கொட்டு

டேய்
டொம்மு செய்வமாடா”

ரகுவின் கண்களில் ஆர்வம் மின்னியது

“அது டொம்மு இல்ல ரெகு, கொட்டு”

 “ஏதோ ஒண்ணு, செய்வமா
இந்தாட்டி”

சித்திரைத் திருவிழா என பேச்சு வரும்முன்னரே கொடியேற்றம்
வந்திருந்தது. கொடியேற்றம் என்ற பேச்சு எடுக்கும்போதே மழை தூறத்துவங்கி இருந்தது.

ஊரில் சதா இடைவிடாது கேட்கும் தறிச்சத்தம் சப்ஜாடாக நின்று
போயிருந்தது. வருடம் முழுக்கக் காத்திருப்பது இந்த திருவிழாவிற்காகத்தான் என்பதுபோல்
தினமும் அதிகாலையில் எழுந்து கூட்டம் கூட்டாமகக் கிளம்பி மதுரை டவுன் நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள்,
வந்துகொண்டிருந்தார்கள்.

எனக்கும் ரகுவிற்கும் இந்தக் கூட்டம் குறித்தோ, பஸ் ஏறி மதுரைக்குள்
போவது குறித்தோ ஆர்வம் எழவில்லை.

மூர்த்தியண்ணன் எங்கிருந்தோ வாங்கி வந்த அந்த உடை, சோழிகள்
எல்லாம் அடுக்கப்பட்ட பல்வரிசை, பிறகு அந்த துருத்தி. கவனம் முழுக்க அதில்தான். நேராக மூர்த்தியண்ணன் வீட்டிற்குப்
போனோம்.

“தண்ணிப்பீய்ச்சப் போறீங்களாண்ணே”

“ஆமாடா, நீயும் பீய்ச்சுறியா”

“எங்கப்பா விடமாட்றாருண்ணே, கூட்டமா இருக்குமாம்ல”

மூர்த்தியண்ணன் ஒவ்வொன்றாக எடுத்து மாட்டி, பெரிய பெரிய சோழிகளால்
அடுக்கப்பட்ட பல்வரிசையை வைத்துக்கொண்டு, கண்ணாடியில் பார்த்தவாறே நாமக்கட்டியை எடுத்துக்
குழைத்து நெற்றியில் வரையத் துவங்கினார்.

“எப்ட்றா, சாமி மானிக்க இருக்கா”

எனத் தன்னை அழகராக பாவித்துக்கொண்டு கேட்டார்.

எனக்கும் ரகுவிற்கும் பார்வை எல்லாம் அவர் பக்கவாட்டில் வைத்திருக்கும்
தோல் பையுடனான துருத்தியின் மேல்தான்.

ஆட்டுத்தோலால் ஆன பை. சற்று பெரிய சுறுக்குப் பை போல இருந்தது.
அதன் முனையைக் குவித்து, அதில் துருத்தியை வைத்து மூடி, பை நிறையத் தண்ணீர். அந்த துருத்தியை
அசைத்து அழுத்தினால் நீர் சல்லெனப் பீய்ச்சி அடிக்கும். 

”எப்பண்ணே வருவீங்க?”

எங்களைப் பார்த்து சிரித்தார்.

“ஆத்துல எறங்கும்போது தண்ணிப்பீய்ச்சனும்டா, தீத்தவாரி, கூட்டம்
அப்பிடியே குளுந்துபோகணும்ல, இது என்ன வெறும்தண்ணியா? சாமியே தீத்தம் குடுக்குற மானிக்க,”

சொல்லிக்கொண்டே எங்களை நோக்கி பீய்ச்சினார். மழைத்தூறல் போல்
நீர்த்துளிகள் விழுந்தன.

பிறகு வான் நோக்கி ஒருமுறை அழுத்தமாக பீய்ச்சி எவ்வளவு தூரம்
போகிறது எனப் பார்த்தார். வானவில் வளைவுபோல ஏறி வளைந்து இறங்கியது நீர்க்கோடு. எனக்கு
அவருடனே போகவேண்டும் போல் ஆசையாக இருந்தது.

ரகு மீண்டும் கேட்டான்.

“எப்பண்ணே வருவீங்க”

“எதுக்குடா, இந்த தோல்பைக்குத்தான, நைட்டு லேட் ஆகும்டா,
ஆத்துல எறங்கினதும் கூட்டம் அப்பிடியே லாத்தலா சுத்தும். தள்ளாகுளம், மண்டாகப்படியப்
பக்கம் போய்ட்டு சுத்திட்டு வருவேன். காலைல வாங்கடா, தர்றேன்”

ஒரு நாள் முழுக்கக் காத்திருக்க வேண்டும் என்பதுதான் அப்போதைய
செய்தி.

நாங்கள் பார்க்கப் பார்க்க ஜல் ஜல்லென சலங்கையோடு தண்ணீர்ப்பீய்ச்சப்
போய்க்கொண்டிருந்தார் மூர்த்தியண்ணன்.

பரபரப்பாக கொட்டு செய்யும் வழிமுறைகளுக்கு ஆயத்தமானோம்.

“கொட்டாங்குச்சிய கரெக்ட் பண்ணுவம்டா சுந்தரபாண்டி கடைல”

“கொட்டாங்குச்சி வேணாம்டா இத்தினிக்காண்டா இருக்கும்டா, நல்லா
படத்துல காட்டுற மானிக்க பெரிய கொட்டா செய்வம்டா ரகு”

இருவரும் கொட்டு செய்வதில் விற்பன்னனான பூரியை நோக்கிப் போனோம்.

எங்கள் வீட்டைக் கடந்துதான் போகவேண்டும். அப்பா திண்ணையில்
அமர்ந்திருப்பார் என்பதால், ரகு சற்று முன்னால் நடந்து போவதாகவும் நான் பின்னால் வரவேண்டும்
என்று சொல்லிச் சென்றான்.

அவன் கடந்து போய்விட, நான் எங்கள் வீட்டிற்கு எதிர்பக்கமாக
பார்த்துக்கொண்டே  நடந்..

“டேய்”

அக்காவின் குரல்தான்.

“எங்கடா போற, அம்மா தேங்காச்சில்லு வாங்கிட்டு வரச்சொல்லுச்சு”

“ஒன்னயத்தான சொல்லுச்சு”

என நடந்துகொண்டே பதில்சொல்லும்போதே அப்பாவின் தலை தட்டுப்பட்டது

“ஏண்டா, காலங்காத்தால எங்கடா போய்ட்டு இருக்க”

எப்படித்தான் கண்டுபிடிப்பாரே, மிகச்சரியாக வலப்பக்காமத் திரும்பிப்பார்த்தார்.

அங்கே திருவாளார் ரகு நின்று திரும்பிப்பார்த்துக்கொண்டிருந்தான்.

“ஓஹோ, ”

விடுவிடுவென போய்விட்டான்.

என்ன நினைத்தாரோ,
“போடா, அவென் போய்ட்டான் பாரு”

உண்மையிலேயே போகச் சொல்கிறாரா, அல்லது நான் என்ன செய்கிறேன்
என சோதிக்கிறாரா எனும் குழப்பத்தில் நிற்க, “சரி போடா” என அக்கா சொல்லவும் கிளம்பினேன்.

தெரு முக்கில் திரும்பியவுடன் ரகு நின்றிருந்தான். ஒருமுறை
திரும்பி வீட்டைப் பார்க்க அப்பா பார்த்துக்கொண்டே நின்றிருந்தார். சட்டென அவர் கண்களுக்குத்
தப்பி, ரகு மற்றும் பூரியுடன் இணைந்துகொண்டேன்.

அவர்கள் பேசிக்கொண்டதில் இருந்து, பூரி பிகு செய்கிறான் எனப்
புரிந்தது.

“ஏண்டா ஊரே திர்ழாக்குப் போயிருச்சு இப்ப வந்து கொட்டு செய்ஞ்சுக்குடு
நொட்டு செஞ்சுகுடுன்னு”

“டேய் வலம்புரிநாதா, ப்ளீஸ்டா, எப்பிடின்னாச்சும் சொல்லிக்குடுடா”

வலம்புரி என்ற விளிப்பில் விழுந்தான் பூரி. எப்போதும் பூரி,
கெழங்கு என அழைக்கும் ரகு வலம்புரிநாதன் எனும் முழுப்பெயரைச் சொன்னது எனக்கும் அந்நியமாகத்
தோன்றியது. ஆனால் அதுதான் வேலை செய்தது.

பூரி எங்களைவிட மூன்று நான்கு வருடங்கள் மூத்தவன். ஆனால்
எல்லா வகுப்பிலும் இரண்டு ஆண்டுகள் என அடித்தளம் வலுவாக அமைக்குப்பொருட்டு தங்கிப்படித்து
எங்களுடனும் படித்து  பின்னர் நாங்கள் முன்னேறி
ப்ளஸ் டூ வந்துவிட, அவன் பத்தாவது பாதியிலேயே நிறுத்தி வேலையைப் பார்க்க வந்துவிட்டான்.
ஆள் கரடுமுரடான உடற்கட்டு.  

“சரி, போய் தொலிய எடுத்துவா..ஒங்க வீட்ல சல்லட இருக்கா”

ரகு உடனே என்னைப் பார்த்தான்.

 “மாவு சலிக்கிற சல்லடடா”  என்ற பூரியை நான் பார்க்க,

“அதெல்லாம் இவென் வீட்ல இருக்குடா பூரி, எடுத்துவருவான்,
நீ சொல்லு” என்றான் ரகு.

அதன்பிறகு அவர்கள் பேசுவது எனக்கு அவ்வளவாக கேட்கவில்லை.
நினைப்பெல்லாம் வீட்டில் இருந்து சல்லடையை எப்படி எடுத்துவருவது என்பதிலேயே இருந்தது.

“கொட்டாங்குச்சி?” என நான் கேட்க பூரி சிரித்தான். ரகுவும்
அவனோடு சேர்ந்துகொண்டான்.

“அதெல்லாம் ஒந்தம்பி அடிக்கிறதுடா, சரி போய் எடுத்துட்டு
வாங்கடா ஒடனே,”

“ஒடனேவா, டேய் பூரி, நாளைக்குத்தாண்டா மூர்த்தியண்ணன் தருவாப்ள”

“நாளைக்க்கா..” என இழுத்தான்.

ஒருவழியாக சுமூகப் பேச்சுவார்த்தையில் முடிந்தது. மூர்த்தியண்ணன்
கொடுக்கும் தொலிப்பைய்யையும் ஒரு சல்லடையையும் பூரியிடம் கொடுக்க வேண்டும். அவன் கொட்டு
செய்துதருவான். செய்யும்பொழுதே எங்களுக்கும் சொல்லித்தருவான் என பேசி முடித்துக் கிளம்பினோம்.

அடுத்து, சல்லடையை வீட்டில் இருந்து எடுப்பதற்குள் எப்படியும்
ஒரு பெரிய சண்டை திட்டு என எல்லாம் சேரும். ஆனாலும் எடுத்து அதைக் கொட்டாக மாற்றியவுடன்
விதவிதமாக கொட்டடிக்கலாம் எனும் நினைப்பு மற்றவற்றை மறக்கச் செய்தது.

மதியம் ,தெருவே வெறிச்சோடிக்கிடந்தது. எல்லோரும் அழகர் ஆற்றில் இறங்குவதைப்
பார்க்கப் போய்விட்டார்கள். தெருவின் வடக்கு எல்லைக்கு வந்து, தறிக்கம்பெனிக்கு எதிராக
பூட்டிவைக்கப்பட்டிருந்த வீட்டின் படியில் அமர்ந்தோம்.

மப்பும் மந்தாரமுமாக இருந்தது வானம்.

“நாளைக்கும் மழ பெய்யுமாடா “

“ஏண்டா”

“கெழங்கு என்னா சொன்னான்னா, அந்த தொலிப்பைய்ய பிரிச்சு, ஆட்டுத்தோல
கொஞ்சமா காயவச்சு, அந்த பச்ச வாடையோட இழுத்துக் கட்டி நல்லா காயவைக்கணும். அப்பத்த்தான்
கொட்டு செவுண்டு அதிரும்னான்”

சொல்லிக்கொண்டிருக்கும்போதே மழை அடித்து ஊற்றத்துவங்க, சட்டென
எழுந்து வீட்டின் சுவரை ஒட்டி நின்று கொண்டோம்.

தலைக்கு மேலிருந்த குழாயிலிருந்து நீர் வளைந்து கொட்டத் துவங்கி
இருந்தது. அது விழும் இடத்தில்  ஒரு கல்லை வைத்திருந்தார்கள்..
நீர் அதில் பட்டுத் தெறித்து ஓடிக்கொண்டிருந்தது.

“இன்னைக்கோட மழ நின்றும்னு எங்கம்மா சொல்லுச்சுடா” ரகு சொல்லிக்கொண்டே
வானை நோக்கினான். அவன் குரலில் அவ்வளவு நம்பிக்கை எல்லாம் இல்லை. நாளையும் பொழிந்தால்
கொட்டு செய்யமுடியாது என்ற கலக்கம் கலந்திருந்தது.

சட்டென என் தோளைத்தொட்டவன் எதிரே பார்க்கச் சொன்னான்.

தறிக்கம்பெனியின் ஜன்னலில் யாரோ அசைவது தெரிந்தது. வியப்படைந்தோம்.
காரணம் வெளியே பெரிய பூட்டாகப் பூட்டப்பட்டிருந்து கம்பெனி வாசல்.

“பூட்ன கம்பெனில எவெண்டா இருக்கான்”

நான் கிசுகிசுப்பாகக் கேட்க, ரகு உன்னிப்பாகப் பார்த்தான்

“மதுத்தியேட்டர்ல தலை இல்லாத முண்டம் படம் பாத்துச்சுன்னாண்டா
எங்கண்ணென்”

”ஒங்க அண்ணென் பல்பொடிய போட்ருக்காண்டா ஒங்கிட்ட” ரகு சொல்லிக்கொண்டே
என்னை குனிந்து கொள்ளச் சொன்னான். நான் மழையில் நனைந்திடாதவாறு ஒதுங்கி அமர்ந்தேன்.

ரகு எதிரே ஓடி தறிக்கம்பெனியின் கதவிற்கு அருகே போய் நின்றான்.
அந்த அரைநொடியிலேயே அவன் சட்டை திட்டுத்திட்டாக நனைந்துவிட்டிருந்தது. இப்போது ஏதோ
சிஐடி ஜெய்சங்கர் போல சுற்றும்முற்றும் பார்த்துக்கொண்டே அந்த ஜன்னலை சமீபித்தான்.
அவ்வப்போது என்னை நோக்கி சத்தம் போடாதே என்பதுபோல் ஆட்காட்டி விரலை உதட்டின் மத்தியில்
வைத்து அச்சுறுத்தினான்.

நான் அவனையும் ஜன்னலையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

இப்போது எனக்கு ஜன்னலின் உள்ளே சரியாகத் தெரியவில்லை என்பதால்
எழ முற்பட்டேன். ரகு அங்கிருந்து முறைக்க, மீண்டும் அமர்ந்துகொண்டேன். மழைநீர் மண்ணை
சேர்த்து தெறித்து கைலி எல்லாம் சேறாகி இருந்தது.

இப்போது ரகு ஜன்னலுக்குக் கீழே குனிந்து எட்டிப்பார்க்கத்
தயாராக நின்றிருந்தான்.

நான்கு மடக்குக்கதவுகள் கொண்ட ஜன்னல் அது. கீழே இருக்கும்
இரண்டு கதவுகளும் அடைக்கப்பட்டிருக்க மேலே ஒரு கதவு மட்டும் கொஞ்சமாக திறந்திருந்தது.

கீழே அடைப்பட்ட ஜன்னல்கதவில் ஒரு சிறிய துளை இருந்தது. அதில்
கண்ணை வைத்துப்பார்த்தான் ரகு. சற்று நேரம் நின்றிருந்தவன் அப்படியே பின்னோக்கி குனிந்து
இந்தப்பக்கமாக வந்தான். தொப்பலாக நனைந்திருந்தான்.

“என்னடா?”

ரகு பதில் சொல்லாமல் சுற்றும் முற்றும் பார்த்தவன்,

“கும்ம்ம்மிருட்டா இருக்குடா ஆனா யாரோ என்னமோ செய்யிறாங்கடா”

கொஞ்சமாக மழை நிற்க, ரகு என்னை இழுத்துக்கொண்டு அங்கிருந்து
நகர்ந்தான். தெருவின் நடுவில் இருக்கும் ரேசன் கடை மரத்திற்கு அடியில் நின்று கொண்டோம்.
இப்போது தெருவின் இருபக்கமும் வீடுகளில் மழை நீர் மாடியில் இருந்து குழாய் வழியே வடிந்து
கொண்டிருந்தது.

தறிக்கம்பெனியில் வேலை பார்க்கும் ஆறுமுகம் அண்ணன் மற்றும்
வெளியூரில் இருந்து புதிதாக எங்கள் ஊருக்கு பிழைக்க வந்த தனம் அக்காவிற்கும் ஒரு இது
என பேச்சு இருக்கிறது. ரகு அதைத்தான் நேரடியாக சொல்லத்தெரியாமல் சுற்றிவளைத்துக்கொண்டிருந்தான்.

“ஆறுமுகம் அண்ணெனும் இன்னைக்கித் தண்ணிப் பீய்ச்ச போனாப்ளயாடா
காலைல?”

இல்லை என்பதுபோல் தலையாட்டினேன்.

“அப்ப அந்தாளுமானிக்கத்தாண்டா இருந்துச்சு. ஆனா அந்தாளுக்கு
ஏதுடா ஜிம்பாடி”

“போனவருசம் போனாப்ளயேடா, அங்கன கூட ஜிம்முக்கு எதுத்த வீட்ல
ஏதோ கண்ணக்காட்டுனாருண்டு பஞ்சாயத்து ஆச்சே”

”அப்ப அங்க ஆத்துல எறங்குன அன்னிக்கு இங்க இந்தாளு தறில ஏறிட்டான்
போல”

சிரித்தோம்.

எங்களை முட்டுவது போல் சைக்கிள் டயரை உரசிக்கொண்டு வந்து
நிறுத்தினான் சரவணன். மழையில் நனைந்த சைக்கிள் டயர் புத்தம் புதிதுபோல் இருந்தது.

வயிற்றுப்பகுதிக்குள் கையை விட்டு சட்டைக்குள்ளிருந்து எடுத்தான்.

 “கொட்டாங்குச்சி
கொட்டு மாப்ள”

ஆட்டுத்தோலின் ஈரம் கலந்து வாசம் காற்றில் மிதக்க, மழை லேசாகத்தான்
தூறியது ஆனாலும் அதில் நனைந்துவிடாதபடி கையால் மூடிக்கொண்டே கொடுத்தான்.

காலையில் இருந்து என்ன என்னவோ கற்பனை செய்துவைத்திருந்தேன்.
விரல்களால் எப்படித் தட்டவேண்டும் என்னமாதிரியான சத்தங்கள் எழுப்பவேண்டும் என ஆசை ஆசையாக
யோசித்து வைந்திருந்தேன். ஆனால் வாங்கித் தட்டும்போது விரல்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டன.
ஒரே ஒரு தட்டுகூட லயத்தில் தட்டமுடியவில்லை.

 “இன்னும் காயலடா,
சவுண்ட சொதக்கு சொதக்குனு வருது”

என்னை முறைத்துகொண்டே வாங்கிய சரவணன் ஒருமுறை துடைத்துவிட்டு
அடித்தான். நான் கற்பனையில் நினைத்த அதே அடி. அவன் விரல்கள் அனாயசமாக தாவித்தாவி வாசித்தன.
மீண்டும் ஆசை வர கைய நீட்டினேன்.

“ஈரம் கீரம்னு, ஒனக்கு வெரலே மடங்க மாட்டேங்குது”

“சர்றாப்பா” என வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக அவன் அடித்ததுபோலவே
விரல்களை உரசி உரசி அடிக்க, பிடிபட்டது இப்போது. ஆசை இன்னும் அதிகமானது.

“போதும்டா” எனப் பிடிங்கிக்கொண்டு போனான்.

“நீ ஏண்டா அடிக்கல ரகு”

“ம்ம்” என்றவனிடம், நாளைக்கு ரெண்டா செஞ்சுத்தரச் சொல்வம்டா,
ஒண்ணு கொட்டாங்குச்சில ஒண்ணு சல்லடை வட்டத்துல ஒண்ணு, என்னா சொல்ற”

என்னை உற்றுப்பார்த்தவன்,

“அது ஆறுமுகம்னா அங்க தனமும் கெடக்கனுமே, போய்ப்பாப்பமா”

“போடா லூசுப்பயலே, கருமத்தப்போய்க்கிட்டு, எப்பிடியும் போய்த்தொலையுறாய்ங்க
விட்றா”

மீண்டும் மழை பெரிதாக பொட்டுவைக்க, “பசிக்கிதுடா” என சொல்லிக்கொண்டே
நான் தெற்கு நோக்கி ஓடினேன்.

ரகு வடக்குப்பக்கமாகப் போய்க்கொண்டிருந்தான்.

இரவு ஒன்பது மணி வாக்கில் மூர்த்தியண்ணன் வீட்டில் போய் கேட்க

“அவென் எங்கடா இப்ப வரப்போறான், விடியக்காலைல ஆகிரும், ஆமா
அவென் வயசென்ன ஒங்க வயசென்ன, அவனத் தேடி இந்நேரத்துக்கு வந்துருக்கீங்க”

மூர்த்தியண்ணின் அம்மா ஏதோ பேசிக்கொண்டே உள்ளே போக

தெருவில் ஆள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. எல்லோரும் ஆற்றில்
இறங்கும் வைபவம் பார்த்துவிட்டு, கூட்டத்தில் சங்கமித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார்கள்.
வழக்கதைவிடவும் தெருவிளக்குகளின் மஞ்சள் வெளிச்சம் அதிகாமா இருந்ததுபோல் பட்டது.

“சர்றா அப்ப காலைல வந்து வாங்கிருவோம்” என்று ரகு நாளை முடிப்பதுபோல்
பேசினான்.

“அப்போது ரகு கிசுகிசுப்பாக ‘தனம்’டா” என்றான்.

அந்த சோடியம் விளக்கின் மங்கலான மஞ்சளை அப்பிக்கொண்டு எங்களைக்
கடந்த தனம் ஒரு நொடி நின்று

“கொட்டு செய்யக்கூடவா தெரியாது ஒங்களுக்கு” எனச் சிரிக்க,

ரகு “இந்தா இவனுக்குத்தான் கொட்டாங்குச்சில வேணும்னு கேட்டான்,
சல்லடைன்னா நானே செஞ்சிருவேன்ல”

அடப்பாவி என்பதுபோல் நான் ரகுவைப் பார்த்தேன். அவன் சட்டை
செய்யவில்லை.

                               றுநாள் காலை ஏழுமணிக்கெல்லாம் எழுந்து போய் மூர்த்தியண்ணனிடம்
தொலிப்பைய்யை வாங்கவேண்டும் என படுக்கப்போயிருந்த என்னை ஆறு மணிக்கே எழுப்பினாள் அக்கா.

“ரெகு வந்துட்டாண்டா, பாத்துப்போ, சும்மா தலையக்காட்டிட்டு
வந்துரு, என்னத்தயாச்சும் ஒளறாதீங்கடா”

ஒன்றும் புரியாமல் விழிக்க, ரகு உள்ளே வந்தவன்,

“பூரி தூக்குப்போட்டாண்டா,  நேத்து மதியம் தறிக்கம்பெனில”

வலம்புரிநாதன் வீட்டுவாசலில் கொட்டுச்சத்தம் கேட்கத் துவங்கியது. 

*

Previous article
Next article
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை

ஓவியம்

சிற்பம்

குழி