விடுமுறைக்கு எங்கு போகவேண்டும், ‘நல்லா யோசிச்சு சொல்லுடா’ என மகனிடம் கேட்ட பொழுது அரை நொடிகூட யோசிக்காமல் ’துபாய்’ என்றான். உள்ளிருந்த பூமர் எழுந்து வந்து, “ஏண்டா நான்லாம் மதுரைக்குள்ளயே இருக்குற திருப்பரங்குன்றம் பழங்காநத்தம்னு போறதுக்கே அடம் பிடிக்கனும்” என சொல்ல நினைத்தபொழுது நல்லவேளையாக நீர் அருந்திக்கொண்டிருந்ததால், மிடறுகளோடு முழுங்கினேன்.
விசா வந்துவிட்டது என வந்தத் தகவலைத் திறக்கும்பொழுது அதை முந்திக்கொண்டு திரையில் வந்து விழுந்தது, விமானம் விழுந்து நொறுங்கிய செய்தி. ‘பிரமாதம், வழக்கம்போல நம்ம ராசிக்கு என்னவோ அது பக்காவா நடக்குது” எனும் யோசனையோடு (இதற்கு முன்னர் இதே துபாய் திட்டம் வகுத்தபொழுது மித்ரோன் லாக் டவுன் ஆனது தனிக்கதை) வீட்டிற்குள் நுழைந்து, இதைக்காட்டி இன்பச்சுற்றுலாவை உள்நாட்டிற்குள்ளேயே ஆக்குவது என்று ’ஐடியா’ பண்ணி இருந்தேன். அவன் விதவிதமாக வாங்கிய சட்டைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். சரி கிளம்புவோம் என்று கிளம்பிவிட்டோம். (இல்லை என்றால் என்னை விட்டுவிட்டு போயிருப்பார்கள் அம்மாவும் மகனும் என்பதை பின்னர் அறியத்தந்தார்கள்)
17ம் தேதி (ஒன்னும் ஏழும் எட்டு என்னடா இது) அதிகாலை ஆறுமணிக்கு விமானம் துபாய் நோக்கிக் கிளம்பியது. அதற்கு முன்னர் கண்ணாடி வழியாக, டயர், றெக்கை எல்லாம் சரியாக இருக்கிறதா எனப் பார்த்துக் கொண்டேன். ’இதுலலாம் நாம ரொம்பக் கரெக்ட்டா செக்பண்ணிக்கணுமாக்கும்’ என்ற பூர்ணம் விஸ்வநாதன் குரல் ஒலித்தது.
எத்தனையெத்தனையோ விமானப் பயணங்கள் ஆகிவிட்டன. ஆனால் இம்முறை ரன்வேயில் தம் பிடித்து ஏறி வான் மிதக்கும் வரை கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. கொஞ்சம் இல்லை நிறையவே. நெடுஞ்சாலைப்பயணத்தின் பொழுது வழியில் புரண்டு கிடக்கும் வாகனத்தைப் பார்த்து சட்டென வேகம் குறைத்து கொஞ்ச நேரம் மெதுவாகப் போவோமே, அப்படியான மனநிலை. கொஞ்ச நேரத்தில் சரி ஆகிவிட்டது. வானம், பஞ்சுப்பொதி, பாதித்தூக்கம் என முடிந்து கட்டிடங்கள் தென்படத் துவங்கியதும் சுற்றுலா மனநிலைக்குள் புகத் துவங்கிவிட்டது மனம். குறிப்பாக மகனின் முகபாவங்களைப் பார்த்துப் பூரிப்படைதல்தான் இந்த நான்கு நாட்களின் நோக்கம். அது விமானத்தின் சாளரத்தின் வழியே அவன் பார்த்துத் திரும்பும் பொழுதுகளிலேயேத் துவங்கிவிட்டது.
மிகச் சரியாக துபாய் நேரப்படி 9 மணிக்கு தரையிறங்கி, ஆவணங்கள் சரிபார்க்கும் இடத்தில் இருந்த அதிகாரிகளின் துபாய் ஷேக் உடைகளைப் பார்த்ததும் உண்மையிலேயே துபாய்தான், ’கஜாக்கா தோஸ்த்’ என கொச்சியில் இறங்கிவிடவில்லை என மகனிடம் ’கதாநாயகன்’ பட நகைச்சுவையைச் சொன்னேன். அவன் வரிசையில் இருந்து நகர்ந்து வேறு வரிசைக்கு மாறி நின்று என்னைப் பார்த்தான். அந்தப் பார்வை ’இனிமே ஜோக்குனு இப்பிடி இந்த ட்ரிப்ல எதாவது சொன்ன அப்புறம் அவ்ளோதான்’ என்பதாகப் பட்டது. ’ச்ச ச்ச’ இருக்காது என்றும் தோன்றியது.
நன்கு அறிந்த ஏஜென்ஸி மூலம் ஏற்பாடுகள். பெயர்தாங்கிய பலகையோடு விமானநிலையத்தில் நின்றிருந்த நபர் எங்களை வரவேற்று நான்கு நாட்களுக்கான நிரல்களை (itinerary) ஒருமுறை ஒப்புவித்து சரிபார்த்துக்கொண்டு வாகனத்தில் ஏற்றிவிட்டார்.
விமான நிலையத்தில் இருந்து பத்து இருபது நிமிடங்களில் தங்கும் இடம். வழி நெடுக வான் உயர்ந்த கட்டிடங்கள், கட்டிடங்கள் என பூமியிலிருந்து வான் நோக்கிக் கட்டி எழுப்பப்பட்ட பிரம்மாண்டங்கள்.

முதல் பார்வையிலேயே காதல் என்பதுபோல் இந்த முதல் பயணத்தின் பக்கவாட்டு பரவசத்திலேயே ‘பாதி காசு செத்துச்சுடா செம்ம ஊர்டா’ என்ற எண்ணம் வந்துவிட்டது. “எப்பிடி” என கெத்தாகத் திரும்பிப் பார்த்தேன். பெருமிதத்தோடு.
நான்கு நாளில் இரண்டு ஓட்டுநர்கள். பாகிஸ்தானியர்கள். அவர்களோடு பேசியவை எல்லாம் சிறுகதைக்கானவை.
வண்டியில் இருந்து இறங்கி இரண்டடி எடுத்துவைத்தால் தங்கும் ஹோட்டல். ஆனால் அந்த இரண்டு அடிகளுக்குள்ளாகவே மின்னடுப்பில் இருப்பது போன்ற வெப்பம் ’தொப்’ எனத் தாக்கியது. மிகக்கடுமையான வெப்பம். அந்த வெயிலில் பத்து நிமிடம் நின்றேன் என்றால் படுத்துவிடுவேன் காய்ச்சலில் பத்துநாள் எனும் அச்சம் ஏற்பட்டது. ஆம். மைக்ரோ ஓவனுக்குள் நுழைந்துவிட்ட உணர்வு அந்த ஓரிண்டு நொடிகளில் ஏற்பட்டது. நான்கு நாட்களிலுமே வண்டியை விட்டு இறங்கி கட்டிடம் புகும் முன்னர் இந்த உணர்வு தொடர்ந்தது.
நாங்கள் தங்கி இருந்த இடம் Jumeirah. Ibisல் அவ்வளவு நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள், நான்கு நாட்களும். தரமான காலை உணவு. மதிய உணவிற்கு அருகில் இருக்கும் இந்திய உணவகம் ஏதேனும் இருக்கிறதா எனத் தேடியதில் பட்டுக்கோட்டைக்காரர் நடத்தும் நம்ம ஊர் ஸ்டைல் உணவகம், (ARR Restaurant) ஃபுல் மீல்ஸ் என்றதும் ஏதோ பாலைவனச் சோலையைக் கண்டதுபோல் ஆனது மனது. காலைல தானடா சென்னைல இருந்து கிளம்பினோம் என்பதெல்லாம் அப்போதே மறந்திருந்தது.
அன்றைய மாலை Dhow Cruise. நம்ம ஊர் ஆட்டோ ஸ்டேண்ட் போல் வரிசையாக சற்றே பெரிய படகுகள் அல்லது மிகச்சிறிய கப்பல் வடிவங்கள் என நீரில் வரிசையாக மிதந்து கொண்டிருந்தன. அங்கே பத்து நிமிடங்கள் காத்திருக்கச் சொன்னார்கள். உடனே உடைவாளை உருவதுபோல மொபைல் கேமிராவை எடுத்துக்கொண்டு மவன் கிளம்பிவிட்டான். விதவிதமான போட்டோக்கள் அந்த அற்புதமான வானுயரக் கட்டிடங்களின் பின்புலத்தில் எடுக்க ஆரம்பித்தோம். அங்கே அதுவரை அமர்ந்திருந்தவர்கள் இதைப்பார்த்ததும் தத்தமது உடைவாட்களோடு வந்துவிட்டார்கள் சீஸ் ச்சீஸ் என. பாதிக்கும் மேலே வட இந்தியக் குடும்பங்கள். மீதி கென்யர்கள்.

பத்து நிமிடம் ஆனதும், நீரில் மிதக்கும் நமக்கான ஆட்டோவில் ஏறி மேல்தளத்திற்கு சென்றால், திரும்பியத் திக்கெல்லாம் உணவு. மிதக்கக் துவங்கியதும் வரிசையாக இடப்பட்டிருந்த மேஜைகளில் முதலில் இருப்பவர்கள் பின்னர் இரண்டு மூன்று என உணவை எடுக்கச் சொன்னார்கள். இது எளிதாக இருந்தது. ஆனாலும் எங்களுக்கு முன்னர் இருந்த மேஜையில் அனைவருமே ரெட்டை நாடிகள். நமக்கு மிஞ்சுமா எனும் நகைச்சுவையை நான் சிந்தித்தப்பொழுது நீர் அருந்திக் கொண்டிருந்தேன். ஆகவே..
ரவுண்ட் ட்ரிப் என்பார்களே அதுபோல அந்த நீரில் மிக சன்னமாக மிதந்துகொண்டே இருந்தோம். நான்கைந்து ரவுண்டுகள் நீரில் அக்கரைக்கும் இக்கரைக்குமாக பயணம். ஹைதையில் டேங்க்பண்ட் புத்தர் சிலை, போட்டில் பயணம், ஆட்டம்,பாட்டம், என சார்மினார் எக்ஸ்பிரஸ் நினைவு வந்தது. அங்கே ஒரே ஒரு புத்தர் சிலை, பக்கவாட்டில் வைஸ்ராய் ஹோட்டல். இங்கே சுற்றிலும் பிரம்மாண்டமான கட்டிடங்கள். உயர்வு நவிற்சி அல்ல, உண்மையிலேயே கழுத்து வலித்தது, அவ்வளவு உயரக் கட்டிடங்கள். உணவு முடிந்து, கரை நோக்கிக் கிளம்புகையில், நான்கைந்து பஞ்சாபிகள் ‘தலேர் மெகந்தி’களாக ஆடிப்பாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது கீழிருந்து வந்தவர் தன் கையில் இருந்த உடையைத் தன்மேல் போர்த்திக்கொண்டு சுழலத் துவங்கினார். அதுவரை அப்பாவிபோல் நின்றிருந்தவரின் அந்த வேகம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. எனக்கு வியப்பினூடே ஏதோ ஒருவித இனம்புரியாத பரிதாபமும் அவர்பால் ஏற்பட்டது. அசோகமித்திரனின் புலிக்கலைஞன் கதை நினைவிற்கு வந்ததால் இருக்கலாம். உடலெல்லாம் ஜிகுஜிகுவென ஜிகினா அதன்மேல் சீரியல்பல்ப் என விதவிதமான சுழலாட்டம் சுழன்று நிற்கவும் எங்கள் படகு கரையில் நங்கூரமாகவும் சரியாக இருந்தது.
மேல்தளத்திலிருந்து சிறிய படிகளின் வழியே இறங்கும்பொழுது பக்கவாட்டில் இருந்து சிறு இருட்டில் தன் உடைகளை மாற்றிக்கொண்டிருந்தார், புலி. ஒரு நொடி நின்று அவரிடம் கைகுலுக்கினேன். தலையில் அணிந்திருந்தத் துணியைக் கழட்டி வியர்வையைத் துடைத்துக்கொண்டே சிரித்தார். இன்னும் பாவமாக இருந்தது. ஏன் என்று தெரியவில்லை.
இரண்டாம் நாள், ஆவலுடன் எதிர்பார்த்த புர்ஜ் கலீஃபா. அந்த மின் தூக்கிக்குள் நுழைந்து மேலேறிய நொடியே ஜிவ்வென்று ஆனது. வேகம். உலகின் உயரமான இடத்தில் நிற்கிறீர்கள் என்ற வாசகங்களோடு புகைப்படங்களை எடுத்துத் தருகிறார்களே என்று வாயைப் பிளந்து கொண்டு எடுத்துக்கொள்வோரின் கவனத்திற்கு, அவை எல்லாமே கூடுதல் பணம் செலுத்தப்பட வேண்டியவை. முதல்மரியாதை படத்தில் சிவாஜி நிற்பாரே ஸ்டியோவில் அதுபோல் நின்று, நிமிர்ந்து குனிந்து என போட்டோக்களை எடுத்து முடித்ததும் நட்பு படத்தில் செந்தில் நாலணா கேட்பது போல் கையை நீட்டுகிறார்கள், புகைப்படங்களை ப்ரிண்ட் செய்துகொடுக்க. நாம் ‘பிஸ்கோத்து’ வேண்டாம் என்று நகர்ந்துவிடக்கூடிய தெரிவும் இருக்கிறது.

ஆம், உலகின் உயரமான இடத்தில் நிற்கிறோம் எனும் உணர்வை ஒவ்வொரு நொடியும் ஏற்படுத்திக்கொண்டே இருந்தது அந்த இடம். உயரத்தில் இருந்து பார்த்தால் எல்லாமே அழகுதான் எனும் பைத்தியக்கால நினைவுகளோடு படங்களை எடுத்துக் கொண்டிருந்தேன். கீழே குனிந்து பார்த்தால் மூளைக்குள் பிட்யூட்டரி அசைந்து கொடுப்பதுபோல் மயக்கம் ஏற்பட்டது. 160க்கும் மேலான தளங்கள். கட்டுமானப்பணியில் ஈடுபட்டவர்களை மானசீகமாக நினைத்துக்கொண்டேன். துபாயில் வேலை பார்த்த நண்பர்கள் பேசும்பொழுதெல்லாம் துபாய் கட்டிடங்கள், கம்பி கட்டிய கதைகள் என நகைச்சுவையாகவே கழிந்தன அல்லவா, அங்கே நேரில் பார்க்கும்பொழுது ஏற்பட்ட பிரமிப்பும், அந்தக் கடும் வெய்யிலில் கட்டுமானப்பணியில் ஈடுபட்டவர்களின் மீதான மரியாதையும் பல்மடங்கு உயர்ந்தது. எப்படி இதை இவ்வளவு உயரமாக, பிரம்மாண்டமாக ஆக்கினார்கள் எனும் வியப்பு எழாமல் உங்களால் அங்கிருந்து இறங்கவே முடியாது. இறங்கும்போது மின்தூக்கி சரேழென சரிந்து இறங்க காதுகள் அடைபட்டன. உடன்வந்த வெளிநாட்டவர்களும் மூக்கைப்பிடித்து காதை திறக்கும் அதே வடிவேலு உத்தியைத்தான் கையாண்டார்கள்.
அடித்தளத்தில் துபாய் மால் எனும் மாடமாளிகை. எல்லா ஊர்களிலும் இப்போது ஒரே போன்ற அமைப்புகளோடு ‘ஷாப்பிங் மால்கள்’ வந்துவிட்டபடியால் அந்த அட என்ற பிரமிப்புகள் அல்லாமல் சுற்றினோம். மொபைல் போன்கள் விலை குறைவு என்று எட்டிப்பார்த்து ஒன்றைக் கையில் எடுத்தேன், உடனே மகன், யப்பா இதெல்லாம் இந்தியால ஒர்க் ஆகாது” என்றான். அங்கிருந்த சிப்பந்தி, “ஏம்ப்பா, அதெல்லாம் ஒர்க் ஆகுமே” என்றதும் அட, தமிழா?, “ஆமா சார் அடையாறு” என்றார். உலகம் எவ்வளவு பெரியதோ அதே அளவு சிறியதும் தானே!.
இரண்டாம் நாள் மாலைதான் படுபயங்கரம். அட்வென்ச்சர்களுக்கான வயதெல்லாம் தாண்டி விட்டாலும் மகன் முன்னால் மீசையில் மண் ஒட்டவில்லை என்று காட்டலாம் என்றால், காணும் இடம் யாவும் மணல். பாலை மணல். ‘டெசர்ட் சஃபாரி’. பைக்கும் டிராக்ட்டரும் கலந்த Buggy வண்டியை நானும் மகனும் ஓட்டுவதாக முடிவெடுத்தோம். நான் எங்கு ஓட்டினேன், வண்டி அதன்பாட்டில் மணல்வெளியில் ஓடியது. இடம் திருப்பினால் வலம் போகிறது. மகன் சற்றைக்கெல்லாம் குதிரையை அடக்கி ஓட்டுவது போல் நேர்த்தியாக ஓட்ட ஆரம்பித்துவிட்டான். எனக்கானால் வசப்படவில்லை. எதிர்வெய்யில் தான் காரணமாயிருக்கும், வேறு என்ன காரணம் இருக்கப்போகிறது. அப்படியே சைசாக வண்டியை ஓரங்கட்டி மகனை வீடியோ எடுக்கும் சாக்கில் முடித்துக்கொண்டேன் என் சஃபாரி ரைடை.
முடிந்தது என்று நினைத்தால், எங்கள் ஓட்டுநர் செய்த காரியம் இருக்கிறதே, யூ டியூபர்கள் தம்ப் நெய்லில் வைக்கும் வாசகம் போல “அவர் செய்த காரியத்தைப் பாருங்கள்” என “சீட் பெல்ட் நன்றாகப் போட்டுக்கொள்ளுங்கள் என்றார். அப்போதே நான் சுதாரித்து இறங்கி இருக்க வேண்டும். சுதாரிக்கும் முன்னரே சர்ரென காரைக் கிளப்பி, நாங்கள் அதுவரை இருந்த இடத்திற்கு அப்பால், பெரும் பாலை வெற்றுவெளி சிறு மணல் குன்றுகள் என அட்வென்ச்சர் பயணம். “இத்தாத்தண்டி ஆம்பளையா இருந்துக்கிட்டு அழுதா நல்லாவா இருக்கும்” என்பதுபோன்ற சிந்தனைகளோடு அமர்ந்திருந்தேன். முன் இருக்கையில் இருந்த மகன் வீடியோக்கள் போட்டோ என மகிழ்ச்சியாக இருந்தான். படார் படார் என திரும்பிப்பார்த்தான். அப்போதெல்லாம் நானும் சிரிப்பதுபோல் முகத்தை மாற்றுவதுதான் கொஞ்சம் சதுரங்க வேட்டை இளவரசு போல் ஆனது.
மணல் குன்றுகள் மேலேறி, காரிலிருந்து இறங்கி, சரியச் சரிய மணலில் நின்று புகைப்படங்கள் எடுத்தோம். அங்கே அதுபோலவே நான்கைந்து கார்கள், குடும்பங்கள், புகைப்படங்கள் என நல்ல பிக்னிக் ‘ஸ்பாட்’. இரவு ஏழு மணிக்குத்தான் சூரியன் தயங்கித் தயங்கி இறங்குகிறது. அந்தக் கீழ்வானம், அந்த மணல் என ஏகாந்தமாக இருந்தது. மீண்டும் அதே போன்ற மணல் குன்றுப்பயணத்தில் இறங்கினோம். கதி கலங்கியது.

ஒருவாசல் மூடினால் மறுவாசல் திறக்கும் அல்லவா அப்படி கலங்கிய மனதை ஆற்றுப்படித்தியது, இரவு உணவுக்கான இடம். பாலைவனத்தின் நடுவே உணவு. அற்புதமாக வடிவமைத்திருந்தார்கள் அந்த இடத்தை. கிட்டத்தட்ட அரசர்கள் அமர்ந்து ஆட்டம் பாட்டத்தைப் பார்த்துகொண்டே உணருவருந்தும் விதமான ‘செட்டப்’. நடுவே ஆடும் மேடை. சுற்றிலும் மேஜைகள் அதுநிறைய வந்திருந்த விருந்தினர்கள். சுற்றிலும் உணவு மேஜைகள். சைவம் தனி அசைவம் தனி என அமைத்திருந்தார்கள். நடுவில் ஆட்டம், அங்கே கப்பலில் பார்த்த அதே போன்ற ஆண்கள் சுழன்று ஆடும் ஆட்டம். சட்டென இரண்டு பெண்கள் அரை நிர்வாண உடையில் ‘பெல்லி டான்ஸ்’. குடும்பத்தோடு வந்தவர்கள் லேசாக நெளிய, ஓரக்கண்ணால் பார்த்தவரையில், பரவச வகைதான். சற்றுத்தள்ளி ஒட்டக சவாரி. முடித்து அறைக்கு வந்தால், கனவில் வந்தாள்.
மறுநாள் உள்ளூர் ஷாப்பிங் என்பது திட்டத்தின் ஒரு அங்கம். Gold Chowk. அங்கு போக வேண்டுமா அல்லது வேறு இடமா என்று லேசாக அசைத்துப்பார்த்தேன். திகுதிகு என சத்தம். அறையில் வெந்நீர் குடுவையின் உஷ்ணம் அருகிலே அம்மையார். சரி அங்கேயே போவோம் என்று, போனோம். போகும்வரை அது மிகுந்த சலசலப்பான சந்தை போல் இருக்கும் என்று கற்பனை செய்திருந்தேன். அப்படி அல்ல. மிக நேர்த்தியான கட்டிடங்கள். தனித்தனி கடைகள். நுழைந்ததுமே ’திருச்சி கோல்ட்’. நம்மூர்க்காரர்கள் தான் விற்பனை ஆட்கள். தங்கத்தின் தரம் நிறம் என அனைத்துமே வேறு விதமாக இருந்தது. வாங்கிய பொருட்களுக்கு சரியாக ரசீதுகளை வாங்கி பத்திரமாக வைத்துக்கொள்ளச் சொன்னார்கள். விமானநிலையத்தில் வரிவிலக்கி பணத்தைத் தந்துவிடுவார்கள் என்றார். அப்படியே ஆனது. கூட்டிக்கழித்துப்பார்த்தால் இங்கு வாங்குவதை விடவும் 6 அல்லது 7 சதம் குறைவான விலை, அதிக பளபளப்பான வஸ்து. அம்மையாரின் ட்ரிப் அங்கேயே முடிந்தது போல் இருந்தது முகம்.
அருகில் இருக்கும் மீனா பஸார் என்பது நம்ம ஊர் ரிச்சி ஸ்ட்ரீட் போன்றே இருந்தது. மிகக் குறைவான விலையில் மொபைகள் கிடைக்கின்றன.
அன்று மாலை அருகில் இருந்த கடற்கரை. கோவாவைப் போல் இருந்தது கடற்கரை. ஆனால் கோவாவில் காணும் ’காட்சிகள்’ இல்லை. எட்டு மணியை நெருங்கும் வரை வெளிச்சமும் சூரியனும் இருந்தது.

மறுநாள் அபுதாபி. துபாயிலிருந்து ஒரு மணி நேரப் பயணம். மீண்டும் சாலைகள், கட்டிடடங்கள் என பிரமிப்பான அதிவேகப்பயணம்.
நெருங்கும்பொழுது மகனிடம் “ஒரு நாள் முழுக்க அந்த ஃபெராரி அம்யூஸ்மண்ட் பார்க்’ல இருக்க முடியாதுடா, இந்த வெய்யில்ல கசகசனு மயக்கம் வந்துரும்” என்றேன். ஆமோதித்தான். உடனே கூகுளில் அருகில் என்ன இடங்கள் இருக்கின்றன என்று பார்த்தான்.
ஆனால் மக்களே, நம்முடைய இந்தியசிந்தனையான அம்யூஸ்மண்ட் பார்க் என்றால் வெட்டவெளி என்ற எண்ணத்தில் வந்து இறங்கியது தண்னென்ற குளிர். ஆம். அத்துணை பெரிய வளாகம், கற்பனைக்கு எட்டமுடியாத பெரிய வளாகம் முழுக்க குளிரூட்டப்பட்டது என்பதை நம்ப சிலபல கணங்கள் ஆனது. நாள் முழுக்க அங்கேயே இருந்துவிடலாம் என்பது போன்ற இடம் அது. இருந்தோம். மிக உயர்ந்த வகை கார்களின் சங்கமம்.

இங்குதான் அது நிகழ்ந்தது. நான் எவ்வளவு மன்றாடியும் கேட்காமல் அந்த ரோலர் கோஸ்டரில் ஏற்றிவிட்டான் மகன். இரண்டு நிமிடங்களில் உயிர் போய் திரும்ப வந்தது. நடுக்கம் நிற்க நான்கைந்து நிமிடங்கள் ஆனது. இனி போகவே கூடாது எனும் எண்ணமும் வந்தது. அங்கே இரண்டு சிறுவர்கள் மீண்டும் வரிசையில் போய் நின்று மீண்டும் போய் வந்தார்கள். நின்று கும்பிட்டேன்.
மேலே சொன்ன வரிசைப்படிதான் பெரும்பான்மை டூரிஸ்ட் ஏஜெண்ட்கள் பயணத்திட்டம் வகுத்துத் தருகிறார்கள். நீங்கள் தங்கும் இடத்தைப் பொருத்து, ஒரு ஆளுக்கு விமானக் கட்டணம் உட்பட 60 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வரை ஆகிறது.
நான்கு நாட்களில் நான்கு இடங்களைப் பார்த்துவிட்டு இந்த முடிவிற்கு வரக்கூடாதுதான். ஆனாலும் பார்த்தவரை, அந்த வானளாவிய கட்டிடங்கள், சாலைகள், அதில் நிறைந்துகிடக்கும் ஃபெராரி, ரோல்ஸ்ராய்ஸ்கள் என, கனவு தேசம் அது.
வடிவேலு நகைச்சுவையாகச் சொல்வாரே, ‘துபாய்ல இது குப்பை லாரி’, அது நகைச்சுவை அல்ல.
வாய்ப்பும் வசதியும் இருப்போர் ஒருமுறை நிச்சயம் போய்வரவேண்டிய நாடு, துபாய்.
*
கடந்த இரண்டு வருடங்களாக UAE-ல் வேலை செய்து வருகிறேன்,✈️
சென்ற அன்று இருந்த அதே பிரமிப்பு, ஆச்சரியம், ஏக்கம் இன்றும்…💫🌿❤️
பக்கத்துல இருந்து படிக்கிற அனுபவம் இந்த பயணகட்டுரை.🌼
அருமை👍❣️
– உலா