கும் பூசிப் பூசி அவள் நிறம்
மஞ்சள் பூத்த கருமையில் மினுங்கும். கொசுவம் வைத்துக் கட்டும் வயது தனக்கு எப்போது வரப்போகிறதோ என ஒவ்வொரு நாளும் தழையத்தழைய
சேலை உடுத்தும்போதும் தோன்றும் அவளுக்கு. அப்படிக் குளிப்பதும் அப்படி சேலையை உடுத்துவதும்
மட்டும்தான் அவளுக்காக அவள் செய்துகொள்வது. அதன்பிறகான நாள் என்பது மகன் முருகனுக்கும்
கணவன் ஆறுமுகத்துக்குமானது. ஆறுமுகம் எடுத்துவரும் பணம் எவ்வளவாக இருந்தாலும் முகம்
சுழிக்காமல், முகம் மலராமல் ஒருபோல வாங்கி அதற்கேற்ப அன்றாடத்தை நகர்த்துவாள். முருகனை
நன்றாகப் படிக்கவைக்கவேண்டும், இரண்டு பேர் கூட நிம்மதியாக அமரமுடியாத இந்தக் குடிசையில்
இருந்து, நூறு பேர்கூட ஒன்றாகக் கூடமுடியாத இந்த ஊரை விட்டு எங்கேனும் அசலூருக்கு அனுப்ப வேண்டும் என்பது மட்டும்தான் அவளுடைய
ஒரே ஆசை.யாக இருந்தது.
நகாசு ஆறுமுகம் என ஊர்க்காரர்கள் தன் கணவனை அழைப்பதில் அவளுக்கு
அப்படி ஒரு பெருமை உள்ளுக்குள்.. அவன் கொத்து வேலை அவ்வளவு பிரசித்தம் என்பதில் அவளுக்கு அவ்வளவு பெருமிதம்.
கரண்டியில் சிமெண்ட் கலவையை அவன் அள்ளுவதே அப்படி இருக்கும்.
சதக் என கலவைக்குள் ஒரு சிறு சொருகல் சொருகி வெளியே இழுத்து மீண்டும் நன்றாக சொருகி
சாய்த்து முக்கால் கரண்டிக்கு கலவையை அள்ளிய அரைநொடியில் அதை சுவரை நோக்கி சுழட்டி
சிதற விடூவான். அந்த வேகத்தில் அவன் எந்தப்பக்கமாக கைய சுழட்டினான் எப்படி கீழே சிந்தாமல்
சுவரில் அமர்ந்தது எனக் கணிப்பது கடினம்.
சுவரில் அப்பிய வேகத்தில் அதன் மீது இடவலமாக இழுத்து நடுவில்
அழுத்தி என அனைவரும் செய்வது போலச் செய்வான் தான். ஆனால் அதன்பிறகு அவன் செய்யும் நகாசு
வேலைகளில் சுவரின் விளிம்புகள், ஓரங்கள் என எல்லாமே தனித்துத் தெரியும். அதனால்தான்
ஆறுமுகத்திற்கு அவ்வளவு மவுசு. அவன் நகாசு வேலைகளுக்கு அவ்வளவு காசு.
அரசுப்பள்ளி படிக்கச் சொன்னது, முருகன் படித்தான். டாஸ்மாக்
குடிக்கச் சொன்னது. ஆறுமுகம் குடித்தான். எப்படி குழைத்து அப்பி சுவரை, கட்டிடத்தை
எழுப்புவானோ அப்படி அதே ஈடுபாட்டோடு தான் அவன் குடியும். ஆற அமர அமர்ந்து ருசித்துக்
குடித்து அமரர் ஆனான்.
இன்னும் ஓரிரண்டு ஆண்டு கல்லூரி முடிந்துவிடும். அதன்பிறகாவது
செத்திருக்கலாம் எனும் எண்ணம் தோன்றும்போது மட்டும்தான் அவளுக்கு கண்ணீர் வரும். வேறு
வழி இல்லாமல் ஆறுமுகத்தின் கூட்டாளிகள் மூலம் கட்டிட வேலைகளில் கலவைக்கு மணல் அள்ளிப்
போடுதல் செங்கலை தலையில் அடுக்கிச் சுமத்தல் என போக ஆரம்பித்தாள்.
யாரேனும் வண்டியை நிறுத்தி ஏறிக்கொள்ளச் சொன்னாலும் மறுத்து
நடந்தே தான் நிறுத்தத்திற்குப் போவாள். கொசுவம் வைத்து சேலையக் கட்டிக்கொள்ள ஆரம்பித்திருந்தாள்.
”என்னா பழனி, விட்டா ஆறுமுகமா அவென்லாம் என்னா வேல பாத்தான்,
பழனியம்மா நகாசுக்குப் பக்கத்துல கூட வரமுடியாதுன்னு சொல்ல வச்சுருவ போலயே”
என சேது மேஸ்திரி கேலி செய்யும் அளவிற்கு கரண்டி பிடிக்கத்
துவங்கி இருந்தாள்.
முருகனும் அப்படித்தான் நினைத்தான். அம்மா பக்கத்து ஊரில்
கட்டிட வேலைக்கோ வயல் வேலைக்கொப் போகிறாள் என்றுதான் நினைத்திருந்தான்.
கல்லூரி முடிகிறது என்பதால் பிரிவு உபச்சார நிகழ்வாக மதுரையில்
வந்திருக்கும் புதிய வணிக வளாகத்தில் மகிழ்ச்சியைக் கொண்டாட நண்பர்களோடு போயிருந்த
பொழுதுதான் அக்காட்சியைக் காண நேர்ந்தது.
அங்கிருக்கும் திரையங்குகள் இன்னபிற கடைகளுக்கு இடையே இருக்கும்
நீண்ட வரிசையாக இருந்த உணவக மேசைகளைச் சுற்றி
பணிபுரியும் ஆண்கள் பெண்கள் என அனைவரும் ஒருபோல சீருடை அணிந்து பம்பரமாய் சுழன்று வாடிக்கையாளர்களுக்கு
வேண்டியதைச் செய்துகொண்டிருந்தார்கள். அதில் திரையரங்கில் இடைவேளையில் பாப்கார்ன்களை
எடுத்துத் தரும் பணியில் அம்மாவைப் பார்த்தான். நல்லவேளையாக அவள் இவனைப் பார்க்கவில்லை.
முருகனுக்கு அது பெரிய ஆறுதலாக இருந்தது. அவளால் அதன்பிறகு இயல்பாக இருக்கவே முடியாது
எனத் தெரியும் அவனுக்கு. இந்த வேதனையும் வருத்தமும் உளைச்சலும் தன்னோடே போகட்டும் என
நினைத்தான்.
அதைவிட முக்கியமாய் எப்பாடுபட்டாவது அம்மாவை இந்த சூழலில்
இருந்து மீட்க வேண்டும் என நினைத்தான். நினைக்கும்போதே அழுகை வந்தது.
ஊருணி மரத்தின் வேரில் போய் அமர்ந்தான்.
அவன் எட்டாவது படிக்கும்போது, ஊரில் பூம்பூம் மாட்டுக்காரர்
மாட்டை மரநிழலில் கட்டிவிட்டு சற்றுக் கண்ணயர்ந்த
நேரம். முருகனும் நண்பர்களும் எறிபந்து ஆடிக்கொண்டிருந்தார்கள். பந்து உருண்டு மாட்டிற்கு
அருகில் போய்விழ, அலங்காரங்கள் செய்யபப்ட்ட அந்த மாடு மூச்சுவிட்டுத் திரும்பியதில்
பயந்து நின்றார்கள் முருகனும் நண்பர்களும். அருகிலிருந்த பூம் பூம் மாட்டுக்காரரின்
மகன், சிறுவன், ஓடிவந்து, பந்தை எடுத்துக் கொடுத்துவிட்டு, மாட்டிடம் ஏதோ பேசிக்கொண்டான்.
முருகன் அவனைப் பார்த்துச் சிரிக்க, பதிலுக்கு சிரிக்காமல்
தன் தொளதொளப்பான சட்டையை வயிற்றோடு ஓட்டிப்பிடித்துக் காட்டி “பசிக்குது சோறு இருக்கா” என்றதும் முருகனுக்கு
ஒரு நொடி என்ன செய்வதென்றே புரியாமல் சைகையில் அவனை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு
வீட்டிற்கு ஓடினான்.
“யம்மா, யம்..மா “ மூச்சிரைக்க விவரத்தை சொல்லி உடனே பாத்திரத்தில்
சோறும் வெஞ்சனும் இன்னும் என்னவெல்லாம் இருக்கிறதோ எல்லாவற்றையும் கொடு என பரபரப்பாக
ஆயத்தமானான்.
பக்கத்துவீட்டு கோமதியத்தையுடன் பேசிக்கொண்டிருந்த அம்மா,
“செத்த்வடம் இருடா எடுத்தாச்சும் வைக்கணுமா இல்லியா” என கடிந்தாலும் மகனின் செயல் சிரிப்பை
வரவழைத்திருந்தது.
பெரிய கல் ஒன்றை தடார் எனப் போட்டாள் கோமதியத்தை.
“நல்ல ஆத்தா நல்ல மகென். கூறு கீறு கெட்டுப்போச்சா ஒனக்கு
பழனி, அவெந்தான் சின்னப்பய, நிய்யி இன்னும் ஏழு புள்ள பெத்திருப்ப, அப்பிடியே ஆட்டிக்கிட்டு
ஓடுற”
பழனிக்கு புரிந்தும் புரியாமல் இருந்தது. கோமதியைக் குழப்பமாகப்
பார்த்தாள். முருகனுக்கு ஒன்றும் புரியவில்லை. பரிதாபமாகப் பார்த்தான்.
“இந்த பூம் பூம் மாடுக எல்லாருமே அப்பிடி ஒன்னு போல இருக்கமாட்டாய்ங்கடீ,
நெசமாவே பூம் பூம் மாடுதானாண்டும் தெரியல, அந்த வேசத்துல வந்துருந்தா என்னா பண்ணுவ?
கண்ணே கண்ணு ஒண்ணே ஒண்ணுனு ஒத்தப் பயல வச்சுருக்க, மகனும் தங்கப்புள்ளயா பொட்டாட்டம்
இருக்கான். வீட்ல இருக்குற சோறு பாத்திரம்னு ஜாமெனுங்கள குடுத்தா மைய்ய வச்சு மொத்தமா
வசியம் பண்ணிவிட்ருவாய்ங்கடீ பொசக்கெட்டவளே”
அம்மாவிற்கு சட்டென பயம் கவ்வத் துவங்கியது அனிச்சையாக அவள்
கைகள் முருகனின் தலைமுடிக்குப் போய் கோதி அவனை அவளோடு அனைத்துக்கொண்டதில் புரிந்தது.
முருகனுக்கும் ஓரளவு அத்தை சொல்வதில் ஏதோ இருப்பது போல் இருந்தாலும், அந்தச் சிறுவன்
வயிற்றை எக்கி பசி எனச் சொன்னது கண்ணிற்குள்ளேயே நின்றது. அந்த நொடியில் எதுவும் செய்ய
இயலாத இயலாமை கடுங் கோவமாக உருமாற,
“யம்மா இப்ப குடுக்க்ப்போறியா இல்லையா” என அதட்ட, மிகச்சரியாக
அந்த நேரம் ஆறுமுக நிறைபோதையில் வந்து நிற்க, நிலைமை தலைகீழாகப் போனது.
கீழே கிடந்த எதையோ எடுத்து, “ஆத்தாளப் பாத்து கத்துறயோ நேத்து
பொறந்த காலரைக்கா செங்கலு” என விரட்ட, முருகன் இங்கும் அங்கும் பாய்ந்து தப்ப முற்பட,
ஆறுமுகம் ஒரே எட்டில் பிடித்து முதுகில் ஒரு போடு போட்டான்.
ஏற்கனவே அந்தச் சிறுவனின் பசிக்கு சோறு போடமுடியவில்லையே
எனும் வருத்தமும் இப்போது வாங்கிய அடியும் என அத்தனையும் சேர்ந்து முருகனை பெருங்குரலெடுத்து
அழ வைத்தது.
வலது கையைக் கொண்டு எட்டியும் எட்டமால் அடிவாங்கிய முதுகை
தடவிக்கொண்டே போய் அமர்ந்தான்.
ஆறுமுகம் அரற்றிக்கொண்டே தூங்கிவிட, பழனி, முருகனின் தலையைத்
தொட, விசும்பிக்கொண்டிருந்தவன் அம்மாவைக்கட்டிக்கொண்டு அழத்துவங்கினான். “அட அப்பாதானடா,
நீ ஆத்தாள கத்துனதப் பாத்து கோவிச்சுக்கிட்டாருடா விடு, நம்ம அப்பாதான”
முருகன் இடவலமாகத் தலையாட்டி அம்மாவின் மார்பில் புதைந்துகொண்டே
“அந்த பூம்பூம்மாடு” என விசும்பினான்.
பழனியம்மா முருகனின் நாடியைத் தூக்கி முகத்தைப் பார்த்து,
“அங்கன பாரு” என வாசலைக் காட்ட,
அந்த சிறுவன், மரநிழலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
முருகன் அம்மாவின் கழுத்தைக் கட்டி முத்தம் வைத்தான். அவன் அழுகை இன்னும் கூடியது.
எழுந்து ஓடினான்.
“நல்லாருக்காடா”
அந்த சிறுவன் கண்கள் விரிய வாயெல்லாம் சோற்றோடு சைகையிலேயே
அருமை என்றான். முருகன் இன்னும் கொஞ்சம் என போடப்போக சிறுவன் பதறி “போதும்ணே இன்னும்
யெண்டு நாளுக்கு பசிக்காதுண்ணே” என்றான்.
ஈரக்கையை டவுசரில் துடைத்துக்கொண்டே ”எங்கப்பா தேடும்ணே”
என ஓடினான்.
ஓடியவன் நின்று திரும்பிப்பார்த்து சிரித்தான். முருகன் உடனே
அம்மாவைப் பார்த்து சிரித்தான்.
ஓடிப்போய், “எப்பிடிம்மா அவன்க் கூட்டியாந்த, நீதான் எங்குட்டுமே
போகமாட்டியே”
பழனி சிரித்தாள், அவன் தலையை கோதிவிட்டு “போகமாட்டேன் ஆனா
போகனும்னு இருந்தா போய்த்தான ஆகணும், இந்தா எம்புள்ள மொகத்துல சிரிப்பு வந்துருச்சுல்ல”
முருகனுக்கு அழுகை வந்தது.
“ஏண்டா, இப்பக் கல்யாணம் முடிச்சா எண்ணி எட்டு மாசத்துல பிள்ளைய
பெத்துருவ, ஒக்காலி ஊழு ஊழுன்னு அழுதுக்கிட்டு கெடக்க”
குர்ல கேட்டு முகத்தைத் துடைத்துக்கொண்டே நிமிர்ந்தான்.
மேஸ்திரி சேது.
“இல்லண்ணே”
“பள்ளியோடத்துல பெயிலாகிட்டயா?”
அவரைப் பொறுத்தவரை கல்லூரி, வேலை எல்லாமே பள்ளியோடம் தான்.
“அதெல்லாம் இல்லண்ணே”
“என்னடா படிக்கப் போன எடத்துல என்னமும் பிரச்சனையா, பாவம்டா
ஒங்காத்தா, நீ வேலைக்குப் போயி கர சேப்பண்ண்டு பாக்காத வேலையெல்லாம் பாத்துக்குட்டு
கெடக்கா, நீ என்னடாண்டா இப்பிடி ஒக்காந்து அழுதுக்கிட்டு கெடக்க”
முருகனுக்கு அவர் சொற்கள் இன்னும் அழுகையைக் கூட்டின. அவருக்குத்
தெரிந்துவிடக்கூடாது என்று நினைத்தான். கூடவே அவருக்குத் தெரியவேண்டும் எனவும் மனம்
நினைத்தது, உடல் விசும்பும்போது ஆட்டிக்கொண்டது.
”நல்லா பொறந்தடா ஒங்கப்பணுக்கு, எட்டு ஊரு எதிர்த்து வந்தாலும்
கொத்துக்கரண்டிய எடுத்து நின்னான்னா ஒருபய நேர்ல நிக்க முடியாது, எளந்தாரிப்பயனு பாத்தா
இப்பிடி புணுபுணுனு அழுதுக்கிட்டு கெடக்க”
பேசிக்கொண்டே தடக்புடக் என சைக்கிளை தூக்கி காற்றில் பாவி
ஸ்டேண்ட் போட்டுவிட்டு அவன் அருகில் வந்தார் சேது.
அவன் தோளைத் தொட்டு இழுத்து அணைத்து, “ஏம்ப்பா ஆறுமொகம் மவனே,
ராசா என்னாண்டு சொல்லு, ஒங்கப்பன் இருந்தா எப்பிடி செய்வானோ அப்பிடிச் செய்யுறேன்”
அழும்பொழுது, ஆறுதல் சொற்களைப் போன்ற கூர் ஆயுதம் ஏதுமில்லை.
குத்திக்கிழித்தது முருகனை.
“என்னமும் பொட்டப்புள்ள சகவாசமா? எவனும் என்னமும் பண்ணிப்பிட்டானா?”
“அதெ..ல்..ல்லாம் இல்லண்ணே,”
மேஸ்திரியின் ஆறுதல் சொற்களில் கொஞ்சம் கடுமை கூடியது.
“அட எதுண்டாலும் சொல்லுடாண்டு சொன்னா இப்பிடி சரளக் கல்லுகணக்கா
சரிஞ்சுகிட்டே கெடக்க”
முகத்தைத் துடைத்துக்கொண்டு
“நல்ல வேலைக்குப் போகணும்ண்ணே”
சேது அவனிடம் இருந்து இரண்டடி விலகி நின்றுப் பார்த்தார்.
“அட ஈத்தரப்பயலே இதுக்கா இம்புட்டு அழுக, நம்மூர்ல ஒங்களமாதிரி
நாலஞ்சு பயலுகதானடா பள்ளியோடம் போறீங்க, அதெல்லாம் பெரிய பள்ளியோடமா பாத்து வேலைக்குப்
போயிருவ, ஒங்கமாள வீட்ல ராணி மாணிக்க ஒக்கார வைப்ப”
“வைப்பேன்ல்லண்ணே”
“அட நீ யாரு மவென், நகாசு ஆறுமுகம் மகெனா கொக்கா, போடா, இந்த
மட்டமத்தியானத்துல இப்பிடி கொளத்தப்பக்கம்லாம் ஒக்காரக்கூடாதுடா, முனி கினி அடிச்சுப்புடும்,
போ”
முருகனுக்கு கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்தது போல் இருந்தது.
ஆனால் அது கொஞ்ச நேரம் தான்.
வீட்டிற்குள் நுழைந்து கைலியைத் தேடி பல்லில் கடித்து வயிற்றை
உள் இழுத்து பேண்ட்டைக் கழற்றும்போதே, அம்மா எப்படி எங்கே போய் அணிவாள், உடைகளை எங்கு
மறைத்து வைத்திருந்தாள். போட்டுக்கொள்ளும்போதும் கழட்டும்போதும் அவள் மனம் என்ன பாடு
பட்டுக்கொண்டிருக்கும், கொசுவம் வைத்து சீலை கட்டிய நாளில் கோமதியக்கா கேலி பண்ணுவாளோ
என சிரிப்பும் வெட்கமும் அழுகையுமாக வீட்டிற்குள் ஓடிவந்தவள் ஆயிற்றே’
யோசித்து யோசித்து மாய்ந்து போனான்.
அந்த சின்னஞ்சிறிய குடிசைக்குள்ளும் குளியல் அறை தடுப்புக்குள்ளும்
எதையோ தேடிக்கொண்டே இருந்தான். தேடுவது இன்னதுதான் என்பது அவனுக்கே ஒருகட்டத்தில் தெரியாமல்
போனது. சீருடையையா அல்லது அதை அணிவதற்குத் தேவையான இன்னபிற ஆடைகளையா என்றெல்லாம் எதுவும்
தோன்றாமல் மனம் அல்லாடியது.
அம்மா எழும்முன்னரே எழுந்து டவுனுக்குள் போய்விட்டு, நடு
இரவில் வரத்துவங்கி இருந்தான் மூன்று நாட்களாக.
அம்மாவின் முகத்தை அரைநொடி நின்று பார்த்தாள் அழுதுவிடுவான்
என அவனுக்குத் தெரியும்.
இருளில், அரைத்தூக்கத்தில் இருக்கும் அம்மா “படிப்பெல்லாம்
முடிஞ்சிருச்சுண்ணியேடா முருகா வெள்ளன வரவேண்டியதுதான, இப்பிடி ரவைக்கு ரவை காவக்காரன்
மாணிக்க சுத்துற”
“வேலைக்கி இண்ட்டர்வியூக்கும்மா”
மகனின் வாயிலிருந்து வந்த ஆங்கிலச்சொல் அவளுக்குள் மகிழ்ச்சியைக்
கொடுத்திருக்க வேண்டும்.
“நீ கட்டம் போட்ட சட்டையெல்லாம் போடமாட்டீங்குறயே முருகா
ஏனாம்”
அந்த வளாகத்தில் எந்த இளைஞனைப் பார்த்தாலும் தன் மகனைப் பொறுத்திப்
பார்த்திருக்கிறாள் எனப் புரிந்தது. அவனுக்கும் அப்படித்தானே இப்போதெல்லாம், எந்தப்
பெண்ணை சீருடையில் பார்த்தாலும் கண்களில் நீர் கோர்த்துக்கொள்கிறது.
“வேலைக்குப் போனதும் அதெல்லாம் வாங்கணும்மா”
மிகுந்த அலுப்புடனான ஒரு ம்ம் எனும் முணுமுணுப்பை அரைத்தூக்கத்தில்
சொல்லிக்கொண்டே தூங்கிப்போனாள்.
முருகனுக்கு தூக்கம் வரவில்லை.
தனக்காக அவள் மேற்கொள்ளும் இந்த மனவருத்தம் போதுமென சொல்லலாமா,
ஆனால் அப்படிச் சொன்னால், தான் பார்த்த விசயம் தெரிந்துவிடும். அது அவளுக்கு இன்னும்
அழுத்தும். பாவம் அவள்.
ஒரே தீர்வு நாளை இறுதிக்கட்ட தேர்வில் எந்த வேலையாக எவ்வளவு
குறைவான சம்பளமாக இருந்தாலும் சரி என சேர்ந்துகொள்ளவேண்டும். அம்மாவை வேலைகளில் இருந்து
விடுவித்துவிட வேண்டும். அதைவிட முக்கியமாய், செங்கப்பொடியோ அரக்கோ ஏதோ ஒன்றை கோமதியத்தையிடம்
சதா சொல்லிகொண்டே இருப்பாளே அந்த பட்டுச்சீலையை வாங்கிக்கொடுக்க வேண்டும்.
என மனதில் நினைத்துக்கொண்டே அவனையறியாமல் அம்மா என்றான்.
வழக்கமாக சட்டென எழுந்து தண்ணி வேணுமாடா முருகா என்பாள்,
சட்டென ம்ம் கொட்டுவாள். எதுவும் சொல்லாமல்
தூங்கிக்கொண்டிருந்தாள். .
முருகனுக்கு
இருப்புக்கொள்ளவில்லை. அழவேண்டும் என நினைத்தபோதெல்லாம் கூட இப்படி ஆகவில்லை. பொறுமையாக
ஊருணுக்குப் போய் மரநிழலில் குளக்கரையில் அமர்ந்து அழுதான். ஆனால் இந்த மகிழ்ச்சியை
உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என தோன்றிக்கொண்டே இருந்தது. வேலையும் சம்பளமும் உறுதியாகிட்ட
பிறகு அவர்கள் சொன்ன எதுவும் அவனுக்கு காதில் ஏறவில்லை. அப்படியே ஓடிப்போய் அம்மாவிடம்
சொல்லி அதே வளாகத்தில் ஒரு நல்ல உணவகத்தில் சாப்பிட்டு, ஒரு திரைப்படம் பார்த்துவிட்டு,
கீழவாசலில் பட்டுப்புடவை வாங்கிக்கொண்டு என அந்த ஐந்துநிமிடத்தில் அவ்வளவு கனவையும்
வாந்துவிட்டான்.
“என்னாடா அழுகுணி, வாயெல்லாம் பல்லா வர்ற”
“வேல கெடச்சுருச்சு மேஸ்திரி, அதான்”
“சொன்னேன்ல்ல அன்னிக்கே சொன்னேன்ல்ல, கேட்கணும்டா”
அன்றையை மாலையில் இருந்து இரவுக்குள் போவதென்பது ஒரு இரயில்பூச்சி
காட்டைக் கடப்பது போல் இருந்தது.
அம்மா வருகிறாள் எனும் உள்ளுணர்வு சரியாக இருந்தது.
வந்தவள் முருகன் இருப்பதைப் பார்த்து திகைத்தாள்.
“எப்படா வந்த முருகா, கொள்ள நேரமாகிருச்சா, இந்தா ஒடனே ஆக்கிர்றேன்
என்னத்தயாச்சும்”
“யம்மா, அதெல்லாம் அப்பறம், மொதோ இங்கன வா”
ஆறுமுகத்தின் சிறிய புகைப்படத்தை குடிசையைத் தாங்கிநிற்கும்
கட்டைகளுல் ஒன்றில் மாட்டி இருந்தாள். அதன் முன் நின்றான்.
“இந்தாம்மா”
“என்னா காகிதம்டா முருகா”
“வேலம்மா, நல்ல கம்பெனிமா, இனிமேல்ட்டு நீ எங்கனயும் போகவேணாம்”
பழனியம்மா சிரித்தாள். அவன் தலையை எட்டி தட்டினாள்.
“அட நெசமாத்தாம்மா, அப்பறம், சம்பளம் வாங்கினதும் கோமதியத்தட்ட
இருக்கே,அதேமாணிக்க ஒனக்கு அரக்குக் கலர்ல பட்டுப்பொடவ, இனிமே ஒன்னய ராணி மாதிரி வச்சு
பாத்துக்குறேன்ம்மா” என பெருமிதமாகப் பார்த்தான்.
கண்களை மூடி ஆறுமுகத்தின் படம் முன் நின்றிருந்த பழனி, சிரித்துக்கொண்டே
கண்களைத் திறந்தாள்.
அவள் சிரிப்பில் அவ்வளவு நிம்மதி இருந்ததை உணர்ந்தான். அந்த
பூம் பூம் மாட்டுக்கார சிறுவனுக்கு உணவளித்த அன்று இருந்த அதே திருப்தி இருவர் மனதிலும்
இருந்தது போல் பட்டது அவனுக்கு.
“முருகா”
அடுப்பில் உலையை வைத்துக்கொண்டே சொன்னாள்.
“அம்மாளுக்கு பொடவ கிடவல்லாம் இப்ப வேணாம்டா, எனக்கு நல்ல
துணில கருப்புகலர்ல பேண்ட் வேணும்டா முருகா.
நல்லா இடுப்பெல்லாம் பிடிக்காம தைக்கணும். போட்டு அப்பிடி நடந்தா நல்லா இருக்கணும், இந்த உடுப்புலாம்
செளரியமாப் போட்டுக்கிட்டு வேல செஞ்சா செய்யுற வேலைல எம்புட்டு நல்லா நகாசு வேலை பாக்கலாம்
தெரியுமா முருகா,” சொல்லிக்கொண்டே சட்டியை அடுப்பில் இருந்து இறக்கும் முன் லேசாக உப்பைத்
தூவி கிண்டினாள். மணம் பரவத் துவங்கியது.
“என்னடா முருகா”
சிரித்தாள்.
சரி என அனிச்சையாக அம்மாவைப் பார்த்து ஆடியது அவன் தலை.
*
ஓர் நர்சிம் நகாசு இக்கதை. பொருளாதார நிலையில் விளிம்பில் தன் குடும்பம் இருப்பதை உணர்ந்து, தான் கல்வியால் முயற்சியால் எடுத்து வைக்கும் ஓரடி, பாதுகாப்பான, தலைமுறைக்கு ஆசுவாசமான நிலை தரும் என உணரும் இளங்குருத்துக்கள் வீரிய விருட்சங்களென வேர் பிடிக்கக்கூடியவை. இதுவே கதைக்களம். ஆனால் இதில் களமாடும் தொடக்க இறுதி விவரணைகள் – கருணை, நம்பிக்கை-முருகன், சொல்லாதரவு-சேது எனும் சங்கிலிகள் இணைப்பது நகாசு என்னும் பதக்கமே. அம்மா, மிக நம்பிக்கையானவள், திடமானவள், சொல்லிலும் நகாசு செய்பவள்.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள வாழ்க்கை, முதல் தலைமுறை பட்டதாரியின் துடிப்பு, தவிப்பு, கனவு, எளிய மனித காருண்யம் என கதை வார்ப்பு நல்ல நகாசு. 💐😊👍
அரிதினும் பெரிது கேள். விழுதுகள்.