குலை தள்ளத்துவங்கிய நாளில் இருந்து காய்களின் கனம் தாங்காமல் மரம் கொஞ்சம் கொஞ்சமாய் வளைந்துகொடுத்துக் கொண்டிருந்தது. சுவருக்கும் மரத்திற்குமான இடைவெளி மெல்ல விலகத்துவங்கியதைப் பார்ப்பதில்தான் காலைகள் துலங்கின. பச்சைப்பசுங்காய்களைத் தொட்டுப் பார்ப்பதும் லேசாகத் தட்டிப்பார்ப்பதும் நுட்பமாக அந்த ஓசையின் வேறுபாடுகளை அறிவதும் ஏதோ பெரிய விவசாய விஞ்ஞான அணுகுமுறை போல் பிரமையை ஏற்படுத்தியது. வாழைப்பூ மலர்ந்த நாள் இன்னும் நினைவில் இருக்கிறது. சொல்லப்போனால் அந்த வாசம். நன்றாக நினைவிருக்கிறது, தூக்கம் பிடிக்காமல் வெளியில் வந்த இரவில் வாடைக்காற்றோடு குப்பென்று வந்தது அந்த முதல் பூ வாசம். பெருந்திரள் நீர் ஒன்று குவிந்து சொட்டத் தயாராக நின்றது போல் இருந்தது, வாழைப்பூ. விரல்களில் லேசான நடுக்கத்தோடும் மனம் முழுதும் பரவியிருந்த மகிழ்ச்சியோடும் தொட்டுத்தடவிப் பார்த்த நொடி, அனிச்சையாக விரல்களை முகர்ந்து பார்த்த அந்த லயிப்பு. சடசடவென சில நாட்களில் பூக்கள் விரிந்து வாசம் வீடு முழுக்க விரவத் துவங்கியது. சற்று சாய்வான கோணத்தில் கத்தியை வைத்து லேசாகத் தொட்டு அதன் கடினம் உணர்ந்து கொஞ்சம் அழுத்தம் கொடுத்த நொடியில் சட்டென கீழிறங்கிய பூவை பதறிப் பிடித்து, பிறந்த குழந்தையைத் தூக்கும் லாகவத்தில் கைகளில் தாங்கி உள்ளே எடுத்துப் போய் காட்டிய அதிகாலையில் இவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. தண்டிலிருந்து வழிந்த பால் பிசுபிசுப்பு தரையெங்கும் ஒழுகி இருந்தது, திரும்பி நடக்கையில்தான் தெரிந்தது. வெட்டிய இடத்தில் இருந்து இன்னும் பால் சொட்டிக்கொண்டிருந்தது. கீழே மணலில் அந்த ஈரத்தில் கட்டெறும்புகள் மொய்க்கத் துவங்கி இருந்தன. அன்றைய நாள் முழுதும் அந்தப் பிசுபிசுப்பு மனதில் அப்பி இருந்தது இன்னும் நினைவில் இருக்கிறது.
“காய் நல்லா கடுக்குனு இருக்கு” எதிர்வீட்டிலிருக்கும் வள்ளியம்மாள், கையில் பால் பாக்கெட்டுகளை வைத்துக்கொண்டு வாழைமரத்தையும், காயைத் தட்டிப்பார்க்கும் என்னையும் பார்த்துச் சொன்னார்.
தலையாட்டி ஆமோதித்தேன் தட்டுவதை நிறுத்தாமல். அமைதியாக நிமிர்ந்து பார்த்தார். நன்றாக வளர்ந்து இருந்தது மரம். நிமிர்ந்து, ஓர் இலை வான் நோக்கி சுருண்டு நீண்டு இருக்க மற்ற இலைகள் நன்றாக விரிந்து தளதளவென இருந்தன.
சட்டென நினைவுக்கு வந்தவனாய், “இப்ப சார்க்கு எப்பிடி இருக்கு” என்று கேட்டேன். மரத்தில் இருந்து பார்வையை விலக்காமல் தலையாட்டினார். பூனைக்குட்டியின் காதைப் பிடித்திருந்ததுபோல் பால் பாக்கெட்டுகள் இரண்டையும் பிடித்திருந்தவர், சட்டெனத் திரும்பி, வீட்டிற்குள் போய்விட்டார்.
காப்பியை எடுத்து வந்தவள், “அவங்க கிட்ட ஏன் கேட்குற, பாவம், நேத்துதான் ஒருபாட்டம் அழுதுட்டுப் போனாங்க” என்றவள் என் பதிலை எதிர்பார்க்காமல் உள்ளே போய்விட்டாள்.
நாளிதழை விரித்து உதறி கடைசிப்பக்கத்தில் இருந்து ஆரம்பித்தேன். தன்னுடைய லோட்டாவை எடுத்துக் கொண்டு வந்து எதிரில் அமர்ந்தவள், “நல்லா ஆத்திட்டேன் குடி” என்றாள்.
எதிர் வீட்டினரின் சொந்த ஊர் திருநெல்வேலியோ தென்காசியோ என்று சொன்ன நினைவு. ஆனால் சென்னைக்குக் குடியேறி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்டனவாம். மகன், மருமகள் என இனி சென்னைதான் சொந்த ஊர் என்பதுபோல் ஆகிவிட்டது அவர்களுக்கு. ஏதோ அரசுத்துறையில் இருந்து ஓய்வு பெற்றவர். எதிர்பட்டால் சிரிப்பார். அவ்வளவுதான். சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்களில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர், அந்த கறுப்புக் கண்ணாடியை அணிந்து கொண்டு நடைபயின்று கொண்டிருக்க, சிகிச்சை நல்லபடியாக முடிந்ததா என்ற என் கேள்விக்கு,
“அதாவது சார், இத்தன நாளா இப்பிடி அழுக்கு வேட்டியா தர்றாங்களேனு நானே மதியம் துவைச்சு துவைச்சு காயப்போட்டுட்டு இருந்தேன். இப்போ ஆப்பரேஷன் முடிஞ்சதும் பாத்தா, தும்பப் பூ மாதிரி இருக்கு எல்லா வேட்டியும், அழுக்கும் இல்ல ஒண்ணும் இல்ல, கண்ணு அப்பிடி மங்களா மசமசனு இருந்துருக்கு” சொல்லிவிட்டு சத்தமாகச் சிரித்தார். எனக்கும் சிரிப்பு வந்தது, ஆனால் அது மரியாதைக் குறைவாகிவிடும் என்ற நினைப்பில் மென்மையான புன்முறுவல் பூத்திருந்தேன்.
கடந்த ஓரிரண்டு வாரங்களாக உடல்நிலை சரி இல்லை என மருத்துவமனைக்கும் வீட்டிற்குமாக இருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான் அவருடைய மருமகள், ஊரில் இருக்கும் அவர்களுடைய தூரத்துச் சொந்தக்காரர் வீட்டிற்கு அழைத்து விசாரித்திருக்கிறார். அந்த சொந்தக்காரர் வீட்டில் சமீபமாக யாரோ ஒரு பாட்டி இறந்து போயிருக்கிறார்களாம். இவருடைய மருமகள் அவர்களை அழைத்து, மரணம் நிமித்தம் ஏற்பட்ட செலவுகள், சடங்குகளுக்கு ஆன செலவுகள் எல்லாம் எவ்வளவு எனக் கேட்டிருக்கிறார். அந்த சொந்தக்காரப் பெண்மணி வள்ளியம்மாளிடம் அவர் மருமகள் கேட்ட விபரங்களைச் சொல்லி விபரம் விசாரித்திருக்கிறார். அதைக் கேட்டதில் இருந்து வள்ளியம்மாளுக்குத் துக்கம் தாங்கவில்லை. இப்படி எவரேனும் விசாரிப்பார்களா. அதுவும் அப்படி ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை, சரி ஆகிவிடும் என்று நம்பிக்கொண்டிருக்கும் நிலையில் இவள் இப்படி தயாராகிவிட்டாளே என சொல்லி அழுதிருக்கிறார்.
மேம்போக்காக நாளிதழ் வாசிப்பது போல் பாவனையில் இருந்தாலும் என் மனம் முழுக்க இவள் சொல்லிமுடித்த இந்த சங்கதிகள்தான் சுழன்று கொண்டிருந்தன. சற்றைக்கு முன்னர் அந்த அம்மாவிடம் அவரைப் பற்றி கேட்டிருக்கக் கூடாது எனத் தோன்றியது. இல்லை, இதெல்லாம் தானே கேட்க வேண்டும். எதிர்வீட்டில் இருந்தாலும் அவ்வளவாக பேசிக்கொள்ளாமல் அன்றாடங்கள் கடக்கும் ஊர்தான் இது என்றாலும் இதுபோன்ற தருணங்களிலாவது என்ன ஏதென்று விசாரிக்க வேண்டும்தான் எனத் தோன்றியது. இதெல்லாம் குறைந்தபட்சக் கடமை என்றெல்லாம் பெரிய பெரிய யோசனைகளாக உருவெடுத்துக் கொண்டிருந்தது. நான் குடித்துமுடித்துவிட்டால் டம்ளரை வாங்கிக்கொண்டு எழுந்து போகலாம் எனும் முஸ்தீபுகளோடு அமர்ந்திருக்கிறாள் என அவளை பார்த்ததும் புரிந்தது. அடியில் இருந்த காப்பி குளிர்ந்து கொடுத்திருக்க, வீழ்படிவாக இருந்த சக்கரையும் ஆறிய கசடுகளும் அதுவரை கொடுத்த ருசியை ஒரேடியாய் வீழ்த்தி உமட்டிக் கொண்டு வந்தது. ஒரு நொடி சுதாரித்து அதை உள்ளனுப்பி சகஜமாகி மீண்டும் நாளிதழைத் திறந்தேன்.
மாலை மூன்று மணி என்பது கடற்கரையைப் பொறுத்தவரை பெரும் சூன்யமான பொழுது எனத் தோன்றியது. வெய்யில் அதன் நிறத்தை இழந்து கொண்டிருந்தது. வீட்டு வேலைகளையெல்லாம் முடித்து ஆய்ந்து ஓய்ந்து கொஞ்சம் படுத்து உறங்கும் பேரிளம்பெண் போல் அசந்து கிடந்தது கடல். அலைகள் கூட மிக மிக சன்னமாக, சோம்பலாய் வந்து போய் கொண்டிருந்தன. யாரோ வீசியெறிந்துவிட்டுப் போன காய்ந்த கனகாம்பரத்தை நனைத்துப்போனது அலை. அது ஒரு அசூயைக் கொணர்ந்தது. நனைந்த நொடியில் அதில் சிக்குண்டிருந்த முடிகளும் சாயம்போன கனகாம்பரத்தின் பிசுபிசுப்புமென மனதை என்னவோ செய்தது போல் இருந்தது. சொல்லப்போனால் காலையில் இருந்து மனம் ஒரு நிலைப்பாட்டில் இல்லை என்பதால்தான் வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்குப் போகாமல் இப்படி கடற்கரைக்கு வந்து சற்று அமர்ந்துவிட்டு போகலாம் என வந்திருக்கிறேன். அவ்வப்பொழுது இந்த மதிய அல்லது முன்மாலையில் வீட்டிற்குப் போவது வழக்கம். அப்போதெல்லாம் எதிர்வீட்டு வள்ளியம்மாள் வெளியே அந்த இறங்குவெய்யிலில் சுவருக்கு அருகில் கிடக்கும் கல்லில் ஏறி நின்று மல்லிமொக்குகளைப் பறித்துக் கொண்டிருப்பார். “சாப்பாட்டுக்கா” என்று கேட்பார். வாழை மரத்தின் இலையைக் காட்டி லேசாகக் கீறி விடச் சொல்வார். “வீட்ல இன்னும் வரல போல, சாவி இருக்கா” என்பார். எப்படியும் எழுபது வயது இருக்கும், ஆனாலும் இப்படிக் காலை, மதியம் மாலை என வீட்டின் வெளியே இதுபோன்று சிறிதும் பெரிதுமான வேலைகளைச் செய்துகொண்டே இருக்கிறாரே எனத் தோன்றும். இன்று அவரை எதிர்கொள்ளும் மனநிலை இல்லை. யாரோ எவரோ நமக்கு என்ன என்று கடக்க எவ்வளவோ முயற்சி செய்தும் ஏதேதோ நினைவுகளும் மாளாத துக்கமும் ஆட்கொண்டது போல் இருந்தது. கல்யாணம் என்றால் இதுபோன்று விசாரிப்பார்கள். எந்த மண்டபம் எவ்வளவு வாடகை, நகை நட்டு லொட்டு லொசுக்கு என செலவுக் கணக்கை உத்தேசித்துத் தயாராவார்கள். அந்தப் பெண், அவருடைய மருமகள் இப்படி ஒரு மரணத்திற்கு ஆகப்போகும் செலவுகளையும் அதை எதிர்கொள்ளத் தயாரான அந்த மனநிலையும் ஒருமாதிரி கசந்து எனில், அதை அறிந்து கொண்டுவிட்ட வள்ளியம்மாளை நினைத்த நொடியில் பிசைந்தது. சென்ற மாதத்தின் ஒரு மதியத்தில் கூட “இவரு கூட வந்து அம்பது வருசம் ஆகுது வீட்ல குடுத்துருப்பா” என எதையோ பாத்திரத்தில் வைத்து மூடிக் கொடுத்தார். தட்டின் விளிம்பில் வ.கோ. எனப் புள்ளிப்புள்ளியாக தேய்ந்து இருந்தது இன்னும் கண்களில் இருக்கிறது. வள்ளியம்மாள் போல் எப்போதும் அதிர்ந்து பேசாத ஆட்களுக்கு மட்டும் ஏன் இப்படி பெரிது பெரிதாக தாங்கிக்கொள்ளவே முடியாதவை எல்லாம் நிகழ்கின்றன எனத் தோன்றியது. மரணமோ அவமானமோ நேரடியாக நிகழ்ந்துவிடும்பொழுது அதன்போக்கில் கடந்தும் விடுகிறது. ஆனால் இப்படி எதிர்பார்க்கப்படும் மரணம், ஒரு அவமானம் எந்நொடியில் ஏற்படப்போகிறது என எதிர்ப்பார்த்து இருக்கும் நாட்கள் இவை எல்லாம் அசாதாராணவை. நிகழக் கூடாதவை எனத் தோன்றியது.
துயில் களைந்தும் தூக்கம் மிச்சமிருக்கும் குழந்தையின் சின்னஞ்சிறு கொட்டாவியைப் போல் கடல் எழுந்து கொள்ளத் தயாராகிக்கொண்டிருந்தது. எங்கிருந்தோ பத்துப்பதினைந்து பதின்பருவப் பெண்கள் கடல் நோக்கி ஓடி, மணல்மேட்டிலிருந்து சரிந்து இறங்கிப்போய் ஈரம் படரத்துவங்கிய இடத்திற்கு சற்று முன்னர் நின்று கொண்டார்கள். அனிச்சையாக அவர்கள் கரங்கள் கோர்த்துக்கொள்ள ஒரு சீரில் மனிதச்சங்கிலி போல் நின்றார்கள். அலை வரும்பொழுது மொத்தமாகப் பின்வாங்கி மீண்டும் முன்னோக்கி அடி எடுத்து வைப்பதுதான் விளையாட்டு. அலை வரும்முன்னர் ஒரு சிறுமி முன்னோக்கி அடிகள் வைத்து இருபக்கமும் பிடித்திருந்த சிறுமிகளை இழுத்தாள். பக்கவாட்டில் இருந்து பார்க்க அந்த சிறுமிகளின் இந்த முன்னும் பின்னுமான நகர்வே அலையடிப்பு போல் இருந்தது. கால் நனைக்க வேண்டும் என்ற சிறுமிகளுக்கும் நீரிலிருந்து தப்பும் நோக்கில் பின்னோக்கி இழுக்கும் சிறுமிகளுக்குமான முன்பின் ஆட்டமும் ஒவ்வொருமுறை அது நிகழும்போது அவர்களிடம் இருந்து வந்த குதூகலச் சத்தமும் சிரிப்பை வரவழைத்தது. அவர்களை அழைத்து வந்திருந்த இரண்டு மூன்று பெண்கள் சற்று பின்னால் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். வெய்யில் முற்றாக இறங்கிக் கடலுக்குள் கலந்து கொண்டிருந்தது. வெய்யிலை கரைத்துக் குடித்த கடல் கருநீலத்தை அடைந்திருந்தது. கால் நனைக்க வேண்டும் என்று முன்னோக்கி இழுத்த சிறுமி இம்முறை வெகு எளிதாக இருபக்கமும் பிடித்திருந்தவர்களின் கைகளை உதறிக்கொண்டு ஓரடி முன்னேற அலை அவளை முட்டி வரை நனைத்தது. திரும்பிப்பார்த்துச் சிரித்தாள். மற்ற அனைவரும் ஓடிப்போய் அவளைப் பிடித்துக்கொண்டு நின்றார்கள். அலை அத்தனைக் கால்களையும் நனைத்தது. கைகளை இறுகப் பற்றி கால்கள் புதைந்து நின்று கொண்டார்கள். பத்து அலைகள் வரை அவர்களை நனைத்துப்போகும் வரை நின்றவர்கள் பின்னர் மெல்லப் பின் வாங்கினார்கள். சலித்துப் போயிருக்கலாம் அவர்களுக்கு. அலைகள் அங்கு வந்து வந்து போயின. ஓ வென கத்திக்கொண்டே இப்போது கடலுக்கு எதிர்புரத்தில் ஓடினார்கள். வான் நோக்கி எறியப்பட்ட பொம்மை மேலேறி விளக்கு வெளிச்சம் மினுங்கி மீண்டும் கீழிறங்கி வந்ததைப் பார்த்துக் கத்திக் கொண்டிருந்தார்கள்.
மணற்துகள்களை தட்டி வெளியே விட்டுவிட்டு நுழைந்தேன். “என்ன சிரிச்சுட்டே வர்ற” என்று கேட்டவளைப் பார்த்து முகபாவனையை மாற்றினேன். என்ன என்றாள் மீண்டும். “பீச்சுக்குப் போயிருந்தேன். பசங்க ஆட்டத்தப் பார்த்துட்டு இருந்தேன்”. சுடச்சுட காஃபி வேண்டும்போல் இருந்தது. கொண்டு வந்தாள். அந்தச் சூட்டை கன்னத்திலும் நெற்றியிலும் வைத்து உருட்டிக் கொண்டேன். இதமாக இருந்தது. என்னை நினை என்னை நினை என ஒவ்வொன்றாக கிளர்ந்து வரும் இந்த நினைவுகளை எல்லாம் அந்த சிறுமி மற்ற கரங்களை உதறியதைப் போல் உதறிவிட்டு போய் நிற்கவேண்டும் போல் தோன்றியது. ”இப்ப எதுக்கு சிரிக்கிறனு சொல்லப்போறியா இல்லையா” என்றாள் மீண்டும். சிரித்தேன்.
வாழைக்காய்களின் முனைகளில் கருப்புக்கட்டத் துவங்கியது. தொட்டதும் கையோடு ஒட்டிக்கொண்டு உதிர்ந்தன கருமுனைகள். தாறு இறக்கி, தலைகீழாய்க் கிடத்தி சீப்பு சீப்பாய் பிய்த்து அலுவலக நண்பர்களுக்கு கொடுத்ததில் பெரும் திருப்தி கொண்டது மனம். மரத்தின் நடுப்பகுதி குழைந்து, தொட்டால் ஈரமாய் உள்வாங்கியது. இலைகள் பழுப்பேறத் தொடங்கின. தரையோடு தரையாக மரத்தைச் சாய்த்து, வாழைத் தண்டுகளைப் பிரித்துக் கொடுத்தார் தோட்ட வேலை செய்யும் ராமர். தெருவில் இருக்கும் வீட்டுத் தென்னை மரங்கள் பராமரிப்பு, கழிப்பு, காய் பறிப்பு என வீடு வீடாக தினமும் ஒரு வீட்டில் ஒரு வேலை என ராமர் எப்போதும் வேலையில் இருப்பவர். அனுபவம் நிறைந்தவர். ஓரத்தில் கிடத்தப்பட்ட இலைகளில் கழிவுகள் போக மிச்சத்தை வெட்டிக்கொடுத்தார். “எலைல யார் சாப்டப்போறாங்க இங்க”
“அம்மா கேட்டாங்க” எனத் தண்டுகள் மற்றும் இலைகளை சுருட்டுக் கொடுத்துவிட்டு, ஓர் இலையை வட்ட வடிவாக வெட்டிக்கொண்டு மரம் இருந்த இடத்தில் அமர்ந்தார். ஆர்வம் மேலிட அருகில் போய் நின்றேன்.
மரம் இருந்த இடத்தில் தரையோடு தரையாக வெட்டப்பட்ட பிறகு, மிச்சம் இருந்த பகுதியை கத்தியைக் கொண்டு சுற்றிலும் சுரண்டி சிறிய கோப்பை போல் செய்தார். அதன்மீது இலையை வைத்து மூடிவிட்டு இலை பறக்காமல் இருக்க மேலே சிறிய கல்லை பாரம்போல் வைத்துவிட்டு எழுந்தார்.
“காலைல தெறந்து பாருங்க, சாறு ஊறி இருக்கும். நல்ல சத்து, கொடல்ப்பைக்கு நல்லது”.
குப்பைக்கூளங்களை அள்ளித் துப்புரவாகக் கூட்டி எடுத்துப் போட்டுவிட்டுப் போய்விட்டார். மரம் இருந்த இடத்தில் இலையால் மூடப்பட்டக் குழி.
வாழை மர வேரை ஒரு கோப்பை போல் குடைந்து அதில் மரத்தின் நீர் ஊறும் என்பதைப் பார்க்கும் ஆர்வத்தில் தூக்கம் பிடிக்கவில்லை. தெருநாய் வேறு விடாமல் கத்திக்கொண்டிருந்தது. தினப்பாடுதான் போல, இன்று தூக்கம் வராததால் நமக்குக் கேட்கிறதுபோல எனத் தோன்றியது. மெதுவாக எழுந்து கையால் சுவரில் தேய்த்துக் கொண்டே கதவைத் திறந்து வெளியே வந்தேன். நாய் குரைக்கும் சத்தம் அதிகரித்துக் கொண்டே வந்தது. சட்டென எதிர்வீட்டில் வெளிச்சம் ஏற்பட்டது. நாய் கத்துவதால் எழுந்துவிட்டார் போல. நாயை விரட்டும் நோக்கில் கல்லைத் தேடினேன். மரம் இருந்த இடத்தில் வைத்த இலையின் மீது இருந்த சிறிய கல்லை எடுத்து எறிவது போல் சைகை செய்ய, ஓடுவது போல் ஓடி நின்று மீண்டும் ஓ ஓவென குரைத்தது. பாரத்தை எடுத்துவிட்டதால், இலை காற்றில் ஆடிப் பறக்க, குழி திறந்துகொண்டது. அந்த இருளிலும் உள்ளே நீர் சுரந்து நிறைந்து இருந்தது, தண்டுகளின், கட்டெறும்புகளின் மிதவையில் தெரிந்தது. ஏதோ ஒரு வெளிச்சம் நீரில் மினுங்கியது. இரண்டு விரல்களால் தொட்டு நாவில் வைத்துப்பார்த்தேன். அதீத சுவையாக இருந்தது போல் தோன்றியது. எப்படியும் மூன்று நான்கு டம்ளர்கள் சுரந்திருக்கும். இவளை எழுப்பிச் சொல்ல வேண்டும் போல் இருந்தது. காலையில் சொல்லிக் கொள்ளலாம்.
இந்த நடு இரவில் எதிர்வீட்டில் இப்போது எல்லா விளக்குகளும் போடப்பட்டு வீடே ஜொலிப்பது போல் இருந்தது. அந்த ஜ்வலிப்பைப் பார்த்துப் பார்த்து பெருங்குரலெடுத்து குரைத்துக்கொண்டே இருந்தது, நாய்.
*
கிராமத்தின் வாசம் நிறைந்த அருமையான யதார்த்தமான கதை சகோ 💖
வாழ்த்துகள் 🎉🎊🎊🎊