HomeUncategorizedமகிழ்திகழ் நன்றி - சொம்புநீர்ப்பூ

மகிழ்திகழ் நன்றி – சொம்புநீர்ப்பூ

வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்பதோடு, நூல் வெளியிட்டுப்பார் என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம். அப்படித்தான் அத்துணை திட்டமிடல்கள், ஏற்பாடுகள் செய்யவேண்டியதாக இருக்கிறது. இதற்கு முன்னர் நிகழ்ந்த பஃறுளி விழா மற்றும் காழ் விழாவிற்கு நானே அனைத்தையும் செய்ததால்தான் மேற்சொன்ன வாக்கியம். ஆம். இந்தக் கட்டுரையைப் போலத்தான், எங்கிருந்து ஆரம்பிப்பது என்றே தெரியாது. ஒருவழியாக, தேதியில் இருந்து ஆரம்பித்து, அந்தத் தேதியில் எந்த அரங்கம் கிடைக்கிறது என்று பார்த்து, இதுவும் அதுவும் ஒத்துப்போக, பேசும் ஆளுமைகளின் திகதி இந்தத் திகதியோடு ஒத்துப்போகிறதா என்று பார்த்தால் அது எப்படிப் போகும் என்பதுபோல் முன் பின் இழுத்து ஒருவழியாக இந்த அரங்கம் அந்தத் தேதி அல்லது அந்த அரங்கம் இந்தத்தேதி என முடிவான பிறகு, பேனரில் துவங்கலாம் என்று ஆரம்பித்தால், புத்தக அட்டைப்படம் நல்ல HDயில் வேண்டும் எனக்கேட்பார் டிஸைனர். நீங்கள் எதைக்கொடுத்தாலும் அது HD இல்லை என்பார்கள். பிறகு நம் புகைப்படம். பேனர் டிஸைனருக்கு அருகில் அமர்ந்து நாமே நம் முகத்தைத் திரையில் பார்க்கப் பார்க்க நாணம் பிடுங்கும். அதனால் எதையாவது எப்படியாது உருட்டுங்கள் போதும் எனும் மனநிலைக்குத் தள்ளப்படுவோம். பிறகு அழைப்பிதழ், அதில் சிறப்பு அழைப்பாளர்களின் பெயர்களுக்கு முன்னரும் பின்னரும் என்ன போட வேண்டும் என்ற விசயம். இது மிக எளிதானதுதானே, என்றால், அதுதான் இல்லை. டிஸைனர் விரல்நுனியில் எண்ட்டர் வைத்துக்கொண்டு என்ன ’ம்ம் ம்ம்’ என்று ஒரு பெயரில் கர்சர் நிற்க நம்மைப் பார்ப்பார், நாம் அழைக்கும் விருந்தினர் போனை எடுக்கமாட்டார். சரி இப்படிப் போடுங்கள் என்று எண்ட்டர் தட்டி முடிந்து வெளியே வரும்போது அழைப்பு வரும். எடுத்துக் கேட்டால் மொத்தமாக வேறு ஒன்றைப் பெயருக்கு பின்னர் போட வேண்டும் அல்லது போடவேக் கூடாது எனும் அன்புக்கட்டளை. மீண்டும் ஓடிப்போய்ப் பார்த்தால் அவர் விட்டால் போதும் என டெஸ்க்கில் இருந்து ஓடிப்போயிருப்பார். “டீ சாப்ட போய்ருக்காப்ள” என்பார்கள். டீயை டின்னர் வரை இழுத்துவிட்டு அந்த ’வருவாப்ள’ வருவார். பேசி ஆகவைத்து, அழைப்பிதழ் பேனர் வேலை முடிந்தது என நினைப்போம். மறுநாள் அதில் சில மாற்றங்கள் இருக்கும். இப்போது டிஸைனரை விட நாமே அட இருக்கட்டும் பார்த்துக்கொள்ளலாம் என ஆகிவிடுவோம். தேதி,அரங்கம், சிறப்பு அழைப்பாளர்கள், அழைப்பிதழ், பேனர் எனும் இந்த வரிசையில் ஏதேனும் ஒன்று சர்வ நிச்சயமாகத் தெரியவில்லை என்றாலும் ஒருவேலையும் ஆகாது. இது ஒரு இண்ட்டர்-லிங்க் சமாச்சாரம்.

ஆனதா, அடுத்து, தொகுப்பாளர் யார் எனும் தொங்கல். பிறகு, விழாவிற்கு வரும் விருந்தினர்களுக்கு எதைப் பரிசாகக் கொடுப்பது எனும் குழப்பம். திருவள்ளுவர் சிலை என்றால் வள்ளுவரே எழுந்து ஓடிவிடுவார், அல்லது விருந்தினர்கள் வீட்டில் சிலை செதுக்கும் சிற்பியின் அறைபோல் வள்ளுவர்களாக பத்துக்கும் மேல். சரி, சிலை வேண்டாம் பொன்னாடை.. அட அதெல்லாம் எந்தக்காலம் ஆகிவிட்டது. புத்தகம்? எத்தன.. சரி வீட்டு உபயோகப்பொருள் எனப் போனால் விலையைப் பார்த்து புத்தகங்கள்தான் சிறந்தவை அறிவை வளர்க்கும், நூல் அறிமுக விழாவில் புத்தகம் கொடுக்காமல் வேறு எதைக்கொடுப்பது என ஞானம் திருகும். ஓரளவு இதெல்லாம் முடித்து, வருகை தருவோருக்குத் தேநீர், ஸ்நாக்ஸ்.. மேற்சொன்ன எல்லாமே காசு கொடுத்தால் வந்துவிடும் என்றுதானே நினைக்கிறீர்கள்..நானும் தான். ஆனால் இவை அனைத்தையும் சரியான நேரத்திற்கு சரியான இடத்தில் வரவைப்பதும் அதற்கான தொடர் அழைப்புகளை நிகழ்த்துவதும் தான் சவால். எல்லாம் தயார் எனும்போது திடீரென சிறப்பு விருந்தினரைக் காணவில்லையே என அழைத்தால் அவர் முதலில் சொன்ன அரங்கம் நோக்கிப் போய்க்கொண்டிருப்பார். அவரை மறித்து இந்தப்பக்கமாக மடைமாற்றும்போதே மணியைப்பார்த்து பதறிவிடுவோம்.

இவை அனைத்தையும் செய்து, கூட்டம் வரவேண்டுமே எனும் சிற்றச்சமும் ஏற்புரை எனும் பேரச்சமும் கலந்து, நாளை முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

ஆனால் எப்படி, வீடு கட்டுவதையும் திருமண நிகழ்வையும் ‘outsourcing’ அல்லது ‘contract’ மூலம் செய்கிறோமோ அப்படி நூல் வெளியீட்டு விழாவையும் கச்சிதமாக செய்து கொடுக்க ஆள் இருக்கிறது என்பதே இலக்கிய உலகின் இன்பச்செய்தி. ஆம், லாந்தர் ஆர்ட்ஸ் & எண்ட்டர்ட்டெய்ன்மெண்ட் எனும் அமைப்பின் மூலம் கவிஞர் பாலைவன லாந்தர் & கோ இந்த சொம்புநீர்ப்பூ நூல் அறிமுக விழாவைத் திறம்படச் செய்து கொடுத்தார்கள். மேலே இருக்கும் பத்திகளில் இருக்கும் அத்துணை செயல்களையும் மிக நேர்த்தியாகச் செய்து, எல்லாவற்றையும் ஒரு நாள் முன்னரே கச்சிதமாக முடித்து, விழாவில் எந்த சிறு சுணக்கமும் ஏற்படாதவாறு ஒருங்கிணைத்து முடித்துக் கொடுத்தார்கள். அத்தோடு நில்லாமல், இந்த விழாவில் இதைச் செய்தால் நன்றாக இருக்கும் எனும் options தந்தார்கள். இதுதான் ஒரு தொழிலின் value added. அப்படி அவர்கள் கொடுத்த யோசனைதான், திணைவாசிகளின் நிகழ்த்துக்கலை. மிக அற்புதமான நிகழ்த்துகலைஞர்கள் சொம்புநீர்ப்பூ சிறுகதையை மிக உயிர்ப்பாக நிகழ்த்தி அரங்கத்தை அசர வைத்தார்கள்.

குறைந்ததொரு கட்டணம் ஆனால் நிறைவும் நேர்த்தியுமான பணி, நன்றி பாலைவன லாந்தர் குழுவினர்க்கு.

திணைநிலவாசிகளின் இந்த நிகழ்த்துக்கலை அரங்கை உறையவைத்தது.

அடுத்து, நம் ட்விட்டர் (X தளம்) மக்களுக்குத்தான் பெருநன்றி. விழா குறித்த செய்தி வந்த நாளில் இருந்தே நம் மக்கள் புத்தகம் குறித்தும் விழா குறித்தும் பகிர்ந்து, நண்பர்கள் சகிதம் விழாவில் கலந்துகொண்டார்கள்.

அரங்கின் வாசலில் வைக்கப்பட்ட பிரம்மாண்ட பேனர், சொம்புநீர்ப்பூ அட்டைப்படம் தாங்கிய கேக், சாக்லேட் கவர்களில் என் புகைப்படம், என் புத்தகங்களின் அட்டைப்படம், கற்பக விருட்சம், பேனாக்கள், புத்தகங்கள், குறிப்பேடுகள் என அன்பில் ஆழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்.

தோழர் மணிமாறன் பேசியபொழுது “தமிழின் ஆகச்சிறந்த சிறுகதை ஒன்று இந்தத் தொகுப்பில் இருக்கிறது” எனும் பொழுது சலனமே இல்லாமல் மனம் திம்மென்று நிறைந்துகொண்டது. ஏற்கனவே எழுத்தாளர் என்.ஸ்ரீராம் ‘கதையற்ற கதையும் சம்பங்களுமாக அசோகமித்திரன் உக்தி என்றதே பெரும் மகிழ்வும் பயமும் கலந்த மனநிலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த மகிழ்மனநிலையில் ததும்பிக்கொண்டிருக்கும் பொழுது, இலக்கிய விமர்சகர், எழுத்தாளார் திரு ஜா.ரா. மிக மிக நுட்பமான அவதானமாகச் சொன்ன “ Nano detailing’ எனும் பதம், கலாச்சாரத்தை அதிநுட்பமாக விவரிக்கும் தன்மை கொண்ட வெகுசில எழுத்தாளர்கள் எனச் சொன்ன விதம் என எல்லாம் கலந்து காற்றில் மிதக்க வைத்துவிட்டது. ஆர்ஜே மணிகண்டனின் வெள்ளந்தி வாக்கியங்கள் நெல்லைத்தமிழின் இனிமை என மிகச்சிறப்பான மேடையாக அமைந்தது.

பேசியவர்கள் விமர்சனமாகச் சொன்ன, “மதுரைக்களத்தை விட்டு வெளியே வரும் நேரம் வந்துவிட்டது” என்பதை மூளை ஏற்றாலும் மனம் ஏற்க மறுக்கிறது. ஆம். இன்னும் எழுதப்படவேண்டிய என் ஊர் மாந்தர்களும் மதுரைக்கதைகளும் ஏராளமாய் இருக்கின்றன. போலவே, சார்மினார் எக்ஸ்பிரஸில் ஹைதாராபாத் களமும், மிளிர்மனதில் சென்னையும் கடலும் கடல் சார்ந்தும் எழுதி இருந்தாலும், இன்னும் எழுதப்படவேண்டிய ஹைதராபாத்தின் கதைகளும் சென்னைக் களமும் இருக்கின்றன. எழுதுவேன் ஆகலாம்.

இடைநிலை இலக்கியமாக அங்கீகரப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி. ஏனெனில் நான் தீவிர இலக்கியத்தில் இருந்து துவங்கியவன். சங்க இலக்கியத்தின் மீது ஈடுபாடும் பற்றும் உள்ளவன். தீவிர இலக்கியமாக இயங்கும்பொழுது ஏற்படும் மனச்சோர்வு இடைநிலை இலகியத்தின் போது இருப்பதில்லை என்றெல்லாம் எழுதி பம்மாத்து செய்துவிடலாம்தான். ஆனால் உண்மை என்னவெனில், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மனநிலை. மொழியை நான் தெரிவுசெய்வதில்லை. ஒரு சிற்றோடையின் ஆரம்பம் போல்தான் மொழி. அது நதியாக மாறுவதும் அருவியாகப் பாய்வதும் அவ்வந்தக் காலகட்டத்தின் மனநிலையைப் பொறுத்தது. மொழி அமைதியும் ஆற்றொழுக்கும் தான் முதன்மை. அது இருக்கும் வரை நாம் இருப்போம், நம் எழுத்தின் மூலம்.

இதுபோன்ற கூட்டங்களில் சொல்லப்படும் கருத்துகள் மிகுந்த பொறுப்பைக் கொண்டுவந்துவிடுகின்றன. மகிழ்வும் அச்சமும் பொறுப்பும் சேரும்பொழுது மனதில் ஒரு பேரமைதி குடிகொண்டுவிடும். ஆம். இரவில் ஓடும் ஆற்றின் வெகு சன்னமான சலசலப்பைப் போல் இனி வரும் நாட்களில் இப்பெரும் நாளின் மகிழ்வை மனதின் ஆழத்தில் ஓடவிடவேண்டும். அது பாய்ந்து பாய்ந்து எம் மொழியெனும் கூழாங்கல்லைப் பளபளக்கச் செய்யட்டும். குளுமைக்கு குறைவில்லை அங்கு.

இவ்வளவிற்கும் அடிப்படை, வெகு நேர்த்தியான வடிவமைப்போடு இப்புத்தகத்தைக் கொண்டு வந்த எழுத்துப்பிரசுரம் (ஜீரோ டிகிரி) திரு. ராம்ஜிக்கும் காயத்திரி மேடத்திற்கும் நன்றியும் அன்பும்.

வெளியூர்களில் இருந்தும், சென்னையின் பிரிதோர் மூலையில் இருந்தும் கடும் வாகன நெரிசலைப் பொருட்படுத்தாது வந்து இருந்து, நாளையும் விழாவையும் சிறப்பாக நிகழ்த்திய அனைவரின் அன்பிற்கும் நன்றி.

சிறப்பு விருந்தினர்கள் பேசிய காணொளிகள் தனித்தனிப் பதிவுகளாக ‘நிகழ்வுகள்’ பகுதியில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.

நன்றியுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை