ஒரு நல்ல சிறுகதையை எழுதி முடித்தப்பிறகு மனதிற்குள் எழும் உணர்வு என்பது எழுதும் எவருக்கும் மிக மிக அலாதியான ஒன்று. ஆம். ஆதி இல்லாத, முடிவிலி மகிழ்வுணர்வது. அப்படியான ஒரு சிறுகதை, ‘தொக்கம்’. தொகுப்பின் முதல் கதை. சதிஷ் கிராவின் முதல் சிறுகதையும் இதுதான் என்று நினைக்கிறேன். அந்த உந்துதல் கொடுத்த நம்பிக்கையே இந்தத் தொகுப்பு எனலாம்.
வெவ்வேறு காரணங்களால், தொடர்புகளால் பேசப்படும் அல்லது பேசுபொருளாக ஆக்கப்படும் தொகுப்புகளைக் காலம் அவ்வந்த பொழுதுகளோட கழித்துவிடும். மாறாக, முதல் தொகுப்பு நன்றாக அமைந்து, கவனத்தைப் பெற்றுத் தருவது என்பது மிக அரிதாக நிகழ்வது. அவை தம்மைத்தாமே தகவமைத்துக் கொள்ளும். அப்படியான, கவனத்தை ஈர்த்த தொகுப்பு, சதிஷ் கிராவின் முதல் தொகுப்பாக வந்திருக்கும் இந்த ‘கட்டக்கால்’.
ஏழு வெவ்வேறு சிறுகதைக் களங்கள். ஒரே தாளலயக் கட்டமைப்பு என வந்திருக்கும் தொகுப்பு. சால்ட் பதிப்பகம் அதன் நேர்த்தியான வடிவமைப்பில் இந்தப் புத்தகத்தையும் வெளியிட்டிருக்கிறது.
சடங்குகளை நகைப்போடு சாடுதல், மூடநம்பிக்கைகளை உதறுதல் போன்றவை நிகழ்ந்துகொள்ளும் கதைகளாக அதன்போக்கில் அமைந்தது பிடித்திருந்தது. ஏனெனில் பெரும்பாலும் இப்படியான கதைகளைச் செய்துவிடுவர் சிலர். அப்படிச் ‘செய்தல்’ என்பது கலையாக நிற்காது. இத்தொகுப்பில் வந்த கதைகள் எல்லாமும் இயல்பில் ஆகி வந்தவையே. ‘மோட்சம்’, ’புனர்வாழ்வு’ ஆகியவற்றை சிலகாலங்கள் கழித்து இதே சதிஷ் கிரா இன்னும் கொஞ்சம் அடர்த்தியாக எழுதக்கூடும்.
மதுரை வட்டாரத்தில தொக்கம் எடுப்பது என்பது ‘வயிற்றில் அடைபட்டுக் குடலோடு ஒட்டிக்கொண்ட திண்பண்டத்தைத் தட்டித் தட்டி எடுத்துவிடுவது ‘ எனும் நிகழ்விற்கு சொல்லும் பெயர். என்னுடைய ’உயிருதிர் காலம்’ சிறுகதையில் ஒரு வரியில் இது கடக்கும் என்று நினைவு. ’கட்டக்கால்’ தொகுப்பின் முதல்கதை ‘தொக்கம்’ வேறு ஒன்றை, வேறு பொருளை முன் நிறுத்துகிறது. எழுத்தாளர் எடுத்துக்கொண்டத் தன் ஊரின் களம் என்பதில் இந்தத் தொக்கம் சொல் பயன்பாடாக வரும் நிகழ்வு என்பது ‘வசிய மருந்து’ வைக்கப்பட்ட ஒருவனுக்கு அதை எடுத்து விடுவதான பொருளில் வருகிறது. இப்படி ஒவ்வொரு இடத்திற்கும், களத்திற்குமான வட்டாரமொழி என்பது வெவ்வேறு கோணங்களில், பொருட்களில் கையாளப்படுவதும், குறிப்பாக நாற்பது ஐம்பது மைல் தொலைவுகளுக்கு இடையிலேயே இம்மாதிரியான பாரிய வேறுபாடுகளைக் கொண்டு இயங்கும் சொற்களாக இருக்கின்றன. இப்படியான கதைகளால் மட்டுமே வெவ்வேறு மனிதர்களோடு பயணப்பட்டு சிறு வியப்பையும் வெவ்வேறு வட்டார வாழ்வியலையும் நமக்கு அரியத் தருகின்றன. அதனால்தான் நல்ல சிறுகதைகள் உலகம் முழுக்க கொண்டாடப்படுகின்றன. உலகின் எம் மூலையிலோ அமர்ந்து எவ்வாழ்வையோ எழுதிய ‘ஆண்டன் செக்காவை’ இந்த மூலையில், இந்தியாவில், தமிழகத்தில் என இண்டு இடுக்கில் வசிக்கும் இலக்கிய மனங்கள் வாசிப்பில் வைத்துக் கொண்டாடுகின்றன. வாழ்வியல் ஒப்பீடுகள், நிகழ்வுகளின் நிமித்தம் எழும் தரிசனங்கள் ஒருபோதும் சிறுகதை வாசிப்பாளர்களை சலிப்படையச் செய்வதில்லை. ’கட்டக்கால்’ தொகுப்பின் எக்கதையும் சலிப்படையச் செய்யவில்லை.
தொகுப்பின் முதல் மற்றும் இறுதிக் கதைகள் ஒருவித கச்சிதத்தன்மையோடு அமைந்து கொண்டுவிட்டபடியால், தொகுப்பைப் படித்து முடித்தவுடன் ஒரு நிறைவு ஏற்படுகிறது. பல்வேறு படிமங்கள், நிகழ்வுகள், குறியீடுகள் என மனதில் எழுந்து மடிகின்றன. மீண்டும் எழுகின்றன.
ஒரு வெய்யில் நேரத்து மதியப்பொழுதில் சலனமற்று இருக்கும் குளத்தின் மீது வெகு நேர்த்தியாக வீசப்படும் தவளைக் கல், தத்தித்தாவி ஏற்படுத்தும் அரைவட்டதிர்வுகள் அடங்க சற்று நேரம் பிடிக்கும். ‘கட்டக்கால்’ தொகுப்பும் அப்படியான ஒன்று.
திகைந்து வந்திருக்கிறது முதல் தொகுப்பு, வாழ்த்துகள் எழுத்தாளர், சதிஷ் கிரா.
சால்ட் பதிப்பகம்.
ரூ.170/