Homeசிறுகதைகள்விழுங்கிய கவளம்

விழுங்கிய கவளம்

காட்ல எரியுரப்ப வீட்ல எரியக்கூடாதப்பா”

வெண்ணைத்தாழியில் காப்பியை நிரப்பி எடுத்து வந்திருந்தார் சேது. அந்த இடத்தில் மிச்சம் ஏதுமன்றி துக்கத்தின் மிடறுகள் விழுங்கப்பட்டிருந்தன. யாருக்கும் உடலில் திராணி இல்லை என்பது போல் அமர்ந்திருந்தார்கள். ஈரம் இன்னும் திட்டு வைக்க ஆரம்பித்திருக்கவில்லை. தரையெங்கும் சொதசொதப்பு. இதுவரையில் இங்கே இவ்வளவு ஈக்களைப் பார்த்ததில்லை.  நடக்க நடக்க கால்களில் அப்பின. பார்வதியம்மாள் இனி இந்த வீட்டில் இல்லை என்பதற்கான ஈரம் சொட்டச் சொட்ட நின்றிருந்தார்கள் பார்வதியம்மாளின் மகள்கள் இருவரும். பார்வதியம்மாளின் மருமகள், ரேணுகா,‘முறிச்சென்று’ காய்ந்த புடவையில், தலையில் ஈரத்துண்டை சுற்றி இருந்தாள்.  நேராக சேதுவிடம் வந்து ஒரு டம்ளைரை நீட்டியவள், வாங்கிக்கொண்டு மாடிப்படியில் அமர்ந்து நிதானமாகப் பருகத் துவங்கினாள். ஒருவித நிம்மதி அவள் முகத்தில் குடிகொண்டிருந்தது போல் இருந்தது.

இதே மாடிப்படியில்தான் சென்ற வாரம் அவ்வளவு பெரிய சண்டை நடந்திருந்தது. அதை சண்டை என்று சொல்லிவிடமுடியாது. ரேணுகாவின் கணவன் வெங்குடு அவளை அடித்த நிகழ்வு என்று சொல்வதே சரி.  ஏணி வாங்கியவர்கள் திருப்பிக் கொடுக்கவில்லை என அப்பா சத்தம் போட்டுக்கொண்டிருக்க, வாங்கிப்போகலாம் என வந்தவன், ரேணுகாவின் நிலையை பார்த்து அதிர்ச்சி விலகாமல் அவள் கணவனைப் பிடித்து இழுத்து விலக்குவதற்குள் பெரும்பாடாகியிருந்தது.

“ஏண்ணே, என்னணே இது ச்செய், இப்பிடி கையெல்லாம் ஓங்கிட்டு, நீ உள்ள போக்கா மொதோ”

நான் அவ்வளவு சத்தமாகச் சொல்லியும் அத்தனை அழுத்தமாக நின்றிருந்தாள் அங்கேயே. அதுதான் வெங்குடுவை மேலும் மேலும் சீண்டியது போல் இருந்தது. என் பிடியை உதறிக் கொண்டு எகிறி எகிறிக் கத்தினார். நான் பிடியை இறுக்கி வெளியே இழுத்துப்போனேன்.  டீக்கடையில் வெங்குடு அண்ணன் காரணத்தைச் சொல்லும்வரையில் அவர் மீது ஒருவித ‘அட இவ்வளவுதானா நீயும்’ என்ற மனநிலையில் இருந்தேன். அவர் சொன்னதும் கொஞ்சமாக அவரின் கோபத்தை உணர முடிந்தது. ’வெளியே கூட்டிக்கொண்டு போ, எங்காவது ஓட்டலில் போய் சாப்பிடலாம், ஒரு பகல் பொழுதில் வெளியில் சுற்றலாம்’என இந்த இரண்டு வாரங்களாக நச்சரித்தார்களாம். அம்மாவை இப்படிப் படுக்கையில் வைத்துக்கொண்டு என்ன ஓட்டல் வேண்டிக்கிடக்கிறது இவளுக்கு, தன் மனநிலையைப் பற்றி கொஞ்சமாவது யோசிக்கிறாளா’ எனப் புலம்பினார். பாவமாக இருந்தது. கடந்த மூன்று நான்கு மாதங்களாக பார்வதியம்மாளுக்குக் கொஞ்சம் உடல்நிலை சரி இல்லைதான். ஆனால் இறந்துவிடுவார் எனும் அளவிற்கு எல்லாம் ஒன்று இல்லை என்பதுபோல் வழக்கமான இயல்போடுதான் தெருவில் நடமாடுவதும் அக்கம் பக்கத்தினரிடம் அன்றாடம் பேசுவதுமாக இருந்தார். கடந்த சில வாரங்களாகப் படுத்தப் படுக்கை, நேற்று இரவோடு அவரின் சகாப்தம் முடிந்தது.

சிறுவயதிலேயே கணவனை இழந்து, இரண்டு மகள்கள் ஒரு மகன் என அனைவரையும் இழுத்துப்பிடித்துக் கரை சேர்த்தவர் என பார்வதியம்மாளைப் பற்றிப் பெருமையாகச் சொல்வார்கள்.

நானும் வெங்குடு அண்ணனும் செஸ் ஆடுவதன் மூலம் சற்று நெருக்கமாக இருந்தோம். பெரும்பாலும் அவர் வீட்டுத் திண்ணையில் தான் அமர்ந்து ஆடுவோம்.  ஒருசில ஆட்டம் எல்லாம் பிற்பகலில் ஆரம்பித்து மாலை வரை நீளும். நான் ஏதேனும் சிறந்த நகர்த்தைச் செய்துவிட்டால் சட்டென நிமிர்ந்து என்னைப் பார்த்துவிட்டு மிகச்சன்னமாக ‘ஓஹோ’ என்பார். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும். சொல்லப்போனால், செஸ் பயிற்சி மைய்யம் வைத்து அதையே முழுநேரத்தொழிலாக நடத்த வேண்டும் என்றுதான் விரும்பினார். என்ன காரணத்தினாலோ அதை இன்னும் செய்யாமல் இருக்கிறார். வார இறுதி நாட்களில் ’கோல்ச்சா காம்ப்ளக்ஸ்’ அருகில் இருக்கும் வீடுகளில் சென்று வகுப்பெடுக்கிறார். மற்றபடி அவர் அழுத்துக்கொள்வது போல “இந்த மருதைல எவெண்டா இதெல்லாம் பெருசா பாக்குறான்” என்பதுபோல் தான் செஸ் ஆட்டத்திற்கான வரவேற்பு இருந்தது. நானும் அப்படித்தான் கிரிக்கெட்டே கதி என்று இருந்தவன் தான். எப்போது எப்படி வெங்குடு அண்ணனோடு சேர்ந்து இந்த ஆட்டத்தைப் பழகி இப்படி அவருக்கு எதிராய் அமர்ந்து ஆடும் அளவு கைதேர்ந்தேன் என்பது புரியவில்லை. ஒருவேளை அவர் முதன்முதல் சொல்லிக்கொடுத்த அந்த நான்கே நகர்த்தலில் எதிராளியை வீழ்த்தும் வித்தையில் கவரப்பட்டு அதை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்து, ராணிக்கு முன்னர் இருக்கும் சிப்பாய், பின்னர் ராணி, மந்திரி இவற்றை முன் கொணர்ந்து எதிரியுடைய ராஜாவின் பக்கவாட்டில் இருக்கும் சிப்பாயை வெட்டி ராணியை ராஜாவுக்கு அவ்வளவு அருகில் நிற்க வைத்து, ராஜா அந்த ராணியை எதுவும் செய்ய இயலாதவாறு பின்புலமாக மந்திரி ஒரே நேர்கோட்டில் நிற்க, ஆட்டம் முடிந்தது.  இதை செயல்படுத்தி எதிராளியை நான்கே நகர்த்தலில் வீழ்ந்தும்போதெல்லாம் பேருவகை கொண்டது மனம். ஒருவேளை எதிராளி இந்த வியூகத்தை ஆரம்பித்தால் அதை எப்படித்தடுப்பது என்பதையும் வெங்குடு அண்ணன் சொல்லிக்கொடுக்க, அந்த ஆட்டம் பிடிபட்டது. பிடிபடபிடிபட மிகப் பிடித்துப்போனது. அப்பா சொல்லும் ‘ஆட்டத்திற்கு அடிமையாவிட்டேன்’ சொற்பதத்தின் மீது நம்பிக்கை இல்லை. என்றாவது ஒருநாள் அமர்ந்து ஆடுவது. எதிராளியின் பலமும் ஆட்டத்திறனும் பொறுத்து அன்றை நாள் முழுக்க அமர்வது என்பதை அடிமையாகிவிட்டோம் என போதைப் பொருட்களுக்குச் சொல்வது போல் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் ஒரு நீண்ட நெடும் ஆட்டத்தை வென்று நிறைவுசெய்யும்பொழுதில் ஏற்படும் போதை அலாதியானதுதான். ஆழ்ந்த உறக்கத்தில் சிப்பாய் ஒவ்வொரு கட்டமாக முன்னேறி ராணியாக மாறும் படிமம் பலமுறை வந்துள்ளது. இன்னமும் வரக்கூடும்.

 மும்முரமன செஸ் ஆட்டத்தின்போது திண்பதற்கு முறுக்கோ அதிரசமோ ஒரு தட்டில் வைத்து எங்களுடைய ஆட்டத்தைப் பாதித்து விடாதவாறு அருகில் வைத்துவிட்டு மாடிப்படியில் அமர்ந்து கொள்வார்,பார்வதியம்மாள்.

காய் நகர்த்திவிட்டு அவருடைய நகர்த்தலுக்குக் காத்திருக்கும் நொடிகளை நன்கு அறிந்தவர் போல், “ஏண்டா ஒங்கம்மாக்கு இப்ப பரவால்லியா” போன்ற தகவல்களை வாங்கிக்கொள்வார்.

“இனிமே என்ன இருந்து என்ன ஆகப்போகுது.  விழுங்குன கவளத்துக்கு ருசி ஏது?”

எவ்வளவு உண்மை, இல்லையா!. ஆம் ஒன்று முடிந்துபோனபிறகு அதைப்பற்றிப் பேசி அங்கலாய்க்க ஒன்றுமே இல்லை. விழுங்கிவிட்ட பிறகு ருசி ஏதுமற்ற பண்டமாக ஆகிவிடுவது போலத்தான், கடந்துவிட்ட பிறகு அதன் நிலை.

ரேணுகா காப்பியைக் குடித்து விட்டு மாடிப்படியில் இருந்து எழுந்து

உள்ளே சென்றுவிட, நான் அதற்காகவேக் காத்திருந்தது போல் அங்கு போய் அமர்ந்துகொண்டேன். சாவிற்கு வந்தவர்களில் பேர்பாதி ஆட்கள் சுடுகாட்டிற்குப் போயிருந்தார்கள்.  இங்கேயே வாய்க்கரிசி போட்டவர்கள், கிளம்பிவிட்டார்கள். நெருங்கிய உறவினர்கள் என சிலரின் செருப்புகள் மட்டும் கிடந்தன படிக்கு அருகே.

உள்ளே இருந்து வெறும் பாத்திரத்தோடு வந்தார் சேது.

“அட நீ என்னப்பா இங்கன ஒக்காந்துட்ட, ஒனக்குக் குடுக்கலயே”

“அய்யய்ய”

சட்டென யோசிக்காமல் வந்துவிட்டது அந்த சொல். சாவு வீட்டில் சாப்பிடவோ குடிக்கவோ வேண்டும் என நினைக்கும்போதே எனக்குள் இருந்து வந்துவிட்ட உணர்வுதான் அந்த சொல். சேது ஏற இறங்கப் பார்த்தார். சமாளிக்கும் விதமாக,

“இன்னும் எம்புட்டு நேரம் ஆகும்ண்ணே”

மணிக்கட்டைப் பார்த்தார். “அம்புட்டுத்தான் வர்ற நேரந்தான். ”

வெளியே வாளியில் தண்ணீரை வைத்திருந்தார்கள். சுடுகாட்டில் இருந்து வெங்குடு வந்தவுடன் பார்த்துப் பேசிவிட்டுக் கிளம்பவேண்டும் என்று அமர்ந்திருந்தேன்.

“போடா போய் குளிச்சிட்டு சாப்புடு, நைட்டுல இருந்து இங்கதான் சுத்திட்டு இருக்க”

ரேணுகா அக்காவின் குரலில் ஒரு தீர்க்கம் தென்பட்டது.

“ல்ல, அண்ணன் வந்துட்டா பார்த்துட்டுப் போலாம்னு”

“வந்தா இங்கதான இருப்பாரு, அப்பறம் பாத்துக்கலாம், போ, உள்ள என்னமோ பேசிட்டு இருக்காங்க நேரா வந்து உங்கிட்டத்தான் வேலைய சொல்வாங்க, சத்தமில்லாமக் கிளம்பு”

சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள்.  இதுவரை என்னிடம் இப்படி எல்லாம் ரேணுகா அக்கா பேசியதில்லை. அமர்ந்து விளையாடிக்கொண்டிருக்கும்போது வெங்குடு அண்ணனிடம் ஏதேனும் கேட்பார், அவர் ஆட்டத்தின் போக்கில் எதையேனும் சொல்லி கேள்விகளை வெட்டி முறிப்பார். என்னைப் பார்த்து லேசாக சிரித்துவிட்டுப் போவார். அந்த சிரிப்பில் கொஞ்சம் வெறுப்பும் சங்கடமும் கலந்தே இருக்கும் என்பதால் நானும் பெரிதாக அவரிடம் எதுவும் பேசுவதில்லை.

ஏனோ சம்பந்தமே இல்லாமல் “இனி செஸ் எல்லாம் முன்பு போல் இங்கு அமர்ந்து ஆட முடியாது” எனத்தோன்றியது.

சரி எழுந்து போய்விடுவோம் எனும் குழப்பத்தில் எழ நல்லவேளையாக வெங்குடுவும் இன்னும் சிலரும் வந்து சேர்ந்தார்கள். வெங்குடுவின் முகமே மாறிப்போயிருந்தது. அவர் வந்தபிறகு என்னவெல்லாமோ பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன். அவரும் சரி நானும் சரி ஒரு சிறு பார்வை பார்த்துகொண்டதோடு சரி, நிறைவாகிப் போனது.

கருமாதி, படையல் என ஒருமாதிரி ஓடியது வெங்குடுவின் வீடு. அந்த துக்க வீட்டின் வாசம் எனக்கு ஒவ்வாமையானது என்பதை இரண்டாம் நாளில் இனம்கண்டு, போவதைத் தவிர்த்தேன்.

                                 ரு மாதத்திற்கும் மேல் ஆகிவிட்டிருந்தது செஸ் ஆடி. கூடத்தில் அமர்ந்து தனியாக ஆடிக்கொண்டிருந்தேன். வெங்குடு அண்ணன் கொடுத்திருந்த  ’கேரி காஸ்ப்ரோவ்’ ஆட்டங்களில் ஒன்றைத் தனியாக ஆடிக்கொண்டிருந்தேன். “நாஞ்சொல்லல பைத்தியம்தான் ஆவான்னு” என அப்பா சொல்லிகொண்டேக் கடந்தார். வெங்குடு அண்ணனிடம் தோற்ற ஆட்டம் ஒன்றின் நுட்பம் இந்த காஸ்ப்ரோம் நகர்த்தலில் கண்டு, இன்னொரு முறை ஆடினால் எளிதாக வென்று விடலாம் என நினைத்துகொண்டேன். மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் ரேணுகா அக்காவைத் தவிர்க்கும் பொருட்டு அங்கு போவதே இல்லை. சரி நாந்தான் போகவில்லை, அவர் ஒருமுறை கூட அழைக்கவில்லை, தேடி வரவில்லையே எனவும் தோன்றியது. அம்மாவை இழப்பது துக்கம்தான். அதற்காக இனி அவ்வளவுதானா எல்லாமே எனத் தோன்றியது. சதுரங்கக் காய்களை மெதுவாக குவித்து பெட்டியில் போட்டவன் அப்படியே அம்மாவிடம் சென்றேன்.

”சாப்ட்டியாடா”

“எப்பப்பாரு சாப்பாடுதானாம்மா, இன்னைக்கு ஒரு கேம் பழகிருக்கேன், வெங்குடுவ அசால்ட்டா ஜெயிச்சிருவேன்”

“பார்வதி பொண்ணுங்கல்லாம் போயாச்சா, ரேணுகா ஆளையேக் காணமே இந்தப்பக்கம்”

“தெர்லம்மா, அந்த அக்காவப் போய்க்கிட்டு”

அம்மா என்னை ஒரு முறை பார்த்துச் சிரித்தாள். “பாவம்டா ரத்தசொந்தம் இல்லாத ஒருத்தரோட பீமூத்தரம் அள்ளிப்போடுறதுன்னா என்னான்னு நெனச்ச, நாளைக்கு ஒனக்கு ஒருத்தி வந்து அவங்க அப்பாவுக்கு இப்பிடின்னா நீ அள்ளுவியா”

அம்மா சொல்லும்போதே குமட்டிக்கொண்டு வந்தது. அம்மா என்று கத்தினேன். குளித்துவிட்டு சாப்பிடுவதாகத்தான் இருந்தேன். ஏனோ ஒருவித உமட்டலும் கசகசப்பு சேர்ந்துகொண்டது. வெளியே எங்காவது போய்விட்டு வரவேண்டும் போல் இருந்தது.

என்றைக்கும் இல்லாமல் வெய்யில் மிகக் கடுமையாக இருந்த உணர்வு. பாதித் தெருவிலேயே மீண்டும் வீட்டிற்குப் போய் குளித்துவிடலாம் எனத் தோன்றியது. வெங்குடு அண்ணனின் குரல் கேட்டது.  கையில் வாழை இலைக் கட்டை சுருட்டி வைத்திருந்தவர்,  “வாடா சாப்டலாம்”.

அம்மாவிடம் காட்டிய அதே உணர்வை, உமட்டலை, அய்யய்ய என்ற சொல்லை எல்லாம் கவனமாகத் தவிர்த்து, “இப்பத்தான்ணே சாப்ட்டேன்” என்றதும், “சரி வா, எனக்கு லேட் ஆகும் ஒரு ஆட்டத்தப் போடுவம் அதுவர”

சட்டென உற்சாகமானேன். கேரி காஷ்ப்ரொவ் ஆட்டத்தைத் தட்ட வேண்டும்.

வெங்குடு அண்ணனின் முகம் இப்போது கொஞ்சம் பழைய முகம் போல் ஆகி இருந்ததைக் கவனித்தேன்.

திண்ணையின் ஓரத்தில் இருந்த கூண்டில் இருந்து பலகையும் செஸ் காய்கள் இருந்த அட்டைப்பெட்டியையும் எடுத்து அடுக்கத் துவங்கியவர் இலைக்கட்டை என்னிடம் கொடுத்து உள்ளே கொடுக்கச் சொன்னார்.

தயக்காமக நுழைந்தேன். கூடத்தில் எப்போதும் பார்வதி அம்மாள் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருப்பார். அவருடைய நாற்காலி தட்டுப்படவில்லை. சங்கடம் செய்தது. உள்ளே நுழைந்தேன். அங்கே டிவிக்கு கொஞ்சம் முன்னால் அந்த நாற்காலி போடப்பட்டு அதில் ரேணுகா அமர்ந்து டிவியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நான் இலைக்கட்டை என்ன செய்வது என்று தெரியாமல் நின்ற அந்த ஒருநொடியில் கிட்டத்தட்ட நூறு சேனல்களை மாற்றிக்கொண்டிருந்தாள். வினோதமாகப் பட்டது. ஆள் நிற்கும் நிழலாடியதும் திரும்பியவள், மலர்ந்து சிரித்தாள்.

“வாடா வா, இப்பத்தான் வழி தெரிஞ்சுச்சோ, என கையை நீட்டி இலைக்கட்டைக் கேட்டாள், அமர்ந்திருந்த வாக்கிலேயே. நான் அருகில் சென்று கொடுத்ததும் அதை வாங்கி நாற்காலிக்கு அந்தப்பக்கமாகப் போட்டாள். போடும்பொழுது கீழே நேரடியாக விழும் அதிர்வைத் தடுக்கும் பொருட்டு தன் கணுக்கால் பகுதியை இலை விழும் இடத்தில் வைத்து எடுத்தாள். நான் அவளையும் டிவியையும் பார்க்க,

“இந்த ரிமோட்டக் கைல வாங்கி ஒரு சேனல மாத்துறதுக்குள்ள அடேங்கப்பா என்னல்லாம் பேச்சு வாங்கணும் தெரியுமா” இடது உள்ளங்கையால் ஒரு தட்டுத் தட்டிகொண்டு மீண்டும் மாற்றினாள். கால்மேல் கால் போட்டு டிவியை நோக்கி ரிமோட்டை நீட்டி மாற்றும் விதம் கட்டளைகள் பிறப்பிப்பது போல் இருந்தது.

“நீ இன்னைக்கு சாப்ட்டுத்தான் போகணும்டா”

“சரிக்கா”

ஆட்டத்திற்குத் தயாராய் காய்கள் அடுக்கப்பட்டு இருந்தன.  காலையில் பயிற்சி செய்த நகர்த்தல்களை நான் ஆட ஆட என்னை நிமிர்ந்து பார்த்தவர், ’பார்றா’ என்று மகிழ்ந்தார். அவர் கண்களில் கவனம் பெறவிடாமல் ஓரத்தில் இருந்த சிப்பாய் கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து ராணி ஆகும் நோக்கில் முன்னேறிக் கொண்டிருந்தது.

உள்ளே இருந்து வந்த குழம்பு கொதிக்கும் வாசம் பசியைக் கிளறியது.

*

RELATED ARTICLES

1 COMMENT

  1. வயது முதிர்ந்தவர்களை பார்ப்பது கூட பெரும் முதிர் வான பக்குவங்கள் வேணும் நமக்கு 🙏

    செஸ் விளையாட்டின் சுவாரசியம் 👌👌👌💖

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை