ஞானவேல் தன் தொண்டையைச்
செருமியதும், மூர்த்தி நடக்கப்போவதைப் புரிந்து கொண்டு, மும்முரமாய்
வேலை பார்த்துக்கொண்டிருக்கும் பலூன்காரரிடம் சன்னமான குரலில் “சரி பாருங்க, நான் உள்ள
போறேன்” என சொல்லிவிட்டு நகர்ந்தான்.
மூர்த்தியின் தந்தை ஞானவேல்
அறுபதிகளின் இறுதியில் இருக்கும், கொஞ்சம் பிரபலமான தொழிலதிபர். காகிதப்
பைகள் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்திருப்பவர்.
தொழிலில் அவருக்கு பக்கபலமாக
இருக்கும் ஒரே மகன், மூர்த்தி. தினமும் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் ஞானவேல் அறிவுரைகளை
ஆரம்பிப்பார். சந்தர்ப்பங்கள் கிடைக்காத பொழுதில், அவரே உருவாக்கி, ஆரம்பித்துவிடுவார்.
மூர்த்தியின் மகனுக்கு இன்று
ஆறாவது பிறந்த நாள். மாலையில் சொந்த பந்தங்கள் மற்றும் சில முக்கியமானவர்களை அழைத்திருக்கிறார். கேக் வெட்டிக்
கொண்டாடும் நிகழ்வு. அதற்கான அலங்காரங்களில் ஒன்றாக இந்த பலூன் கட்டும் வைபவம்
நடந்துகொண்டிருக்கிறது.
இந்த பலூன் அலங்கராமும்
பலூன்காரரும் இவர்களை அடைந்தது ஒரு சுவாரஸ்யம். முதல்
பிறந்த நாளைக் கோலகலாமகக் கொண்டாடும் பொருட்டு ஒவ்வொன்றாய்ப் பார்த்துப் பார்த்து வாங்கிக்கொண்டிருந்தார்கள்
ஞானவேலும் மூர்த்தியும்.
கடற்கரை சாலையில், ஆனால்
ஆள் அரவம் அற்ற ஒரு தனித்த இடத்தில் தன் சைக்கிள் நிறைய பலூன்களால் கட்டி பறக்க விட்டிருந்த
காட்சியை காரிலிருந்து பார்த்த கைக்குழந்தை, உற்சாகமாக
எட்டிப் பார்க்க முற்பட, அதைக் கவனித்த மூர்த்தி, காரை நிறுத்தி, பலூன்
வாங்க அருகில் போகும்போதுதான் கவனித்தான். அது சாதாரண
பலூன்கள் போல் இல்லை. நேராக வான் நோக்கி விரைப்பாக நின்று கொண்டிருந்தன. அவற்றைப்
பற்றி இருந்த நூல்கள் வீணையின் தந்தி போல் அவ்வளவு முறுக்கிக் கொண்டிருந்தன.
மூர்த்தி, தன் பின்னங்கழுத்து
முதுகைத் தொடுவது போல் முகத்தை நிமிர்த்தி பலூன்களைப் பார்க்க, அவன் கையில்
இருந்த குழந்தை குதூகலமாய் பலூன்களைப் பார்த்து சிரித்தது.
“ஹீலியம் பலூனுங்க சார், மேலயே
நிக்கும்”
சட்டென மூர்த்திக்கு ஏதோ
தோன்ற, தன் விலாசம் கொடுத்து, பிறந்த
நாளுக்கு முன்னர் வந்து, இந்த பலூன்களால் அலங்கரிக்க சொன்னான்.
இதோ ஆறாவது பிறந்த நாள்
வரை
வருடம் தவறாமல் அலங்காரங்களைச்
செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
மூர்த்தியை விட அதிகமாகவே
பலூன் காரருக்கும் ஞானவேலைப் பற்றித் தெரியும். ஆறு ஆண்டுகளாப்
பார்த்துக் கொண்டிருக்கிறார்.. கேட்டுக்கொண்டிருக்கிறார் என்பதே சரி.
ஞானவேலின் செருமலுக்கு வருவோம்.
“என்னப்பா
பலூன் ”
“சார்”
“ம்ம் ம்ம்..
இந்த வாசனையே வாசன தான்”
“சார்”
பலூன்காரரின் செவியும் வாயும்
ஞானவேலுக்கு என்றாலும் அவர் கைகள் அனிச்சியாக அதன் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தன.
சிறிய பைப் போன்ற காற்றடிக்கும்
மிஷின். ஆக்ஸிஜன் சிலிண்டர் போன்ற ஒன்றோடு இணைக்கப்பட்டிருக்க, ஒரே அமுக்கு, ஹீலியம்
காற்று உள்ளேற சட்டென வீங்கிப் பெரிதாகும் பலூனின் கழுத்தைத் திருகி முடிச்சிட்டு விட்டுவிட
அது அப்படியே சல்லென மேலேறி கூரையில் போய் முட்டிப் படர்ந்து கொண்டது. இப்படி
கூரைக்காக சில, பின் வளைத்து அலங்கார வளைவு போல் ஆக்க சில என மும்முரமாக
வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.
“ஏம்ப்பா, இந்த வருசமும் இதே சைக்கிள்தானா”
“சார்”
“அட என்னப்பா நீங்க எல்லாம் இந்தக்காலத்துல தொழில் பண்றீங்க, நான் இந்த
ஊருக்கு வர்றப்ப என்ன வச்சிருந்தேன் தெரியுமா”
“சார்”- சரக் சரக்
என பலூன்கள் காற்று அடைபட்டு மேலேறிக்கொண்டிருந்தன.
மூர்த்தியின் தங்கை, தியா, உடற்பயிற்சிக்குப்
போகிறாள் என்பதை அவளின் உடையும் கையில் வைத்திருந்த சிறிய மிருந்தங்கம் போன்ற கைப்பைய்யும்
உணர்த்தியது.
“என்னம்மா ஜிம்முக்கு கிளம்பிட்டியா?”
“எஸ் டாட்”
ஞானவேலின் பார்வையும் ஏதோ
கேட்க வரும் தொனியையும் உணர்ந்த தியா,
மீண்டும் சலிப்பாக,
“அப்..ப்பா, டெய்லி கேட்டதயே கேட்காதீங்க..அது ஒன்லி
லேடிஸ் ஜிம் தான்..ஒரு பிரச்சனையும் இல்ல”
என சொல்ல, ஞானவேல்
அரைகுறை திருப்தியாக தலையாட்டினார்.
அந்த இறுக்கமான உடையில்
அந்தக் கோவமான நடையில் திரும்பி அவள் போவதை பலூன்காரர் பார்க்கக் கூடாது எனும் புத்திசாலித்தனத்தின் பொருட்டு, ஞானவேல்
அவருக்கு முன்னர் மறைத்து பேச ஆரம்பித்தார்.
மூர்த்தியின் மனைவி தேரீர்
கொண்டு வந்து வைத்தார்.
ஞானவேல் வழக்கம்போல் பழைய
கதை ஆரம்பிக்கிறார் என்பதை அறிந்த மருமகள், டீய குடிச்சிருங்க
ஆறிடப்போகுது என சொல்லிவிட்டு பலூன்கார்ரைப் பார்த்து சினேகமாய் சிரித்துவிட்டுப் போனாள்.
“வெறும் கை.
யாரும் நம்ப மாட்டாங்க.. வெறும்
கை மட்டும் தான். ஆனா அதுகூடவே நம்பிக்கையும் இருந்துச்சு”
மத போதகரின் உடல்மொழிக்குக்
கொஞ்சம் கொஞ்சமாக அவரை அறியாமல் போவது போல் இருந்தது.
பலூன்காரர் அவரைப் பார்த்து
மிக லேசான புன்னகையுடன் தேரீரைக் குடித்துக்கொண்டிருந்தார்.
“அந்த நம்பிக்கைய மட்டும் வச்சு என்ன பண்ண முடியும்? என்னோட
உழைப்பு”
“சார்”
“உழைப்பு மட்டும் வச்சு என்ன பண்ண முடியும்? இந்தா
நீயும் தான உழைக்கிற, ரொம்பவே நல்லா உழைக்கிற”
“சார்”
“ம்ம். திறமை உழைப்பு இதெல்லாம் தாண்டி ஒரு சின்ன நெறிமுறை இருக்கனும். நாளைக்கு
என்ன, இந்த வாரம் என்ன, இந்த மாசம்
என்னனு குறிச்சு குறிச்சு.. அத நோக்கி போகனும்.”
“சர்த்தான் சார்”
கூடுதலாய் ஒரு சொல் பலூன்காரரிடம்
இருந்து வந்ததன் காரணம் தேநீர் டம்ளைரை கீழே வைத்ததால் இருக்கக்கூடும்.
“அப்பல்லாம்
வெறும் ப்ளாஸ்டிக் மயம், நான் என்ன பண்ணேன் அதப்பூராம் கொழச்சு உருக்கி கொடம் வாளின்னு
பண்ணி விட்டேன் மார்க்கெட்ல.. இப்ப ப்ளாஸ்டிக் கூடாதுங்குறான்.. டக்குனு
என்னடா வேணும்னு கேட்டு பேப்பர் பேக்ல எறங்கினேன்”
“சார்”
இப்போது வளைவுகள், மேல் நோக்கி
முட்டும் பலூன்கள் முடிந்து, கேக் வெட்டும் மேஜைக்கு பின் இருக்கும் சுவரில் கட்டப்பட
பூ டிசைன்களில் பலூன்கள் தயாராகிக் கொண்டிருந்தன. பலூன்களில்
ஆறு என்ற எண்ணை வளைத்துக் கொண்டுவரும் முனைப்பில் இருந்தார் பலூன்காரர்.
“ஆனா எங்கிட்ட இருந்த முக்கியமான ஒன்னு என்னா தெரியுமா?”
“சார்”
“சொல்லுப்பா,
என்னாவா இருக்கும்.. சார் சார்னா
என்ன அர்த்தம்.. “
“சார்..”
“ஆங்.. ஃபாளோ அப் அப்டீன்னு சொல்லுவோம் தொழில்ல.. நம்ம கஷ்டம்ர்ஸ
நாம தான் ஃபாளோ பண்ணனும். நாம தான் அவங்க பின்னாடி போய், நம்ம முக
த்த மொதல்ல பதியனும் அப்பறம் நம்ம தொழில,
நம்ம திறமையனு தானா நடக்கும். ஆனா நாம
தேடித் தேடிப் போய் நிக்கனும்”
“சார்”
“நீ பலூன்லாம் கட்டி முடிச்சிட்டு மாடிக்கு வா, என்னோடா
டைரிகள காட்டுறேன். இந்த நாப்பது வருசத்து டைரிகள்ல்ல ஒரு பக்கம் கூட நிரப்பாம
இருக்காது. இவர இத்தனமணிக்கு பாக்கனும், இன்னார
இத்தானந்தேதி போய் பார்த்தா ஆர்டர் கிடைக்கும்னு தேதி நேரம்னு பக்காவா இருக்கும்.. இப்பத்தான்
ஒரு ரெண்டு மூனு வருசமா மூர்த்தி ஏதோ மொபைல்லயே அதென்னாது அலாரமோ என்னமோ வச்சு ஃபாளோ
பண்றான்”
“நல்லதுங்க சார்”
சொல்லிக்கொண்டே பலூன்காரர்
அந்த ஹாலின் ஒரு மூளைக்குப் போய் நின்று அந்த அறை எப்படி இருக்கிறது எனப் பார்த்தார். திருப்தியாக
தலையாட்டிக்கொண்டே மீண்டும் தன் இடத்திற்கு வந்து சிந்திய சிதறிய பலூன்கள் பொருட்கள்
என எல்லாம் எடுத்து தன் பையில் அடைத்தார்.
ஞானவேல் பேசுவதை நிறுத்தி
ஒருமுறை அறையை நோட்டம் விட்டார்.
“தொழில்காரன்தாப்பா நீ, நல்லா
இருக்கு பாரு இப்ப”
பலூன்காரர் முகம் மலர்ந்து
மீண்டும் பலூன்களை ஏறிட்டுப் பார்த்தார்.
“ஆனா, நான் சொல்றேன்னு கோவிச்சக்காத. உங்கிட்ட
திறமை இருக்குற அளவுக்கு, உழைப்பு இருக்குற அளவுக்கு, தொழில்
மேல ஒரு இது.. ஒரு இது இல்லப்பா.. அதுனாலதான்
இத்தன வருசமா ஒன்னய பார்க்குறேன் அதே..
ஒட்ட சைக்கிள்..
அதே பைப்பு..
ஆமா எத்தன வருசமா வர்ற?”
“சார்”
ஆறு என்று சுவரில் பலூன்களால்
அற்புதமாக ஒட்டியிருந்தார் பலூன்காரர்.
“ஆறு வருசம்..
எந்த தொழில் பண்றதா இருந்தாலும் நாலு வருசத்துக்கு ஒரு தடவ
நாம இருப்புல இருந்து ஒரு படி மேல போகனும்ப்பா அதான் தொழில் முற.. நீ எங்க
தப்பு பண்றன்னு சொல்லவா.. கோவிச்சுக்க மாட்டியே”
“சார்” – முடிந்தது என்ற திருப்தியில் மூர்த்தியின் அறையை நோக்கிப்
பார்த்துக்கொண்டே ஞானவேலிடம் சார் என்றார் பலூன்காரர்.
“இத்தன வருசத்துல ஒரு தடவ கூட ரெண்டு நாளைக்கு முன்னாடியே
வந்து, சார் இத்தனாந் தேதி பிறந்த நாள் வருமே, இந்த தடவ
இன்னும் நல்லா பண்ணிறவான்னு நீயா வந்து நின்னதே இல்லயேப்பா.. ஒன்னு
மூர்த்தி பொண்டாட்டி சொல்லுவா இல்லாட்டி பையனே பலூன்னு சொல்லுவான்.. உடனே மூர்த்தி
கார எடுத்துட்டு பீச்சுக்கு வருவான்..
இதான நடக்குது..
என்னய மாதிரி,
டைரி போட்டு பிறந்த நாட்களுக்கு முன்னாடி போய் நின்னா தொழில்
வளரும்ல”
ஒருமுறை சுற்றும் முற்றும்
பார்த்த பலூன்காரர், ஞானவேலுக்கு அருகில் சென்றார்
“சார், இந்த ஒலகத்துல எல்லாமே ஒரே மாதிரி இல்ல சார். நான் மொத
மொதா இப்பிடித்தான் போய் நின்னேன்.. நாலு நாள் முன்னாடியே ஒரு வீட்ல.. போன வருசம்
பலூன் கட்டுனேன் அப்டீன்னு.. அந்த அம்மா என் சட்டையைப் பிடிச்சுட்டு கதறுச்சே ஒரு கதறு.. போன வருசம்
இருந்தா எம் பொண்ணு இந்த வருசம் இல்லையேப்பா நான் எங்க போவேன் பொண்ணுக்குனு” ஒடம்புலாம்
ஒதறுச்சு பாருங்க.. அது ஆகிப்போச்சு இருவது வருசம்.. ஆனா இப்ப
கூட ஒதறுது பாருங்க”
ஞானவேல் திடுக்கிட்டுப்
பார்த்தார்.
“பலூன் சார்..
சட்டுனு வெடிச்சிரும்.. அப்பிடியே
போய்ரும்.. உசுரும் ஒடலும் தான இதெல்லாம். சந்தோஷம்னா
தேடி வந்துரும்.. ஆனா ஒருத்தங்களத் தேடிப் போய் துக்கத்த கிளறக்கூடாதுல்ல சார்.. எனக்கு
இதவிட்டா வேற தொழில் தெரியாது சார்.. ஆனா மனுஷங்கன்னா ரொம்ப பிடிக்கும் சார்.. அதான்
வர்றத செஞ்சு கிடைக்கிறத வச்சு சந்தோஷமா இருக்கேன்”
ஞானவேலிடம் ஒரு பெரும் அமைதி
சூழ்ந்துகொண்டது.
சைக்கிளையும் பலூன்காரரையும்
காம்ப்வுண்ட் சுவர் மறைத்துவிட்டிருந்தது. ஆனால்
சைக்கிளில் கட்டி இருந்த பலூன்கள் காற்றில் அவ்வளவு அழகாக பள்ளி முடிந்து கூட்டமாய்
தலையாட்டிக்கொண்டு வரும் குழந்தைகள் போல் ஆடிக்கொண்டு போவதைப் பார்க்க முடிந்தது.
*
நர்சிம்
2022
படம் : கூகுள்