வணக்கம்,
சொம்புநீர்ப்பூ எனும் தலைப்பே என்னை வியக்க வைத்தது. வாசிக்கும் ஆர்வமும் மேலோங்கியது. உடனே புத்தகத்தை வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு வரிகளையும் இரண்டு, மூன்று முறை படித்துப் படித்துத் தான் அடுத்த வரிகளுக்குச் சென்றேன். காரணம் ஒரு கதைக்கு எப்படி இப்படி உவமைகளும், வர்ணனைகளும் எழுத முடிகிறது என்று வியக்க வைத்துப் படித்து ஒவ்வொரு கதைக்கும் நகர்ந்தேன்.
தமிழ் சொற்கள் எவ்வளவு அழகாக அணிக்கு அணி சேர்த்துள்ளது. ஆங்கிலச் சொற்களை அதிகமாகப் பார்த்ததாக நினைவு இல்லை.
“மகிழ்ச்சிக்கும் திளைப்பிற்கும் ஏன் பறவையையே சொல்கிறார்கள் பறவைகளுக்குத் துக்கம் இருக்காதா? பறவைகள் பறப்பதெல்லாம் மகிழ்ச்சியின் பாடலை பாடத் தானா என்ற கேள்விகள் சுசியின் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தன” வாசிப்பவரின் மனதுக்குள்ளும் ஓடிக்கொண்டே தான் இருந்தது.
சொம்பு நீர்ப்பு என் வாழ்வில் நான் கேட்டிராத ஒரு வார்த்தை . அதற்குண்டான விளக்கத்தை அறியும் பொழுது மனம் கனத்தது.
ஆடம்பரம் இல்லாத எளிமையான கிராமத்துத் சாயல்களில் கதைகள் அமைந்திருந்தது சிறப்பு.
தொன்மம் வாசிக்கும் ஒவ்வொரு வாசகனுக்கும் தன் இளம் வயது கிராம நினைவுகள் கட்டாயம் வந்து செல்லும். ” ஒரே டக்கில் ஏறி இரண்டே நிமிடத்தில் தெருமுனையை அடைந்து விட்டேன்” இவ்வாறு சுவாரசியமான சொற்றொடர்கள் ரசிக்க வைத்தது.
மூடநம்பிக்கைக்குச் சாட்டையடி.
பாரம்: ஒரு வாழைமரம் குலை தள்ளியது… “அந்த வாழைப்பூவினைப் பிறந்த குழந்தையைப் போல் தூக்கி லாவகமாகக் கைகளில் தாங்கி” இதுபோல இந்த வாழைப்பூவிற்கு யாரேனும் உவமை கூறி உள்ளார்களா என்று தோன்றியது.
வாழை மர வேரை ஒரு கோப்பை போல் குடைந்து அதில் மரத்தின் நீர் ஊரும் என்பதை பார்க்கும் ஆர்வத்தில் தூக்கம் பிடிக்கவில்லை பல அறிந்திடாத தகவல்கள் செய்திகளைக் கதையின் ஊடே புகுத்தியிருப்பது பிரமிக்க வைக்கிறது.
ஓவியம்: சிறுவர்களுக்கே உண்டான ஆர்வமும் குறும்பத்தனமும், கால்குலேட்டர் கைக்கடிகாரம் என இவ்வோவியம் உறுதியாக வாசகர்களைத் தங்கள் வாழ்வில் பின்னோக்கிச் சென்று வந்திருப்பார்கள் .
நுரை: இதுவரை அறிந்திராத செய்தியாக இருந்தது. கிராமத்துப் பேச்சு வழக்கும் பழக்கவழக்கங்களும் சிறப்பாகக் கூறப்பட்டிருந்தது. பகலில் அமைதியாக இருந்த சாலை இரவில் வழக்கமான சத்தத்தோடு இருந்தது என்று சாலையில் துவங்கி சாலையிலேயே முடிவு பெற்றது கதை.
சிற்பம்: கலைக்கூடத்திற்குச் சென்று வந்தது போல் இருந்தது.
அழகிய பெண்ணை அழகாய் வரிகளில் வரைந்திருந்தார்.
குழி: பெருந்தொற்றுக் காலங்களில் பழகிப்போன பழக்கவழக்கங்கள் வாடிக்கையாகிப் போனதும்… அடுக்குகள், மன அழுக்குகள் குழி தோண்டி எரிக்கப்பட்டது.
ஒவ்வொரு கதையும் நிறைவுறும் போது துவக்கமும் கைகோர்த்து விடைபெறுவதும் ஆசிரியருக்குப் பலம்.
இணையக் கூடுகை, செவித்திறன் என அழகான தமிழ்ச் சொற்கள் நிறையப் பயன்படுத்தப்பட்டிருந்தது.
புன்கணீர் : ஒரு பள்ளிப் பருவக் காதல் மிகவும் அழகாக விரசம் இல்லாமல் கூறப்பட்டிருந்தது. தலைகீழாய் நின்றால் கன்னம் வைக்கும் என்று நிற்க… உச்சந்தலை கன்னிப் போனதுதான் மிச்சம்.
ஒல்லியான இளைஞன் வலிகளும், எடை கூட எடுத்த பிராயத்தனங்களும் நகைச்சுவை.
விழுங்கிய கவளத்திலும் செஸ் விளையாட்டைக் கொண்டு நகர்த்தியுள்ளது கதாசிரியரின் விளையாட்டு மீதான ஆர்வத்தையும் உணரமுடிந்தது.
ஒன்பது கதைகளிலும் மெல்லிய சோகங்கள் இழையோட, நியாயமான, எதார்த்தமான வாழ்க்கை முறையைப் படம்பிடித்துக் காட்டிய எழுத்தாளர் நர்சிம் அவர்களுக்கு
மேலும் பல நூல்கள் படைத்திட வாழ்த்துகள்.
செந்தாமரை
கோவை.
11/07/25
1.42am