Homeசங்க இலக்கியம்செங்கர் பள்ளியும் உகிர்நுதி ஓசையும்

செங்கர் பள்ளியும் உகிர்நுதி ஓசையும்

அன்றைக்கு
அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை
நிசப்தம் காடாக விரிந்து கிடந்தது
சாரல் மழை பெய்து
சுகமான குளிர் வியாபித்திருந்தது
அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் பெரியவன்
அரவம் கேட்டு விழித்த சின்னவன்
சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது
சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்
இவள் வெந்நீர் வைத்துக் கொடுத்தாள்
வெளுத்த துணிகளை எடுத்து வைத்தாள்
வாசல்வரை வந்து
வழியனுப்பி வைத்தாள் தாய்போல
முதல் பேருந்து
ஓட்டுநர் இருக்கைக்குப் பின்புற ஜன்னலோரம்
பிழைப்புக்காக
பிரிந்து வந்து கொண்டிருந்தேன்
மனசு கிடந்து அடித்துக்கொள்ள.

-கவிஞர் விக்ரமாதித்யன்.

படித்து முடித்த பின் மனம் கிடந்து அடித்துக்கொள்கிறதல்லவா, கவிஞர் விக்ரமாதித்யனின் இந்தக் கவிதை தான் ஒவ்வொரு முறையும் ஊருக்குப் போய்விட்டு திரும்பும் நாளில் மனதில் நிழலாடும்.

பிரிவுகள் பலவகை என்றாலும் முதன்மையானது எனில் அது பொருள்வயிற் பிரிவு தான். பஞ்சம் பிழைக்க, சொந்த ஊரை விட்டு பொருளைத் தேடிப் போகும்பொழுது பெரும்பாலும் குடும்பத்தை விடுத்துத் தனியாகப் போக வேண்டியதாகத்தான் சூழல் அமையும். யோசித்துப்பார்த்தால், முதன் முதலில் பிரிவு என நான் சந்தித்தது, சொந்த ஊரை விட்டு, பிறந்த வீட்டை விட்டு, வளர்ந்த திண்ணையை விட்டு முதன் முதலில் அண்டை மாநிலம் நோக்கி பயணப்பட்ட நாள் இன்னும் மனதில் நிழலாக, சித்திரம் போல் பதிந்து இருக்கிறது.

அப்போதெல்லாம் மதுரையிலிருந்து வைகை அதிகாலையில் கிளம்பும். அப்பா உறங்கிக்கொண்டிருக்க, அக்காகள், தம்பி என எல்லோரும் அந்தப் பெரிய கூடத்தில் திசைக்கு ஒருவராக சுருண்டு மடங்கிக் கிடக்க அம்மா கொடுத்த காப்பி தொண்டைக்குள் இறங்க மறுக்க, அப்படியே அரவம் இல்லாமல் வெளியே வந்தபொழுது, பெரியம்மா வாசல் தெளித்துக்கொண்டிருந்தாள். அந்த முதுமையிலும் அவ்வளவு காலையில் செய்துகொண்டிருந்தாள். “வெளியூர் போற, முன்னாடியே பண்ணணும் ஒங்கம்மாளுக்கு இதெல்லாம் தெரியாது” எனும் சிறுசிரிப்புடன் தலையை கலைத்துவிட்டு கிளம்பு என அமைதியாக நிற்க, அதற்கு நான்கு ஐந்து மணிநேரத்திற்கு முந்தைய நேரங்களில் கூட ஊருக்குப் போய் வேலையில் அமரும் மகிழ்ச்சியும் பரவசமும் கலந்து இருந்திருந்தது. ஆனால் பெரியம்மா முன்னர் நின்ற அந்த நொடி, போகத்தான் வேண்டுமா எனும்படி மனதை அழுத்தியது. இதோ இப்பொழுது வரை அந்த நொடிகள் அப்படியே வீழ்படிவாக மனதில் கிடக்கின்றது.

அப்படி இப்படி என, ஊரில் வாழ்ந்த காலத்திற்கு ஈடாக பிழைப்பின் பொருட்டு வெளியூர்களில் தங்கி இருக்கும் ஆண்டுகள் சமமாக ஆகிவிட்டன. நாட்பட்ட பிரிவுகள் எல்லாம் வாழ்வின் அங்கங்கள் தானே.

இப்போதெல்லாம் பிரிவு என்பது, இங்கிருந்து எங்காவது, சொந்த ஊர் உட்பட போய்வருவது எனும் கணக்கில் வந்திருப்பது காலத்தின் விந்தைகளில் ஒன்றுதான்.

இவன் பிறந்து இரண்டு மூன்று ஆண்டுகளில் நான் எங்குமே போனதில்லை என்று தோன்றும் அளவு எங்குமே போனதில்லை. ஆம், எல்லாப் பயணங்களையும், அலுவல் நிமித்தங்களையும் இவன் பொருட்டு தவிர்த்திருக்கிறேன். மாலையில், வெளிச்சம் இருக்கும்பொழுதே வீட்டிற்குப் போகவேண்டும் என்ற உந்துதலில் ஆரம்பித்த வழக்கம் அப்படி போகமுடியாத, நாட்களில் மதுப்பழக்கம் கொண்டவரின் கை நடுக்கம் போல் மனநடுக்கம் ஆகத்துவங்கி இருந்தது. அதன்பிறகு, இன்று வரை மூன்று நான்கு நாட்களுக்கு மேல் வீட்டைப் பிரிந்து இருப்பது இயலாத காரியமாகவே இருக்கிறது. வலசை ஏகும் பறவை அலைந்து திரிந்து கூடு அடைதல் போல்தான் வீடடைதல்.

தேடிப்பார்த்ததில் பெரும்பான்மைக் கவிதைகள், பிரிவு நிமித்தமாக இருக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் காதலும் காதல் சார்ந்ததுமான பிரிவுகள்.

அதிலும் சில கவிஞர்கள் எல்லாம் ‘நல்ல பிரிவு கவிதை ஒன்று மனதில் தொக்கி நிற்கிறது, பிரிந்துவிடுவோமா அன்பே’ எனும் நோக்கத்திலேயே பிரிந்து இருப்பார்கள் போல என எண்ணும் அளவிற்கு அவ்வளவு சோகமும் வெறுமையும் கலந்து அற்புதமான பிரிவுக் கவிதைகளை எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்.

‘என்னை மறந்திருப்பாயோ என்ற ஒற்றை நினைப்பே போதுமானதாயிருக்கிறது, உன்னை நினைவிலேயே வைத்திருப்பதற்கு’ என என் பங்கிற்கும் ஏகப்பட்ட சொற்கள் பிரிவு நிமித்தம் விரவிக்கிடக்கின்றன.

இப்படியான பிரிவு நிமித்த கவிதைப் பாடுகளின் தலைவன் ‘பாலை பாடிய பெருங்கடுங்கோ’ எனும் சங்கப்புலவன். எனலாம்.

பிரிவையும் பாலை நிலத்தின் வறண்ட தன்மையும் ஒருசேரக் கொண்டுவரும் வல்லமை படைத்த , இன்றைய சூழலுக்கும் பொருந்திப்போகும் இந்தப் ப்பாலைத்திணை சங்கப்பாடல்கள் மிகுந்த வியப்பை அளிக்கின்றன..
பொருள்வயிற் பிரிவால் பிரிந்து போன தலைவனை நினைத்து வாடும் தலைவிக்கு தோழி ஆறுதல் கூறும் பாடல்களிலேயே இந்தப் பாடல் ஓர் அற்புதம். ஏனெனில் அந்த சொற்பதங்கள் அப்படி.
செங்காற் பல்லி’ எனும் சொல்லை பல ஆண்டுகளுக்கு முன்னர் படித்ததில் இருந்து எப்போது சுவரில் பல்லியைப் பார்த்தாலும் சட்டெனெ என் கண்கள் அதன் கால்களுக்குத்தான் போகும்.

போலவே அந்த உகிர்நுதி ஓசை. நகத்தால் ஏற்படுத்தும் ஓசை. அதாவது,

இரவில் வழிப்பறிக்குத் தயாராகும் கள்வர்கள், தங்கள் அம்பு ஆயுதங்களை கூர்தீட்டும் பொருட்டு நகத்தால் தீட்டுவர், அப்போது எழும் ஓசை தலைவனின் இச்சையைத் தூண்டும். போலவே சிவந்த கால்களை உடைய ஆண் பல்லி,ஆசையோடு கலவிக்கு பெண் பல்லியை அழைக்கும் ஓசை என இந்த ஓசைகளைக் கடக்கும் தலைவனுக்கு உடனே உன் நினைப்பு வந்துவிடும். அதனால் விரைவில் வந்துவிடுவார்’ என ஆறுதல் கூறுகிறாள் தோழி.

இதற்கு முன்பு பார்த்த பாடலில் வந்த பீட்சா,பூக்கள் போல இதில் இந்த ஓசைகள் ‘இறைச்சி’ எனப்படும்.

பாடல் :

உள்ளார் கொல்லோ தோழி? கள்வர்தம்
பொன்புனை பகழி செப்பம் கொண்மார்
உகிர்நுதி புரட்டும் ஓசை போலச்
செங்காற் பல்லி தன்துணை பயிரும்
அங்காற் கள்ளியங் காடுஇறந் தோரே
-பாலை பாடிய பெருங்கடுங்கோ
குறுந்தொகை : 16.

மூவாதஉயர்தமிழ்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை

ஓவியம்

சிற்பம்

குழி