அத்தியாயம் 1 : நாடகக் காதல்
‘சபா’ என்று மட்டும் இருக்கக் கூடாது என்று மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக் கூறினார் மூர்த்தி அண்ணன்.
நானும் ரகுவும் கிசுகிசுப்பாகப் பேசிக்கொண்டோம்.
“மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்கடா இதே பஞ்சாயத்த”
வருடா வருடம் கோடையில் நடக்கும் கூத்துதான் இது. ஊரின் முக்கியமான ஆட்கள் என்று தங்களை நினைத்துக்கொண்டிருந்த எழுவர் குழு. அதற்குத் தலைவர் ராஜேந்திரன் அய்யா எனும் இராசேந்திரன். அவர் தன் அறுபதுகளில் இருந்தார். அவருக்குப் பக்கபலமாக இருவர், பாலகுரு மற்றும் மூர்த்தி அண்ணன். இருவரும் முப்பதுகளில் இருந்தார்கள். சந்திரன் அண்ணன், சேதுபதி சார் இருவரும் அய்யாவுடன் ஆரம்பத்தில் இருந்து இருப்பவர்கள். நம் கதாநாயகன் ஜெயக்குமரன் மட்டும் தன் இருபதுகளில் இருந்தான்.
கோடை விடுமுறையில் இவர்கள் அனைவரும் மந்தையில் இருக்கும் துவக்கப்பள்ளியின் ஏதேனும் ஒரு வகுப்பில் இந்தக் கூட்டங்களைப் போட ஆரம்பித்துவிடுவார்கள். நானும் ரகுவும் இன்னும் சிலரும் வேடிக்கைப் பார்க்கப் போவோம். தேவையான தண்ணீர்குடம், அவ்வப்பொழுது வாங்கிவரச் சொல்லி ஏவிவிடும் வேலைகள் என முகம் சுழிக்காமல் செய்வோம் என்பதால் மட்டும் அல்ல, அய்யா சொல்வதுபோல் அடுத்த தலைமுறைக்கும் இதைக் கடத்த வேண்டிய அவரின் கடமையாக எங்களைப் பார்த்ததால் கல்லூரியில் படிக்கும் எங்களுக்கும் அனுமதி அளித்திருந்தார்.
நாடகங்களை எழுதி இயக்கி அரங்கேற்றுவதுதான் அய்யாவின் தீராத மோகம். நாடகங்கள் என்றால் “அடடே டாக்டரே வந்துவிட்டாரே” போன்ற லெளகீக நாடகீயங்களோ, “ப்ரபோ, என்னை நீங்கள் அப்படிச் சொல்லல் ஆகாது ஸ்வாமி” போன்ற புராணக்கதைகளோ பாகவதர் நாடகங்களோ கூடவே கூடாது என்று தீர்மானித்து, மிக ஆக்கப்பூர்வமாக, அறிவைத் திருகும் நாடகங்களாக ஆக்கி மக்களை விழிப்புணர்வு அடையச் செய்வதே நோக்கம். அதுதான் கலையின் உன்னதம் என்ற அய்யாவின் கருத்தை ஏற்றவர்கள் சேர்ந்து உருவாக்கியக் குழு.
எங்கெங்கோ சுற்றுவார்கள். மதுரையில் இருந்து வடக்குத் தெற்கு என ஐம்பது அறுபது கிலோமீட்டர் சுற்றுப்பரப்பில் எங்கு நாடகங்கள் நிகழ்ந்தாலும் போய் ஒரு எட்டுப் பார்த்துவிட்டு வந்து அது குறித்த விமர்சனங்கள் ஏளனங்கள் என பேசிக்கொண்டிருப்பார்கள்.
மூர்த்தி அண்ணன் தான் “நாமே ஒரு நாடகக் குழுவை ஆரம்பித்து நடிப்போம்” எனும் விதையைப்போட்டு, இரண்டு மூன்று ஆண்டுகளாச் சொல்லிக் கொண்டிருந்தவர், இம்முறைத் தீவிரமாக செயல்படுத்தும் நோக்கில் கூட்டத்தைக் கூட்டிவிட்டிருந்தார்.
அந்தக் கூட்டம்தான் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடுபிடிக்கத் துவங்கி இருக்கிறது இப்போது.
கூத்து எனும் சொல் அல்லது குழு என்று இருக்க வேண்டும் என்பது மூர்த்தியின் விருப்பம்.
அய்யா பேச ஆரம்பித்தார்.
“மதுரையில இன்னைக்கு நிஜநாடக இயக்கம், ஒத்திகை,ஜ்வாலானு நிறைய நல்ல நாடக இயக்கங்கள் செயல்பட்டுட்டு இருக்கு, ஐரோப்பாக்காரன் நமக்கு நெறைய சொல்லித்தந்துருக்கான் நாடகங்களப் பத்தி”
ரகு மெதுவாக, “வாடா போய்ருவோம். பசங்க மேட்ச் இருக்குன்னு சொன்னாங்கடா” என்று கிசுகிசுத்தான். “அட இர்றா” என்று அவனை அமட்டிவிட்டு, அய்யாவைக் கவனித்தேன்.
“நாமளும் களத்துல எறங்குற நேரம் வந்துருச்சுதான். நம்ம சும்மா இந்த க்ளாஸ்ரூம்லயே எத்தன நாள் போட்டுட்டு இருக்கிறது, ஆனா எதச் செஞ்சாலும் அதோட தேவை என்னான்னு நாம முதல்ல முடிவு பண்ணிக்கனும். அப்பதான் அதோட நோக்கம் நோக்கி நாம முன்னேற முடியும்”
சேதுபதி சார் தன் கண்ணாடியைக் கழட்டிக் கீழே விட்டார். அது அவர் நெஞ்சில் மோதிக்கொண்டு இருபக்கமும் இருந்த சங்கிலியில் துள்ளியது.
“நோக்கம்னு நாம பெருசா ஒண்ணும் வச்சுக்க வேணாம்ங்குறது என்னோட கருத்து. பொழுதுபோக்குக்குத்தான கலை. அதுனால அய்யா எழுதி இங்க நாம சின்னதாப் போட்ட நாடகங்களை இன்னும் கொஞ்சம் பெருசா ஆக்கி “
எனப் பேசிக்கொண்டிருக்கும்போதே சந்திரன் எழுந்து, “சார் என்ன பேசுறீங்க நீங்க, அதுக்கா வீட்ல திட்டுவாங்கிட்டு இங்க வந்து ஓக்காந்து கிடக்கோம்”
அந்த ஓங்கார நெடில் அய்யாவைத் திகைக்கச் செய்ய,
“அப்பிடி இல்ல சந்திரன். சேதுபதி சார் சொல்றதுல தப்பில்ல. ஆனா அந்தக் கலை மூலமா நாம மக்களுக்கு என்ன சொல்லப் போறோம்ங்குறது எவ்வளவு முக்கியமோ அதவிட முக்கியம், நாம அதுக்குத் தயாரா இருக்கமா, நம்மளத் தயார்படுத்திக் கிட்டோமேங்குறதுதான் என்னோட கேள்வி”
ரகுவைப் பார்த்தேன். அதுவரை சற்றுத் தெளிவாக இருப்பதுபோல் இருந்தேன். இப்போது குழப்பம் எனக்கும் ஆரம்பித்தது. அதைப் புரிந்துகொண்டவன் “போய்ருவம்டா” என்றான், முணுமுணுப்பாக.
சேதுபதி சார் கோபமாகத் தன் நெஞ்சில் கைவைத்து கண்ணாடியை தட்டிக்கொண்டே
“நான் சொல்ல வர்றத புரிஞ்சுக்கனும்னு சொல்லல, ஆனா புரிஞ்சுக்க முயற்சியாவது பண்ணனும்னு சொல்றேன்” என்று சொல்லிவிட்டு கண்ணாடியை அணிந்து அமர்ந்தார். அமர்ந்த வேகத்தில் கண்ணாடியைக் கட்டி இருந்த செயின் இருபக்கமும் ஆடின.
மூர்த்தி அண்ணன் எழுந்து, “அதெல்லாம் புரியாமலா இங்க இருக்கோம். அதவிடுங்க, இப்ப அய்யா சொல்றமாதிரி, நாம தயார்படுத்திக்கனும்ங்குறதுல எந்த ஆட்சேபனையும் இல்ல. அதப் பத்திப் பேசுங்க”
“பாயிண்ட்” என்றான் ஜெயக்குமரன். இரண்டு மூன்று நாடகங்களில் கதாநாயகனாக நடித்து இருந்த ஆர்வம் ஒரு காரணம் எனில், எப்படியேனும் காதலித்துத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனும் அவனுடைய இலட்சியம்தான் முதன்மையானக் காரணம்.
அதை என்னிடம் சொன்னபோது “இதுவல்லவோ லட்சியம்” என்று நான் சொன்னது அவனுக்கு மிகுந்த சினத்தை ஏற்படுத்தி இருந்தது “ப்போடா போடா சில்வண்டுப்பயலே” என்று திட்டிவிட்டுப் போயிருந்தான்.
பின்னர் ஒரு நாள் மதியத்தில் சற்று சோகமாக என்னிடம் புலம்பினான். அதாவது அவனுடைய அந்த இலட்சியத்தின் காரணம் அவனுடையத் தோற்றம் என்றும், சற்று பருமனான அந்த உருவத்தையும் தாண்டி தன்னை ஏற்கும் ஒரு பொண்ணைக் காதலிக்க வேண்டும் என்றும் புலம்பினான். “என்னோட நடிப்புத் தெறமைக்கு ஒரு மதிப்பு இருக்குல்ல பங்கு” என்றான். ஆமோதித்திருந்தேன்.
அப்படி இப்படி என்று பேசி, இறுதியாக ஓர் ஆசிரியரை வரவழைத்து நாடகப்பட்டறை நடத்துவது என்று முடிவானது. கூட்டம் முடிந்ததன் அடையாளமாக வழக்கமாகக் கொடுக்கும் கடலை உருண்டைகளை ஆளுக்கு இரண்டாகக் கொடுத்தார்கள். பாகு ஏறிய உருண்டைகளை வாயில் அதக்கிக் கொண்டு உமிழ்நீரை உறிஞ்சினால் தேவாம்ருதமாக இருக்கும் என்றார் அதுவரை வாயேத் திறக்காத பாலகுரு.
எழுவர் குழு என்று சொன்னேன். ஆனால் அறுவர் பெயர்களை மட்டுமே சொல்லி இருக்கிறேன் அல்லவா. அந்த ஏழாம் நபர், தேவகி அக்கா. கூட்டம் முடியப்போகும் தருவாயில் வந்தவர் மூர்த்தி அண்ணனிடம் சென்று விபரங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
“இந்தாளு ஓவரா செலம்பும்போதே தெரியும்டா இதுக்குத்தான்னு” என்று ரகு என்மீது இருக்கும் கோவத்தைக் காட்டினான்.
“ச்ச ச்ச, அவங்க ரொம்ப நாளா நல்ல ஃப்ரெண்ட்ஸ்டா”
“ம்க்க்கும்”
ஓரிரு நாட்களிலேயே வெகு விமர்சையாக நாடகப்பட்டறைத் துவங்கிவிட்டிருந்தது. வந்திருந்தவரைப் பார்த்தாலே ஏதோ ஒன்றின் குரு எனும் அமைப்பில் இருந்தார். ஒருவேளை அந்த நீண்ட தாடியும் நன்கு வளர்ந்த முடியும் அதைக் கொண்டைபோல் கட்டி இருந்த விதமும் குறிப்பாக அந்த பைஜாமா ஜிப்பாவும் அவரை மதுரையில் இருந்து வெகுதூரமாக, கல்கத்தாவிற்குப் பக்கத்தில் காட்டியது, சுத்தமான மதுரைத் தமிழில் அவர் திட்ட ஆரம்பிக்கும் வரை.
“வேடிக்க பாக்க வந்தியாடா, இங்க வேடிக்கைனு தனியா எதுவும் கெடயாது, எல்லாரும் பிரதிகள்தான்” என்று என்னை அருகில் அழைத்தார். நான் ரகுவையும் உடன் அழைக்கத் திரும்பினேன். எப்போது எப்படி அவன் போயிருந்தான் எனும் வியப்பு மேலிட மெதுவாக அவரை நோக்கி நகர்ந்தேன்.
”உன் பெயர் என்ன?”
நான் சொல்ல ஆரம்பிக்கும் முன்னரே, “பேர்னா உம் பேர் இல்ல, இங்க இப்ப நீ யார்?”
இது என்னடா சோதனை எனத் தோன்றியது. ரகு ஜன்னலுக்கு வெளியில் இருந்து இரண்டு கைகளையும் ஓசை எழாதவாருத் தட்டி “நொட்டுச்சா” என்று சைகை செய்தான்.
“சொல்லு மேன்”
நான் அமைதியாக நிற்பதைப் பார்த்து அவர் மற்றவர்களை நோக்கித் திரும்பி,
“நான் கேட்கும்போது இந்தப் பிரதியை தன் பிரதியா நினைச்சு இவரை காக்க உங்களில் யாருமே முன் வரவில்லையே” என்றார்.
அங்கிருந்தேப் பயிற்சியைத் தொடங்கினார்.
எல்லோரையும் வட்டமாக அமரச் சொன்னார். மூர்த்தியண்ணன் தேவகி அய்யா சேதுபதி சார் என எதேச்சையாக அமர்ந்து கொண்டார்கள். என்னருகில் ஜெயக்குமரன் அமர்ந்து கிசுகிசுப்பாக “நிமிந்து ஒக்கார்ரா அதான் அவர் சொல்லப்போறாரு இப்ப” என்று சொல்லிவிட்டு நடுமுதுகில் கம்பியை வைத்துக் கட்டியது போல் அமர்ந்தான்.
“இப்போ நான் அய்யாகிட்ட ஒரு கேள்வி கேப்பேன், ஆனா அதுக்கு பதில் சொல்லவேண்டியது அவருக்கு அடுத்து இருக்குற ஆள். இப்பிடியே எல்லோரும் அவருக்கு வலது பக்கத்துல இருக்குற ஆளோட பிரதி”
ஜெயக்குமரனிடம் கேட்கப்பட்டகேள்விக்கு நான் பதில்சொல்லும் முன்னர் சட்டென விரைப்பாக அவனே பதில் சொல்ல, முதல் ஆளாக வட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டான். இப்படியாகப் போய் அடுத்தப் பயிற்சி தொடங்கியது.
எல்லோரும் வட்டமாக சற்றும் முன்னும் பின்னுமாக நிற்க வேண்டும். எவரேனும் ஒருவர் சரியவேண்டும். சரியும் அவரை அவருடைய பிரதி தாங்கிப் பிடிக்க வேண்டும். யாரும் யாரையும் நம்பி சரிவதாக இல்லை. எல்லோருமே மிக மெதுவாகவும் பாதுகாப்பு உணர்வோடும் சரிவதுபோல் மெதுவாக உந்த அவர்களின் பிரதி அவர்களைப் பிடிப்பது போல் பிடித்தார்கள். ஜெயக்குமரன் சட்டென பிணம்போல் தடாலென சரிய அவனுடைய பிரதியான நான் பயந்து விலகினேன். ‘தொப்’ என்று விழுந்தான். எல்லோரும் பதற்றமாக அவனைத் தூக்க, அவர் மட்டும் கையைத் தட்டிக்கொண்டே, “வெரி குட் மை பாய்” என்று சொல்ல எல்லோரும் கைதட்டினார்கள். ஜெயக்குமரனுக்கு எங்கோ எசகுபிசகாக வலி. அதைக்காட்டிக்கொள்ளாமல் கைதட்டலை ரசித்துக் கொண்டே சுற்றிலும் பார்த்தான். அவர் சைகையாலேயே என்னை வெளியேறச் சொன்னார். வட்டத்தை விட்டு வெளியே போய் நின்று கொண்டு ஜன்னலைப் பார்த்தேன். ரகுவைக் காணவில்லை, நல்லவேளை.
“இதுதான் ஒருத்தர் மேல நாம வைக்கிற நம்பிக்கை. கலைல இது ரொம்ப ரொம்ப முக்கியம். முழுசா சரணாகதி அடையனும். அந்தப் பையன் அத ரொம்ப சரியாச் செஞ்சான். மத்த எல்லாரும் நம்பிக்கை இல்லாம லேசா விழுற மாதிரி பாவன செஞ்சீங்க. பாவனைக்கும் நிஜத்துக்கும் இருக்குற வித்தியாசம் இதுதான். நிஜம் தான் நிக்கும்”
’நிக்குமா, இப்பிடி விழுந்து கெடந்தான். அப்பிடியே அவனைப் பிடிக்கப் போயிருந்தாலும் அவன் உருவத்துக்கு நான் சட்னி ஆகி இருப்பேனேய்யா’ போன்ற பலவித சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தன. அங்கு மேட்ச் நடந்து கொண்டிருக்கிறது. வில்லாபுரம் டீமோடு. ஒரு ட்வொண்டிஃபைவ் போட்ருப்பேன் எனும் சிந்தனைதான் ஆக்கம் செய்துகொண்டிருந்தது.
பெரிய பெரிய போர்வைகள், சேலைகள் எல்லாம் எடுத்துவரச் செய்து, அதை இரண்டுபக்கமும் பிடித்து மெதுவாக ஆட்டச் சொன்னார். அவை என்ன என்று கேட்டுவிட்டு அவரே “அலைகள்” என்றும் சிந்தனை அலைகள், மன ஓட்டம், கடல், வான் என ஒவ்வொன்றையும் அந்தத் துணிகளில் எப்படி வரவைப்பது போன்றவற்றைச் சொல்லிக் கொடுத்தார். நாற்காலியில் அமர்ந்து தாடியை நீவிக்கொண்டிருந்த அய்யாவிற்குப் பரமதிருப்தி. அய்யாவின் தாடி இப்போது சிறிதாகத் தெரிந்தது. புதிதாக பைஜாமா வாங்கி அணிந்திருந்தார் அய்யா.
அதன்பிறகு, நான்கு நாட்கள் நாடகப்பட்டறை நடந்ததாம். ஆம், நான் முதல்நாளோடு அந்தப் பக்கமே போகவில்லை. “நல்லவேளடா நீ ஜெண்டாகிட்ட,சிக்கி இருந்தேனு வைய்யி அவ்ளோதான்..அதெல்லாம் ஒன்னயமாதிரி ஆளுக்கு ஒத்துவருமாடா, நாந்தான் நாலு நாளும் கலக்கிவிட்டேன் தெரியுமா, போயி மூர்த்தியக் கேளு” ஜெயக்குமரனின் பெருமிதம் எல்லை மீறிப் போய்க்கொண்டிருந்தது.
நான் ஏண்டா கேட்கப்போறேன் என்று தோன்றியது. ஜெயக்குமரனின் நடையே மாறி இருந்தது. பயிற்சிப்பட்டறை கொடுத்த உத்வேகம் அவன் அங்க அசைவுகளில் தெரிந்தது. சிகரெட்டை வைத்துக்கொண்டு, “இது ரொம்ப தீவிர சிந்தனை” என முழுதுமாக உள் இழுத்து வானை நோக்கி மெதுமெதுவாகப் புகையை விட்டுவிட்டு, “இது உற்சாகம்” என மீண்டும் இழுத்துப் பக்கவாட்டில் ஊதினான்.
”இப்பிடி எல்லாத்துலயும் விதவிதமான உணர்ச்சிகளக் காட்டமுடியும்டா, சார் சொன்னாரு”
அதன்பிறகு ஜெயக்குமரன் எங்கேனும் நிற்கிறான் என்று தெரிந்தால் நானும் ரகுவும் வேறு பக்கமாகப் போக ஆரம்பித்து விட்டோம்.
“கிரிக்கெட்டாடா சோறு போடப் போகுது ப்ளடி இடியட்” என்றான் ஒருநாள். இது என்னடா புதிதாக ப்ளடி இடியட் என்றால் அது அந்த சார் அவனை நான்கு நாட்களில் நூற்று இருவது முறை சொன்னதாக ரகு கண்டறிந்து சொன்னான்.
பைஜாமா, கலர் கலரான பெரிய பெரிய பூப்போட்ட சட்டைகள் என ஜெயக்குமரன் ஆளே புது தினுசாகி இருந்தான்.
“மீனாட்சியம்மன் கோயில் வாசல்ல நீள நீளமா பெருசா தொங்கவிட்ருப்பாங்கல்ல அத எடுத்துப் பேண்ட்டா போட்டுக்கிட்டான் போலடா அவென் சைஸுக்கு அப்பிடித்தன இருக்கு” என நண்பர்கள் பேசிச் சிரித்துக்கொண்டிருந்த பொழுது மூச்சு வாங்க எங்களை நோக்கி வந்தவன்,
“டேலேய், சங்கதி வந்துச்சா, மந்தையம்மன் கோயில் திர்ழாக்கு நம்ம நாடகம் போடுறதா ஆகிப்போச்சுடா, நான் வர்றப்ப கையத்தட்டி சீட்டியடிச்சு என்னைய எப்படியாச்சும் ஏத்திவிட்ருங்கடா” என்றான். கொஞ்சம் பாவமாக இருந்தது. “விடு பங்கு, கெளப்பிருவோம்” என்று அவனை உற்சாகப்படுத்தி அனுப்பி வைத்தோம்.
மேடை விளக்குகள் அணைக்கப்பட, கும்மிருட்டு சூழ்ந்தது. மூர்த்தியண்ணனின் குரல் ஒலிக்கத் துவங்கியது. ”மூன்றில் ஒருபங்கு நீரால் ஆனது இவ்வுலகு”
மிக சன்னமான வெளிச்சத்தில் வெள்ளைச் சேலைகள் இரண்டை நீளமாகப் பிடித்து மெதுமெதுவாக அலைகளகா ஆக்கினார்கள். உண்மையிலே ‘அட’ என்று இருந்தது. நாடகப் பட்டறையில் பயிற்சியெடுத்துப் பழகிய அத்தனையையும் மேடையில் நிகழ்த்தினார்கள். எங்களுக்குப் புதிதாக இருந்தது. பார்வையாளர்களைப் பார்த்தேன். அவர்களும் ஏதோ புதியதாக ஒன்று ஊரில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது எனப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
திடீரென முழு வெளிச்சமும் பரவ, ஜெயக்குமரன் நட்டநடுவில் நின்று கொண்டிருந்தான். பேசவேண்டிய வசனங்களை மறந்துவிட்டதைப் போல் தெரிந்தது. ஆனாலும் அவ்வளவு பெரிய உருவத்தை வைத்துக்கொண்டு தடால் என மேடையிலே விழுந்தான் எழுந்தான் “நான் நீர். வீழ்வேன் , எழுவேன், பாய்வேன்” என்று ஏதேதோ சொல்லச் சொல்ல கூட்டம் கைதட்டியது. நாங்களும் தட்டினோம்.
அடுத்த வாரக் கூட்டத்தில் அய்யாவும் மூர்த்தியும் மிகுந்த உற்சாகமாக இருந்தார்கள்.
“விருதுநகர் திருவிழால நம்ம நாடகம் போட முடியுமானு கேட்டு லெட்டர் வந்துருக்கு” என்றார் அய்யா தாடியை நீவியபடி. முடியையும் அதிகம் வளர்த்திருந்தார். கூட்டம் முடிந்து கடலை உருண்டைகள் கொடுக்கப்பட, ஜெயக்குமரன் என்னைத் தள்ளிக்கொண்டு போய் “இனிமே இங்க வர்ற வேலயெல்லாம் வச்சுக்காதடா, நாங்க வேற லெவல்ல போய்ட்டு இருக்கோம், சும்மா வந்து பல்லப் பல்ல காட்டி கடுப்புகளக் கெளப்பாதீங்கடா” என்றான். இப்போது அவர் கதாநாயகன் அல்லவா அந்த ஆணவம் என்று ரகு வெகுண்டான்.
நாடகம் முடிந்த இரண்டாவது நாளே எங்களிடம் “ஒனக்கு லெஃப்ட்ல நின்னு பாத்துச்சுக பாரு ரெண்டு பேரு, ரெண்டும் என்னய என்னா மாதிரி சைனப் போட்டுச்சுன்ற, அதுக்காண்டி ரெண்டு பேத்தையுமா லவ் பண்ண முடியும்” என்று கேட்டிருந்தான். அப்போதே “டேய் அதுக ஒன்னயப் பாக்கலடா” என ரகு சொல்ல முற்பட நான் தடுத்திருந்தேன்.
“ஓவராப் போறாண்டா”
“விடு பாத்துக்குவோம்” என்று சொல்லும்போதே திட்டம் தயாராகி இருந்தது மனதில்.
விமலாவிடம் கெஞ்சிக்கூத்தாடி நான் எழுதி வைத்திருந்தக் காகித்தைக் காட்டினேன்.
‘நாயகன் ஜெயராமனுக்கு, அது நாடகம் என்றோ, நீங்கள் நடிக்கிறீர்கள் என்றோ ஒரு நொடிகூடத் தோன்றவில்லை. உங்களின் ஆகிருதியும் வசன உச்சரிப்பும் உங்கள் வசீகரமான நடிப்பும் மட்டுமே முழுக்க முழுக்க நிறைந்திருந்தது. மற்றபடிஅந்த நாடகத்தில் ஒன்றுமே இல்லை. உங்களால் மட்டும்தான் நாடகம் உயிர்பெற்றது. உங்களை நேரில் சந்திக்க வேண்டும். என் காதலைப் பகிர வேண்டும்.
அன்புடன்
நாடகப்ப்ரியை அல்ல அல்ல,
ஜெயக்குமரன்ப்ரியை
எழுதும்பொழுதே விமலா விழுந்து விழுந்து சிரித்தாள். “டேய் பாவம்டா”
“ஓவராப் போறான் இருக்கட்டும்” என சொல்லிவிட்டு
திருவாளர் ஜெயக்குமரன்,
நாயகன்,
’மெய் நாடக இயக்கம்’
என அனுப்பினோம். நினைத்தது போலவே, ஜெயக்குமரனைக் கையில் பிடிக்க முடியவில்லை. வண்டியை எடுத்துக் கொண்டு எங்கெங்கோ சுற்றினான். இறுதியாக எங்களிடம் வந்தான்.
“என்ன ஜெயக்குமரா, ஆளேக் கோப்பா இருக்காப்ளயே, முகமெல்லாம் ஜொலிக்குது, நாடகமா இன்னைக்கும் மேக்கப் தூக்கலா இருக்கே”
“டேய் மேக்கப்பே போடலடா, நெசமாவாச் சொல்ற”
என வண்டியின் கண்ணாடியை நோக்கி சடாலெனிக் குனிந்து, உற்று பார்த்துக்கொண்டான்.
“ஆமாப்பா, தேஜஸ் கூடிருச்சு போலயே”
சிரித்தான். “அப்டிலாம் இல்ல இவனே” என சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, கடிதத்தை எடுத்து நீட்டினான்.
நாங்கள் சூழந்துகொண்டு படித்தோம். நான் ஒவ்வொரு வரியையும் சத்தமாகப் படித்துவிட்டு ஜெயக்குமரனைப் பார்த்தேன். அவன் நாணத்தில் நெளிந்தான். ’ஆருகிதின்னா என்னாடா’ “அது ஆகிருதிடா”
ஜெயக்குரப்ப்ரியை என சத்தமாகச் சொல்லவும் மூர்த்தி அண்ணன் வரவும் சரியாக இருந்தது.
பட்டெனப் பிடிங்கியவர் படபடவென வாசித்தார். மடித்து சட்டைப்பையில் வைத்துக்கொண்டு வண்டியைக் கிளப்பிவிட்டார்.
மெய் நாடக இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டதாகவும் இனி எந்தக் கூட்டங்களும் நடைபெறாது என்றும் ரகு சொன்னான். காரணம் தேவகி அக்காவை மறுமணம் செய்துகொள்ள மூர்த்தி விரும்புவதாக வீட்டில் சொல்லியதும், கைம்பெண்ணை மருமகளாக ஏற்க மனம் இல்லை என்றும் எல்லாவற்றிற்கும் காரணம் இந்த நாடகக்குழுதான் என்றும் மூர்த்தி வீட்டினர் அய்யாவிடம் பஞ்சாயத்து செய்ததாகவும் ரகு சொல்லச் சொல்ல நான் நம்பவில்லை. இரண்டு காரணங்கள். ஒன்று மூர்த்தி வீட்டினரும் மூர்த்தி போலத்தான். ஓரளவு நடைமுறையான ஆட்கள். இரண்டாவது காரணம், அய்யா. அப்படியே இதுதான் காரணம் என்றால் அய்யா இதெற்கெல்லாம் அலட்டிக்கொள்கிறவர் இல்லை.
மிக அமைதியாக இருந்தது அய்யாவின் வீடு. சுவர் முழுக்க விதவிதமான புகைப்படங்கள். இராசேந்திரன் என கீழே பொடி எழுத்துகளில் எழுதப்பட்டப் புகைப்படங்கள். நிறைய முடிவைத்து நாடக மேடைகளில் குழுவினருடன் நிற்பது, தனியாகக் கையில் பரிட்சை அட்டையை வைத்துக்கொண்டு எதோ எழுதுவது, பெரிய மீசையை முறுக்கொண்டு தடிமனான கண்ணாடியணிந்து சிரிப்பது என விதவிதமானப் புகைப்படங்கள்.
நாற்காலியில் அமர்ந்து நாளிதழ் படித்துக்கொண்டிருந்தவர் என்னைப் பார்த்ததும் குழப்பமாகப் புருவம் உயர்த்தினார்.
“இ..ல்லய்யா.. நாடகம்”
விரித்து வைத்திருந்த நாளிதழை சட்டென மூடி மடித்தார். எதிரே அமரச் சொல்லி சைகை செய்தார். தாடியை நீவிக்கொண்டு,
“போதும்னு தோணுச்சுப்பா”
“அதான் ஏன்ன்னு கேட்கலாம்னு”
“படிப்பெல்லாம் முடிஞ்சதா? வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டியா”
“ஆமாங்கய்யா.. இப்பத்தான்”
“ம்ம். குட். “
அமைதியாக மீண்டும் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அந்தக் கடிதத்தை என் முன் இருக்கும் மேசையில் போட்டார்.
”அதுல மூணாவது வாக்கியத்தப் படி”
நான் தயங்கினேன். அத்தனை மாதங்கள் ஆகியும் எனக்கு ஒவ்வொரு எழுத்தும் நினைவில் இருந்தது. அவருக்கும் தான். பார்க்காமலே சொன்னார்.
“மற்றபடிஅந்த நாடகத்தில் ஒன்றுமே இல்லை”
இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பச் சொன்னார். ஒவ்வொரு முறையும் அந்த ‘ஒன்றுமே’விற்கு அழுத்தம் அதிகரித்தது.
”அய்யா இத விடுங்க, அன்னைக்கு ஊர்ல எல்லாரும் ரொம்ப ரசிச்சாங்க. எப்பிடித் தண்ணி இந்த உலகத்த சூழ்ந்து இருந்தது. இப்ப எப்பிடித் தண்ணிக்கான எடத்த அபகரிச்சுட்டோம், தண்ணிக்காக இனிமே உலகம் என்ன பாடுபடப்போகுதுனு அற்புதமா எழுதி இருந்தீங்க. அந்த கடல் அலைகள் மாதிரி துணில பண்ணது எல்லாம் ரொம்ப தத்ரூபமா இருந்துச்சு”
விரக்தியாகச் சிரித்தார்.
“யாரோ ஒரு பொண்ணு சும்மா ஜெயக்குமரனுக்காக எழுதுனதப் போயி, அதுவும் சும்மா அவனக் கிண்டல் பண்றதுக்கு எழுதுன மாதிரி இருக்கு அய்யா”
சிரித்தார். “யாரு எழுதுனா என்ன, அதுல என்ன இருக்குன்றதுதான முக்கியம்”
“அய்யா இந்த லெட்டரப் பத்தி ரெண்டு விசயம் சொல்லணும் உங்ககிட்ட”
சற்று பின்னோக்கி சாய்ந்துகொண்டு என்னைப் பார்த்து ‘சொல்லு’ என்பதுபோல் தலையாட்டினார்.
“இந்த லெட்டர எழுதுன விமலா, ஜெயக்குமரனப் பாத்து உண்மையச் சொல்லி இருக்கா. ஜெயக்குமரனோட புலம்பலும் அழுகையும் அவள என்னமோ பண்ண, பேச ஆரம்பிச்சு இப்ப ரெண்டு பேரும் லவ் பண்றாங்க”a
“மகிழ்ச்சி, நல்ல விசயம், சாதி அது இதுன்னு பிரச்சன வந்தா நம்ம வீட்டுக்கு கூட்டி வந்துரு நான் நடத்தி வைக்கிறேன்”
நான் மரியாதை கலந்து தலையாட்டினேன்.
“அது என்ன உண்மைனு நீங்க கேட்கல அய்யா..”
“அத எழுதுனது நீதான, அதச் சொல்லப்போற, அவ்ளோதான.”
சத்தமாகச் சிரித்தார்.
நான் அவர் பார்வையைத் தவிர்த்தேன்.
“போ, நல்லா சம்பாதி, இன்னும் பெரிய குழுவா சேர்த்து நல்ல நாடகமாப் போடமுடியுமானு பாரு, இல்லாட்டி சினிமாப்பக்கமாப் போ, வாழ்க்கைல ஏதாவது ஒருவிதத்துல ஆர்ட் நம்ம கூட இருக்கணும், புரியுதா..அதான் மனசுக்கு நல்லது”
”நான் எல்லாம் ரெடி பண்றேன். நீங்கதான் எழுதணும்”
சரி என்பதுபோல் தலையாட்டிச் சிரித்து
“நான் எழுதணும்னா அந்த ப்ளடி இடியட்தான் நாயகன், அது ஓக்கேயா”
என்று மீண்டும் சத்தமாகக் குனிந்து சிரித்தார்.
அட! கொண்டை போட்டிருக்கிறார்.
- தொடரும்.

