அப்பா இப்போது நலமாக இருக்கிறார். சென்ற வாரத்தில் தம்பியிடம் பேசும்போது, ‘அப்பாக்கு லேசான தொண்டை வலிதான் ஆனா’ என்று இழுத்தான். இந்த ‘ஆனால்’ எனும் சொல் ஒரு மாயை. அதனுள் நிறைய பொருட்களை பொதித்துப் புதைத்து ’மெத்தி’ விடலாம். போட்டது போட்டபடி என்பார்களே அப்படி, அந்த இரவில் கிளம்பிவிட்டேன். வண்டியை எடுக்கும்வரை நான் மட்டும் போவதாகத்தான் இருந்தது. பார்த்தால், தூங்கிக்கொண்டே அருகில் அமர்ந்தான். ‘நானும் வர்றேன்ப்பா’. “ஏண்டா ஒன்னும் இல்ல சும்மா தொண்டவலிதான் தாத்தாவுக்கு”. ”ம்ம்..ஆனா you’re not ok” அப்டீன்னான். ஓஹ் என்று தோன்றியது எனக்கு. நான் இயல்பாக இருப்பதாகத்தான் நினைத்திருந்தேன்.
பொதுவாக, நான் மாலை ஆறு மணிக்கு மேல் தேசிய நெடுஞ்சாலைப் பயணங்களைத் தவிர்த்துவிடுவேன். அதிகாலை 5 மணிக்குக் கிளம்புவதே வழக்கம். ‘ஆனால்’ இம்முறை இருப்புக்கொள்ளாமல் கிளம்பிவிட்டேன். அது எவ்வளவு பெரிய தவறு! ஆம். சமீபத்தியப் பெருமழையின் விளைவாக மிக மோசமான சாலைகள், சென்னை விழுப்புரம் வரை குண்டும் குழியுமான சாலைகள், போதிய வெளிச்சமற்ற விளக்குகள், அதிவெளிச்சமான எதிர்வரு வாகனங்கள் என, தவிர்த்திருக்க வேண்டிய இரவுப்பயணம்.
அதிகாலையில் வீட்டிற்குப் போனதும் வழக்கமான அந்தக் குரல் கொஞ்சம் பிசிறடித்தது போல் இருந்தது ‘இதுக்குத்தான் ஒங்கிட்ட சொல்லாதனு சொன்னேன்’. அவ்வளவுதான்.
ஒருவாரம் அவரோடுதான் இருந்தேன்..இதுவரை எதுவெல்லாம் இந்த சென்னை வாழ்வின் அன்றாட முக்கியங்கள் என்று இருந்தேனோ அவை யாவும் ஒன்றுமேயில்லை என்பது போல் ஒரு வாரம் ‘சும்ம்மா’ அவரோடு இருந்தேன். யோசித்துப் பார்த்தால் கடந்த 25 வருடங்களில் நான்கு ஐந்து நாட்கள் கூட தொடர்ந்து இப்படி ‘சும்மா’ அங்கு அவரோடு இருந்ததில்லை என்று தோன்றியது. சிலபல மருத்துவ சோதனைகள் முடித்து, கிரிக்கெட் அரசியல் என எம் திண்ணை 20,25 ஆண்டுகளுக்கு முந்தையது போல் ஒரு வாரமும் போனது. போகட்டும்.
கிளம்பும்போது, ‘அப்ப இப்பிடி நாலஞ்சு நாள் இருக்கமாதிரி வரலாம்போலயே’ என்றார். ஆம். மீண்டும் சும்மா போகவேண்டும். சும்மா சும்மா போகவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். நிர்பந்தங்கள் ஏதுமற்ற பயணங்கள் அமைதல் வேண்டும்.
இந்த ஒருவாரத்தில் என்னவெல்லாமோ நடந்திருக்கிறது. ஆனானப்பட்ட அப்பா-மகன் அன்புமணியே அப்பாவை எதிர்த்து மைக்கைத் தூக்கி எறிந்தார் நேற்று.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த கொடூரம், இழுக்கு. உடனடியாக நடவடிக்கை எடுத்து காலை உடைத்தது அரசு. நன்று. ஆனால் இவ்வளவு எளிதாக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ‘இப்படி செய்யமுடியும் எனில்’. எனும் அச்சம் மக்களிடம் ஏற்பட்டதை என்ன செய்து நேர் ஆக்கப்போகிறார் முதல்வர் எனப் பார்ப்போம். இது நிகழ்ந்திருக்கக் கூடாது.
சென்னையில் புத்தகத் திருவிழா ஆரம்பித்து விட்டது. சொல்லப்போனால் இதற்காகத்தான் ஓடி வந்தேன் என்று நினைக்கிறேன். பனுவல் அரங்கில் மிளிர் புத்தகங்கள் அடுக்கப்பட்டப் புகைப்படத்தைப் பார்த்ததும் இன்னும் ஆவல் உந்த, இதோ, சென்னை வந்தாகிவிட்டது.
இன்று காலை 11:30 மணியில் இருந்து மதியம் வரை பனுவல் அரங்கத்தில் (115) இருப்பேன்..வழக்கம்போல், வாய்ப்புள்ள, எதிர்படும் நண்பர்களே, சந்திப்போம்.
