HomeUncategorizedஉறைந்து விட்ட வரலாறு

உறைந்து விட்ட வரலாறு

எழுத்தாளார் திரு.ச.தமிழ்ச்செல்வன் எழுதிய பஃறுளி நாவலின் முன்னுரை.

ழுத்தாளர் நர்சிம் மதுரைக்காரர். பெரும்பாலும் மதுரைக்கதைகளாகவே
எழுதிக்கொண்டிருப்பவர்.அவருடைய பல சிறுகதைத் தொகுப்புகளை
வாசித்திருக்கிறேன். ஒரு நாவலையும்கூட.

மிகவும் சுவாரசியமாக எழுதக்கூடியவர்.வாசகரை எப்போதும் கவனத்தில் கொண்டிருக்கும் ஒரு படைப்பாளி.எதை எழுதுகிறோம் எப்படி எழுதுகிறோம் என்பதைப்போலவே யாருக்காக எழுதுகிறோம் என்கிற பிரக்ஞையும் எழுத்தாளனுக்கு முக்கியமல்லவா?


அவருடைய கதைகளின் களனாக விளங்கும் மதுரை மாநகரும் சுற்றுவட்டார
கிராமங்களும்தாம் இந்த நாவலின் களம்.மதுரை வாழ்வின் பல்வேறு
கோணங்களையும் பரிமாணங்களையும் தொடர்ந்து எழுதிவரும் அவர் இந்த
நாவலில் மதுரை வரலாற்றின் அழிக்க முடியாத ரத்தக்கறையாக உறைந்து
விட்ட தோழர் லீலாவதி படுகொலை செய்யப்பட்ட வில்லாபுரம்,
அவனியாபுரம், திருப்பரங்குன்றம் பகுதிகளுக்குள் ,அந்த வரலாற்றுக்குள்
நம்மை அழைத்துச்செல்கிறார்.

நானறிய, தோழர் லீலாவதியின் படுகொலையைச் சுற்றிப்பின்னப்பட்ட முதல்
தமிழ் நாவல் இதுதான்.மையக்கதை என்னவோ மாயக்கண்ணன்,கோமதி
என்கிற இரு பள்ளி ஆசிரியத் தம்பதிகளின் மணவாழ்க்கைதான் என்றாலும்
கதை மாந்தர்கள் எல்லோருக்குள்ளும் லீலாவதியின் படுகொலை ஓர்
உணர்வாகவும் நினைவாகவும் தொடர்ந்து தாக்கம் செலுத்துவதாக
–அவ்வட்டார மக்கள் திரளின் சமூக உளவியலைத் தொந்தரவுக்
குள்ளாக்குவதாக நாவல் நெடுகிலும் வந்துகொண்டே இருப்பது எனக்கு மிக
முக்கியமானதாகப்படுகிறது.

ர.சு.நல்லபெருமாள்,ஜெயமோகன் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்கள்
கம்யூனிஸ்ட்டுகளைப்பற்றி எல்லாம் தெரிந்த ஒரு மேட்டிமை
மனோபாவத்துடன் எதிர்மறையாக மட்டுமே எழுதிவைத்திருக்கும்
பின்னணியில், இந்நாவல் இன்னும் மதிப்பும் முக்கியத்துவமும்
பெறுகிறது.கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக அப்பகுதியில்
தன்னலமற்ற பணியாற்றும் செல்வம் என்கிற கதாபாத்திரமும் அப்பகுதியில்
இயங்கும் கம்யூனிஸ்ட் மன்றமும் உரிய மதிப்புடனும் அன்புடனும் நாவலில் அணுகப்பட்டிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சியுடன் எந்த வகையிலும்
சம்பந்தப்படாத ஒருவரின் எழுத்தில் அவர்களின் தியாக வாழ்க்கை மதிப்புடன்
எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்காகவே நர்சிம் பாராட்டப்பட
வேண்டும்.

வசதியான குடும்பங்களில் பிறந்த மாயக்கண்ணனும் கோமதியும் திருமணம்
செய்து வைக்கப்பட்டுத் தனிக்குடித்தனம் செய்கிறார்கள்.அவர்களுக்கிடையில்
முகிழ்க்கும் மெல்லிய காதலும் நேசமும் வாசம் குறையாமல் வாசகரை
வந்தடைகின்றன.எல்லாக்குடும்பங்களிலும் கோலோச்சும் ஆணாதிக்க
இங்கேயும் தலைதூக்குவது வெகு இயல்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
கோமதியின் அம்மா சரோஜா இதையெல்லாம் புரிந்த முதிர்ச்சியும் கனிவும்
கொண்ட கதாபாத்திரமாகப் படைக்கப்பட்டிருப்பது இன்னும்
அழகு.கூட்டுக்குடும்பத்தின் இறுக்கத்தை அவர் பேசுவதாகட்டும் நீ
நினைத்தபடி இப்போதே வாழ்ந்துவிடு ஒத்திப்போட்டால் எதுவும் மிஞ்சாமல்
போய்விடும் பெண் வாழ்வில் என்று அறிவுறுத்துவதாகட்டும் இயல்பாகவும்
சரியாகவும் நிற்கிற பாத்திரம்.

மாயக்கண்ணனும் கோமதியும் ஒரே பள்ளிக்கு வேலைக்குப்
போகிறார்கள்.அப்பள்ளியில் மாயக்கண்ணனுக்குப் போட்டிபோல வந்து சேரும்
மாதவன் பற்றி எல்லோரும் எதிர்மறையான சித்திரத்தையே
தீட்டிக்கொண்டிருக்க,கணவன் மாயக்கண்ணனும் அவனை எதிரியாகவே
பாவித்துப் பேசிக்கொண்டிருக்க, கோமதிக்கு மாதவன் மீது ஒரு ஈர்ப்பு
ஏற்படுகிறது.அந்த நட்பு முளைவிட்டுக் கிளை விடும்போது மாயக்கண்ணன்
சராசரி ஆணாகக் குறுக்கே வந்து நிற்கிறான்.இத்தகைய உணர்வுகளைக்
கையாளுவதில் நர்சிம் ஒரு தேர்ந்த கை என்பதை அவருடைய முந்தைய
கதைகள் நிருப்பித்திருப்பதால் இந்நாவலில் இந்த மனநிலைகளை அவர்
பிரமாதமாகக் கையாண்டிருப்பதில் எனக்கு ஆச்சர்யம் ஒன்றுமில்லை.
ஒருவீட்டில் சேர்ந்துறைய முடியாத மன விலகல் இருவருக்கும் இடையில்
ஏற்பட்டுவிட்ட காலத்தை அதன் கனத்தோடும் வெக்கையோடும்
வெறுப்போடும் நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கிறார் நர்சிம்.அருமை.

எவ்விதத்திலும் கோமதியின் நேசத்தை தவறாகப் பயன்படுத்திக்கொள்ளாத
நேரான மனிதனாக வரும் மாதவனை அழைத்துக்கொண்டு கோமதி நாட்டின்
கடைசி எல்லையான கன்னியாகுமரிக்குப் போகிறாள்.”எனக்கு ஒரு
எக்ஸ்ட்ரீம் பார்க்கணும்.எல்லை என்னன்னு பார்க்கணும்”என்று பிரகடனம்
போல கோமதி அவனிடம் அறிவித்து அவனை அழைத்துக்கொண்டு
கன்னியாகுமரி போகிறாள்.அந்தக் கன்னியாகுமரிக்காட்சிகள் மிகவும்
கண்ணியமான, ஒரு செவ்வியல் மலையாளப்படத்தில் வரும் காட்சிபோல
நம் கண்களில் ஒட்டிக்கொண்டு விடுகிறது..


நாவலின் இன்னொரு முக்கியப் பரிமாணம் மாயக்கண்ணன் -தேவா
நட்பு.அதீதமாக நர்சிம் எதையும் எழுதி வைத்துவிடவில்லைதான்.ஆனாலும்
அவர்களின் நட்பு காவியத்தன்மை பெற்று நிறைந்து ததும்புகிறது நாவலில்.
கமலஹாசன் கட்சி ஆரம்பிக்கும் காலம் வரை நாவல்
தொடர்கிறது.ஜல்லிக்கட்டுக்காளைகளைத் தழுவிக்கொள்ள தாழ்த்தப்பட்ட
மக்கள் அனுமதிக்கப்படாத யதார்த்தத்தை சரியான கோணத்தில் சரியான
இடத்தில் நாவல் பேசுவதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
நாவல் நிகழும் களங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அழகு நாவலின்
உணர்வுகளுக்குத் துல்லியமான பின் திரையாக விரிந்துகொண்டே இருப்பது
இன்னொரு சிறப்பு.


இது ஓர் அரசியல் நாவல் அல்ல.ஆண்-பெண் உறவு சார்ந்த ஒரு காதல்
நவீனம்தான்.ஆனால் அரசியலை விலக்கி வைக்க மெனக்கெட்டு
முயற்சிக்காத நாவல் .அதுவே இந்நாவலின் மீது ஒரு மதிப்பை
ஏற்படுத்துகிறது.


வாழ்த்துகள் நர்சிம்.தொடரட்டும் உங்கள் பயணம்.
அன்புடன்,
ச.தமிழ்ச்செல்வன்
சிவகாசி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை