அசாதாரணமான வரிகள் நம்மை ஆழ்ந்து யோசிக்கும்படி தூண்டுகிறது. நம் உள்ளத்தில் தோன்றும் எல்லா நிகழ்வுகளுக்குமே எழுத்துருவம் கொடுத்து விட முடியாது. ஆனால் இந்நூலின் எழுத்தாளர் வித்தியாசமான எண்ணங்களுக்கு உருவம் கொடுத்து நடமாட விட்டிருக்கிறார். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளைப் படிக்கும் பொழுது இயக்குனர் பாலச்சந்தர் அவர்களுடன் பயணிப்பதைப் போல ஒரு உணர்வை தூண்டுகிறது. இந்நூலில் அடங்கியுள்ள ஒன்பது கதைகளும் நவரத்தினங்கள் என்று சுருக்கமாக கூறிவிடலாம்.
எழுத்தாளர் நர்சிமின் “சொம்புநீர்ப்பூ” சிறுகதைத்தொகுப்பு யதார்த்தமும் கவித்துவமும் இணைந்த ஒரு அபூர்வமான கலவை.
எளிய மொழியில் ஆழமான பொருளுடன், சிக்கலான தத்துவங்களைக் கூட மிக எளிய நடுத்தர வர்க்கத்து மொழியில் கடத்துவது இவரது தனிச்சிறப்பு.
வாசிப்பதற்கு எளிமையாக இருந்தாலும், அவை வாசகனின் மனதில் நீண்ட காலத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. விவரிக்கும்போது, அங்கிருக்கும் வாசனை, சத்தம் மற்றும் உணர்வுகளை மிக நுட்பமாகப் பதிவு செய்கிறார். வாசிப்பவர் அந்த இடத்திற்கே நேரில் சென்றது போன்ற ஒரு திரைப்பட அனுபவத்தை அவரது சொற்கள் வழங்குகின்றன. மனிதர்களுக்கு இடையிலான ஈகோ, அன்பு, ஏக்கம் மற்றும் மௌனங்களைப் பேசுவதில் இவர் ஆற்றல் பிரமிக்கத்தக்கது.
வாழ்வின் மிகச்சிறிய தருணங்களில் ஒளிந்திருக்கும் பேரழகைக் கண்டெடுத்துத் தருவதே நர்சிமின் எழுத்தாற்றலுக்குச் சான்று.
பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, மொத்த நூலிற்கும் சேர்த்து சொம்புநீர்ப்பூ என்னும் ஒரு கதையே நூலின் பெருமையை பறைசாற்றும் விதத்தில் அமைந்துள்ளது. கணவன் இறக்கும் சமயத்தில் மனைவி கர்ப்பமாக இருந்தால் அதை உறவினர்களுக்கு உணர்த்தும் விதமாக வாசலில் சொம்பில் நீர்நிரப்பி அவள் எத்தனை மாதம் கர்ப்பம் என்பதை குறிக்கும் வகையில் அத்தனை பூக்களை சொம்பு நீரில் போட்டு உறவுகளுக்கு தெரிவிப்பது எப்படிப்பட்ட உயர்ந்த கலாச்சாரம் அந்த வரியை படிக்கும் போது மனதில் ஏனோ சிறு வலி தோன்றுகிறது.
புத்தகத்தில் கவர்ந்த வரிகள்
புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு வரியும் கவர்ந்து இழுக்கும் வகையில் தான் எழுத்தாளர் செதுக்கி உள்ளார். அதில் என்னைக் கவர்ந்த வரிகள், “மதிய நேர அமைதியின் மீது கொஞ்சமாய் காய்கறி விற்பனை சத்தம் படற துவங்கியது” பச்சைக் குழந்தையை பற்றி கூறும் போது, அதன் மீது “பாலும் அழுக்கும் கலந்த வாசம் ”
புத்தகம் மூலம் சமூகத்திற்கு சொல்ல விழையும் கருத்து, வெள்ளித்திரையில் மட்டுமல்ல நூல்களிலும் கூட ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கொடுத்து கண்கள் முன்னே காட்சிகள் போல உலவ விட முடியும் என்று சவால் விடும் விதமாக அமைந்துள்ளது.
-Harshitha Devi.

