சுதீந்தரன் சார்க்கு பயத்தில் வியர்க்கத் துவங்கி இருந்தது. எப்படியோ நான்கைந்து மணிநேரங்கள் சமாளித்துவிட்டவர்க்கு, தன் விபரீதக் கற்பனையின் அளவு கூடக்கூட, மூச்சை இயல்பாக விடமுடியாத அளவு அழுத்தியது அச்சம். அவருக்குப் பக்கவாட்டில் அமர்ந்து திரையைப் பார்த்துக் கொண்டிருந்த அருண் ஒருமுறை மேலே பார்த்து, குளிர்சாதனத்தின் அளவு பதினெட்டில் இருப்பதை உறுதி செய்துகொண்டு சைகையால் விசாரித்தான்.
சுதீந்தரன் சார், தான் பேசுவதற்கு முன்பு திரைக்கு அப்பால் இருக்கும் ஏனையோர் கேட்கமுடியாதபடி செவித்திறம் அணைத்துவைக்கப்பட்டிருக்கிறதா என உறுதிபடுத்திக்கொண்டு தன்பக்கத் திரையை இருளில் மொழுகிவிட்டு, அருணை ஏறிட்டார்.
“என்ன சார் ஆச்சு, ஒடம்பு முடியலயா?”
சட்டென தன் நெற்றிவியர்வையைத் துடைத்துக் கொண்ட சுதீந்தரன், கேட்ட
அருணைப் பார்த்து ஒன்றுமில்லை என்பதாகத் தன் உடல்மொழியை மாற்றி,
மீண்டும் திரையைப் பார்க்கத் துவங்கினார்.
கொரொனா கொடுத்த கொடுமைகளில் ஒன்று இந்தக் காணொளி குவிமைய்யக் கூடுகைகள் என்று நினைத்துக் கொண்டது அவர் மனம். சொல்லப்போனால் கி.மு கி.பி போல அலுவலக வரலாற்றைக் கொ.மு.கொ.பி எனப் பிரித்துவிடலாம் என இதே அருணிடம் சென்ற வாரம் அவர் விரிவாகப் பேசியது மீண்டும் நினைவிற்குள் வந்தது.
ஆம். முன்பெல்லாம் அலுவலகம் என்பது காலையில் நேரத்திற்கு கொஞ்சம் ’முன்னப் பின்ன’ வந்துவிடுவதில் ஒரு ராணுவ ஒழுங்கு இருந்தது. வந்தவுடன் அவரவர் கணினி, மடல்கள், பின் எழுந்து ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்தமான அலுவல்-ஸ்னேகத்திடம் போய் நிற்பது, காஃபி குடிப்பது, புறம்பேசுவது, புலம்புவது, சாப்பிடுவது, பிரச்சனைகளை எதிர்கொள்வது, சண்டை இடுவது போல் பேசுவது, பின்னர் சமாதானத்தின் தேநீரைப் பருகுவது, இருட்டத் துவங்கியதும் அந்த நாளை முடித்துக் கொண்டு கிளம்புவது. கிளம்பிய பிறகும் வெளியே நின்று பேசுவது என நன்றாகத்தான் இருந்தன நாட்கள். ஆனால் அப்போது அது நன்றாக இல்லை என்பது போலவே அன்றாடமும் புகார் நிமித்தமே மனதைத் தேற்ற வேண்டி இருந்தது. ஆனால் இந்தக் கொரொனா வந்தபிறகு பெரும்பான்மையினரின் அன்றாட அலுவல் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது. நோய்மைக் காலம் முடிந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன, ஆனால் இன்னும் பெருந்தொற்றின் பொருட்டு பின்பற்றப்பட்ட நியதிகளை,அன்றாடங்களை தொடர்வதுதான் ஆகப் பெரிய சோகமாக இருந்தது சுதீந்திரன் சார்க்கு.
நேரத்திற்கு வரத் தேவை இல்லை என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள இயலவில்லை அவருடைய இந்த முப்பது ஆண்டுகால அலுவலகப் பணியின் அன்றாட ஒழுங்குமனம். ‘வீட்டில் இருந்து வேலை பார்க்கலாம்’ எனும் ஒன்றைத் தற்காலிகம் என்று நினைத்தார். தற்காலிகங்கள் நிரந்தமானவை என்றாகும்போது மனம்,மீயொலி கேட்காமல் திசைதப்பிய வெளவாலின் சுவர் முட்டல்கள் போல் ஆகும் என்று இந்த சமீபத்திய ஆண்டுகளில் உணரத் துவங்கிவிட்டிருந்தார். நியாப்படி நேரம் என்பது இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பது சுதந்திரம் என்று ஆரம்பத்தில் நினைத்தவர்கள் பிற்பாடு அதன் விபரீதம் உணரத்துவங்கி பிறகு விடுபட வழியில்லாமல் உழல்வதை மற்றவர்களின் கருத்துகளைக் கேட்டு ஊர்ஜிதப்படுத்திக் கொண்டார். அப்படியான ஒன்று, இந்த காணொளியில் நிகழ்த்தும் கூடுகைக்கூட்டங்கள். பெருந்தொற்றுக்கு முன்னர், ஆண்டிற்கு இருமுறை நேரில் எங்கேனும் மொத்தமாகக் கூடி ஆண்டு நிகரலாப நட்டக்கணக்குகள், நிறுவனத்தின் போக்கு என பேசி, அன்று இரவு நடக்கும் மதுக்குப்பிக் கூடுகையை நோக்கிய மனதுடன் இருப்பார்கள். ஆனால், பெருந்தொற்றுப்பொழுதில் இப்படி ஒன்றைக் கண்டுகொண்ட நிறுவனத்தலைமையகங்கள், பணம் மிச்சம் நேரம் மிச்சம் என்று சொல்லி, உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னரும், நினைத்தபோதெல்லாம் ஒரு நிரலை அனுப்பி ‘உடனே வா,இணைந்துகொள்’ எனக் கட்டளையிடத் துவங்கி, இதோ மூன்று ஆண்டுகளாக வாரத்திற்கு ஒருமுறை என்ற புதிய தற்காலிக ஒன்று நிரந்தரமாக நடந்தேறிக் கொண்டிருக்கிறது.
இதனால் முன்பு சுதந்திரமாக அவருடைய தனிப்பட்ட வீட்டு வேலைகளை அலுவல் நிமித்தம் செல்வதாக சேர்த்து முடித்துக்கொண்டிருந்த எந்த ஒன்றையும் செயல்படுத்த முடியாமல் போய்விட்டது. அப்படியான ஒரு காணொளியில் கவாத்து வாங்கும் நாளான இன்று, காலையில் கிளம்பும்போதே பற்றிக்கொண்டுவிட்ட பதற்றம், வண்டியைக் கிளப்பும் போது வீட்டிற்கு வந்த இளைஞன், இவரைப் பார்த்ததும் ஒரு வியப்பைப் புருவத்தில் காட்டி, சிரித்து, தான் கொண்டுவந்திருந்த பெரிய பெரிய இரண்டு பைகளை தூக்கிக்கொண்டு இவர் வீட்டிற்குள் நுழைய, அப்போதைக்குச் சிரித்துவைத்துவிட்டு அலுவலகம் வந்துவிட்டவருக்கு, அந்த இளைஞனை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று யோசித்து யோசித்து, விடை கண்டபொழுதில் அனைவரும் காணொளியில் கூடிவிட, அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. அந்த இளைஞன், நோய்தொற்றுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் அலுவகத்தில் சேர்ந்தவன். அந்தத் திடீர்த்தாக்குதல் பெரும் விபரீதம் என்றானபிறகு ஆட்குறைப்பு இன்னபிற இத்தியாதிகளில் வெளியேற்ற, அவனுடைய கெஞ்சல்கள், மன்றாடல்கள் என முடிந்து, இனி பயனில்லை என்றானவுடன் மிகக் கடுமையான சொற்களால் பேசிவிட்டுப் போனது நினைவிற்கு வந்தது.
வீட்டில் இருக்கும் நாற்காலிகள், கழிவறைகளை சுத்தம் செய்வதன் நிமித்தம் சமீபமாக புறப்பட்ட ‘ஆன் லைனில் க்ளீன் செய்பவர்கள்’ நடத்தும் ஏஜென்ஸிக்குப் பழக்கப்பட்டு அந்த சுத்ததிற்குப் பழகி, அவருடைய மகள், ஆன்லைன் புக்கிங்கில் நாள் குறித்திருந்தாள். மனைவியும் மகளும் மட்டும் வீட்டில் இருக்கிறார்கள். அந்த இளைஞன் என்ன செய்வானோ என்ற எண்ணம் வந்த நொடியில் இருந்து வியர்வை அரும்பத் துவங்கிவிட்டது சுதீந்தரன் சார்க்கு.
ஆரம்பத்தில் இந்த இணையவழி கூடுகைகள் ஒரு சம்பிரதாயம் என்று சொன்ன மேலிடம், போகப்போக மிக மூர்க்கமாக நடத்தத் துவங்கிவிட்ட ஒன்று என்பதால் ஏதேனும் காரணம் சொல்லி இடையில் வெட்டிக்கொண்டு போவது கரும்புள்ளிகளை கணக்கில் வைப்பதாக ஆகிவிடும் என்பதால் கையறுநிலையில் அமந்திருந்தார். ஏதோ ஒரு விளக்கம் கொடுக்க வேண்டி அவர் பெயரைச் சொல்லி ‘அன் மியூட் அன் மியூட்’ என ஏலம் விட்டுக்கொண்டிருந்தார்கள். அருண் சுதாரித்து, அடைத்து வைக்கப்பட்ட துல்லிய உள்வாங்கியை உசுப்பி, பேச ஆரம்பிக்க, சுதீந்திரன் இணைந்து சமாளித்தார்.
அப்போது அங்கு வந்த குணசேகரன் ஏதோ ஒரு காகிதத்தை வைத்துவிட்டுப் போக, குணசேகரனுக்கு சென்ற வாரம் நிகழ்ந்தது நினைவிற்கு வந்து தொலைத்தது. சென்ற வாரத்தில் ஒருநாள் வழக்கம்போல குணாவின் மகள், ஆன் லைனில் வண்டியை புக் செய்து போகும்பொழுது, யாருடனோ ஏதேதோ அலைபேசியில் பேசிக்கொண்டு போக, அந்த ஓட்டுநர் அவற்றைக் கவனித்து, அன்றைய இரவிலிருந்து அவ்வப்பொழுது வாட்சப், அழைப்புகள் என தொல்லைக் கொடுக்க ஆரம்பித்து, பின்னர் மிரட்டல், அது இது எனப் போய், பாவம் அந்தப்பெண் வேறு வழி இல்லாமல் தந்தையிடம் சொல்லி, தக்க நடவடிக்கைகள் எடுத்து, ஆபத்தில் இருந்து தப்பிய கதையைச் சொல்லி இருந்தார்.
“முந்திலாம் கை நீட்டி ஆட்டோல ஏறுவோம், எங்க இறங்கனுமோ இறங்கிருவோம், அத்தோட போய்ரும் சார். இப்ப நம்ம நம்பர்,ஜாதகம் எல்லாம் அவன் மொபைல்ல போய்ருது, அத வச்சுருக்குற ஆயிரத்துல ஒருத்தன் இப்பிடி பண்ணிர்றான், அது நம்ம தலைல வந்து விடியுது பாருங்க” என குணசேகரன் சொல்லும்பொழுது அதை ஒரு செய்தியாகத்தான் கடந்திருந்தார் சுதீந்திரன். ஆனால் இப்போதுதான் முகம் தெரியாத ஆட்களிடம் நம் அத்தனை தொடர்பு எண்களும் இருப்பதன் விபரீதம் புரிந்தது. இந்த சமீபத்திய ஆண்டுகளில் இப்படி அன்றாடங்களில் இயல்பாக நிகழ்ந்து கொண்ட மாற்றங்களை எல்லாம் அவர் மனம் விபரீதங்களோடு இணைத்துப் பார்க்கத் துவங்க, அழுத்தம் கூடிக்கொண்டே போனது. மீட்டிங் முடிவதாகத் தெரியவில்லை. கொடுமை என்னவெனில், நகைச்சுவை என்று நினைத்து மேலிடம் பேசும் சொற்களுக்கு செயற்கையாக சிரிக்க வேண்டி இருந்த தருணங்கள்தான். இன்னும் ஓராண்டு மூன்று மாதங்கள் பதினாலு நாட்கள் இருக்கின்றன, ஓய்வு பெறுவதற்கு என்று கூட்டிக்கழித்து வைத்திருந்தார், நாட்களை. நாள் முற்றுப்பெற இன்னும் ஓரிரு மணி நேரங்கள், எனில் பதிமூன்று நாட்கள்.
இந்த முப்பத்துமூன்று ஆண்டுகளில் இந்த அலுவலகம் அவருக்குக் கொடுத்தவை ஏராளம் தான். தற்போது இருக்கும் தலைமுறை நான்கு ஆண்டுகளுக்கு ஒரு வேலை என மாறி அதை ‘ஜம்ப்’ என்று சொல்லித் தாவித் தாவி மேல் ஏறிப்போய்விகிறார்கள். இவர், முதன்முதலில் சேர்ந்த நிறுவனம், படிப்படியாக மேலேறி மெதுவாக முன்னேறி, ஓய்விற்கு நிற்பதில் அலாதிப் பெருமை. காரணம், சம்பளம் என்பதைத் தாண்டி, உணர்வுப்பூர்வ பந்தம் என்று அவர் அடிக்கடி சொல்லிக்கொள்வதுதான். திருமணம் ஆனதும் போன புகைவண்டிப்பயணம், நிறுவனம் ஏற்பாடு செய்துகொடுத்த கொடைக்கானல் தங்கும் விடுதி என ஆரம்பித்து கைக்கடிகாரம், சட்டைகள், கழுத்துப் பட்டைகள் என அவரைப்போன்றவர்களை அன்பின் கட்டுக்குள் வைத்திருக்கத் தெரிந்த நிறுவனம்.
இத்தனை ஆண்டுகளில் பெருஞ்சோகம் எனில், அது நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த குடும்ப சகித வட இந்திய சுற்றுலா. அந்த ஆண்டில் தான் அவருக்கு மகன் பிறந்திருந்தான். மகளுக்கு அப்போது மூன்றோ நான்கோ வயது. நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் சூழ அனைவரும் மகிழ்ச்சியாக, பத்து நாட்களுக்கும் மேலாக புகைவண்டியிலேயே சுற்றி கொண்டிருந்தார்கள். திரும்பும் வழியில், லேசாக காய்ச்சல் கண்டிருந்த மகனின் எட்டுமாத உடல் தூக்கித் தூக்கிப்போட்டு, இட்டார்ஸியை நெருங்கும்போது, குழந்தை இறந்துவிட்டது என்று உறுதியானது. இன்னும் 36 மணி நேரங்கள் பயணம் என்பதால், அப்போது இருந்த மூத்த அதிகாரிகள், சோகத்தில் பங்குகொண்டு, அங்கேயே ஓரிடத்தில் குழிவெட்டிப் புதைப்பது என முடிவெடித்து, முடித்தார்கள். அங்கு அவசரகதியில் தோண்டப்பட்ட குழியின் அளவு, குழந்தையை குறுக்கி வலிக்கவைக்கும் என்று அழுது அரற்றி பேசக்கூட தெம்பில்லாமல் துவண்டு கிடந்தார். ஊர் மாற்றல் போல் ஓர் ஆறுதல் ஏதுமில்லை என மேலதிகாரி அவரை சற்று காலம் ஊர் ஊராக மாற்றி, தக்கவைத்துக் கொள்ள, மனைவியும் அவரும் மாற்றல்களால் மாறுதல் அடைந்தனர்.
மகள் பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த பொழுதுதான் பெருந்தொற்று உருவெடுத்தது. மகளுக்கு ‘வீட்டில் இருந்தே வேலை’ எனும் கலாச்சாரம் அவருக்கு மிகப்பிடித்தது. நினைக்கும் யாவையும் தன் மகள் வீட்டிலிருந்தே ஒரு சொடுக்கில் செய்துவிடுவதும் அவருக்குப் பெரும் பெருமிதம்.
வழக்கமாக மீட்டிங் முடிந்ததும், கழிவறை போய் நாள் முழுக்க அடக்கிவைத்திருந்த சிறுநீரை வெளியேற்றுவதில் அலாதியானந்தம் அடைந்து, தன் இருக்கைக்கு வந்து, மேலிடத்தைப் பற்றிய தன் கருத்துகளை சில பல கெட்ட வார்த்தைகளோடு கலந்து நகைச்சுவையாகவும் கவலையாகவும் தன் குழுவினருடன் பேசி, நல்ல காஃபி வேண்டும் எனச் சொல்லி அருந்திவிட்டு
கிளம்பும் சுதீந்தரன், அன்று முடியப்போகிறது என்ற சமிக்ஞைகள்
தெரியத்துவங்கும்போதே பெட்டியைக்கட்டித் தயாராகிவிட்டார். முடிந்ததும்,
குதிரை,லாயத்தில் இருந்து விருட்டென கிளம்பும் வேகத்தில் வீட்டை அடைந்தார். வரும் வழி நெடுக மகளையும் மனைவியும் அழைத்து, அவர்கள் எடுக்காததன் பொருட்டுக் கூடுதல் கவலையும் அச்சமும் துரத்த, வழக்கத்தை விடவும் குறைந்த நேரத்தில் வீட்டை அடைந்திருந்தார்.
மனைவியும் மகளும் ஏதோ சிரித்துப் பேசிக்கொண்டிருக்க, வீடு பளிச்சென சுத்தமாக இருந்தது. நாற்காலிகளின் பஞ்சுமெத்தைகள் ஈரம் தாங்கி நின்றன. காயும் வரை அமரக்கூடாது, கெமிக்கல் என எச்சரித்தாள் மகள். கழிவறை நோக்கி ஓடினார். நட்சத்திர விடுதிகளின் சுத்தம் தென்பட்டது. ஆசுவாசம் அடைந்து வந்தவர், காப்பிக் கோப்பையை வாங்கிப் பருகிக் கொண்டே பக்கவாட்டில் இருந்து புகைந்து கொண்டிருந்த இடத்தை அடைந்தார்.
அத்தனை அழுக்கையும் சிறு பொட்டலமாகக் கட்டி, சின்னஞ்சிறு குழி வெட்டி அதில் போட்டு எரித்துப்போயிருந்தான், அந்த இளைஞன்.
💖💖👍👍