Homeகட்டுரைகள்மிளிர்மன எழில்மதி - வாசகர் கடிதம்

மிளிர்மன எழில்மதி – வாசகர் கடிதம்

மாண்புமிகு திரு. நர்சிம் அவர்களுக்கு,

வணக்கம்.

உங்களின் “மிளிர் மன எள்ளில் மதி” என்ற நாவலை வாசித்த பின், அதைப் பற்றிய
என் உணர்வுகளை உங்களுடன் பகிர வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. இது என்
மனதில் இருந்து எழும் ஒரு நேர்மையான வாசகர் பாராட்டு.

செழியன் – அதிபன் என்ற இரண்டு பிரதான கதாபாத்திரங்களை மையமாக கொண்டு,
வயது வித்தியாசம் கொண்ட இரண்டு காதல் கதைகளை நீங்கள் மிக நுட்பமாகவும்,
அழகாகவும் சொல்லிய விதம் என்னை ஆழமாக பாதித்தது. ஆரம்பத்தில் இது இரண்டு
ஆண்களின் காதல் கதையாக தோன்றினாலும், கதையின் பயணத்தில் உண்மையில் இது
இரண்டு பெண்கள் தங்கள் வாழ்க்கைத் தேர்வுகளை எடுக்கும் கதை என்றும், நாம்
ஆண்கள் அந்தப் பயணத்தில் ஒரு பகுதியாக மட்டுமே இருக்கிறோம் என்பதையும்
உணர வைத்தது.

இந்த நாவலில் நான் மிகவும் ரசித்தது உங்கள் திரைக்கதை (screenplay)
அமைப்பு. கடந்த காலமும் நிகழ்காலமும் மாறிமாறி வரும் இடங்களில், “இது
இப்போது நடக்கிறதா அல்லது நினைவுகளா?” என்ற குழப்பம் வாசகருக்கு
ஒருபோதும் வரவில்லை. கதை ஓட்டத்தை எங்கும் தடைப்படுத்தாமல், கடந்த கால
தருணங்களையும் நிகழ்கால உணர்வுகளையும் மிக இயல்பாக இணைத்துள்ளீர்கள். இது
ஒரு பெரிய எழுத்தாளர் திறமை என்று உணர்கிறேன்.

நான்கு முக்கிய கதாபாத்திரங்களின் character arc மிகவும் அழகாக தொடங்கி,
இயல்பாக வளர்ந்து, நிறைவடைந்தது. ஒவ்வொருவரும் தங்கள் தவறுகளை உணர்ந்து,
தியாகங்களையும் சமரசங்களையும் செய்து, காதலுடன் வாழ தேர்வு செய்வது,
இதுவே வாழ்க்கை என்பதைக் கதையிலிருந்து கற்றுக் கொண்டேன்.

இந்தக் கதையில் இன்னொரு முக்கியமான பாத்திரமாக நான் உணர்ந்தது கடலும்
கடற்கரையும். வெளிப்படையில் உயிரற்றதாகத் தோன்றும் அந்தக் கடலும் மணலும்,
பல மனிதர்கள் தங்கள் வாழ்க்கை கேள்விகளுக்கான பதில்களை கண்டெடுக்கும்
இடமாக இருப்பதை இந்தக் கதை மீண்டும் நிரூபிக்கிறது. கதையின் பல முக்கிய
தருணங்களில் கடல் ஒரு சாட்சியாகவும், சில நேரங்களில் ஒரு ஆலோசகராகவும்,
சில நேரங்களில் அமைதியான பதிலாகவும் செயல்படுகிறது. மனித மனத்தின்
குழப்பங்களையும் தீர்மானங்களையும் பிரதிபலிக்கும் ஒரு மௌனமான சக்தியாக
கடல் இந்த நாவலில் முக்கிய பங்கு வகித்தது.

பொதுவாக ஒரு சோக முடிவு கொண்ட கதை மனதில் கனமாக தங்கி விடும். ஆனால் இந்த
நாவலின் அழகான, நம்பிக்கை நிறைந்த முடிவு என் மனதில் மென்மையாக, நீண்ட
நாட்கள் நிலைத்திருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியும்.

நான் 23 வயதுடைய ஒரு இளைஞன். இந்தக் கதையின் மூலம் பல புதிய வாழ்க்கை
பார்வைகளையும் பாடங்களையும் கற்றுக் கொண்டேன். உங்கள் தத்துவ
சிந்தனைகளும் வாழ்க்கை ஆலோசனைகளும், கதையின் ஓட்டத்தை தடை செய்யாமல்,
உரையாடல்களின் வழியாக இயல்பாக வந்த விதம் மிகச் சிறப்பு. குறிப்பாக
சிட்டிபாபு குடும்பத்தின் மதிப்பை பணத்துக்கு முன் உணரும் அந்தக் காட்சி,
என் மனதில் மிகவும் பிடித்த ஒன்றாக மாறியது.

என் தனிப்பட்ட வாழ்க்கையிலும், இந்தக் கதையில் வரும் இரண்டு ஜோடிகள்
அனுபவித்த காதலின் சில துணுக்குகளை, ஒரே ஒரு பெண்ணுடன் நான்
அனுபவித்திருக்கிறேன். இந்த நாவல், அந்த நினைவுகளை வலியோடு அல்ல; ஒரு
இனிய புன்னகையோடு நினைவுபடுத்தியது, அதுவே இதன் அழகு.

இரண்டு ஜோடிகளுக்கிடையேயான காதலை, வெறும் வார்த்தைகளால் இவ்வளவு தெளிவான
காட்சிகளாக என் மனதில் உருவாக்கியதற்காக உங்களுக்கு சிறப்பு பாராட்டு.
அதி – தென்றல் கடந்த கால நினைவுகளில், காற்று, மரங்கள், இலைகள்
அனைத்தையும் உணர்ந்தேன். நான் மதுரையைச் சேர்ந்தவன் அல்ல; நான்
இலங்கையைச் சேர்ந்தவன். ஆனாலும் அந்த கிராமத்து நொஸ்டால்ஜியாவை முழுமையாக
அனுபவித்தேன்.

இளம் தலைமுறைக்கு உண்மையான காதல் என்ன, எப்படி காதலிக்க வேண்டும் என்பதை
எளிய வார்த்தைகளில், ஆழமான உணர்வுகளுடன் சொன்னதற்காக உங்களுக்கு என்
மனமார்ந்த நன்றி.

இது நான் எழுதும் முதல் ஆசிரியர் பாராட்டு. இன்னும் அனுபவம் வாய்ந்த
வாசகர் அல்ல என்றாலும், ஒரு வாசகராகவும், எழுத வேண்டும், கதைகள் சொல்ல
வேண்டும், உங்கள் கதாபாத்திரங்கள் போல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று
ஊக்கமடைந்த ஒருவராகவும், இந்த நிமிடத்தில் உங்களுக்கு என் நன்றியையும்
பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் பல அழகான படைப்புகளை நீங்கள் எழுத வேண்டும் என்ற ஆவலுடன், என்
மனமார்ந்த வாழ்த்துகள்.

அன்புடன்,
அனுஷன்
இலங்கை


RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை