Homeசங்க இலக்கியம்முலையிடைப் பள்ளம் பெருங்குளம் ஆனதே

முலையிடைப் பள்ளம் பெருங்குளம் ஆனதே


பத்தாம் வகுப்பு என்று நினைவு, சிட்டிபாபு தான் எனக்கு அருகில் அமர்ந்து இருப்பான் எப்போதும். அன்று, தமிழய்யா வகுப்புக்கு வர சற்று தாமதம் ஆனது என்பதால் மாணவர்கள் சலசலவென பேசும் சப்தம். அதனால் சற்று கத்தியபடி பேசிக்கொண்டிருந்தோம் நானும் சிட்டிபாபுவும். வீட்டிற்குள் பாம்பு வந்துவிட்டதாகவும் அதன் அளாவு குறித்து கண்கள் விரிய “எத்தா மொக்க தெரியுமா, இந்தா இத்தாமொக்க” என இரு கைகளையும் இயேசுநாதர் போல் விரித்து நீட்டினான். சட்டென வகுப்பறை நிசப்தம் ஆக, அவன் இத்தாமொக்க என சத்தமாகச் சொன்னதுமட்டும் வகுப்பறை முழுக்கக் கேட்டது.

தமிழய்யா, “என்னடா உயர்வு நவிற்சி அணியா?” என்றவாரே எங்களுக்கு அருகில் வந்தார்.

அதற்கு முந்தைய வகுப்பில் படித்திருந்தாலும், அன்று தமிழய்யா நிறுத்தி நிதானமாகவும் கிண்டல் தொனியிலும் கேட்ட அந்த “உயர்வு நவிற்சி” என்ற சொல் அப்படியே பதிந்து போனது. அதன்பிறகு எந்த ஒன்றையும் உயர்வாக, அதீதமாக உயர்த்திச் சொல்வது உயர்வு நவிற்சி அணி என இனம்காண்பது ஒரு பொழுதுபோக்காக இருந்தது.

சங்கப்பாடல்களின் பரிச்சயம் ஏற்படத் துவங்கியபின் இந்த அணி கூடவே வருவது போல் இருந்தது. ஆம், நிலாவைத் தன் உணவு என தவறாக நினைத்து தும்பிக்கையால் இழுக்க நினைக்கும் யானையில் துவங்கி, சினிமாப் பாடல்களில் அப்படியான ஒரேடியாக உயர்வாகப்புகழப்படும் பாடல்கள் என பேசு பொருள் ஆனது.

ஒருமுறை சிட்டிபாபு,

“புலி வருது புலி வருதுனு சொல்லிட்டே இருந்தா ஒருநாள் திடீர்னு புலி வரப்போகுது அன்னிக்கு இருக்கு பாரு” என ஏதோ ஒன்றிற்காக சொல்லிக்கொண்டிருந்தான். எனக்குள் உடனே அந்த ‘உநஅ’ விழித்துக்கொண்டது. இந்த வாக்கியம் உயர்வு நவிற்சியில் வருமா? புலி வருவது ஒரு பிரச்சனையைச் சொல்வது எனவே உவமை என ஆரம்பித்து ஏதேதோ யோசனைகள்.

எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. சென்ற வாரம் குற்றாலம் போகலாம் என முடிவெடித்து நண்பர்களுக்கு அழைத்து சொன்னதும் “டேய் புலி வருது புலி வருதுன்றமாதிரி, நீயும் கேட்டுட்டே இருக்க, வரமாட்டேங்குற” என பாலா சொன்ன நொடியில் பள்ளி, தமிழய்யா,உயர்வு நவிற்சி எல்லாம் மனதிற்குள் வந்து போனது.

புலி வந்தேவிட்டது. ஆம் குற்றாலம். தென்காசியை நெருங்கும்போதே வந்து விழும் சாரல் தான் குற்றாலம். ஆனால் இம்முறை அவ்வளவு ரம்மியமான சாரல் இல்லை, நாங்கள் போனபொழுதில்.

ஆனால், அந்த நள்ளிரவில், ஐந்தருவியில் குளிக்கும்போது மூச்சு முட்டியதும், சட்டென நீருக்கும் பாறைக்கும் இடையில் நின்று சற்று ஆசுவாசப்பட்டு, மீண்டும் குளிக்கையில் பாறைகள் தலையில் தடதடவென வந்து விழுவது போன்ற உணர்வு. குளித்து முடித்ததும் உடல் அப்படியே பஞ்சு போல் இலகுவாக ஆனது போன்ற மகிழ்ச்சி. மனம் அதைவிடம் லேசாக ஆனது போன்ற மலர்ச்சி. அந்த இரவிலும் குளிர்குளியலுக்கு இதமாக மிளகாய் பஜ்ஜி ஆவிபறக்க. நிமிர்ந்து பார்த்தால் மேகங்கள் மலைமுகட்டில் தட்டி நின்று பொழிவது போன்ற ஏகாந்தக் காட்சி. அதற்கும் மேலே முழு நிலவு.

நாங்கள் நான்கு நண்பர்கள். மேலும் பாலா ஒரு சின்னப்பையனை அழைத்து வந்திருந்தான். அவன் கடையில் வேலை பார்க்கும் இளைஞன். அன்றாடத்தில் இருந்து அனைவருக்கும் அற்புத விடுபடல். சிலபல ஆண்டுகளுக்கு முன்பு தேனருவிக்குப் போனது குறித்த பேச்சுகள், அதீத விவரிப்புகள் என தீர்த்தவாரித்திருநாளாகக் கழிந்து கொண்டிருந்தது.

நான் மட்டும்தான் பாலாவுடன் வந்த இளைஞனின் முகத்தைக் கவனித்திருந்தேன் என நினைத்தேன். குமாரும் அதையே சொல்ல, கேட்டோம்.

“என்னாடா வந்ததுல இருந்தே உம்ம்னு இருக்க? ஜாரி மேட்டரா?”

குமார் அவ்வளவு ஆதுரமாகக் கேட்டும் எனக்கு ஏனோ சிரிப்பு வந்தது. இரண்டு காரணங்கள், ஜாரி என்ற அந்த விளிப்பு முதல் காரணம், இரண்டாவது ஏழு கழுத வயதில் இந்த ஜாரி மேட்டருக்கு முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்வது எல்லாம் சிரிப்பாகப் பட்டது, மகா சிரிப்பாக மாறிக்கொண்டிருந்தது எனக்கு. ஆனால் அந்த இளைஞனுக்கு மிஞ்சிப்போனால் 24, 25 வயது இருக்கும். காதலிப்பதற்கும்,காதலியைப் பற்றி நினைப்பதற்கும் வருந்துவதற்கும் அழுவதற்கும் சிரிப்பதற்கும் மிகச் சரியான வயதல்லவா அது.

பாலா பதறினான்.

“டேய் யப்பா அவன ஓட்டாதீங்கடா, அவென் ஒரு மாதிரி”

குமாருக்குள் இரண்டு மூன்று குமார்கள் ஓடிக்கொண்டிருந்தனர். குற்றாலம் என்றால் எங்களுக்கு வெளியே நீர், குமாருக்கு உள்ளே இறங்கும் நீர்.

“அப்பிடிச் சொல்லாத பாலா, நம்ம பய, நான் சரக்கப் போட்டு சொல்றேன்னு நெனக்காதடா இவனே, அண்ணண்ட்ட சொல்லு, “ என பாலாவை வெட்டிவிட்டு அந்த இளைஞனிடம் மீண்டும் ஆரம்பித்தான். அந்தப் பையன் தான் குமாருக்கு மட்டை ஊறுகாய்.

“அதெல்லாம் இல்லண்ணே”

“அட சும்மா சொல்றா” என எதுகை மோனைக்கு கெட்டவார்த்தைகளைப் போட்டு சொல்ல, அவன்,

“இல்லண்ணே, எப்பப் பாரு, வீட்ல பார்க்குற ஆள கட்டிக்கப்போறேன் பாரு அப்டீன்னு ஒரண்ட இழுத்துக்கே இருப்பாண்ணே”

”அதெல்லாம் பண்ணாத்தானடா லவ்வு”

பாலா என்னிடம் மெதுவாக “இந்தாளு வாழ்க்கைல ஒரு லவ்வுகூட இல்ல, என்னா பேச்சு பேசுது பாரு பெருசு” என்றான்.

சட்டென அந்த இளைஞன் சரக்கை எடுத்து ஒரு இழு இழுத்தான். குமார் பதறிப்போய், “டேய் கொஞ்சமா அட்றா” எனத் தன் பங்கை காபந்து செய்து கொண்டான்.

எங்களுக்கு சிரிப்பு.

“இல்லண்ணே நீயே சொல்லு, ஒருதடக்க சொல்லலாம் ரெண்டு தடக்க சொல்லலாம் அதென்ன எப்பப்பாரு நக்கலு?”

என சொல்லிக்கொண்டே காலி டம்ளரை நீட்டி இன்னொரு ரவுண்டு என்பது போல் சைகை செய்து தீவிரமாகப் பேசினான்.

“அதென்னா என்னயப் பாத்தா எப்பிடித் தெரியுது? இல்ல எப்பிடித் தெரியுதுன்றேன், நீ சொல்லுய்யா, எப்பிடித் தெரியுது”

குமாருக்கு இதெல்லாம் புதுசு. எப்போதும் தான் மட்டும் சரக்கடித்து எங்கள் உயிரை இப்படிப் போட்டு வாங்குவான். “அந்த தேனருவி தான போனம், நான் அதுக்கடுத்த வருசம் அதுக்கும் மேல போய்ட்டேன் தெரியுமா, ஆத்தாடி என்ன்ன்னா மாதிரி இருந்துச்சு, பாகுபலி அருவிலாம் சும்மா கிராஃபிக்சு இவனே”போன்ற அக்கப்போருகளை எல்லாம் நாங்கள் கேட்டுக்கொண்டே இருப்போம். இப்போது குமாருக்கே விபூதி அடிக்கிறான் பாலாவின் கடைப்பையன்.

திடீரென அழத் துவங்கினான்.

“நான் கொஞ்சம் ஓவரா சத்தாய்ச்சுட்டேண்ணே, சரி போய் ஒங்க வீட்ல பார்க்குற ஆளயேக் கட்டிக்க, நல்லாரு, என்னய ஆளவிடுத்தா தாயேன்னு”

விசும்பலினூடே சொன்னவன், சொல்லி முடித்ததும் பெருங்குரலெடுத்து அழத் துவங்கிவிட்டான்.

ஒரு நொடி எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
குடி, ஆண்களுக்கான அழுகை மருந்து போலும். மனக்கிடக்கையை, அழுத்தத்தை, அழுகையை வெளிக்கொண்டு வந்துவிடுகிறது இப்படி. எவ்வளவு சமாதானம் செய்தாலும், அவன் கண்ணில் இருந்து வந்த நீர் நிற்கவே இல்லை.

“வெளாட்டுக்குத்தான சொல்றா, நானும் வெளாட்டுக்குன்னு சொன்னது..”

அவ்வளவுதான் மீண்டும் அழுகை. அந்த வாக்கியம் முற்றுப்பெறவே இல்லை. என்ன ஆனது என்றும் புரியவில்லை. ஒட்டிய வயிறும் ஒடுங்கிய மார்புமாய் பார்க்கப் பாவமாய் இருந்தது அவனின் அழும் தோற்றம். அழுத கண்ணீர் அவன் பனியன் எல்லாம் நனைக்க, அதைக் கழட்டி, முகத்தைத் துடைத்துக் கொண்டான்.

இத்தனை ஆண்டுகளாக என் மனதில் இருந்த அந்த ’பெருங்குளம் ஆயிற்று’ வரி, உயர்வு நவிற்சி அணி என்று படித்த வரி, இன்று அது ஒருவேளை ’இயல்பு நவிற்சி அணி’ யாக இருக்குமோ என்று தோன்றியது.

ஆம்.

சங்கத் தலைவி ஒருத்தி, தலைவனை நினைத்து அழுத கண்ணீர் எல்லாம் அப்படியே இறங்கி, இரண்டு மார்புகளுக்கு இடையில் தேங்கி, குளம் போல் காட்சியளித்தது என்கிறாள். அதுவும் எப்படிப்பட்டக் குளம், கருங்கால் வெண்குருகு(நாரை) மேயும் குளமாம்.

உயர்வு நவிற்சியிலேயே ஆகப்பெரிய உயர்வு என நினைப்பதுண்டு இப்பாடலை.

“பலநாட்களாக, உன்னைப் பிரியப்போகிறேன் பிரிந்து போய்விடுவேன் என விளையாட்டு காட்டி வந்த தலைவனிடம், “பிரிவதானால் நிரந்தரமாய்ப் போய்த்தொலைக” என சொல்லிவிட்டேன். உண்மையாகவே எங்கோ பிரிந்து போய்விட்டார். என் தந்தை போன்ற அன்புசெலுத்திய காதலன் எங்கு போனாரோ, அவர் இல்லாமல் எப்படி இருப்பது, என அழுது அழுது கண்ணீர் மார்புக்கு இடையே தேங்கி, கரிய கால்களை உடைய வெண்பறவை(குருகு/நாரை) மேயும் குளம் போல் காட்சியளிக்கிறது தோழி”
என்கிறாள்.

குளம்,காட்சியாக விரிந்தால், உயர்வு நவிற்சிதானே !

பாடல் :

சேறும் சேறும் என்றலின் பண்டைத்தம்
மாயச் செலவாச் செத்து, மருங்கு அற்று
மன்னிக் கழிக’ என் றேனே; அன்னோ !
ஆசாகு எந்தை யாண்டு உளன் கொல்லோ?
கருங்கால் வெண்குருகு மேயும்
பெருங்குளம் ஆயிற்றுஎன் இடைமுலை நனைந்தே.


-நன்னாகையார்

குறுந்தொகை பாடல் : 325

*சேறும் = போய்விடுவேன். ; மாயச் செலவு= செலவு என்றால் பயணம். மாயச் செலவு என்பது போகாமலே போவேன் என்பது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை

ஓவியம்

சிற்பம்

குழி