“இவென் ஒரு பெரிய மனுஷன்னு அங்க இருந்து தேடி வந்தீங்களாடா?,
”
என்னைத்தான் சொல்கிறார். இதுதான் என்னுடைய இப்போதைய பிரச்சனை.
தலையாயப் பிரச்சனை. அப்பாவிற்கு நான் இன்னும் சிறுவன் அவர் மொழியில் சொல்வதானால்,
‘சுண்டைக்கா பய.’. இன்னும் பதினெட்டு மாதங்கள் நாப்பது நாட்களில் என் பதின்பருவம் முடியப்போகிறது, காலையில் கூட கண்ணாடிக்குள் புகுந்து
பார்த்ததில் தாடி வளரத் துவங்கி விட்டது. சரி, மூன்று நான்கு முடிகள் தான் என்றாலும்
தவடாக்கட்டையில் அது அரும்பிய நாளில் இருந்து தொட்டுத் தொட்டு இழுத்து இப்போது நான்கைந்து
முடிகளாக ஆகி இருக்கிறது. அவர் கவனிக்க வேண்டுமென கையை வைத்து வருடிக்கொண்டே இருந்தாலும்,
செய்தித்தாளை உதறி மடித்து மறுபக்கம் படித்துக்கொண்டே தான் பேசுகிறாயே ஒழிய பார்க்கமாட்டேன்
என்கிறார்.
நான்கைந்து வருடங்களுக்கு முன்னர் அப்படித்தான், பேருந்தில் டிக்கெட் எடுக்கும் பிரச்சனையில், “இவனுக்கா, எந்தூர்லய்யா கண்டெக்ட்டரா இருந்துட்டு இந்த லைனுக்கு வந்துருக்க” என அப்பா பெருங்குரலெடுத்து கத்த, மொத்தப் பேருந்தும் என்னைப் பார்க்க, நடத்துநர் பேருந்து முழுக்க நடந்து கூட்டிப்போய் ஓட்டுநர் இருக்கையின் பின்னால் இருக்கும் ‘பிளிம்சால் கோடு’ போன்ற ஒரு கோட்டின் முன் நிறுத்தி, கோட்டுக்கும் எனக்குமான உயர அளவு சரியாக இருக்கிறதா இல்லையா எனும் குழப்பம் கொண்டுருக்கும்போதே, “கண்ணு அளக்காததையா கை அளக்கப்போகுது” என அப்பா மீண்டும் குரல் கொடுக்க, அத்தனை பேர் இருந்தும் தனியாக இருப்பது போல் உணர்வு ஏற்பட்டது.
இதோ, டவுனுக்குள் இருந்து நண்பர்கள் தேடி வந்திருக்கிறார்கள். எல்லோருமாக சேர்ந்து படத்திற்குப்
போவதாக திட்டம். அம்மாவிடம் அழுது அடம் பிடித்து சம்மதம் வாங்கி இருந்தேன். ரகு வீட்டிற்குப்
போய் அங்கிருந்து போவதாகத்தான் பேசி வைத்திருந்தோம். அப்பா வீட்டிற்குள் வந்தவுடன்
கிளம்பலாம் என்று நினைத்திருக்கும்போதே தேடி வந்துவிட்டார்கள்.
“அதெல்லாம் அப்பிடி தனியாப் போகக்கூடாதுடா”
அவரைச் சுற்றி அரைவட்டமடித்து அரைடஜன் நண்பர்கள் நின்றிருக்கிறார்கள்.
தனியாக என்கிறார் பாருங்கள். எனில் எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பது புரிகிறதல்லவா.
ரகு, தாமதமாக வந்தவன் சமயோஜிதமாக பக்கத்தில் இருக்கும் கொட்டம்
வழியாக நுழைந்து உள்ளே வந்துவிட்டான், அவர் கண்களில் இருந்து தப்பி. நானும் அவனும்
ஒரே தெரு என்பதால் அவனுக்கு இதெல்லாம் அத்துப்படி.
“மாப்ள, நாங்க போய்ட்டு வர்றோம், எப்பிடியும் ஒன்னய விடமாட்டாரு,
கேபிள் டிவில பாரு மாப்ள நிய்யி” என்மீதான அக்கறை போலவே பேசுவான். ஆனால் நக்கலடிக்கிறான்.
அழுகை எல்லாம் வரவில்லை. ஆனால் அப்படியான ஒன்று போல் என் முகம் இருப்பதைப் பார்த்து,
“விட்றா, இன்னும் ரெண்டு வருசம், வளந்துருவல்ல” என என் தோள்ப்பட்டைக்கு அருகில் நின்று
அவனுக்கும் எனக்குமான உயரத்தின் அளவை கையால் காண்பித்துவிட்டுப் போனான்.
“நீ எப்படா வந்த ரெகு”
“இப்பதான் ப்பா” என்றவன் எப்படி எவ்வாறு சைகை செய்தான் எனத்
தெரியவில்லை. எல்லோரும் திபுதிபுவென அவன் பின்னால் கிளம்பிப்போய்விட்டார்கள்.
திண்ணையில் நின்றிருந்தேன். தன்னந்தனியாக.
ஒவ்வொருமுறையும் இப்படித் தனியாக நிற்கும் போதும் என்னவோ
போல் ஆகும். நான் ஒன்றும் சிறுவன் இல்லை எனக் கத்தி சொல்லவேண்டும் போல் இருக்கும்..
இரண்டு வாரங்களுக்கு முன்னர் இதே நண்பர்களோடு அக்காவின் திருமணம் நடந்த மண்டபத்தில்
எவ்வளவு சிரிப்பும் மகிழ்வுமாக கூத்தடித்தோம். மொத்த மண்டபமும் எங்களைப் பார்த்து விலகிப்
போகும் அளவு. எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்தோம். அப்போதெல்லாம் சிறுவன் என்று
தெரியவில்லையோ இவருக்கு எனத் தோன்றியது.
கேட்டால், “தெரியுமே ஒம்பவுசு, நான் மட்டும் முருகேசன அனுப்பி
வைக்கலேன்னா, அங்கயே ராத்திரி பூராம் நின்னுக்கிட்டு இருந்துருப்ப சுண்டக்காபய” என
கேலி செய்வார்.
அதாவது, கல்யாணத்திற்கு முதல் நாள்,மண்டபத்தில் வேலைகள் செய்துகொண்டிருந்தோம்.
வயதில் சற்று பெரியவர் ஒருவர் வந்து, “தம்பி, பொறுப்பு முழுசும்
நீங்கதான் போலயே, வந்து வெறகு அடுக்க சரிபார்த்துட்டீங்கன்னா வண்டில ஏத்திரலாம் வாறீகளா”
என்றார். நல்லவேளையாக அவராகவே வந்து கேட்டார். இல்லையெனில் விறகு இல்லாமல் காலையில்
திட்டுவிழும் என உடனே அவரோடு போனேன். நண்பர்களை சாத்துக்குடி பைய்யை பிரித்துப் போடச்
சொல்லி இருந்தேன். வட்டமாக அமர்ந்து மும்முரமாக செய்துகொண்டிருந்தார்கள்.
பெரியவர், நான்கு கட்டிடங்கள் தள்ளி ஒரு சந்துக்குள் போனார்.
நல்ல இருட்டு.
“நாய்கெ கெடக்கும், ஒண்ணும் பண்ணாது பார்த்து வாங்க” என்றதும்
லேசாக பயம் பீடித்தது. வெகு லேசாகத்தான்.
அந்த சந்து முடிந்ததும் ஒரு பெரிய வீதி இரண்டாகப் பிரிய நல்ல
விளக்கு வெளிச்சங்கள். பாத்திரக் கடைகள், வளையல் கடைகள் என உடனே கல்யாணக் கலை குடிகொண்டுவிட்டது
மனதில்.
அந்தத் தெருவின் மூலையில் இருந்த மற்றுமொரு சந்தில் நுழைந்தவர்,
அங்கே பூட்டி இருந்த விறகுக் கடை முன் நின்றார்.
“இதான் இந்தப் பயலுக கிட்ட, இருங்கடா மொதலாளியக் கூட்டியாறேன்னுட்டு
சொல்லிட்டுத்தான் வந்தேன். டீ குடிக்கப் போய்ட்டாய்ங்க, சின்னப்பயலுகள வேலைக்கு வெச்சேம்
பாருங்க, என்னயச் சொல்லணும், ஒரு ரெண்டு நிமிசம் நில்லுங்க, சாவிய வாங்கிட்டு வந்துர்றேன்,
ஆமா தம்பி பேரச் சொல்லவே இல்லையே”
பெயரைச் சொன்னதும் மலர்ச்சியாக “அம்சமான பேருதம்பி” எனச்
சொல்லிவிட்டு, சாவியை எடுத்துவர ஓட்டமும் நடையுமாக ஓடினார், பாவம்.
பூட்டிய கடையின் வாசலில் ஒருபக்கம் கட்டைத்தராசு ஒருபக்கம்
ஏறி மறுபக்கம் பெரிய படிக்கல் அழுத்திக்கொண்டு நின்றிருந்தது.
“பத்து கை, இருவது கை “ என அப்பா சொன்னது மங்கலாக நினைவிற்கு
வந்தது. இங்கே படிக்கற்கள் இருக்கிறதே, எப்படி அளவு சொல்வது என யோசித்துகொண்டு நின்றிருந்தேன்.
நல்ல வெளிச்சமாக இருந்த இடம் மெல்ல இருள் கவியத் துவங்கியபோதுதான் வெகுநேரம் ஆகிவிட்ட
உணர்வு. அருகில் இருந்த கடையை அடைத்துக்கொண்டிருந்தார்கள்.
பேசாமல் மண்டபத்திற்கே போய்விடுவோம் என நினைக்கும்போதே, ஒருவேளை
அந்த முதியவர் வந்துவிட்டால், பாவம் தேடுவாரே , மீண்டும் மண்டபத்திற்குவ் வரவேண்டுமே
என நினைத்தேன். அதைவிட முக்கியமாக பொறுப்பு என்றால் இதெல்லாம் தானே, இருந்து வேலையை
முடிக்காவிட்டால் திட்டுவிழும் எனத் தோன்றியது.
”இங்க எதுக்குப்பா நிக்கிற “என ஒரு பெண் வந்து கேட்டபொழுது
மீண்டும் லேசாக பயம் வந்தது. சுற்றும் முற்றும் ஆள் நடமாட்டமே இல்லை என்பதை மனம் மெதுவாக
உணர்ந்தபொழுது கொஞ்சம் அதட்டலாக மீண்டும் கேட்டார் அப்பெண் “சின்னப்பயலா இருக்க இங்கல்லாம்
வந்துருக்க”. அந்த தொனியில் அதட்டலை விட கிண்டல் கலந்திருந்தது. நிமிர்ந்து பார்க்கும்பொழுது,
ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் சிகரெட் பிடிப்பது போல் உதட்டில் பொறுத்து சர்ரென
வெற்றிலை கலந்த எச்சிலைத் துப்பினார்.
இவ்வளவு நேரம் பொறுப்பு, பெரிய ஆம்பளை என்றெல்லாம் ஓர் எண்ணத்தை
ஏற்படுத்திய பெரியவரை ஆளைக் காணோம், அப்படி அங்கு நிற்பது புதிதாகவும், பயமாகவும் உருமாறத்
துவங்க,
“இப்ப என்னாக் கேட்டுட்டாகனு இப்பிடி அழுக வருது ஒனக்கு”
மீண்டும் அதே சிகரெட் விரல் துப்பல்.
அழுகையா என நான் யோசித்துக்கொண்டிருக்கும்போதே, தூரத்தில்
முருகேசன் அண்ணன் வந்துகொண்டிருப்பது தெரிந்ததும் அந்த இடத்தில் வெளிச்சம் பரவியது.
என் முகம் தான் அப்படி ஆனது. என் முகமாற்றத்தைப் பார்த்து அந்தப் பெண் நான் பார்த்த
திசையில் திரும்பிப் பார்க்க, அங்கே முருகேசன் அண்ணன் என்னை நோக்கி வருவதைப் பார்த்தார்.
அங்கிருந்தே அவர் என் பெயரைச் சொல்லிக் கத்திக்கொண்டே வந்தார்..
அது பெரிய பாதுகாப்பைத் தந்தது.
உடனே கைய உயர்த்தி, “சொல்லுங்கண்ணே”
அருகில் வந்தவர், அப்பெண்ணை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டே
“என்னா நொல்லுங்கண்ணே, எங்கய்யா வந்த இந்நேரத்துல, அங்க ஒங்கப்பா
கத்திக்கிட்டு கெடக்காரு”
என சொல்லிக்கொண்டே திரும்பி நடக்க, பசுவை முந்தும் கன்று
போல் அவரின் வேகத்திற்கு ஈடுகொடுத்து நடக்கத் துவங்கினேன்.
“எதுக்கு அம்புட்டு காசு கேட்டுவிட்ட?, யாரு அந்த பொம்பள,
சீரே சரி இல்லையே, நீ ஆளு ஒரு மார்க்கமா சுத்துறயே”
அண்ணன் பேசிக்கொண்டே போக எனக்கு ஒரு நொடி ஒன்றும் புரியவில்லை.
நான் நின்றுவிட்டதை உணர்ந்து திரும்பி “வாப்பா, நாயெல்லாம்
தூங்குதுக”
“இல்லண்ணே, காசா? நான் எதுவும் கேட்கலயே”
“அதானப் பார்த்தேன். நல்லவேள, ஒங்கப்பா அந்தாள கேள்வியா கேட்டு
நொங்க எடுக்கவும் ஓடிட்டான் கெழவன். கல்யாண மண்டபத்த சுத்தி எப்பிடியெல்லாம் நேக்கா தொழில் பண்றாய்ங்க பாத்தியா, சின்னப்பயலா
பாத்து கூட்டியாந்து நிக்க வச்சுட்டு அங்கன வந்து, தம்பி விறகு வாங்க வந்துருக்கு,
காசு பத்தல, வாங்கிவரச்சொல்லுச்சுன்னு”
“யாருண்ணே?” எனப்
புரியாதது போல் கேட்டேன் என்றாலும் நான் என்ன சின்னப்பையனா, உடனே புரிந்தது போல் இருந்தது.
அதாவது, என்னை இங்கே நிறுத்தி வைத்துவிட்டு, என் பெயரைக்
கேட்டு அங்குபோய் நான் கேட்டதாகச் சொல்லி வாங்கிப் போகப் பார்த்திருக்கிறார், அந்த
முதியவர், அல்ல, கெழவன். அவரைப் பார்க்கும்போதே ஒரு பதற்றமாக இருந்தது போல் இருந்தது
என்பது இப்போது தோன்றுகிறதே எனத் தோன்றியது.
“அப்பா இருக்காரா மண்டபத்துல”
என் பயத்தின் வெளிப்பாடாக அந்தக் கேள்வி எழுந்தது என்பதைப்
புரிந்து கொண்டவர்,
“ஒனக்காண்டிதான் வெளிலயே நிக்கிறாரு, வா வா”
முருகேசன் அண்ணந்தான்
வீட்டில், தொழுவத்தில் வயலில் என எல்லா வேலையும்
இழுத்துப்போட்டு செய்பவர். வீட்டில் ஓர் அங்கம் போல.அவருடைய தந்தைக்கும் அப்பாவிற்கும்
ஆன உறவைப் போல இப்போது எனக்கும் முருகேசன் அண்ணனுக்கும் நடந்தேறுகிறது என அத்தை அடிக்கடி
சொல்வாள். எல்லா சூழலுக்கும் நிற்பவர். காலையில் வந்தால் இரவுதான் வீட்டிற்குப் போவார்.
நீச்சல் பழகிக்கொடுக்கும்பொழுது ‘பொதக்’ என என்னைக் கைவிட்டு நான் முங்கியபொழுது அலாக்காகத்
தூக்கி சிரித்துக்கொண்டே, “இம்புட்டுக்காண்டி தண்ணியக் குடிச்சாத்தான் நீச்சல் வரும்,
தண்ணிக்கு நாம பயந்தாத்தான் அது நம்மள பாத்துக்கும்ய்யா” என போதித்தவர். .
”வர்றான் பாரு, ஏண்டா நாந்தான் ஒண்ணய சாத்துகுடி பைய்ய மட்டும்தான
போடச்சொன்னேன், எவனோ வந்து கூப்புட்டா அப்பிடியே போய்ருவியா? வெளிக்கி இருக்கப் போகும்போது
வெள்ளரிக்காய திங்காதடானு தான் சொல்லமுடியும், அப்பிடித்தன திம்பேன்னு போனா இப்பிடித்தான்”
வெ என்ற எழுத்தைத் தவிர இரண்டிற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.
ஆனால் இப்படி ஏற்ற இறக்கமாக ஏதாவது சொல்லி தினுசு தினுசாகத் திட்டுவதில் அவருக்கு ஈடு
அவர்தான்.
“இல்..ல, வெறகு”
“என்னாது”
”அட விடுங்க, சின்னப்பய, அவனுக்கு என்ன தெரியும், இந்த மாதிரி
மண்டபத்த சுத்தி இப்பிடி ஆளுக ரூட்டக் குடுத்து அஞ்சு பத்த பாக்குறது இன்னைக்கி நேத்தா
நடக்குது”
“ஆமாடா, நீ அவனுக்கு சப்போர்ட்டோ, என்னடா இப்பிடி திடீர்னு
தெரியாத ஆளு வந்து கூப்புடுறானே, என்னா ஏதுண்டு கேப்பம்னு இல்லாம திப்பிடித்திப்பிடினு
போயிருக்கானே, என்னாமாச்சும் ஆகி இருந்தா ”
”அதான் வந்துட்டாப்ள ல்ல, “ என முருகேசன் உள்ளே அழைத்துக்கொண்டு
போய்விட்டார்.
இரண்டு மூன்று மணி நேரம் ஆனது அந்த மனநிலையில் இருந்து வெளியேற.
ஒரு வித பயம். அந்தப் பெண், அந்த இருள் சூழ்ந்த இடம் என, குறிப்பாக “என்னமாச்சும் ஆகி
இருந்தா” என அப்பா சொன்ன சொற்கள்.
எப்படி யோசித்தும் அவ்வளவு நேரம் எப்படி அங்கு நின்றிருந்தேன்
தனியாக என்று புரியவே இல்லை.
“என்னாவாம், ரோசன பலமா இருக்கு”
தவிட்டு மூடையை இறக்கிக்கொண்டே முருகேசன் கேட்டதும்,
“ப்ச்” என்றேன்.
“அட சொல்லுய்யா, இன்னிக்கு என்னா மேட்டருக்கு வாங்குப்பெத்த”
“படத்துக்குப் போலாம்ட்டு இருந்தோம், ஒலட்டி விட்டாரு”
பேசிக்கொண்டே கொள்ளைப்பக்கம் போய் மாட்டை நிழலுக்கு மாற்றிக்
கட்டிக்கொண்டிருந்த முருகேசன் அண்ணனிடம்
“ஏன்ணே நான் என்ன இன்னும் சின்னப்பயலா”
“யார் சொன்னது, அதான் மீச தாடியெல்லாம் வந்துருச்சே தொரைக்கு”
ஜிவ்வென்று இருந்தது.
தொட்டியில் தவிட்டைப் போட, தண்ணீரில் கட்டி கட்டியாக கொட்டப்பட்ட
தவிட்டைக் கலக்கிக்கொண்டே இருந்தவர் திடீரென யோசனை வந்தவராய், “ஆமா, போனவாரம் கூட்டிப்போய்
சேத்துவிட்டயே டவுன் பள்ளியோடத்துல, படிச்சுருவானா”
முருகேசன் அண்ணனின் மகன் கண்ணனை நானும் ரகுவும் டவுனுக்குள்
நாங்கள் படித்த பள்ளியில் சேர்த்துவிட்டிருந்தோம்.
“செம்ம ஸ்கூல்ண்ணே அது, பிஸ்கட்டு வாத்தியாருனு ஒருத்தரு,
செம்மயா சொல்லிக்குடுப்பாரு, அதெல்லாம் அடிச்சு மேல வந்து எங்கயோ போயிருவான் பாருண்னே”
கட்டியாக மிதந்த தவிடு நீரோடு கலந்து ஆங்காங்கே குமிழ் குமிழாக
மிதந்தன. .
தவிட்டை கலக்கும்
வேகம் குறைத்து மெதுவாக விரவினார். நிமிராமல். அவராகவே தலையை ஆட்டிக்கொண்டார் முருகேசன் அண்ணன். உருண்டு உகுந்த ஒரு சொட்டு நீர், மிதந்து கொண்டிருந்த
ஒரு குமிழை உடைத்துக் கொண்டு நீரில் கலந்தது.
*