அட்டைப்படத்தில் ஓசையின்றி மெத்துமெத்தென்று நடக்கும் பூனையின் கருநிழற்பின்புலம் கருமேடை மேலமர் முகமிலா ஆயிழையாரிவள்? ஏன் இவளுக்கு முகமில்லை? எனில் யார் முகத்தையும் இவளில் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாமா? விடை கதையில் பலருக்கு வாழ்க்கை முற்பாதி ஒருவகையிலும் பிற்பாதி அதற்கு நேர்மாறான வகையிலும் அமையும். விருப்பங்கள் மாறும். முன்னர் பிடிக்காத பாகற்காய் பின்னர்ப் பிடிக்கும். இந்த இருநிலைக்கும் இடையில் ஒரு நிலை உண்டு. பிடிக்கவில்லை என்று ஒதுக்கவோ பிடித்துள்ளது என்று எடுக்கவோ இயலாத நிலை, நிலையற்ற நிலை. மனம் சமநிலை கொள்ளா நிலை. காரணமறிந்தும் சமன் செய்ய முடியாத (அ) சமன் செய்ய வேண்டாத நிலை. அப்படியப்படியே கடக்க வேண்டிய நிலை.
பேறுகண்ட ஓர் இளந்தாயின் அத்தகு ஒரு நாள் பாடு சொம்பூநீர்ப்பூ. பின்பேற்றழுத்தம் (post partum depression) உடன் ஒரு நாள் அத்துடன் கணவன் இறப்பின் அழுத்தம். ஒரு நாள் வெள்ளை அடிப்பில் வீடு தலைகீழாவதே நெடுங்கொடுங்கடும் நாள் என்று ஆக்கும். குழந்தை இருக்கும் வீட்டிலோ அதுவே அன்றாடம். இத்தனைக்கும் நடுவில் அவ்வப்போது குழந்தையைக் காண வரும் விருந்தினர்.
எழுதும்பொழுதே மூச்சுமுட்டுகிறது.
மனதிற்கு நெருங்கிய ஒருவரை நெடுங்காலம் கழித்துச் சந்திக்கையில் உவகையை மீறிய பதற்றம் ஒன்றிருக்கும். அத்தகு களிபத்தற்றம் இறுதியில் தன் தோழி நாளை வந்தால் நல்லது என்று நிலை மாறுகிறது.
முதலில் கழுத்திற்கு ஏதுவாக இருந்த சொம்பு சிறிது நேரத்தில் கழுத்தை அழுத்துகிறதுகாய் வாங்க நினைத்து வாங்காமல் எழ நினைத்துப் பின் படுத்துகுழந்தையின் துயில் கலையக் கூடாது என்று கவனம் காத்துப் பின் எழுப்ப முயன்று என நினைப்பது ஒன்று செய்வது ஒன்றென்றான நாள்
இவற்றிற்கிடையில் அவள் நினைத்தது போலவே செய்தவை
காலைச் சற்று மாற்றி மடக்கி நீட்டியதும்
நிமிர்ந்து நன்றாகக் கால்களை அகட்டி நீட்டிப் படுத்துக்கொண்டதுமே
ஆம். அவளுக்குத் தேவைப்படுவது ஓய்வு. ஆனால் ஓட ஓட வைக்கிறது காலம். குழந்தையின் உறக்கத்தில் தொடங்கித் தாய் களைத்துறங்கப் புகும் வேளை எழும் குழந்தையின் விழிப்பில் மீண்டும் தொடங்குகிறது இந்த முற்றுப் புள்ளியற்றகதை.
ஒரே டக்கில் மிதிவண்டியில் ஏறுவதைப் பெருஞ்செயலாக எண்ணி எதிர்காற்றில் ஏறிமிதிக்கும் பதின்பருவத் தொடக்க முறுக்கும் வழிவழியாகச் சொல்லப்பட்டு வரும் பழங்கதையை அப்படியே நம்பும் பால் மனமும் நிரம்பிய 11ஆம் வகுப்புச் சிறுவர் இருவர் கதை தொன்மம். அவ்விருவரும் ஒருவரே என்பது தனிக்கதை
வளர்ந்தவர்கள் போலிருக்க எத்தனிக்கும் செயல்களில் ஒன்று ஓரிடம் போவது போல ஓரெட்டு வைத்துப் பின் எதையோ மறந்ததுபோல எதிர்த்திசையில் போவது. கொண்டாட்டங்களால் நட்பின் மீதான ஆசையை ஏக்கத்தை மீட்டெழுப்புதல் பெருவழக்கம். இவரோ நண்பனைப் பின்னிருந்து கட்டிக்கொண்டு நட்பாசை தூண்டுகிறார்
சொட்டும் நீர் சொட்டும் முன் சிறிதுசிறிதாக ஒழுகிக் கொஞ்சங்கொஞ்சமாக அதன் எடைகூடி அடிபருத்து மேல்குறுகிக் கீழிழுக்கும் பாரத்தால் தன் ஊற்றுவாயின் தொடர்பறுத்துச் சொட்டும். மரத்தில் தொங்கும் வாழைப்பூவை இதன் தலைகீழ் வடிவாய்க் காட்டுகிறார்.
குலை தள்ளிய வாழை நிலத்திற்குச் சுமை என அறுத்தகற்றியபின் அதன் அடி தருகிறது நனிசாறு. இப்படி இருக்கவேண்டும் வாழ்வு. அதிர்ந்து பேசாதவர்களையே ஓசையெழ அழக்கூட முடியாத வகையில் அறைந்து கொல்கிறது வாழ்வு. அவர்களும் அழுதழுது உழைத்துழைத்து ஓடாய்த் தேய்கின்றனர் ஊர் நடுவில் கனிமரமாய்.
தன் உடல் எடையே தனக்குச் சுமை தானே. ஆனால் அது சுமை என்று உணரும் நிலை வருமுன் வரும் இறப்பு பெரும்பேறு. ஊர்நடு கனிமரமாயினும் வீழ்ந்தால் பாதைக்குத் தடங்கலாகவே பார்க்கப்படும். பாரம் சிறுகதை இவ்வளவு கனம் கூட்டுகிறது.
Narsim எழுத்தில் மட்டுமே வெயிலால் தன்னிறத்தை இழக்கவும் கடலுக்குள் கரையவும் முடியும்.
மனைவியை ‘இவள்’ என்று குறிப்பிடுவதிலும் சுடச்சுட coffee வேண்டுமென நினைக்கையில் அவள் கொண்டு வருவதிலும் ஒரு “இது” இருக்கிறது.
Calculator watch கட்டி ஆட்டத்திற்கு வராமல் கடுப்படித்தாலும் Raghu எப்படிக் கதைசொல்லிக்கு ஓவியமோ அப்படியே Narsim எங்களுக்கு.
ஒரு வேறுபாடு. கதைசொல்லியைக் கடுப்பாக்கும் ஓவியம் Raghu. படிப்பாளிகளைக் களிப்பாக்கும் ஓவியம் Narsim.
பாம்பு கொத்தியவர் வாயில் நுரை சிறிது நேரமே இருக்கும் நுரை நிரம்பியது போலத் தோற்றமளித்து இடத்தை நிரப்பும் நுரை, கதையின் போக்கில் குழாயடிக் குடத்தில் நிறையும் நுரை என்ற தலைப்பு எத்தனை எத்தனைக் காரணத்திற்காக அந்தக் கதைக்கு வைக்கப்படிருக்கும்?
தொட்டிமீன் கடல் கண்டது போலச் சொம்புநீரில் இருந்து கற்குளத்துநீரில் குதித்துவிட்டோமோ என்ற உணர்வு தரும் சிறுகதைகள் தொன்மம் ஓவியம் நுரை.
Baasha படத்தில் Flashback உள்ளே ஒரு flashback வரும். அதுபோல் கதைக்குள் கதை சிற்பம்.
6 பாகமாக இக்கதையைப் பிரித்தேன்
கதையில் வரும் எழுத்தாளர் சொல்பவை மட்டுமே தனிக்கதை
கதைசொல்லி சொல்பவை மட்டுமே சிறுசிறு மாற்றத்துடன் தனிக்கதை
என வேறுவேறு வகையில் மாற்றிமாற்றி அடுக்கிப் படிப்பவரே தன் கற்பனைக்கேற்றவாறு கதைகளைச் செய்து கொள்ள முடியும் இவ்வொரு கதையில் இருந்து.
இக்கதையே ஒருபெருங்கற்பனை,
வாழ்வின் பிற்பாதியை எப்படிக் கழிக்க வேண்டும் என்று கனவு காணும் ஒருவரின் கற்பனை,
அவர் உருவாக்கும் கற்பனை உலகம்,
அவர் எழுதப்போகும் எழுத்துலகம்,
என அமைந்த கதை சிற்பம்.
எண்ணிறந்த தமிழாக்கம் நிறைந்த சிறுகதை குழி. உயிருதிர்காலத்தின் ஒருதுளி பெருங்குழி.
இதுவரை படித்த இவரின் பலகதையில் கதையின் தலைப்பிற்கும் கதைக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்பு இருப்பது பொறி தட்டியது இக்கதை படித்த போது தான்
படிப்போர் இனங்கண்டு இன்பம் எய்துக
தெரியும்ல ஒன்னயப்பத்தி எனும் தலைவியைப் புரிந்த தலைவன் திட்டம் என்றே தெரியாத வண்ணம் திட்டமிடும் தலைவன் இடம்பெறும் மேலுமொரு கதை புன்கணீர்
வெடவெடப்பான என்ற சொற்றொடரின் பொருளே இக்கதையில் தான் விளங்கியது எனக்கு.
‘எந்த எதிர்பார்ப்பும் நோக்கமும் இல்லாமல் செலுத்தப்படும் எளிய அன்பு ஒருபோதும் கைவிடாது தன்னை முறித்துக்கொள்ளாது’ என்ற கருத்து ‘அந்தரங்கம் துருவாத நட்பைப்’ போலினி மனத்தில் நிலைக்கும்.
படைவீரனையும் அரசியாக்கும் Chess,
கட்டளை பிறப்பிக்கவே ஆக்கப்பட்ட Remote,
இறப்பு வீட்டின் மணம்.
இறப்பு வீட்டுணவின்மீதான ஒவ்வாமை எனப் பலவற்றை இணைத்துப் புனையப்பட்ட கதை விழுங்கிய கவளம்.
அடுத்த அரசியைப் பகைநாட்டரசி போலப் படிப்பவர்க்கும் காட்டிய நுட்பத்தை நடைமுறையோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். இது தானே நடக்கிறது என்று தோன்றியது
‘நனைவிடைத் தோய்தலுக்கும் நனவிலி நிலைக்கும் இடையில் படைக்கப்படும் எழுத்து அதிகம் இணக்கம் தருவன’ என்கிறது பின்னட்டை. கனவின் எதிரானது நனவு நிலை. அந்நனவில் இவ்விரு நிலைக்கும் இடையிருப்பதோ கவனமிகு நனவுநிலை. ஆம் இத்தொகுப்பின் ஒவ்வொரு எழுத்தின் பின்னும் அவ்வளவு கவனம் குவிந்திருக்கிறது.
அத்துணைக் கவனத்துடன் பிறக்கும் எழுத்துக்கள் எப்படி இணக்கம் ஆகாமல் போகும் உண்மைக்கும் படிப்பவர்க்கும்?
Narsim படைப்புலகம் உயர்ந்தகன்றாழ்கிறது.
சொம்பு சிறியது தானே? எனில் அது கனக்குமா? அள்ள அள்ள நீரைச் சுரந்து கொண்டே இருக்கிறது இச்சொம்பு. ஆயினும் இனி ஆண்டாண்டு காலம் அது சுரக்கப்போகும் நீர் முழுதும் இப்பொழுதே உள்ளிருப்பது போல் கனக்கிறது.
படித்துக் கனத்து இலகுவாகுக மனமே!
– இலக்கியன் சேதுபாலா.
#சொம்புநீர்ப்பூ
எழுத்துப்பிரசுரம் வெளியீடு
(Zero degree publishing)