Homeசிறுகதைகள்தாக்கணங்கு

தாக்கணங்கு

காதல் தோன்றிய காலம் முதல் இன்று வரை, ஒரு பெண் தன்னைக் காதலிக்கிறாளா என்பதை அறிய இருக்கும் ஒரே வழி, அவள் தெருமுனையைக் கடக்கும்போது  திரும்பிப் பார்க்கிறாளா என்பதுதானோ என்பதுபோல் நின்று கொண்டிருந்தோம் நானும் ரகுவும்.

ரகு எனக்கு முன்னர் நின்று, தூரத்தில் போய்க்கொண்டிருக்கும் அருணாவைப் பார்த்துக்கொண்டே என்னிடம், “திரும்பிப் பாத்தான்னா அதாண்டா” என்றான்.

அருணா, அவள் தந்தை, மூர்த்தி அண்ணன் ஆகிய மூவரும் போய்க்கொண்டிருந்தார்கள். இன்னும் பத்து அடிகள் வைத்தால் தெருவின் முனை. பார்ப்போம்.

எட்டு, ஏழு, ஆறு என அடிகள் குறைந்து கொண்டிருந்தன. இரண்டு அடிகள் இருக்கும்போது மூர்த்தி அண்ணன் திரும்பிப் பார்க்க நாங்கள் சட்டென வேறு பக்கம் திரும்பிவிட்டு, மீண்டும் பார்த்தோம். இன்னும் ஓர் அடிதான் இருக்கும். ரகுவை விட எனக்குத்தான் ஆர்வம் அதிகமாய் இருந்தது.

ம்ஹூம்.

திரும்பிப் பார்பதற்கான எவ்வித அறிகுறியும் அருணாவின் முதுகில் தென்படவில்லை.

ஒரு நொடியில் அந்தத் தெருமுனையில் சூன்யம் குடிகொண்டது போல் இருந்தது. ஒரு சலனமும் இல்லை.

ரகுவிடம் நான் “ஏண்டா சென்னைல இல்லாத ஆளா அவளுக்கு இங்க மதுரைல” என ஏதோ ஆறுதல் கூறுவதாக நினைத்துச் சொன்னேன். ரகு அதை ரசிக்கவில்லை என்பது அவனின் முகத்தில் தெரிந்தது.

“அப்பிடி சொல்லலடா, அங்கல்லாம் இந்த மாதிரிலாம் கிடையாதாம்டா”

இது இன்னும் அதிகமாக அவனைப் பாதித்தது போல் தெரிந்தது. “அட விட்றா, இவன் வேற” என்றான்.

அப்போது எங்கள் மீது படர்ந்து நீண்டது நிழல். என் உள்ளுணர்வு மிகச்சரியாக உணர்ந்தது.

அருணா தேவி நின்றிருந்தாள்.

“ரகு, நீயும் வர்றியா, டவுன்க்கு”

”இ..ல்ல, இவன் கூட ஒரு எடத்துக்கு” என என்னைக் கையைக் காட்டினான்.

“அதெல்லாம் ஒன்னும் பெரிய வேலை இல்ல, இவன் வருவான், போடா” என நான் ரகுவைத் தள்ளினேன்.

“நீங்க போங்க.. கைலிய மாத்திட்டு வர்றேன்”.

 “நான் வெயிட் பண்றேன் சீக்கிரம் வா” என சொல்லிவிட்டுப் போனாள்.

இம்முறை வெகு நிதானமாய் நின்று திரும்பிப் பார்த்துவிட்டுப் போனாள். ரகு என்னைப் பார்த்தான். உலகின் அத்தனைக் குழப்பமும் அவன் பார்வையில் தென்பட்டது.

டந்த சில நாட்களாக, சரியாகச் சொல்லப்போனால், பொங்கலில் இருந்தே இப்படிப் பிடிமாடு போலத்தான் சுற்றுகிறான். பொதுவாக ரகு நண்பர்களின் காதலுக்கு உதவும் நண்பன். துணை மாப்பிள்ளை.  பிறருடைய காதலுக்கு அவன் கொடுக்கும் யோசனைகளையும் திட்டஙகளையும் கேட்டால், இந்த உலகிலேயே அதிவீரன் ரகுதான் என்பது போல் இருக்கும். இன்று அவனே நாயகன் என்றதும் பயந்து நடுஙகுகிறான். வியர்த்து வழிகிறான்.

 “பயமால்லாம் இல்ல மாப்ள. லைட்டா டரியலா இருக்கு”

பயம் என்ற சொல்லின் உச்சம் தான் டரியல் என்பது அவனுக்கும் தெரியும். குழப்பமாகப் புலம்புகிறான். எனக்கு இது புதுமையான அனுபவம். அல்லது முதல் முறை. ஆம். இத்தனை ஆண்டுகளில் ரகு எந்தப் பெண் மீதும் மையல் கொண்டதில்லை. கடக்கும் வரை பார்த்து, கடக்கும்போதே கடந்துவிடும் மேகம் போன்றவன். இன்று முதல் மழை. (இன்றிற்கு அடுத்தா,முதல்க்கு அடுத்தா என்பதைக் காலம் தான் தீர்மானிக்கும் என்பதால் காற்புள்ளியை இடவில்லை).

எல்லாம் மூர்த்தி அண்ணனால் வந்த வினை.

மூர்த்தி அண்ணன், பொங்கல் பண்டிகைக்காகத் தம் சொந்தக்கார் பாண்டியனில் வருவதாகவும் தனக்கு மிக முக்கியமான வேலை (என்ன வேலைன்னு எங்களுக்குத் தெரியாது பாரு, மாலதியக்காவக் கோட்டிங் குடுக்கத்தான-ரகு) இருப்பதாகவும் அதனால் என்னைப் போய் அழைத்து வந்துவிடும்படியும் சொன்னார். தெருவில் எங்களுக்கு இருக்கும் தலையாயப் பிரச்சனை என்னவெனில் இப்படி எந்த வீட்டினரவாது ஏதாவது வேலை சொல்வதுதான். தேங்காய்ச்சில் வாங்கிவரச் சொன்ன காலங்கள் இப்போது மேம்பட்டு இப்படி டவுனுக்குள் போய் வரும் பதவி உயர்வு வேலைகள்.

” வர்றவனுக்கு ஆட்டோ எடுத்து வரத் தெரியாதாமா? நம்ம ஊர்லதாண்டா இப்பிடிக் கூத்துல்லாம் நடக்கும். அதேமாதிரி வீட்டுக்கு வந்தவன் கிளம்புனா..போய் பஸ் ஏத்தி விட்டு வரச் சொல்றதுலாம் கொலக்குத்தம்டா”

சரி, நம் கதைக்கு வருவோம். ரகுவின் காதல் கதை.

என்னோடு இரயில் நிலையம் வந்தவன் வேண்டா வெறுப்பாக நின்று இருந்தான்.  நான் எஸ் நான்காவது பெட்டியின் முன்புறம் நின்று சற்றுக் குனிந்து ஒவ்வொரு சாளரமாகப் பார்த்து அதில் ஒருவர் சற்று ஏறக்குறைய மூர்த்தி அண்ணன் வீட்டுக்காரர்களின் சாமுத்திரிகாவில் இருப்பதைக் கவனித்து அவர் பெட்டிக்கு உள்ளே நகர நகர நான் நடைமேடையில் அவருக்கு ஈடுகொடுத்து நடந்து வாயிலை அடைந்தால், அங்கு, தன் நெற்றியில் புரளும் மயிர்கொற்றையை நளினமாக நகர்த்தி கையில் இருக்கும் பெரிய இழுபெட்டியை எப்படி இறக்குவது என்பதுபோல் பார்க்க, ரகு ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அப்பெண்ணிடம் இருந்து வாங்கி இறக்கி வைத்தான். அப்பெண் ரகுவிடம் நன்றி நவில்ந்து கொண்டிருக்கும்போதே மூர்த்தியண்னின் சொந்தக்காரர் என நான் நினைத்தவர் அப்பெண்ணிடம் “இன்னொரு பெட்டி எங்க” என ஏதோ கேட்க, ரகு கண்களாலேயே இவர்கள்தான் அவர்களா என என்னிடம் ஏக்கம் கலந்து கேட்பதுபோல் பார்த்தான். தெரியவில்லையே என உதட்டைப் பிதுக்கினேன்.

ரகு உடனே அவரிடம் “மூர்த்தி அண்ணன் சொன்ன..” இல்ல.. கிருஷ்ணா” என்றதும்  நான்  கொஞ்சம் குழம்பி யோசித்தேன். ஆனால் ரகு உடனே, ஆமா சார், ஆமா சார் கிருஷ்ண மூர்த்தி தான் என்று சொல்லிக்கொண்டே அந்தப் பெட்டியின் கைப்பிடியைத் தன் பக்கம் சட்டென உரிமையாக மீண்டும் இழுத்துக்கொண்டான். அப்பெண் சிரித்து மீண்டும் முடியைப் பின்னிழுத்துப் புன்னகைத்தாள்.  

அதன்பிறகு மூர்த்தியண்ணனிடம் போய் ஏதாவது கேட்பது, அல்லது மூர்த்தி இருக்கிறாரா எனக் கேட்பது என்பதாக இரண்டு நாட்களில் அருணா தேவியிடம் தயங்கித் தயங்கி பேசத் துவங்கியவன், இதோ இன்று அவளே வந்து அவனை அழைத்துப் போகும் வரை வந்திருக்கிறான்.

வீட்டு வேலையெல்லாம் முடித்துவிட்ட அன்னை, தன் கைக்குழந்தையின் உறக்கம் கலையக் காத்திருக்கும் நொடிகள் போல, ரகுவிற்காகக் காத்திருந்த அன்றைய மாலை எனக்கு வெகு நீண்டதாகத் தெரிந்தது. இரண்டு முறை மந்தைக்குச் சென்று சுற்றிவரும் பேருந்துகளை வேடிக்கை பார்த்துவிட்டு வந்திருந்தேன். சரி மகிழ்ச்சியாக இருக்கட்டும் என நினைத்து, இரவு உணவிற்கு அமரும்போது ரகுவின் சத்தம் வாசலில் கேட்டது. தட்டை ஓரமாக வைத்துவிட்டு வெளியேறினேன்.

“நீ நினைக்கிற மாதிரிலாம் இல்லடா. அட ஒண்ணுமே இல்ல. சும்மா என்னத்தயோ பேசிட்டு நம்ம சுப்ரீம்ல தோசத் திருவிழாவுல சாப்ட்டு வந்துட்டோம், நாளைக்குக் காலைல வைகை. ஊருக்குப் போறாங்களாம், மூர்த்தியே ஸ்டேஷனுக்குப் போறாப்ளயாம்”

அவனுக்கு அவனுடைய ஏமாற்றத்தைக் கூடச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை.

ஆற்றின் போக்கில் எதிர்படும் சுழல், சுழன்று இறங்குவது அத்துணை அழகாக காட்சி தரும். ஆனால் அதில் சிக்குண்டால் தான் மூச்சுத் திணறுவது புரியும். இத்தனை நாட்களாக என்னுடைய மற்றும் நண்பர்களுடைய காதல்களுக்கு உதவும்பொழுது அத்தனை சிரிப்போடு வலம் வருவான். அவனுக்கு அப்போது காதல் அழகாகத் தெரிந்தது போல. இப்போதுத் திணறுகிறான்.

“அய்யய்ய, இதுக்குத் தாண்டா நான்லாம் இந்த எழவெல்லாம் வேண்டாம்னு இருந்தேன். இதெல்லாம் ஒரு பொழப்பாடா.. எப்பப்பாரு அவ இந்நேரம் என்ன பண்ணுவா, எந்திருச்சுருப்பாளா பல் தேய்ப்பாளா, காப்பி குடிச்சாளா, என்னய நினைச்சுப்பாளா என்ன கலர் ட்ரெஸ் போட்ருப்பானு.. எந்நேரமும் இப்பிடியா யோசனைல சுத்தி சுத்தி வருவா, ச்சை.. இந்தா.. இப்பப்பாரு, காய்ஞ்ச புண்ணுல இருக்க பொக்கத் தட்டிவிட்ட மாதிரி நாளைக்கு ஊருக்குப் போறோம்னு அவ்ளோ சந்தோஷமாச் சொல்றாடாங்குறேன்”

ரகுவைப் பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது. ஆனாலும் சிரிப்பு வந்தது.

”ஒங்கள எல்லாம் கேலி பண்ண பாவந்தாண்டா மாப்ள..இப்பிடி..ஆனா ஒண்ணுடா, இந்த மாதிரி , ஒரு மாதிரி எப்பப்பாரு மனசெல்லாம் நெறஞ்ச அதே சமயம் அவ்ளோ வெறுமையா ஒரே நேரத்துல..இப்பிடில்லாம் ஆனதே இல்லடா.. ஏண்டா இதான அது?”

“எதுடா?”

நான் நினைத்தேப் பார்க்கவில்லை ரகுவும் மறுநாள் அந்த அதிகாலையில்  ‘எதேச்சையாக’ ரயில்நிலையம் போவான் என்று. என்னிடம் கூட சொல்லவில்லை. மூர்த்தி அண்ணனோடு வண்டியில் வந்து இறங்கினான்.

“போய்ப் பார்த்து சொல்லிரலாம்னுதாண்டாப் போனேன். பார்க்கிங்லயே மூர்த்தியைப் பார்த்ததும் பயமா இருந்துச்சுடா. அதான் பம்மிட்டேன்”

 ”எங்கிட்டக் கூடவாடா சொல்லாமப் போவ, காலைல இருந்து தேடுனேன்”

“எதுக்கு?”

எங்களுக்குப் பின்னால் இருந்து குரல் வந்தது.

“நாந்தான் நீங்க எங்க இருக்கீங்கனு கேட்க சொன்னேன்.”

நான் சிரித்தேன். ரகு வியப்பாகப் பார்த்தான் அருணாவை.

நான் ரகுவிடம் “நேத்து அதான இதுனு கேட்டியே, இதான அது?” என்று கிசுகிசுத்தேன். மண்ண அள்ளிப் போட்றாதடா என்பதுபோல் பார்த்தான்.

ரகுவிடம் நான் நேற்று இரவு சொன்னது நினைவிற்கு வந்தது. யாரிடம் பேசும் போது ஓர் உள்ளீடற்ற குழல் போல், ஒரு பறவையின் எடையைப் போல் நம்மை இலகுவாக உணர்கிறோமோ அவர்களோடு இருக்க எந்தச் சமரசமும் செய்து கொள்ளலாம், அதன் பெயர் காதல் என்றேன்.

அதையே வெகு எளிதாக இப்படிச் சொன்னாள்,அருணா.

 ”ரகு, உன் கிட்டப் பேசினா ரொம்ப லேசா ஃபீல் ஆகுது. அதான் நான் போகல.”

ரகு என்னைப் பார்த்தான். உலகின் அத்தனை மகிழ்ச்சியையும் ஒருசேரக் குவித்து வைத்தது போல் இருந்தது  அவன் பார்வை. 

*

குமுதம்- காதலர் தினச் சிறப்பிதழ்

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை